சத்தியத்தின் சத்தியம்

சிவப்பு நிறத்தை அப்பிக்கொண்டிருந்தது வானம், வானத்தின் வண்ண விருந்தாக சிவந்து கிடந்தது பூமி. வைகை ஆறு முழுவதும் மணல் திட்டுக்கள், சித்திரையின் இயல்புக்கு ஆற்று நீர் ஓட வழியை நாடி வளைந்தும் நெளிந்தும் மணல் திட்டுகளிடம் கெஞ்சிக்கொண்டிருந்தன. அதன் ஓட்டச்சத்தம், பானையில் பொங்கல் பொங்கும்போது பெண்கள் இடும் குலவையைப் போல முன்னும் பின்னுமாக இசையாக மலர்ந்தது. இதமான காற்றில் ஆற்றங்கரையில் இருக்கும் நாணல்கள் ஒன்றோடு ஒன்று உரசி குலவை சப்தத்திற்கு ஏற்றவாறு இசையோடு இசைவானது. வானின் சிவப்பை மிஞ்சும் வண்ணத்து பூச்சிகள் நாணலின் இடுக்குகளில் உள்ள செடிகளில் மிதந்து கொண்டிருந்தது, அதன் ரீங்காரமும் இசையோடு ஸ்ருதியாக சேர்ந்துகொண்டது. இருபுறமும் மலைகள் அதன் இடையே தவழ்ந்து வந்தது, மனித சுவடுகளையே அறிந்திராத வைகை, அதன் கரையினில் இயற்கையாய் அமைந்திருந்தது ஆத்தங்கரைப்பட்டி.


ரம்மியமான காலை பொழுது, ஆனால் ரசிக்க ஏனோ மனம் ஒப்பவில்லை.

அழகு நிறைந்த ரம்மியமான காலையின் சூழலையும் அதன் இசையையும் திடீரென ஒரு குரல் கிழித்து எறிந்தது. அவை மலை முகடுகளில் மோதி வைகையை வாரி இறைத்த மலைக்காடுகள் எங்கும் பரவியது.


"வானத்தை உறுத்தும் வடிவான மீசை

பூமியில் கவிழ்ந்த தென்ன

புன்னகை வறண்ட தென்ன

சோகத்தை விதைத்த தென்ன

கள்ளி காட்டுக்குள்ளே

சொல்லி வச்ச நெல்லிமரம்

சொல்லாமல் போனதென்ன

வைகை ஆற்றைப்போலே

அள்ளித்தந்த வள்ளல் மனம்

வாழாமல் வீழ்ந்ததென்ன

சோகத்தை நான் சுமக்க

சாபத்தில் நான் தவிக்க

வீரப் பட்டாளம் தேர் ஏறும் நேரமப்பா

நிஜமா இது நிஜமா

கனவாக உருமாறி உறக்கத்தை உசுப்பாதோ?"


சத்தியத்தின் பாடல் மனித மனங்களை மட்டுமல்ல, அந்த வைகையின் மலைவனம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஒருவரை தவிர, அவர் சத்தியத்தின் நண்பன் கொண்டல்.

பாடையிலே பளபளவென பவுடர் போட்டு காக்கி சட்டை டிரௌசர் அணிந்து பட்டாளத்தில் இருந்து வந்தவர் போல கிளம்பவும் தயாராகி இருந்தார்.

இருவரும் கை சூப்பும் குழந்தை பருவத்தில் இருந்து பள்ளி, பட்டாளம், பட்டறை என இப்போது வரை இணை பிரியாத நண்பர்கள், பாடையில் மட்டுமே தனித்திருந்தார் கொண்டல்.


சத்தியத்தின் குரலில் தொய்வு தென்பட மீனாட்சிகிழவி சத்தியத்தை பார்த்தாள்.

அடிக்கடி கொண்டல் கிழவியிடம் சொல்வான்,

"சத்தியம் தான் ஆத்தா உனக்கு மூத்த பய, நான் செத்தா கூட அவந்தா உனக்கு கொள்ளி போடுவான்" கிழவியின் மனதில் எதிரொலித்தது.

மீனாட்சி கிழவிக்கு சத்தியத்தின் மீது அளவுகடந்த அன்பு உண்டு கருணையும் உண்டு,

"சத்திய...ம், இந்தாயா இந்த சோடவ குடுச்சுப்புடு, எம்புட்டு நேரந்தேன் பாடிகிட்டே கெடப்ப" என்று அழுது ஓய்ந்த குரலில் சோடாவை நீட்டினாள் மீனாட்சி கிழவி, கைகளில் தெம்பில்லாமல் நடுங்கிக்கொண்டிருந்தது.

வாங்க மறுத்தார் சத்தியம், தொண்டை வைகை ஆற்றை விட வறண்டு கிடந்தது.

ஒரு துளி நீர், கண்ணில் இருந்தும் இறங்கவில்லை, தொண்டைக்கு உள்ளும் ஏறவில்லை.

இரண்டிற்கும் இடையிலே தவிப்போடு மீள முடியாத துயரத்தில் சத்தியத்தின் மனம் அல்லாடியாது.

சத்தியத்தின் கால் அருகே அமைதியாக தலைசாய்த்து படுத்தாள் கிழவி.


கிட்டத்தட்ட நூறு வயதை நெருங்கிக்கொண்டிருந்தாள், கண்கள் வெள்ளை பூத்து போனது, மங்களான பார்வை. காதில் தண்டட்டி போட்டு சுமை தாங்காமல் கழட்டி விட்டுருந்தால், காப்படி உலக்கு போகும் அளவுக்கு இடைவெளி, ஆனால் பாம்புக்காது, தரையில் ஊர்வதையும் அறிவாள், பத்து மைலுக்கு அப்பால் யானையின் பிளிறலையும் அறிவாள். டானா வடிவில் கூன் விழுந்த தேகம். டானா கிழவி என்ற பட்டப்பெயரும் உண்டு.


மாதங்கள் கடந்தன, மணல்திட்டுக்கள் ஆற்று நீரிடம் கெஞ்ச தொடங்கியது.

பூமி மீது போர்வை போர்த்தி இருந்தது மழைமேகம். வானம் கறுப்பாகவே மாறியிருந்தது,

வைகை பொங்கிக்கொண்டு ஒடத்தொடங்கியது, நாணல் தென்படுவதே இல்லை.

இடியும் மின்னலும் அவ்வப்போது மலைகளில் விழ பாறைகள் உருண்டோடும் சத்தம்.

சூரியனை பார்த்து இரண்டு நாட்கள் இருக்கும் ஆகவே யாருக்கும் ஆற்றுக்கு செல்ல அனுமதி இல்லை, எந்த நேரம் வேண்டுமானாலும் காட்டாற்று வெள்ளம் கரை புரளும்.


ஊருக்கு நடுவே பெரியதாய் இரண்டு தளம் கொண்ட காரவீடு, மீனாட்சி கிழவி ஒருத்தி மட்டுமே, கொண்டலுக்கு பின் தனிமையானாள்.

கொண்டலின் மகன் கொல்கத்தாவில் இருந்து சத்தியத்தை காண வந்திருந்தான். ரயில்வே பாதுகாப்பு படையில்(RPF) கண்கணிப்பாளர் (Superintendent).

"சத்தியம் மாமாக்கு மேலு முடியலன்னு சேதி அனுப்பியிருக்க, என்ன சங்கதி" என மீனாட்சி கிழவியிடம் கேட்டான் சுப்பு வந்ததும் வராததுமாக,

"இந்தா இந்த கஞ்சிய ஒரு சோடு மாமாட்ட குடுத்துப்புட்டு வந்துடு" என்றாள் கிழவி.


ஆற்றங்கரை கிருஷ்ணன் கோவில் ஆலமரத்தடி திண்ணை, சத்தியத்தின் வீடாகி இருந்தது.

பெரிய மீசையில் முழுவதும் நரை கூடி அகண்ட விழிகள் துவண்டு போய் கிடந்தது. ஆறு அடிக்கும் மேல் நெடுக இருந்தவர், கூன் விழுந்து சுருண்டு கிடந்தார்.

பேசுவதையும் நிறுத்திவிட்டார், ஆகாரம் அளவும் இரண்டாகி பின் ஒன்றாகி தற்போது நின்றும் போனது.

மெலிந்த உடம்பில் கழுத்தெலும்பு முழுவதும் தெரிந்தது.

கொண்டலின் மறைவுக்கு பின், கரைகளில் பனைகள் இல்லாத நிறைந்த ஏரியை போல பலம் இழந்து கிடந்தார். எப்போது வேண்டுமானாலும் கரை உடையலாம் என்றிருந்தது.

சத்தியம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார், அவரை எழுப்ப மனம் வரவில்லை சுப்புவிற்கு.

தான் கொண்டுவந்த கம்பளியை அவர் மீது போர்த்திவிட்டு, ஆகாரத்தை தலைமாட்டில் வைத்துவிட்டு திரும்பினான்.


ரு வரைபடம் எடுத்து வந்தால் மீனாட்சி கிழவி, அழுக்கு படிந்திருந்த படத்திலே அழகான பெண் ஒருவள், மிகப்பெரிய கூந்தலுமாய், விரல்களை மடக்கி தாடையில் வைத்திரிந்தாள்.

சுப்புவிடம் காண்பித்தாள்.

"உன்னோட அத்தகாரிய தெரியுமா உனக்கு?" என்றாள் கிழவி

சுப்பு கேள்விப்பட்டதோடு சரி, இப்போதுதான் பார்க்கிறான்.

"கேள்விபட்டருக்கேன் கிழவி, இவங்கதானாஅது."

வரைபடத்தின் கண்களை உற்றுநோக்கினான், மீன் போன்ற கண்கள்.

கிழவியின் பூத்துபோன கண்களில் இருந்து நீர் வரைபடத்தில் விழுந்து தெறித்தது.

"இந்த சத்தியம் பய வெறும் பயலாகி போனானே, ஒண்டிக்கட்டையா காலத்த கடத்தி ஒண்ணுமில்லாம போனானே" ராகத்தோடு சோகமும் கலந்திருந்தது.,

"கொண்டலு அன்னைக்கே சொல்லித்தொலைச்சான், உங்க அத்தகாரிய கட்டிக்க சொல்லி, இந்த பய முடியவே முடியாதுனு முண்டிக்கிட்டான், கிறுக்குப்பய.”

கண்களை துடைத்து, குரலை பலப்படுத்தினாள் கிழவி,

“செஞ்ச சத்தியத்தை காப்பாத்தணும்னு என்ன இருக்கு?"

ஒன்றும் புரியாதவனாய் குழப்பத்தில் இருந்தான் சுப்பு.

"எனக்கு ஒரு சாவு வாய்க்கமாட்டிங்குது, இப்படி சாபம் வாங்கி வந்துட்டனே. குத்துக்கல்லாட்டம் நானொருத்தி எம்புட்டுதான் தாங்குறது, கொண்டலும் செத்துட்டான், சத்தியமும் சாகக்கிடக்கான், கொல்லிபோட புள்ள இல்லாம எப்படித்தான் வேகுமோ இந்த கட்ட" கிழவியின் மனம் கல்லாகவே மாறிப்போய் இருந்தது.

அனலாய் கிடந்த மனதில் இருந்த ரகசியங்களுக்கு விடுதலை கொடுக்க எண்ணினாள்.

சுப்புவின் அத்தை தற்கொலை செய்தது ஊர் வழி செய்தியாக ஏற்கனவே அவனுக்கு தெரிந்திருந்தது.

மனதினுள் கேள்விகள் சரமாரியாக எழத்தொடங்கியது,

" ஏன் அப்பா சொல்லியும் சத்தியம் மாமா அத்தையை கட்டிகல?" என்று நினைத்த கணம்,


பறை சப்தம் காதினுள் ஊடுருவி சுப்புவின் சிந்தனையை தட்டிப்பார்த்தது.

"சேதி என்னனா, திருநெல்வேலி தெக்குதேசம் அழகாபுரி ஊருலிருந்து ஆண்டிபட்டி கண்டமனுர் சீமைக்கு ரெண்டு தலைமுற முன்ன பொழப்பு நோக்கத்துக்கு வந்து, ஆத்தங்கரப்பட்டியில குடியேறின மலைச்சாமி வம்சத்து கடசி மனுசன் சத்தியம் செத்துபோனாரு. பட்டாளத்துல போராடுன ஊர் குடிக்கு மூத்தவரும், ரெண்டு பட்டுக்கிடந்த ஊரைரையும், ரெண்டா கிடந்த சாதி சனத்தையும் அதன் வழக்கத்தையும் மாத்தி உறவுக்காரங்களாக்குன சத்தியத்துக்கு குடும்பம் குட்டின்னு ஏதுமில்லை, அதுக்காக அவரு அனாதையும் இல்ல, ஊருல இருக்குற சிண்டு மொத பெருசு வர எல்லாரும் சத்தியத்துக்கு கடம பட்டுகிடக்கோம், ஆகையால வீட்டுக்கு ஒண்ணுக்கு ரெண்டு ரூவா வீதம் அவர் சாவுக்கு, கட்ட வரி கொடுக்க சொல்லி நாட்டாம உங்க பாதத்த தொட்டு கேட்டுக்கச் சொன்னாரு" மீண்டும் பறையின் சப்தம் இதயத்தின் ஊடே துடிப்போடு கலந்தது.


மதிலில் சாய்ந்து குத்தவைத்து அமர்ந்தாள் கிழவி “சத்தியம் போய் சேந்துடையாடா ….??"

கால்களின் இடுக்குகளில் கண்ணீரோடு தலையை புதைத்தாள்.

“நான் செஞ்ச பாவத்த எங்க போய் கழுவுவனோ தெரியலையே? எனக்கு மன்னிப்பே கெடையாது டா சத்தியம்.” புலம்பி தவித்தாள் கிழவி.

சுப்புவின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது, ஆனாலும் அவனது எண்ண ஓட்டம்,

"அப்படி என்ன சத்தியம் செஞ்சாரு சத்தியம் மாமா?"

குழப்பமும் தலைக்கு ஏறியது.


கிருஷ்ணன் கோவில் ஆலமரம் மயானபூமியானது, ஊர் முழுவதும் அங்கே கூடி இருந்தது. காக்கிசட்டையும் ட்ரொவுசருமாய் வயிறுக்கு ஊடே ஒரு தோல் பெல்ட்டும், காலுக்கு அருகில் பலகாலம் பயன்படுத்தாமல் இத்துப்போய் கிழிந்திருந்த பூட்சுமாய், மர நாற்காலியில் அமர்த்தப்பட்டிருந்தார் சத்தியம். முழவதுமாக ரோஜாவால் இழைக்கப்பட்டிருந்த மாலைகளுக்கு நடுவே ரோஜாவாகவே மலர்ந்திருந்தார்.

ஆளுயர ரோஜா மாலையை சுப்பு சத்தியத்திற்கு அணிவித்தான், பின் அவர் பாதங்கள் தொட மண்டியிட்டான், அவர் கால்கள் துடிதுடித்து கொண்டிருந்தது, உணர்வுகளால் பின்னப்பட்டு வலியால் துடிப்பதுபோல இருந்தது சுப்புவிற்கு. காலில் விழுந்ததும் கண்ணீர் பொங்கியது, அடக்கமுடியவில்லை, கண்ணீரை துடைத்து கொண்டே எழுந்தான்.

சுப்புவை பார்த்துக்கொண்டே இருந்தார் நாட்டாமை.

"சுப்பு, உனக்கு சத்தியம் என்ன வேணும்" வெறித்தவாறு நாட்டாமையை பார்த்தான் சுப்பு.

"அட, சொல்லுங்க சுப்பு" என்றார் சின்னதாய் உதட்டோர புன்னகையோடு.

" உங்களுக்கு தெரியாதது இல்ல, என் அம்மாகூட பொறந்த தாய்மாமனா நெனைக்கிறேன்" என்று சொல்லும்போது கண்களில் நீர் சொட்டியது.

“இதுக்குதானைய்யா கேட்டது, அவருக்கு சொந்தம்னு சொல்லிக்க ஒன்னவிட்டா யாரிருக்கா, நீதான் கொள்ளிபோடனும் " கண்டிப்புடன் கூறினார் நாட்டாமை.

சரி என்றவாறு தலையை அசைத்தான் சுப்பு.


ரண்டுநாட்கள் விடாத மழையில், ஊரே ஈரக்காடாகி கிடந்தது, விறகிற்கும் வரட்டிக்கும் நாலுமயிலுக்கு அப்பால் உள்ள உப்புனூத்தில் கேட்டுவருமாறு ஆட்களை அனுப்பினார் நாட்டாமை.

"ஒப்பாரி பாட ஊருக்குள்ள யாரு இருக்கா" என்றார் நாட்டாமை.

அமைதி காத்தது கூட்டம், யாரும் இருப்பதாய் தெரியவில்லை.

"புளுகுணி கெழவி, தேங்கா செரட்டைலாம் எங்க ஊருக்குள்ள ஆளயே காணல?"

"அவங்க வம்சத்து பெரியாம்பல செத்துபோனாருங்கய்யா, அதான் மொத்த கோஷ்டியும் அங்க போயிருக்கு" என்றனர் கூட்டத்தில் இருந்து.

"அட ஆமா, என்னப்பா இப்படி, ஊருல எத்தனையோ எழவுக்கு சத்தியம் பாடிருக்காரு,

சத்தியத்திற்கு பாட ஆளில்லனா எப்படி? கொண்டல் சாவுல சத்தியம் பாடினது இன்னும் காதுக்குள்ள கேட்டுகிட்டே கெடக்கு" கடுப்புடன் நெகிழிச்சியையும் பொழிந்தார்.

நாட்டமைக்கு கிழவியின் ஞாபகம் வந்தது, கிழவி பாட்டும் பாடுவாள்.

சுப்பிவிடம்

"கெழவி எங்கப்பா?"

"ஒரே அழுகைங்கையா, கூப்பிட்டாலும் வரல"

"பின்ன, கொண்டல விட சாத்தியம்தானேப்பா கிழவிக்கு மகன். வருத்தம் இருக்கத்தானே செய்யும். கெழவி பாவமப்போய் "

அமைதியாய் நின்றிருந்தான் சுப்பு.

சுத்துப்பட்டியில் இருக்கும் எட்டு ஊருக்கும் ஆட்களை அனுப்பி ஒப்பாரி பாடுவோரை கையோடு அழைத்து வருமாறு உத்தரவிட்டார் நாட்டாமை.

"அய்யா, ஓரெட்டு வீடு வர போய்ட்டுவாரேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பினான் சுப்பு,

சுப்புக்கு இருப்பு கொள்ளவில்லை, என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள துடித்தான்.


கிழவி அதே போலவே மதிலில் சாய்ந்து குத்தவைத்து அமர்ந்திருந்தாள், சுப்பு கிழவியின் அருகில் அமர்ந்து, நரைத்து போன கூந்தலை வருடினான். கிழவி நிமிர்ந்துகூட பார்க்காமல் பேசத்தொடங்கினாள்.

"ஒரு நாப்பது அம்பது வருசத்து முன்ன, சத்தியம் பயலும் உன் அத்த அங்கம்மாவும் விரும்புச்சுங்க, அது ஊருக்கே தெரிஞ்ச கததான், உங்க பாட்டன் சுப்பையா நாயக்கருக்கு மட்டும் தெரியாது"

என்று ஆரம்பித்தாள் கிழவி.

கிட்டத்தட்ட நாற்பத்தியாறு வருடங்களுக்கு முன்.


நரைக்கொண்ட முடியில் பிண்ணம்வாக்கில் கொண்டையும், அடர்ந்த வெந்தாடிக்கு இடையே கூர்மையான கறுத்த மீசையும், நாயக்கர் வழிபடும் கோவிலின் அரசர் சிலையில் இருப்பது போன்ற தொப்பையுமாய், வயதுக்கு மீறிய கம்பீரத்த்தோடு இருந்தார் சுப்பையா நாயக்கர்.


ஒரே சிந்தையோடு மீசையை முறுக்கிக்கொண்டு அங்கேயும் இங்கையுமாக நடந்துகொண்டிருந்தார்.

மீனாட்சிக்கு என்ன என்றே புரியாமல், அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"ஏங்க, என்ன ஆச்சு."

சிந்தனையை சிதைத்து வெடுக்கென்று திரும்பி பார்த்தார் நாயக்கர்.

"அங்கம்மாவையும், சத்தியத்தையும் கிருஷ்ணன்கோவில் ஆலமரத்துக்கடில பாத்தேன்"

கோவக்கனலாகி சிவந்திருந்தது கண்கள்.

தூக்கிவாரி போட்டது மீனாட்சிக்கு,

"சங்கதி தெரிஞ்சு போச்சு போலையே, என்ன செய்ய காத்துருக்காரோ?" நடுக்கத்தோடு யோசித்து கொண்டிருந்தாள்.

"எத்தனை நாளா இது நடந்துகிட்டு இருக்கு" கணீர் என்ற குரல் மேலும் அவளை நடுங்க செய்தது.

எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தாள் மீனாட்சி.

"இப்போவே இதுக்கு ஒரு முடிவு கட்டப்போறேன்" என்றவாறு எழுந்தார் நாயக்கர்.

எழுந்தவர் காலில் படாரென விழுந்தால் மீனாட்சி, அவர் காலை பிடித்தவாறு கெஞ்சினாள்

"சின்னஞ்சிறுசுங்க, ஏதோ விருப்பப்படுதுங்க." நிமிர்ந்து நாயக்கரின் கைகளை பற்றினாள்.

"நம்மளும் இந்த ஊரு வந்து இருவது வருசமாச்சு, நல்ல ஆளுங்க தான் அவங்களும். நம்ம ஏன் அங்கமாவ சத்தியத்துக்கு..." என்றவாறு நாயக்கரின் கண்களை பார்த்தாள்.

அவளை தொடர விடாமல் நிறுத்தியது நாயக்கரின் கண்கள். கனலாய் எரிந்துகொண்டிருந்தது.

"உனக்கு புத்தி பேதலிச்சுபோச்சா, நான் கண்டமநாயக்கன் வம்சத்த சேந்தவன்" மீசையை முறுக்கிக்கொண்டார்.

"இப்படி ஒரு சம்பவம் நாளைக்கு நடந்துட்டா, நான் எப்படி ஜமீனுக்குள்ள தலகாட்ட முடியும்..." புருவங்களை சுருக்கி மீனாட்சியை பார்த்தார்.

தலையை கவிழ்ந்து தரையை பார்த்தாள்.

"ஜமீனுக்குள்ள கட்டிவைக்க நெனச்சேன், ஆனா உன்மக இந்த காட்டுப்பயலோட சேந்து கூத்தடுச்சுக்கிட்டு கிடக்கா, ரெண்டு பேரையும் உசுரோட விட்டாத்தான" உரத்தக் குரலில் கத்தினார்.

"எனக்கு வாரிசவிட, என் மக உசுரவிட, என் பேரும் கவுரவமும் தான் முக்கியம்" என வேகமாக காரவிட்டின் முதல் தளத்திற்கு மரப்படிக்கட்டில் ஏறினார் நாயக்கர்.

மீனாட்சிக்கு கண்ணீர் கடலானது கண்கள், வீட்டுக்கதவை திறந்து வெளியே ஓடினாள்.

உரையோடு கூடிய ஜமீனின் இடுப்பு கத்தி(குத்துவாள்) ஒன்றை எடுத்து கீழிறங்கினார், வீட்டைவிட்டு அவரும் வெளியேறினார்.

"நாயக்கன், அங்கம்மாவையும் சத்தியத்தையும் குத்தி கித்தி கொன்னுபோட்டா." தனக்குள்ளே பேசிக்கொண்டு படபடத்த மனதோடு ஓடினாள்.

இரண்டு பேரும் சாகவும் கூடாது, நாயக்கனின் கவுரவமும் போகக்கூடாது சிக்கலில் தவித்தாள் மீனாட்சி.

கண்களை துடைத்துக்கொண்டு கதவை தட்டினாள்.

"என்ன ஆத்தா இந்த சாமத்துல, கொண்டல ஏதும் காணமா?" என்று பதறினான் சத்தியம்.

பின்னாடியே நாயக்கரும் வந்திருந்தார், இருகைகளையும் பின்புறமாக கத்தியை புடித்தவாறு கட்டிருந்தார்.

"எவ்வளவோ படுச்சு படுச்சு சொன்னனே அங்கம்மாகிட்ட, இப்போ எல்லா சங்கதியும் நாயக்கருக்கு தெரிஞ்சு போச்சு சத்தியம்"

மீனாட்சி கண்களில் நீர் சொட்டிக்கொண்டிருந்தது, அவளின் கண்களை உற்றுப்பார்த்தான் அதில் பயமும் பாசமும் முழுவதுமாய் பரவிக்கிடந்தது.

நாயக்கரின் முகத்தை பார்த்தான், அதில் தந்திரம் சிரிப்பாக உதிர்ந்தது.

"என்ன வேணும் ஆத்தா" தழுதழுத்த குரலில் கேட்டான் சத்தியம்

"இனி உனக்கும் அங்கம்மாவுக்கும் எந்த உறவும் இல்லன்னு சத்தியம் பண்ணிக்குடு" கையை அவனது நெஞ்சுக்கு நேராக நீட்டினாள்.

எதுவும் பேசாமல் மீனாட்சியின் கையில் நெஞ்சத்தை பிரித்து எடுத்து சத்தியம் செய்தான் சத்தியம்.

எத்தனை ஆணும் எதிர்த்து வந்தால் திறம்பட எதிர்த்து போராடியிருப்பான் சத்தியம், ஆனால் ஒரு தாயின் கண்ணீருக்கு முன் அவன் ஆண்மை குழந்தையானது.

நாயக்கருக்கு நன்றாகவே தெரியும், கத்தியின் கூர்மையை விட மீனாட்சியின் சொல் கூர்மைக்கு சத்தியம் கட்டுப்படுவான் என்று.

" கொண்டலுக்கு தெரியவேணாம், நாயக்கர் கிட்ட மல்லுக்கு நிப்பான்" மறுசத்தியம் வாங்கினான்.

இனி ஒருபோதும் தனது சத்தியத்தில் இருந்து சத்தியம் மீறமாட்டான் என்று திருப்திபட்டுக்கொண்டார் நாயக்கர், ஆனால் அங்கம்மா சத்தியத்தின் சத்தியம் அறிந்த அடுத்த கணம் அரளியை அரைத்து குடித்து பிணமாகிப்போனாள்.


சுப்பு என்ன செய்வது என்று அறியாமல் அமர்ந்திருந்தான், நாற்பத்தியாறு வருடங்களுக்கு முன் நடந்து என்றாலும், அதில் இருந்து கடந்து வர மனம் மறுத்தது.

கிழவி தலையை நிமிர்த்தி சுப்புவை பார்த்தாள், உள்ளிருந்த ரகிசியத்திற்கு விடுதலை கொடுத்ததாக எண்ணினாள், ஆனாலும் மனதில் பாரம் குறைந்த பாடில்லை.


சுப்புவையும் கிழவியையும் அழைத்து வர ஆட்களை அனுப்பியிருந்தார் நாட்டாமை.

கிழவி பின்னாடி வருவதாக சொல்லிவிட்டாள், சுப்பு மட்டும் பரண் மேல் இருந்த கேசட்டை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

ஒப்பாரி பாட ஆளில்லாமல் தவித்தது ஆத்தாங்கரைப்பட்டி, சுப்பு எடுத்து வந்த கேசட்டை நாட்டாமையிடம் கொடுத்தான்.

நாட்டாமை கேசட்டை மைக்செட்காரனிடம் கொடுத்து அனுப்பினார்.

"இந்த சினிமா பட்டாவது போடுங்க, தூக்க நேரமாகிப்போச்சு ஆறுதலா ரெண்டு பாட்டாவது கேட்டு போகட்டும் சத்தியம்"


ஒலிபெருக்கியில்,

"உள்ளம் என்பது ஆமை

அதில் உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி

நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி


உள்ளம் என்பது ஆமை"


மீனாட்சிக்கிழவி வீட்டில் இருந்து புறப்பட்டாள், இடதுபுறம் கிருஷ்ணன்கோவில் ஆலமரம், வலதுபுறம் வைகை ஆறு, இடையில் நின்று இடதுபுறமாக திரும்பி ஆலமரத்தை பார்த்தாள், கொண்டல் சொன்னது நினைவுக்கு வந்தது,

"சத்தியம் தான் ஆத்தா உனக்கு மூத்த பய, நான் செத்தா கூட அவந்தா உனக்கு கொள்ளி போடுவான்"

வலதுபுறம் திரும்பி வைகையை பார்த்து நடக்கத்தொடங்கினாள்.

சத்தியத்தை பாடையிலே பார்க்க மனமில்லை, துரோகத்தினால் சத்தியம் வீழ்ந்தான் என்றே மனதில் பட்டுக்கொண்டது.

வைகை ஆற்றின் முழியளவு நீரில் இறங்கினாள் கிழவி, இங்கே மூழ்கினாள் பாவத்திற்கு பரிகாரம் கிடைக்கும் என்று எண்ணினாள்.

ஒலிப்பெருக்கியிலே சத்தியத்தின் குரல் பாடலாக,


"வானத்தை உறுத்தும் வடிவான மீசை

பூமியில் கவிழ்ந்த தென்ன

புன்னகை வறண்ட தென்ன

சோகத்தை விதைத்த தென்ன

கள்ளி காட்டுக்குள்ளே

சொல்லி வச்ச நெல்லிமரம்

சொல்லாமல் போனதென்ன

வைகை ஆற்றைப்போலே

அள்ளித்தந்த வள்ளல் மனம்

வாழாமல் வீழ்ந்ததென்ன

சோகத்தை நான் சுமக்க

சாபத்தில் நான் தவிக்க

வீரப் பட்டாளம் தேர் ஏறும் நேரமப்பா

நிஜமா இது நிஜமா

கனவாக உருமாறி உறக்கத்தை உசுப்பாதோ?"


அந்த பாடலிலே உறைந்துபோய் கிடந்தாள் கிழவி.

ஊர் மக்கள் அனைவரும் அதிர்ச்சியிலே சத்தியத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

சத்தியத்திற்கு சத்தியமே பாடிய பாடல் பொருந்தியும் போயிருந்தது.

ஆறுமாதத்திற்கு முன்பு சத்தியம் பாடும்போது இதை பதிவு செய்திருந்தான் சுப்பு, சத்தியத்தின் கால்களை பார்த்தான் துடிப்பும் முழுவதுமாய் நின்றிருந்தது.


வைகை ஆறு சத்தியத்தின் பாடலில் துடிதுடித்து காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு வந்தது. மீனாட்சிக்கிழவி கழுவ நினைத்த பாவத்தையும் அதில் பிறந்த பாசத்தையும் இரண்டொரு கலந்து, அவள் மனதிற்கும் உடலுக்கும் முழுவதுமாய் விடுதலை கொடுத்து, மனித உணர்வுகளில் மூழ்கி முழுவதுமாய் அள்ளிக்கொண்டு, பாண்டியநாடு நோக்கிப் படையெடுத்தது.


tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.