தன்னம்பிக்கை

என் பெயர் கார்த்திக், நான் தான் தன்னம்பிக்கை தொழிற் நிறுவனங்களின், இயக்குனர், நிறுவனர் என யார் கேட்டாலும் பெருமையுடன் கூறுவேன், ஆம் இந்த தொழிற் சாம்ராஜ்யத்தின் எல்லா நிறுவனங்களையும் என்னுடைய உழைப்பாலும், என்னுடைய தன்னம்பிக்கையாலும் தனி ஒருவனாகவே கட்டி எழுப்பினேன், இப்படி நான் பெருமைபட காரணம், இந்த சாம்ராஜ்யம் உருவாக காரணம், எனக்கு தன்னம்பிக்கை தந்த, பெயரறியாத யாரோ ஒருவர்.


என் கல்வி முடிந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைய போகும் நேரம் அது, நானும் எனக்கு பிடித்த வேலைக்காக, நான் படித்த படிப்பிற்க்கான வேலைக்காக அலைந்து கொண்டிருந்த நேரமும் அது தான், உடன் பயின்ற நண்பர்கள் யாவரும் அவரவருக்கு கிடைத்த வேலையை செய்து கொண்டு(மனதிற்கு பிடித்தும் பிடிக்காமலும்) இருந்தனர், எனக்கோ மனதிற்குள் தாழ்வுணர்ச்சி முளைவிட துவங்கியிருந்தது. எனக்கு தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகம் அதனாலே, வேறு துறைகளில் பல வேலைகள் கிடைத்தும் போகாமலிருந்தேன்.


வீட்டில் அப்பா, அம்மா, நான் மற்றும் என் தம்பி. அப்பா சுய தொழில் செய்து வந்தார், ஆதலால் வேலைக்கு போக யாரும் வற்புறுத்தவில்லை, தீடீரென சொந்தங்களின் சூழ்ச்சியாலும், உடனிருந்தவர்களின் வஞ்சனையாலும், சிலரின் நம்பிக்கை துரோகத்தாலும் என் தந்தை தொழிலில் நட்டம் அடைந்தார், இருந்த எல்லாவற்றையும் இழந்தோம், கடைசியில் குடியிருந்த வீடு மட்டுமே மிஞ்சியது, தொழிலில் நட்டம் அடைந்ததற்கு என் தந்தை வருந்தவில்லை எனினும் அவர் நம்பிக்கை துரோகத்தால் மிகவும் நொடிந்து போயிருந்தார், அந்த நினைப்பே அவருடைய உயிர் போக காரணமாயிருந்தது .


அச்சம்பவவத்திற்குப்பின், என் தன்னம்பிக்கை எங்கு போனதோ எனக்கு தெரியவில்லை, காரணம் என் தந்தை தான் என் முன்மாதிரி அவரை பார்த்தே தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டவன் நான் , குழப்பத்தில் நாட்கள் கடந்துகொண்டிருக்க, என் நண்பர்களோ என் மன திடத்தை, கரைக்க துவங்கியிருந்தார்கள், அம்மாவும் வேலைக்கு போக ஆரம்பித்திருந்தார்கள், அதனாலே கிடைத்த ஒரு வேலையில் சேர்ந்தேன், மனதிற்கு பிடிக்காத வேலையானதால், அவ்வளவாய் ஈடுபாடு இல்லாமல் வேலைக்கு போய்க்கொண்டிருந்தேன்.

மாதங்கள் கடந்து, ஒரு நாள் அலுவலகத்திற்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தே போது என் நண்பனின் அழைப்பு வந்தது, வெகு நாட்களுக்குப் பின் அழைத்திருந்தான், அவன் வெளிநாடு செல்ல இருப்பதாகவும், நிறைய கஷ்டங்களுக்கு பின் தான் அவனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாகவும், அதனால் தன் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்க ஒவ்வொருவரையும் அழைத்துக்கொண்டிருப்பதை கூறினான்.

அவனுடைய விசேஷங்களை கூறி முடித்தப் பின் என்னை பற்றி விசாரிக்கலானான், நான் நடந்தவற்றை எல்லாம் கூறாமல், தற்போது போய்க்கொண்டிருக்கும், எனது வேலையை பற்றியும், அதை எந்த மனநிலையுடன் கூடி செய்கிறேன் என்றும் கூறி இணைப்பை துண்டித்தேன்.


அடுத்த சில நிமிடங்களில், என் அருகே அமர்ந்திருந்த ஒருவர் என்னை "தம்பி" என அழைப்பதை உணர்ந்து அவரை கவனித்தேன். அவர் ஒரு மாற்றுத்திறனாளி, நான் கவனிப்பதை உணர்ந்த அவர் என்னிடம்

தம்பி நீ அலைபேசியில் பேசியதை கவனித்துக்கொண்டிருந்தேன், உனக்கு பிடிக்காத வேலைக்கு போவதை விட உன் கனவு எதுவோ அதை அடைய போராட வேண்டியது தானே. பிடிக்காத வேலைக்கு போவதால் உன் மனமும் சோர்வடையும், நீ செய்யும் வேலையிலும் உனக்கு ஈடுபாடு இருக்காது எனக்கூறினார். அதை கேட்ட நான் யாரென்றே தெரியாத அவரிடம் என்னை பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் சொன்னேன். அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர் மீண்டும் என்னிடம் பேசலானார்.


அவர் ஒரு மாற்று திறனாளிகளுக்கான ஒரு இல்லம் நடத்தி வருவதாகவும், அதை தன் சொந்த முயற்சியால் துவங்கியதாகவும், அதுவுமின்றி சிறு குழந்தைகளுக்கான ஒரு சிறு பள்ளி ஒன்றையும் அவர் நடத்தி வருவதையும் கூறினார். அவர் தன்னால் மற்றவர்களை போல் ஒன்றும் செய்யமுடியாது என ஒரு முறை கூட எண்ணியது இல்லை என்றும், தான் ஒரு புதிய பள்ளிக்கூடம் ஆரம்பிக்க போவதாய் ஆரம்பத்தில் சொன்ன பொது அவரை எல்லோரும் பரிகாசித்தனர் என்றும், இருந்தும் தன் தன்னம்பிக்கையால் மட்டுமே அவரால் இவ்வளவு தூரம் வர முடிந்தது எனவும் கூறினார். கடைசியாக அவர்,

"வாய்ப்புகள் இங்கே அதிகம், அதை தன்னம்பிக்கையோடு யார் எடுக்கிறார்களோ அவர்களால் மட்டுமே வெற்றியடைய முடிகிறது"

என கூறி அந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விட்டார். அவர் சொன்ன வார்த்தை எனக்குள் புதைந்து போன என் தன்னம்பிக்கையை துளிர்விட காரணமானது. மனதினுள் ஒரு முடிவு எடுத்தவனாய் அலுவலகம் சென்றேன், சென்று என் மேலதிகாரியிடம் எனது இராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு வீடு திரும்பினேன். நேரமே வீட்டிற்கு வந்ததால் அம்மா ஏன் என வினவ நடந்தவற்றை கூறி, வேலையை இராஜினாமா செய்துவிட்டதையும் கூறினேன். திட்டுவார்கள் என எண்ணின எனக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாய் தந்துவிட்டு என் அன்னை சென்றார்கள். அதுவே என் தன்னம்பிக்கையை மேலும் அதிகரித்தது.

மீண்டும் பிடித்த வேலை தேடி அலையை துவங்கினேன் . என்ன மாயமோ தெரியவில்லை இரண்டு வருடங்களாய் தேடியும் கிடைக்காத வேலை, இரு மாதங்கள் முடிவதற்குள் கிடைத்துவிட்டது. மனம் பிடித்த வேலையானதால் நன்றாகவே ஒத்துழைத்தது. சில ஆண்டுகள் கடந்து, என் தந்தை நட்டமடைந்த தொழிலை மீண்டும் துவங்கினேன், இம்முறை யாரையும் உடன் சேர்த்துக்கொள்ளவில்லை, லாபமோ நட்டமோ எனக்கு மட்டுமே இருக்கட்டும் என்கிற எண்ணம். என்னால் யாருக்கும் நட்டம் வர வேண்டாம் என்கிற எண்ணமும் தான். தொழில் செய்ய துவங்கியதிலிருந்து, பழைய வாடிக்கையாளர்கள் மிகவும் உதவியாக இருந்தார்கள், அதில் எனக்கு என் தந்தையின் நேர்மை தான் தெரிந்தது. ஒரு புறம் பிடித்த வேலை மறுபுறம் தொழில் என நன்றாக போய்கொண்டு இருந்தது.


ஒரு சில வருடங்களில் தொழிலில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்க ஆரம்பித்தது. மேலும் என்னால் ஒரு புறம் வேலை மறுபுறம் தொழில் என அலைய முடியாத சூழ்நிலை ஏற்பட. தன்னம்பிக்கை உள்ள மனிதர்களை தேட ஆரம்பித்தேன். அந்த நாட்களில் ஒன்றை நன்றாக புரிந்துகொண்டேன் நம்மிடையே தன்னம்பிக்கை அதிகமாய் இருக்கிறது ஆனால் அதை வைத்து ஒரு முடிவை எடுக்கும் மனம் தான் எல்லாருக்கும் இல்லை. தேடலின் முடிவில் என்னை போல மனதினுள் தன்னம்பிக்கையை புதைத்து வைத்திருந்த சிலரை கண்டுகொண்டேன். எனது வேலையையும் இராஜினாமா செய்தேன், தொழிற் நிறுவனங்களை விரிவுபடுத்த துவாங்கினேன். புது புது தொழிலையும் ஆரம்பித்தேன். ஆரம்பிக்கும் போதெல்லாம் உடனிருக்கும் அனைவரும் ஏன் இப்படி ஒரு முடிவு நட்டம் வந்தால் என்ன செய்வது என கேட்பார்கள் அவர்களுக்கெல்லாம் என் அன்னை எனக்கு தந்த அந்த அமைதியான சிரிப்பை பதிலாய் கொடுப்பேன். சில தொழிலில் நட்டம் ஏற்படும் இருந்தும் என் தன்னம்பிக்கை என்னுடன் இருப்பதால் அவற்றை எல்லாம் சமாளித்து இன்று இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறேன்.


என் மார்தட்டி கொள்ளும் அளவிற்கு நான் உயர காரணமாயிருந்த அந்த மாமனிதனை இன்றும் தேடிக்கொண்டிருக்கிறேன், அவரிடம் பெற்றுக்கொண்ட முகவரியில் போய் பார்த்தேன் ஆனால் அங்கே அவர் சொன்னது போல் ஒன்றும் இல்லை வெறும் புல்வெளி மட்டும் தான் இருந்தது, அவரை என்றாவது சந்திப்பேன் என்றான் நம்பிக்கையில் அவரை பார்த்த அந்த பேருந்தில் பல முறை பயணித்திருக்கிறேன் ஆனால் அவரை அதற்குப்பின் நான் சந்தித்ததே இல்லை. என்னுடன் இருக்கும் அனைவருக்கும் நான் எப்பொழுதும் சொல்வது இது தான் இப்பொழுது உங்களுக்கும்,


"வாழ்வோ சாவோ எதுவாயினும் சரி, தன்னம்பிக்கையோடு போராடு, சில தோல்விகள் உன்னை முத்தமிட்டு செல்லலாம் ஆனால், கண்டிப்பாய் ஒரு நாள் வெற்றி உனக்கு தலைவணங்கும்".

இவண்

யாசகன்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.