நிசப்தமான இரவு நேர அமைதியை அமானா ஷீட்டில் பட்டு தெறித்த மழைத்துளிகளின் டிப்..டிப் சத்தம் கலைத்து கொண்டிருந்தது. பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்த வாசுகி தனது ஸ்மார்ட் போனில் ரெகார்ட் செய்த ஓடியோவை கணவன் மாலனுக்கு கொடுத்தாள்.

" சொல்லி வேல இல்லங்க! வனிதாட வகுப்பு டீச்சர் அழகாகவும் ஆழமாகவும் எத்தனையோ விடயங்களை சொல்லி கொடுத்தாங்க. எங்கட காலம் பேசவே கூச்சப்பட்ட எத்தனையோ விஷயங்களை நாசுக்காக நார்மலா சொன்னாங்க. அது தான் நான் ரெகார்ட் பண்ணிட்டு வந்தேன். இப்படி ஒரு பேரன்ட்ஸ் மீட்டிங் கட்டாயம் தேவை. சில விஷயங்களை சொல்லுற டைம் எனக்கே ஒரு மாதிரியா இருந்திச்சி. ஆனா ஹசீனா டீச்சர் சின்ன வயசா இருந்தாலும் முகத்துல எந்த விதமான மாறுதலும் காட்டாம இது கட்டாயம் பேசப்பட வேண்டிய கரு என்பதை சுட்டி காட்டினாங்க." இன்று காலை நடந்த 2 ஆம் வகுப்பு ஆசிரியர்-பெற்றோர் கூட்டத்தை பற்றி பெருமையாக புகழ்ந்து கொண்டிருந்தாள் வாசுகி.

பழமையின் புதல்வியான வாசுகி கணவரின் பெயரை கூட சொல்ல தயங்குவாள். மகள் வனி அருகில் இருக்கும் போது யாராவது மாலனின் பெயரை கேட்டால் மகளிடம் சொல்ல சொல்லுவாள். வாசுகியின் அண்ணன் மனைவி பானு, சென்ற மாதம் ஜப்பானில் இருந்து வந்திருந்த போது புள்ளைட அப்பா என்று வாசுகி கூற அண்ணனின் இளைய மகன் பத்தாம் வகுப்பு படிக்கும் ரினோஜ் " ஏ அத்தை நீங்க மாமாவை புள்ளைடைப்பா என்று கூப்புடுற? எங்கட மம்மி டாடி பெயர் சொல்லி தான் கூப்புடுற என்று நக்கல் செய்தான். என்ன செய்ய இவளுக்கு கணவனின் பெயரை சொல்ல தயக்கம் இதை இவனிடம் விளக்கவா முடியும்? ஹசீனா டீச்சர் சொன்ன போல காலம் ரொம்ப முன்னேறி தான். புள்ளைங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல நாங்க வகுப்புக்கு போகணும். ஆசிரியர் ஹசீனா

மேற்கோள் காட்டி கூட்டத்தை துவங்கும் போதே வாசுகிக்கு புரிந்து விட்டது. கூட்டத்தை பற்றி கணவன் கேட்கும் போது இவளால் முழுவதும் சொல்ல முடியாமல் போகும் . ஆகவே சென்ற மாதம் ஜப்பானில் இருந்து அண்ணன் இவளுக்கு பரிசளித்த ஐ போனை உபயோகித்து பெரும் பாட்டில் ரெகார்டரை தேடி இவள் ரெகார்ட் செய்யும் போது கூட்டத்தில் 10 நிமிடங்கள் கரைந்து போயின. வாசுகி எப்பொழுதும் வியப்படையும் விடயம் தான் இவளுடைய சகோதரியுடைய மகன் மாசிப் அவனும் ரினோஜ் வயது தான். இவளுடைய சகோதரியின் ஸ்மார்ட் போனில் எப்படி எப்படியெல்லாம் டச் பண்ணி பேசுறான் வீடியோ பாக்குறான் கேம் விளையாடுறான். பாவம் இவள் சகோதரி, அவளுக்கு கோல் வந்தால் பச்சை பட்டன் அழுத்தி பேசி விட்டு வைக்கயில் சிவப்பு பட்டனை அழுத்துவது மட்டும் தான் தெரியும். அவள் மகன் எவ்வளவு சொல்லி கொடுத்தாலும் அவளுக்கு புரிவதில்லை. நல்ல காலம் வாசுகியிக்கு இப்பொழுது போனில் ரெகார்ட் பண்ணும் அளவுக்கு தெரியும் அதுவும் மாசிப் புண்ணியம் தான். ஐ போன் கைக்கு கிடைத்தவுடன் இவளுக்கும் தலை கால் புரியவில்லை. மாசிப் தான் எல்லாம் சொல்லி கொடுத்தான். ஒரு மாதத்தில் இவளுக்கு மெசேஜ் அடிக்கவும் பழக்கி விட்டான். இன்று கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய விசயங்கள்ள ஒண்டு இந்த போன் தான் அதுவும் ஸ்மார்ட் போன். எவ்வளவு அழகா ஹசீனா டீச்சர் சொன்ன, " அம்மா அப்பாக்கு தெரியாத விடயம் எல்லாம் ஸ்மார்ட் போன் கைக்கு கிடைச்சா புள்ளைங்க படிச்சிப்பாங்க. இன்னைக்கு நெறய அம்மா அப்பா சொல்றதே ,"எனக்கு போன பத்தி ஒண்டும் தெரியா! என் புள்ளாண்டா போன தல கீழ பாவிப்பான்".. இது பெருமை பட வேண்டிய விடயமில்ல, கவலை பட வேண்டிய விஷயம். டீச்சர் கூறியது உண்மை தான் காலம் கெட்டு போயிருக்கு, உலகமே கைக்குள்ள அதுவும் போனுக்குள்ள அடங்கி இருக்கு.

வாசுகி ஸ்மார்ட் போனை மாலனிடம் கொடுத்து விட்டு எப்படி ரெகார்டரை ஒன் செய்ய வேண்டும் என்பதயும் கூறிவிட்டு சமயலறைக்குள் நுழைந்தாள். அரை மணி நேரத்தில் நடந்த கூட்டத்துல நடந்த விஷயங்களை மாலன் கேர்க்குறதுக்குள்ள வேலைகளை முடிச்சிர ஏலும். மாலன் ஒரு ஆட்டோ சாரதி. தரம் 08 வரை கல்வி பயின்றவன். வாசுகி சாதாரண தர பரீட்சையில் 3 பாடம் சித்தி பெற்றவள். அதனால் மாலனை விட வாசுகிக்கு சில விடயங்கள் தெரியும் என்பது மாலனின் கணிப்பு.. வாசுகி சமையலறை வேலைக்கு நடுவே ஹசீனா டீச்சர் கூறியவைகளை அசை போட்டாள். " ஆம்புல புள்ள, பொம்புள புள்ள எந்த புள்ளையா இருந்தாலும் பாடசாலைக்கு அனுப்புற வாகனத்தை பத்தி வாகன சாரதி பற்றி முழு விபரமும் தெரிஞ்சி வெச்சிருக்கணும். எத்தனையோ சிறுவர் துஷ்பிரயோகங்கள் வாகன சாரதி மாறால தான் நடக்குது. இந்த விடயத்துல றிஸ்மினாவுக்கு 100 வீதம் திருப்தி. வனிதாவ கூட்டிட்டு போரதும் வாரதும் மாலன் தான். அதனால பயப்புடை தேவையில்லை.. சட்டி பானைகளில் மீதமிருந்த கறிகளை சேகரித்து குளிர் சாதன பெட்டியில் வைத்தாள். நாளைக்கு காலைல கடலை அவிச்சா நல்லம். " எந்த நாளும் பாணும் பணிசும் சாப்பிட்டா வளர்ற பிள்ளைகளோடு நோய்களும் தன்னால வளரும் என்று டீச்சர் சொல்ற டைம் டீச்சர் இவளையே கேள்வி கேட்பது போல இருந்தது. வனிட விருப்பமான சாப்பாடே கொக்கோ பணிஸ் தான். இனிமே கடலை,கவிபி,பயறு கட்டாயமா கிழமைக்கு ஒரு முறையாவது கொடுக்கணும் என்று எண்ணியவாறே கடலை ஒரு கொத்து எடுத்து ஊறப்போட்டாள். கடலையில் உள்ள கருப்பு கடலைகளை வேறாக்கி விட்டு சமையலுக்கு தேவையான கறிகளை சரி பார்த்தாள். . இவளுக்கு மீட்டிங்ல புரியாத ஒரு விஷயமே அந்த " குட் டச் பேட் டச்" தான். எந்த டச்சயம் இவளுக்கு யாரும் சொல்லி கொடுக்க வில்லை. ஆனால் ஹசீனா டீச்சர் எவ்வளவு படிச்சிருப்பா என்று அப்பாவியாய் சிந்தித்தாள். நல்ல காலம் ஹசீனா டீச்சர் வனிட வகுப்பு டீச்சரை வந்தது. கூட்டத்தில் பலர் கூறியதும் அதுதான். " சின்ன வயசு என்றாலும் ஆச்சி அம்மா போல பேசுற" என்று கலா சொல்லும் போது தான் ஹசீனா டீச்சரின் பக்கத்து வீட்டு நமா பெருமையோடு, " ஓ ஹசீனா தங்கச்சிக்கு தெரியாத கைவேலையே கிடையாது. எங்கட மகள் தாராவுக்கு நெறய அறிவுரை கூறுவா. நல்ல குணம்" என்றதும் வாசுகிக்கு எப்படியாவது நமாவிடம் " குட் டச் பேட் டச்" பற்றி வினவ வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். ஆனால் கூட்டம் முடிவடைய முன்னமே தாராவும் நமாவும் அவசர வேலையாக சென்று விட்டார்கள். நல்ல காலம் தாராட அம்மட நம்பர் இருக்குது வீட்டுக்கு சென்று பேசி கேட்போம் என்றிருந்தவளுக்கு வீட்டிற்கு வந்தவுடன் அவள் ஸ்மார்ட் போன் பேட்டரி லோ என்று பாட்டு பாடியதும் அதை சார்ஜில் போட்டாள். வீட்டு வேலைக்கிடையில்

" குட் டச் பேட் டச்" மறந்து போனது. சமையலறை வேலைகளை முடித்து கொண்டு உறங்க செல்லவும் மாலன் ஓடியோ கேட்டு முடியவும் நேரம் சரியாக இருந்தது.

" ம்ம்ம் டீச்சர் சொல்றத பாத்தா பயமாதான் இருக்கு. எப்பிடி எங்கட பிள்ளைகளை பாதுகாக்க போறமோ தெரியா. இனிமே கண்ணும் கருத்தும் இருக்கணும். ஹசீனா டீச்சர் சொல்ற மாதிரி கட்டாயமா நியூஸ் பேப்பர் வாங்கணும். அது சரி வாசுகி அது என்ன " குட் டச் பேட் டச்?" மாலனின் கேள்விக்கு சிறிது நேரம் யோசித்த வாசுகி

" எனக்கும் அது வெளங்கள்ல புல்லட அப்பா. நாளைக்கி தாராடா அம்மாட்ட கேக்கணும். "

" கட்டாயம் கேட்டு பாருங்க வாசுகி. மகளிடம் நாளைக்கு டீச்சர் கேட்டு இவக்கு தெரியாட்டி வெக்கம். டீச்சரும் எங்களை பத்தி என்ன நெனப்பா?" மாலனும் வாசுகியும் இதே சிந்தனையில் கண் உறங்கினர்.

வாசுகி காலையில் எழுந்து ஊறப்போட்ட கடலையை அவித்து தேங்காய் துண்டு, சின்ன வெங்காயம், கடுகு, துண்டு மிளகாய் போட்டு தாளித்து வனிதாவின் லஞ்ச் பாக்ஸில் அடைத்தாள். வழக்கத்துக்கு மாறாக கடலையை கண்ட வனிதா " என்ன அம்மா இண்டைக்கு கொக்கா பணிஸ் இல்லையா? "

" எந்த நாளும் பணிஸ் திண்ட நல்லம் இல்ல மா. கடலை சாப்புட்டா அவசரமா வளற ஏழும்." என்று மகளை உற்சாகப்படுத்தினாள்.

" ஹா அம்மா மறந்துட்டேன். "குட் டச் பேட் டச்"" பத்தி கேக்க சொன்னாங்க மகள் வினவ, "பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியாட்டி பிறகு சொல்றதா சொல்லுங்க. பொய் சொல்ல வானம்" ஹசீனா டீச்சர் தலையில் மணி அடிப்படை போல் சொன்னது நினைவு வர, " மகள் நீங்க ஸ்கூல் போய் வாங்க, அம்மப அதுக்கு பொறகு சொல்லி தரேன்" என்று சமாளித்து மகளையும் கணவனையும் அனுப்பிய மறு கணம் தாராவின் அம்மாவிற்கு அழைப்பெடுத்தாள். நேற்றைய கூட்டத்தை பற்றி சிறிது நேரம் அலசி விட்டு " குட் டச் பேட் டச்" பற்றி கேட்டு தெரிந்து கொண்டாள். நமாவுக்கும் ஹசீனா டீச்சர் சொல்லி தந்து தானம் தெரியும். நமா சொல்ல சொல்ல வாசுகி இவ்வளவு மடமையில் இருந்திருக்கிறாள் என்பதை நினைக்கையில் வெக்கமாக இருந்தது. பக்கத்து வீட்டு ஆமி அங்கிள் மகளை ஆசையுடன் மடியில் வைத்து கொஞ்சுவதும் கூடாதாம். உண்மை தான் வயசு மனுஷர், மனைவியும் இல்ல பாவமே என்று மகளை விளையாட அனுப்பினாள் இனிமேல் கவனமாக இருக்க வேண்டும். பெண் பிள்ளையின் தாய் எனும் வகையில் வாசுகி பெரிதும் கலங்கினாள்.தலை வின் வின் என்று வலி எடுக்க பெனடாலை விழுங்கி விட்டு இன்று தயக்கம் இன்றி மகளுக்கு குட் டச் பேட் டச் பற்றி சொல்லி கொடுக்க வேண்டும் என்று மகளின் வரவுக்காக காத்திருந்தாள்.

வனிதா வந்ததும் அவளுக்கு ஆடை மாற்றி சாப்பாடு ஊற்றி விட்டு மெதுவாக மகளை அரவணைத்து பாடசாலையில் நடந்தவைகளை கேட்கும் போது தன் பார்பி பொம்மையின் தலை வாரி கொண்டிருந்தவள் சிடுப்பென, " அம்மா இன்னக்கி டீச்சர் குட் டச் பேட் டச் பத்தி சொன்னாங்க. உங்களுக்கு முன்னமே டீச்சர் சொல்லி தந்துட்டாங்க என்று விழி விரித்தவள் " அம்மா நீங்க, அப்பா எல்லாரும் தொடுறது குட் டச்சாம். பக்கத்து வீட்டு ஆமி தாத்தா, போன கிழமை வந்த ரினோஜ் மச்சான் தொடுறது பேட் டச்சாம். இனிமே நான் அவங்க கூட பேச மாட்டேன் " புரியா மழலையில் மகள் சொல்லி விட்டு பொம்மையின் தலையை பிண்ணினாள். புரிந்தும் புரியாமலும் வாசுகி சிலையாகினாள்.

முற்றும்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.