இரவுகளுக்குள் எப்பொழுதும் ஒரு பேச்சு இருக்கும். அதன் மொழி மௌனம். அந்த மௌன மொழி உரையாடலில் காற்றின் சத்தம் மட்டும் மொழிமாற்றி பேசிக்கொண்டிருக்கும் – ஒரு செல்ல ரீங்காரத்தோடு. இரவுக்கு இது தொடர்கதை தான். அதை சீண்டும் காற்றுக்கும் இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அந்த காற்றை கிழித்துக்கொண்டு வந்த அந்த சைக்கிள் அங்கு புதிது. அந்த சாலையில் அந்த நேரத்தில் யாரும் இத்தனை ஆண்டுகளில் வந்ததில்லை.


பஞ்சத்தால் அடிப்பட்ட ஊர் என பெயர் வாங்கிய தென்கரை மாவட்டத்தின் ஒரு ஊர் தான் அது. நாளடைவில் ஒட்டிக்கொண்டிருந்த ஒன்று இரண்டு குடும்பமும் காலி செய்துவிட்டு செல்ல ஐம்பது ஆண்டுகளாய் இடிந்து போன வீடுகளையும், காய்ந்து போன பூமியையும் மட்டும் கைதாங்கலாக பிடித்துக்கொண்டிருந்தது.


ஒருவருடம் முன்பு திடீரென அவ்வூருக்கு வந்த வீடு இடிக்கும் வாகனங்கள் வந்து அங்கிருக்கும் ஊரை தரைமட்டமாக்கிவிட்டு சென்றன. அடுத்த ஐந்து மாதத்தில் வீடுகள் இருந்த அடையாளம் இல்லாமல் – சென்னைக்கு மிக அருகில் என்னும் ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் அந்த ஊரை காணமுடிந்தது.


அந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு தான் சண்முகம் சைக்கிளில் வந்துக்கொண்டிருந்தான். பழைய ஹீரோ மாடல் சைக்கிள் அது. அதன் செயின் கொஞ்சம் லூசாக இருக்கும் போல. சலக்.. சலக்.. என்னும் சத்தம் அவனுக்கு முன்னாலும் பின்னாலும் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தது.


சற்று பொறுங்கள். வருவது ஒரு சைக்கிள் மட்டுமல்ல. இரண்டு வருகிறது. அது யார் பின்னால்? சண்முகம் திரும்பி பார்த்தான்.


‘சீக்கிரம் மிதி டா..’ கத்தினான். ஓ.. அவன் சண்முகத்தின் நண்பன் சடையப்பன். நேராக சென்று புதிதாக வைக்கப்பட்டிருந்த ஒரு பலகைக்கு முன்னால் நின்றான்.


‘ஸ்மார்ட் சிட்டி. உங்கள் கனவே எங்கள் உழைப்பு’ என்று எழுதியிருந்தது.


‘இங்க தானா..’ சடையப்பன் கேட்டான்.


‘ஆமாயா.. இப்ப இவனுங்க லே அவுட் படி ஏழாவது தெருக்கு போகணும்..’ சண்முகம் சொல்லிவிட்டு சைக்கிளை அமுத்தினான். அங்கங்கு இடத்தை குறிக்கும் பொருட்டு கற்கள் நட்டுவைத்திருந்தனர்.


‘இன்னும் பாத்துட்டு அடுத்த மாசம் வந்திருக்கலாம்..’ சடையப்பன் சொன்னான்.


‘நாளைக்கு கேட் போட ஆரம்பிக்க போறானுங்க. ப்ளாட், தனி வீடு, அடுக்கு மாடி, சிறு மாடின்னு பிரிச்சு பிரிச்சு இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாத்துக்கும் பாதுகாப்புனு ஒரு ஆள போட போறானுங்க.. அப்பரம் வீடு கட்ட ஆரம்பிச்சுருவானுங்க.. என்கிட்ட தேவையானது இருக்கு. பாத்துக்கலாம்…’ சண்முகம் சொல்லும் நேரம் ஏழாவது தெரு போர்டை அவர்கள் கடந்திருந்தார்கள்.


செங்கல்வராயன் செட்டியார் வீடு இருந்த இடத்தின் முன்னர் நின்றிருந்தார்கள். இந்த ஊர் செழிப்பாக இருந்த காலத்தில் இங்கு வட்டிக்கு விடும் தொழிலில் இருந்தவர் செட்டியார். பாவ புண்ணியம் பார்க்க மாட்டார்.. ஒரு ரூபாயாக இருந்தாலும் கோவணம் வரை கழட்டிக்கொண்டு தான் விடுவார். சில பல உயிர்கள் போயிருக்கின்றன. ஆனால் அவர் அதையெல்லாம் பெரிதாக கண்டுக்கொண்டதில்லை. அவரை பொருத்தவரை… காசு இருப்பவன் மட்டுமே வாழ தகுதி உள்ள ஆள்.


’இந்த இடம் தானா..’ சடையப்பன் கேட்டான். அந்த இருட்டில் அவன் மெதுவாக பேசும் சத்தம் கூட படீரென்று தான் கேட்டுக்கொண்டிருந்தது. பதிலெதுவும் சொல்லாமல் சண்முகம் முன்னால் போனான்.


‘என் கணக்குப்படி பாத்தா இந்த இடம் தான்.. தோண்டு..’ சொல்லிவிட்டு அவன் கையில் இருந்த கடப்பாரையை எடுத்து ஓங்கி ஒரு அடி அடித்தான்.


ஆம். செட்டியார் பொட்டியை நம்பியதை விட மண்ணை தான் நம்பினார். அவருக்கு வந்த பணத்தை எல்லாம் தங்கமாக மாற்றி அங்கு தான் அவர் புதைத்திருந்தார். வறட்சி வந்த காலத்தில் கடைசியாக அந்த ஊரைவிட்டு போனவரும் அவர் தான். என்ன எல்லோரும் ஊரை விட்டு வெளியே போனார்கள் – ஊரில் பாதி நிலத்தை சொந்தமாக வைத்திருந்த செட்டியார் அதை விட மனமில்லாமல் அங்கேயே இருந்து வறட்சி, பட்டினியால் சேர்த்து வைத்த பணத்தையும், கூட்டி வச்ச நிலத்தின் மணலையும் திங்க முடியாமல் உலகத்தை விட்டே சென்றுவிட்டார். அவர் புதைத்து வைத்திருந்த நகை இப்பொழுது இங்கு தான் இருக்கிறது என்பதை சண்முகம் ஒரு வயதான நபரிடம் இருந்து தெரிந்துக்கொண்டான். அதை சொல்லி அதில் பாதி பங்கு தருவதாய் சொல்லி சடையப்பனை கூட்டிக்கொண்டு இப்பொழுது வந்து தோண்டிக்கொண்டிருக்கிறான். சடையப்பனிடம் அவன் முழுவதுமாக சொல்லிவிடவில்லை. அந்த பெரியவர் சொன்ன ஒன்றை விட்டுவிட்டான். அது… அந்த செட்டியாரின் ஆவி யாரையும் அந்த புதையலை எடுக்க விடாமல் பாதுகாத்துக்கொண்டிருப்பதை தான்.


‘சக்.. சக்…’ சத்தம் கொஞ்சம் அமைதியாக தான் கேட்டது.


‘இவனுங்க இங்க இருந்த வீடுகள இடிக்கிறப்போ இது கிடச்சிருக்காதா..’ சடையப்பன் கேட்டான்.


‘இல்ல.. செட்டியார் வீட்டுல இந்த இடம் மட்டும் மண்ணுல ஆனது. கொள்ளை பக்கம். இங்க இடிக்க தேவையில்ல.. தோண்ட தேவையில்ல. ஆனா.. நாளை வீடு கட்ட ஆரம்பிச்சா மாட்டிக்கும்..’ சண்முகத்தின் வாய் தான் பேசிக்கொண்டிருந்தது. கை பரபரப்பில் இன்னும் அழுத்தமாக அடித்துக்கொண்டிருந்தது.


வேக வேகமாக அடித்துக்கொண்டிருந்தனர் இருவரும். ‘சக்.. சக்.. சக்..’


‘அம்மா…’ கத்தினான் சடையப்பன். கையில் இருந்த கடப்பாரை தவறி கீழே விழுந்தது. கால் நகம் பெயர்த்து ரத்தம் ஒழுகியது.


‘ஏ.. பைத்தியக்காரா. பாத்து வேலை செய்யக்கூடாது..’ திட்டிக்கொண்டே வந்து அவனது கைலியிலிருந்தே ஒரு பகுதி துணியை கிழித்து கட்டு போட்டான் சண்முகம். ‘உன்ன கூட்டியாந்ததுக்கு என்னய செருப்பாலயே அடிக்கணும்..’ சொல்லிக்கொண்டு அவன் சலித்தான்.


‘ஒண்ணுமில்லயா. நான் அடிக்கிறேன்.. நகந்துக்க..’ சொல்லிவிட்டு சடையப்பன் வந்து மீண்டும் அடித்தான். கொஞ்சம் கோபமாக தான். ஓங்கி ஒரு குத்து… மறு குத்து. மூன்றாம் குத்து. கடப்பாரை மாட்டிக்கொண்டது. சடையப்பன் ஆட்டி ஆட்டி பார்த்தான். ஆனால் நட்டுவைத்தது போல அசையாமல் நின்றது.


‘ஏ.. சண்முகம்..’ அவன் அழைத்தான். சண்முகம் நட்டுக்கொண்டு நிற்கும் கடப்பாரையை பார்த்தான். ஆட்டி பார்த்தான். ஆடவில்லை.கீழே உட்கார்ந்து மணலை கையால் விளக்கினான். இன்னும் விளக்கினான். இன்னும் விளக்கினான். பள்ளமாக சென்றுக்கொண்டே இருந்தது. இரண்டடி கடந்திருப்பான். இன்னும் கடப்பாரையின் அடிநுனி தெரியவில்லை.


‘என்னடா.. கடப்பாரை வளர்ந்து கிடக்கு..’ சடையப்பன் புரியாமல் நின்றான். இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துக்கொண்டனர். சட்டென தூக்கி வீசப்பட்டான். முதுகில் பலத்த அடி. ‘ஆ…’ கத்திக்கொண்டே முதுகை பிடித்தான். வலியோடு எழுந்து நின்றான். முன்னால் சண்முகம் இல்லை.


‘சண்முகம்… ஏ.. சண்முகம்..’ அவன் கத்தினான். குரல் கொஞ்சம் கம்மியும் பிறகு ஏறியும் வந்தது. ‘எங்கயா போன..’ அவன் திரும்பி பார்த்தான். யார் அவனை தூக்கி வீசியது? சண்முகம் எங்கே? அவன் யோசித்துக்கொண்டே எழுந்து நடக்க ஆரம்பித்தான்.


‘சண்முகம்.. சண்முகம்..’ இம்முறை அவன் குரலில் நடுக்கம். ஒரு பயம். தெளிவற்று முகமெல்லாம் வியர்த்துக்கொண்டிருந்தது. இது உழைப்பால் வந்த வேர்வை அல்ல. இதுவரை அவன் யோசிக்காத ஒரு எண்ணம் இப்பொழுது அவன் நெஞ்சத்தில் படர்ந்திருந்தது.


‘பேயா..?’


--


ரகு அந்த ஊரின் உள்ளே நடந்து வந்துக்கொண்டிருந்தான். மிகப்பெரிய எழுத்தாளன் ஆகவேண்டும் என்பது தான் ரகுவின் கனவு. ஒரு சாதாரண எழுத்தாளன் அல்லாமல் மனங்களின் மனதை உள்ளே திணிக்க வேண்டும். அதுதான் ரகுவின் எண்ணம். அவன் உடனே சபாபதியும் வந்துக்கொண்டிருந்தான்.


‘அண்ணே… தெரியாம இந்த ஊர பத்தி தெரிஞ்சுக்கிட்டேன்ணே.. நான் ஓடிபுடுறேன்ணே..’ சபாபதி கெஞ்சிக்கொண்டே தான் வந்தான். ரகு எதுவும் பேசவில்லை. அமைதியாக நடந்துக்கொண்டிருந்தான்.


‘இந்த இடம்..’ ரகு கேட்டான். சபாபதி கெஞ்சலாக பார்த்தான். ரகு முறைத்தான்.


‘இது கழனி இடம். இங்க எல்லாம் விவசாயம் தான். இந்த ஊரோட நாலு பக்கமும் விவசாயம், வடக்கு பக்கம் ஆறு. நடுவுல தான் சனம் இருந்துச்சு..’ சபாபதி சொல்லிக்கொண்டிருக்க ரகு முன்னால் நடந்தான். ஒவ்வொரு இடமாக பார்த்துக்கொண்டே வந்தான். எல்லாம் தரிசு நிலமாக கிடந்தது.


‘இங்க தான் காவக்காரன் வீடு இருந்துச்சு. ஊர்கோட்ட காவக்காரன்னா சுத்துப்பட்டி முழுக்க பயப்படுமாம்…’ அவன் சொல்லிக்கொண்டே நடந்தான். ஒவ்வொரு வீடாக சொல்லிக்கொண்டே வந்தான்.


‘இது பொன்னுத்தாயி வீடு இருந்த இடம். இவ விட்ட சாபம் தான் ஊரு நாசமா போச்சுன்னு சொல்லுவாங்க. பொன்னுத்தாயி புருசன் ஒரு ஊமக்காரன். இந்த ஊருல இருக்குற எல்லாருக்கும் வேலைக்காரன் போல.. யாருக்கு என்ன வேணும்னாலும் இவன தான் கூப்பிடுவாங்க. ஒரு நாளு செட்டியாரு வீட்டு நக களவாண்டு போச்சுன்னு பழிய அந்த ஊமக்காரன் மேல போட்டுட்டாங்க. அதனால அவ அந்த செட்டியார் வீட்டு முன்னாடி நாண்டுகிட்டு செத்துட்டா. அவ புருசன் மேல அநியாயமா பழிபோட்டப்ப கூட கேக்காத ஊரு இருக்கவே தேவையில்லனு சாபம் உட்டுட்டு செத்துபோனா..’ சபாபதி பாவமாக பார்த்தபடி சொன்னான்.


‘அந்த செட்டியாரு வீடு..’ ரகு கேட்டான். சபாபதி அழைத்து சென்றான். ரகு அந்த இடத்தை சுற்றி வந்தான்.


‘செட்டியாரு எப்படி..?’ ரகு கேட்டான்.


‘பணத்தாச புடிச்ச ஆளு. பணம் பணம்னு அலைவான்.. புத்திக்கெட்ட நாயி. என்ன அந்த ஆத்தா பொன்னுத்தாயி இவனுக்கு மட்டும் சாபம் கொடுத்திருக்கலாம். ஊருக்கே கொடுத்திருச்சு..’ சபாபதி சொன்னான். ரகு அவனை கடந்து முன்னால் நடந்துக்கொண்டிருந்தான்.


‘என்ன சொன்ன…’ ஆக்ரோஷமாக ஒரு முகம் சபாபதி முன்னால் வந்து கேட்டுவிட்டு போனது. அவனுக்கு குலை நடுங்கியது.


‘ஆ.. ஆ… ஆஆஆஆ..’ அவன் கத்தினான். ரகு ஓடிவந்தான். அவனை பிடித்தான்.


‘சார் … நான் சொன்னேன்ல.. அந்த பொன்னுத்தாயி ஆவி இங்க இருக்கு சார். வாங்க சார்.. ப்ளீஸ் சார்.. போயிடலாம் சார்.. இப்ப அது வந்துச்சு சார்…’ அவன் கதறினான். ரகு அவனை ஆஸ்வாசபடுத்த பார்த்தான்.


‘ஆமா ஆமா.. ஓடிடு..’ ரகுவிற்கு பின்னால் இருந்து அந்த அகோரமான முகம் மீண்டும் எட்டி சபாபதியை பார்த்து சொன்னது. சபாபதி எழுந்து ஓடினான்…


‘ஏ.. சபா சபா..’ ரகு கத்தினான். அவன் நிற்பதாயில்லை. ரகு திரும்பி பார்த்தான். அங்கு எதுவும் இல்லை. சுற்றி ஒவ்வொரு இடமாக வந்தான். ஒரு மணிநேரம் முழுக்க அந்த இடத்தை சுற்றி வந்தான். மீண்டும் செட்டியார் வீட்டிற்கு வந்தான். இடத்தை சுற்றி நோட்டமிட்டான். அருகில் இருந்த ஒரு மரத்தின் அடியில் சென்று அமர்ந்துக்கொண்டான். தன் பையிலிருந்த பேனாவையும் பேப்பரையும் எடுத்து எழுத ஆரம்பித்தான்.


அவன் எழுதிக்கொண்டிருக்கும் பொழுதே சட்டென காற்று பலமாக வீசத்தொடங்கியது. அவன் அமைதியாக அந்த காற்றை ரசித்துக்கொண்டே பின்னால் மரத்தில் கண்ணை மூடி சாய்ந்துகொண்டான்.


‘போயிடு போயிடு போயிடு..’ ஒரு கோர முகம் அவன் முன்னால் வந்து நின்றது. சட்டென கண்ணை விழித்துகொண்டான். முன்னால் பின்னால் பார்த்தான். யாரும் இல்லை.


‘என்ன இது..’ அவன் யோசித்தான். சபாபதி சொன்னது போல ஏதேனும் ஒரு பேயா? இன்னும் நன்றாக அந்த உருவத்தை பார்க்கலாம் என்று அவன் யோசித்தான். மீண்டும் கண்ணை மூடினான்.


‘அறிவில்ல. அறிவில்ல.. என்னையே சோதனை பண்றியா. நாயே நாயே..’ ரகுவின் தலை பலமாக அந்த மரத்தின் மீது மோதப்பட்டது. அவன் கண்ணை திறக்கவில்லை. அவன் முன்னால் நின்றிருக்கும் உருவம் என்ன என்பதை பார்க்க நினைத்தான். சபாபதி சொன்னது போல அது பொன்னுத்தாயியா அவன் இன்னும் அந்த உருவத்தை ஒற்று நோக்கினான். பின்னால் தலை மோதிக்கொண்டிருந்தது. அவன் கண்ணை திறக்கவில்லை. உற்று நோக்கினான். நீண்ட முடி.. முகம் தெரியவில்லை. முழுக்க ரத்தமாக இருந்தது. ஆடை.. மேலாடை இல்லை. கீழும்.. கீழும் இல்லை. நிர்வாணமாக இருந்தது அது. அது.. பெண்ணல்ல. ஆண். ரகு கண்ணை விழித்தான். பின் மண்டை ரத்தமாக இருந்தது. அங்கு யாரும் இல்லை.


--

‘இந்த இடம் தான் நமக்கு கரெக்டா இருக்கும்ல..’ ஊரில் கிழக்கு பகுதியில் நின்றுக்கொண்டு நகுலன் கேட்டுக்கொண்டிருந்தான்.


‘அப்படி தான் நினைக்கிறேன் மச்சி.. இதவிட பெட்டர் ப்ளேஸ் இருக்காது..’ நகுலின் நண்பன் குணா சொன்னான்.


’கதைய ஒரு முறை ரீட் அவுட் பண்ணிக்கோ. நாளைக்கு நைட் இங்க வந்து ஆரம்பிச்சுருவோம்.. நம்மோன சீன் எல்லாம் லிஸ்ட் பண்ணி ஒரு பேப்பர் வச்சிருந்தோமே எங்க அது..’ நகுல் கேட்டான். குணா ஒரு சீட்டை எடுத்து நீட்டினான்.


‘மொத்தம் பதினைஞ்சு சீனு.. இதுல மூணு.. மூணு.. ரெண்டு.. நாலு.. அது.. இது.. மொத்தம் அஞ்சு இடம். ஃபிக்ஸ் பண்ணுவோம்..’


‘பண்ணலாம்டா.. நாம ஏன் மார்னிங்கா வந்து பண்ணிட்டு நைட் எஃபெக்ட் போட்டுக்க கூடாது’


‘தே சீ.. பயந்த பயலே.. வாடா..’ நகுல் சொல்லிவிட்டு முன்னால் சென்றான். ’நம்ம ஷார்ட் ஃபிலிம் தான் பெஸ்ட்டா வரணும்.. அதுக்கு இந்த இடம் தான் பக்கா. இந்த டைம்க்கு தான் நாளைக்கு நாம வர்றோம்..’ அவன் தீர்க்கமாக சொன்னான்.


நேராக சென்று ஒரு இடத்தில் நின்றான். சுற்றி பார்த்தான்.


‘பார்த்துக்கோ. கோ ஆர்டினேட்ஸ் மார்க் பண்ணிக்கோ.. இந்த இடம். நாளைக்கு கேக்குறப்போ நீ தான் சொல்லுற. அப்பரம்.. இந்த இடத்தை கொஞ்சம் ஃபோட்டோஸ் எடுத்துக்கோ. கேமரால எப்படி வருதுனு பாக்கலாம்..’ சொல்லிவிட்டு முன்னால் நடந்தான்.


‘ஆமா.. ரொம்ப முக்கியம்..’ சொல்லிவிட்டு ஒண்ணு ரெண்டாய் குணா க்ளிக்கினான்.


‘இந்த கதைய எதுக்கு சூஸ் பண்ணின..’ குணா அங்கே எடுத்துக்கொண்டே நகுலிடம் கேட்டான்.


‘ஏன்..?’


‘இல்ல.. நாம வச்ச போட்டியில நிறைய கதை வந்துச்சே.. இத எதுக்கு சூஸ் பண்ணின..’


‘இதுல தான் ஏதோ ஒரு ஈர்ப்பு… ஏதோ இத பண்ணனும் போல இருந்துச்சு. திரில் ஸ்டோரின்னு முடிவு பண்ணிட்டோம் அப்பரம் என்ன..’


‘இதுக்கு நானே எழுதியிருப்பேன்..’


‘உன் மண்டையிலயும் எதுவும் வரல.. என் மண்டையிலயும் எதுவும் வரலன்னு தானே இப்படி சிறுகதை போட்டின்னு வச்சு வர்ற கதைய வச்சு படம் எடுக்குறோம். எதுக்கு இந்த பில்டப்பு..’ நகுல் கேட்க குணா விழித்தான். இருவரும் சிரித்துக்கொண்டார்கள்.


‘சிரி சிரி சிரி…’ குணா காதில் வந்து ஏதோ சத்தம் கேட்டது. ‘ஆஆஆஆ… சிரி..’ அந்த சத்தம் பலமாக கேட்டது. சிரித்துக்கொண்டிருந்த குணா சட்டென நிறுத்தினான். திரும்பி பார்த்தான். யாரும் இல்லை. அவன் விழிகள் திருதிருவென விழித்தன.


‘என்னடா..’ நகுல் கேட்டான். ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு அவன் முன்னால் நடந்து வந்தான்.


இருவரும் ஒவ்வொரு இடமாக சுற்றினார்கள். அங்கங்கே போட்டக்களை க்ளிக்கிட்டுக்கொண்டே வந்தார்கள். ஒருவழியாக ஐந்து இடத்தையும் குறித்துக்கொண்டு அவர்கள் பைக் அருகில் சென்று நின்றார்கள்.


‘எப்படிடா.. எல்லாம் ஓகேவா..’ குணா கேட்டான்.


‘ஓகே தான்டா.. இந்த கதை தான்.. எப்படி இப்படி எழுதுறாங்க..’ நகுல் கையில் இருந்த பேப்பரை பார்த்துக்கொண்டே கேட்டான்.


‘எப்படி..?’


‘இந்த ரைட்டரு ஊருக்குள்ள வர்றப்போ அவன்கூட வந்தவன் பொன்னுதாயிங்குற ஒரு லேடி தான் பேய்னு சொல்லுறான். ஆனா கூடவே ஒரு செட்டியார் கதைய சொல்லுறான். ஆனா ரைட்டர் கதை எழுதுறப்போ செட்டியார பேயாவும்.. அவர் புதைச்சு வச்ச தங்கத்த திருட வர்ற ஆளுங்கள அந்த பேய் கொலை பண்ணுற போல எழுதியிருக்கிறார். அந்த கதைய எழுதிட்டு இருக்கப்பவே.. ஒரு பேய் வந்து அந்த ரைட்டர கொலை பண்ணுது. ஆனா.. அது அந்த பொன்னுத்தாயும் இல்ல. செட்டியாரும் இல்ல.. நிர்வாணமா ஒரு பேய்… அந்த பேய் அப்போ யாரு?’


‘ஏன்டா.. அந்த ரைட்டர் என்ன அவனோட உண்மை கதையவா எழுதியிருக்க போறான்..’


‘இல்லடா. இது ஏதோ அனுபவத்தோட இருக்குற போல தான் இருக்கு எனக்கு. ஏதோ.. அந்த ரைட்டர் கடைசியா செத்துட்ட போல இருக்குல. அது பொய்யா இருக்கலாம்.. ஏனா.. அப்படி இல்லனா இந்த கதை நமக்கு அவர் அனுப்பியிருக்கமாட்டாரே.. ஆனா.. அந்த இடத்துல உண்மையிலே பேய் இருந்துச்சுனா.. அது..’ நகுல் குழம்பினான்.


‘டே.. உளறாத. இந்த காமராவ புடிச்சுட்டு உட்காரு. கிளம்புவோம். நடுராத்திரில கண்ட இடத்துக்கு கூட்டியாந்து கண்டத பேசுவான்..’ முனிகிக்கொண்டே குணா உட்கார்ந்தான். வண்டியை உதைத்தான். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. இரண்டு மூன்று முறை உதைத்துக்கொண்டிருந்தான். நகுல் அந்த காமராவில் பதிவான படங்களை பார்க்க ஆரம்பித்தான். ஒன்று.. இரண்டு.. மூன்று.. ஸ்டாப். ஜூம் சென்றான். இன்னும் உற்று பார்த்தான். அது ஒரு ஆள்.. நிர்வாணமாக. நீண்ட முடியோடு. கையில் கம்போடு. நகுலின் கண்கள் விரிந்தன.


சட்டென கழுத்தின் ஒரு அடி. ஓங்கி கம்பால் அடித்தது. நகுலும் குணாவும் கத்திக்கொண்டே சாய்ந்தார்கள். அந்த நிர்வாண உருவம் முன்னால் நின்றது.


‘ஊருக்குள்ள வாராத வாராதன்னா கேக்க மாட்டீகளோ.. ஊர்க்கோட்ட காவக்காரன்டா..’ சொல்லிவிட்டு மீண்டும் ஒரு அடி.


-


‘பேய் படம் தான் டிரெண்டு. ஒரு லொகேஷன் பாக்க தெரியுதா இந்த நாயிங்களுக்கு. புரொடியூசரே லொகேஷன் பாத்து சொன்னது என் கதையில தான்யா இருக்கும். தோ பாரு.. ஏதோ பசங்க ஷார்ட் ப்ளீம் எடுத்திருக்கானுங்க. இந்த லொகேஷன் செமயா இருக்கு. அந்த டைரக்டர் பையன் யாரோ நகுலாம்.. அவன போயி நம்ம டைரக்டர பாக்க சொல்லு. பாக்கமுடியாதுன்னு சொன்னானா அந்த நகுல வந்து என்னைய பாக்க சொல்லு. இந்த நாதாரிய தூக்கிட்டு அந்த பயல போட்டு படத்த எடுத்துக்குறேன்..’ ப்ரொடியூசர் ரங்கநாதன் சொல்லிவிட்டு கையில் இருந்த காபியை குடித்துக்கொண்டே பேப்பரை புரட்டினார்.


அந்த பேப்பரில் கீழே ஒரு ஓரமாக எழுதியிருந்தது.


‘ஸ்மார்ட் சிட்டி அச்சம் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு. பல ஆண்டுகளாக முன் ஆரம்பிக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி ப்ராஜெட்க் அந்த இடத்தின் அமானுஷ்ய உலாத்தல் என்னும் செய்தியால் கிடப்பில் கடந்தது. அதன் மீது தடைக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு. முக்கிய சாட்சியமாக இருபது வருடங்களுக்கு முன்னர் அந்த இடத்தில் இறந்து போன ரைட்டர் ரகுவின் தோழரான அறுபது வயது சபாபதியின் வாக்குமூலம் இருக்கிறது. மேலும் பத்து வருடம் முன்னர் குறும்படம் எடுப்பதாக சென்ற நகுல் மற்றும் குணா ஆகிய இரு இளைஞர்களும் அங்கே மரணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது’


பொட்டியில் வந்த செய்தியை படிக்காமல் ப்ரொடியூசர் அடுத்த பக்கத்தை திருப்பினார். டைரக்டர் மற்றும் கேமரா மேன் அந்த ஷார்ட் ஃப்ளீம்-இல் வந்த இடத்தை தேடி புறப்பட்டனர்.


ஊர்க்கோட்டத்திற்கு…


ரகு செத்த பத்து வருசம் கழிச்சு வந்த நகுல் வச்ச சிறுகதை போட்டிக்கு எப்படி ரகுவோட முடிக்காத கதை முடிச்சு வந்துச்சு? நகுல் செத்து பத்து வருசம் கழிச்சு லொக்கேஷன் தேடுற ப்ரொடியூசருக்கு எப்படி எடுக்காத நகுல் படம் எடுத்து வந்துச்சு? ஊர்க்கோட்ட காவக்காரன் சும்மாவா இருப்பான். காவக்காரனுக்கு ஊர் மட்டுமில்ல, உலகமே தெரியுங்க. அந்த காவக்காரன் ஏன் பேயா திரியிறான்…? பதில் எனக்கும் தெரியல. ஊர்க்கோட்டம் போலாம் வர்றீங்களா?


-தம்பி கூர்மதியன்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.