இவர்தாம் காமராசர் - பாவலர் கருமலைத்தமிழாழன்

அரசியலே விளம்பரமாய் ஆன பின்போ

ஆட்சிசெய்வோர் தம்பணத்தில் செய்தல் போல

அரசாங்கத் திட்டங்கள் துவக்கி வைக்க

அழகாகத் தம்பெயரைப் போட்டுக் கொள்வர்

சிரமுயர்த்திப் பார்க்கின்ற வண்ணம் தம்மின்

சிரித்துநிற்கும் ஆளுயரத் தட்டி வைப்பர்

வரலாறு படைப்பவராய்ப் புகழ்ந்து பேச

வரிசையாக அடியாட்கள் நிறுதிக் கொள்வர் !

செயல்படுத்தும் திட்டத்தின் செலவைப் போல

செய்திடுவர் விளம்பரந்தான் செய்வ தற்கே

செயல்படுத்தும் திட்டத்தின் மதிப்பில் பாதி

செயலாணை தருவதற்கே எடுத்தும் கொள்வர்

வயல்முழுதும் பயிராகக் களைக ளிங்கே

வளர்ந்ததைப் போல் கயவர்கள் நிறைந்த தாலே

பயன்திட்ட மெல்லாமே ஆட்சி யாளர்

பணம்குவிக்கும் திட்டமாக ஆன தின்றே !

மலைகுடைந்து அமைத்திட்ட குந்தா வென்னும்

மாவணையின் சிறப்புதனை விளக்கு தற்கே

கலைநுணுக்கத் திரைப்படந்தான் எடுத்து ரைத்தால்

காண்கின்ற மக்களெலாம் அறிவார் என்ற

நிலைதன்னை அரசாங்க அலுவ லர்தாம்

நிறைவேற்றித் தந்திட்ட முதல்வ ரான

விலைபோகா காமராசர் தம்மி டத்தே

விளம்பரந்தான் செய்வதற்கே விளம்பி நின்றார் !

செலவென்ன ஆகுமென்று காம ராசர்

செப்பியஅவ் அலுவலரைக் கேட்ட போது

இலட்சங்கள் மூன்றாகும் எனவு ரைக்க

இயம்பிட்ட அலுவலரை நோக்கி அந்தச்

செலவினிலே பத்துஊரில் பள்ளிக் கூடம்

செம்மையாகக் கட்டிடுவேன்; வேண்டாம் எந்த

விளம்பரமும் என்றுரைத்த தலைவர் போன்று

விளம்புதற்கே இன்றெந்த தலைவர் உள்ளார் !

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.