இரவின் வழிதல் இனம் காண முடியும் அளவுக்கு.. எங்கும்...எங்கெங்கும்..குளிரின் பனியை பாலின் வண்ணமாய்... சிதறிக் கொண்டிருந்தது.....ஒரு பாலைவன இருளாய் செம்மண் பூமியின் நீட்சிகள் அகலப் பரப்பிய பெரும் தவமென.. வெண்ணிற நிர்வாணத்தில் விக்கித்து கிடந்தது....

அவன் உடல் முறுக்கேறி.. ஒரு காண்டாமிருகத்தின் வேகத்தோடு... எதிரே நின்றிருந்த இரவைத் தாண்டி அந்த இருவரைத் தாக்கத் தொடங்கினான்....காற்றில்லா தேசத்தில் வந்த கனவு போல.. திறந்து கிடந்த வெளியெங்கும்.. மத்தளத்தில் உட்புகும் சப்தத்தின் மொழி பெயர்ப்பாக... விழுந்த ஒவ்வொரு அடியும்... வீறிட்டது....சுற்றிலும்... பாழடைந்த கோட்டைகளின் மண் சுவர்கள் செந்நிறம் சேர்த்த வெள்ளைக் கூரையாய் அப்போது தான் நெய்யப்பட்ட ஓவியம் போல அந்தக் காடு... தன் நீண்ட பற்களால் கூரிட்டுக் கொண்டு நங்கூரமாய் தன்னை நிலை நிறுத்தியிருந்தது......

திப்புவின்.... கோட்டைகளில் ஒன்றாய்.. அது இன்னமும் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும் பிரம்மா தேசத்தின் பிரம்மதேசம்....... பின்னால் வந்து கழுத்தைப் பிடித்தவனை .. இடது கை கொண்டு அவன் வலது கையை முன்னோக்கி இழுத்து தன் தலையைக் குனிந்து இழுத்த கையை அப்படியே ஒரு சுழற்று சுழற்றி அவன் உடலைத் திரும்பவும் முன்னால் கொண்டு வந்து.. மீண்டும் இந்தப் பக்கம் ஒரு சுற்று மீண்டும் அந்த பக்கம் ஒரு சுற்று என்று சுற்றி சுற்றி... ஒரு முப்பது முறை சுற்றலில்.. கையோடு வந்து வட்ட அவன் வலது கையைக் கொண்டே உயிர் அதிரக் கத்தத் துவங்கிய அவன் வாய்க்குள் திணித்தான்.. சத்தம் அடங்கியது....உயிர் அடங்கியதா என்று கவனிக்கும் நேரம் அதுவல்ல என்பதால்... ஏற்கனவே அடி வாங்கி சுருண்டு கிடந்த இன்னொருவன் காலைப் பிடித்து, இழுத்துக் கொண்டே ஒரு நாற்பது முறை அந்த கல், முள், பாறை... ஓடை என்று... அந்த செம்மண் காட்டிலும்... அருகே இருந்த சோளக் காட்டிலும்...கோட்டை மேட்டு உடைந்த சுவர்களுக்குள்ளும்...... இழுத்துக் கொண்டே நடந்தான்.. ஒரு முனியைப் போல...

கத்தி கத்தி இனி கத்த, கத்தல் முறை ஒன்றும் இல்லை என்று அவனால் செத்துப் போன சில எறும்புக் கூட்டங்கள், மரண வாக்கு மூலம் கொடுத்துக் கொண்டிருக்க, மயங்கிச் சரிந்த அவனின் பின் பாகம் முழுக்க ரத்த கசிவுகளால்... வாடை சொல்லும்.. சிவப்பு சதையாக துடித்துக் கொண்டிருந்தது.....நின்று ஒரு முறை... சுற்றும் முற்றும் பார்த்தான்.....பார்வை சுழற்றிய பாகம் எங்கும்.. பால் அருவி, காற்றாய் பரவுவது போல.... நிலா நிரம்பிக் கிடந்தாள்... அணைத்து ஆசுவாசப் படுத்தும் இரவின் சூட்சுமக் கரங்களில்... மாயக் கண்கள் இல்லை என்பது போல... கீழே கிடந்த ஓர் உருவத்தைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு மேற்கு நோக்கி நடக்கத் துவங்கினான்....காலின் ஓசைகளில் சருகுகளின் உடைதலை.. கோட்டை மண் சுவர்களின் மிச்சம் எப்போதும் போல இப்போதும்... காலோடு ஒட்டிக் கொள்வது இயல்பே என்று வேகமாய் நடக்கச் செய்தது மணித்துளி......

"சாணக்யா...."


கல் கொண்ட மனதில்... சில் என நீர் வார்த்தது போல.. "தன் பெயரை அசரீரி, சொல்லி விட முடியாதே" என்று யோசித்தபடியே நின்றான்.. சாணக்யன்...
தோளில் போட்டிருந்த உருவத்தோடு...வேதாளம் தூக்கிப் போகும்.. விக்கிரமாதித்தனாக... திரும்பாமல் நின்றபடியே.. சற்று காதுகள் புடைக்க.. கண்கள் கூராக.. மனதின் கண்கள் வழியே பின்னோக்கி பார்த்தான்..
"சொல்லு மார்த்தாண்டா....இங்க என்ன பண்ற ?" என்று திரும்பாமலே கேட்டான்......
"சாணக்யன்னா சும்மாவா......."-என்று முணங்கிக் கொண்டே..... சற்று முன்னால் ஓடி வந்து, மூச்சு வாங்க நின்றபடியே... "டேய்.. சாணக்யா.. என்னடா இது...." என்றான் மார்த்தாண்டன்.. அவன் கையில் இளநீர் ஒன்று முழுதாக இருந்தது ...கீழே கிடந்தவர்களை ஒரு சேர இருவரும் பார்க்க.. இடம் மாற்றி சற்று கூடுதல் கேள்விகளின் பாவமாக தோளில் கிடந்த உருவத்தையும் பார்த்தான்...மார்த்தாண்டன்
சலனமற்று ஓடிக் கொண்டிருந்த ஓடையின் நிறம்... மாறிக் கொண்டிருக்க.. காலமும் ஓடிக் கொண்டிருந்தது....
"ஓ........................""குள்ளாயி கிழவியை இவனுங்க தூக்கிட்டு போனானுங்களா...!.. எதுக்குடா...?...... ஒன்னும் புரியலையே... சரி,.. அதுக்கு இப்டியா போட்டு அடிப்ப... பாரு மூச்சு பேச்சு இல்ல.."-என்றபடியே பார்வையை கீழே கிடந்தவர்கள் மீது விட்டுக் கொண்டே... "அனேகமா செத்துருப்பாங்கன்னு நினைக்கறேன்..பார்த்தா அசலூர்க்காரங்க மாதிரி இருக்கு... இப்ப என்ன பண்ண...?"
மார்த்தாண்டன் பேச பேச.. தீவிர யோசனையில்... வெறித்திருந்தான் சாணக்யன்...


"மாப்ள... இது யோசிக்கறக்கான இடம் இல்ல......கோடங்கி... எவனாவது வந்தறப் போறான்... மேட்டர் பண்றவனுங்க எவனாது பாத்துட்டா கதையே மாறி போய்டும்... கிளம்புவோம்.. வா.... முதல்ல குள்ளாயியைக் கொண்டு போய் வீட்ல விட்ருவோம்...இன்னும் மயக்கத்துலதான் இருக்கு.. கொண்டு போய் சத்தமில்லாம அது திண்ணையில போட்டுட்டு போய்ட்டே இருப்போம்.. யாரும் குள்ளாயியைக் கடத்தவும் இல்ல..நீ யாரையும் அடிச்சு காப்பாத்தவும் இல்ல... நாம ரெண்டாவது காட்சிக்கு சினிமா பாக்க போய்ட்டோம்.... சரியா..."-என்ற மார்த்தாண்டன்... சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே கிளம்ப எத்தனித்து விட்டான்....

குனிந்திருந்த சாணக்யன்.. கண்கள் தூக்கி சரி என்பது போல தலை ஆட்டினான்...


"ஆமா... நீ எப்டி இந்த நேரத்துக்கு இங்க வந்த...?" என்ற.. மார்த்தாண்டனை... உற்றுப் பார்த்து விட்டு..... "சரி.. நீ எங்கடா இந்த நேரத்துக்கு இங்க வந்த!" என்று அதே கேள்வியை எதிர் திசையில் போடும் தூண்டிலென போட்டான்.....சாணக்யன்.
"அது..... மாப்ள.." என்று சிரித்துக் கொண்டே.. தன் கையில் இருந்த இளநீரைக் காட்டி.. "எப்பவும் போலதான்.. தேங்கா திருடத்தான் வந்தேன்... கும் கும்னு சத்தம் கேட்டுச்சு...... சரி கோட்டையில எப்பவும்..பேய்ங்கதான் சத்தம் போடுமேனு வேலையைப் பார்த்துட்டு இருந்தேன்... ஆனா.. அது மனுசக் குரல் மாதிரி கேக்கவும்.. என்னடா.... என்னமோ புதுசா நடக்குது போலன்னு அப்டியே வந்து பார்த்தா.... நீ... முனி மாதிரி பட்டைய கிளப்பிட்டு இருந்த... சரி.. மாப்ள.. வழக்கம் போல..தெறிக்க விட்டுட்டு இருக்கான்னு கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்...நீ என்னடானா....கொல வெறில பிரிச்சி மேஞ்சுட்ட...... சரி... இப்ப சொல்லு... நீ ஏன் வந்த...?"என்றான்.. மார்த்தாண்டன்... முகம் துடைத்த வியர்வைகள் பளிச்சென குட்டி நிலாக்கள் செய்தன...
இருவரும் கிழக்கு நோக்கி நடந்து கொண்டே "அது நம்ம.. வேம்பு.. இருக்கான்ல.. அவன் பெங்களூரு போறேன்னு சொன்னான்... அதான்.. கூட்டிட்டு போய் சந்திபாளையத்துல ரயில் வெச்சிட்டு வந்தேன்...அப்போ தான்.. அந்த ரெண்டு பெரும் குள்ளாயியை தூக்கிட்டு போயிட்டிருந்தானுங்க... என்ன பாக்கவும்.. ஓட ஆரம்பிச்சிட்டானுங்க...... அப்புறம்தான் நீ பாத்தயே..." என்றபடியே மீண்டும் ஒரு விக்கிரமாதித்தனின் வேகத்தோடு.. மலையளவு நடப்பது போல... நடந்து கொண்டிருந்தான் சாணக்யன்.....
அவனுக்கு ஈடு கொடுத்துக் கொண்டே..."டே மாப்ள.. வர வர வேம்பு சரி இல்லடா..... பொண்ணு மாதிரியே நடந்துக்கறான்டா..... ஒரு மாதிரி இருக்கான்... பார்த்து பழகு.."-என்ற மார்த்தாண்டன்... பேச்சின் முடிவில் ஒரு வகை களுக் சிரிப்பு ஒளிந்திருந்தது....
"பார்த்து பழக என்ன இருக்கு மார்த்தண்டா...?.... நேத்து வரை நல்ல பிரெண்டா இருந்தவன்.... இப்போ நான் பையன் இல்ல... பொண்ணுங்கறான்...... இருந்துட்டு போகட்டுமே... ஒரே உயிர், ஒரே வாழ்க்கையில கொஞ்ச நாள் பையனாவும் கொஞ்ச நாள் பொண்ணாகவும் இருக்க குடுத்து வெச்சிருக்கணுன்டா.. அவன் லக்கி.... அவன் பொண்ணோ.. பையனோ.... எனக்கு எப்பவும் ப்ரெண்ட் தான்..."-என்ற சாணக்யன்... ஊர் எல்லையை நெருங்கி விட்டதை உள் வாங்கிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தபடியே நடந்தான்...
"ம்ம்...................ம்....." என்று சூட்சும இழுவை இழுத்தான்...மார்த்தாண்டன்...
"என்ன இழுவை...?... நீ நினைக்கற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல.. அப்டியே இருந்தாலும்.... அது ஒன்னும் தப்பில்ல..இங்க எல்லாமே..அதுக்கு தான்..."-மொத்தமாக சிரித்தான் சாணக்யன்...
கம்பீரமான நடையில்... சூட்சுமங்கள் இருப்பதை அறிந்த வெண்ணிற இரவு... மீண்டும் மீண்டும்.. வரும்.. அது காலச் சக்கரத்தின் கசிவுகளின்....சுழல்....
விடிந்த வேளையில்... வீதி நிறைந்து கிடந்தது......
வழக்கம் போல தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வெற்றிலைக் கொட்டிக் கொண்டிருந்தது குள்ளாயி...எதிர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து 'தாஸ்தாவெஸ்கி'யின் "வெண்ணிற இரவுகள்" படித்துக் கொண்டே குள்ளாயியை கவனித்துக் கொண்ருந்தான் சாணக்யன்... காலை வேளை... மெல்ல கடந்து கொண்டிருந்தது.... போவோர் வருவோர்க்கு இவனின் படிப்பும்.. அமைதியும்...... புதிதான ஒன்று இல்லை என்பது போல...போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தார்கள்..அதே துளிகளின் பகலாக... வெளிச்ச வெற்றிடம் கிழித்துக் கொண்டு வேகமாய் ஓடிவந்த மார்த்தாண்டன் ... ஒரு பூரணம் முழுமையான தேஜெஸ் கொண்ட முகத்தோடு சிரித்தான்...
"என்ன...?" என்பது போல பார்த்த சாணக்யனிடம்...."மாப்ள... நீ அடிச்சு போட்ட ஆளுங்க ரெண்டு பேரையும்.. இன்னைக்கு ஊர்க்காரனுங்க பார்த்துட்டு என்ன முடிவுக்கு வருவாங்களோன்னு பயந்துட்டு இருந்தேன்..... ஆனா.. மாரியாத்தா காப்பாத்திட்டா......" என்றான்...அவன் கைகள் கோயில் இருந்த திசை நோக்கி கூப்பி இருந்தது...குள்ளாயியிடம் அமர்ந்து இரு சுள்ளான்கள் ஏதோ பேசிக் கொண்டு இருப்பதை கூர்ந்து கவனித்துக் கொண்டே.... "என்னன்னு சொல்டா....." என்றான் சாணக்யன்... கண்கள் திருப்பாமல்...
"சாணக்யா.... பள்ளத்துல எப்பவும் போல திடீர்னு தண்ணி வந்ததுல, அவுனுங்க ஆத்தோட போய்ட்டானுங்க........ இனி சந்திபாளையத்துல, இல்லனா பவானி ஆத்துல தான் கிடைப்பானுங்க.... அதும்... கிடைச்சாலும்... உண்டு... இல்ல பாறைக்குள்ள மாட்டி மீனுக்கு இரையானாலும்.. ஆவாங்க... சாமி நம்ம பக்கம்டா...ஒரு வேளை கிடைச்சா கூட ஆத்துல விழுந்து செத்து போய்ட்டாங்கன்னு... வருசத்துக்கு 200 கேசோட 201ஆ ஆகி கதையே மாறிடும்... ஹ ஆஹா. ஹ ஹா...." என்று கிசு கிசுத்தபடியே சிரித்தான்...... மார்த்தாண்டன்...
அவனை ஒரு முறைப் பார்த்து விட்டு..."சரி அத விடு.... இங்க...பாரு..." என்று குள்ளாயியைக் காட்டினான்...சாணக்யன்...
"நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்.. நீ என்ன சொல்ற..?" என்றான் மார்த்தாண்டன்.. சற்று கோபத்துடன்..
அது ஒரு மேட்டரே இல்ல மார்த்தாண்டா .. இதுதான் மேட்டர்.. எனக்கென்னமோ குள்ளாயி கடத்தலுக்கும்... குள்ளாயி பிரெண்டுங்க ரெண்டு பேரு. அதாண்டா.... மாகாளி, கோலாயி.. ரெண்டு பேரு காணாம போனதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு தோணுதுடா...! என்றான் சாணக்யன் ..... ஒரு துப்பறியும் நிபுணனின் குரலில்...


தலை முடியை விரல்களால் கோதிக் கொண்டே..."என்னடா சொல்ற... கோலாயி, மெண்டல் ஆகி எங்கையோ போய்டுச்சு...மாகாளி.. மககிட்ட கோவிச்சுகிட்டு, மகன் வீட்டுக்கு போறே வழில எங்கையோ தொலைஞ்சு போச்சு... இனி அதுங்க எல்லாம் கிடைச்சு என்ன ஆக போகுது.. விடுடா..." என்றான் மார்த்தாண்டன்..வெகு இயல்பாக...அவன் கண்கள் வீதியை அளந்து கொண்டிருந்தது...

அப்போது அவர்களை கடந்து போன.. பானுமதியையும். பவித்ராவையும் பார்த்து..... "என்னமா கண்ணுங்களா...... இன்னும் ஒன்னாதான் தூங்கறிங்களா....?" என்ற கேட்டு கண்ணடித்த மார்த்தாண்டன்... கண் அடிக்கும் போது கண் மறைத்த அவன் தலை முடியை வழக்கம் போல ஸ்டைலாக தூக்கி பின்னால் போட்டான்.....

சட்டென பக்கத்தில் வந்து ஒரு பத்து ரூபாயை மார்த்தாண்டன் பாக்கெட்டில் திணித்து விட்டு ஓடியே போனார்கள்...'அவர்கள் அப்படித்தான்' என்று...

'ஆ... அது..." என்றபடியே.. மீண்டும்.. சாணக்யனைப் பார்த்தான் மார்த்தாண்டன்... சாணக்யனின் பார்வை இன்னமும் குள்ளாயியை விட்டு அகல வில்லை...அது அகல் விளக்கின் அணைதலோடு கண் சிமிட்டுவது போல கண்முன்னால் ஆர்ப்பரித்த சப்தங்களின் நீரோடைக்குள் மீன்களாய் தவம் இழந்து கொண்டே இருந்தது ஒரு திறந்து மூடும் செவிலைப் போல...

நிமிடம் சில தாண்டியும் அவன் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க, ஒரு முடிவுக்கு வந்தவனாக, " இப்ப என்ன.... உனக்கு டவுட் கிளியர் ஆகணும்...இல்லையா.... இரு வரேன்...நீ வேடிக்கைய பாரு"- என்று கூறியபடியே குள்ளாயியை நெருங்கி திண்ணையில் ஒரு ஓரத்தில் அமர்ந்தான் மார்த்தாண்டன்.....இளவெயில் கொஞ்சம் சூடேறிய காரணத்தால் ஆங்காங்கே வழிந்த வியர்வையை வெள்ளை சேலையின் முந்தானை கொண்டு ஒத்தி எடுத்துக் கொண்டிருந்தது குள்ளாயி..

மார்த்தாண்டன் குள்ளாயி திண்ணையை நெருங்க நெருங்க.. அங்கு அமர்ந்து குள்ளாயியிடம் எதையோ பேசிக் கொண்டிருந்த சுள்ளான்கள் இருவரும் மெல்ல எழுந்து போகத் தொடங்கினார்கள்... அவர்களையும் கவனித்துக் கொண்டிருந்த சாணக்யன், மொத்தமாக ஒரு திரையைப் போல...அனைத்துக் காட்சிகளையும் உள் வாங்கிக் கொண்டிருந்தான்...

"என்ன.. வேலாயி பேரா... என்ன.. இந்தப் பக்கம் ஒதுங்கற... நீ களவாணிப் பயலாச்சே.. எதையாவது களவாண்டுகிட்டு போய்டாதடா..." என்றது..பொக்கை வாயைக் காட்டிக் கொண்டு...


"எனக்கு இது தேவையா"- என்று முணுமுணுத்துக் கொண்டே....." ஆமா தங்கமும் வைரமுமா பெட்டிக்குள்ள வெச்சிருக்க... களவாண்டுகிட்டு போறாங்க...என்று கூறி சற்று இடைவெளி எடுத்துக் கொண்டவன்... மீண்டும் தொடர்ந்தான்...
"சரி அத விடு... பாட்டி... உன் சிநேகிதகாரிங்க..."என்று சொல்லி... விளக்கும் வார்த்தையாக.....'அதான்.....போன மாசம் காணாம போன கோலாயி, மாகாளி... ரெண்டு பேரும் எங்க போனாங்கன்னு உனக்கு மட்டும்தான் தெரியும்னு சொல்றாங்க....." என்றான் மார்த்தாண்டன் ஒரு வகை பீடிகையோடு..... ஒரு மிகப்பெரிய வட்டத்தின் ஆரம்பத்தின் முதல் புள்ளியை வைத்தோம் என்று தெரியாமலே...
வெற்றிலையைக் குத்துவதை சற்று நிறுத்தி விட்டு... அவனைத் திரும்பிப் பார்த்த குள்ளாயி.... "ஏன் உனக்கு தெரியாதா..... வாயைக் கிளராத.. களவாணிப்பயலே.. அவுளுங்கதான் காணாம போய்ட்டாளுங்கல்ல.. ஒருத்திக்கு பைத்தியம் புடிச்சு போச்சு... ஒருத்தி காசிக்கு போயிருக்கா...எல்லாம் செஞ்ச பாவம்... சும்மா விடுமா..." என்று சொல்லி, கடைசி வாக்கியத்தை தொண்டைக்குள்ளேயே முடித்துக் கொண்டது... குள்ளாயி..."அப்பிடி என்ன பாவம் பண்ணிட்டாங்க.. யாரும் பண்ணாத பாவம்....?"-ஒரு நரியின் ஓரப்பார்வையோடு மென் புன்னகை செய்தான் மார்த்தாண்டன்...
"என்ன போட்டு வாங்கறயாடா.. திருட்டுப் பயலே,.. ரகசியம்... அது உயிர் போனாலும் வெளிய வராதுடா..அவுளுங்க..... என் சிநேகிதிங்க...." என்று சட்டென கண் கலங்க ஆரம்பித்தது...குள்ளாயி...
சற்று கலவரமடைந்த மார்த்தாண்டன்....சட்டென திரும்பி சாணக்யனைப் பார்த்தான்..எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டுமிருந்த சாணக்யன் அர்த்தத்தோடு ஆழ்ந்திருந்தான்...
"ஒருவேளை யாரவாது உன் சிநேகிதிகளை கடத்திட்டு போயிருப்பாங்களோ...?"என்றான் மார்த்தாண்டன் ... மீண்டும் வாயைக் கிளற...
"ஆமா.. இன்னும் நிமித்திகிட்டு இருக்காளுங்க.. கடத்திட்டு வேற போறாங்களாம்... உலகத்துக்கு பயந்து ஓடிப் போன நாய்ங்க அவளுங்க.. அவளுங்கள பத்தி இனி பேசாதடா.. கொன்னே புடுவேன்..." என்று சட்டென வேறு ஒரு ஆளாக பேசியது குள்ளாயி....விடாமல் விரட்டினான் மார்த்தாண்டன்..."இல்ல ஒருவேளை உன்னையும் யாராவது கடத்திட்டு போக முயற்சி பண்றாங்களோனு ஒரு சந்தேகம் பாட்டி...அதான் கேட்டேன்....."-என்றான்.. மென்றுவிழுங்கிய வார்த்தைகளோடு...
"என்னைய...?"-என்று பழம் வேரின் திமிரோடு.. மீண்டும் "என்னைய..." என்றே ஆரம்பித்தது பாட்டி... "இந்த ஊருக்குள்ள... யாருக்குடா அவ்ளோ தைரியம் இருக்கு.. நான் யாருன்னு தெரியுமில்ல..... அப்பவே.. இந்தா இப்போ ஊருக்குள்ள சாமியாடிகிட்டு திரியறானே... சொக்கராசன்.... அவன தூக்கி போட்டு மிதிச்சவ... என்கிட்ட எவன் பப்பும் வேகாது... என்னையெல்லாம் கடத்த பொறந்து வரோணும்..." என்று குத்திய வெற்றிலையை எடுத்து யானையின் வாயைப் போல தொங்கிக் கிடந்த தன்வாயில் திணித்தது..
"ம்கும்..." என்று வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு 'நேத்து விட்ருந்தா தெரியும்...... தூக்கிட்டு போய் செஞ்சுருப்பானுங்க..." என்று முணங்கினான் மார்த்தாண்டன்..
சட்டென நின்ற அது வரை கண்டு கொள்ளாமல் நடந்து கொண்டிருந்த பாவாடைசாமி....." என்ன மாப்ள சொன்ன"- என்றான்... வாய் இழுத்து காது வரை... விரிந்த காரணத்தோடு...'கண்கள் சுற்றி.. முகத்தை மாற்றிக் கொண்ட மார்த்தாண்டன்.. சாணக்யனையும் ஒரு முறைப் பார்த்துக் கொண்டு... "அயோ இல்ல மாப்ள" என்பது போல.. நெற்றி சுருக்கி தலையை இப்படி ஆட்டி விட்டு.."அடே....ய்... கொன்னுருப்பாங்கன்னு சொன்னேன்டா... தனுஷ் சொன்னா ஒத்துக்கறீங்க... நான் சொன்ன ஏண்டா கதைய மாத்தறீங்க..!" என்றபடியே எழுந்து வந்தான்...
மெல்ல சிரித்து கொண்டிருந்த சாணக்யனிடம்..."மாப்ள நீ சொன்னது சரிதான்.. என்னமோ இருக்குடா...நேத்து குள்ளாயி கடத்தல் கதைக்குள்ள...."-என்றான்.. மார்த்தாண்டன்...பின் மதியம் மாய ரெக்கைகளுடன் வழி மறந்த வெளி போல சுழன்று கொண்டே இருந்தது.... காற்றுக்கு வார்த்தையே இல்லை என்பது போல மித மஞ்சள் தூவலாய்.. ஒரு வித சலிப்புக்கள் கிறங்கிக் கொண்டேயிருக்க... சுல்லான்கள் இருவரும்... கிழக்கு நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.... அவர்களைப் பின் தொடர்ந்த சாணக்யனும்.. மார்த்தாண்டனும் சற்று முன் பேசிய உரையாடல்களைக் காலத்தின் பிடியில் விட்டு விடாமல் தூக்கி சுமந்து கொண்டே நடந்தார்கள்...
"அப்டினா.... இந்த மூணு பாட்டிங்களுக்கும்.. சம்பந்தப்பட்டவங்க யாரெல்லாம்னு கண்டு பிடிக்கணும் சாணக்யா... யார் கூடயெல்லாம் நெருக்கமா பழகினாங்க.. கோலாயி, மாகாளி அடுத்தடுத்து 10 நாள் இடைவெளில காணாம போயிருக்காங்க.. காணாம போன அன்னைக்கு கடைசியா யார் பார்த்தாங்க... எல்லாத்தையும் கண்டு பிடிக்கணுண்டா.... அப்போதான்.. குள்ளாயியை யார் கடத்த முயற்சி பண்ணினாங்கனு கண்டு பிடிக்க முடியும்.. நேத்து நீ அவுங்கள அத்தனை மூர்க்கமா அடிக்காம நாலு தட்டி தட்டி விசாரிச்சிருக்ணுண்டா... விட்டுட்ட.. எப்பப்பாரு.. உன் முன் கோபம்... எல்லாத்தையும் கெடுத்துடுது... "என்றான். மார்த்தாண்டன்... ஒரு அறிவாளியின் முகத்தை மாட்டிக் கொண்டு, போதுமான ஏற்ற இறக்கங்களோடு...
சுள்ளான்கள் வெள்ளிபாளையம் ஏரியை அடைந்து விட்டார்கள்..
"நானும் பார்த்திருக்கன் சாணக்யா..இந்த சுள்ளானுங்க.. அப்பப்போ மூணு கிழவிகளோடயும் பேசிகிட்டே இருப்பானுங்க.. இவுனுங்களுக்கு என்னமோ தெரிஞ்சிருக்குடா... இவுனுங்கள புடிச்சா ஏதாவது விவரம் கிடைக்கும்... "-என்று யோசனை சொல்லிக் கொண்டே அவர்களுக்காக காத்துக் கிடந்த ஒரு மணி நேரத்துக்கு பின் இரண்டு சுள்ளான்களும்...ஏரியை நோக்கி நடக்க இப்போது பின் தொடர்கிறார்கள் துப்பறியும் சாம்புகளாக.....
சுள்ளான்கள்.. அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்துக் கொண்டார்கள்.. சுற்றிலும் காக்கா கூட இல்லை.. உண்ட மயக்கத்தில் கிறங்கிக் கிடந்திருக்கும்... பட்சிகளின் சலசலப்பு துளி கூட இல்லை..ஏரி தன் பெரு மூச்சை உள் மட்டுமே இழுத்துக் கொண்டு இருப்பது போல.. கனத்துக் கிடந்தது... ஆங்காங்கே கண்ணுக்கு தட்டுப் பட்ட பாறைகளின் வடிவம்.. ஏரியில் பூத்த வட்டப் பூக்கள் போல.. செந்நிற மண் பானையின் பின் புறக் கனவாய்... பார்க்கவே ரகிசய பட்சிகளின் மாய உதிரலாய் பட்டது...


சுள்ளான்கள்..சட்டென காணாமல் போனார்கள்... "கண் கட்டு வித்தையா..!"- என்று முணங்கியபடியே மார்த்தாண்டன் பதுங்கிக் கொண்டு சற்று முன்னால் தேடியபடியே போக... பக்கவாட்டில் இருந்த பெரும் பாறை ஒன்றின்..அடியில்.... மொட்டை வெயிலின் ரசிகனாய்.....பாறைக்கு கொஞ்சம் நிழல் கொடுத்த விசிறியாய்... ஒரு புத்தனின் தீர்க்கம் போல அமர்ந்து...கையோடு கொண்டு வந்திருந்த "வெண்ணிற இரவுகள்" புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினான் சாணக்யன் ....


அங்கும் இங்கும் தேடி.... பின்... ஒரு பெரும்பாறைக்கு அடியில் எட்டிப் பார்த்த மார்த்தாண்டனை சட்டென பார்த்து விட்ட சுள்ளான்கள் சட்டென எழுந்து என்ன செய்வதென்று தெரியாமல் திரு திருவென விழித்தனர்..
கண்கள் அழுந்த மூடி திறந்த படியே, "அட கருமங்களா.. 9ம்- ப்பு வந்துட்டாலே... வேலைய காட்டியரீங்களே........ இது ஒரு பொழப்பு....?... என்னடா.... பசங்க அடிக்கடி ஏரிப்பக்கம் ஒதுங்கறானுங்களேன்னு பார்த்தா..... இதுதான் நடக்குதா.... சரி நடக்கட்டும்.. வயசு கோளாறு.. அப்டிதான்.. ஆனா.. கேக்ற கேள்விக்கு பதில் சொல்லணும்.. இல்லனா..இந்த மேட்ர ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டிருவேன்" என்றான்.. மார்த்தாண்டன்..வியந்த முகத்தோடு....கூடுதல் வார்தையாக "அட சீ.. ட்ரவுசர போடு..." என்றபடியே.. சற்று இந்தப் பக்கம் வந்து... நிழல் பார்த்து அமர்ந்தான்... உச்சிக் குடுமி கிடைத்த பலத்தோடு......
மாட்டிக் கொண்ட மீனின் செவிலைப் போல.. திறந்து மூடிய மூச்சுக்களோடு பின் வந்து பவ்யமாக நின்றார்கள் சுள்ளான்கள்...


கேள்வியை மறுபடியும் கேட்பது போல முகம் தேடிய சுள்ளான்களுக்கு.. மறுபடியும் நன்றாக கேட்கும்படி தெளிவாக கேட்டான்..

"குள்ளாயி, மாகாளி, கோலாயி மூணு பேர் கூடயும் அடிக்கடி பேசறீங்களே..என்ன சமாச்சாரம்...?.... பொய் சொன்னீங்கன்னா..... கொஞ்சம் கூட யோசிக்காம போய் போட்டுக் குடுத்துடுவேன்... நான் கெட்ட பையன்டா..." என்று தலையை கீழே கவிழ்ந்து பின் மேல் தூக்கி இடது கையால்... நெற்றியில் விழுந்த முடியைக் கோதினான் மார்த்தாண்டன்...


சுள்ளான்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்... கிட்டத்தட்ட கண்ணீர் பிதுங்கி... இருட்டுக்குள் நின்று விட்ட வெளிச்சம் போல.....உடல் முழுக்க நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.....
"அண்ணா.... சொல்லிடறோம்.. ப்ளீஸ்ணா... யார்ட்டயும் சொல்லிடாதிங்க.. ப்ளீஸ்ணா..."-கண்கள் பிசையும் பார்வையோடு... மனதுக்குள் அழுந்தும்.. குற்ற உணர்வோடு....ஒருவர் பின் ஒருவராக கூறினார்கள்.....சுள்ளான்கள்...
"ம்ம்.. சீக்கிரம்" என்றான்..மார்த்தாண்டன்.... ஒரு ராஜாவைப் போல...
"கிழவிங்க காதுல போட்ருக்கற லோலாக்க ஆட்டைய போடத்தான்.. பிளான் பண்ணினோம்.... ஆனா.. அதுக்குள்ள ரெண்டு கிழவிங்க.. காணாம போய்ட்டாங்க.. ஒன்னுதான் இருக்கு... அதான் இப்போ ட்ரை பண்ணிட்டு இருக்கோம்.."வார்த்தை விட்டு விட்டு வந்தாலும்.. வாக்கியம் கோர்வையாக வந்த பின்...அழுதே விட்டார்கள்...சுள்ளான்கள்.
சிரித்து விட்ட சாணக்யன்.. புத்தகத்தை விட்டு முகத்தை சற்று இடது பக்கம் தள்ளி.. அவர்களைப் பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டு மார்த்தாண்டனை... பாவமாகப் பார்த்து விட்டு மீண்டும் படித்தத் துவங்கினான்...


சப்பென்று போனது போல... கல் எடுத்து வேகமாய் ஏரியின் மேற் பரப்பில் விட்டெறிந்தான்....அது சர்ரென பறந்து நீர் தொட்டு.... மீண்டும் பறந்து நீர் தொட்டு.....பின் ஒரு தூரத்தில் காற்றுக்குள் காணாமலே போனது போல, மீண்டும் ஒரு கேள்வியை கேட்டான்.. மார்த்தாண்டன்...

"இதே மாதிரி வேற யாராவது ட்ரை பண்ணுனாங்களா?-என்று கேட்டவன்... அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே -"அந்த கிழவிங்க எங்கடா போயிருப்பாங்க..?"- என்றான்... ஏதோ பொதுவான கேள்வி போல..

"ம்ம்ம்....." என்று சில நொடிகள் யோசித்த சுள்ளான்களின் ஒருவன்,-" அண்ணா... நம்ம...ராணிக்கா... அடிக்கடி அவுங்க மூணு பேர் கூடயும் பேசும்... அப்புறம்... மூணு பேருமே .. எப்பவாது... மேட்டாங்காடு பக்கம்...போவாங்க... அங்க... ஒத்தப் பனை மரத்துக்கு கீழ ரெம்ப நேரம் நிப்பாங்க... அப்புறம் வந்துடுவாங்க" என்றான்...

யோசித்துக் கொண்டே.. "சரி நீங்க போய் உங்க வேலைய பாருங்க.." என்றபடியே திரும்பிய மார்த்தாண்டனை....அர்த்தத்தோடு பார்த்தான் சாணக்யன்......

ராணிக்கா வீட்டு.. திண்ணையில் அமர்ந்த மார்த்தாண்டன்.. தண்ணீர் கேட்டு குடித்தான்... அவன் ஒன்று கேட்க, ராணிக்கா ஒன்று கூறிக் கொண்டிருந்தது.......

"பகல்ல ஊர்ப் பெரியவன் மாதிரி இருக்கறவனெல்லாம் ராத்திரி, என் வீட்டு பின்னாடிக் கதவைத்தான் தட்ரானுங்க... இந்த ஆம்பளைங்க வெக்கங் கெட்டவனுங்க.. உடம்பு சுகத்துக்கு எத வேணும்னாலும் விப்பானுங்க.... முக்கியமா மானத்த"

...................................................?

"இந்த சாமியாடற சொக்கராசன்... வாரத்துக்கு மூணு தடவை வந்தரான் மார்த்தாண்டா... கடன் வேற சொல்லிட்டு போறான்.. அவன் வயசுக்கு இது தேவையா... நீங்க வலுசு பையன்களா இருந்தாலும் எவ்ளோ ஒழுக்கமா இருக்கீங்க..... ஒரு நாள் என்கிட்டே வேற மாதிரி பேசிருக்கீங்களா?...... "-என்று எதிர் வீட்டு திண்ணையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த சாணக்யனையும் பார்த்தபடியே பேசியது ராணிக்கா..."எங்க.... உன் ரேட்டு எனக்கு கட்டுபடி ஆகாது.... அதான்..."-என்று முணங்கிய மார்த்தாண்டன்......"ம்ம்.. ஊர் கெட்டு போச்சுக்கா.. என்னென்னமோ நடக்குது... கிழவிங்க எல்லாம் காணாம போறாங்க.. கிழவனுங்க எல்லாம்.. அலையறானுங்க...... பொடுசுங்க எல்லாம்.. ஏரிக்குள்ள என்னமோ பண்ணுதுங்க.. நைட் பகலுன்னு பேய்ங்க மாதிரி மனுஷங்க என்னென்னமோ பண்ணிக்கிட்டு திரிறானுங்க..... ஒன்னும் புரியலக்கா..." என்று புலம்பியபடியே ராணிக்காவை மெல்ல நோட்டமிட்டான்..
"ஆமா மார்த்தாண்டா.. இந்த மனுசங்களுக்கு பெருசா எதையாவது பண்ணி தன்னை முன் நிறுத்திக்கணும்.. அதும்.. அந்த மாதிரி நேரத்துல பாரு.. ஒரு பய கண்ண மூட மாட்டான்... மூஞ்சிய கிட்ட கொண்டு வந்து உத்து பார்ப்பான்.. திமிரு.. மேல படுக்கிற திமிரு.. வெள்ளக்காரிங்ககிட்ட இந்த பப்பு வேகாதுடி.. அங்க எல்லாமே தலைகீழ தான்...அதுவுமில்லாம இவுனுங்களுக்கு ஒன்னும் பண்ணவும் தெரிய மாட்டேங்குது மார்த்தாண்டா..."
"என்னடா இது வம்பு.. நாம ஒன்னு கேட்டா அது ஒன்னு சொல்லுது..."என்று உள்ளுக்குள் யோசித்தபடியே....தேமேவென விழித்துக் கொண்டு "ஆமாக்கா...இந்த பாட்டிங்க வயசான காலத்துல வெத்தலைய போடாம வீதில துப்பி வெய்க்குதுங்க...... அய்யயோ உளர்ரனே......"-என்று தடுமாறி வெறும் வாயை மென்று விழுங்கி.... ராணிக்காவையும், மெல்ல உடல் குலுங்க சிரித்துக் கொண்டிருந்த சாணக்யனையும் பார்த்து பரிதாபமாக விழித்துக் கொண்டிருந்தான் மார்த்தாண்டன்... அதற்குள்...ராணிக்காவே ஆரம்பித்தது..."கிழவிங்கனு சொல்லவும்தான் நினைப்பு வருது மார்த்தாண்டா..... இந்த கோளாயி கிழவியும்.. மாகாளி கிழவியும் செஞ்ச வேலையைப் பார்த்தியா.......?.... இந்த வயசுல..... காசிக்கு போய் பாவத்தைக் கழுவணுமாமா...... அப்டி என்ன பாவம் செஞ்சுட்டாங்கன்னு தான் தெர்ல...மனுசனா பொறக்கறதே பாவம்தான்.. இதுல தனியா வேற செய்யணுமா......!"-
ராணிக்கா பேசிக் கொண்டேயிருக்க ...."ரைட்டு... இனி இது ராத்திரிக்குதான் அடங்கும்.." என்று யோசித்தபடியே அதற்கான முகம், உடல் மொழியுடன் "சரிக்கா.. கொஞ்சம் வேலை இருக்கு.. அப்புறம் ... வரேன்..." என்று பொதுவாக சொல்லிபடியே.. ஏதோ முக்கியமான வேலை இருப்பது போல.. மெல்ல மெல்ல.. ஆனால் வேகமாக எழுந்து... ஓடி வந்து விட்டான்....பெரிய வீதி தாண்டி.. குண்டு மலர் வீடு திரும்பிய பிறகும் ராணிக்காவின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது...
"என்ன மாப்ள... இப்டி சொல்லுது... கிழவிங்க எங்கதான் போயிருப்பாங்க...?""அண்ணே... குடிக்கணும்னு வந்துட்டா...புல்லா குடிச்சிடனும்... ஏதோ தொட்டுக்கோ தொடைச்சுகோனு குடிக்க கூடாது..... குடிக்கறது தவம்னே..அத முழுசா பண்ணினாதான் வரம் கிடைக்கும்..." என்று கூறிக் கொண்டே மடக் மடக்கென குடித்தான் மார்த்தாண்டன்....... எதிரே குடித்தபடியே "வெண்ணிற இரவுக"ளைப் படித்துக் கொண்டிருந்தான் சாணக்யன்.......
"அவனை உற்றுப் பார்த்த மார்த்தாண்டன்... எப்பப் பாரு படிப்பு.. குடிக்கும் போது கூட படிப்பு...."-என்று முகம் தூக்கி கிழவனைப் போல ஒரு பார்வை பார்த்து விட்டு ... "அந்த புக்கத்தான் கொஞ்சம் கீழ வையேன் என் படிப்பாளி..பிரெண்டே...'என்றபடியே அவனைக் கடந்து, பார்வையை பக்கவாட்டில் குடித்துக் கொண்டிருந்த மாகாளியின் பேரன் மீது தொடுத்தான், வந்ததே இதுக்குத்தான என்பது போல.....


"அண்ணே.. என்னதான் இருந்தாலும்.. உன் பாட்டிய நீ விட்ருக்க கூடாதுன்னே..."- என்று பீடிகையை போட்ட மார்த்தாண்டன், எதிரே அமர்ந்திருந்த சாணக்யனைப் பார்வையாலேயே "எப்பு...டி" என்பது போல ஒரு ரகசியப் புன்னகையை குடித்தவனின் மொழியில் காட்டினான்..... குடித்துக் கொண்டிருந்த மாகாளியின் பேரன்... "நான் எங்க விட்டேன் மார்த்தாண்டா.. சாமி கூப்ட்டுக்குச்சுடா ..... மாகாளி பாட்டி மேல ஆத்தா இறங்குவா தெரியும்ல..... அதான்.. ஒரு கட்டத்துல அதுவே கூப்டுக்குச்சு..... கண்ணகி மாதிரிடா.. அப்டியே வானத்துல ஏறி போய்ட்டா... பார்த்தவங்க சொல்றாங்க...... ஒரு கண்ணு பொய் சொல்லலாம்.. மறு கண்ணுமா பொய் சொல்லும்..."


"சுத்தம்..."
மிச்சம் இருந்த மதுவை ஒரே மிடறாக கவிழ்த்து விட்டு எழுந்தான்...... மார்த்தாண்டன்....."எங்கம்மா... எங்க போய்டும்... கொஞ்சம் மனசு சரி இல்லாமதான் இருந்துச்சு... எங்க கூட இருந்து எங்களுக்கு கஷ்டத்த குடுக்க கூடாதுன்னுதான் அதுவா போய்டுச்சு.. அது புத்தர் மாதிரி....புத்தர் ஆகிட்டார்னு ஒரு குடும்பம்தான் கஷ்ட பட்டுச்சு... ஆனா... உலகமே கொண்டாடுதுல்ல..அப்பிடிதான் எங்கம்மா.. இந்த ஊற விட்டு போயிருக்கலாம்.. ஆனா... யாருக்காவது நல்லது பண்ணிட்டுதான் இருக்கும்... நல்லது பண்ண புத்தி தேவை இல்ல.. மனசு போதும்.. அது எங்கம்மாவுக்கு நிறைய இருக்கு......"
"போலிஸ்க்கா... எதுக்கு... போகணும்... 80 வயசு கிழவிய கண்டு பிடிக்க லட்ச ரூவாய்க்கு மேல புடுங்கிருவானுங்க..... அது இருந்தா... என் புள்ளைக்கு கல்யாணத்த முடிச்சு உட்ருவேன்ல..... வாழ்ந்து முடிஞ்சவங்கள பத்தி பேசிட்டு இருந்தா வாழ போறவங்க.... நிலைமை..என்னாகறது.....? வாழ்க்கை அப்பிடிதான் தம்பி.,... ஒரு பக்கம் குறையும்.. ஒரு பக்கம் நிறையும்... "இருவரும்... அமர்ந்திருந்த பள்ளத்தின் மேட்டில்.. நீர் கொஞ்சமாக ஓடிக் கொண்டிருந்தது....
"என்ன மாப்ள.. கண்டு பிடிக்கவே முடியல... எங்க போய்டாங்கன்னு கேட்டா ஆளுக்கொரு மாதிரி சொல்றானுங்க ... ஒருத்தன் கூட அக்கறையா பேச மாட்டிக்கறானுங்க..எல்லாரும் உண்மைய பேசற மாதிரியே இருக்குடா....ஆனா என்னமோ குறையுது '- என்றான் மார்த்தாண்டன், ஆழ்ந்த சிந்தனையுடன்.......
சிரித்துக் கொண்டே "வெண்ணிற இரவுகளி"ன் கடைசிப் பக்கத்தை படித்து விட்டு புத்தகத்தை மூடினான் சாணக்யன்........
அடுத்த நாள் இரவு........அதே பள்ளம்...அதே கோட்டை மேடு..."சாணக்........யா.............?!".
சட்டென் நின்றான்.... சாணக்யன்....
அவன் கால்கள் இன்னும் பலமாக செம்மண் பூமியில் புதைந்து நின்றன.. .. காது தீட்டிக் கொண்டே இருப்பது போல....அணைத்து நிரவிக் கொண்டே இருந்தது... இரவின் நிசப்தமாய் விழுந்து கொண்டிருந்த வெண்ணிறம்....
"நினைச்சேன்டா......" என்றபடியே பின்னால் இருந்து நிதானமாக முன்னால் வந்து நின்றான் மார்த்தாண்டன்....
இருவரின் கண்களும் வெண்ணிற இரவில் கூர் கொண்ட புத்திகளாக சந்தித்துக் கொண்டன..."குள்ளாயி கிழவியை இறக்கி விடுடா... எவ்ளோ நேரம் தோள்லயே தூக்கிட்டு இருப்ப..... நிறைய பேசனும்ல......" என்று நக்கலாக எப்பவும் போல தலை முடியை கீழே விட்டு மேல் தூக்கி விரல்களால் சரி செய்த படியே பேசினான் மார்த்தாண்டன்...
மௌனமாக பார்த்துக் கொண்டேயிருந்தான் சாணக்யன்...
"சாணக்யன்னு உனக்கு பேரு சும்மாவா வெச்சாங்க..... என்ன ஒரு நரித் தந்திரம்....! இல்லையா நண்பா...?...... எனக்கு தோணுச்சுடா.. என்னமோ தப்பா இருக்கேன்னு.....கொஞ்சம் மாத்தி யோசிக்கும் போதுதான் பட்டுன்னு புத்திக்குள்ள மின்னல் அடிச்சுது.... முந்தா நேத்து கிழவிய காப்பாத்தி தூக்கிட்டு போறவன்... ஊருக்குள்ள போக, கிழக்க பாத்து நடக்காம மேக்க பார்த்து போனானேனு யோசிச்சேன்....கடத்திட்டு போக இருந்த அசலூர்க்காரன அடிக்கும் போது எதுக்குடா முகத்தை மூடி கர்சீப்பால கட்டி இருந்தானேன்னு அப்றமாதான் யோசிச்சேன்... ஊருக்குள்ளருக்கிற ஒரு கிழவிய கடத்திட்டு போறானுங்க....... அவுனுங்கல கையும் களவுமா பிடிச்சிருக்க.. சாகற அளவுக்கா அடிப்ப..அவ்ளோ முட்டாளா?..... சாணக்யன்னு,... அப்றமா யோசிச்சேன்டா.....நான் மட்டும் வரலேனா முந்தாநாளே கிழவிய தூக்கிருப்பல்ல...... சொல்லு என்ன நடக்குது.. இப்பதான் புரியுது.. மத்த ரெண்டு கிழவிங்களையும் நீதான் தூக்கிருக்கன்னு.. அதுக்கு, உன் மேல யாருக்கும் சந்தேகம் இருக்கா இல்லையானு, தெரிஞ்சுக்கறதுக்கும்...... இல்ல இனி சந்தேகம் வருமான்னு தெரிஞ்சுக்கறதுக்கும்தான் என்னைய விட்டு நேத்து முழுக்க எல்லா பக்கமும் விசாரிக்க வெச்சிருக்க...... நானும் விளங்கா பயலாட்ட...எதுமே தெரியாத மாதிரி நீ புக்கு படிக்க, நான் விளக்கெண்ணைய கண்ணுல விட்டு எல்லாருக்கும் என் முகத்தை காட்டி விசாரிச்சிருக்கேன் ஒரு நாய்க்கும் ஒரு சந்தேகமும் இல்ல.. கிழவிங்க சாமிட்ட போய்டுச்சு.. உலகத்த திருத்த போய்டுச்சு, விதி முடிஞ்சிருச்சு... காசிக்கு போய்ட்டாங்க... சாமி ஆகிட்டாங்க.... சாமிக்கு பொண்டாட்டி ஆகிட்டாங்கன்னு முட்டாள்தனமா நம்பிகிட்டு இருக்காணுங்க.... இந்த ஊர் முட்டா பயலுங்க...எங்க அறியாமைல உன் அறிவ பயன்படுத்தி... செக் பண்ணிகிட்ட...... ஒரு வேளை போலிசே வந்தாலும்... என்னையதான் சந்தேகப்படுவாங்க இல்லை........... நீ தப்பிச்சிட்ட.. இல்லையா..! என்ன ஒரு திட்டண்டா..... சொல்லு...நீ ஊர ஏமாத்தலாம்...என்னை ஏமாத்த முடியாது மகனே......ஆமா.... என்னை விசாரிச்சா நீ மாட்டிக்குவேன்னு ஏண்டா யோசிக்காமா போன..... இப்போ போய் சொல்லுவேன்...இந்தா இப்ப சொல்லுவேன்டா... மாட்டிக்குவ சாணக்யா..... ஏதோ பெரிய தப்பு பண்ற..... வேண்டாம்...." அவன் பேச பேச அடுத்த வார்த்தை ரத்தமாக வந்தது.. கையில் கொண்ட சிறு கத்தியால் மார்த்தாண்டனின் கழுத்தின் நடுப் பகுதியை 'கரக்' என்று அறுத்து விட்டு மேற்கு நோக்கி நடக்கத் தொடங்கினான் சாணக்யன்......."சொல்லு சாணக்யா...?"மறுமுனையில் ஒரு ஆளுமைக் குரல்....
"ஐயா.. மூனாவதையும் தூக்கிட்டேங்க... நம்ம தியேட்டர்க்கு தான் போயிட்டிருக்கேன்.... அந்த மூனாவது தூணுக்கு பலி குடுத்தர்லாங்க...... ஆனா ஒரு சிக்கல் ஆகி போச்சு.. இன்னைக்கும் ஒருத்தன் வழில மாட்டிகிட்டான்...ஒரு டைம் விட்டு பார்த்தேன்... ரெண்டாவது வாட்டியும் சாவேன்னு அடம் புடிக்கறான்... என்ன பண்றதுங்க... முடிச்சிட்டேன்.. கொஞ்சம் டேம் தண்ணிய திறந்து விட சொன்னீங்கனா... கதை எப்பவும் போல சந்திபாளையம் ஏரில முடிஞ்சிடும்..."-என்றான் சாணக்யன்.. ஒரு இரவின் நிழல் போல...
மறுமுனை சிரித்துக் கொண்டே அலைபேசியை அணைத்தது....... சாணக்யன் ஒரு விக்கிரமாதித்தனாக வேதாளம் தூக்கி சுமந்து கொண்டு தொடுவானம் நோக்கி போய்க் கொண்டேயிருந்தான்.....
அவன் மனதுக்குள் ஒரு உண்மைக் கதை விரியத் துவங்கியது.. அதுதான் கதையின் கதை....


"உன் கால்ல விளுகறேன் மாகாளி... சொன்னா கேளுங்க... எங்கள விட்ருங்க.. எங்கையாவது போய் பொலைச்சுக்கறோம்..."- சோளக்காட்டுக்குள் பாவாடை தாவணியில் ஒற்றை மூக்குத்திக்காரியான... வெண்கல முகத்தின் அழகு பதுமை ரத்னா.. அழுகிறாள்... கதறுகிறாள்....இதே போல் ஒரு வெண்ணிற இரவில்...

கோளாயி, " அது எப்டி ரத்னா... நம்ம சாதி என்ன....அவன் சாதி என்ன... நம்ம குலத்துக்கு எப்டி துரோகம் பண்ணலாம்.......?"-என்றபடியே ரத்னாவின் காதலன் ஆதியின் முகத்தில் ஓங்கி ஒரு மிதி வைத்தாள்...குள்ளாயி இருவரின் முகத்திலும் காரி காரி துப்பினாள்...

அவர்கள் பேசிக் கொண்டும்.. காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டும்.. அடி வாங்கியும்... புரண்டும்... நெளிந்தும்... ஒரு புழுவை போல துடித்து கொண்டிருக்கும் போதே அந்த ஊரின் ஆதிக்க பெரிய தலைகளை கையோடு கூட்டியே வந்து விட்டிருந்தாள் மாகாளி...

ரத்னாவை முறைமாமனுக்கு கட்டாய கல்யாணம் முடித்து பக்கத்தூருக்கு அனுப்பி விட்ட கையோடு ஆதியை ஒரு இருட்டறையில் போட்டு அடித்தே கொன்றார்கள்...

பின் சில வருடத்தில் குழந்தைகளோடு சொந்த ஊருக்கே வந்து விட்ட ரத்னாவிடம்...மூன்று ராட்ஸசிகளும், "எங்களுக்கும் ஆதியை ரெம்பப் பிடிக்கும் ரத்னா....எவ்வளோ அழகு.. ஆம்பளடி அவன்..... உனக்கு மட்டும் விட்டுக் குடுக்க தோனல... அதான்...உங்கள பிரிச்சோம்... அவனை தினமும் அடிச்சோம்... சாகற வரை அம்மணமாக்கி அடிச்சோம்... அவன் திமிர் எடுத்த உடம்பு, எலும்பும் தோலுமா... ஆகறத பார்த்து பார்த்து ரசிச்சோம்... ஆனா அந்த பரதேசி நாய்.. சாகும்போது கூட உன் பேர சொல்லிட்டுதான் செத்துப் போனான்...." -என்றார்கள்... எப்போதெல்லாம் ரத்னாவை பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் கூறினார்கள்.... "அவனுக்கு அங்க ஒரு மச்சம் இருக்கு.. உனக்கு கூட தெரியாது ரத்னா...... எங்களுக்கு தெரியும்...." என்று களுக் சிரிப்பு சிரித்துக் கொண்டே ஒவ்வொரு முறையும் ஆதியின் கடைசி நாட்களை விஷத்தின் முற்கள் என வார்த்தைகள் கோர்த்து ரத்னாவின் மூளைக்குள் செலுத்தினார்கள.... அது ஒரு மிகப் பெரிய வஞ்சத்தின் விருட்சத்துக்கு நீர் ஊற்றியது..

"ஆனா அவன எங்க புதைச்சிருக்கொம்னு மட்டும் உனக்கு சொல்லவே மாட்டோம்டி...."-என்று கூறிய மூன்று பெண்களின் மனதுக்குள்ளும் மேட்டாங்காட்டு ஒற்றைப் பனை மரம், மரணத்தின் கூக்குரலின் ஆழமாக நங்கூரமிட்டதை.. கடைசி வரை ரத்னா அறியவே இல்லை...

இந்த கதையை வெறித்த பார்வையோடு சாகும் நொடிகளில், ஆறு மாதங்களுக்கு முன் இறந்து போன சாணக்யனின் பாட்டி ரத்னா உயிரின் ரகசியமாய் அவன் காதுகளில் ஒரு காலப் பிழையின் வடுக்களாக கொட்டி விட்டு போயிருந்தாள்..... அது நீண்ட, ரத்த சுவடுகளின் தெரித்தலாக சாணக்யனின் மனம் முழுக்க, மூளை முழுக்க ஒரு காதல் மூக்குத்தியின் சிறு வெளிச்சமென அவனுக்குள் தோண்டிக் கொண்டே இருந்தது.... ஒரு பேரழுகையை.......

வெண்ணிற இரவில் தெரிந்த தொடுவானம்.... இன்னும் தூரத்தில் இருக்கிறது....

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.