எங்க ஊர் பேரு இடைகால். தென்காசி பக்கம் ஒரு சின்ன கிராமம். ஒரு 15-20 வருசம் இருக்கும். மார்கழி மாதம் பிறந்தாப் போதும் ஒரே கொண்டாட்டம் தான் என்னை மாதிரி 10-15 வயசு பசங்களுக்கு. காரணம் பஜனை. வீட்டில அலாரம் அடிக்காமலே காலைல அஞ்சு மணிக்கு அம்மா எழுப்பி விடுவாங்க. சுடுதண்ணில குளிச்சா கெத்தா இருக்காதுன்னு சொல்லிட்டு குழாய்த்தண்ணீ பிடிச்சு குளிச்சிட்டு பட்டை குங்குமம் போட்டு ஒரே ஒரு வேட்டி மட்டும் கட்டிட்டு எல்லா பசங்களையும் கூப்பிட்டுக்கிட்டு கோவில்ல இருந்து ஏழு எட்டு தெரு போவோம். என்னதான் கெத்தா இருந்தாலும், கூட படிக்கிற பொண்ணுங்க வீட்டைத்தாண்டும் போது மட்டும் மேல் சட்டை இல்லாத ஒரு வெட்கம் வரும் பாருங்க!!! அது தாங்க ஒரு அழகிய நிலாக் காலம்!!! அப்போ மட்டும் கூடவே பாட்டுல சுருதியும் கொஞ்சம் சேர்ந்து வரும்.

சிவபெருமான்ட்ட இருந்து ஆரம்பிச்சு பிள்ளையார் பெருமாள் வழியா சரஸ்வதிட்ட வந்து சரணடையும் எங்க துதிப்பாடல். இதே வழக்கம் தான் ஒருமாசம். ஆனாலும் ஒரு நாளும் ஒரு இடத்திலயும் சோர்வு எங்கயும் இருக்காது. முப்பது நாள் லீவு போடாம போனா ஒரு Reynolds pen பரிசு. அதுதான் எங்க டார்கட். அரையாண்டு பரீட்சை, பரீட்சை லீவுக்கு கூட பஜனைக்கு லீவு போட மாட்டோம். ராத்திரினா கிறிஸ்துமஸ் பீலிங். தெருவுல ஒன்னோ இரண்டோ வீட்டில ஓட்டை போட்டு லைட்டு போட்டு நட்சத்திரம் வைச்சிருப்பாங்க. அதை அந்த வீட்டுக்காரங்களுக்கு தெரியாம சுத்தி விட்டு விளையாடுவோம். அவங்க வந்தா ஓடிடுவோம். அதுதான் எங்களுக்கு கிறிஸ்துமஸ்.

புத்தாண்டு வந்தா போதும். நைட் ரோட்ல ஹேப்பி நியூ இயர்-னு எழுதி வச்சு போர வார எல்லாத்துக்கும் வாழ்த்து சொல்லி கத்துவோம். "இளமை இதோ இதோ " இந்த ஒரு பாட்டு இல்லாம எந்த வருசமும் பொறக்காது (இன்னைக்கு வரைக்கும் இது மட்டும் தான் அப்டியே இருக்கு). இரண்டு வாரத்துல பொங்கல் வந்துரும். அப்ப தான் களைகட்டும் இந்த பொங்கல் வாழ்த்து அட்டை வியாபாரம். கலர் கலரா இயற்கை, உழவு , மாடு அதுல பார்க்கலாம். அப்புறம் கொஞ்ச நாள்ல ஹீரோ போட்டோ வர ஆரம்பிச்சுச்சு . குடும்பத்தில இருக்கிற எல்லா சொந்த்துக்கும் நட்புக்கும் பாத்து பாத்து அட்டை வாங்கி அனுப்புவோம். அந்த அட்டைக்கு பதில் அட்டை வந்தா வர்ற சந்தோசம் இருக்கே அதைச் சொல்லி மாளாது. என் வீட்டில இன்னும் எங்க அப்பாவோட மிலிட்டிரி பொட்டிக்குள்ள அது பத்திரமா இருக்கு.

நான் விலாசம் சரியா போட்டு ஆனா To and From தலைப்பு மாத்தி போட்டு அனுப்பினாலும் எங்க ஊர் தபால்காரர் அத பத்திரமா சேத்திருக்கார். அடுத்த தடவை ரோட்டுல பார்க்குறப்ப மருமவனே அதெ திருத்தி எழுதுங்கன்னு சொல்லிட்டு போவார். பொங்கலுக்கு ஒன்னு இரண்டு வாரத்துக்கு முன்னாடியே வீட்டில வெள்ளை அடிக்க ஆரம்பிச்சிடுவோம். அப்போது தான் இருக்கு கூத்து. வீட்டைத் தாண்டி போற வார ஒவ்வொரு ஆளும் வீட்டுக்காரங்கள பாத்து என்ன பொங்கல்லாம் வந்தாச்சு போலன்னு ஒரு வார்த்தை கேக்காம வீட்டைத் தாண்ட மாட்டாங்க. அதுக்கு வீட்டுக்காரங்க பதில் சொல்லிட்டு உங்களுக்கு வந்தாச்சான்னு ஒரு கேள்வி கண்டிப்பா கேப்பாங்க..அவங்க உடனே இந்தா வந்துட்டே இருக்குல்லன்னு நக்கல் பதில் வரும் அவங்கிட்ட இருந்து . அதுலயும் மாமன் மச்சானா இருந்தா போதும். இந்த அபியும் நானும் மனோபாலா-பிரகாஷ்ராஜ் கேள்வி பதில்தான். கலர் கோலப்பொடி, எல்லா வகை காய்கறின்னு சந்தை மார்கழி கடைசி ரெண்டு நாள்ல சும்மா களைகட்டும்.

அன்னைக்கு தான் பசங்க நாங்க எல்லாரும் சேர்ந்து தோப்பு வரப்புல போய் மா இலை, வேப்ப இலை, கண்ணுப்புலி இலைன்னு தெருவுல உள்ள எல்லாத்துக்கும் பறிச்சுட்டு வருவோம். பாகப் பிரிவினை கரெக்ட்டா நடக்கும் எல்லா வீட்டுக்கும். நாலு அஞ்சு வருசத்துக்கு ஒருவாட்டிதான் மணல் அடுப்பு செய்வோம்.அந்த அடுப்புக்கு பொங்கல் அன்னைக்கு மட்டும் தான் டூட்டி. மத்த நாள் அதுக்கு பரண்ல ரெஸ்ட். செம்மண் காவி , வெளுத்த சுண்ணாம்புன்னு கலர் கலரா அடிச்சு ஜம்முன்னு ரெடி ஆகும். வீட்டுல உள்ள பெண்பிள்ளைங்க ராத்திரி ஃபுல்லா உக்காந்து கலர் கோலப் பொடி போடுவாங்க. மறுநாள் காலைல யார் வீட்டு வாசல் ஜொலிக்குங்குறதுதான் கிக்கே. நாலு மணிக்கு எந்திச்சு அம்மா கூட உதவி பண்ணுவோம். யார் வீட்டுல முதல்ல பொங்கல் பொங்குங்கிறதுதான் போட்டி.

பொங்குனதும் கதிரவனுக்குப் படைச்சது , காக்காவுக்கு படைச்சது போக மீதம் நமக்கு. அது முடிச்சு கரும்பு பனங்கிழங்கு . எல்லா நட்பையும் வீட்டுக்கு கூப்பிட்டு எல்லார் வீட்டிலயும் போதுங்கர அளவுக்கு சாப்பிடுவோம். 11 மணிக்கு ஆரம்பிக்கும் எங்க ஊர் பொங்கல் விளையாட்டுப் போட்டி. ஒரு சாதி நடத்தினாலும் ஊரில் உள்ள ஒட்டு மொத்த சாதிசனமும் கூடி பங்கேற்கும். மெயின் ரோட்டில பாதி விளையாட்டு நடந்தாக்கூட எங்க ஊர்ப் பசங்க எல்லாரும் டிராபிக் கண்ட்ரோல் பக்காவா பண்ணுவாங்க. ஜெயிக்கிற டிபன் பாக்ஸ் முக்கியமல்ல ஆனா ஜெயிக்கனும் அதான் மேட்டரு.

அடுத்தநாள் மாட்டுப்பொங்கல். எங்க ஊர்ல ஜல்லிக்கட்டுலாம் இல்ல. ஆனா மாடு வச்சுருக்க ஒவ்வொரு வீடும் அவங்க மாடும் தான் அன்னைக்கு அழகு. வீடு தொழுவம் எல்லாத்தையும் கழுவி மாட்டைக் குளிப்பாட்டி அன்னைக்கு தான் மாடு வச்சுருக்கவங்க வீட்ல பொங்கல். அது மாட்டோட ஹோலி பண்டிகை. அவ்வளவு அலங்காரம் கொம்புலயும் உடம்புலயும். அதுலாம் ஊரே கூடி சந்தோசமா இருந்த நாட்கள். அத இப்போதெல்லாம் நெனச்சு மட்டும் தான் பார்க்க முடியுது.

காலேஜ், வேலைன்னு ஊர விட்டு தள்ளிப் போய் சேந்தோம். பஜனை, கிறிஸ்துமஸ் அப்படின்னு ஒன்னு ஒன்னா கட் ஆச்சு. பொங்கல் வர்ற 2-3 மாசம் முன்னாடியே நாள் பாத்து அட்வான்ஸ் புக்கிங்ல IRCTC இல்லேன்னா private bus னு டிக்கெட் போட்டோம். அதும் கிடைக்கலன்னா unreserved ticket இல்ல எப்படியாச்சும் ஊருக்குப்போய்டுவோம். அங்க போய் பார்த்தா வீட்டுல பொங்கல் வச்சி சாமி கும்புட்டு இருப்பாங்க. அப்புறம் குளிச்சு முடிச்சு சாப்பிட்டு பார்த்தா பொங்கல் விளையாட்டு முடிஞ்சிருக்கும். அப்புறம் என்ன பண்ண! ஏதாச்சும் படத்தை தியேட்டர்ல போய் பாத்துட்டு வந்தா பொங்கல் முடிஞ்சுருது. மாட்டுப் பொங்கல் கொண்டாட இப்ப மாடே இல்ல நெறய வீட்டுல. என்ன பன்ன டீவில ஜல்லிக்கட்டு பாத்தோம் இப்போ அதையும் தடை பண்ணியாச்சு. காணும் பொங்கலுக்கு லீவு கிடையாது. ஒருவேளை இருந்தாலும் அன்னைக்கு நைட் ரிட்டர்ன் டிக்கெட் கிடையாது. அதுக்கு பயந்தே மாட்டுப் பொங்கல் அன்னைக்கே சென்னைக்கு திருப்பி ஓடிடுவோம். வேலைக்கு போனதுக்கு அப்புறம் மூணு நாள் லீவு ரெண்டு நாள் ஆச்சு . இல்லன்னா ஒரு நாள், இல்லன்னா அந்த ஒரு நாள் இல்லாம கூட போயிருக்கு.

ஊர் பெருசாயிடுச்சு. எல்லாரும் வெளியூர் வெளிநாடுனு வந்தாச்சு. எல்லா வயக்காடும் ரியல் எஸ்டேட் போர்டு தாங்கி நிக்குது. காலேஜ்ல படிக்கிறப்போ கூட வருசத்துக்கு ஒரு தடவ ஊருக்கு போய்ட்டு வந்தோம். அப்போ இருந்த நினைவுகள் கூட கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிட்டு வருது . விவசாயம் கம்மி தண்ணீ இல்ல ஆடு மாடு இல்ல. ஏதோ பேருக்கு ஒரு பண்டிகைனு போயிட்டுருக்கு. நெறய வீட்ல காஸ் ஸ்டவ்-ல தான் இப்போ பொங்கல். கதிரவன் திசை கிழக்கு பாத்து விட வேண்டிய பொங்கல் கிச்சன்-ல இருக்க எடத்துல இருந்தே ஸ்டவ்-ல பொங்குது. இன்னும் கொஞ்ச நாள்ல அந்த பண்டிகையும் இருக்காது போல.பொங்கலுக்கு ஊருக்குப் போய் இப்போதைக்கு மூணு வருஷம் ஆச்சு.

இப்போ இத எழுதுறப்போ கூட பொங்கலுக்கு ஊருக்கு போய்ட்டு இருக்க வேண்டிய நான், இன்னைக்கு martin luther king day-க்கு flight-ல US-ல ஒரு ஊர்ல இருந்து இன்னோரு ஊருக்குப் போய்ட்டு இருக்கேன்!!!

பொங்கல்- (இயற்கை + நீர் + விவசாயம் + கால்நடை +பண்பாடு ). ஒன்னு ஒன்னா அழிஞ்சிட்டு வருது. #preserveNature #saveCulture . எல்லாத்தையும் தாங்கி நிக்கிறது கடந்து வந்த நினைவுகள் மட்டும் தான்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.