ஙே.... By..தர்ஷிணிமாயா

அளவுக்கு மீறி எதையாவது காதலிக்க முடியுமா என்ன ? எல்லாவற்றுக்கும் விலை உண்டு. ஆனால் காதலுக்கு...? காதலிப்பது நம் தனிப்பட்ட உரிமை. அதற்காகக் காதலிப்பவர் நம் உடமைப் பொருளாக முடியுமா என்ன ?

அப்படித்தான் சாதனா மீது நான் கொண்ட,பிரபஞ்ச விரிவுக் காதலும்; என்னுள் சாதனாவின் மேல் கொண்ட காதல் நாளுக்கு நாள் வளர்ந்து சாதனை புரிந்து கொண்டிருக்க... அவள் என்னவள் என்றே நம்ப ஆரம்பித்து விட்டேன்.

" ஏய்...நீ என்னவள்டி..."

" நீ எனக்கு மட்டும்தான் " இதில்தான் ஆரம்பித்தது சிக்கல்... அவள் வேறு யாருடன் பேசினாலும் எனக்குக் கோபமும் படபடப்பும் வந்தது.

முக்கியமாக, அவள் கணவருடன்... 'ஙே ' என்று புருவம் உயர்த்துபவர்களுக்கு... நான் கவிஞன். கதை சொல்லுபவன். ஒரு சமுதாயத்தின் கண்ணாடி. கண்ணாடிக்கு ரசமாய் இருப்பவர்கள் , பெண்கள்/ ஆண்கள், சமுதாயம் etc...அல்லவா ? நல்ல கண்ணாடியாய் இருக்க, என் பின்னே பல மனிதர்களை ரசமாக்கிக் கொள்கிறேன். நிறையக் கதைகள், கவிதைகள் கிடைக்கும். ஏதோ என்னால் முடிந்த உதவி. சரி கதையை விட்டு எங்கோ போய்விட்டேனே.

கதையைப் பார்ப்போம்.

எங்க வுட்டேன், ஆங்... சாதனா அவள் கணவருடன் பேசுவதைக்கூட என்னால் தாங்க முடியவில்லை. எதிர் வீட்டில் அவள்; நான் எழுதும் ஜன்னல் அவள் வீட்டை அப்பட்டமாகக் காண்பிக்கிறது.

நான் வந்த புதிதில், அவள் வீட்டில் ஆங்காங்கே அறை வாசல்களில் திரைச்சீலைகள் அசைந்து கொண்டு மறைத்துக்கொண்டுதான் இருந்தன. வீட்டின் நிகழ்வுகளை....

என் பார்வையின் வசீகரமோ, உறுத்தலோ, சில நாட்களில் அந்த வீடு முற்றிலும் திரதர்ஷிணிமாயா களைக் கழற்றி விட்டு, எனக்கு வசதியாய்த் தன்னை, தன்னுள் நடப்பதைக் காண்பித்தது. இரவு நேரங்களில் மின்சார பல்பு வேறு... வெளிச்சம் போட்டு...

இரண்டு கவிதை நூல்களும், மூன்று சிறுகதைத் தொகுப்பும் போட்டு விட்டேன், எல்லாவற்றின் ஆரம்பப்புள்ளியும், முற்றுப்புள்ளியும் சாதனாதான். புரட்சிகரமான இளம் எழுத்தாளனாகப் பெயரும் வாங்கி விட்டேன். அது சரி, இப்போ என்னாச்சு....?

நான் உற்சாகமாக இருந்தால் சாதனா சோகமாக இருப்பதாக எழுதுவேன்... மளமளவெனக் கற்பனை மின்னலாய்க் கிளை விட ,மற்றோர் பேப்பரை எடுத்து எழுத ஆரம்பித்தேன்.

சாதனா அவள் வீட்டு ஹாலில் சோகமாக அமர்ந்திருப்பது தெரிகிறது. ஏன் ? எழுந்து மும்முரத்தில் , கொஞ்ச நேரம், என்ன நடந்தது எனக் கவனிக்கத் தவறி விட்டேன் ? உற்றுப் பார்த்தேன்.

அவள் கணவன் மற்றோர் அறையிலிருந்து வருகிறான். அவளோடு ஏதோ கோபமாகக் கத்துவதுபோலத் தெரிகிறது. சாதனாவும் எழுந்து நின்றாள். கெஞ்சுவது போன்ற அபிநயத்துடன் ஏதோ பேசுகிறாள். கணவன் மறுக்கிறான். கீழே குனிந்து எதையோ எடுத்தான். சூட்கேஸ் ? அவள் கைகளில் திணித்து அவளைப்பிடித்து இழுத்து வந்து வாசலுக்கு வெளியே தள்ளினான். பின் என் வீட்டைக் காட்டி ஏதோ கத்துகிறான். டமால் எனக் கதவை ஓங்கிச் சாத்த... சாதனா கண்களைத் துடைத்துக் கொண்டு பெட்டியைத் தூக்கிக்கொண்டு என் வீட்டை நோக்கி வர ஆரம்பித்தாள்.

சரியாய் அதே நேரம் , " ஏங்க இந்தாங்க காஃபி" என்றபடி என் மனைவி சாதனா, காஃபி டம்ளரை என் முன்னே நீட்டவும், பொருட்களை ஏற்றி வந்த டெம்போ எதிர்வீட்டில் நின்றது.

" புஜ்ஜி குட்டி " என்றவாறு காஃபி டம்ளரை வாங்கியவன், எதிர் வீட்டைப் பார்த்தபடியே இருந்தேன். பல வருடங்களாகப் பூட்டிக் கிடக்கும் அந்த வீட்டில்....

" ஏங்க , நம்ம எதிர்த்த வீட்டுக்கு பிரபல நாவலாசிரியர் சந்திரன் குடிவர்றாராம். போறப் போக்குல இந்தத் தெருவே எழுத்தாளர் தெருவாயிடும் போலிருக்கு" என்றாள் என் அருமை மனைவி சாதனா, வாசலில்  அசைந்த திரைச்சீலையைத் துவைக்க கழற்றியபடி....

சில நாட்களில் எதிர் வீட்டு ஜன்னல் திறக்கப்பட்ட பைஜாமா சகிதம், ' அவர் ' - அவர் வீட்டு அந்த ஜன்னல் வழியே என் வீட்டைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

தர்ஷிணிமாயா🌹

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.