"இன்னைக்கு வீட்டுக்கு தங்கச்சி பாப்பா வரப்போகுது டெட்டி" என்று தனது டெட்டி பியர் பொம்மையோடு பேசிக்கொண்டிருந்தான் ஐந்து வயது நிரம்பிய நந்து.

"அப்பா, அம்மாவும் பாப்பாவும் எப்போ வருவாங்க" என்று நந்து தன் தந்தையிடம் கேட்டான்.

"இதோட நீ நூறுதடவைக்கு மேல கேட்ருப்பா" என்று கோபமாக கத்தினான் கதிரேசன்.

கதிரேசன் வடிவமைப்பு பொறியாளராக ஒரு தனியார் நிறுவனத்தில் முப்பதாயிரம் சம்பளத்தில் வேலை செய்பவன்.

"என்னடா இவ்ளோ நேரம் ஆகியும் மருமகளை காணும் ஒரு போன் போட்டு கேளேன், உங்க மாமனாருக்கு" என்றாள் கதிரேசனின் அம்மா செல்வி.

"அம்மா இப்போ தான் கேட்டான் அரை மணி நேரத்துல வந்துருவாங்க" என்றான் கதிரேசன்.

"டெட்டி அம்மா இன்னும் அரைமணி நேரத்துல வந்துருவாங்க, அதுவரை நாம விளையாடலாமா"என்று கூறிக்கொண்டு தனது பொம்மையோடு வீட்டிற்குள் நுழைந்தான் நந்து.

பொம்மையோடு பேசி விளையாடிய படியே தூங்கி போனான் நந்து.

திடீரென அழுகுரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான் நந்து. வீடே பரபரப்பாய் இருந்தது.

"யார் இப்படி அழுறாங்க அப்பா" என்று நந்து கேட்டுக்கொன்டே எழுந்து வந்தான்.

"உன் தங்கச்சி பாப்பாதான்" என்றான் கதிரேசன்

"ஏன் பாப்பா அழுறா?" என்றான் நந்து அப்பாவியாக

"போடா அங்குட்டு இவன் வேற நொய் நொய்ன்னுட்டு"என்று அதட்டினான் கதிரேசன்.

இதற்க்கு மேல் எதாவது கேட்டால் அடி கிடைக்கும் என்றெண்ணி தன்னுடைய அம்மாவிடம் போனான்

"அம்மா பாப்பா ஏன் அழுவுறா ?" என்றான் நந்து.

"அத்தை இவனை அங்குட்டு கூட்டிட்டு போய் தூங்க வைங்க" என்று சத்தமாக கத்தினாள் நந்துவின் அம்மா.

"அம்மா ஏன் கோபமா இருக்கீங்க " என்றான் நந்து.

"அம்மாக்கு இன்னைக்கு நிறைய வேலை இருக்கு நீ போய் பாட்டியோட தூங்கு என்னடா செல்லம்" என்றாள் நந்துவின் அம்மா.

"பாப்பாவை நான் தூக்கட்ட" என்று குழந்தையை தூக்க போனான் நந்து.

அப்பொழுது நந்துவை தூக்கிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே போனான் கதிரேசன்.

"அம்மா நந்துவை பாத்துக்கோங்க" என்று தன் தாயிடம் ஒப்படைத்தான் கதிரேசன்.

"பாட்டி பாப்பா ஏன் அழுதுகிட்டே இருக்குது"என்றான் நந்து

"பாப்பா இவ்ளோ நாள் அம்மா வயித்துக்குள்ள இருந்தால அதுனால இப்போ வெளில குளுருது அதனால தான் அழுகுறா நீ இப்போ தூங்கு" என்று நந்துவை தூங்க வைத்தார் கதிரேசனின் தாய்.

காலையில் எழுந்த நந்து அம்மாவை பார்க்க ஆசையாக ஓடினான். வீடே பரபரப்பாக இருந்தது.

"அம்மா .......அப்பா .........பாட்டி........தாத்தா......."என்று எல்லோரையும் கூப்பிட்டான் நந்து. யாரும் நந்துவை கண்டுகொள்ளவில்லை. எல்லோரும் பாப்பாவை சுற்றியே இருந்தனர்.

தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று சோகமாக தனது டேட்டியிடம் மீண்டும் போனான் நந்து.

"டெட்டி யாரும் என்கூட பேசமாட்டேங்குறாங்க.......எல்லாரும் பாப்பா கூடவே இருக்காங்க......" என்று சோகமாக பேசிக்கொண்டிருந்தான் நந்து.

"நந்து ஸ்கூலுக்கு கிளம்பு" என்று கதிரேசன் நந்துவை தூக்கிக்கொண்டு குளிக்கவைத்து பள்ளிக்கூடத்திற்கு கொண்டுபோய் விட்டான்.

பள்ளியில் நந்து சோகமாக இருந்தான். அப்பொழுது கணித ஆசிரியை சகுந்தலா வகுப்பறைக்குள் கையில் பிரம்போடு நுழைந்தாள்.

சகுந்தலாவை பார்த்ததும் நந்துவிற்கு பயம் பிடித்தது.

"நந்து ஹோம் ஒர்க் பண்ணிட்டயா?" என்று அதட்டலாக கேட்டாள் சகுந்தலா

"இல்லை மிஸ்" என்று சொன்னான் நந்து.

"ஓஹோ அதான் இன்னைக்கு சோகமா இருக்கியா நீ" என்று கேட்டாள் சகுந்தலா

"......................"எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றான் நந்து.

"யாரெல்லாம் ஹோம் ஒர்க் பண்ணல எல்லாரும் கிளாசை விட்டு வெளிய போங்க” என்று கத்தினாள் சகுந்தலா.

அப்பொழுது நந்துவோடு மேலும் சில சிறுவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே சென்றனர்.

"ஓஹோ நந்து, ரமேஷ், ராஜா மூணுபேரும் ஜோடியா ஹோம் ஒர்க் பண்ணலையா நாளைக்கு உங்க அப்பாவை கூட்டிட்டுதான் ஸ்கூலுக்கு வரணும்” என்று அதட்டி வெளியே அனுப்பினாள்.


வகுப்பறைக்கு வெளியே......

"ரமேஷ் எங்க வீட்ல யாரும் என் கூட பேசமாட்டேங்குறாங்க" என்றான் நந்து

"ஏன் டா?" என்றான் நந்துவின் நண்பன் ரமேஷ்

"பாப்பா கூடவே எல்லாரும் இருக்காங்க" என்றான் நந்து

"இப்படி தான் எங்க வீட்ல என்னோட பாப்பா வரும்போதும் பண்ணுனாங்க" என்றான் ராஜா

"இப்போ என்ன பண்ண" என்றான் நந்து.

"பாப்பாவை கொன்னுடலாம்" என்றான் ரமேஷ்.

"எப்படி பாப்பாவை கொல்றது அது கத்துமே" என்றான் நந்து.

"நேத்து டீ.வீ ல பார்த்தேன் ஹீரோவோட அப்பாவை தலையணை வச்சு மூஞ்சில அமுக்குனா செத்துடுவாரு" என்றான் ரமேஷ்

"அப்படியா சரி" என்றான் நந்து.

.

அன்று மாலை தனது வீட்டிற்கு போன நந்து தனது அம்மாவின் அருகே சென்றான்.

நந்துவின் அம்மா அசந்து தூங்கி கொண்டிருந்தாள்.

தன்னை யாரவது கவனிக்கிறார்களா என்று நந்து வீட்டில் உள்ளவர்களை நோட்டமிட்டான்.

யாரும் கவனிக்கவில்லை எல்லோரும் தங்களுடைய வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இதுவே தருணம் என்றுணர்ந்த நந்து தன் நண்பர்கள் சொல்லியபடி தனது பாப்பாவை கொலை செய்ய தலையணையோடு குழந்தையின் அருகே சென்றான்.

நந்து குழந்தையை பார்த்தான். குழந்தை மிக அழகாக இருந்தது.

அதன் கையை தொட்டு பார்த்தான்."பாப்பா கை சாப்ட்டா இருக்கு" என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

பின்பு குழந்தையின் முகத்தை பார்த்தான். குழந்தை நந்துவை பார்த்தது.இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

நந்து "பாப்பா" என்றான்.

உடனே குழந்தை நந்துவை பார்த்து சிரித்தது.

"நான் யார் தெரியுமா" என்றான் நந்து குழந்தையிடம்,

குழந்தை இப்பொழுது கொஞ்சம் சத்தமாக சிரித்துக்கொண்டு கையையும் காலயும் வேகமாக அசைத்து சிரித்தது.

"பாப்பா நான் உன்னோட அண்ணன்" என்று நந்து தன் கை விரலால் குழந்தையின் கையை தொட்டான்.

உடனே குழந்தை அவனது கைவிரலை பிடித்துக்கொண்டு சந்தோஷத்தில் துள்ளியது.

அப்பொழுது தன்னுடைய காலின் கீழ் கிடந்த கரடிபொம்மையிடம் " இது என்னோட தங்கச்சி பாப்பா" என்று கூறி தனது தங்கைக்கு முத்தமிட்டான் நந்து பெருமையாக.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.