நான் உன்னை …

1

நினைத்து நினைத்துப் பார்த்தேன் ... நெருங்கி விலகி நடந்தேன் ... உன்னால்தானே நானே வாழ்கிறேன் - இனிமையான பாடல் காலர் ட்யூனாக ஒலித்தது.

ஃபோன் எடுப்பதற்காகக் காத்திருந்தான். எடுத்தாள் .

'ஹலோவ்'
'ஹாய் மாலு'
'சாரி ...'
மாலு... நல்லா இருக்கி ... ங் ... கலா?'
'சங்கு ?'
'மறக்கலே போலிருக்கு ?'

'ஏய் ... சீ ... எதுக்கு மறக்கணு சங்கர், எங்கே இருக்கே, எவ்ளோ நாளாச்சி பேசி?'

'நான்தா பேசுறேன்னு எப்டி ... கண்டு ... தெரிஞ்சுது?'

'எப்டி கண்டுபிடிச்சே ன்னு கேக்குறதா எப்டி கண்டுபிடிச்சீங்க ன்னு கேக்குறதா ன்னு தெரியாம, டக்குன்னு வார்த்தையை மாத்திட்டேல்லை?'

'அது...'

'நீ … வா … போன்னு ஒருமையில பேசலா ... தப்பில்ல ... டா …பேக்கு'

'தேங்க்சு'

'எப்டி கண்டுபிடிச்சேன்னா 'மாலு' ன்னு என்ன உன்னைத் தவிர வேறயாரு கூப்பிடமாட்டாங்க, தட் வாஸ் த க்லு எங்கே இருக்க நீ? இந்தியா வந்திருக்கியா?'

'நாலு நாள் ஆச்சி, குமார் நம்பர் குடுத்தா, குமார் ஞாபகமிருக்குல்ல ?'

'மும்பை வரியா ? பேசுவோம், நெறைய பேசணும் உன்கிட்ட ?'

'நாளைக்கு வரட்டா ?'
'வா வா, நா அவரை லன்ச்க்கு வீட்டுக்கு வர சொல்றே'
'யாரை ?'
'என்னோட ஹஸ்பண்ட் பா, அட்ரஸ் மெசேஜ் பண்ணட்டா ? ப்லைட்ல வரியா ?

'யெஸ், பத்து மணிக்கு ப்லைட், ஏர்போர்ட் லேர்ந்து வீட்டுக்கு வந்துடவா ?'
'வா வா … வைட்டிங் பார் யு'
'பை'
'பை'

2

சங்கு என்று செல்லமாக மாலதி யால் அழைக்கப்பட்ட சங்கரும், மாலு என்று செல்லமாக சங்கரால் அழைக்கப்பட்ட மாலதி யும் - மூன்று வருடங்கள் காதலித்து, பின் பிரிந்து, வேறு வேறு பாதையில் பயணித்து – இதோ நான்கு வருடம் கழித்துச் சந்திக்கப் போகிறார்கள்.

ஒரு சந்தோஷம், பரவசம் - இருவர் மனத்திலும்.

'பாக்கலாமா ? இதுல என்ன தப்பு ? பேசிட்டு, அவ எப்படி இருக்கான்னு பாத்துட்டு, சில பல பரிசுகள் கொடுத்துட்டு வந்திடுவோமே, ஜஸ்ட் ஃப்யூ ஹவர்ஸ் விசிட், போனால் என்ன? '

'எதுக்குப் போகணும் ? அவ ஓகே ன்னு சொன்னப்போ நீ ஒத்துக்கலே, இப்போ என்ன இருக்கு ? '

சங்கர் – தானே இரு வேறு ஆளாய் - இரு வேறு மனநிலையில் - தனக்குத்தானே மனதுள் பேசிக்கொண்டான்.

'கல்யாணம் ஆயிடுச்சி, வீடு வாசல் - பையனா பெண்ணான்னு தெரியலே - இப்போ எதுக்குப் போய்ப் பார்க்கணும்? '

'சொந்தம் கொண்டாடவா போறே ? சொந்தம் கொண்டாட எனக்கு உரிமை இல்லேன்னு தெரியுமே ? '

'சொந்தம் கொண்டாட உரிமை இல்லேன்னு தெரிஞ்சு ஏன் போகணும்னு தா நா கேக்குறே ? '

'ஜஸ்ட் ... ஒரு ... '

'காதல் ? '

'சே ... ஷீ ஈஸ் மை குட் ப்ரெண்ட் ... அண்ட் ஐம் டு ஹர் ... நா போகப்போறே ... போய் பாத்துட்டு வந்துடறே ... ஐ நீட் டு ... '


போன் பேசி அவளிடம் தன வருகையை அறிவித்துவிட்டு அடுத்த நாள் மும்பை பயணிக்க ஆயத்தம் செய்தான். மாலுவுக்கு இது பிடிக்கும், அது பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து சில பல பரிசுப்பொருட்களை வாங்கினான். கண்ணை மூடி யோசிக்கலானான் ... எங்கோ பின்னே பின்னே பறந்துச் சென்றான்.

3

'சங்கு'
'...'
'சங்கு, நா கொஞ்சம் பேசனும்'
'சொல்லடி சகி, நீ சொல்வதே என் வழி'
'நெசம்மா?'
'ஐயம் ஏனம்மா?'
'அது ...'

'முதல்ல, ஒரு கவிதை சொல்லட்டா?'

'கேட்க எனக்கிருக்கு அவா'

'கவர்ந்திழுக்கும் கண்களும்
கண்களுள் தடவிய கருமையும்
சிக்கென்ற மேலாடையும்
பார்த்தவுடன் கண்ணடிப்பதும்,
பார்க்காதிருந்தால் இருமுவதும்,
நெருங்கினால் தடுத்து நிறுத்துவதும்
விலகினால் இழுத்து அணைத்துக்கொள்வதும்
......
.......
எல்லாம் சரி,
என் உதடு எரிகிறது.
காரம் கொஞ்சம் கம்மியாய்த் தின்னடி'

'பேக்கு'
'தேங்க்சு, இப்போ சொல்லு'
'எதை ?'
'என்னவோ சொல்லணும்னு ஆரம்பிச்சியே?'
'ஆங் ... அது … வீட்டுல கல்யாணப்பேச்சு எடுக்கறாங்க'

'எனக்கு இன்னு டைம் வேணும், நா ஃபாரின் போகணும், நமக்காக சம்பாதிக்கணும்'

'சங்கு என்னோட நிலைமையு கொஞ்சம் யோசி, அப்பா ரிடையர் ஆகப்போறாரு, எனக்கு இன்னும் ரெண்டுத் தங்கை இருக்காங்க, எல்லாரையு கட்டிக்குடுத்துக் கரையேத்த வேணாமா ?'

'போப்பா, இது எமோஷனல் பிளாக் மெயில்'

'எவ்ளோ நாளுதா நா தள்ளிப்போடுறது சொல்லு?'

'நீ ஒரு ரெண்டு வருஷம் ஏதாச்சு வேலைக்கு போ'

'போனா ?'

'அதுக்குள்ள நா செட்டில் ஆயிடுவே, இப்போ நா எப்டி பொண்ணு கேப்பே ? மாப்ளெ என்ன பண்றீங்கன்னு கேட்டா என்னத்த சொல்லுவே?'

'ஐ அண்டர்ஸ்டாண்ட் , நா ட்ரை பண்றே, கல்யாணத்த எவ்ளோ முடியுமோ அவ்ளோ தள்ளிப் போடுறே, அப்புறம் நீ விட்டு போயிட்டேன்னு எம்மேல பழி போட்டு ப்ரோஜனமில்லே'

'அப்டியெல்லா அவ்ளோ ஈஸியா பிரியமாட்டோ'

பிரிந்தார்கள், சங்கர் வேலைக்காக லண்டன் செல்ல, மாலதி வீட்டு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு திருமணத்திற்கு சம்மதிக்க ...

4

அடுத்த நாள் காலை சங்கர் பரபரவென்று கிளம்பினான். பழைய சினேகிதியைப் பார்க்கும் ஆவல் அவனை உந்தித் தள்ளியது. வீட்டில் தயாராகையில் அவன் மனம் விமான நிலையத்தில் இருந்தது. விமான நிலையம் வந்தான், அவன் மனமோ ஆகாயத்தில் மும்பை நோக்கி பறந்துகொண்டிருந்தது. மும்பை விமானநிலையத்தில் இறங்கினான். ஒரு டாக்சி அழைத்துத் தோழி அனுப்பிய விலாசத்தை டிரைவரிடம் காண்பித்து அங்கே இறக்கிவிடும்படி சொன்னான்.

'மாலு'
'எங்கே இருக்கே ? வந்துட்டியா ?'
'பில்டிங் கீழே'
'வா வா தேர்ட் ப்ளோர் '

வந்தான். வரவேற்றாள். இருவரின் கண்களிலும் கண்ணீர்.

'எங்கே இருந்தே இவ்ளோ நாள், எப்டி இருக்கே, இந்தியா எப்போ வந்தே?'

'படபடன்னு நீ பேசுற பேச்சுல உன் ஆர்வம் தெரியுது'

'பின்ன இருக்காதா, என் சிநேகிதன் எப்படி இருக்கான்னு தெரிஞ்சிக்க ஆர்வம் எனக்கு இருக்கு, நாலு வருசமா காத்திருந்தே, நீ எப்டி இருக்கே என்ன பண்றேன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருந்தே'

அவள் கண்ணின் ஓரம் கண்ணீர்
துடைத்துவிட முடியாது பார்த்துமட்டும் ரசித்தான்.

'ரெண்டு வருஷம் லண்டன், ரெண்டு வருஷம் பாரிஸ்; இந்தியா வந்து நாலு நாள் ஆச்சி, நீ எப்டி இருக்கே?'

'நல்லா இருக்கே'

'ஹஸ்பெண்ட் … '

'ஸ்டேட் பாங்க், இங்கே அங்கேன்னு ட்ரான்ஸ்பர் வரும், இப்போ மும்பை ல இருக்கோ, ஆறு மாசம் ஆச்சி'

'கொழந்தைங்க ? பையனா பெண்ணா ?'
'ஒரு பையன், ராம், ரெண்டு வயசு, தூங்குறா, உள்ளே'
'வெரி நைஸ்'
'நீ ... கல்யாணம் ஆயிடுச்சா ?'
'பாத்துட்டு இருக்காங்க'

'எந்த மாதிரி பொண்ணு தேடுறே ? சொன்னா நா ஹெல்ப் பண்ணுவேல்ல'

'அன்பா இருக்கணும், கொஞ்சம் அறிவு, சமைக்கத்தெரியனும், அடக்கம் மெயின், சுருக்கமா .... '

'சுருக்கமா ? '
'ஒன்ன மாதிரி ஒரு பொண்ணு ? '
'டூ லேட்'
'ஐ நோ ... ஐ நோ ... ஐ நோ'.

5

பேசிக்கொண்டே தன் சூட்கேஸைத் திறந்து, மாலதிக்கென வாங்கிவந்த பரிசுப் பெருட்களை எடுத்துவைத்தான். நெக்லஸ், வளையல், வாட்ச், மொபைல், சிவபுராணம் மற்றும் சில புக்ஸ், சாக்லேட்ஸ்'

'யப்பா ... என்னாதிது எதுக்கு இவ்வளவு ... இதெல்லா வேணாண்டா ... ப்ளீஸ்'

'குழந்தைக்கு ஒன்னு வாங்கிவரலே ... எனக்கு அவ்வளவு விவரம் பத்தலே... சாரி'

'நோ பார்மாலிட்டிஸ் ... இதெல்லா எதுக்கு ?'

'எதுக்குன்னா ... மொபைல் பேச, புக்ஸ் படிக்க, வாட்ச் டைம் பாக்க, சாக்லேட்ஸ் திங்க'
'அந்த கோல்ட் ?'

'உன் புன்னகைக்கு முன்னால் இந்தப் பொன்நகை வேஸ்ட் தா, பட் மை ப்ரெசென்ட் டு மை டியர் ப்ரெண்ட்'

'பேக்கு'

'தேங்க்சு'

சிரித்துக்கொண்டனர்.

'சாப்பிட போலாமா?'
'ஒன்ன பாத்ததுக்கு அப்புறம் பசி பறந்தோடிடுச்சி'
'எனக்குப் பசிக்குதுப்பா, நாலு வருசமாக் காத்திருக்கே'
'சாப்பிடாமலேயா ?'
'சே ஒன்னோட உக்காந்து சாப்பிட, ஊட்டி விடமுடியாது, கூட ஒக்காந்து சாப்பிடலாம்ல'

'நீ என்ன சொன்னாலும் சரி'

'இரு அவரு வாராரான்னு கேட்டுக்கறே?'
'யாரு?'
'ஹஸ்பண்ட் பா'

கொஞ்சநேரம் கழித்துத் திரும்பிவந்தாள்.

'அவரு வர்றதுக்கு நேரமாகுமா, சாரி சொல்லச் சொன்னாரு, நம்பள சாப்பிட சொன்னாரு, நீ வா சாப்டுவோம்'

'போன் பேசுன சத்தமே கேக்கலே?'

'ராம் தூங்குறால்ல, அதா பாத்ரூம்உள்ள போய் பேசுனே, எந்திருச்சா ரகளை தா'

சாப்பிடஉட்கார்ந்தார்கள்

'ம்...ம்...ம்'
'என்னாச்சி?'
'வெண்டைக்காய் சாம்பார்?'
'கரெக்ட்'
'உருளை பொடிமாஸ்?'
'வாவ், வேற'
'ம்...ம்...ம் ... லெமன் ரைஸ்?'

'ப்பா இவ்ளோ ஷார்ப்பா இருக்கியே, ஒன்ன ஒருத்தி கட்டிக்கிட்டு எப்டி சமாளிக்கப் போறாளோ?'

பழையக்கதை பலவும் பேசியபடியே சாப்பிட்டனர். பேச்சில் இருந்த சுவாரஸ்யம் சாப்பிடுவதில் இல்லை. நேரம் ஓடியதேத் தவிர தட்டில் உணவு குறையவில்லை.

6

இடையில் ராம் எழுந்துச் சத்தமிட, மாலதி உள்ளே சென்று தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்தாள். 'யாரு வந்திருக்காங்க பாரு, வணக்கம் சொல்லு' என்று சங்கரின் மடியில் அவனை இறக்கிவிட்டாள். சங்கர் ராமைக் கொஞ்சத் தொடங்கினான்.

'உன் பேர் என்ன ?'

ராம் உடனே டீவியின் மேலே எதையோ காமித்து, அம்மாவைப் பார்க்க

'அதுவா ... அது அப்புறம் எடுத்துத் தரே' என்றவள் சொல்ல,

ராம் இப்பொழுது சங்கரைப் பார்த்து டீவி மேலே எதையோ காமித்தான்.

'என்ன வேணும்?' என்று டீவி அருகில் அவனை அழைத்துச்சென்று அவனைத் தூக்க அவன் சரியாக அங்கே இருந்த சங்கை கையில் எடுத்துக்காட்டினான்.

'நல்லா இருக்கு' என்று சொல்லிவிட்டு மறுபடியும் ''உன் பேர் என்ன ?' எனக்கேட்க, ராம் சங்கை அவன் கையில் குடுத்து என்னவோ குழந்தையின் மொழியில் சொல்ல

'என்ன சொல்றா?'

'அது ... அவ ... அவ பேர சொல்றா' என்று மாலதி உரைக்க

'ராம் தானே நீ சொன்னே, அதுக்கெதுக்கு சங்கு காட்டுறா?' என்று சங்கர் கேட்க,

'அது ... அவ அப்பாவோட தாத்தா பேரு சங்கர் ராம், அதையே இவனுக்கு வச்சிருக்கோம், வெளில ராம், நா அவனை சங்குன்னு கூப்பிடுவே, அதா ...'

விளக்கம் அளித்தாள் மாலதி. விழிகளில் நீரோடு ராமை அணைத்துக்கொண்டான் சங்கர். கொண்டுவந்த சாக்லேட் பிரித்து ராமின் வாயில் ஊட்டிவிட்டான்.

கதை பேசி, குழந்தையோடு விளையாடி, பழைய நினைவுகளைக் கிளறி அழவைத்து அழுது .......

***

'மாலு நா கெளம்பணு'

'அப்டியா, எப்பவுமே பத்து மணிக்கு அப்புறம் தா அவரு வருவாரு, ஒனக்கு எவ்ளோ மணிக்கு சங்கர், ப்லைட் ?'

'9, 8 மணிக்கு ஏர்போர்ட்ல இருக்கனும்'

'போனா மறுபடி எப்போ ?'

'நீ கூப்டா வரே '

'சீ, நீ போகவே வேணா, இங்கேயே இருக்காலா ... பேக்கு'

'தேங்க்சு'

'நா ட்ராப் பண்ணட்டா ? கார் வெச்சிருக்கே, ஒட்டுவே'

'ஊருல என் வண்டி பின்னால கூட உட்காரமாட்டே'

'அது அப்போ, இங்கே மும்பைல தேவைப்படுதே'

'நீ ட்ராப் பண்ணா, திரும்ப வீட்டுக்கு பத்திரமா வந்துட்டியான்னு எனக்கு ஒரே கவலையா இருக்கு, ஓலா கெடைக்குதே, அப்புறமென்ன கஷ்டம்?'

'இந்த நாலு வருஷம் அந்த கவலை இருந்ததில்லையா?'

'இருந்திச்சி, பட் ...'

கண்ணில் நீரோடு சங்கரைக் கட்டிக்கொண்டாள் மாலதி.

'ஐம் சாரி சங்கர்'

'இப்போ எதுக்கு சாரி, இன் பாக்ட், நான் ல உன்னை தவிக்கவிட்டுட்டு போனவே'

குலுங்கி குலுங்கி அழத்தொடங்கினாள்.

'ஜஸ்ட் ரிலாக்ஸ் மாலு ... ப்ளீஸ் ... எது நடக்குமோ அது நடந்தே தீரும் ... அதைத் தடுக்கு நாம யாரு?'

இருவரும் பேசாது அமைதியாய் இருந்தனர். ஏதும் புரியாது ராம் அவர்களைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.


'வரே'

'...'

'எப்போ என்ன வேணும்னாலு ப்ளீஸ் கால் இல்லேன்னா ஈமெயில் பண்ணு, ஒன்னோட ID தருவியா, ப்ளீஸ்'

'சீ, ஏன் தருவியா, ப்ளீஸ் ன்னுல்லா கேக்குறே, இப்போவே ஒரு டெஸ்ட் மெயில் அனுப்புறே'

'பை '

'பை, இந்தியாலேர்ந்து கெளம்புறதுக்கு முன்னால இன்னொருதடவை வரியா ?'

'வரவேண்டியதிருக்கும்னு தா நெனைக்குறே'

'எப்படி சொல்றே?'

'தெரி யல, பட் ... பார்ப்போம்'

கண்ணீரோடு விடைகொடுத்தாள்.
கை கொடுத்து, தலையில் தட்டிக்கொடுத்து, கண்ணீரோடு விடைபெற்றான்.

7

ஏர்போர்ட் போய்சேர்ந்தவுடன் மாலதிக்குப் போன் செய்தான்.

'சொல்லுப்பா சங்கு ... பிளைட் ஏறிட்டியா ?'

'இன்னு ஏறலே, வெயிட்டிங் ... நீ என்னை தப்பா நெனச்சிட்டியோன்னு ஒரு வருத்தம் எனக்கு'

'புரியலே, நா எதுக்கு ஒன்னை தப்பா நெனக்கனும் ?'

'நா மும்பை வர்றதுக்கு முன்னால ஒங்கப்பாவ சந்திச்சேன்'

'...'

'அவரு என்கிட்ட எல்லா சொன்னாரு, பட் நீ மறைச்சிட்டே'

'என்ன ... என்ன சொன்னாரு?'

'கல்யாணம் ஆகி ரெண்டு வருசத்துல ஒன்னோட ஹஸ்பெண்ட் ஒரு ஆக்சிடண்டுல இறந்துட்டாருன்னு'

'இல்லை ... நான்'

'தனியா இருக்கே, பழைய காதலன், தொட்டுப் பழகுனவன், துணைக்கு ஆள் இல்லேன்னா அட்வான்டேஜ் எடுத்துப்பான்னு நெனச்சிட்டேல்ல'

மாலதி அழத்தொடங்கினாள்.

'மாலு ப்ளீஸ் ... அழாதே'
'சங்கர் ப்ளீஸ் என்னை மன்னிச்சுடு'
'மன்னிக்கிறமாதிரி நீ ஒருதப்பு பண்ணலே'
'தேவையில்லாம எதுக்கு உன்மனச கஷ்டப்படுத்தணும்னு தா நா சொல்லலே'
'மாலு'
'...'
'மாலு ஐம் ஸ்டில் இன் லவ் வித் யு மாலு'
'சங்கு'

' மாலு, நா … மனிதன் ... தப்பு பண்ணாம இருக்கமுடியாது. நா தப்பு செய்தேன். ஒன்னை பாதில விட்டுட்டு போனேன். ரெண்டாவது தடவை அதே தப்ப பண்ண மாட்டேன். மறுபடியும் நா பாட்டுக்கு இங்கே அங்கேன்னு போய் சம்பாதிச்சு நீ இங்கே கஷ்டப்பட்டுக்கிட்டு - பார்த்தேனே பையனை சங்கு ன்னு கூப்புடறே - இது ஒன்னு போதாதா மாலு, நீ இன்னும் என்னை மறக்கலே ன்னு நான் நம்ப'
'சங்கு .... ஐ'

'நா செக்யூரிட்டி செக் போகணும், பை'

'சங்கு .... ஐ'

'ஒன்னு அவசரமில்லை, மெல்ல யோசி, நீ எடுக்குற முடிவு எப்பவுமே சரியாதா இருக்கும்னு எனக்குத் தெரியும்'

'சங்கு .... ஐ'

'லவ் யு மாலு' போன் துண்டித்தான்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.