என் வாழ்வின் மறக்க முடியாது தருணம் எது? என்று என்னை நானே கேள்வி எழுப்பிய போது!.. என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு இதுதான், என்று சொல்லிக்கொள்ளும் விதமாக பெரிதாக ஒன்றுமே இல்லையே!... என்று தோன்றியது. அப்போது தான் அந்த வார்த்தையை கவனித்தேன். பெரிதாக… ஆமாம் பெரிதாக எதுவும் இல்லை. ஆனால் சின்னச் சின்னதாக இனிப்பும் கசப்புமாய் பல்வேறு நினைவுகள். அதையெல்லாம் கொட்டித் தீர்த்திடலாமென்று முடிவெடுத்து விட்டேன்.

சிறுவயதில் நடந்தவற்றுள் என் நியாபகத்திற்கு வரும் முதல் நிகழ்வு பள்ளி சென்ற முதல் நாள். எங்கள் வீட்டிற்கு வெகு அருகிலேயே உள்ள பள்ளி அது. அப்பா என்னை மிதிவண்டியில் முன்னே உட்கார வைத்து அழைத்துச் சென்றார். பள்ளியின் உள்ளே கூட்டிச் செல்லும் வரையிலும் எனக்கு எதுவும் தெரியவில்லை. நானும் அப்பாவின் விரல்களைப் பற்றிக் கொண்டு மகிழ்ச்சியாகத் தான் சென்றேன், பள்ளியின் வெளிவாயிலைக் கடந்து உள்ளே செல்லும் வரையிலும்… உள்ளே சென்றதும் என்னை அங்கிருந்த ஒரு ஆசிரியரிடம் விட்டு விட்டு அப்பா கிளம்ப ஆயத்தமானார். நான் அப்பாவை போக விடவில்லை. அப்பாவின் கையை இருக்கமாகப் பற்றிக்கொண்டேன். அப்பா என் கைகளை உருவி விட்டார். என்னைப் பிடித்து அந்த ஆசிரியரிடம் விடுவதிலேயே குறியாய் இருந்தார். நான் அழுக ஆரம்பித்து விட்டேன். விட்டுட்டுப் போகாதீங்க… நானும் வரேன்ப்பானு கத்தினேன். அப்பாவின் கால்களைக் கட்டிக் கொண்டேன். அப்பா அசரவில்லையே!... என்னை இழுத்து என் அருகில் நின்ற ஆசிரியரிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பி விட்டார். நானும் என்னால் முடிந்த அளவு அவர் பின்னாலேயே செல்ல முயற்சித்தேன். ஆனால் முயற்சிக்க மட்டும் தான் முடிந்தது என்னால். ஆசிரியர் என் மீதான அவர்களின் பிடியைத் தளர்த்தவே இல்லை. என் கண் பார்வையிலிருந்து அப்பா மறைந்தும் போனார். எனக்கோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது. ஆசிரியர் அப்பா சென்றதும் என்னை உள்ளே அழைத்துச் செல்ல முயன்றார். நானோ அங்கே இருந்த தூணை இருக்கமாக கட்டிக் கொண்டேன். அவரோ என்னை இழுத்துப் பார்த்தார். எனக்கு சிறு வயதிலிருந்தே பிடிவாத குணம் அதிகம். எனவே என்ன செய்தாலும் உள்ளே செல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆகையால் அந்த ஆசிரியரால் எவ்வளவு முயன்றும் என்னை தூணை விட்டு விலக்க இயலவில்லை. எனவே அவர் என்னை அவ்விடத்திலேயே விட்டுச் சென்றார். அப்பாடா!... போய்ட்டாங்கன்னு நான் நினைத்துக் கொண்டு இருந்தால்,… போனவரோ அவருடன் சேர்த்து மூன்று பேரை அழைத்துக் கொண்டு வந்தார். நானோ ஐந்து வயது குழந்தை. ஒருவரை சமாளித்ததே பெரிய செயல். இத்தனை பேர் வந்தால்?... என்னை அப்படியே குண்டு கட்டையாகத் தூக்கிச் சென்று வகுப்பறையில் உட்கார வைத்து விட்டனர். சற்று வீரியம் குறைந்திருந்த என் அழுகை மீண்டும் அதிகமானது. அந்த ஆசிரியரும் என்னை சமாதானம் செய்ய என்னன்னவோ செய்து பார்த்தார். ஆனால் நான் என் அழுகையை நிறுத்தவே இல்லை. கடைசியாக மிட்டாய் ஒன்று கொடுத்தார். அதை வாங்கியவுடன் என் அழுகையும் நின்றது. ஹி ஹி… இப்பொழுது நினைக்கும் பொழுது, எனக்கே அட அல்ப்பமே என்பது போல் தான் உள்ளது. ஆனால் அன்று அந்த மிட்டாய் பெரிதாய் தோன்றியது போலும். என் அழுகையை நிறுத்தி விட்டு மிட்டாயை வாயில் போட்டு ருசிக்கத் தொடங்கினேன்.

அடுத்த நிகழ்வு, கோயிலில் தொலைந்து போனது…. அப்போது எனக்கு ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். கோயிலுக்கு சென்றது, அங்கு நடந்தது, எதற்காக சென்றோம்?.., எதுவும் வேண்டுதலா?.. என்பது போன்ற எதுவும் தற்போது என் நினைவில் இல்லை… நான் எவ்வாறு தொலைந்தேன் என்பது மட்டும் மறக்காமல் நினைவில் உள்ளது. கோவிலில் உள்ள ஓர் அறையில் அனைவரும் அமர்ந்திருந்தனர். அந்த அறைக்கு பக்கத்து அறையிலேயே என் சித்தப்பாவிற்கு மொட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது என் அப்பா அறையை விட்டு எங்கோ வெளியே சென்றார். என் அக்காவையும் உடன் அழைத்துச் சென்றார். உடனே நானும் அவர்களுடன் செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டு அம்மாவிடம் சொல்லி விட்டு அவர்களின் பின்னாலே ஓடினேன். அப்பா நில்லுங்க, என்று நான் கத்தியது எதுவும் அவர் காதில் விழவில்லை போலும். அவர் சென்று கொண்டே இருந்தார். நானும் அவர்கள் இருவர் பின்னாலே ஓடிக் கொண்டிருந்தேன். அங்கு ஒரு பெட்டிக்கடை இருந்தது. அந்த கடைக்கு இடது புறமாக உள்ள ஒரு வளைவில் அவர்கள் வளைவது தெரிந்தது. நானும் ஓடி அந்த வளைவில் சென்று பார்த்தால் அங்கு அவர்கள் இருவரையும் காணவே இல்லை. எங்க போனாங்க?.. இப்படி தான் வந்தாங்க… ஆனால் காணும் என்று யோசித்துக் கொண்டே, சரி மீண்டும் அம்மா, அத்தை அமர்ந்திருந்த இடத்திற்கே போய் விடலாம் என்று திரும்பினேன். ஆனால், எந்த வழியாக வந்தேனென எனக்குத் தெரியவில்லை. நானும் எப்படியாவது அவர்களிடம் சென்று விட வேண்டுமென வந்த வழியை நினைவுக்கு கொண்டு வர முயல்கிறேன்… முயற்சி செய்து பார்ப்போம் என தோன்றிய வழியில் சென்றேன். ஆனால் அவர்கள் இருந்த இடத்தை என்னால் கண்டறிய இயலவில்லை. அப்போ நான் வேற என்ன செய்திருப்பேனு நினைக்கிறீங்க… அதே தான்… அழுகை தான்… நாம தொலைஞ்சுட்டோமா… இப்ப என்ன பண்ணுறதுன்னு யோசிச்சேன்… யோசிச்சா மட்டும் விடை கிடைத்து விடுமா என்ன?... எதுவும் தோன்றவில்லை. அப்போது இந்த செல்ஃபோன்-லாம் கிடையாது. லேன்-லைன் தான். எவ்வளவு நேரம் தான் அழுவேன் நானும்… சிறிது நேரத்திற்குள்ளே எனது அழுகை நின்றது… பெரிதாக வருந்தவும் இல்லை. என் வருத்தமெல்லாம் இப்ப என்ன செய்வது?... தனியாக நிற்க போர் அடிக்குதே என்பது போல் தான் இருந்தது… அங்கு ஒரு தூண் இருந்தது. நின்று கொண்டே இருந்தது கால் வலித்ததால் அந்த தூணிற்கு அருகே சென்று சாய்ந்து அமர்ந்து கொண்டு, அங்கு வந்து சென்று கொண்டிருக்கும் மனிதர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். ஒரு நிலையில் அவ்வாறு வேடிக்கை பார்ப்பதும், சலிப்பை ஏற்படுத்த, மீண்டும் அவர்களை தேடிப் பார்க்கலாம் என்று நினைத்து எழுந்தேன். அப்போது என் மாமா இங்க என்னமா பண்ற? என்கிற வினாவுடன் என்னை எதிர்கொண்டார். எனக்கு அப்பாடா… ஜாலி என்று இருந்தது. ஆயினும் நான் பதில் எதுவும் கூறவில்லை. அவரும் என்னிடம் பதில் எதிர்பார்க்கவில்லை. என் கையை பிடித்துக் கூட்டிச் சென்றார். சென்றவுடன் அங்கிருந்தவர்களிடம் என்ன கூறினார்?.. அப்பா, அம்மா என்னை திட்டினார்களா?.. அடித்தார்களா… அப்பாடா புள்ள கிடைச்சுட்டா என்று கொஞ்சினார்களா?... எதுவும் எனக்கு நினைவில்லை… ஆனால் இந்நிகழ்விற்கு பிறகு கூட்டமான எந்த இடத்திற்குச் சென்றாலும் என் கையை இறுக்கமாக பற்றிக் கொள்வார்கள்.

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் வரையிலும் ஹவுஸிங் யுனிட்-ல் தான் வசித்து வந்தோம். ஒரு ப்ளாக்-கிற்கு 12 வீடுகள். மாலை ஆனால் பிள்ளைகள் அனைவரும் கீழே சென்று விளையாட ஆரம்பித்து விடுவோம். தற்போது வளர்ந்ததன் பிறகு அவ்வளவு இலகுவாக பக்கத்து வீட்டில் உள்ளவர்களை அத்தை என்று கூப்பிட வருவதில்லை. ஆனால் அங்கு நாங்கள் இருந்த போது அனைவரும் அத்தை, மாமா தான். அனைவரும் அக்கா, அண்ணா தான். நான் முன்பே கூறியிருந்தது போல் எனக்கு பிடிவாத குணம் அதிகம். பிடிவாதம் என்றால் இது வேணும் அது வேணும் என்று பிடிவாதம் பிடிப்பது அல்ல. இது மாறுபட்டது. சொல் பேச்சை கேட்கவே மாட்டேன். நீ என்ன சொல்லி நான் என்ன கேட்பது என்பது போன்ற ஒரு திமிர். சிறுவயதிலேயே இந்தளவு தான் என்கிற ஒரு ஆணவத்துடன் யாரேனும் இருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் இருந்தேன். ஏதாவது ஒன்று சொல்லிவிடக் கூடாது. சொல்லி விட்டால் போதும் கோபித்துக் கொண்டு எங்கு இருக்கிறேனோ அங்கேயே சிலையென நின்று விடுவேன்… இப்போது நினைக்கும் போது ஒரு பக்கம் சிரிப்பாகவும், மறு பக்கம் இவ்வளவு மோசமா பண்ணிருக்கியேடினு சங்கடமாகவும் இருக்கும். ஆ.. ஊ னா கோபித்துக் கொண்டு அடம் பிடிப்பேன். கோபித்துக்கொண்டேன் என்றால் சாப்பிட மாட்டேன். எனக்கு வேண்டாம் என்று சாதிப்பேன். இப்படியெல்லாம் செய்தால் அடிக்காமல் கொஞ்சுவார்களா என்ன?.. சின்ன புள்ளைள வாங்கிருக்கேன் பாருங்க அடி… அடேங்கப்பா ஒன்றா?.. இரண்டா?... எக்கச்சக்கம். பெல்ட் எடுத்து விளாசுவாரு மனுசன்… அவ்வளவும் வாங்கிட்டு அசராம நிப்பேனே! 12 வீட்டிலிருந்தும் வந்து விடுவார்கள். அடிக்காதீங்க அடிக்காதீங்கன்னு… எல்லாரும் வந்து அடிக்காதீங்கன்னு தடுத்தாலும் 3-ம் நம்பர் வீட்டு அத்தை தான் மாஸ்… எல்லாரும் அப்பாவ தான் தடுப்பாங்க… ஆனால் இந்த அத்தை உள்ள புகுந்து எனக்கு பதிலா அடி வாங்கிட்டு இருப்பாங்க. அப்பாவோ கோபத்தில் அத்தை என்னை மறைத்துக் கொண்டு நிற்பதைக்கூட உணராமல் அடித்து விடுவார். நான் என்ன செய்தேன் அந்த அத்தைக்கு. நான் அடி வாங்கினால் பொறுக்காது அவருக்கு. நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொள்வேன். அதன் பிறகு வீடு மாறி விட்டோம். ஆனால் இன்றும் அந்த வீட்டிற்கு அருகே எங்களுடன் வசித்தவர்கள் அம்மா, அப்பாவை பார்த்தால் இப்போ சிந்து அடம்பிடிக்காம இருக்கா? என்று கேட்பார்கள். நான் சிரிப்பேன்…

மே மாதம் வந்து விட்டாலே பிரியா(அக்கா), பிரீத்தா(தங்கை) மற்றும் நான் எங்கள் மூவருக்கும் ஒரே குஷி தான்… ஏனென்றால் பள்ளி விடுமுறை ஒரு காரணம் எனில் விடுமுறைக்கு அம்மா, அவரது பிறந்த ஊருக்கு அழைத்துச் செல்வார் என்பது மற்றொரு காரணம். அங்கு சென்று பின்பு அங்கிருந்து பெரியம்மா வீட்டிற்கு, மாமா வீட்டிற்கு என்று பயணத்திலேயே கழியும் எங்களது விடுமுறை நாட்கள். அம்மா பிறந்த வீட்டில் எங்களுக்கு பிடித்தது ஊஞ்சல் மட்டுமே!... வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே வந்தவர்களை வரவேற்பது போன்று இருக்கும் அந்த ஊஞ்சல். மாமா பசங்க, பெரியம்மா பசங்க, சித்தி பசங்க என அனைவரும் (சற்றேறக்குறைய எங்களது வயதை ஒத்தவர்கள் மட்டும்) ஊஞ்சலில் அமர்ந்து கொள்வோம். விஜய் எங்களது சித்தி மகன். என்னை விட ஒரு வயது மூத்தவன். அவன் தான் ஊஞ்சலை ஆட்டி விடுவான். ஆட்டி விடுவான் என்றால் அவன் கீழிருந்து கொண்டு ஆட்டி விடுவது அல்ல. அவனும் ஊஞ்சலில் தான் இருப்பான். ஊஞ்சலின் விளிம்பில் நின்று கொள்வான். அந்த நின்ற நிலையிலிருந்தே ஊஞ்சலை ஆட்டுவான். மிகவும் வேகமாக ஆட்டுவான். எல்லாருக்கும் ரொம்ப பயமாக இருக்கும். ஆனாலும் யாரும் ஊஞ்சலை விட்டு இறங்க வேண்டும் என்று நினைக்க மாட்டோம். எங்கள் பெரியம்மா ஊரில் பிடித்தது என்றால் ஆறு தான். கோடை காலம் என்பதால் ஆற்றில் தண்ணீர் இருக்காது. பகலில் பம்ப் செட்டில் குளிப்பது, பின் வயல் வரப்புகளில் சுற்றித் திரிவது என்று பொழுதை கழிப்போம். மாலை வந்துவிட்டால் எங்களுக்கு கொண்டாட்டம் தான். சுண்டல், பன்னியாரம் போன்று தின்பண்டங்கள் மற்றும் குடிக்க தண்ணீர் இவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு ஆற்றிற்கு சென்று விடுவோம். அம்மா, பெரியம்மா, சித்தி, மாமி(மாமாவின் மனைவி) இவர்களோடு சிறியவர்களான நாங்களும்… சிறியவர்களோடு சேரந்து பெரியவர்களும் விளையாடுவர். கபடி, ஓடி பிடிச்சு, ஜோடிப் புறா இப்படி நிறைய விளையாடுவோம். அனைவரும் விரும்பி விளையாடுவது ஜோடிப் புறா மட்டுமே. ஜோடியாக நின்றால் அவுட் செய்ய முடியாது. தனியாக இருப்பவரை பிடிக்க போகும் போது யாரேனும் ஓடிச் சென்று அவரை காப்பாற்ற வேண்டும். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அனைவரும் சோர்ந்த பின் எடுத்து வந்த தின்பண்டங்களை காலி செய்துவிட்டு இருட்டுவதற்குள் அங்கிருந்து கிளம்பி விடுவோம். நாங்கள் வளர வளர ஊருக்கு செல்வது படிபடியாகக் குறைந்தது. மற்றவர்களுக்கும் அப்படியே… தற்போது எதுவும் திருவிழா, சுபநிகழ்ச்சிகள் என்றால் மட்டுமே அனைவரையும் காண இயலும். அதிலும் சிலரது சூழ்நிலைகளை பொறுத்து அவர்களால் வர இயலாது. அது போன்ற விழா காலங்களில் இடத்தை அடைக்கிறது என்று கூறி ஊஞ்சலை அவிழ்த்து வைத்து விடுவர். சிறு வயது போல் அனைவரும் ஒன்றாக அதில் ஆட இயலாவிட்டாலும் தனியாகவாவது அதில் விளையாட வேண்டும் என்று எனக்கொரு ஆவல். ஆனால் விசேஷங்களுக்கு மட்டுமே அங்கு செல்வதால் அவிழ்த்து வைத்திருக்கும் ஊஞ்சலை நோக்கி ஏக்கப் பார்வை மட்டுமே பார்க்க முடிந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு கோவிலுக்குச் செல்வதற்காக நாங்கள் அம்மா ஊருக்குச் சென்றிருந்தோம். செல்லும்போதே நானும், பிரீத்தாவும் இந்த முறை ஊஞ்சலை அவிழ்த்து வைத்திருக்க மாட்டார்கள்! நீயும் நானும் மட்டும் தான் ஜாலியா விளையாடலாம் என்று கூறிக் கொண்டோம்… ஆனால் அங்கு ஊஞ்சலை அவிழ்த்து ஓரமாக வைத்திருந்தனர். ஏனென்று கேட்ட போது ஊஞ்சல் கழன்று விழுந்துவிட்டது, வேலை பார்த்து தான் மறுபடி மாட்டணும் என்று மாமி கூறினார். இந்த முறையும் விளையாட முடியாதா என்று நானும் பிரீத்தாவும் ஒருவரையொருவர் சோகப் பார்வை பார்த்துக்கொண்டோம்.

நான், பிரியா, பிரீத்தா மூவரும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். பிரீத்தா ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது நான் ஐந்தாம் வகுப்பு. மதியம் சாப்பிடுவதற்கு நான் அவள் வகுப்பிற்குச் சென்று அவளை அழைத்து வந்து என்னுடன் உட்கார வைத்து சாப்பிட வைப்பேன். ஒரு நாள் அவளை அழைக்கச் செல்ல சற்று தாமதமாகி விட்டது. சென்று பார்த்தால் அவளை காணவில்லை. ஒன்று நான் அவளை தேடியிருக்க வேண்டும். இல்லையென்றால் ஆசிரியரிடமாவது இதை கூறியிருக்க வேண்டும். நாம தான் எல்லாவற்றிலும் வித்தியாசமானவர்கள் ஆச்சே!.. பிரியா அன்று விடுப்பு வேறு. அவள் வந்திருந்தால் அவளிடமாவது என்ன செய்வது என்று கேட்டிருப்பேன். என்ன செய்வது என புரியாமல் வீட்டுக்கு கால் பண்ணி பிரீத்தாவ காணும் அம்மான்னு சொல்ல… எங்கம்மா பதறி அடிச்சு ஓடி வராங்க… அவங்க வருவதற்கு உள்ளாகவே என் வகுப்பிற்கு சென்று பார்த்தால் அங்கு இவள் உட்கார்ந்திருக்கிறாள். என்னடின்னு கேட்டால் நீ வருவ வருவன்னு பார்த்தேன் வரல.. அதான் நானே வந்துட்டேனு கூறினாள். அந்த பள்ளியில் பல வழிகள் உண்டு. ஒவ்வொரு வகுப்பிற்கும் பல வித வழிகளில் செல்லலாம். நான் ஒரு வழியில் செல்ல இவள் வேறு வழியில் வந்திருக்கிறாள். பிறகு நான் அவளையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வெளியே சென்று அம்மாவிற்காக காத்திருந்தேன். அம்மா பாவம் அழுது கொண்டே வந்தார். எங்களை பார்த்தவுடன் நிம்மதி அடைந்தார். நான் நடந்ததைக் கூறினேன். என்னை திட்டுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் என்னை எதுவும் கூறவில்லை. கடைக்குக் கூட்டிச் சென்று என்ன வேண்டும் என்று கேட்டு வாங்கி கொடுத்தார். நாங்கள் இருவரும் சாப்பிடாததால் வகுப்பிற்கு வந்து சாப்பாடு ஊட்டி விட்டார். நடந்ததை ஆசிரியரிடம் கூறினார். என்னை திட்டினார் அந்த ஆசிரியர். அப்படியே யாரையாச்சும் காணலைனாலும் எங்களிடம் தானே முதலில் கூற வேண்டும் என்றார். நான் எதுவும் கூறவில்லை. பிறகு அம்மா எங்கள் இருவருக்கும் முத்தம் ஒன்று கொடுத்து விட்டு கிளம்பினார்.

அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும் என்றால் அம்மா தான் தேய்த்து விடுவார்கள். அன்று அம்மா வேலையாக இருந்ததால் பிரியாவை தேய்த்து விட சொன்னார். அவளும் சரி என்று கூறினாள். தேய்த்தும் விட்டாள். இறுதியாக தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றினால் சிவப்பு வண்ணத்தில் தலையில் இருந்து தண்ணீர் வழிந்தது. என்னடான்னு பார்த்தால் இரத்தம். தலையில எப்படி இரத்தம் வருதுன்னு பார்த்தால் இந்த லூசு ஷாம்பூ பாக்கெட்ட பிளேடால நறுக்கிருக்கா… அப்படி நறுக்குனதுனால பிளேடுல ஷாம்பூ ஒட்டிருச்சாம்… அதை என் தலையில் தேய்க்கிறேன் என்று எண்ணி பிளேடால தேய்ச்சுருக்கா… அது கிழித்திருக்கும் போல… எனக்கும் வலிக்கவும் இல்லை, எரியவும் இல்லை. அதை அப்படியே விட்டிருந்தால் அம்மாவுக்கு தெரியப் போவதும் இல்லை. அதெப்படி சொல்லாம இருப்பேன்… அந்த வினாடியே அம்மாவைக் கூப்பிட்டு வைத்தி வச்சாச்சு… ஆனா அம்மா அவ்வளவு கோபப் படுவார்கள் என்று நான் எண்ணவில்லை. திட்டுவார்கள் என்று நான் எண்ணியிருக்க துடைப்பத்தை எடுத்து அடி பின்னியெடுத்து விட்டார்கள். அவள் அழுதாள்… எனக்கு பாவமாக இருந்தது. ஏன்டா சொன்னோம் சொல்லாமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது என்னை டியூஷனில் சேர்த்து விட்டார்கள். எனக்கு பிடிக்கவே இல்லை. ஆனாலும் வேற வழி இல்லாமல் சென்றேன். அங்கு நாம் படிக்க வேண்டியதை படித்து விட்டு அதை அப்படியே அந்த டியூஷன் ஆசிரியரிடம் ஒப்பிக்க வேண்டும். அங்கு நிறைய பேர் ஏழாம் வகுப்பில் இருந்தனர். ஆனால் நான் புதிதாக சேர்ந்திருந்ததால் என்னிடம் யாரும் பேசவில்லை. நான் தனியாக படித்து ஒப்பிப்பேன். மற்றவர்கள் குழுவாக சென்று ஒப்பிப்பார்கள். ஒரு நாள் என்னால் படிக்கவே முடியவில்லை. எனவே ஆசிரியரிடம் சென்று நாளை காலை ஒப்பிக்கிறேன் என்று கூறினேன். அவரும் சரி என்றார். வீட்டிற்கு கிளம்பிவிட்டேன் நானும். மறுநாள் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பையன் வந்து பேசினான். அவனும் என் பள்ளி தானாம். அவன் நாம இரண்டு பேரும் சேர்ந்து ஒப்பிப்போம். இரண்டு பேரிடமும் ஒரே கேள்விய கேட்க மாட்டாங்க மாத்தி மாத்தி தான் கேட்பாங்க. அதனால நான் இந்தந்த கேள்விய மட்டும் படிக்கிறேன், நீ இந்தந்த கேள்விய மட்டும் படி. வரிசையா ரெண்டு பேரும் ஒப்பிச்சுட்டு கிளம்பிடலாம் என்றான். ஒரு வேளை நான் படிக்காததை கேட்டாங்கன்னா என்ன பண்ணுறதுன்னு கேட்டேன். அப்படிலாம் கேட்க மாட்டாங்கப்பா நாங்களாம் இப்படி தான் படிச்சு ஒப்பிப்போம் என்றான். நானும் சரி என்று கூறி அவன் கூறியது போலவே படித்தேன். இருவரும் ஒப்பிக்கச் சென்றோம். அவன் முதலில் ஒப்பித்தான் அடுத்து நான் சரியாகத் தான் சென்று கொண்டிருந்தது. திடீரென்று எனக்கான கேள்வியை மாற்றிக் கேட்டு விட்டார். நான் வேறு பதிலை கூறினாலும் கண்டு பிடித்திருக்க மாட்டாரோ என்னவோ… நான் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க…! என்ன படிக்கலையா என்றார். ஆம் என்றேன். ஏன் எனக் கேட்டார். எனக்கு இன்று வரையிலுமே ஏதேனும் பொய் சொல்லி மாட்டிக்கொண்டால் சமாளிக்கத் தெரியாது. அதற்கு உண்மையையே கூறி விடுவோம் என்று கூறி விடுவேன். இப்பொழுதே சமாளிக்கத் தெரியாது எனும் போது அப்போது என்னால் எப்படி முடியும்?... அவன் கூறியதை அப்படியே கூறினேன். என்னை அவர் ஒன்றும் கூறவில்லை. இனிமேல் அவன் சொல்வதைக் கேட்காதே என்றார். ஆனால் அவனைத் தான் அடி வெளுத்து விட்டார். பாவம்… முட்டிக்கால் போடச்சொன்னார். நான் அவனைப் பார்த்தேன்… ஏன் என்னைய போட்டுக்கொடுத்த என்பது போல ஒரு பார்வை பார்த்தான். தற்போது மூன்று மாதங்களுக்கு முன்பு அவனை தற்செயலாக சந்தித்தேன். பரஸ்பரம் நலன் விசாரித்துக் கொண்ட பின் டியூஷன் படிக்கும் போது நீ என்னைய அடிப்ப நியாபகம் இருக்கா?., என்று கேட்டான். நான் அவனை டியூஷன் மிஸ்ஸிடம் மாட்டி விட்டு அடி வாங்க வைத்தது நியாபகம் இருக்கிறதே தவிர நான் அவனை அடித்த மாதிரி எந்தவொரு நினைவும் எனக்கு இல்லை.. என்ன சொல்லுற நான் அடிச்சேனா என்று கேட்டேன். பின்ன! எவ்வளவு அடி வாங்கிருக்கேன் தெரியுமா?.. என்று சிரித்துக் கொண்டே கூறினான். அவனை பார்த்தேன். அப்போ பொசுக்குன்னு ரொம்ப சின்ன பையனா இருப்பான். இப்ப எரும மாடு மாதிரி இருந்தான்… உயரமும் ஜாஸ்தி… நல்ல வேலை அப்போ என்னை அடித்தாய் அல்லவா என்று இப்போ நான் அடிக்கிறேன்னு அடிக்காமல் சிரித்துக் கொண்டே விட்டுவிட்டான் என்று நினைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அவனிடமும் கூறினேன். அட லூசு அதெப்படி அடிப்பேன் என்றான். அப்பாடா என்றிருந்தது.

என் பள்ளிப் பருவம் பெரிதாக எந்தவித உற்சாகமும் இல்லாமலேயே கழிந்தது. மிகவும் சலிப்பானதே அது… அதற்காக கவலையுடன் கழித்தேனா என்றால் அதுவும் அல்ல… பெரிதாக எந்த வித சந்தோஷமும் இல்லை… எந்த வருத்தமும் இல்லை… என் பள்ளிப் பருவம் முழுவதிலும் சுகன்யா மட்டுமே நிறைந்திருப்பாள். ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் ஒன்றாகத் தான் படித்தோம். பத்தாம் வகுப்பு முடிந்து பதினொன்றாம் வகுப்பிற்கு செல்லும் போது என்னை வேறொரு பள்ளியில் சேர்த்து விட்டனர். அவளும் நான் சேர்கிறேன் என்று அந்த பள்ளியில் சேர்ந்தாள். சேர்ந்தே சுற்றுவோம். அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டே இருப்போம். சண்டைக்கான காரணம் ரொம்ப மொக்கையாக இருக்கும். ஆனாலும் சண்டை போடுவோம். வீட்டில் நான் இருப்பது போல் பள்ளியில் நான் இருந்ததில்லை. அமைதியாக இருப்பது என் குணம் அல்ல. ஆயினும் பள்ளியில் நான் அமைதியான பிள்ளை. காரணம் வேற யாரு? சுகன்யாவே தான். அவள் அமைதியாக இருப்பாள். அவளோடு சேர்ந்து நானும் அமைதியாக இருப்பேன். இன்னும் சொல்லப்போனால் என்னைக் கட்டுக்கோப்பாக வளர்த்தாள் என்றும் கூறலாம். காதல் என்ற சொல்லை கூறக் கூட மாட்டேன் என்பாள். ஏன்டி என்றால் கெட்ட வார்த்தை என்பாள். பாட்டு பாடும் போது காதல் என்ற வார்த்தை வரும் இடங்களிலெல்லாம் ம்ம் போட்டு தான் பாடுவாள். பள்ளி முடிந்தவுடன் அவள் வேறு கல்லூரி நான் வேறு கல்லூரி… கல்லூரியில் சேர்ந்தவுடன் அவளை மிகவும் தேடினேன். ஆனால் சிறிது மாதங்களிலேயே பழகி விட்டது. கல்லூரி படிக்கும் போது இருவரும் சந்திக்கும் போது அவளிடம் காதல்னா கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தைனு சொல்லுவில எரும, கண்டிப்பா நீ லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிப்ப என்று கூறினேன். அதே போல் அடுத்த முறை என்னை அவள் சந்திக்க வரும்போது நான் லவ் பண்றேன்டி என்றாள்.

ஒரு முறை நான், பிரியா, பிரீத்தா மூவரும் பக்கத்து வீட்டு அக்காவுடன் பொருட்காட்சிக்குச் சென்றிருந்தோம். பிரியாவின் தோழி சரண்யாவும் வந்திருந்தாள். அவள் பக்கத்து வீட்டு அக்காவின் தங்கையும் கூட. நாங்க பொருட்காட்சி சென்றால் பொருட்கள் எதுவும் வாங்க மாட்டோம். நம்ம ஃபோகஸ் எப்பவும் ராட்டினம் தான். ரெங்க ராட்டினம், கொலம்பஸ், ப்ரேக் டான்ஸ் எல்லாவற்றிலும் போக வேண்டும். பிரியா பிரேக் டான்ஸ் மட்டும் தான் வருவாள். மத்ததற்கெல்லாம் மிகவும் பயப்படுவாள். சில சமயம் அவளை விட்டு விட்டு நாங்கள் மட்டும் செல்வோம். சில சமயங்களில் அவளையும் இழுத்துச் சென்று விடுவோம். ஆனால் கூட்டிட்டு போனா ஏன்டா இவளை இழுத்துட்டு வந்தோம் என்று நம்மை நினைக்க வைத்து விடுவாள். அழுவாள், கீழே குனிந்து கொள்வாள்… என்னால் முடியல்ல நிப்பாட்டுங்கன்னு கத்துவா… இந்த முறை சென்ற போது ராட்டினம் எல்லாம் ஒரு ரவுண்ட் போயிட்டு வந்து விட்டோம். பேய் வீடு என்று ஒன்று போட்டிருந்தார்கள். அது என்னன்னு உள்ள போய் பார்க்க வேண்டும் என்று அனைவருக்கும் ஒரு ஆவல். அந்த அக்கா அவர்களின் ஐந்து வயது குழந்தையை அழைத்து வந்திருந்ததால் நான் வரவில்லை நீங்கள் போங்க என்றார். என்னமோ தைரியத்தின் சிகரம் போன்று டிக்கெட்லாம் வாங்கிருச்சுங்க. உள்ளே சென்றால் ஒரே இருட்டு. எனக்கும் பயமாகத் தான் இருந்தது. நமக்கு எதாவதுன்னா இவனுங்க தான் பதில் சொல்லி ஆகணும், அதனால கண்டிப்பா இவனுங்க எதுவும் செய்ய மாட்டானுங்க என்று தோன்றியது. இவ்வாறு யோசிக்கத் தொடங்கியவுடன் என் பயம் குறைந்தது. ஆனால் மற்ற மூவரும் உள்ளுக்குள்ள நடக்கவே இல்ல, அதற்குள் கதவை திறந்து விடுங்க நாங்க உள்ள போலனு கத்த ஆரமிச்சுருச்சுங்க. ஆனால் அவங்க திறக்கவில்லை. ப-வடிவில் அமைக்கப்பட்டிருந்தது அந்த அறை. ஒரு வாயில் வழியாக சென்று மறு வாயில் வழியாக திரும்பி வர வேண்டும். ஒன்னுமே இருக்காது, வாங்க உள்ள போகலாம் என்று கூறினேன். அங்க மொக்கையா தான் இருந்துச்சு. பேய் வேடம் போட்டு அங்கங்க மனிதர்கள் இருந்தனர். எங்கள் அருகே அருகே வந்து ஐயமூட்டினர். நான் சரண்யா-ஆவது கொஞ்சம் தைரியமாக இருப்பாள் என்று தான் எண்ணியிருந்தேன். ஆனால் அவள் இவர்கள் இருவருக்கும் மேலாக கத்தினாள்… அலரிட்டாளுங்க. நான் ஒன்னும் இல்ல புள்ளைங்களான்னு கத்துறதை எவளும் காதில் வாங்கவில்லை. வெளியே செல்வதற்கு பத்து அடி இருக்கும்… அப்பாடா வெளிய போய்டலாம் அப்படின்னு எல்லாரும் நினைத்துக் கொண்டு இருக்கும் திடீரென்று எங்கள் முன்னால் ஒரு பேய் (பேய் வேடம் போட்டிருந்த மனிதர் தான்) வந்து பயமுறுத்தியது. அவ்வளவு தான் என்ன நடந்துச்சுன்னே தெரியவில்லை. பிரீத்தா பயமாருக்குன்னு என் கையை பிடிச்சுட்டு ஓடுகிறேன் என்ற பெயரில் என்னைக் கீழே தள்ளி விட்டு வெளியே ஓடி விட்டாள். அவள் பரவாயில்லை என்று நினைக்கும்படி பிரியா என் மேலே ஏறி என்னைய மிதித்து விட்டு ஓடினாள். உங்களை எல்லாம் நம்பி வந்தா இதான் கதி என்று நினைத்துக் கொண்டேன். சரண்யா மட்டும் செல்லவில்லை. அப்பாடா கூட பொறந்தது தான் இப்படி ஓடுதுனாலும் சரண்யா நமக்காக வெயிட் பண்றாப்பா என்று எண்ணி எழுந்து பார்த்தால் அவளது துப்பட்டாவை கீழே விழுந்து விட்டது போலும். அதை ஒரு பேய் எடுத்து வைத்திருக்க என் துப்பாட்டவ குடுன்னு இவ கத்திட்டிருக்கா… அவளின் குரலை கேட்கும் போதே அவள் எந்தளவு பயத்தில் இருக்கிறாள் என்பது புரிந்தது. இவள என்னமோனு நினைச்சோமே என்று நினைத்துக்கொண்டேன். இவளுக்காக காத்திருந்தோமானால் இவளும் அவர்களைப் போல் என்னைத் தள்ளி விட்டு ஓடினாள் என்ன செய்வது என்று தோன்ற, அவள் வரட்டும் என்று நினைத்து நான் வெளியே சென்றேன். என் கைகளில் அடிபட்டிருந்தது. நான் என் கை, கால்களை தட்டி விட்டுக்கொண்டே வெளியே வந்தால் இருவரும் சிரித்துக் கொண்டே நிற்கிறார்கள். நேராக பிரியாவிடம் சென்றேன். பிரீத்தாவாவது சின்ன புள்ள ஏதோ பயத்துல என்னைய தள்ளி விட்டுட்டு சென்று விட்டாள். நீ பெரியவ தான.. நீ என்ன பண்ணிருக்கணும்?.. என்னை தூக்கி விட்டு என்னையும் உன்னோட கூட்டிட்டு போயிருக்கணும். சரி செய்யல… அட்லீஸ்ட் விழுந்து கிடக்கிற என்னைய தாண்டியாச்சும் ஓடியிருக்கணும்… ஆனா நீ?... நீயெல்லாம் ஒரு அக்காவாடி?.. ஏறி மிதிச்சு ஓடுறியே! என்று கேட்டேன். ஹே சிந்து நான் தான் ரொம்ப பயப்படுவேன்னு உனக்கு தெரியும்ல சாரிடி.. என்றாள். போய்த் தொல போய்த் தொல… அடி ரொம்ப பலமோ என்றாள். நான் முறைத்தேன்.

நான் யு.ஜி படித்துக்கொண்டிருந்த போது கடைசி செமஸடர் கடைசி எக்ஸாம் அன்று. நல்ல நாளிலேயே நம்ம மூஞ்சி நல்லாருக்காது. இதுல எக்ஸாம் நாளில் சொல்லவா வேணும். அன்று மிதிவண்டியில் நான் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது இருவர் பைக்கில் எனக்கு ஈடு கொடுத்து ஓட்டி வருவது போன்று தோன்றியது. வேண்டும் என்றே மெதுவாக நமக்கு பின்னால் வருகிறார்களோ என்று கேள்வி எழுந்தது. சிக்னலில் சிவப்பு விளக்கு விழுந்தது. அவர்கள் இருவரும் என் அருகிலேயே வந்து பைக்கை நிறுத்தினர். நான் அவர்களை பார்த்தேன். பின்னால் இருந்தவனை கவனித்தேன். கருப்பு நிறம் தான் ஆனால் கலையாக இருப்பது போன்று தோன்றியது. எனக்கு அவன் மிகவும் அழகாக இருப்பது போன்று இருந்தது. ஏனென்றால் நான் பார்க்கும் போது அவன் முன்னால் இருக்கும் அவன் தோழனிடம் எதையோ கூறி சிரித்துக்கொண்டிருந்தான். என்ன சிரிப்பு அது…? என்னவோ நான் தான் இந்த உலகிலேயே மகிழச்சியாக இருக்கிறேன் என்பது போன்று இருந்தது அந்த சிரிப்பு. எனக்கு இயல்பாகவே மகிழ்ச்சியாக இருப்பவர்களை பார்க்கவே பிடிக்கும். அவனை பார்த்ததும் எக்ஸாம் டென்ஸன் பறந்து போய் விட்டது. சிவப்பு விளக்கு மாறி பச்சை விளக்கு வந்ததும் நான் என் மிதிவண்டியை மிதிக்கத் தொடங்கினேன். நான் நினைத்தது சரி தான். அவர்கள் இருவரும் என்னை தொடர்ந்து தான் வந்திருக்கின்றனர். ஆனால் முன்பு எனக்கு ஏற்பட்ட எரிச்சல் அவனை பார்த்ததன் பிறகு இல்லை. என் கல்லூரி வளாகம் வந்தது. நான் உள்ளே செல்லும் போது அவன் முன்னால் அமர்ந்திருந்தவன் கூறினான் ஏங்க உங்கள இவனுக்கு ரொம்ப பிடித்திருக்கிறதாம் என்று. அவன் கூறி முடிப்பதற்குள் நான் உள்ளே சென்று விட்டேன். ஆனால் அவன் கூறியது கேட்டது. அதற்கு அந்த கருப்பழகன் டேய் சும்மாயிருடா என்று அவன் நண்பனை அதட்டுவதும் கேட்டது. இப்போது இந்த நிகழ்வு மட்டுமே எனக்கு நினைவில் உள்ளது. அவன் எவ்வாறு இருந்தான் என்று கூட தற்போது நினைவில் இல்லை. ஆனால் அன்று அவனைப் பார்த்த போது அவன் இருந்த சந்தோஷ மனநிலை அவனை பார்த்த மாத்திரத்தில் எனக்கும் ஒட்டிக் கொண்டது. எக்ஸாம் முடிந்து பின் வீட்டிற்கு செல்லும் போது அவனை மீண்டும் பார்த்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. ஆனால் அவன் வரவில்லை.. ஒரு வேளை அவன் மீண்டும் வந்திருந்தால் அப்போது அவன் சிரிப்பை பார்த்து ரசித்திருந்தாலும் அதன் பிறகு அவன் மீது தவறான எண்ணம் வந்திருக்கும். அவன் மீதான என் பார்வை மாறியிருக்கும். அவன் நினைவு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். அவன் வராததால் இன்றும் என் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாய் இந்நிகழ்வு அமைந்தது.

நான் பி.ஜி முதல் வருடம் முடித்து இரண்டாம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் போது பிரியாவிற்கு திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கும் வரையிலும் கூட எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. நாங்கள் அனைவரும் எப்போதும் போல் ஜாலியாக பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தோம். ஆனால் திருமணம் முடிந்து அவள் வீட்டை விட்டு செல்லும் போது எங்களால் தாங்க இயலவில்லை. எல்லோரும் அழுகிறோம். எதற்கும் கலங்காத அப்பாவும் கலங்கி விட்டார். அவளும் அழுது கொண்டே சென்று விட்டாள். ஆனால் அவள் சென்ற பிறகு சிறிது நாட்கள் யார் முகத்திலும் சிரிப்பில்லை. அம்மா, அப்பா எந்தளவு அவளை தேடினார்களோ அதை விட அதிகமாக நானும் பிரீத்தாவும் தான் தேடினோம். நாங்கள் எங்களது விஷயங்களை அம்மாவிடம் பகிர்ந்து கொண்டதை விட எங்கள் மூவருக்குள் பகிர்ந்து கொண்டது தான் அதிகம். தோழிகள் போலத் தான் பழகினோம். எங்களுக்குள் இரகசியம் என்று பெரிதாக ஒன்றும் கிடையாது. இன்றைக்கு யாரை சைட் அடித்தேன் என்பது உட்பட எல்லா விஷயங்களையும் பேசிக் கொள்வோம். எனவே அவளின் வருகைக்காக ஏங்கியது. அவள் இல்லாமல் வீடு எங்களுக்கு பிடிக்கவே இல்லை. நானும் பிரியாவும் சண்டையிட்டு நான் பிரியாவை அடித்தேன் என்றால் அவள் என்னை திருப்பி அடிக்க மாட்டாள். அம்மா அல்லது அப்பாவிடம் சென்று முறையிடுவாள். அவர்கள் அவளை நீ அக்கா தான?,, அவ அடிச்சா நீயும் அடி என்று கூறுவர். நாங்கள் மூவரும் எங்கள் வீட்டில் சுதந்திரமாகத் தான் இருந்தோம். அப்பா எங்களை வெளியே எங்கும் அநாவசியமாக விட மாட்டார். பொத்தி பொத்தி தான் பாதுகாப்பார். அப்படியிருக்க சுதந்திரம் என்று எதை சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா?.. நாம் நாமாக இருப்பதே ஒரு மிகப் பெரிய சுதந்திரம் தானே!... அம்மா அப்பா எதேனும் செயல் செய்யும் போது அது தவறு என்று தோன்றினால் அதை அவர்களிடம் நேரடியாக கேட்கும் உரிமை எங்களுக்கு இருந்தது. அதுவும் அம்மா போன்று யாராலும் எங்களை பார்த்துக் கொள்ள முடியாது. உடம்பு எதுவும் சரியில்லாமல் சென்றால் உட்கார்ந்த இடத்திற்கு சாப்பாடு வரும். பாத்ரூம் செல்ல வேண்டுமென்றால் மட்டும் தான் நாங்க எந்திரிக்கிற மாதிரி இருக்கும். நாங்கள் எங்களை ராணியாகத் தான் உணர்ந்தோம் எங்கள் வீட்டில். காசு, பணம் அதிகமா இருந்தா தான் ராணியா என்ன?... இல்லை அல்லவா!... திருமணம் முடிந்து ஒரு வருடம் முடிந்து விட்டது. ஆனாலும் இன்றும் பிரியா வீட்டிற்கு வந்து செல்லும் போது அழுவாள். அவளை சமாதானம் செய்வதற்குள் மாமா தான் பாவம் நொந்து போவார். தற்போது அவளது பிரிவு எங்களுக்கு பழகி விட்டாலும் மூவரும் பழையபடி சேர்ந்திருக்க முடியாதா என்ற ஒரு ஏக்கம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. அதற்குத் தான் அவள் எங்களை விட்டுச் சென்ற போது நானும், பிரீத்தாவும் ஒரு முடிவு எடுத்தோம். ஒன்னு வீட்டோட மாப்பிள்ளையா கல்யாணம் பண்ணிக்கணும், இல்லையென்றால் அண்ணன் தம்பியா பார்த்து கல்யாணம் பண்ணி ஒரே வீட்டுல செட்டில் ஆகிடணும். இதை அம்மா அப்பாவிடம் கூறிய போது உங்க ரெண்டு பேரையும் ஒரே வீட்டுல வச்சுக்கிட்டு நாங்க படுற பாடு பத்தாதா!.. அண்ணன் தம்பி தொலைஞ்சானுங்களே!... என்றனர்… நாங்கள் பல்லைக் காட்டினோம்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.