விவாகரத்து விண்ணப்பத்தை பரிசீலிக்கும் மேரேஜ் கவுன்சிலரின் அப்பாயிண்ட்மெண்டுக்காக நான்குமாதக்கைக்குழந்தையுடன் காத்துக்கொண்டிருந்தாள் சுகந்தி.

”போதும் நான் பட்ட கஷ்டமெல்லாம் போதும்.மன்னிப்பு கேட்டுக்கொண்டு அம்மா வீட்டிலேயே போய்இருந்துவிடப்போகிறேன்.குழந்தையை அம்மாவை கவனித்துக்கொள்ள சொல்லிவிட்டு திரும்பவும் வேலைதேடிக்கொள்ள போகிறேன்.என்னால் முடியவில்லை”

நினைவுகள் சுழன்றன. பசியால் அழத்தொடங்கியிருக்கும் குழந்தைக்காக பால்புட்டியை தேடினாள் சுகந்தி.

“எல்லாம் இந்த பாழாய்ப்போன காதலால் வந்தது.அம்மா அப்பா பேச்சை கேட்காமல் காதல்தான் பெரிது என்றுவீட்டைவிட்டு ஓடி வந்து திருட்டுக்கல்யாணம் பண்ணிக்கொண்ட பாவம்தான் என்னை துரத்துகிறது.பெற்றோர்களின்சாபம் தான் என்னை பாடாய்ப்படுத்துகிறது “

சுகந்தியின் கண்ணிலிருந்து அருவியாக கொட்டிய கண்ணீர் பால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தையை நனைத்தது.

”கொஞ்சம் அழுதாலே உடம்பு நடுக்கம் காண ஆரம்பித்துவிடுகிறது.அவ்வளவு வீக்காக இருக்கிறேன். பிரசவத்திற்கு பிறகுஉடம்பு தேறவே இல்லை.

குழந்தை பிறப்பதற்கு முந்தையவாரம் வரை பேருந்து ஏறி இறங்கி காலை முதல் மாலைவரை ஓயாத வேலை செய்துகொண்டிருந்தேன்.குழந்தையும் அறுவை சிகிச்சை மூலம்தான் பிறந்திருக்கிறது. சத்தான உணவுகள் கவனிப்பின்றிஉடம்பும் தேறவே இல்லை.பலஹீனமாக இருக்கிறது. 3மாதத்திலேயே பால் வற்றி விட்டது புட்டிப்பால்தான்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.”

“பக்கத்துவீட்டில் பிரசவத்திற்காக அழைத்துவந்த அவர்களது பெண்ணை எப்படி கவனித்துக்கொண்டார்கள். இப்படிநடக்காதே!!அப்படி உட்காராதே!!புரண்டு படுக்காதே!!கையூன்றி எழாதே!! என்று அன்பு கட்டளைகளோடு பார்த்து பார்த்து உணவு சமைத்து பரிமாறுகிறாள் அந்த பெண்ணின் அம்மா. அதுமட்டுமா?உறவுகளின் அனுசரனை.விதவிதமாகசமைத்துக்கொண்டுவந்து கொடுப்பது பேச்சும் அரட்டையுமாக வீடே களைகட்டியிருந்தது.குழந்தை பிறந்ததும் அத்தனைஅருமை பெருமை.”பச்சை உடம்பாக” இருக்கும் பெண்ணுக்கு பத்திய உணவு.தாய்ப்பால் ஊறவேண்டும் என்பதற்காகசூப்,லேகியம்,கஷாயம் என்று பலவிதமான கைமருத்துவம்.குழந்தையையும் அம்மாவையும் சந்தோஷப்படுத்தும்அனுசரனையான பேச்சுக்கள் என அத்தனை அருமையான கவனிப்புகள்.இது எதுவுமே எனக்கு கிடைக்கவில்லையே. என்பெற்றோரின் விருப்படி திருமணம் செய்திருந்தால் எனக்கும் இத்தனை அன்பும் அனுசரனையும் கிடைத்திருக்குமே!!காதல் என்ற பெயரில் எனக்கு நானே தீங்கிழைத்துக்கொண்டிருந்திருக்கிறேன்”

”காதலுக்கு கண்ணில்லை என்று சும்மாவா சொன்னார்கள்.காதலிக்கும்போது சமூகமோ, குடும்பமோ, உறவுகளோ கண்ணுக்கு தெரிவில்லை.

காதலிக்கும்போது நிறைய விஷயங்கள் புரியவில்லை.தினமும் 2 மணிநேரம் அரட்டை அடித்து ஊர் சுற்றுவதற்கும்திருமணத்திற்கு பிறகு 24 மணி நேரமும் ஒரே வீட்டில் சேர்ந்துவாழ்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.”

சுகந்தியை அழைத்தார் மேரேஜ் கவுன்சிலர்.

“உங்கள் கணவர் கூட வரவில்லையா?”

“இல்லை.அலுவலகவிஷயமாக வெளியூர் போயிருக்கிறார்”

“விவாகரத்துக்கு விண்ணப்பிப்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?”

“ஆமாம்.வேறு வழியே இல்லை என்ற பட்சத்தில்தான் விவாகரத்து முடிவுக்கு வந்திருக்கிறோம்”

”காதல் திருமணமா உங்களுடையது.அப்போது புரிதல் அதிகம் இருந்திருக்க வேண்டுமே?இவ்வளவு குறுகியகாலத்திலேயே விவாகரத்து கோரியிருக்கிறீர்கள்?நன்றாக இருவரும் கலந்து பேசித்தான் இந்த முடிவைஎடுத்திருக்கிறீர்களா? உங்கள் கணவரைக்காட்டிலும் நீங்கள்தான் விவாகரத்து வாங்குவதில் முனைப்பாக இருக்கிறீர்கள்?காரணத்தை தெரிந்துகொள்ளலாமா?”

“எங்களுடையது காதல் திருமணம்.இரு வீட்டாரையும் எதிர்த்துக்கொண்டு நடந்த திருமணம்.இருவரும் ஒரேநிறுவனத்தில் தான் வேலை செய்தோம்.ஆரம்பத்தில் அவர் மிகவும் கலகலப்பாக இருந்தார். அதுதான் அவரை எனக்குநேசிக்க தூண்டியது.அந்த கம்பெனியில் வேலையை விட்டுவிட்டு சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி வேலைசெய்ய ஆரம்பித்தோம்.எங்கள் இருவரின் கடுமையான முயற்சியால் அந்த நிறுவனம் நன்றாக வளர்ச்சிஅடைந்தது.குழந்தை பிறந்ததும் தான் நான் வேலையை விடநேர்ந்தது.குழந்தை பிறந்ததற்கு பிறகு நிறுவனம் பெரியதாகவளர்ச்சி அடைய ஆரம்பித்தது நல்ல லாபம் வர ஆரம்பித்தது.எனவே என் கணவர் தான் தன் பிசினஸ் என்று யோசிக்கஆரம்பித்துவிட்டார்.குழந்தை பிறந்தபிறகு ஒரு அப்பாவிற்கு இருக்க வேண்டிய எந்த உற்சாகமும் சந்தோஷமும்அவருக்கு இல்லை.எதிர்காலம் மகிழ்வாக இருக்க வேண்டும் என்றுதான் இருவரும் ஆசைப்பட்டோம் ஆனால் இப்போதுஅவர் தன்னைப்பற்றி மட்டும் சிந்திக்கிறார் என்னைப்பற்றியோ குழந்தையை பற்றிய எந்த அக்கறையும் இல்லை.

இப்போது என் வாழ்க்கை 24 மணி நேரமும் குழந்தையை பார்த்துக்கொள்வது சமைப்பது எனசுழன்றுகொண்டிருக்கிறது.வீட்டில் இருக்கும்போது கூட அவர் குழந்தையை பார்த்துக்கொள்வதில் கொஞ்சம் கூடஉதவுவதில்லை.இதனால் அவருடன் நான் சண்டை போடுகிறேன்.என் நச்சரிப்பு தாங்காமல் அவர் இப்போதெல்லாம்தாமதமாகத்தான் வீட்டிற்கு வருகிறார். சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிய சண்டையாகி மனக்கசப்புஏற்பட்டுவிடுகிறது.கோபமாக இருவருமே வார்த்தைகளை வீசுகிறோம்.

காதல் வாழ்க்கை வேறு,திருமண வாழ்க்கை வேறு என்பது இப்போதுதான் எனக்கு புரிகிறது. திருமணத்திற்கு பிறகுதான்அவர் மறைத்து வைத்திருந்த பலவீனங்களும் குறைகளும் வெளிப்படையாக தெரிகிறது.இது எனக்கு பெருத்தஏமாற்றமாயிருக்கிறது.பணம் சம்பாதிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்.மனைவி குழந்தைக்காக நேரம் ஒதுக்கமுடியவில்லை.ஒரு நாள் மிகப்பெரிய பிசினஸ் டீல் முடித்த சந்தோஷத்தில் வீடு திரும்பினார்.அதைப்பற்றிபெருமையாக பேசிக்கொண்டிருந்தார்.நான் அதனைப்பாராட்டாமல் பெரியதாக சண்டை போட்டேன். என்னைப்பற்றியோசிக்கமறுக்கிறாரே என்கிற ஆதங்கம் எனக்கு.அதுதான் எங்கள் இருவரையுமே இந்த விவாகரத்து முடிவுக்கு இழுத்துவந்திருக்கிறது.”

“சரியான புரிதலும் அனுசரனையும் விட்டுக்கொடுத்தலும் இல்லாததால்தான் நீங்கள் நீதிமன்றத்தின் வாசலில்விவாகரத்துக்காக நிற்கிறீர்கள்.கணவனின் குடிப்பழக்கம், வேலையின்மை, வருமானமின்மை, வரதட்சிணை கொடுமை, ஆண்மையில்லை இப்படி பலபிரச்சினைகளுக்கக விவாகரத்துக்கேட்டால் அதில் நியாயமிருக்கிறது.விட்டுக்கொடுத்தல்இல்லாததால் விவாகரத்து கோருவது தவறு. ஒருவர் கோபமாக இருக்கும்போது ஒருவர் அமைதியாக இருங்கள்.அச்சமயம் வார்த்தைகள் நீள்வது குறையும்.பிரச்சினையும் குறையும்.இருவரும் ஒரே சமயத்தில் கோபப்பட்டால்வளர்ந்து விவாகரத்துவரை போகும்.நீங்கள் விவாகரத்து கேட்டவுடன் உடனே நாளைகொடுத்துவிடப்போவதில்லை.நீதிமன்றமும் உங்களை சேர்த்துவைக்க பல முயற்சிகளை எடுக்கும்.சில பலஆலோசனைகள் மூலமாக.நீங்கள் விவாகரத்து வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால் தான் கடைசியாக வேறுவழியில்லாமல் நீதிமன்றம் விவாகரத்து வழங்கும்”

“விட்டுக்கொடுப்பதும் ஈகோ இல்லாமல் வாழ்வதும்தான் குடும்பவாழ்க்கையின் அடித்தளம்.குடும்பம் என்கிற தராசில்கணவனும் மனைவியும் ஒரே நேர்க்கோட்டில் தான் இருக்க வேண்டும்.கணவனின் தொழில் முன்னேற்றத்தை மனைவிபெருமிதத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கணவனும் மனைவியின் உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளவேண்டும்.தான் ஆண் என்ற ஒரே காரணத்திற்காக மனைவியை அடக்கியாள நினைக்கும்போதுதான் உறவில் விரிசல்ஏற்பட ஆரம்பிக்கிறது.கணவர் எதைச்செய்தாலும் பொறுத்துப்போ என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அதே போல்குடும்பமாவது குழந்தையாவது உன் சந்தோஷம்தான் முக்கியம் என்று ஆலோசனை வழங்குவதும்தவறுதான்.விவாகரத்துக்காக இவ்வளவு போராடுகிறீர்கள் ஆனால் பிரிவுக்கு பிறகான வாழ்க்கை பிரிவுக்கு முந்தையைவாழ்க்கையை விடவும் கொடுமையாக மாறக்கூடிய சாத்தியங்கள் உண்டு அதையும் யோசியுங்கள்.”

“பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டுதானே மேடம்.அதை தாண்டிவிட்டதாக நினைக்கிறேன்.நான் பெற்றோரை எதிர்த்துகொண்டு காதல் திருமணம் செய்ததால் தான் நான் இவ்வாறு கஷ்டப்படுகிறேன் என்ற எண்ணமே என்னைவாட்டுகிறது.உறவுகளின் உன்னதத்தை இப்போதுதான் நான் உணருகிறேன்.காதல் திருமணத்தால் நான்தனித்துவிடப்பட்டதாக சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவளாக வருந்துகிறேன்.

”இந்த வாழ்க்கை நீங்கள் தேர்ந்தெடுத்தது.பிரச்சினைகளை எப்படி கையாண்டால் குழப்பம் சரியாகும் எனயோசியுங்கள்.பெற்றோருக்கு துரோகம் செய்துவிட்டதால் அவர்கள் கொடுத்த சாபம்தான் உங்கள் கஷ்டத்திற்கு காரணம்என்று நினைத்து நீங்கள் வருந்துகிறீர்கள்தவறு செய்துவிட்டதாய் புலம்புகிறீர்கள். நடந்தது நடந்ததுதான்மாற்றமுடியாது.ஆனால் உங்கள் மனப்பான்மையை நீங்கள் மாற்றிக்கொள்ளமுடியும்.

உங்களுக்கு இப்போது பொருளாதார ரீதியாக எந்த பிரச்சினையும் இல்லை.அம்மாவோ உறவினர்களோ கூட இருந்துகவனித்துக்கொள்ளவில்லையே என வருத்தப்பட தேவையில்லை. அவசியமான வேலைகளுக்கு வேலையாட்களைபணியமர்த்துக்கொள்ளலாம்.அது அனாவசிய மன அழுத்தங்களையும் உங்கள் இருவருக்குமான பிரச்சினைகளையும்தவிர்க்கும்.அம்மாவே வந்து உதவவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.

குழந்தை பிறந்த பிறகுதான் உங்கள் மனநிலையில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதை ”போஸ்ட் பார்ட்டம்டிப்ரஷன்” என்று சொல்வார்கள்.கர்ப்பமாக இருக்கும்போதும் குழந்தை பிறந்தபிறகும் பெண்களுக்கு உடலில் உண்டாகும்ஹார்ன்மோன் மாறுதல்தான் இந்த மன அழுத்ததிற்கு காரணம்.உங்களுடைய கோபம்,எரிச்சல்,நம்பிக்கையின்மை எனஎல்லாமே அதன் விளைவுகள் தான்.உடனடியாக மனநல மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

அதன்மூலம் உங்கள் மனநிலையில் நல்ல மாற்றத்தை கொண்டுவரமுடியும்.உங்கள்கணவருக்கும் உங்களுக்கும் கவுன்சிலிங்க் மிக அவசியம்.உங்கள் இருவரின் எதிர்பார்ப்புகளை பரஸ்பரம் புரிந்துகொள்ளவும் தாம்பத்ய வாழ்க்கையை சரிப்படுத்திக்கொள்ளவும் அது கண்டிப்பாக உதவும்.

உங்களுக்குதேவையானது விவாகரத்து அல்ல.நல்ல மனநல சிகிச்சை மற்றும் ஆலோசனை”

“உண்மைதான் மேடம்.என்னுடைய போக்கு எனக்கே வித்தியாசமாகத்தான் இருக்கிறது.”டேக் இட் ஈஸி” பர்சனாக இருந்தஎனக்கு இப்போது சின்ன சின்ன விஷயங்களை கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை.அவர் சாதாரணமாக ஏதாவதுசொன்னால் கூட எனக்கு அளவுக்கதிகமாக கோபம் வருகிறது.குழந்தை பிறந்த பிறகுதான் எனக்குள் இவ்வளவு மாற்றம்எங்களுக்குள் நிறைய சண்டை வருகிறது.எங்கள் உறவுச்சிக்கலுக்கான அடிப்படை காரணமும் புரிகிறது.நான் உடனடியாகமனநல மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்றுக்கொள்கிறேன்.உங்கள் ஆலோசனைக்கு நன்றி”
தூங்கிய குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு மனபாரம் நீங்கியவளாய் குடும்ப நல கோர்ட்டிலிருந்து கிளம்பினாள் சுகந்தி.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.