ஆலமரத்தடியில்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது . நினைவு ஊஞ்சலை ஆட்டி விட்டதின் பலன்……… . 

குடிக்க கஞ்சி இல்லா விட்டாலும் எங்களின் குதூகலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் என்றும் குறை இருந்ததில்லை குறையிலேயே நிறை கண்டதால். ஆறு வயது வரை பள்ளி செல்லும் அவசியமில்லாததால் காலை மாலை என நேரமும் விளையாட்டுதான், வீட்டின் முன் உள்ள வேப்பமரத்தின்முன் கோடுபோட்டு பாவாடையை தூக்கிச் செருகி பாண்டி விளையாடுவோம் தோழியர்கள் பாங்காக ஆலமரத்தடியில் ஆலம் விழுதுகளில் ஊஞ்சல் கட்டி சினிமா பாட்டுகளைப்பாடி உல்லாசம் கண்டோம் குளிக்கத் தோழியர்களுடன் சென்று குளத்து மீன்களை பாவாடைகளில் பிடித்து மீண்டும் குளத்தில் விட்ட நினைவுகள் பசுமையானவை.

வட்டிலிலே சோறிட்டு வகையாக குழம்பு ஊற்றி பிசந்து எங்களை வட்டமாக அமரச்செய்து ஒவ்வொருவர் கைகளிலும் அம்மா உருட்டிப்போட்ட சோற்றின் ருசி இன்னமும் நாவில்எ ச்சில் ஊறுகிறது. 

மாலை வேளையில் வயல் வரப்புகளில் ஆடிப்பாடியதும் அலாதியானது .தோழியர்களுக்குள் சண்டை வந்தாலும் அடுத்த நிமிடமே சரண்டர் ஆகும் நல்ல குணமும் இருந்தது .

இரவு வீட்டிற்குள்ளேயே பல்லாங்குழியும் ஆடுபுலி ஆட்டமும் தோழிகளோடு விளையாடிய தாயவிளையாட்டும் ஆடு புலியும் அசத்தல்தான் போங்கள் . 

ஆண் பெண் பேதமின்றி பம்பர விளையாட்டையும் கையிலெடுத்து ஆண்களின் பாம்பரத்தில் ஆக்கர் வைத்து ஆணி பிடுங்கிய அனுபவவும் சகஜம் பளிங்கு விளையாட்டில் எதிராளியை தோற்கடித்து முட்டித் தள்ளவைத்து அழவிட்டதும் நடந்தது, எங்கும் எப்பொழுதும் உல்லாசமான நாட்கள் அன்றைய நாட்கள்.

அந்த நாள் இன்றுபோல் இல்லை இன்று மனிதர்கள் யந்திரமாகிவிட்டனர். பொருள் வேட்டைக்கு ஆணும் பெண்ணும் ஓடுவதால் குடும்ப சந்தோஷத்திற்கு குழி தோண்டியாகி விட்டது. 

பால் மணம் மாறா குழந்தைகளை தூக்கம் களையுமுன்னே தூக்கி நிறுத்தி பல் விலக்கி பாத்ரூம் (வராவிட்டாலும் ) போ போ எனவிரட்டிபோனதும் குளிப்பாட்டி இட்லியை அமுக்கி மேலே பாலை ஊற்றி, (வாந்தி வந்தாலும் திட்டி) யூணிஃபாமை மாட்டி கழுத்தில் டையை இறுக்கிகாலில் ஷூ மாட்டி அள்ளி வேனில் திணித்து அப்பப்பா என்ன கொடுமை , மாலை பள்ளி விட்டு வந்து பிரிஜ்ஜில் உள்ளபிரட்டையும் பாலையும் தானே எடுத்து குடிக்கும் அவலம் குழந்தைகளுக்கு இன்று.

அன்று வாய்க்காலிலும் மழை நீரிலும் கப்பல் விட்ட ஆனந்தம் இன்றைய குழந்தைக்கு வாய்க்குமா ?எப்படி பார்த்தாலும் இந்த நாள் அன்றுபோல் இல்லையே என்ற ஏக்கம்வாட்டுகிறது பாவம் எங்கள் குழந்தைகளுக்கு சுதந்திரமும் இல்லை ஆனந்தமும் இல்லை அவசர உலகில் எல்லாமே தலைகீழ் ஆகிவிட்டது,, நன்றி பிரதிபலிக்கு அன்றைய நாளுக்கு எங்களை கூட்டிச்சென்றதுக்கு …!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.