பெங்களூரிலிருந்து


ஞாபகம் வருதே..

*******************

நம் அனைவரது வாழ்க்கையிலும் ஒரு பயணம் அடிக்கடி நினைவில் வந்து போகும்.


அப்படியொரு பயணம் எனக்குள்ளும் உண்டு..


பெங்களூரிலிருந்து எனது சொந்த ஊரான தேனிக்கு செல்வதற்காக பெங்களூர்- நாகர்கோவில் வரை செல்லும் சேசாத்ரி எக்ஸ்பிரஸ்-ல் 5.15pm- ற்கு தொடங்கி இரவுகளில் பயணிப்பது வழக்கம்..


எனது ஊரான தேனிக்கு செல்வதற்கு திண்டுக்கல் இரயில் நிலையத்தில் இறங்குவதே மிகச் சரியாக இருக்கும்..


அன்றும் அப்படித்தான். ஆனால் அந்த இரயிலை பிடிப்பதற்கு ஒசூர் செல்ல வேண்டிய சூழல், எப்படியே அவசர அவசரமாக ஓசூர் இரயில்நிலையம் சென்று அன்-ரிசர்வ் டிக்கெட் ஒன்று எடுத்துக் கொண்டு நான் செல்ல வேண்டிய இரயில் தடத்துக்கு வந்து சேர்ந்தேன்..


இரயிலோசை தூரத்தில் அழைக்கிறது..


அருகிலுள்ள கடையில் ஆனந்த விகடனும், அன்றைய தினசரி நாளிதலும் வாங்கிக்கொண்டேன்..


அதற்குள் இரயிலும் வந்து சேர்ந்தது மணி 7.05pm ஆகியிருந்தது. அதன் அனைத்து பெட்டிகளிலும் கூட்டமாகவே இருந்தது, அதில் ஓரளவு நெருக்கம் குறைந்த இரயில் பெட்டிக்குள் ஏறிவிட்டேன்..


தம்பி அப்டியே கொஞ்சம் முன்னாடி போப்பா என சக பயணிகள் விரைந்தனர்..

...

அதில் மூன்றாவது இருக்கையின் ஓரத்தில், தேனு மிட்டாய்மாறி ஒரு பெண்.

"கருப்பு தேகம் விழ வைக்கும் விழிகள் ஜஸ்ட் இப்போது மலர்ந்த சிவப்பு ரோசாவின் இதழ் சின்னதா ஒரு கருப்பு பொட்டு அழகான சுருட்டை முடி காதோர கம்மல் கலையான முகம் என சொல்லிக் கொண்டே போகலாம் அவளை..


என்னோடு பயணிக்க தொடர்ந்து படியுங்கள்.


நின்று கொள்ள இடம் கிடைத்துவிட்டது, அவளுக்கு எதிராக உள்ள இருக்கையின் மீது சாய்ந்து கொண்டேன்..


இரயில் ஆடி அசைந்து புறப்பட்டு விட்டது..


காந்தத்தின் கலரிலும் இடையிடையே தங்கத்தின் சாயலில் சின்ன சின்ன வட்டங்களில் சாலுடன் அணியக்கூடிய உடையை அணிந்திருந்தால் தேனு. நான் ஜீன்ஸ் பேன்ட்-ம் கொக்கின் வெளிர் நிறத்தில் "Your fear is my Greatest Weapon" எனும் வாசகம் அடங்கிய டி-சரட்-ம் அணிந்திருந்தேன்..


அவளுக்கு எதிரேயுள்ள பயணி ஒருவர் உணவருந்தி கொண்டிருந்தார் அப்போதுதான் மணி 8.30 என்பதை கவணித்தேன். எனக்கும் பசி எடுத்துவிட்டது.. ஊழியர் ஒருவர் தண்ணீர் பாட்டில் விற்றுக் கொண்டு வந்தார், அவரிடம் வேகமாக ஒரு பாட்டில் வாங்கி தண்ணீர் அருந்திய பிறகே ரூபாய் இருபதை கொடுத்தனுப்பினேன். அந்த பயணியும் சாப்பிட்டு முடித்து பேப்பரிலேயே கையை துடைத்து ஜன்னல் வழியாக எறிந்து விட்டார்.. உண்ட மயக்கத்தில் அவரின் கண்கள் சொக்குவதை கவணிக்க முடிந்தது.. உடனே நான் வாங்கிய தினசரி நாளிதழை அவரிடம் கொடுத்தேன்.. அதில் தலைப்புச் செய்திகளை கூட நான் இன்னும் பார்க்கவில்லை. உதவிக்கு உதவி என அவரோட இருக்கைய எனக்கு தந்துட்டு் நான் நின்றிருந்த இடத்தில் நாளிதழை விரித்து உறங்கிவிட்டார்..


எனக்கு அவளின் நேர் எதிரே இருக்கை கிடைத்ததில் அளவில்லா சந்தோஷம்.. அதற்கு பிறகே அவளை விடுத்து பார்வையை வேறு பக்கம் திருப்பினேன் அவளுடன் மொத்தம் 12 தோழிகள் பயணித்தனர். அதில் அவள் இருக்கையில் மூன்று பேரும் அவளுக்கு பின்னே அடுத்த இருக்கையில் மீதமுள்ளவர்களும் அமர்ந்திருந்தனர். அவளுக்கருகில் ஒரு தோழியும் மற்றொரு தோழி ஜன்னல் ஓர இருக்கையிலும் சாய்ந்து உறங்கியிருந்தாள்..


"சுதா..... பாட்டு போடுடி"..... என அவளிடம் தோழி கிசுகிசுத்தாள்..


"ஐ சுதாவா உங்க பேரு..??

'இன்னிக்கு உங்களுக்கு பொறந்த நாளா?


இல்லீயே...


உங்க அப்பாவுக்கு..?


...ம்ஹூம்...


அம்மாவுக்கு...?


இல்ல இல்ல...


தங்கச்சிக்கி...?

ம்ஹூம்ம்ம்...


சத்தம் கேட்டிருக்காது..

நானா பேசிட்டு இருக்கேன்னு மனசுக்கு தென்பட்டுச்சு..


அலைபேசியில் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அஞ்சான் படத்திலிருந்து "காதல் ஆசை யாரை விட்டதோ" எனும் பாடலை இசைக்கச் செய்தாள்.

அந்த பாட்ட தேனு தன் இதல்களிலும் இசைந்தாள். எனக்கு அந்த பாடலை விட சுதாவின்(தேனுவின்) இதலசைவு மிகவும் பிடித்திருந்தது.. அடுத்ததாக "கூட மேல கூட வச்சு போறவளே" எனும் பாடலைத்தான் எதிர்பார்த்திருந்தேன, அப்படியே நடந்தது இரயிலின் சத்தத்தில் பாடல் மெதுவாகவே கேட்டது இம்முறை நான் அந்த பாடலை மெல்லிய குரலில் முனுமுனுத்தேன் பாடல் முடிந்து விட்டது.


நான் பாடியது பிடிக்கவில்லை போலும் ஆஃப் செய்து விட்டு கண்ணயர்ந்தாள்.


எனக்கென்னமோ தேனுவ பார்த்துட்டே இருக்கனும்னு தோனுச்சு..


இரயில் தர்மபுரி தாண்டி சென்று கொண்டிருந்தது மணி 10.30 ஐ கடந்துவிட்டது. பின் இருக்கையில் தோழிகள் அரட்டையடித்து கொண்டிருந்தனர். சிறிது தண்ணீர் அருந்திவிட்டு வாங்கி வைத்த ஆனந்த விகடனை லேசாக புரட்டினேன். சிறிது நேரத்தில் எனக்கு உச்சா வந்துவிட்டது புத்தகத்தை எனது இருக்கையில் வைத்துவிட்டு சுச்சு போயிட்டு என் இருக்கைக்கு வந்து சேர்ந்தேன்.


தேனு தூங்காமலிருந்தாள். அப்போது தான் சுதா முதல்முறையா என்கிட்ட பேசுறா..


'அந்த புக்க கொஞ்சம் தரீங்களா, படிச்சுட்டு குடுக்குறேன்'


நான் "ம்ம்ம் இந்தாங்க"


தேனுவும் அவளோட தோழியும் புத்தகத்த சுவாரஸ்யமாக புரட்டிக்கிட்டாங்க.. நான் என்னோட கண்ண புரட்டாம என் தேனுவயே பாத்துட்டு இருந்தேன்..


அச்சோ... திடீரென அவள் பார்வை என் கண்களை சந்தித்து கொண்டது. ஆமாம் உங்களை போன்றுதான் எச்சிலை முழுங்கிக் கொண்டேன்.


மீண்டும் சிறிது தண்ணீர் குடிக்க தூண்டியது என் நாசி..


தேனுவோட தோழிக்கு கண்கள்,

எண்களை சுழற்றும் பழைய மாடல் அலைபேசியைப்போல் சுழற்றியது.


ஹா!! ஹா!! ஆம்!!!அவள் என் தேனுவின் மடியில் சரிந்துவிட்டாள்.

அவ படிக்கவே விடல அடிக்கடி தேனுவ டிஸ்டர்ப் பன்னிட்டே இருந்தா.. அச்சச்சோ.. நீ படு! படு! விகடனை தேனு என்கிட்ட கொடுத்துட்டா..


அவளும் அவ மேல லேசாக சாஞ்சு தூங்குறா..


நான் புத்தகத்த திறந்து வைத்து அவளை படித்துக் கொண்டிருந்தேன்.


அதற்குள் ஈரோடு இரயில் நிலையத்தை அடைந்தது ட்ரெய்ன்..


ஆ......ட்டீ.... காப்பி... காப்பிட்ட்டீ...


சத்தம் போட்டே தேனுவ எழுப்பிட்டாங்க..


கூட்டம் அதிகமாயிடுச்சு.


அரை தூக்கத்துல இருந்த ஒரு சின்ன பாப்பாவ அவுங்க அம்மா என் மடியில உக்கார வச்சுக்கிட்டாங்க..

தேனு பேக்ல இருந்து "மேரி கோல்டு" பிஸ்கட் எடுத்துட்டு மூனு டீ வாங்கிட்டா.. சூடு தாங்காம துப்பட்டால டீ கப்ப சுத்தி புடிச்சுக்கிட்டா.. எனக்கும் 2 பிஸ்கட் குடுத்தா பக்கத்துல தூங்காமலிருந்த எல்லாத்துக்கும் அந்த பிஸ்கட் வாய்த்திருந்தது. தேனுவும் சாப்பிட்டா.. பிஸ்கட் சாப்ட்டு பாப்பா உடனே தூங்கிருச்சு..


இரயில் முன்னோக்கியும் நான் அவளை நோக்கியும் அசைந்தாடி ரயில் விரைந்தது..


மறுபடியும் தேனுவோட மடியில நண்பி படுத்துக்கிட்டா.. நானும் கொழந்தயாயி தேனுவோட மடியில சாஞ்சிருக்கலாம்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டேன். தேனுவும் கொஞ்ச நேரத்துல லேசா கண்ண மூடி தூங்கிட்டே 10 நிமிஷத்துக்கு ஒரு தடவ கண்ணு முழிச்சுக்கிட்டா.


நான் கண்ண மூடாம என்னோட தேனுவயே பாத்துட்டு தூங்க மறந்துட்டேன்..


மணி 12 ஆச்சு. பின் இருக்கையில் தேனுவுடைய தோழிகளின் அரட்டை குறையவில்லை.. பின் சீட்ல இருந்து தேனுவோட ப்ரெண்ட் ஒருத்தி வந்துட்டா பேசனும்னு.


கொஞ்ச நேரம் நிக்கிறீங்களா நாங்க பேசனும்னு என்கிட்ட தேனு கெஞ்சலா முகத்த வச்சுக்கிட்டா..


சரின்னு நான் எந்திரிச்சு தேனுவோட நண்பிய உக்கார வச்சுட்டேன்.


மெதுவா நடந்து போயி வாசல் கதவ தொறந்து நின்னுக்கிட்டேன்.


நள்ளிரவு நேரம் எங்கோ தெரியும் சின்ன சின்ன தூரத்து வெளிச்சத்தில் மொத்த கிராமமும் மின்னியது.

சிலு சிலுனு குளிர்காத்து என்ன ரொம்பவே சிலுத்துடுச்சு.. திரும்ப என்னோட இடத்துக்கு போனேன்..


அவுங்க இன்னமும் பேசிட்டு இருந்தாங்க. நான் தேனுவ பாத்தமாறி ஓரத்தில நின்னுட்டேன்.


பக்கத்துல என்னமாறி ரெண்டு பசங்க நின்னுட்டு இருந்தாங்க..


என்ன ப்ரோ அவுங்க நின்னுட்டு பேசமாட்டாங்களாமா??


நீங்க ஏன் எந்திரிச்சீங்க??


விடுங்க ப்ரோ அவங்க எனக்கு தெரிஞ்சவங்கதான்னு ஏதோ சொல்லி சமாளிச்சுட்டேன்.


தேனு கொஞ்ச நேரத்துல நண்பிய அனுப்பி வச்சுட்டா..


....சுதா வரேன்டி..


...."ரொம்ப டேங்ஸ்"ங்க


பரவாயில்ங்கங்க.. ஏன் அவுங்கள வேமா அனுப்பிட்டீங்க..?


இல்லே தூக்கம் வந்துருச்சு அதான்..


ம்ம்ம்.சரிங்க..


சிறிது நேரம் மௌனமானோம்.


என் பாக்கெட் இல்லாத டி-சர்ட்டில் கை நுழைத்தேன் இரத்தச் சிவப்பில் இதய வடிவினை ஒத்த உருவம் தென்பட்டது.. அதை அப்படியே தேனு கையில கொடுத்துடனும்.


தேனு இவ்வளவு அருகிலிருந்தும் எனக்குள் உள்ளூற ஊர்ந்தே பயணிக்கிறாள்.


இன்னும் அவ்வளவு தூரமானவனா நான்.


கொஞ்ச நேரத்துல நான் இறங்க வேண்டிய திண்டுக்கல் இரயில்வே ஸ்டேஷன் வந்துருமே..


தேனு எங்க இறங்குவான்னு தெரியலையே..??


சரி. தேனு எங்க இறங்க போறாளோ அங்கயே இறங்கிடலாம்னு நெனச்சுக்கிட்டேன்.. ட்ரெயின் ரொம்பவே வேகமா போறமாறி இருக்கு..


கொஞ்ச நேரத்துல ட்ரெயின் திண்டுக்கல் இரயில்வே ஸ்டேஷன் வந்துடுச்சு..


மணி 1.15 ஆகியிருக்கும்.


குளிர்காத்து எங்க இருந்தோ மழைய கூட்டிட்டு வந்துருச்சு.


தேனு இறங்கல..எனக்கும் இறங்குறதுக்கு மனசே வரல. என்னோட மடியில தூங்கிட்டு இருந்த பாப்பாவ அவங்க அம்மா எழுப்பிட்டு இறங்கிட்டாங்க..


ட்ரெயின் கொஞ்ச நேரத்துல கெளம்பிடுச்சு..


தேனுவுக்கு ரொம்ப நேரம் உக்காந்தே வந்ததுல சரியா தூக்கம் வரல.. அவளோட தோழி தேனு மடியில நல்லா தூங்கிட்டா..


எனக்கு தாகம் எடுத்துட்டு இருக்கு.. அவ தண்ணி குடிக்குறா..


நான் தேனுவ பாக்குறேனா..??


இல்ல தேனு என்ன பார்க்க வைக்கிறாளா..??


நான் ஏன் திண்டுக்கல்லயே இறங்கல..??


அவள் அடுத்த ஸ்டாப் மதுரையிலயும் இறங்காட்டி..? இப்படி மனசுக்குள்ள ஆயிரம் கேள்வி..??


ரெண்டு,மூனு ஊரை கடந்து கொஞ்ச நேரத்துலயே ட்ரெயின் மதுரைக்கு வந்துடுச்சு.


தேனுவும் அவளோட தோழிகளும் கொண்டு வந்த பேக் எல்லாத்தையும் எடுத்துட்டு இறங்கிட்டா.


கடைசி வரைக்கும் எதையுமே பேசிக்கல.. தேனுவோட பேர தவற மத்த எதுவுமே எனக்கு தெரியாது.


நானும் அரை மனதுடன் அங்கயே இறங்கிட்டேன்.


தேனுவும் அவ ப்ரெண்ட்ஸ்-ம் ரொம்ப வேகமா நடந்து போயிட்டாங்க..


நானும் தேனு போன வழியிலேயே நடந்து போனேன்.


அதுக்குள்ள, இரயில் நிலைய பயணச்சீட்டு பரிசோதகர் வந்து என்னோட டிக்கெட் செக் பண்ணிட்டாங்க. நான் டிக்கெட் திண்டுக்கல் வரைக்கும்தான் எடுத்திருந்தேன்..


அவங்க எதுவுமே கேக்காமா ஒரு ரூம்க்கு அழச்சுட்டு போயிட்டாங்க.. அங்க என்னமாறி மாட்டிக்கிட்ட கொஞ்ச பேரு ஏற்கனவேஉக்காந்திருந்தாங்க.. நல்லா மாட்டிக்கிட்டேன்..


அன்று சிக்கியது நான் மட்டுமல்ல. என் காதலும் கனவுகளும் தான்.


தேனு போன பாதைய பாத்துட்டே இருந்தேன்..


எனக்கு அழுகையே வந்துடுச்சு..


மணி 2.10am இருள் மேலும் கருத்திருந்தது..


அம்மா ரொம்ப எதிர்பாத்துட்டு இருப்பாங்க.. விடிஞ்சா வீட்டுக்கு வேற போகனும்..


...


இன்னும் அந்த இரவு விடியவே இல்லை..

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.