அன்னை ◌தெரசா

அன்னை தெரசா

பாவலர் கருமலைத்தமிழாழன்

மதமென்னும் வேலிகளைக் கடந்து நின்ற

--மனிதத்தின் மாவுருவம் ! இரக்க ஊற்றின்

பதமான ஈரநிலா ! மக்கள் நெஞ்சப்

--பாத்திகளில் அன்பென்னும் விதையை நட்ட

உதயத்தின் பூபாளம் ! ஆன்மீ கத்தின்

--உண்மையொளி ! இனமொழிகள் நாடு தாண்டி

இதமானப் பூங்காற்றாய் அரவ ணைத்த

--இறையருளின் இனியமுதம் தெரசா அன்னை !

ஆயிரமாம் ஏதிலியர் உரிமை யோடு

--அம்மாவென் றழைத்திடவே அணைத்த அன்னை

ஆயிரமாம் கரங்களுக்கே ஊன்று கோலாய்

--அனுதினமும் தனைக்கொடுத்து நின்ற அன்னை

ஆயிரமாம் முதியோர்கள் அவலம் நீங்கி

--அமைதியாக வாழவழி யமைத்த அன்னை

பாயிரமாய் பாவியமாய் தியாகத் தையே

--பாடலாக இசைத்தவர்தாம் தெரசா அன்னை !

அறிவியலின் வளர்ச்சியிலே அதிக மாக

--அறிவுதனில் உயர்ந்திட்ட மனித ரெல்லாம்

பரிவுகாட்டும் மனங்களிலே சுருங்கி விட்ட

--பரிதாபச் சூழலில்தான் தெருவின் ஓரம்

சொறிநாய்க்கும் கேவலமாய்த் தள்ளப் பட்ட

--தொழுநோய ரும்மனித ரென்றே ஏந்திச்

சரியானப் பாதுகாப்பைப் பாசத் தோடு

--சலியாமல் அளித்தவர்தாம் தெரசா அன்னை !

கரமேந்தி ஏழையர்க்காய் உதவி கேட்டு

--கனிவோடு செல்வந்தர் முன்னே நிற்கக்

கரந்தன்னில் எச்சிலினைத் துப்பு கின்றார்

--கடுகளவும் சினமின்றி எச்சி லைநான்

வரவாக என்கணக்கில் சேர்த்துக் கொண்டேன்

--வழியற்ற அபலையர்க்குக் கொடுங்க ளென்றே

கரம்நீட்டிக் கல்நெஞ்சைக் கரைய வைத்த

--கருணையின் வடிவந்தான் தெரசா அன்னை !

எனிமைக்கும் எளிமையாய்த் தனக்காய் ஏதும்

--எண்ணாமல் வாழ்வெல்லாம் ஏது மற்ற

எளியவரை உயர்த்துகின்ற தவமி யற்றி

--ஏசுவாக ஏளனத்தின் சிலுவை யேற்று

நலிந்தவரே சுற்றமென்று கன்னி யாக

--நடப்பதற்கும் இயலாமல் தளர்ந்த போதும்

மெலியாத இரக்கத்தில் உழைத்தொ ளிர்ந்த

--மேதினியின் ஒளிவிளக்கு தெரசா அன்னை !

வேலிக்குள் சிறைபட்டுப் போயி டாமல்

--வேண்டியவர் ஆட்சிக்குப் பணிந்தி டாமல்

போலியற்ற மனிதநேயத் தொண்டென் னும்நற்

--போர்வையாகி வேதனைக்கு மருந்தாய்ப் போர்த்தி

வேலியாகி நாதியற்றோர் காப்பாய் நின்று

--வெண்மையுடை அகமாகி அன்பே சொல்லாய்க்

காலிரண்டில் உலகளந்து அருள்பொ ழிந்த

--கண்பார்த்த கடவுள்தாம் தெரசா அன்னை !

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.