நடுசாமம், ரெண்டு மணி இருக்கும். தூக்கம் கலஞ்சு போனது. எப்படி புரண்டு படுத்தும், தூக்கம் வரல. எழுந்து போய், தண்ணி குடிச்சுட்டு, என் மடிக்கணினியோட உட்கார்ந்தேன். பணி சம்மந்தமான வேலை எதுவும் செய்ய தோணல. அப்போ ‘பேஸ்புக்’ ஞாபகத்துக்கு வந்தது. எப்போவாவது தான் ‘பேஸ்புக்’ பார்க்குறதுண்டு. அப்போ பார்க்கணும்னு தோணுச்சு. என்னென்னமோ பதிவுகள் வந்து விழுந்தது. ஏதோ சும்மா பார்த்துட்டே வந்தேன், எதுவுமே ஒரு ஆர்வமா இல்ல. மேல, ‘நோடிபிகேஷன்ஸ்’, ‘பிரெண்ட் ரெகுவெஸ்ட்’ என்ன வந்திருக்குன்னு பார்க்க, க்ளிக் பண்ணா, ஒரு பெரிய அதிர்ச்சி. அவ எனக்கு பிரெண்ட் ரெகுவெஸ்ட் அனுப்பி இருந்தா. அய்யோ! எப்ப அனுப்பினா’னு தெரியல. ‘அக்ஸப்ட்’ பண்ணி, அவளோட பேஸ்புக் பக்கத்தப் பார்த்தேன். அப்போ அவளோட போட்டோ வந்து நின்னுது. அப்படி என்ன தான் போட்டிருக்கா பாப்போம்னு ஒரு ஆசை. மூணார் இயற்கை அழகுக்கு மத்தியில, இந்த அழகி நின்னு வித விதமா படம் எடுத்திருந்தா. அவள பார்க்காம, அவ பின்னாடி இருக்கற செடி, கொடி, மரம், மட்டையப் பார்த்து ரசிக்க எவ்வளவோ முயற்சி பண்ணியும், அதெல்லாம், அவுட் ஆப் போகசாவே இருந்தது. என்னமோ அவ முகத்தைப் பார்க்க ஒரு தயக்கம். நேர்ல, அவ என்னை மொறச்சபோதெல்லாம், கூச்சமே இல்லாம, வச்ச கண்ணு வாங்காம பார்த்தவன் தான். இப்ப, அவளோட போட்டோவ பார்க்கத் தயக்கமா இருக்கு. இல்ல, அது தயக்கம் இல்ல. ஏக்கம். இனிமையான துக்கம். அவ சிரிக்கும்போது வலக்கன்னத்துல குழி விழும். அந்த குழிக்குள்ள எத்தனை முறை விழுந்து செத்துருக்கேன்னு, எனக்கு மட்டும் தான் தெரியும். இப்பவும் அதே சிரிப்பு. அதே கன்னக்குழி. ஒடுங்கி போயிருந்த முகம் மட்டும், கொஞ்சமா இப்போ வீங்கிபோயிருக்கு. ஆனா, அதான் அழகாவும் இருக்கு. அவ சிரிக்கும் போது, அவ கண்ணு கொஞ்சம் விசாலமாகும். மீன் பிடிக்கரவங்க, வலை விரிச்சு கடல்ல வீசுவாங்களே, அந்த மாதிரி விரியும். அதுல மாட்டுனவன் தான், நான்.முகம் மட்டுமில்ல, ஆளே கொஞ்சம் வீங்கின மாதிரி தான் இருக்கா. ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி, கல்லூரி’ல படிக்கும்போது, ஒல்லிக்குச்சி மாதிரி இருப்பா. என்னையே அறியாம, ‘ஒல்லி குச்சி உடம்புக்காரி’னு முணுமுணுத்துக்கிட்டே இருப்பேன். அந்த பாட்டை இவளுக்காகவே யாரோ எழுதுன மாதிரி தோணும். ஒரு நாள், பயங்கர புயல் மழை. கல்லூரில, மதியமே விடுப்பு விட்டுட்டாங்க. ‘இவ வீட்டுக்கு பத்திரமா போய்ட்டாளா, இல்ல புயல் காத்துல எங்கயாவது பறந்துட்டாளா?!’னு, அன்னிக்கு ராத்திரி தூங்காம எனக்கு ஒரே கவலை. ரெண்டு நாள் கழிச்சு, கல்லூரி திறந்தவுடனே, என் ஒல்லிக்குச்சி சேதாரம் இல்லாம, பத்திரமா இருக்கறத பார்த்த பின்ன தான், உயிரே வந்தது.எங்கம்மா ரொம்ப நல்லா கறி சமைப்பாங்க. ஞாயிற்று கிழமைனா கோழி, ஆடு, மீனு’னு கறி விருந்துதான். ‘நல்லா அள்ளி சாப்புடரா… வயசு பையன் மாதிரியா இருக்கே?’ன்னு திட்டுவாங்க. மத்த நாளும், சும்மா இல்ல. தயிர், நெய்’னு ஏகப்பட்ட காலோரி எனக்கு ஏத்திட்டே இருப்பாங்க. அப்போ, ஒரு முடிவு பண்ணேன். இவள கல்யாணம் பண்ணி, கூட்டிட்டு வந்து, அம்மாவை ருசிக்க ருசிக்க சமைக்கச் சொல்லி, தினமும் நெய்யும், தயிரும், வெண்ணெயும், கறியும் கொடுத்து இவ எடையை கூட்டணும். சாப்பிடமாட்டேன்னு முரண்டு புடிச்சா, அவ பொடனிய பிடிச்சு, சோத்துருண்ட உருட்டி, வாய்க்குள்ள திணிச்சு விட்டுடனும். அவ என்ன மொறச்சாலும் சரி, உதைச்சாலும் சரி.அவ சாப்பிடற ரெண்டு இட்லியும், ஒரு கை சோறும், அவ தலைமுடிக்கே போதாது. அப்படி ஒரு முடி. கருகரு’னு நாகப்பாம்பு மாதிரி, அடர்த்தியா, நீளமா. பிசிறில்லாம பின்னி, மல்லிகைப்பூ வச்சுட்டு வருவா. பார்க்கும்போது, மயக்கம் வந்து, கண்ணு இருண்டுடும். அப்படி ஒரு அழகு.இப்போ?!… ஒரு ஒரு போட்டோவா பார்க்குறேன், இழுத்து கட்டுன மாதிரி இருக்கு. எதுலயும், அவள் கூந்தல் அழகு மட்டும் தெரியலையே… இதோ இந்த போட்டோல… ‘அடிப்பாவி! என்னடி இது? தோள்பட்டை வரைக்கும் தான் இருக்கு? என்னடி எல்லாத்தயும் நறுக்கி போட்டுட்டியா? லூசு’…ரொம்ப டென்ஷன் ஆயிடுச்சு. எவளோ ரசிச்சிருப்பேன். அவ ஜடை இந்தபக்கம் அந்தபக்கம் ஆடும்போது, என் மனசும் ஆடிப்போகும். அந்த ஜடைய பிடிச்சு இழுக்கணும், தொட்டுப்பார்க்கணும்னு ரொம்ப ஆசை. ஒரு ராஜாவுக்கு சந்தேகம் வந்ததே. ‘பொண்ணுங்களுக்கு இயற்கையாவே கூந்தல் மணமா இருக்குமா, இல்ல ஷாம்பு போடுறதால மணமா இருக்கா?’னு. எனக்கும் அதே சந்தேகம் தான். அவளோட கூந்தலை மோந்து பார்த்து முடிவு பண்ணிக்கலாம்னு இருந்தேன். எல்லாம் நெனச்சதோட சரி. எதுவும் நடக்கல… ஹ்ம்ம்… இப்படி முடிய வெட்டிபோட, இவளுக்கு எப்படி மனசு வந்ததோ? இதுல, இருக்கற அரை அடிய விரிச்சுப்போட்டுக்கிட்டு, ‘ஈ’னு ஒரு போஸ் வேற. ச்ச…வேற என்னமோ கொறையுதே… நெத்தில சிக்னலக் காணோம்?! தினமும், கல்லூரி வாசல்ல இருக்கற, புள்ளையார சுத்திட்டு தான் வகுப்புக்கு வருவா. சிக்னல் மாதிரி இருக்கும் அவ நெத்தி. பொட்டு, அதுக்குக் கீழ கொஞ்சம் குங்குமம், பொட்டுக்கு மேல திருநீறு, அதுக்கும் மேல சந்தனம். சில சமயம் நடுவுல கொஞ்சம் மஞ்சளையும் பார்க்கலாம். அப்படி மஞ்சள் இருந்தா, அன்னிக்கு காலைல அவ, அவங்க வீட்டுப்பக்கத்தில இருக்கற மாரியம்மன் கோவிலுக்குப் போய்ட்டு வந்திருக்கானு அர்த்தம். இப்போ என்னடான்னா, கழுவி விட்ட பளிங்கு தரை மாதிரி இருக்கு. பேருக்கு ஒரு புள்ளியைக் கூட காணோம். ‘ஹ்ம்ம்… என்னமோ போடி… இதெல்லாம் உனக்கு நல்லாவே இல்ல’.அடுத்த போட்டோ பார்த்து, எனக்கு நெஞ்சுவலியே வந்துடுச்சு. ‘யாருடி இவன், கருப்பட்டிக்குக் கலர் சட்ட போட்ட மாதிரி?... ஓ! இவன் தான் உன் புருஷனா?’ ஹ்ம்ம்...என்னை ஏற இறங்க பார்ப்பா… இப்ப இவன் கூட பல்ல காமிச்சிக்கிட்டு நிக்கறா… எந்தவிதத்துல நான் இவன விட கொறஞ்சு போய்ட்டேன்? அடுத்த ரெண்டு போட்டோவுலயும் அவன் கூட கை கோர்த்துட்டு, அப்படி ஒரு புன்னகை. தொடர்ந்து மூணு ஹார்ட் அட்டாக் எனக்கு. அவன… ம்ஹும்… இல்ல அவரை’னு தான் சொல்லணும். ஆயிரம் தான் இருந்தாலும் அவளோட கணவனாச்சே. இல்ல இல்ல, அதெல்லாம் முடியாது… எனக்கு எப்பவுமே ‘அவன்’ தான்… ‘ர்’ எல்லாம் போட முடியாது… அவன் பேரு என்ன? இதோ டாக் பண்ணி இருக்காளே… ‘ரமேஷ்… க்கும்… ரமேஷ் வேண்டாம், ‘அழகு சுந்தரம்’னு வச்சுக்க சொல்லுடி’. கடுப்பா வருது. வர்ற கோபத்துல வயிறு பத்திக்கிட்டு எரியுது. இல்ல… கடுப்பும் இல்ல, கோபமும் இல்ல. பொறாமை. பச்சை பொறாமை. ஆசை ஆசையா காதலிச்ச என்னோட வண்ணக்கிளி, அவனோட நிக்கறாளே. மூணு வருஷம் விழுந்து விழுந்து காதலிச்சேன், மனசுக்குள்ளேயே. ரொம்ப நாள் கழிச்சு என் மேலே ஒரு சந்தேகம் வந்தது அவளுக்கு. அதை ஊர்ஜிதப்படுத்தரமாதிரி, அவ என்ன பார்க்கும்போதெல்லாம் நான் வழிய, அப்போ மொறைக்க ஆரம்பிச்சவ. கடைசி பரிட்ச்சை எழுதி முடிச்சதும் பசங்க எல்லாத்துக்கும் தன்னோட கல்யாண பத்திரிக்கை கொடுத்தா. என்கிட்ட கொடுக்கோம்போது மட்டும், அப்படி மொறச்சுக்கிட்டு கொடுத்தா. எவ்ளோ மனசு வலிச்சுது தெரியுமா? வீட்ல யாருக்கும் தெரியாம பாத்ரூம்ல அழுவேன். இல்லேன்னா கிளம்பி எங்கேயாவது பீச், பார்க்னு போய், அவள நெனச்சு அழுவேன். இப்ப கூட கண்ணுல தண்ணி நிக்குது. ஆனா ஒன்னு, அவ சந்தோஷமா இருக்கறத பார்த்து, எனக்கும் சந்தோஷமா தான் இருக்கு. நிம்மதியாவும் இருக்கு. இந்த போட்டோவெல்லாம் போட்டு, ‘பாருடா, நான் ராசாத்தி மாதிரி இருக்கேன்’னு சொல்லாம சொல்லிட்டா. அது போதும் எனக்கு. நாம உண்மையா நேசிச்சவங்க கூட நம்ம வாழ்க்கை அமையரதெல்லாம் ஒரு வரம். அது சில பேருக்குத்தான் கிடைக்கும். ஆனா, நாம நேசிச்சவங்க சந்தோஷமா இருக்கறத பார்க்கறது கூட, ஒரு கொடுப்பினை தானே. அவ முகத்துல தெரிஞ்ச சந்தோஷம் என்னைக்கும் இருக்கணும். ‘நல்லா பார்த்துக்கோங்க மிஸ்டர்.ரமேஷ். அப்பப்ப நிறைய போட்டோவ பேஸ்புக்’ல பதிவு பண்ணுடி. ‘சூப்பர், நைஸ், ஆசம்’னு கமெண்ட்டெல்லாம் போடமாட்டேன். ஏன், ஒரு லைக் கூட போடமாட்டேன். ஆனா கண்டிப்பா பார்ப்பேன். நீ சந்தோஷமா இருக்கறத பார்க்கறதே எனக்கு வரம் தான்’.என்னுள்ளே

நெகிழ்ந்து நெகிழ்ந்து

விளைந்த காதல்

அறுவடை முன்னே

உலர்ந்தது ஏனோ?

கண்ணிலே

ரசித்து ரசித்து

வரைந்த கனவு

நிஜமாகும் முன்னே

நினைவானது ஏனோ?

என் பாதை

உன் வழி

சேரும் முன்னே

வழிமாறி நீயும்

போனது ஏனோ?

வளமான

உன் வாழ்வைக்

கண்டு கண்டு

இளைப்பாறும் நெஞ்சுக்கு

அது வரம் தானோ?!


tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.