குழலினி தியாழினி தென்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர். என்பது வள்ளுவரின் வாக்கு.


ஆம்! மழலை மொழி இனிமையானது. குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு பேச்சாற்றல் ஒரு மைல் கற்கள். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் காலம் சிறிது வித்தியாசப்படும். தற்போதைய கால கட்டத்தில் தன் குழந்தை மூன்று வயது வரை பேசவில்லையே என பேசும் திறன் பயிற்சிக்கு (ஸ்பீச் தெரபி) பெற்றோர்கள் அழைத்துச் செல்கிறார்கள். சற்றே நாம் யோசிக்கும் தருணம் இது.

சமுதாயத்தின் பார்வையில் :

கருவில் இருக்கும்போதே குழந்தையுடன் பேசலாம் என விஞ்ஞானம் கூறுகிறது. நாம் குழந்தையுடன் பேசும் போது அதன் கற்றல் திறன் அதிகரிக்கும். பேசும் போது அசையும் வாய் மொழி மற்றும் ஒலியினைக் கொண்டும் பேசும் திறன் அதிகரிக்கும்.

ஒரு கட்டிடத்தின் வலிமை அதன் அடித்தளத்தைப் பொறுத்தது. அதுபோல ஒரு குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சி அடித்தளமாக உள்ள முதல் ஐந்து வருடங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ற பழமொழிக் கேற்ப அப்பருவத்தில் குட்டி கதைகள் மூலம் வாழ்வியல் நீதி போதனைகள் கற்பித்தல் அவசியம். உதாரணத்திற்கு , பாரதியார் பாடியதுபோல் “பொய் சொல்லக்கூடாது பாப்பா ! புறம் சொல்லலாகாது பாப்பா” என உணர்த்தல் அவசியம். அன்பு, அறம், உண்மை, வலிமை, பொறுமை, தைரியம் போன்ற வாழ்வியலுக்குரிய அடிப்படை கருத்துக்கள் கண்டிப்பாக வலியுறுத்துதல் அவசியம். இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா என பலர் கேட்பது புரிகிறது. சாத்தியம் ஆகவேண்டும். அப்படி ஆகாததால்தான் பள்ளிப் பருவத்தில் இருந்தே குற்றங்கள் அதிகரிக்கிறது. ஒவ்வொரு பள்ளியிலும் நீதி போதனைகள் வகுப்பு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்.ஏட்டளவில் உள்ளதே தவிர நடைமுறைப் படுத்துதல் அவசியம். அதேபோல் விளையாட்டு வகுப்பும் நடைமுறைப் படுத்துதல் வேண்டும். விளையாட்டின் மூலம் வெற்றி, தோல்விக்கு மனம் பக்குவம் அடைகிறது. தனக்காக வாதிடுதல், குழுவோடு ஒன்றிணைவது, உண்மை விளம்புதல், தொடர்பியல் போன்ற வாழ்வியலின் முக்கிய அம்சங்களில் பயிற்சி பெறுகின்றான். அதைவிட மனம் ஆனந்தத்தில் திளைக்கிறது. அது மட்டுமல்ல உடல் வலிமை பெறுவதும் அனைவரும் அறிந்த ஒன்று.

குழந்தைகளுடன் பயனுள்ள நேரத்தை ஒதுக்குதல் அவசியம்.நாங்கள் இருவரும் வேலைக்கு செல்கிறோம். காலையில வேலைக்கு போன வர முன்இரவு ஆகிவிடுகிறது. எப்படி அவர்களுடன் விளையாட முடியும்? என கேட்கும் பெற்றோர்கள் சற்றே யாருக்காக இப்படி கஷ்டப் படுகிறோம் என ஒரு நிமிடம் யோசித்தால் பதில் கிடைக்கும். நேரத்தை ஒதுக்குதல் அவசியம். குழந்தைகளுடன் உட்கார்ந்து விளையாட்டினை அறிமுகப்படுத்துதல் அவசியம். பிறகு அவர்கள் தங்கள் நண்பர்களோடு விளையாட பழகிவிடுவார்கள். ஆம்! சரியான பாதைக்கு வழி காட்டினால் போதும். குழந்தைகள் புத்திசாலிகள்! சரியாக பயணிப்பார்கள். ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து டேடிபியார் பொம்மை வாங்கித் தருவதில் பயனில்லை. கற்றலுக்கு ஏற்ப சிறு விளையாட்டு பொம்மைகள், படங்கள் ( ஆடு, மாடு, பறவைகள் ,தாவரங்கள், நீரினங்கள் அழிந்து வருவதால் படங்களைப் பார்த்துதான் கற்பிக்கும் நிலை உருவாகியுள்ளது) அந்த கற்பித்தல் முதலில் தாய் மொழியாகத்தான் இருக்க வேண்டும். பிறகு மற்ற மொழிகளை எளிதாக கற்றுக்கொள்வார்கள். குழந்தைகளுக்கு கதைகளின் மூலம் எண்ணிக்கைகள், வர்ணங்கள், பாப்பா பாட்டு, நடனம், சமிக்ஞைகள், ஒலிகள் என பல்வேறு வகையான அறிவுத்திறன் வளர்க்கலாம்.

குழந்தைகளுக்கு திட்டமிட்ட உணவு அவசியம். மேலும் திட்டமிட்ட நேரப்படி கொடுத்தலும் அவசியம். பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளுக்கு பக்குவத்தோடு தான் அறிவுறுத்த வேண்டும். ஐயமிட்டு உண் என ஒளவையார் கூறியது பயத்தை போக்கிவிட்டு உணவைக் கொடு என்பதே தவிர பயமுறுத்தி கொடு என கூடாது. அறுசுவைகளும் குழந்தைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகப்படுத்தலாம்.

ஆம்! தொழில் நுட்ப வளர்ச்சியில் விண்ணை தொடுகிறது! ஆனால்

இன்றைய தலைமுறையினரிடம் தொடர்பியல் (கம்யூநிகேஷன்)குறைந்து வருகிறது. பெருகி வரும் தனிக் குடும்பம் (அம்மா , அப்பா , குழந்தை) தனித்து இயங்குகின்றது. குறைந்து வரும் கூட்டு குடும்பத்தில் பெருகும் உறவுகளால் (தாத்தா , பாட்டி, பெரியம்மா,பெரியப்பா, சித்தி, சித்தப்பா , அக்கா, அண்ணா ) குழந்தையின் பேசும் திறன் , கற்றல் திறன் , வளர்கிறது. பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு அதே வகுப்பில் பயிலும் குழந்தைகளிடம் தொடர்பியல் இல்லை. அதைவிட ஆச்சர்யம் கல்லுரி மாணவர்களுக்கு அந்த துறை மாணவர்களிடம் கூட தொடர்பு இல்லை. (முன் தலைமுறையினர் அடுத்த துறை மாணவர்களிடம் கூட அறிமுகம் இருந்தது குறிப்பிடத்தக்கது). இயல்பு வாழ்க்கை மறைந்து இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை.


சட்டத்தின் பார்வையில்!


இலவசம் மற்றும் கட்டாய கல்வி சட்டம் (2009): அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாகவும் மற்றும் கட்டாயமாகவும் கல்வி அளிக்கப்படவேண்டும். இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி அடிப்படை உரிமைகளிளே அடங்கியுள்ளது. பதினான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக மற்றும் கட்டாயம் கல்வி அளித்தல் வேண்டும் என்று சட்டம் நடைமுறைக்கு வந்தாலும், குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்த்துக் கொள்ளவிட்டால் இச்சட்டப்படி புகார் செய்யலாம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை தொழிலாளர் முறை சட்டம் (தடுப்பு மற்றும் வரையரை) பதினான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வேலையில் அமர்த்தக்கூடாது என்றும் கட்டாய கல்வி அவசியம் என சட்டம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.

சிறார் சட்டம்( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு)2015:

இச்சட்டப்படி குழந்தைகள் குற்றங்கள் புரிந்தால் தண்டிக்கப்படாமல் சிறார் சீர்த்திருத்தப் பள்ளியில் அனுமதிக்கப்படுவர். அங்கு அவர்களுக்கு கல்வி, போதனைகள், வாழ்வியல் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அறியாத வயதில் குற்றங்கள் புரிவதால் அவர்கள் திருந்துவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. பிறகு சிறார் பருவத்தை தாண்டிய பிறகு அப்பள்ளியிலிருந்து விடுவிக்கப் படுவார்கள். அங்கு அளித்த அறிவுரைப்படி மீண்டும் தவறு செய்யாதவாறு நடந்து கொள்ளுதல் அவசியம்.

குழந்தைகள் பாதுகாப்பு (பாலியல் வன்கொடுமை) சட்டம் 2012:

இச்சட்டப்படி குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து ஆய்வு மேற்கொள்லுதல் , கண்காணித்தல், புகார் விசாரித்து வழக்கு தொடுத்தல் என பல்வேறு வகையான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆய்வில் அறுபது விழுக்காடு பாலியல் வன்கொடுமை குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மூலமாகவே இத்தகைய குற்றச் செயல்கள் நடைபெறுவதாக கண்டறியப் பட்டுள்ளது.

அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். இதற்கான தேசிய ஆணையம் மத்திய அரசின் கீழ் நியமிக்கப்பட்டு அனைத்து மாநில அளவிலும் செயல் பட்டு வருகிறது. இதற்கான முகவரி:

ncpcr.gov.in

அங்கு இ-பாக்ஸ் பட்டனை அழுத்துதல் வேண்டும். அது ஆறு தொடுதல் படங்களை காண்பிக்கும்.


  • விளையாடும் இடம்/கடை/தெரு
  • பள்ளி/டியூஷன்
  • அச்சுருத்துதல்
  • பேருந்து/வண்டி/வேறுசில
  • குடும்ப உறுப்பினர்/ உறவினர்/தெரிந்தவர்
  • இணையத்தில்/ கைபேசியில்

இதில் எந்த இடம் என சரியாக க்ளிக் செய்தல் வேண்டும்.

பாதிக்கப்பட்டவர் பெயர், தொலைபேசி, இ-மெயில்முகவரி பதிவு செய்தல் வேண்டும். பின் பாலியல் கொடுமை குறித்து ஒருசில வரிகள் குறிப்பிடலாம். பின் செக்யூரிட்டி கோட் கேட்கும். அதில் உள்ளவாறு டைப் செய்து பதிவு செய்தல் வேண்டும். பின்பு சப்மிட் செய்து பதிவு செய்தல் வேண்டும்.

ஆணையம் புகார்படி நடவடிக்கை எடுக்கும்.


உதவி எண்: 1098

கைபேசி எண்: 98682 35070


குழந்தைகள் உரிமைகளுக்காக போராட சூளுரைப்போம்!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.