சத்தம் வேண்டாமே ...ப்ளீஸ்

நமக்கு எதிலும் எப்போதும் சத்தம் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.

அது பக்தி ஊர்வலமாக இருந்தாலும் சரி, எழவு ஊர்வலமாக இருந்தாலும் சரி. வெடி வெடித்து, கொட்டு அடித்து சத்தம் எழுப்புவோம்.

ஆரவாரமும், இரைச்சலும், கூப்பாடும் நம்முடன் பின்னிப் பிணைந்துள்ளன.

பேசும்போதுகூட நேரிலும், கைப்பேசியிலும், தொலைபேசியிலும் நாம் சத்தம்போட்டுதான் பேசுகிறோம். எப்போதும் சள சளவென்று பேசிக்கொண்டிருப்போம். தூங்கும்போது மட்டும் நாம் சப்திப்பதில்லை. அப்போதும் நம்மில் பலர் விதவிதமாக குறட்டைவிட்டு சத்தம் எழுப்புவார்கள். சத்தம் இல்லாத ஒரு தனிமையை நாம் எப்போதும் விரும்புவதில்லை.

இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும்போதும் தேவையின்றி ஒலி எழுப்பிக்கொண்டிருப்போம். மற்ற வளர்ந்த நாடுகளில் அம்மாதிரி ஒலி எழுப்புவது அநாகரீகத்தின் உச்சம்.

வீட்டில் தொலைக்காட்சி பார்க்கும்போதும் ஒரே சத்தம். டெசிபல் அளவு என்றால் என்ன, எத்தனை டெசிபல்களுக்கு மேல் போனால் நம் காதுகளுக்கு ஆபத்து என்பது பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அதுபற்றி நாம் கவலை கொள்வதில்லை.

சத்தம் என்பது நம் பிறப்புரிமை போலும். நாம் ஒரு வீடு பார்க்கப்போனால் அங்கு தண்ணீர் சரிவர வருகிறதா, மின்சாரம் தடையின்றி வருமா என்று விசாரித்து தெரிந்து கொள்வோம். ஆனால் அந்த வீட்டில் சத்தம் இல்லாமல் இருக்குமா என்று சிந்திப்பதுகூட இல்லை. அதனால்தான் பெரும்பாலான வீடுகளும், அப்பார்ட்மென்ட்களும் ரோட்டின் மீது சத்தத்தின் நடுவே அமைந்துள்ளன.

நாம் தினமும் வெட்கமில்லாமல் சத்தத்தின் நடுவில் உழன்று கொண்டிருக்கிறோம். சத்தத்தை நாம் ஒரு வாழ்வியல் முறையாக ஏற்றுக்கொண்டு விட்டோம். இயல்பாக காற்று சுவாசிப்பதுபோல் நமக்கு சத்தமும் இயல்பாகிவிட்டது. இது மிகவும் வேதனையான ஒரு விஷயம்.

ஆனால் ஒரு உண்மை என்னவென்றால் இப்போதைய படித்த இள வயதினர் சத்தத்தை வெறுக்கிறார்கள். இது மிக நல்ல விஷயம். அமைதியாகப் பேசி அளவோடு புன்னகைக்கும் பெண்களைத்தான் ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதுமாதிரி பேச்சைக் குறைத்து செயலில் வீரம் காட்டும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

நம் கடவுள் நம்பிக்கைகள்கூட சத்தம் சார்ந்து அமைந்துள்ளதை நாம் மறுக்க முடியுமா? அமைதியான சூழலில்தானே பக்தி என்பது வரமுடியும்? ஆனால் நாம் தெருவுக்கு தெரு, முக்குக்கு முக்கு தெருக்களை அடைத்துக்கொண்டு கலர் கலராக பெரிய பெரிய பிள்ளையார்களை நிறுவி அதற்கு டிஸ்கோ பிள்ளையார், மாடர்ன் பிள்ளையார், ப்ரேக்டான்ஸ் பிள்ளையார் என்று பெயர் சூட்டி காமெடி பண்ணுகிறோம். இதனால் பொதுமக்களுக்கு எவ்வளவு தூரம் இடையூறு என்பது பற்றி நாம் கிஞ்சித்தும் சிந்திப்பதில்லை.

போதாதற்கு மைக்செட் வைத்து தொடர்ந்து பத்து நாட்களுக்கு அதை அலற விடுகிறோம். படிக்கும் குழந்தைகளைப் பற்றியும், படுத்திருக்கும் நோயாளிகளைப் பற்றியும் நமக்கு சிறிதும் அக்கறையில்லை. இதில் பக்தி எங்கிருந்து வந்தது?

சரி போகட்டும் இந்துக்களாய் பிறந்த என்னைப் போன்றவர்கள் இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டியது எங்கள் தலையெழுத்து. அனால் நம்மைச்சுற்றி குடியிருக்கும் கிறிஸ்தவ, முஸ்லீம் சகோதரர்களுக்கு எதற்கு இந்த வகையான தொந்திரவுகள்? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

பக்தி என்பது ஒருவரின் மிகவும் தனிப்பட்ட விஷயம். அது அவருக்கு மட்டுமே புரியக்கூடியது. மிகவும் அன்னியோன்னியமான ஒரு உணர்வு. அந்த உணர்வு அமைதியில்தானே ஆரம்பிக்க முடியும்? அமைதியாகத்தானே நாம் கடவுளிடம் உரையாட முடியும்? அப்படிப்பட்ட அமைதி நம் வீட்டில் தொடங்கி அங்கேயே முடிந்து விடவேண்டும்.

ஊரைக்கூட்டி ஆர்ப்பரிப்பது கடவுள் நம்பிக்கைக்கு விரோதமானது.

கடவுள் நம்பிக்கையும், கலவியும் ஒன்று. மனைவியுடன் செய்யப்படும் கலவி எவ்வளவு தூரம் புனிதமானதோ, ரகசியமானதோ அவ்வளவு தூரம் உணர்வு பூர்வமானது பக்தியும் வேண்டுதல்களும். இவைகள் இரண்டும் நம் வீட்டிற்குள்ளேயே பண்புடன் நடத்தல் வேண்டும். அதுதான் நாகரீகத்தின் வெளிப்பாடு. இதை நாம் புரிந்துகொண்டால் நல்லது.

ஆயிற்று....இப்போது தீபாவளி வேறு வந்து விட்டது. பட்டாசு போட்டு இருக்கிறவர்களை அலற விடுவார்கள். காசைக் கரியாக்குவதில் நம்மைப் போன்ற புத்திசாலிகளைப் பார்ப்பது அரிது. பத்து மணிக்குமேல் பட்டாசு சத்தம் இருக்கக்கூடாது என்று சட்டம் இருந்தாலும், அதை எவரும் கண்டு கொள்வதில்லை.

தீபாவளியை கொண்டாட விரும்புபவர்கள் வெடிகள் இல்லாது சத்தம் போடாமல் மத்தாப்புகள், , புஸ்வாணங்கள், பூவானங்கள், சாட்டைகள் கொளுத்தி ஏன் கொண்டாடக் கூடாது?

சத்தம் எழுப்பினால் அது அடுத்தவர்களுக்கு எரிச்சலையும், தொந்திரவையும் ஏற்படுத்தும் என்று என்றைக்கு நாம் உணரத் தலைப்படுகிறோமோ அன்றைக்குத்தான் நாம் நாகரீகமானவர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். அதுவரை நாம் அனைவரும் காட்டுமிராண்டிகளே !

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.