“திவ்யா திவ்யா” என்று அழைத்தப்படி வீட்டுக்குள் வந்தாள் அவள் தோழி ரம்யா.

“என்ன ரம்யா திடீருன்னு வந்திருக்கே. என்ன விஷயம்?”

“ஒண்ணுமில்லடி நான் குரூப் டூல பாஸ் பண்ணிட்டேன். இந்தாடி கேக் எடுத்துக்கோ” என்று நீட்டினாள் ரம்யா.

“காங்கிராட்ஸ்டி” என்று கேக்கை எடுத்தவள் “இந்தாடி நீயும் சாப்பிடு” என்று பாதியை ஊட்டி விட்டு சாப்பிட்டாள்.

ரம்யா சென்றப்பிறகு அவள் அம்மா கமலம் வர திவ்யா தன் அம்மாவிடம், “அம்மா ரம்யா குரூப் டூல பாஸ் பண்ணிட்டாளாம்” என்றாள்.

“எல்லாம் கேட்டுகிட்டுதான் இருந்தேன். கனகம் புண்ணியம் செஞ்சிருக்கா. அவ புள்ளைக எல்லாம் புத்திசாலியா திறமைசாலியா இருக்குதுக” என்று ஏக்க பெருமூச்சு விட்டாள்

“நான் என்ன சொல்றேன் நீ என்னம்மா சொல்ற?”

“ஏண்டி நீயும் அவளும் ஒண்ணத்தானே படிச்சிங்க. இப்ப அவ பாஸ் பண்ணிட்டா. உன் ரிசல்ட் என்னாச்சுடி?”

“அதும்மா நானும் நல்லாத்தான் படிச்சு எழுதினேன்.”

“நீ என்ன பண்றேன்னு எனக்கு தெரியாது. கதை எழுதறன்னு பேர்ல ஏதோ கிறுக்கிட்டு இருக்க. பேருக்கு போயி பரிட்ச்சை எழுதற. அப்புறம் எப்படி பாஸ் பண்ணுவ”

“ஏம்மா நான் எழுத்தாளர் ஆக முடியாதா?” இப்ப கூட ஒரு அருமையான கதை எழுதியிருக்கேன் படிச்சு பாரும்மா” என்று சில காகிதங்களை நீட்ட “இத நான் வேற படிக்கனுமா?” என்று அலட்சியமாக சொல்லி விட்டுச் சென்றாள் கமலம்.

திவ்யா தன் கதையுடன் அறைக்கு அழுதுக் கொண்டே சென்றாள்.

அன்று மாலை கமலத்தின் பேத்தி ராகவி பெருகூச்சலுடன் அழ என்ன ஆச்சென்று பதறிய கமலம் சத்தம் வந்த இடத்திற்கு சென்றாள்.

அங்கு மருமகள் புவனா அவளை அடித்துக் கொண்டிருக்க “ஏம்மா புள்ளை அடிச்சிட்டிருக்க?” என்றாள். ஒரு அழகான ஒவியம் தரையில் கிடந்தது.

“ஏன் அடிக்கறேனா மன்த்லி எக்சாம்ல கம்மியா மார்க் எடுத்து பாஸ் பண்ணிட்டு படிக்காம பட்ம் வரயறா?” என்றாள் புவனா.

“அதுக்கு அடிச்சா சரி ஆயிடுமா? அழகாத்தானே வரைஞ்சிருக்கா அதப் பாராட்டாம மார்க் வாங்கலைன்னு அடிச்சா எப்படிம்மா?” என்றாள் கமலம்.

“இது திவ்யாக்கும் பொருந்துமில்லயா? நல்லா கத எழுதுற அவள பாராட்டாம நீங்க திட்டலாமா?” என்று கேட்டாள் புவனா.

கமலம் தன் தவறை உணர்ந்தாள். தன் மகளின் கதை எடுத்து படிக்க அறைக்கு சென்றாள்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.