பாண்டிச்சேரி முருகேச பாரதி பள்ளி. மூணாம் கிளாஸ் என்று ஞாபகம்.

நானும் எதிர்வீட்டு ராதி எனும் ராதிகாவும் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தோம். இல்லை, சென்றோம். இல்லை இல்லை , சென்று கொண்டு இருக்கிறோம்.

2017 ல் இருந்து நினைவுப்படிகளில் சறுக்கி 1976 ல் விழுந்ததில் காலக்குழப்பம். நினைத்துப்பார்க்கையில் தொடர் நிகழ் காலம் போல தோன்றுகிறது. பூரண தொடர் நிகழ் காலம் போலவும் இருக்கிறது .

சட்டென்று ஜன்னல் கண்ணாடியில் என் பிம்பத்தை பார்த்ததில் கண்டிப்பாக கடந்தகாலம்தான் என்று புரிகிறது.

முன்னும் பின்னுமாகத்தான் இருக்கப்போகிறது. வருடம்,வகுப்பு எல்லாம் சொல்லியாயிற்று. என் வயதை கண்டுபிடித்து விடுவீர்கள்.அட.. இள நரையாய் இருந்தது முழு நரையாய் ஆன பின் எல்லாம் வெட்ட வெளிச்சமே .

தனியாக நடந்து போகும் தூரம் தான். இப்போது போல் வீடே திரண்டு வாசலுக்கு வந்து , கடல் கடந்து வெளி நாட்டிற்கு சென்று படிக்கப்போகும் போ து கொடுக்கப்படும் பிரியாவிடை எல்லாம் பள்ளி செல்லும் எங்களுக்கு கிடையாது.

பாட சாலைபோக வேண்டும் பாப்பா எழுந்திரு , செல்ல பாப்பா எழுந்திரு!

என்று எம்.பி.ஸ்ரீநிவாஸ் பாடி எழுப்புவார் . போட்டதை சாப்பிட்டுவிட்டு சமர்த்தாக ஸ்கூலுக்கு கிளம்புவோம்.

தெரு முனைக்கடையில் அஞ்சு பைசாவிற்கு பச்சை கலர் செலோபன் பேப்பர் சுற்றிய பாரி சாக்லேட் சாப்பிட்டுக்கொண்டே ஸ்கூல் வந்து சேருவோம். இப்போது போல் ஸ்கூல் பஸ்சில் ஏறி ட்ராபிக்கில் மாட்டிக்கொண்டு "சோர்வோம்" இல்லை.

பச்சை கலர் சாக்லேட் பேப்பரை தூக்கி போட மாட்டோம். அதை முறுக்கி , நீட்டி வார்லி ஆர்ட் பொம்மை மாதிரி செய்வோம்.

இன்று வரை அந்த பச்சை நிறத்தின் மேல் ஒரு தீரா மோகம் ...இப்போதுதான் பீரோ முழுதும் பச்சைப்பசேல் என்று இருப்பதன் காரணம் புரிகிறது.

அன்றைக்கு ஸ்கூல் கடைசி நாள். மாதத்தின் முதல் நாள். பரீட்சை முடிந்து ரிப்போர்ட் கார்டு கொடுக்கும் நாள்.

வகுப்பில் பையை வைத்துவிட்டு தண்ணீர் குடிக்கச் சென்றோம்.

என்ன? வாட்டர் பாட்டிலா ? அதெல்லாம் கிடையாது.அழகாய் இடது கையால் குழாவை திறந்து குனிந்து வலதுகையை வாய்க்கும் குழாவிற்கும் பாலமாய் வைத்து வயிறார நீர் குடிப்போம்.

இப்போது கூட ஏர்போர்ட்களில் இதுபோன்று ஏதோ ஒரு குழாவை வைத்து முயற்சி செய்கிறார்கள். ஆர்வக்கோளாறில் அதை உபயோகப்படுத்தப்போய் முகம், தலை, மேல் பாதி உடல் முழுதும் சொட்ட சொட்ட நனைந்த படியே பிலைட் ஏறிய ஞாபகம்.

சே !எந்த ஒரு புதிய உபகரணமும் ஏன் தான் இப்படி பழி வாங்குகிறதோ ..அதுவும் நமுட்டுச்சசிரிப்புடன் நகரும் நாம் பெற்ற செல்வங்களின் முன்னால்.

ஸ்கூல் மைதானத்தில் காலை வழிபாடு.எல்லோரும் வகுப்பு வாரியாய் நிற்க,அவரவர் வகுப்பு ஆசிரியர் கடைசியில் நிற்பார்.எங்களுக்கு சந்துரு சார் என்று நினைவு. கணக்கு வாத்தியார். மறக்க முடியுமா?! நிர்மலா மிஸ் இங்கிலிஷ் எடுப்பார்.

சந்துரு சார் , அடிக்கடி, யாருக்கு மாப்பிள்ளை யாரோ ,என்ற பாடலை விசில் அடித்துக்கொண்டே இருப்பார்..டியூன் கூட சுமாராக சரியாக இருக்கும். நிர்மலா மிஸ்ஸிடம் லேசா ஒரு ரியாக்க்ஷன் இருந்தது போல் இப்போது தோணுகிறது!

சிறிய ஸ்கூல்.ஆறாவது வகுப்பு வரை தான் அப்போது என்று நினைக்கிறேன்.

ஸ்கூல் மெயின் கேட்டை மூடப்போனார் சந்துரு சார். அதற்கு அப்புறம் வருபவர்கள் லேட் ! வகுப்புக்கு வெளியே நிற்க வேண்டும் சிறிது நேரம்.

நானும் எவ்வளவோ முயற்சி செய்து இருக்கிறேன் அந்த அனுபவத்திற்கு ஏங்கி. எம்.பி.ஸ்ரீநிவாஸால் கெட்டது.

"சார் சார்!" என்று கூவினேன்.கேட்டை மூடி திரும்பிய சந்துரு சார்,"என்ன?" என்று முறைத்தார் . எச்.எம் வேறு வந்துவிட்டார்.

" எங்க அம்மா அதோ வராங்க சார் ரிப்போர்ட் கார்டுக்கு " என்றேன். அவர் திரும்பி கேட்டை திறக்க போகும் போது ...."ஏப்ரல் fool " என்று கத்தி சிரித்தேன்.

நிர்மலா டீச்சரும் சிரித்து விட்டார்கள்.

ஒரு விதத்தில் என்னை காப்பாற்றிய காவல் தெய்வம் நிர்மலா டீச்சர் !

எப்படித்தான் அப்படி ஒரு முட்டாள் தனமான தைரியம் வந்ததோ எனக்கு. அன்றைக்கு ஆரம்பித்தது ..இன்று வரை யோசிக்காமலே பேசிப்பேசி எப்போதும் சத்ரு திசை தான்!

நான் இதை சிரித்து சிரித்து, என் பிறவி பயன்களான என் குழந்தைகளிடம் சொல்ல , இருவரும் சலனமே இல்லாமல் என்னை பார்த்துக்கொண்டே இருந்தனர்.

அன்றைக்கு வாங்காத திட்டெல்லாம் இன்றைக்கு வாங்கினேன்,இதுகளிடம். இதுலே எங்கே தைரியம் இருக்கு. ஜோக் எங்கே இருக்கு .. என்று இளக்காரம் வேறு.

அதோடு மிரட்டல் வேறு .."என் பிரண்ட்ஸ் வரும் போது இப்படி ஏதாவது கெக்கே பிக்கேன்னு பண்ணினே..." என்று.

அந்த காலத்துக்கு இது எவ்வளவு பெரிய விஷயம். கணக்கு வாத்தியாரை பழிவாங்கற சுகம் எல்லாம் சொல்லி புரியாது.

நாங்க வாழ்ந்தது வேற ஒரு கிரகமோ என்று நினைக்க தோன்றியது...மேலும் நினைவுகள் பின் தள்ள, நேரம் போனதே தெரியவில்லை . இன்றைக்கு இரவு சாப்பாட்டிற்கு நிலைய வித்வான் தான் என்று தீர்மானித்தேன் . அதான், நம்ம ரவா உப்புமா!

வாட்ஸப் , பேஸ்புக், கேவலம் போன் கூட இல்லாத காலம். சந்துரு சாரும், நிர்மலா மிஸ்ஸும் கல்யாணம் பண்ணிக்கொண்டார்களா என்று ரொம்போ நாள் யோசித்து இருக்கிறேன்....

ஜெய் ஷங்கர் -ஜெயசித்ரா மாதிரி ஜோடி பொருத்தம்......ஐயோ, ரவை தீயும் வாசம் வர அவசரமாக ஏறி வந்தேன் மீண்டும் 2017 க்கு.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.