காதல் போயின்

ஹாஸ்டலில் திடீரென்று அகிலன் தூக்கில் தொங்குவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் வயதுக்கு நான் பார்த்த சாவு ஐந்தோ, ஆறோ. ஸ்கூலில் கணக்கு வாத்தியார் கேன்சரில் இறந்ததிலிருந்து, இரண்டு வருடம் முன்பு இறந்த பாட்டி வரை, எல்லாம் பெரும்பாலும் இயற்கை சாவுகள்.

நீங்கதானே வார்டன்.......உங்களை அரெஸ்ட் செய்கிறோம்....என்று மானசீகமாக போலீஸ் அரெஸ்ட் செய்வதாக நினைத்துக் கொண்டேன்.

நான் மும்மரமாய் செகண்ட் இயர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் வகுப்பில் ஒஸ்ஸின் ப்ரீஎம்ப்ஷன் அல்காரிதத்தை விளக்கிக்கொண்டிருந்தபொழுது, அந்த தகவல் வந்து சேர்ந்தது.

"அகிலன் தூக்கில் தொங்குகிறான்"

காலையில் பார்க்கும் பொழுது, தலைவலியோ, ஜுரமோ...ஏதோ ஒரு நியாயமான காரணத்திற்கு லீவ் வேண்டும் என்றான். எத்தனை சதி?

இந்த தனியார் கல்லூரியில் விரிவுரையாளன் என்பதெல்லாம் அடுத்த தகுதி. முதலில் ஹாஸ்டல் வார்டன் ஆகிறாயா? அப்புறம் உனக்கு லெக்சரர் வேலை தருகிறேன் என்றது நிர்வாகம்.

சென்னைக்கு புதிது என்கிற பலவீனமான காரணத்தில் ஒத்துக் கொண்டேன்.

மஹாபலிபுரம் சாலையில் சென்னையிலிருந்து இருபத்தி ரெண்டு கிலோ மீட்டர் தாண்டி, காலேஜ் பெயர் வேண்டாம். மரங்கள் அடர்ந்த, மெயின் ரோட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் உள்ளே காலேஜ் இருந்தது. அத்தனை பெரிய கேம்பஸுக்குள் ஒரு பகுதியில் ஹாஸ்டல்.

முதலில் பெட்டி , படுக்கையோடு வரும் பொழுது, நன்றாகத்தான் இருந்தது. எத்தனை பேருக்கு தங்க இடமும், சாப்பாடும் கொடுத்து சம்பளமும் கிடைத்து வேலை கிடைக்கும்?

ஆனால் , நாள் ஆக,ஆக சலிப்பு தட்டி விட்டது. முதலில் சாப்பாடு. தினமும் அதே மெனு. சாம்பாரில் அதிக புளி.... வெளியே செல்ல இருபது நிமிடம் நடக்க வேண்டும். கிட்டத்தட்ட சிறை. இதற்கு நடுவில், பையன்களில் ஒழுக்கத்துக்கும் பொறுப்பு.

பையன்கள் வெளியே இருந்து யாருக்கும் தெரியாமல் ஹாஸ்டலுக்குள் சரக்கு கொண்டு வந்தார்களா? பிடியுங்கள் வார்டனை அடுத்த தெரு பெண்ணிற்கு லவ் லெட்டர் கொடுத்தானா? பிடியுங்கள் வார்டனை.

கிட்டத்தட்ட மத்தளம். ரெண்டு பக்கமும் இடி. ஒரு பக்கம் ஸ்டுடென்ட்ஸ். மறு பக்கம் நிர்வாகம்.

அந்த அரசியல்வாதியின் பினாமி பெயரில் இயங்கும் கல்லூரி.

"வாங்க...தம்பி....நீங்கதான் வார்டனா? பசங்கள ஒழுங்கா பார்த்துக்கங்க.....எவனாவது சேட்டை பண்ணா பயப்படாதீங்க.....பேரு கெட்டு போகக் கூடாது....அது முக்கியம்...."

கிட்டத்தட்ட எச்சரிக்கை மாதிரி ஒவ்வொரு முறையும் சொல்லி விட்டுப் போகும் பொழுது, திகிலாக இருக்கும். நான் போகும்பொழுது அகிலனை இறக்கியிருந்தார்கள்.

கண் அரைகுறையாய் திறந்து, வாய் பிளந்திருந்தது. நாக்கு வெளியே தள்ளி பல்லிடுக்கில் மாட்டியிருந்தது. கீழே ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது.

நிறைய கூட்டம்...எல்லாம் மாணவர்கள்....

எல்லாரும் க்ளாஸுக்கு போங்க....அசிஸ்டன்ட் வார்டன் கத்திக் கொண்டிருப்பது தெரிந்தது.

என்னிடம் அருகில் வந்து, மெல்லிய குரலில் கேட்டார்.

"உங்க கிட்ட லீவ் கேட்டானா?"

"ஆமாம்"

"என்குயரில கேட்பாங்க..."

"உயிர்?"

"ஊசலாடிட்டு இருக்கு.....நீங்க க்ளாஸுக்கு கிளம்பின உடன், நான் மார்னிங் ரவுண்ட்ஸுக்கு வந்தேன்..இந்த ரூம் கதவு மட்டும் உள்ளே தாழ் போட்டுட்டு இருந்தது ...ஜன்னல் வழியா பார்த்தேன்....தூக்குல அப்பத்தான் கயிறு போட்டுட்டு இருந்தான்....நான் கத்த கத்த கேட்காம, கதவை உடைக்க வேண்டியதா போச்சு "

இப்போது இரண்டு சிப்பந்திகள் ஸ்ட்ரெட்ச்சரில் அகிலனை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். உள்ளே ரூமிற்குள் எட்டிப் பார்த்தேன். விட்டத்தில் மாட்டி இருக்கிறான்.

முதலில் அவன் அப்பா, அம்மாவிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போலீசிற்கு விஷயம் போகக் கூடாது. பெரிய இஸ்யூ ஆகி விடும். மீடியா விடாது.

சுயசைட் அட்டெம்ப்டிற்க்கு ஐ பி சி யில் 309 என்று நினைக்கிறேன். மெடீரியல் எவிடென்ஸ்...சே...இப்போதைக்கு அகிலனை காப்பாற்றியாக வேண்டும்.

அகிலனுக்கு க்ளோஸ் பிரண்ட் யாரு? விஸ்வா முன் வந்தான்.

ஆம்புலன்சில் அசிஸ்டன்ட் வார்டன், விஸ்வா, அகிலனுடன் கேளம்பாக்கம் சாலையில் செல்லும் பொழுது, இரவு தொடங்கி விட்டது.

அந்த ஆஸ்பத்திரியின் வைத்திய சாதனைகளையெல்லாம் சொல்லி போரடிக்க விரும்பவில்லை. அகிலன் பிழைத்துக் கொண்டான்.

விஸ்வாவிடம் காரணம் கேட்டதற்கு, "லவ் பெய்லியர் சார்...ஊர்ல யாரையோ லவ் பண்ணி இருக்கான்....ஒத்துக்கலன்னு நினைக்கிறேன்....அவன் பொதுவா, யார்கிட்டையும் அதிகம் பேச மாட்டான் சார்" என்றான்.

இரவு ஒரு மணிக்கு முழிப்பு வந்தது. காவலுக்கு ஆஸ்பத்திரியில் நான் மட்டும் இருந்தேன்.

தண்ணீர்....என்றான்.

பிளாஸ்க்கிலிருந்து வெந்நீர் எடுத்து கொடுத்தேன்.

சார், அப்பா, அம்மா?

இன்னும் தகவல் சொல்லலப்பா.....நீ ஏன் இப்படி பண்ணின?

கண்களில் கண்ணீர்.

ஏன் சார்...என்னை பொழைக்க வச்சீங்க?

கண்ணீரை துடைத்து விட்டேன்.

"ஏன்பா.....காதலுக்காக சாகறதுன்னா....இங்க அத்தனை பேரும் சாகணும்...ஒன்னை ஒதுக்கினவளுக்கு முன்னாடி நீ வாழ்ந்து காமி....அதுதான் ஆண்மை...அத விட்டுட்டு, கோழை மாதிரி சாகறேங்கரேயே....உயிர்ங்கறது எத்தனை பெரிய விஷயம்...."

அவனால் பேச முடியவில்லை. கண்ணீர் மீண்டும் வந்தது.

"நானும் உன் வயசுல ஒரு பெண்ணை காதலிச்சேன்....அவ என்னுடைய உறவுக் கார பொண்ணு...ஆனா, எங்களை விட கொஞ்சம் வசதி ஆன குடும்பம்....முதல்ல என்னை காதலிச்சதா சொன்னா....அப்புறம், திடீர்னு ஒரு நாள், பிரண்ட்ன்னு சொன்னா.....நான் அவளை ரொம்ப காதலிக்க வற்புறுத்தருதா அவங்க வீட்டில சொல்லிட்டா....சொந்தகாரங்க எல்லாம் சேர்ந்து, என்னை அவங்க வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க....எத்தனை அவமானம் பட்டேன் தெரியுமா? அதற்கப்புறம் நான் நல்லா படிச்சு, முன்னேறி, நல்ல நிலைமைக்கு வந்திருக்கேன்....ஆனா, அவ......?இதே மாதிரி, ரெண்டு மூணு பசங்க கிட்ட பண்ணி, யாரையோ ஒருவனை காதலிச்சு, வீட்டை விட்டு ஓடி போயி, கல்யாணம் பண்ணி, ஒரு குழந்தை பொறந்ததுக்கப்புறம் இன்னொரு தொடர்பு கிடைச்சு, மீண்டும் ஓடி..."

"நல்லா யோசிச்சு பார்த்தா, அவ எனக்கு செஞ்ச நல்லது என்னன்னா, என்னை காதலிக்காதுதான். யோசித்து பார்....அவ ஒரு வேளை என் காதலை ஏத்துக்கிட்டிருந்தா...என் நிலைமை என்ன ஆகிறது?"

"என் கதையெல்லாம் உன் கிட்ட சொல்றது அனுதாபத்துக்காக இல்லை....காதலை தாண்டி வாழ்க்கையிலே நிறைய பக்கங்கள் இருக்கு....நீ இப்பதான் வாழ்க்கையை தொடங்கற....சின்ன காதலுக்காக பெரிய வாழ்க்கையே இழந்திடாதே...."

"உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் "

"சா...ர்..."

பேச முயற்சி செய்யும் பொழுது, சிரமம் தெரிந்தது.

"நான் லவ்னால இந்த மாதிரி பண்ணிக்கல சார்"

"பின்ன?"

"குடும்ப பிரச்னை சார்"

"என்னப்பா பிரச்சனை"

"நீங்க சொன்ன கதையில எல்லாம் கரெக்ட் சார்....ஒண்ணே ஒண்ணு மட்டும் உங்களுக்கு தெரியாது சார்..."

"என்ன?"

"அந்த ஓடிப்போனவளோட குழந்தை பேரு அகிலன்"

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.