கிருஷ்ணராஜபுரம்

'கிருஷ்ணராஜபுரம் ... ஐயா ... நீங்க இறங்கவேண்டிய இடம் வந்தாச்சு'


பேருந்தின் நடத்துனர் ஒலியெழுப்பி அழைக்க, அமைதியாய் தியானத்தில் இருந்த அவர் நன்றி சொல்லிவிட்டு பேருந்திலிருந்து இறங்கி, மண்ணைத் தொட்டு வணங்கினார். பூமி கொஞ்சம் சூடாகத்தான் இருந்தது. சிலபல தவறுகள் பெரிய அளவில் நடந்து கொண்டிருப்பதை உணர்ந்தார். நடுத்தர வயது, 50 இருக்கும், வெள்ளை வேட்டி, மெல்லிய பருத்தி ஜிப்பா, தோளில் ஒரு துணிப்பை, சிவப்புக்கயிற்றில் கட்டப்பட்ட ஒற்றை ருத்ராட்சம் கழுத்தில், நெற்றியில் கொஞ்சமாய் மீதியிருக்கும் திருநீற்றுப்பட்டை, கையில் திருமந்திரம் புத்தகம், 'நமசிவாய' நாமம் மனதில், 'கிருஷ்ணார்ப்பணம்' உதட்டில்; யோகி என்ற பேருக்கு மிகத்தகுதியானவர், அப்படித்தான் அவரைப்பற்றித் தெரிந்த சிலரால் அழைக்கப்பட்ட .... ரமணராஜா, நாமும் யோகி என்றே அழைப்போமே இனி.


கிழக்கு நோக்கி வணங்கித் துதித்தார்.


இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்

பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்

உணங்கிநின் றான்அம ராபதி நாதன்

வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே


'ஐயா ... திருமந்திரமா ?'

சத்தம் கேட்டுத் திரும்பினார். வயலில் வேலை செய்பவர் போல, அழுக்குவேட்டி இடையில். மேல் சட்டை அணியாத ஒல்லியான தேகம். கையிலிருக்கும் புத்தகத்தைப் பார்த்துக் கண்டுபிடித்திருக்கலாம் என்றெண்ணிக்கொண்டு, 'படிக்கத்தெரியும்களா ?' யோகி கேட்டார்.

'தெரியாதுங்க சாமி, நீங்க சொன்னது காதுல கேட்டுச்சு'

'எல்லாமே சாமிதாங்க ஐயா, திருமந்திரம் ன்னு எப்புடி சொன்னீங்க ?'

'எங்கப்பா பாடி சொல்லிக்குடுத்தாரு, எனக்குத்தான் ஒன்னும் புரியலே, மக்குப்பய'

'எல்லாரும் புரிஞ்சமாதிரி நடிக்கறாங்க, நீங்க உண்மையை ஒத்துக்கிட்டீங்க, பழம் சாப்பிடறீங்களா ?' பையிலிருந்து 3 வாழைப்பழங்களை எடுத்து நீட்டினார்.

'பாட்டுக்கு பொருள் என்னங்க சாமி ?'

'நம்பி வணங்கிக் கும்பிட்டா அந்த சிவன் வழித்துணையா, கடைசிவரைக்கும் வருவான்'

'ரொம்ப சரிங்க, ஐயா … இந்த பக்கம் … ?'

'பூர்விக நிலம் ஒன்னு இருக்கு, அதுசம்பந்தமா பார்த்துட்டுபோலாம்னு வந்தேன்'

'பெரியவீட்டுல வாங்கிப்பாங்க, எல்லாத்தையும் வளைச்சுப்போட்டாய்ங்களே'

'யாரு இருக்கா பெரியவீட்டுல ?'

'தெரியலீங்க, முன்னால ஒரு பெரியவரு, பண்ணை ன்னு கூப்பிடுவோம், அவரு, அவரு சம்சாரம் இருந்தாய்ங்க, ரொம்ப நல்லவங்க, பொங்கல் சமயத்துல எல்லாம் கூப்பிடுவாங்க, சோறு போட்டு, துணிமணி எடுத்துத் தருவாய்ங்க, இப்போ யாருயாரோ வாராய்ங்க போறாய்ங்க, ஒண்ணும் நல்லதாப் படலீங்க'

'அப்போ பெரியவீட்டுக்குப்போனா வேலை முடிஞ்சிடும் ?'

'அவங்க ஏற்கனவே வளைச்சுப்போடாம இருக்கணும், நிலம் எங்கே இருக்குங்க சாமி ?'

'பெரிய வீடு எங்கே இருக்கு ?'

'இப்படியே கிழக்கா போங்க, ஜனங்க குடிச்சிக்கிட்டு தள்ளாடிக்கிட்டு நிப்பாய்ங்க, அங்கேர்ந்து தெரியும், பெரிய்ய்ய வீடு'

'நன்றி'

'ஒங்களுக்கு சரின்னா கூட வந்து இடம் காட்டுறேங்க'

'வாங்களேன், பேசிக்கிட்டே போகலாம், உங்களுக்கு சங்கடம் ஒன்னும் இல்லியே ?'

'இன்னொரு மனிதருக்கு செய்யற உதவி ஆண்டவனுக்கு செய்யறதுதானுங்களே'

'இதுவும் திருமந்திரம் தான், உங்க பேருங்க?'

'மாடசாமிங்க'

'விவசாயம் நடக்குதுங்களா ?'

'எங்கே சாமி, பூமி காஞ்சியே இருக்கு, மழை சரியா பெய்யறதில்லே, வாழ்க்கை கஷ்டமாத்த இருக்குங்க'

'இதோ இந்த செடியையெல்லாம் வெட்டிச்சாய்க்கணும் முதல்ல' கொஞ்ச தூரத்தில் இருந்த கருவேலச் செடிகளைக் காட்டி, 'இது நிலத்தடிநீரை இழுத்திடுமே, அப்புறம் பூமி காயம என்னாகும் ?'

'இங்கே யாருக்கும் ஒன்னும் தெரியறதில்லீங்க, பஞ்சாயத்துல சண்டை போடுறாய்ங்க, எங்கேயோ யாருக்கோ மனு தந்திருக்கறதா சொல்றாய்ங்க, வேலை நடக்கமாட்டேங்குதுங்க, அவிங்களுக்கு ஏதாவது வேணும்னா 4, 5 கார்ல நேரா மெட்றாசுக்கு போறாய்ங்க, ஊர்ப் பொது விசயம்னா மனு போட்டுட்டு கம்முன்னு இருந்துடுராய்ங்க'


'ஒரு அருவாள் கிடைக்குமா ? நம்மால முடிஞ்சதை வெட்டிச்சாய்ப்போமே'

'இதோ இப்போ வரேங்' என்று சொல்லிவிட்டு மாடசாமி ஓடினார், சரியாய் 2 நிமிடத்தில், இன்னும் இரண்டுபேரை கூட அழைத்துக்கொண்டு ஓடிவந்தார்.

அனைவரும் இணைந்து அந்தச் சுற்றுவட்டாரத்திலிருந்த அனைத்துக் கருவேலஞ் செடிகளையும் வேரோடு வெட்டிச் சாய்த்தனர். 'இதை கண்காணிச்சிக்கிட்டே இருங்க, மறுபடி வளர்ந்தா உடனே வெட்டியெறியணும், இல்லேன்னா இது நிலத்தடி நீரை உறிஞ்சிடும்' என்று அறிவுரை கூறி, யோகி ஊருக்குள் போகும் ஒற்றையடிப்பாதையில் நடக்க, மாடசாமி தொடர்ந்து வந்தார்.

'கமலநாத் தெரியும்களா ?' யோகி மாடசாமியைக் கேட்டார்.

'பேரு தெரியாதுங்க, ஆளு தெரிஞ்சிருக்கும், என்ன பண்றாருங்க ? இங்கே இருக்காரா ?'

'தபால் ஆபிஸ்ல இருக்காரு, இங்கே எங்கே இருக்கு … தபால் ஆபிஸ்?'

'போற வழிதாங்க'


பேசிக்கிட்டே தபால் ஆபிஸ் வந்துசேர்ந்தனர்.


கமலநாத் தன் நண்பர் யோகியை வரவேற்றார். மாடசாமி இருவரையும் வணங்கிவிட்டு தன் வழி சென்றார்.


---------


'என்ன பிரச்சனை ? எதுக்கு என்னை கூப்டே ?' யோகி தன் நண்பரிடம் கேட்டார்.


'யோகி, என்னவோ நடக்குது, பெரிய வீட்டுல என்னவோ பண்றாங்க, கிராமத்துல இருக்குறவங்க எல்லாருகிட்டேயும் கைநிறைய பணம் இருக்கு, பெரிய வீட்டுல குடுத்தாங்க ன்னு சொல்றாங்க, அவங்க ஏன் எல்லாருக்கும் பணம் தர்றாங்க, என்ன பண்றாங்க ஒன்னும் புரியலை, நீ கண்டுபிடி, நான் நேரடியா இதுல இறங்கமுடியாது, மறைமுகமா இதுக்கு உதவுறேன்' கமலநாத் சொல்ல யோகி யோசிக்க ஆரம்பித்தார்.


'எங்கேர்ந்து ஆரம்பிக்கட்டும் ?'

'இதோ இப்போ உன்னோட வந்தாரே பெரியவர் ...'

'மாடசாமி ?'

'ஆமா, அவருகிட்டேயே பேசிப்பாரு, சரி, நீ யாரு என்ன விசயத்துக்கு வந்திருக்கேன்னு ஏதாவது சொன்னியா ?'

'பூர்விக நிலம் இருக்கு, விக்கணும்னு சொல்லியிருக்கே'

'குட், பெரியவீடு பத்தி எதுவும் வெளிப்படையா பேசிடாதே, அங்கே விசயம் போயிடும், அவங்க முழிச்சிடுவாங்க'


தலையாட்டி ஆமோதித்தார் யோகி.


----------


சிறிதுநேர ஓய்விற்குப் பிறகு, மாலை மாடசாமியின் வீட்டின் பக்கம் நடந்து சென்றார். திண்ணையில் அமர்ந்திருந்தவர் வரவேற்று அமரவைத்தார்.


'மோர் குடிக்கறீங்களா ?' என்று கேட்டுக்கொண்டே வீட்டின் உள்ளே சென்று ஒரு குவளையில் எடுத்துவந்தார். நன்றி சொல்லி யோகி அதை அப்படியே குடித்துமுடித்தார். ஊரின் கதை, மக்கள், சுற்றுப்புறம் மற்றும் மாடசாமியின் சொந்தக்கதை எல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டார்.


'காத்து வாங்கக் கிளம்புனீங்களா ?' மாடசாமி கேட்டார்

'ஆமாங்க, தபால் ஆபிஸ்ல ஒரு 200 ரூபா தரணும், எனக்கு 500 க்கு சில்லறை வேணும், இங்கே எங்கயாச்சும் கிடைக்குமான்னு அப்படியே பார்க்கலாம்னு வந்தேன்'

'நான் தரேன், எவ்ளோ வேணும் உங்களுக்கு ?'

'இந்தாங்க 500, 5 நூறு ரூபா இருக்குமா ?'


மறுபடி உள்ளே சென்று எடுத்துக்கொண்டு வந்தார். பணம் கை மாறியது.


'பணம் நிறையப் புரளுதுபோலிருக்கு ?'

'ஆமாங்க, பெரியவீட்டுல தர்றாங்க, நடனம் உடற்பயிற்சி எல்லாம் சொல்லிக்கொடுத்து கையில பணமும் தர்றாங்க, ஆனா பணத்தை வச்சி என்னங்க பண்ணமுடியும் ? கரைச்சி குடிக்கவும் முடியாது, பொங்கித் திங்கவும் முடியாது, இல்லீங்களா ? '


தலையாட்டி ஆமோதித்தார். கிளம்ப எத்தனிக்கும்பொழுது ஒரு கார் வந்துநிற்க, காரிலிருந்து ஒரு சிறு பெண் இறங்கி மெதுவாய் வீட்டிற்குள் சென்றாள். அவளைத் தன் பேத்தி என்று மாடசாமி சொன்னார்.


போக வர கார் தந்து, பணம் தந்து, நடனம் உடற்பயிற்சி சொல்லித்தந்து .... சிந்தித்துக்கொண்டே கமலநாத் தின் இருப்பிடம் வந்து சேர்ந்தார்.

-----

அவரின் வருகைக்காகவே காத்திருந்தார் கமல்நாத்.


'என்ன யோகி ஏதாவது க்ளூ கிடைச்சுதா ?'

'புத்தம்புது 100 ரூபா நோட்டு கிடைச்சுது' எடுத்துக்காட்டினார்.


கையில் வாங்கிப் பார்த்தார். அதற்குள் யோகி தன் பையிலிருந்து பணத்தாள் சோதிக்கும் சின்ன இயந்திரத்தை எடுத்து வந்தார்.


'கள்ளநோட்டா இருக்கும்னு சந்தேகப்படறியா ?'

'சோதிச்சா தெரிஞ்சிருது'


பேசிக்கொண்டே தான் கொண்டு வந்த ரூபாய்த்தாளை ஒவ்வொன்றாய் அந்த இயந்திரத்தில் வைத்து சோதித்து, 'எல்லாமே கள்ளநோட்டு, அவங்களே அடிக்கறதா இருக்கணும்' என்று பேசி கமல்நாத்தை பார்த்தார்.


'அடப்பாவிகளா, இது மட்டும்தானா இல்லே இன்னும் வேறேதாவது ...'


'மாடசாமியோட பேத்தி ... காருல வந்து இறங்குனா, சின்னப்பொண்ணு, ஆனா ரொம்ப டயர்டா இருந்தா, அவ கிட்ட கொஞ்சம் பேசணும், இன்னும் ஏதாவது பூதம் கிளம்பலாம்'


கவலையோடு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.


-----

அடுத்த நாள் காலை யோகி மீண்டும் மாடசாமியின் வீட்டிற்கு சென்று பேத்தியோடு கொஞ்சம் பேசவேண்டும் என்று தெரிவித்தார். அவள் மகள் வயிற்றுப் பெண் என்றும் மகள் சில மாதங்கள் முன்பு இறந்துவிட்டதையும் அறிந்துகொண்டார்.


அரண்ட விழியோடு பயந்துபயந்து அந்தப்பெண் வந்தாள்.


'பயப்படாம வாம்மா, உன்னோட பெயர் என்ன ?'

'கயல்விழி'

'நீ ஸ்கூலுக்குப் போறதில்லையாம்மா ?'


'போயிட்டிருந்தா சாமி, அவ அம்மா செத்ததுக்கப்புறம் நிப்பாட்டிட்டா, பெரிய வீட்டுல வேற வந்து கூப்பிட்டிட்டுப் போயிடறாங்களா .... '


பெரியவீட்டுப் பெயரைக்கேட்டதும் கயல்விழி கொஞ்சம் அரண்டு வாசலைப்பார்த்ததை யோகி கவனிக்கத்தவறவில்லை.


'பெரியவீட்டுல அப்படி என்னம்மா சொல்லித்தராங்க ?'

பதில்பேசாது அமைதியாயிருந்தாள்.

'பயப்படாதே, நான் இருக்கே, பாத்துக்கறே, தைரியமாப் பேசு' தன் பேனாமுனையில் பொறுத்தப்பட்டக் காமிராவை ஆன் செய்துக்கொண்டார்.


'இல்லே, யாரு கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க'


'என்னவோ தப்பு நடக்குது, அதை கண்டுபிடிக்கத்தான் மேலிடத்துலேர்ந்து என்னை அனுப்பிருக்காங்க, தைரியமா இரு, உனக்கு ஒன்னும் ஆகாது, நான் இருக்கே, பார்த்துக்கறே'


மாடசாமி கொஞ்சம் கலவரமாகிப் பார்க்கவே அவரை ஒரு வேலை சொல்லி வெளியே அனுப்பினார் யோகி..


கொஞ்சம் கொஞ்சமாய் கயல்விழி எல்லா விடயங்களையும் யோகி கேட்க கேட்க ஒவ்வொன்றாய் தெரிவித்தாள். தன்னைப்போல இன்னும் சில சிறுமியர்கட்கு அங்கு நடனம் உடற்பயிற்சி சொல்லித்தருவதும், தேவைப்படும்போதெல்லாம் சென்னை பெங்களூரு போன்ற நகரங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவதும், கையில் அவ்வப்பொழுது 200 300 என்று காசு தரப்படுவதும் எல்லாம் சொன்னாள்.


'அப்போ, நீங்க தனித்தனியா ஒவ்வொரு நாள் ஒவ்வொருத்தரு போவீங்க ?'

'ஆமா'

'மசாஜ் செஞ்சிவிடணும் ?'

புரியாது முழித்தாள்.

'அதான், கை கால் முதுகு கழுத்து அமுக்கி விடணும்'

'ஆமா'


'அங்கே டான்ஸ் ஒருத்தரு ஆடுவாரு, நீங்களும் அதேமாதிரி ஆடணும், இல்லியா ?'

'ஆமா'

'இங்கே கொஞ்சம் அதை ஆடிக்காமிக்க முடியுமா?'


ஒரு குத்தாட்டம் ஸ்டெப் செய்து காட்டினாள். கொஞ்சம் அசிங்கமாகத்தான் இருந்தது. இன்னும் என்னவோ இதில் இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.


'கயல்விழி எதையோ மறைக்குறே என்கிட்டேயிருந்து'

'ஆமா, உங்ககிட்ட மறைக்குறே, ஆனா அங்கே எதையும் மறைக்கக்கூடாது'

' என்கிட்டே என்ன மறைக்குறே ? அங்கே என்ன மறைக்கக்கூடாது ? புரியலையே'

'இப்போ இங்கே ஆடுன ஆட்டம் தான் அங்கேயும் ஆடுவேன், ஆனா'


கூர்ந்து கவனித்தார்.


'அங்கே எதையும் மறைக்காம, உடம்புல ஆடையே இல்லாம ஆடணும்'


கயல்விழி மெல்ல வாய்பொத்தி குலுங்கிக்குலுங்கி அழத்தொடங்கினாள். சிறிதுநேரம் அவளை அழவிட்டு பிறகு சமாதானப்படுத்தி, வேறு யாரிடமும் இதுபற்றி பேசவேண்டாம் என்று அறிவுரை சொன்னார்.


'உலகத்துல கெட்டவங்க ஏன் இருக்காங்க ?' அழுகையினிடையில் கேட்டாள் கயல்விழி.

' நிறையப் பணம், உழைச்சி சம்பாதிக்காம கிடைச்சா, மக்கள் கெட்டவங்களா ஆயிடறாங்க, கவலைப்படாதே, தப்பு செய்த எல்லாரும் தண்டிக்கப்படுவார்கள், நான் பொறுப்பு’ ஆறுதல் சொன்னார்.


'இப்போவே எல்லாரையும் தண்டிப்பீங்களா ?'


'இன்னும் கொஞ்சம் அத்தாட்சி வேணும் ?'


'நான் பக்கத்து வீட்டு கமலா கிட்ட பேசி ....'


'இல்லை, வேணாம், அது போதாது, தவிர விஷயம் வெளில எல்லாருக்கும் தெரிஞ்சிடும், நீ இன்னொரு உதவி பண்ணனும்'


'கண்டிப்பா செய்யறேன், எனக்கு பெரியவீட்டுல நடப்பது எதுவும் பிடிக்கலே'


யோகி தன் பையிலிருந்து ஹேர்பின் போன்ற ஒன்றை எடுத்தார்.


'ஹேர்பின் னா இது ?' கயல் கேட்டாள்.

'ஹேர்பின் மாதிரி இது ஒன்னு, தன்னைச் சுற்றி இருக்குறதையெல்லாம் படமெடுக்கும், நீ என்ன பண்ணனும்னா ...'


'எனக்குக் கொஞ்சம் புரியுது, அங்கே சிலபேர் கையில பேனா மாதிரி ஒன்னு வெச்சிக்கிட்டு பக்கத்துல பக்கத்துல நின்னு பார்ப்பாங்க .. அப்போ அவங்க எங்களை அப்படியே படம் எடுத்துருக்காங்களா ?'


யோகி ஆமாமென்று தலையசைத்து ஆமோதித்தார்.


கயல்விழி மீண்டும் அழத்தொடங்கினாள்.


'அழுதது போதும், ரொம்ப அழுதுட்டேன்னா பழிவாங்கும் உணர்ச்சி குறைஞ்சிடும்'


கண்ணைத்துடைத்துக்கொண்டாள்.


'மறுபடி என்னிக்கு அங்கே போவே நீ ?'


'நாளைக்கு போகணும், காலைல 9 மணிக்கு, வண்டி வரும்'


'சரி, வண்டில ஏறுவதற்கு முன்னால இதோ இந்த பட்டனை இப்படி தள்ளிட்டு, தலைல வச்சிக்கிட்டு போயிடணும், நான் ஒரு ஆறு மணிக்கு மேல வரும்போது என்கிட்ட கொடுத்துடு அப்புறம் நான் பார்த்துக்கறேன், இதைப்பத்தி யாருகிட்டேயும் மூச்சு விடவேண்டாம், அப்புறம் அவங்களை மடக்கிப் பிடிக்கறது கஷ்டமாயிடும்'


'கண்டிப்பா ... நான் நீங்க சொன்னமாதிரியே நடந்துக்கறே'


கயல்விழி தலையில் கை வைத்து ஆசிர்வதித்து அங்கிருந்து அகன்றார் யோகி.


அடுத்தநாள் காலையில் பெரியவீட்டிலிருந்து வண்டி வர, அதில் ஏறிச் சென்றாள், மறக்காது ஹேர்பின் பட்டனை ஆன்செய்து கொண்டாள். பெரியவீட்டினுள் நுழைந்தவுடன், வழக்கமாய் ஈடுபடும் கை கால் அமுக்கும் வேலை குத்தாட்டம் மது ஊற்றிக்கொடுத்தல் போன்ற எல்லா வேலைகளையும் செய்தாள். மதியம் 3 மணிக்குமேல் கையில் பணம் திணித்து வண்டியில் வீட்டிற்கு அனுப்பப்பட்டாள்.


மாலை ஊர் அடங்கியப்பின் யோகி கயல்விழியைச் சந்தித்து அந்த ஹேர்பின் பெற்றுக்கொண்டு தன்னிருப்பிடம் வந்துசேர்ந்தார். ஹேர்பின் காமிராவில் பதிவான காட்சிகளையெல்லாம் ஒரு பதிவு எடுத்துக்கொண்டு யாரிடமோ தொலைபேசியில் பேசி தான் சேகரித்த எல்லா விவரங்களையும் தெரிவித்து நடவடிக்கை எடுக்க ஆணை பெற்று, ஒரு பெரிய போலீஸ் படையுடன் அடுத்தநாள் காலை பெரியவீடு நோக்கிக் கிளம்பினார் காவல் துறை உதவி ஆணையர் யோகி என்ற ரமணராஜா.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.