இலையுதிர் காலம்

இரவு மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. நாளையப் பொழுதின் நினைவுகள் அவனை தூங்கவிடவில்லை.

இப்படியான தருணங்களில் கொஞ்ச நேரம் காலார நடந்தால் உறக்கம் வரும் என்ற நினைப்பில் மாடிக்கு வந்தான். மனிதனின் மனச்சோர்வுக்கு இயற்கைதானே அருமருந்து. அன்று முழு நிலவு. அதோடு குளிர்ந்த காற்றும் சேர்ந்து கொண்டது, அது மனசுக்கும் உடலுக்கும் இதமாய் இருந்தும் மனசு அதில் ஒட்டவில்லை.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் மனம் தானே எதிரி. அவன் மட்டும் இதற்கு விதிவிலக்காகிவிட முடியுமா என்ன?

விடிந்தால் புதன்கிழமை. அவனது பள்ளிக் கட்டணத்தைக் கட்டவேண்டிய கடைசி நாள் முடிந்து பத்து நாட்களுக்கும் மேலாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் பள்ளிக் கட்டணம் கட்டுவதில் தாமதம்தான். இன்றைக்காவது பணம் கிடைக்குமா? என்ற கேள்வியை சத்தமில்லாமல் உச்சரித்தன அவன் உதடுகள். இந்த மூன்றாண்டுகளில் இப்படி உச்சரித்ததின் எண்ணிக்கை..........?

பள்ளிக் கட்டணத்தை கட்டமுடியாத தருணங்களில் தலைமையாசிரியரின் முன்னால் கைகட்டி நின்ற நாட்களும், அவர் காரணம் கேட்டும் உண்மை நிலையை சொல்ல முடியாமல் ஊமையாய் நின்றதையும் நினைத்துப் பார்த்தான். வெட்கமும் வேதனையும் அவன் மனசை சுரண்டியது.

இப்படியான சூழலிலும் வகுப்பில் முதல் மாணவன் என்ற நிலையை மட்டும் தக்க வைத்துக் கொண்டிருந்தான்.

அவன் பத்தாம் வகுப்பு என்பதோடு, அவனது கல்வித்தரத்தையும் கணக்கில் கொண்ட பள்ளி நிர்வாகம் கட்டணத்தினை தாமதமாகச் செலுத்துவதை ஏற்றுக்கொண்டது. ஆனால் இதை சலுகையாக எடுத்துக் கொள்வதில் அவனுக்கு உடன்பாடில்லை.

இதற்கு காரணமான தந்தையை நினைத்துப் பார்த்தான். அவனைப் பொறுத்த வரை அவர் ஒரு நடை பிணம். இந்த சமூகத்தில் மதுவுக்கு மட்டும் சாதி, மதம், ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என்ற பாகுபாடு தெரியாது அல்லது கிடையாது போலும்.

இன்று தமிழாசிரியர், வகுப்பில் சொன்ன திருக்குறளும், அதன் பொருளும் அவன் ஞாபகத்திற்கு வந்தது.

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.“

இந்த குறளுக்கேற்ற குடும்பத் தலைவனாகவா அப்பா நடந்து கொள்கிறார்? இந்த சமூகத்தில் தனது தந்தையைப் போல் பொறுப்பற்ற மனிதர்களாக வலம் வரும் அப்பாக்களையும் மனதுக்குள் திட்டித் தீர்த்தான்.

குடும்பத்தலைவன் என்ற அந்தஸ்தில் மட்டும் இருந்துகொண்டு அவர்களின் கடமையைச் செய்ய தவறியவர்கள், மனிதர்களாக வாழத் தகுதியற்றவர்கள்.

தன்னிலை அறியாதவனையும், தன்னை சுயமதிப்பீடு செய்யாதவனையும் மனித இனத்தில் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டுமா?

தவறுகள் செய்வது மனித இயல்புதான். ஆனால் அந்த தவறிலிருந்து தன்னை மீட்டெடுக்கவும் தெரியவேண்டும். அதற்குத்தானே ஆறாவது அறிவு.

பொறுப்பான உத்யோகம், கைநிறையச் சம்பளம், இருந்தும் மகனின் பள்ளிக் கட்டணத்தைக் கூட கட்டமுடியாத தகப்பன் மேல் கோபமும், வெறுப்பும் அவனுக்குள் மிதமிஞ்சியிருந்ததில் வியப்பில்லைதான்.

மாடிக்கு அவன் வந்து வெகு நேரமானதால், அம்மா அவனைத் தேடிவந்துவிட்டாள்.

அம்மா பாவம்தான். அப்பாவுக்கு வாழ்க்கைப்பட்டு எந்த சுகமும் அறியாதவள். அவளுடைய எண்ணங்களை உணர்வுகளை அவர் என்றுமே மதித்ததில்லை. அவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாத சூழ்நிலை. அவளது சொந்தங்களையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு அவளாகத் தேடிக்கொண்ட வாழ்க்கையிது. காதல் திருமணம். இதனால் இருவருமே இரு வீட்டாரின் உறவுகளையும் இழந்து விட்டிருந்தார்கள். ஆகவே குடும்பச் சூழலை பகிர்ந்து கொள்ள முடியாத அனாதையாகி நின்றாள் அம்மா.

“அம்மா, பீஸ் கட்டுறதுக்கு நாளைக்காவது பணம் கிடைக்குமா?“

“தெரியலையேப்பா.“ ஒற்றை வார்த்தையில் அம்மாவின் ஜீவனற்ற குரல்.

‘பெற்ற பிள்ளையின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத பாவி‘ கணவனை மனதிற்குள் திட்டித் தீர்த்தாள். ஒவ்வொரு முறையும் ஏமாற்றும் கணவனால், தன் மகனிடமே வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை. .

அவளது மௌனத்தைக் கலைத்த அவன் வார்த்தைகள், அவள் இதயத்தில் ஈட்டியாய் பாய்ந்தது.

“ஒவ்வொரு தடவையும் உங்ககூட போராட முடியலம்மா. பேருக்கு மட்டுமே பிள்ளையா இருக்கிறதுக்கு எங்கேயாவது ஓடிப் போயிரலாமுன்னு தோணுது!“

அவனுக்கு பதில்சொல்ல வார்த்தைகள் வராமல் கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்டாள்.

‘வார்த்தைகளின் வீரியம்புரியாது பேசிவிட்டோமோ?‘ அந்தக்கணம் அவன் உடலில் இருந்து உயிர் பிரிந்துவிட்டது போன்ற உணர்வு.

அம்மாவிற்கு இருக்கும் துணையே நான் மட்டும்தானே. நானும் போய்விட்டால்? அம்மா அனாதையாகிவிடுவாள். சொந்தம் என்று சொல்லிக்கொள்ளவும், அவளுக்கு ஆறுதல் சொல்லவும் இருப்பது நான் மட்டுந்தான். இருவருமே வனாந்தரத்தில் நிற்பது போன்ற உணர்வு.

தன் உணர்ச்சிகளைக் கொட்டுவதற்கு அம்மாவை விட்டால் வேறு வழி தெரியவில்லை அவனுக்கு.

அம்மா பிள்ளை இருவருக்கிடையிலும் மௌனம். அவர்களது மௌனத்தை ஆட்டோ சத்தமும், தொடர்ந்து கதவைத் தட்டும் ஓசையும் கலைத்தன.

“அவரு வந்துட்டாருப்பா“

கதவைத் திறப்பதற்காக அம்மா போய்விட்டாள்.

தினமும் காலை அலுவலகத்திற்குப் போய்விட்டு ஊரெல்லாம் உறங்கியபின் வருவதுதான் அவர் வழக்கம். புறநகர் பகுதியில் வீடு இருந்தது அவருக்கு வசதியாய் போய்விட்டது. அவரை அப்பா என்று அழைத்ததும், அவரோடு பேசியதும் மூன்றாண்டுகளுக்கு முன்னரே முடிந்துவிட்ட கதை.

குடிகாரர்கள் எல்லோருமே ஒருவிதத்தில் பைத்தியக்காரர்கள். அவர்களுக்கு குடி ஒன்றுதான் வாழ்க்கை .தனக்கென்று தாய் தகப்பன் மனைவி மக்கள் இருக்கிறார்கள் என்பதையே மறந்து வாழும் மனிதப்பதர்கள். காலையில் டீ குடிப்பதைப்போல் மதுவைக் குடித்துவிட்டு, சாலையோரத்தில் சுயநினைவின்றி மயங்கிக்கிடப்பது அன்றாடக் காட்சியாகிவிட்டது.

இன்று இல்லாவிட்டாலும் நாளை இந்த சாக்கடையில் அப்பாவும் விழக்கூடும். நினைத்தவுடன் நெஞ்சு படபடத்தது. மானம் மட்டும்தான் ஒரு மனிதனை தலை நிமிர்ந்து வாழவைக்கும். அதுவும் போய்விட்டால் அவன் நடை பிணம்தான். அப்பாவை அப்படிப் பார்க்க விரும்பவில்லை அவன்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அம்மா மீண்டும் மாடிக்கு வந்து “கண்ணா“ என்று கூப்பிட்டாள். அம்மா சந்தோசமாக இருக்கிறாள் என்றால் அவனை ‘கண்ணா‘ என்று கூப்பிடுவதுதான் வழக்கம்.

“அப்பா பணம் குடுத்துருக்காருப்பா, நாளைக்கு பணத்தக் கட்டிடு“ அம்மாவின் வார்த்தைகள் உயிரற்றவை என்பதை அவனது மௌனம் உறுதிப்படுத்தியது..

எத்தனை நாட்களுக்கு இந்த போராட்டம்?

காலத்தே செய்யப்படும் செயலுக்குத்தான் மதிப்பும் மரியாதையும் உண்டு என்பதுதானே உலக நியதி.

இந்தப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும். அவர் முழுமையாக இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகவில்லை. குடும்பம் என்ற நினைப்பு கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருப்பதை அவரது செயல்கள் காட்டிக்கொடுத்தன.

‘அவரை பழைய அப்பாவாக பார்த்தாக வேண்டும். இந்தப் புதைகுழியில் இருந்து அவரை மீட்டாக வேண்டும்‘ என்ற எண்ணம் மட்டும் மனசுக்குள் கனலாய்க் கொதித்து வெறியாய் கிளம்பியது அவனுக்குள்.

அதே சிந்தனையில் அன்று இரவு உறக்கத்தை புறந்தள்ளிவிட்டு அவரை குடியிலிருந்து மீட்டெடுப்பதற்கான வழியைக் கண்டறிந்தான். இதைச் சொன்னால் அம்மா ஏற்றுக்கொள்வாளா? என்ற ஐயமும் அவனுள் எழுந்தது, இருந்தாலும் இந்த முடிவிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதில் உறுதியாய் இருந்தான்.

‘பிள்ளைகளுக்காக வருத்தப்பட்ட பெற்றோர்கள் வாழ்ந்த காலம் போய், பெற்றோர்களுக்காக பிள்ளைகள் வருத்தப்படுகின்ற காலம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.‘ இது காலச் சுழற்சியா? அல்லது கலிகாலமா?

மறுநாள், அப்பா அலுவலகம் சென்றவுடன், அம்மாவிடம் அவன் மனதில் இருந்ததைச் சொன்னான். இந்தச் செயலால் ஏதாவது விபரீதம் நடந்துவிடக்கூடாதே என்ற அச்சத்தில் அவனது யோசனையை அவள் ஏற்றுக் கொள்ளவில்லை.

எல்லாப் பெண்களுமே இப்படித்தானா! அவர்களுக்குள் ஊறித்திளைத்த கலாச்சாரமும் பண்பாடும்தான் இதற்குக் காரணமா? அவர்களைக் கட்டுக்குள் வைத்திருப்பது எது? ‘கணவனே கண்கண்ட தெய்வம்‘ இந்த தாரக மந்திரத்திலிருந்து வெளியில் அவர்கள் வெளியில் வருவது எப்போது?

“அவர ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போயி சிகிச்சை எடுத்தா சரியாயிருந் தானப்பா?“

“அம்மா உனக்கு பைத்தியம் புடிச்சிருக்கா? நீ வாழ்க்கையில எவ்வளவு அடிபட்டாலும் திருந்தமாட்டயா? உன்னோட வாழ்க்கைய அழிச்சுக்கிட்டிருக்கிறதுமில்லாம, என்னோட வாழ்க்கையையும் சேர்த்து அழிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டியா?

‘’உன்னோட விருப்பப்படியே அங்கபோயி அவருக்கு குணமானாலும், திரும்ப அந்தப் பழக்கம் வராதுன்னு என்ன நிச்சயம்? அவரு மனசத்தாம்ம மாத்தணும்.’’

பள்ளிக்கூடத்தில நானு கைகட்டி நின்னதும், நீ தலைகுனிஞ்சு நின்னதும் உனக்கு மறந்து போச்சா? பத்தாவதோட நிக்கணும்னு நினைக்கிறியா?“

எல்லாமே எல்லை மீறிவிட்டது. நடப்பது நடக்கட்டும். அவன் சொல்லிலும் நியாயம் இருப்பதை உணர்ந்தவள், மகன் சொல்லுக்கு மறுப்புச் சொல்லாமல் மௌனமாக சென்றுவிட்டாள்.

அன்று பள்ளிக்குச் செல்லாமல், அவன் எண்ணத்திற்கு இறுதி வடிவம் கொடுத்தான்.

நிறைய இரவுகளை தூங்காமல் கழித்த அவன் அன்று இரவு அப்பா வந்ததுகூட தெரியாமலும், விடிந்தால் நடக்கப்போகும் விபரீதத்தின் அச்சம் கொஞ்சம்கூட இல்லாமலும் எப்படி தூங்கினான் என்று ஆச்சரியமாய் இருந்தது அவளுக்கு. ஆனால் அவளுக்குத்தான் தூக்கம் வரவில்லை. ‘இறைவா இந்த இரவு இப்படியே தொடரட்டும்‘ என வேண்டிக்கொண்டாள்.

இயற்கை யாருக்கும் கட்டுப்படுவதில்லை, அது மட்டுமே தனது செயலை சரியாக செய்துகொண்டிருப்பதற்கு சாட்சியாக பொழுது விடிந்தது.

தினமும் படுக்கையிலிருந்து எழுந்ததும் அவரது அறையிலிலுள்ள நிலைக் கண்ணாடியில் முகம் பார்ப்பதுதான் வழக்கம். அதேபோல் அன்றும் கண்ணாடி முன் நின்ற அவருக்கு வித்தியாசமாய் தெரிந்தது வெள்ளைத்தாள் ஒன்று. கண்ணாடியின் பககவாட்டில் செருகப்பட்டிருந்தது கண்ணில் பட்டது. மனதில் ஆயிரம் கேள்விகளோடு அதைப் பிரித்த பொழுது “என் தந்தைக்கு…. படித்தார். திரும்பத் திரும்பப் படித்தார். ‘எனக்கே புத்தி சொல்ற அளவுக்கு வளந்துட்டானா?‘ கண்கள் சிவந்து. கோபம் தலைக்கேறியது. உடம்பில் நடுக்கம். உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது. தலை சுற்றுவது போல் ஒரு பிரமை. தண்ணீரைக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். ஆனாலும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களோடு மனமும் சேர்ந்து அழுவதை அவரால் உணரமுடிந்தது.

அவரது மனசாட்சி பேசத்தொடங்கியது,

‘கோபத்தால் எதையும் சாதித்துவிட முடியாது. இன்று உன்னை நீயே சுய மதிப்பீடு செய்து கொள்ளும் நாள். உன் மகனிடம் தவறில்லை. நீ சுயநலக்காரன். குடும்பத்தலைவன் என்ற பொறுப்பிலிருந்து விலகிச் சென்று வெகு நாட்களாகிவிட்டது. உன்னைத் திருத்துவதற்கான ஆயுதம் இது, உன் மகன் ஒரு வாய்ப்புக் கொடுத்திருக்கிறான்.‘

ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துப் பார்த்தார். ‘பெரிய பதவி, கைநிறைய சம்பளம் இருந்தும் மனித உணர்வுகளின் மதிப்பை உணராத பதர் நான். கணவன், தகப்பன் என்பது பதவியா? அது ஒரு பாச வலை.. இந்தக் கண்ணாடியில் தெரிகின்ற எனது முகம் அருவருப்பாய் தெரிகிறது‘. அவரது உதடுகள் சத்தமில்லாமல் உச்சரித்தன.

மீண்டும் அந்தக் கடிதத்தை படித்தார். அந்தக் கடிதத்திலிருந்த வார்த்தைகளின் வீரியமும் அதன் பொருளும் அவரைச் சிந்திக்க வைத்ததோடு, எங்கிருந்து கற்றுக்கொண்டான் என்ற கேள்வியும் கூடவே எழுந்து அடங்கியது.

“செல்வம்“

நீண்ட நாட்களுக்குப் பிறகு மகனை பேர் சொல்லி அழைத்தது அம்மாவின் முகத்தில் ஒரு புறம் சந்தோசத்தையும் மறுபுறம் அவள் மனசுக்குள் படபடப்பு இருப்பதையும் அவள் முகம் காட்டிக்கொடுத்தது.

“நீ எழுதுனத நீயே எனக்கு ஒரு தடவை வாசிச்சுக்காட்டுப்பா“.

அவரது குரலில் நடுக்கமும் இயலாமையும் தெரிந்தது.

“என் தந்தைக்கு, உங்களின் அன்பு மகனின் மனம் திறந்த மடல்.

“அப்பா உங்களது செயல்பாடு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? இதனால் உங்கள் சுயகௌரவம், நமது குடும்ப கௌரவம் பாதிக்கப்பட்டதாக உணர்கிறீர்களா? எனது எதிர்காலம் சூனியமாகிவிட்டதாகவே உணர்கிறேன். உங்களையும் சேர்த்துத்தான். இந்த வீட்டிற்கு தினமும் வந்து போய் இருக்கும் உங்களுக்கும் எங்களுக்குமான உறவிற்கான பொருள்? . குறித்த தேதிக்குள் பள்ளிக் கட்டணத்தை செலுத்தாதற்காக, நானும் அம்மாவும் தலைமையாசிரின் முன்னால் தலைகுனிந்த நாட்களும், குடும்பச் செலவிற்கு பணம் இல்லாமல் பட்டினியாய் கிடந்த நாட்களும் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. எழுத்தில் மட்டுமே உங்களை அப்பா என்று உச்சரிக்க முடிகிறது. உங்கள் முகம் பார்த்து அப்பா என்று கூப்பிட ஆசையிருந்தும் கூப்பிட முடியவில்லை. தினம் தினம் நானும் அம்மாவும் மனசுக்குள் அழுவது உங்களுக்கு தெரியாதுதான். அதை உணரும் நிலையில் நீங்கள் இல்லை. அம்மாவும் உங்களிடம் பேசிப் பேசி தோற்றுப்போனாள். ஆகவே நான் பேசுகிறேன். உங்களுக்கு புத்தி சொல்கிற வயதில் நான் இல்லை. இருந்தும் அப்பா பிள்ளை என்கிற உறவு முறையிலும் அதையும் தாண்டி...... இப்படி ஒரு செயலை செய்ய என் மனம் தூண்டியது, இதற்கும் மேலாக உங்கள் உடல் நலம், எனது எதிர்காலம் குறித்த அச்சம், இதையும் தாண்டி அம்மாவும் நானும் உங்கள் மீது வைத்திருக்கிற அன்பு.“

“அவங்க குடும்பத்தையே உதறித்தள்ளிட்டு நீங்கதான் கதின்னு நம்பி வந்தவங்கதான அம்மா. அப்படி வந்தவங்களுக்கு நீங்க செய்ற கைமாறு இதுதானா? அம்மாவோட களை இழந்த முகத்த பார்த்தீங்களா. குடி குடியைக் கெடுக்குங்கிறது உங்களுக்கு நான் சொல்லித் தெரியணுங்கிறதில்ல. கேள்வி இன்னும் நிறைய இருக்குப்பா. ஆனா உங்க மனசு புண்படுமேன்னு, இத்தோட நிறுத்திக்கிறேன்.“

உங்கள் அன்பு மகன்.

“என்ன மன்னிச்சுருங்கப்பா“. காலில் விழுந்த அவனை மார்போடு தழுவிக்கொண்டார்.

“அப்பா இன்னும் ஒரு வேண்டுகோள் நானும் நீங்களும் சேர்ந்து மதுவுக்கு எதிரா போரட்டத்த ஆரம்பிக்கணும்பா”

‘உணர்ச்சிக் குவியலில் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே, நீதாம்பா என்ன மன்னிக்கணும்“.

ஆனந்தக் கண்ணீருடன் அம்மா அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.