விபூதி வாசனை“ என்னங்க எங்கேயாவது புதினா இலை கிடைச்சா வாங்கிட்டு வாங்க “

“ ஊரே புதுசு. கடை எங்க இருக்குன்னு எதுவுமே தெரியாது. புதினாவை எங்க போய்த் தேட “

“ சும்மா தானே உக்காந்து இருக்கீங்க. போயிட்டு வாங்க. கீழ வண்டி நிக்கிது.”

ம்கும் ..........என்ற வண்ணம் மாடி பால்கனியில் இருந்து கீழே இறங்கி வண்டியை எடுத்துக்கொண்டு வீதி வீதியாக ஒரு விடுமுறை ஞாயிற்றுக் கிழமை புதினா இலை தேடி கிளம்பினான் ராஜதுரை.

கண்ணில் பட்ட காய்கறி கடைகளில் இல்லை.

ரெண்டு மூன்று பிரதான தெருக்களைத் தாண்டி சின்னதாய் ஒரு பெட்டிக்கடை. “ இங்கு இருக்குமா, பார்த்தால் இருப்பது போலத் தெரியவில்லை. சரி கேட்போம் “ என்ற வண்ணம் கடை முன் வண்டியை நிறுத்தினான்.

கடைக்கு உள்ளே வெள்ளை தாடி, சீவாத சடையாய் தலை முடி அதுவும் வெள்ளையாய், கழுத்தில் உத்திராட்சம், நெற்றி முழுவதுமாய் விபுதி.

எதையோ சன்னமான குரலில் பாடிக்கொண்டே இருந்தார்.

புதினா இலை இங்கே எங்கே கிடைக்கும்.

ஏற இறங்க பார்த்தார் அவனை. " எவ்வளவுக்கு வேணும் "

" இருக்கிறது எல்லாம் கொடுங்க "

கூறு கூறு போட்டு கொஞ்சமாய் வெண்டைக்காய், கத்தரி, தக்காளி, பாகற்காய், வெங்காயம் பின் தேங்காய் ஓரமாய்க் கொஞ்சம் முருங்கக்காய் மற்றபடி ஒரு காய்கறி கடைக்கான அடையாளம் எதுவும் இல்லை.

ஒரு சிகரெட், சோடா வாங்கும் கடைக்கான அடையாளமே இருந்தது. இருப்பினும் புதினா இலை கிடைத்ததில் ஆச்சர்யம் ராஜதுரைக்கு.

" புதினா இலை எல்லாம் வாங்கி விக்கிற மாதிரி கடைய பார்த்தா தெரியல " என்றான் ஆச்சர்யம் தாளாமல்.

" இது வீட்டுல விளைஞ்சது " என்றார். கடையை ஒட்டிய வீட்டை காட்டினார். தொடர்ச்சியாய் மூன்று வீடுகள் இருந்தன.

" ஒ ........இதான் உங்க வீடா " என்ற அவன் கேள்விக்குச் சிரித்தார்.

" ஊருக்கு புதுசா "

" ஆமா ........எப்படி சொல்லுறீங்க "

" உங்க பேச்சை வச்சுக் கண்டுபுடிச்சேன். ஆமா யார் வீட்டுக்கு வந்திருக்க."

" உங்களுக்குச் சொன்னா தெரியுமான்னு தெரியலையே ....."

" சும்மா சொல்லு. "

" ரெண்டு தெரு தள்ளி வலது பக்கம் திரும்புனா கடைசில ஒரு வேப்ப மரம் வரும் அந்த வீடு "

" ஒ ..........அந்த டீச்சர் அம்மா வீட்டுக்கு வந்திருக்கீங்களா "

ஆச்சர்யத்துடன் “ அவங்களைத் தெரியுமா உங்களுக்கு “ என்றான்

மீண்டும் ஒரு சிரிப்பு அவரிடம் இருந்து.

ஏதோ ஊந்துதல் வர அவரிடம் பேச ஆரம்பித்தான் ராஜதுரை.

இந்தப் புதிய குடியிருப்புகள் இருக்கும் 50 ஏக்கர் நிலத்திற்கும் சொந்தக்காரர்.

சிவகிரி மலையில் இருக்கும் கோவிலுக்குப் பாத்தியபட்டவர்.

ராமாயணம் முழுவதுமாய் மனனம். தொடர்ச்சியாய் வாயில் முணுமுணுப்பது அதைத்தான்.

சங்கரதாஸ் சுவாமிகள் மேல் கொண்ட ஆவலில் நாடகங்கள் அதுவும் இராமாயணக் கதைகள் என வாழ்ந்து விட்டார்.

இடையில் குடி கூத்தியா என்று எல்லா நிலத்தையும் விற்று விட்டதாக ஒப்புக்கொண்டார்.

குடித்து விட்டு ஒரு நாள் கிழவியின் ( மனைவி ) கழுத்தில் மிதித்து விட்டதில் படுத்த படுக்கை ஆகி மண்டையைப் போட்டதாகக் கதை போலக் கூறினார்.

அன்று முதல் இந்தச் சன்யாசி கோலம். மூன்று பிள்ளைகள். தினமும் ஒருவர் வீட்டில் இருந்து சாப்பாடு. வரும் வழியில் மெயின் ரோட்டில் இருக்கும் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை அவர்கள் நடத்துவது தான் என்றார்.

யாரும் அவரிடம் சரியாகப் பேசுவதில்லை என்றும் பைத்தியக்காரன் என்ற கூடுதல் சிறப்புப் பெயர் அவருக்கு இங்கு உண்டு என்றும் கூறினார்.

" ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குத் தான் நிறையப் பேசி இருக்கேன். மனசாரச் சொல்லுறேன் நீ நல்லா இருப்ப. நான் வேண்டிக்கிறேன் " என்று வாழ்த்தி அனுப்பினார்.

புதினா இலை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான் ராஜதுரை.

உள்ளே நுழைந்து புதினா இலை கொடுத்து விட்டு மீண்டும் பால்கனியில் அமர்ந்து தினத்தந்தி எடுத்து வாசிக்கத் துவங்கினான்.

வீட்டின் உள்ளே இருந்து " என்ன புதுசா விபுதி வாடை இப்படி அடிக்கி " என்று சிலர் பேச அப்பொழுது தான் ராஜதுரையும் உணர்ந்தான் விபுதி வாடையை.

அந்தக் கடையில் அந்தப் பெரியவர் மீது அடித்த அதே விபுதி வாடை. " அய்யா இது சொந்தக்காரங்க வீடு. நான் இங்க விருந்தாளியா வந்திருக்கேன். இங்க வர தேடி வந்ததுக்கு நன்றி. நீங்க போகலாம் " என்று மனதில் எண்ணிக்கொண்டான்.

ஐந்து நிமிடத்திற்குப் பின் விபுதி வாடை நின்று போனது.

சாயங்காலம் வெங்காய வடை டீ மிக்சர் எல்லாம் திங்க வேண்டும் என்ற சம்பிரதாயம் தீர்ந்த பின்

" ரவி அண்ணே. வீட்டு வர முடியுமா. பெரிய பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் போகணும். வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்காங்க " என்ற வண்ணம் போன் துண்டிக்கப்பட்டது.

ஆட்டோவில் குடும்பத்துடன் பெரிய பஸ் ஸ்டாண்ட் நோக்கி செல்லும் போது ஆட்டோ அந்தச் சிறிய பெட்டி கடையைத் தாண்டி தான் சென்றது.

கடையைப் பூட்டி விட்டு வாசலில் அமர்ந்தவண்ணம் அந்தப் பெரியவர் ராமாயணத்தின் எதையோ கொஞ்சம் சத்தமான குரலில் பாடிக்கொண்டிருந்தார் யாரும் கேட்கிறார்கள் கேட்கவில்லை என்ற எந்த எண்ணமும் இன்றி.

பெரும் மலையில், நல்ல மழையால் காட்டில் முளைக்கும் மரங்கள் போல அவரின் பாடல்கள் அந்தக் குடியிருப்பை வளைத்திருந்தது.

" இந்த ஆளுக்கு வேற வேலை இல்ல " என்றார் அந்தப் பெரியவரின் பாடலை கேட்ட ரவி ஆட்டோ அண்ணன்.

இருட்டில் கொஞ்சமாய்த் தெரியும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான் ராஜதுரை.

" ஏங்க மதியம் அக்கா வீட்டுல அடிச்சதே அதே விபுதி வாடை இப்போ ...உங்களுக்கு வாடை அடிக்கா " என்ற மனைவியைச் சிரித்தவண்ணம் பார்த்துக்கொண்டான்.

உளறுபவர்கள் உளறிக்கொண்டே இருக்கட்டும்.

திரை விலகினால் ஒழிய எதுவும் கண்ணுக்கு தெரிவதில்லை. சூட்சமங்கள் நிறைந்தது இந்த உலகம்.

ஆட்டோ பெரிய பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்று கொண்டிருந்தது.


tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.