கலாட்டா கல்யாணம்

இதோ நமக்கு முன்னாடி கருப்புக் கண்ணாடியோட கொஞ்சமா மீசை, தாடி ட்ரிம் பண்ணிக்கிட்டு, கருப்பு தான், இருந்தாலும் களையா இருக்குறமாதிரி நெனச்சுக்கிட்டு, ஸ்டைலா நிக்குறாரே ...

இவருதாங்க சசி, சசி என்ற சசீந்திரன். பெரிய பண்ணை ... பல தலைமுறைக்கு முன்னால. இப்போ ஒன்னு இல்லே. அட்லீஸ்ட் அப்படித்தா அவரு வெளியில சொல்லிக்கிட்டுத் திரியறாரு. நல்ல பையன். காசுல கெட்டி. 5 பைசா வீணா செலவு பண்ண மாட்டாரு. கெட்ட சகவாசமெல்லா கெடையாது. அதான் பணம் செலவு பண்ணமாட்டாருன்னு சொல்லிட்டேனே, அப்புறம் எப்படி இருக்கும் கெட்ட சகவாசம். MCA படிச்சிமுடிச்சிட்டு ஏதோ கம்ப்யுட்டர் கம்பெனில என்னவோ வேலை பாத்துகிட்டு, பணம் சேத்து வச்சி, வேறெதுக்கு ... கல்யாணம் கட்டிக்கத்தா அதுவரைக்கும் காதலிக்க ஆள் தேடுற வேலையும் சைடுல பார்க்கறாரு.

ஒருநாள் ... நம்ப சசி ஆபிஸ்லேர்ந்து கிளம்பி, வீட்டுக்கு வர்ற வழியில, கையில பணம் கம்மியா இருக்கே, பணம் கொஞ்சம் எடுக்கலாம்னு ஒரு ATM சென்டருள் நுழைய, கதவு பின்னாலேயே ஆட்டோமாட்டிக்கா மூடத்தொடங்க, கதவு மூடுவதைக் கவனிக்காது போன் பேசியபடியே பின்னாலேயே நுழைந்தாள் சுகன், என்ற சுகன்யா. மயிரிழையில் மூடும் கதவைப் பிடித்து நிறுத்தி அவள் உள்ளே நுழைய வாகாய்த் திறந்துவைத்தான் சசி.

'தேங்க்ஸ்' என்றவள் சொல்ல, சின்ன சிரிப்புடன் அதை ஏற்றுக்கொண்டான்.

இருவரும் தங்கள் தங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு தம்தமது வழியே சென்றனர், இன்னும் சில நாட்களில் கணவன் மனைவி ஆகப்போவது தெரியாமலேயே.

---

வண்டியில் செல்லும் போதெல்லாம் அந்த 'தேங்க்ஸ்' ஒலி காதினுள் ஒலித்துக் கொண்டேயிருந்தது. கனவுலகத்தில் மேகங்களுக்கிடையில் அருகில் அந்தப்பதுமை அமர்ந்திருக்க தேர்மேல் பவனி வந்துகொண்டிருந்த நம் சசியை 'சாவுகிராக்கி எப்டிப் போவுது பாரு?' என்று ரோட்டில் ஒருவர் திட்டிய சொல் அவனை மண்ணுலகிற்கு இழுத்து வந்தது. அவருக்குத் 'தேங்க்ஸ்' சொல்லி விட்டுத் தன் பாதையில் தொடர்ந்தான். சிக்னலில் வண்டியை நிறுத்த பக்கத்தில் பார்த்தால் .... சுகன்யாவும் சிக்னல் ல பக்கத்துல வண்டிய நிறுத்துனா ன்னு நா சொல்லுவேன்னு நீங்க எதிர்பார்த்தீங்கன்னா தப்புங்க; ஏன்னா பக்கத்துல யாருமில்ல. நம்ப சசியோட மனசுல 'அவளும் இப்போ இங்கே இருந்தா நல்லா இருந்திருக்கும்ல' அப்டின்னு ஒரு நெனப்பு, 'அவ பின்னாலேயே போயிருக்கலாமோ' என்ற எண்ணம்; அவரோட வருங்கால பொண்டாட்டி. என்னவென்னாலு நெனச்சிக்கட்டு, நாம யாருங்க அதற்குத் தடைபோட.

சசி இதற்கு முன்னால், காதலென்று அவற்றைச் சொல்லமுடியாதென்றாலும், சில பல பெண்களோடு பழகியிருக்கிறான். கல்லூரி வாழ்க்கையின் போது பஸ்ஸில் கூடவே பயணித்த பவானி, பக்கத்து வீட்டு ஹேமா, என்று பலரோடு பேசியிருக்கிறேன். இருந்தாலும் மின்னல் வேகத்தில் ATM மிலும் தன் நெஞ்சிலும் நுழைந்து மறைந்துவிட்டவளை, பணத்தையும் இதயத்தையும் ஒருசேர எடுத்துச் சென்றவேளை இனி எங்கே எப்போது காண்பேனோ என்று எண்ணியபடியே தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். ஒருநாளைக்கு எவ்வளவு மனிதர்களைப் பார்க்கிறோம். இப்படியா எல்லாரையும் நெனச்சி ஏங்குறோம். இதுதாங்க ‘எதுஎது எப்பப்போ நடக்கணுமோ அதுஅது அப்பப்போ நடக்கும்’னு சொல்லுவாங்க. கண்ணைத் திறந்து கொண்டே கனவு பல கண்டபடியே காலை விடியும்வரை கட்டிலில் கிடந்தான்.

யாரோ கதவு தட்டும் ஓசை கேட்டது. 'அவளாயிருக்குமோ, ஆனா அவளுக்கு வீடு எப்படி தெரியும், ஒருவேளை இந்த ஆண்டவன் ... ஆண்டவன் ... ன்னு சொல்றாய்ங்களே .... அவரு ஏதாச்சு மாஜிக் பண்ணி ... ' இப்படியே சசி அவளைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கையில் கதவு மீண்டும் பலமாய்த் தட்டப்பட, திறந்து யாரென்று பார்த்தான்.

'பால் பாக்கி, 1200/- ... தர்றீங்களா? காலை நேரம், நாலு எடத்துக்குப் போகனு, கொஞ்சம் சீக்கிரம்' பால்காரர் படபடவென்று பேசியபடியே, படியில் நிற்க, நேற்று இரவு எடுத்தப்பணத்தில் அவருக்குக் கொடுக்கவேண்டியதைக் எண்ணிக்கொண்டிருக்கையில், பூட்டியிருந்த எதிர் வீட்டு வாசலில் ... தொடைச்சி ... கோலம் போட்டு, சுப்ரபாதம் பாட்டு பாடிக்கிட்டே ... ன்னு நா சொல்லுவேன்னு எதிர்ப்பாத்தீங்கன்னா ... நீங்க நினைக்கிறது தப்பு; இப்பொல்லா யாருங்க கோலம் போடுறாங்க; அதிகமாப் பேசுனா நம்பள கார்னெர் பண்ணிடுவாங்க, அதனால .... எதிர்த்த வீட்டு வாசல்ல பால் பாக்கெட் மட்டும் கெடக்குது. 'யாரு வந்திருக்காங்களா?' என்று கேட்டபடியே பணம் கொடுத்தான். 'தெரிலீங்க, இன்னிலேர்ந்து பால் போட சொன்னாங்க, போட்டே, வரேங்க' என்று சொல்லிவிட்டுப் பால்காரர் கிளம்பினார்.

சிறிது நேரத்தில் ஒரு ஓலா வந்து நிற்க அதிலிருந்து இரண்டு பெரிய சூட்கேஸ் இறக்கப்பட்டு வாசலில் வைக்கப்பட்டது, 'தேங்க்ஸ் ண்ணா ' என்று சொல்லிக்கொண்டே அவள் வீட்டைத் திறக்க .... 'தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்' அந்த ஒரு வார்த்தை மட்டும் சசியின் மூளையுள் நுழைந்து எல்லா நரம்புகளிலும் மோதி அவனைக் கதவை நோக்கித் தள்ளியது. படாரென்று தன் வீட்டு கதவைத் திறந்து யாரென்று பார்த்தால் .... சுகன்யாதாங்க .. . கரெக்ட்டா இந்தமுறை சொல்லிட்டீங்க, கதையோட நீங்க ஒன்ற ஆரம்பிச்சிட்டீங்க. சுகன்யா சசி தங்கியிருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டுக்குக் குடிவருகிறாள்.

சசியின் மனதிற்குள் பத்து கதவுகள் ஒன்றன் பின் ஒன்றாய்த் திறந்து கடைசியில் அவள் நின்று இவனைப் பார்த்துச் சிரித்து வெட்கிப்பது போல... அதேதாங்க ... பாரதிராஜா படத்துல ... தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும் ... அந்த எபெக்ட்;

'ஹலோவ்' சசி பேசத்தொடங்கினான்.
'ஹலோ’
‘புதுசா குடிவந்திருக்கீங்களா ?'
'ஆமா இன்னிலேர்ந்து'
'ஞாபகமிருக்கா ?'
'நல்லா ஞாபகமிருக்கு, இந்த வீடுதா'
'அட அதில்லேங்க, நேத்து ATM ல பத்தோ .... சசி'
'இல்லே சுகன்யா ... சுகன் ன்னு கூப்பிடுவாங்க'
'என்னோட பேரு சசிங்க ... சசீந்திரன்னு கூப்பிடுவாங்க'
'யு மீன் .... பேரு சசீந்திரன் ... சசி ன்னு கூப்பிடுவாங்க'
'அதானே நா சொன்னே, இல்லியா?'
'நைஸ் மீட்டிங்'
'இருங்க நா காஃபி போட்டுக் கொண்டுவர்ரே, ஒன் நிமிட்'

'தேங்க்ஸ் ... நா இப்போதா குடிச்சிட்டு வந்தே, பத்து நிமிசத்துல ஆபிசுக்குக் கெளம்பணு, அப்புறம் பார்ப்போம்'

'எங்கே போகணும்?'
'தரமணி'

'அய்யய்யோ நெஞ்சு கெறங்குதடி
ஆகாயம் இப்போ வலையுதடி'

அவன் நெஞ்சத்து எண்ணங்களை உள்வாங்கி ரேடியோ பாடத்தொடங்கியது.

---------

இப்படியாக இருவரும் ... ஒரே இடத்தில் எதிர் எதிர் வீட்டில் வசித்து ... ஒரே இடத்தில் தரமணியில் வேறு வேறு கம்பெனியில் பணி புரிந்து ... தம் தமது வண்டியில் ஒன்றாய்ச் சென்று ..... முடிந்தவரை ஒன்றாய்த் திரும்பி வந்தனர்;

அடுத்தென்ன ... காதல் தா;

'சுகன் ... ஒருகவிதை'
'சொல்லேன்'

'அலையாய் நான் படகாய் நீ
ஆடித்திரிவோமா ?
மழையாய் நான் முகிலாய் நீ
கொட்டித் தீர்ப்போமா ?
குரலாய் நான் குயிலாய் நீ
பாடிப் பறப்போமா ?
உடையாய் நான் இடையாய் நீ
ஒட்டிக்கிடப்போமா ?
விதையாய் நான் நிலமாய் நீ
செடியாய் முளைப்போமா ?
கண்ணன் நான் ராதை நீ
காதல் செய்வோமா ?
கவியாய் நான் தமிழாய் நீ
கவிதை புனைவோமா ?'

'லவ்லி, சசி, ஐ லவ் யு'
'ஐ டூ ... சுகன்'

'அடுத்து ?'

'கல்யாணம் பண்ணிப்போமா ?'

'இன்னும் கொஞ்சம் காதலிப்போமே சசி'

'தனித்தனியா இருக்கனு, ரெண்டு பேரு வாடகை தரனு, வேஸ்ட் இல்லியா?'

'அடப்பாவி, அப்போ வாடகை மிச்சப்படுத்தத்தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?'

'அப்டி ஏன் யோசிக்கறே நீ, இப்போ நா, இல்லே நீ வெக்கேட் பண்ணிட்டா வேற யாராச்சு வாடகைக்கு வரலாம், அப்டி வர்றவங்களுக்காக யாராச்சு காத்திருக்கலாம் ... அவங்களும் காதலர்களா மாறலாம் … இப்டி என்னென்னவோ நடக்கலா … இல்லியா ?'

'சரி ஒங்க வீட்டுல காதலுக்கு ஒத்துப்பாங்களா?'
'ஒதப்பாங்க, சமாளிப்போ, ஒங்க வீட்டுல ?'
'பிரச்சனை இருக்காது சசி, எப்டி சமாளிக்கப்போறே ஒங்க வீட்டுல?'

'தெரிஞ்ச ஒரு சார் யோகி இருக்காரு ஆபிஸ்ல, அவர்ட்ட ஐடியா கேக்குறே, ஏதாச்சு சொல்லுவாரு'

'ஓகே, பேசிட்டுச் சொல்லு, போலாமா ? ஓலா புக் பண்ணே ?'
'நடந்துப் போவோமே, ஈவினிங் வாக் ஈஸ் குட் பார் ஹெல்த்'
'டேய் நா பே பண்றே வாப்பா'
'ஆட்டோ ரெடியா இருக்கே, போலாமா? '
'டின்னர் வாங்கித்தறியா? ஆட்டோல போகலாம்'
'இதோ ஓலா புக் பண்றே'
'நாயி, கல்யாணம் ஆகட்டு, ஒன்னைப் பாத்துக்குறே'
'ஹிஹிஹி'

-------

சசியின் அலுவலகம்.

'என்ன சசி, மிஸ்டு கால் குடுத்தீங்க?'

'அதுஒண்ணுமில்ல சார் ...'

'அதுக்குமுன்னால ... ஏங்க ஆபிஸ் போன்ல தானே கூப்பிடுறீங்க, அப்புறம் ஏன் மிஸ்டு கால் கொடுக்கறீங்க ?'

'சார் ... மிஸ்டு கால் லா ஒண்ணுமில்ல சார் ... டக்குன்னு கட்டாயிடுச்சி'

'சரி எதுக்குக் கூப்டீங்க?'

'சார் ... நீங்க ஒரு யோகி ... பலவித பிரச்சனைகளை சமாளிச்சிருப்பீங்க, நல்லவரு, வல்லவரு'

'காதல் என்ற மாய வலையில் மாட்டிக்கிட்டீங்க, கரெக்ட்டா ?'

'எப்டி சார்?'

'பின்ன உளர்றீங்களே, தண்ணி போட்டுருக்கணும், இல்லேன்னா கண்ணு மண்ணு தெரியாம காதல்ல மூழ்கியிருக்கணும்'

'தண்ணி பழக்கம் கெடையாது ன்னு ஒங்களுக்குத் தெரியும்'

'செலவு அதிகமாகுமே'

'சார் ... வாங்கித் தர்றாங்க சார் ... நான்தா குடிக்கறதில்லை '

'சரி எதுக்குக் கூப்டீங்க ? பணம் வேணுமா ?'

'சார் ... பணம்லா இல்லே சார் ... காதல் சம்மந்தமா கொஞ்சம் ஐடியா சொல்லுங்க சார்'

'நா யோகிங்க ... வாழ்க்கைத்தத்துவம் கேட்டீங்கன்னா ஏதாவது சொல்லலாம் ... காதல்ல நா என்ன ஐடியா தர முடியும்?'

'சார் ... எங்க வீட்டுல காதலுக்கு ஒத்துக்கமாட்டாங்க, இருந்தாலும் காதலிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்க எப்படி சம்மதம் வாங்கறது?'

'அப்பாம்மா சம்மதம் முக்கியம்ன்னு நெனச்சீங்கன்னா ... காதலுக்கு அவங்க ஒத்துக்கமாட்டாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டே ஏன் காதலிச்சீங்க?'

'சார் ... இப்போ கல்யாணத்துக்கு எப்படி சம்மதம் வாங்கறது ... அதுக்கு வழி சொல்லுங்க சார்?'

'உம்ம்ம் ... இருகோடுகள் வழி ஃபாலோ பண்ணுவோமா?'

'என்னோட வலி தீருமா ?'

'இப்போ தீரும் .... ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் எப்படியும் அடி இருக்கும்?'

'அது எல்லாருக்கு விழுகிறது தானே சார், எனக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் லா?'

'தெரிஞ்சிக்கிட்டே குதிக்கறீங்க ?'

'ஆமா சார்'

'கையும் காலும் மூக்கும் கொண்டு ஆடவந்தக் காரணம் ... ஆடித்தானே சேர்த்து வச்ச பாவம் யாவும் தீரணும் '

'நீங்க யோகி சார் … ஒண்டிக்கட்டை ... தாமரை மேல் தண்ணீர்னு வாழுறீங்க .... நம்மால முடியுதா ? அந்த இருகோடுகள் பத்திச் சொல்லுங்க சார்'

'சொல்றேன், ஒங்க வீட்டுல எப்டி ஜாதகம் பார்ப்பார்களா? '

'வெறும் மனப்பொருத்தம் தான் சார்'

'அப்புறம் என்ன, எங்க மனம் பொருந்தியிருக்குன்னு சொல்லிடுங்க'

'அவங்க பாத்து அடக்கஒடுக்கமா, சொல்பேச்சைக் கேட்குற பொண்ண கட்டிவைக்கணும்னு எதிர்பார்ப்பாங்க சார்'

'அடக்கஒடுக்கமா, சொல்பேச்சைக் கேட்குற ? ஒங்களுக்குக் கல்யாணம் பண்ற ஐடியா அவங்களுக்கு இல்லியோ என்னவோ?'

'சார் நா காதலிக்கிற சுகன்யாவக் கல்யாணம் பண்ணிக்க என்ன பண்ணனும்?'

'சொல்றேன், வீட்ல எப்படி ஜோசியர் பொண்ணைக் காமிப்பாறா இல்லே கல்யாண ப்ரோக்கர் வருவாரா ?'

'ஜோசியர் ஒருத்தர் இருக்காரு சார், எனக்கு அவரைத் தெரியும்'

'குட் ... இப்போ இந்த சுகன்யா ... ஒரு 40% நல்ல பொண்ணுன்னு வெச்சிப்போ ...'

'சார் ... ஒரு 50% நல்ல பொண்ணு சார்'

'அவ்ளோதானா ? '

'சார் ... நீங்க தானே சார் அதிகமா எதையும் எக்ஸ்பெக்ட் பண்ணக்கூடாதுன்னு அடிக்கடி சொல்வீங்க ? '

'சரி, 50% நல்ல பொண்ணு .... ஒரு 30% நல்ல பொண்ண ஜோசியர் கிட்ட ஒங்க அப்பாம்மாவுக்குக் காட்ட சொல்லுவோ, பொண்ணை ஒங்க வீட்டுல ரகளை பண்ண சொல்லுவோ, அப்பாம்மா முடியாது ன்னு சொல்லுவாங்க, மூட் அவுட் ஆவாங்க , அடுத்து ஒங்க 50% பொண்ணு விவரத்தை கொடுத்துக் காட்ட சொல்லுவோ, வேற பொண்ணே இல்லீங்க ன்னு ஜோசியரை சொல்லச் சொல்லுவோ, கெடச்சது போதும் ன்னு நீங்க ஒத்துக்கறமாதிரி ஓத்துக்கோங்க ... ஓகே வா?'

'ஓகே மாதிரிதா சார் இருக்கு ... அந்த 30% ... ஒங்களுக்கு யாராச்சு தெரியுமா?'

'என்னைப் பாத்தா ஒங்களுக்கு என்ன பொம்பளை ப்ரோக்கர் மாதிரி தெரியுதா?'

'அதில்ல சார்'

'ஆரம்பத்துல … நீங்க ஒரு யோகி, நல்லவரு வல்லவரு ன்னெல்லா சொன்னீங்க ... வேலை முடிஞ்சவொடனே ....'

'சாரி சார், நா பாத்துக்கறே, நன்றி சார்'

'வாழ்க வளமுடன்'

--------

சசி தன் வீட்டில்

'ஜோசியரே ... நா சசி பேசுறே ... '

'சொல்லுங்க தம்பி, செங்கல்பட்டு வந்திருக்கீங்களா ? '

'பொண்ணு பாத்துட்டீங்கன்னா வரே ... ரெடியா?'

'எங்க தம்பி பொண்ணே கெடைக்கமாட்டேங்குது'

'எனக்குத் தெரிஞ்சவங்க ... அவங்க பொண்ணு இருக்கு ... அப்பாம்மாட்ட அழைச்சுக்கிட்டு போய் காமிங்க … ஒங்க கமிஷன் பத்தியும் நா சொல்லிட்டே'

'ஹிஹிஹி'

'நாளைக்கு இல்லே நாளை மறுநாள் ஒங்களப் பார்க்க வர்றாங்க, வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு போங்க சரியா?'

'காதலா தம்பி ? என்னோட அட்ரஸ் குடுத்துருங்க ... நா ஒங்க வீட்டுக்கு அனுப்பிப் பேசி முடிச்சுடறே'

'பேசு முடிக்கறதை அப்புறம் பாத்துப்போ ... காட்டிட்டு மட்டும் வாங்க'

'சரீங்க தம்பி'

-------------

'சுகன்'

'என்னடா ஆபிஸ்ல ஞானி சார் கிட்ட பேசிட்டியா ?'

'ஞானி இல்லேப்பா யோகி, பேசிட்டே, எனக்கு 30% நல்ல பொண்ணு ஒன்னு வேணுமே'

'30% ? பொண்ணு ? நா இருக்கேனே போதாதா?'

'நீ 50% பா, எனக்கு 30% போதும்'

'ஒன்னு புரியல ?'

யோகி சாரிடம் பேசியதெல்லாம் விவரித்தான் சசி.

'சசி, என்னோட ப்ரெண்ட் ஒருத்தி இருக்கா, தான்வி ன்னு பேரு, அடங்காப்பிடாரி'

'ஓகே, கொஞ்சம் கர்வம், கொஞ்சம் பணக்காரத் திமிர், ஸ்டைல், எதிர்த்து எதிர்த்து பேசனு - இதெல்லா …'

'இதெல்லா அவளோட பேசிக் க்வாலிட்டீஸ்'

'வெரிகுட்'

'நாளைக்கு அவ செங்கல்பட் போகமுடியுமா ... கேட்டுச்சொல்லு'

-------

செங்கல்பட்டு ... ஜோசியர் வீடு

'ஹலோவ் ஜோசியரே '

'யாரும்மா?'

'தான்வி ... சசி அனுப்புனாரு ... அவரு வீட்டுக்கு ... போவோமா'

'அப்பாம்மா வரலியாம்மா?'

'இந்தாங்க 100 ரூபா ... 5 நோட்டு ... புத்தம் புதுசு ... போலாமா?'

----------

செங்கல்பட்டு ... சசியின் வீடு

'வாங்க ஜோசியரே ... நல்லா இருக்கீங்களா ... பொண்ணு கெடச்சுதா பையனுக்கு ?' என்று ரகுராமன், சசியின் அப்பா, கேட்க

'கையோட கூட்டிட்டு வந்திருக்கே'

'எங்கே ? முன்னாலேயே சொல்ல மாட்டீங்களா .... கமலம்' தன் மனைவியை அழைத்துக்கொண்டே ரகுராமன் உள்ளே செல்ல,

பின்னாலேயே ஜோசியர் தொடர ...

கொஞ்சம் நேரம் கழித்து ... உள்ளே நுழைந்தாள் தான்வி.

'ஹலோவ்' திறந்திருந்த கதவில் டொக்கினாள்.

'யாருங்கவேணும்?' என்று ரகுராமன் கேட்க

'இவங்க தா பொண்ணு ஜானகி' என்று ஜோசியர் சொல்ல,

'பையன பாத்துட்டு வரனும்னு அப்பா சொல்லிட்டிருந்தாரு, அதா வந்தே, சசி தானே பையன் ? இருக்கானா?'

சுருக்கென்றிருந்தது ரகுராமனுக்கு. இருந்தாலும் நம்ப காலமில்லை. 2016 ல இருக்கோம்னு ஞாபகப்படுத்திக்கொண்டார்.

தான்வி வீட்டில் நுழைந்தாள். கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்தாள். கேள்விக்கணைகள் பல தொடுத்து சசியின் அப்பாவையும் அம்மாவையும் பேசவிடாது செய்தாள். அதையும் மீறி அவர்கள் கேட்ட கேள்விகட்கு திமிராய் பதிலுரைத்தாள். 'சசிக்கு கல்யாணமே ஆகலைன்னாலும் பரவாயில்லை ஆனால் இப்படியொரு பெண், வேண்டவே வேண்டாம்' என்ற நிலைக்கு வந்தனர் அவன் பெற்றோர்.

'ஓகே ராம், சசியும் வீட்டுல இல்லே, அப்புறம் சொல்லி அனுப்புங்க, ஜோசியர் கிட்ட என்னோட நம்பர் குடுத்துருக்கே, நா வேணாம்னு சொல்லிட்டா டோன்ட் பீல் பேட், பை' என்று சொல்லிக்கொண்டே தான்வி அங்கிருந்து கிளம்ப, 'நல்லதாப் போச்சி, போ' என்று மனதில் எண்ணிக்கொண்டு, 'ஜோசியரே … அனுப்பிட்டு வாங்க' என்று ரகுராமன் அழுத்திச் சொன்னது ஏன் என்று ஜோசியருக்கு நன்றாகவேப் புரிந்தது.

-----

தான்வி தான் செய்த கலாட்டாவை சுகன்யாவிடமும் சசியிடமும் விளக்கினாள்.

'சுகன் இன்னொரு ரெண்டு மூணு நாள் கழிச்சி ஒங்க அப்பா அம்மாவை சசியோட அப்பா அம்மாவை ப் போய் பார்க்கச் சொல்லு, கண்டிப்பா ஒத்துப்பாங்க, கவலை வேண்டாம்'

'தேங்க்ஸ் தான்வி' என்று சுகன் சொல்ல

'சாரி தான்வி உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டோ' என்று சசி சொல்ல

'சேச்ச்சே நாந்தா ஒங்க அப்பா அம்மா அந்த ஜோசியர் எல்லாரையும் கலாட்டா பண்ணிட்டே, இன் பாக்ட் நா ஒங்க கல்யாணத்துக்கு வர முடியாது இப்போ, அவங்களுக்கு அப்புறம் நம்ப ப்ளான்லா தெரிஞ்சிடும்'

-----

மணமக்கள் திட்டமிட்டப்படி, பெற்றோர் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசி பழகி, திருமணத்திற்கு நிச்சயித்து, சசி சுகன்யாவின் திருமணம் மிக விரைவில், தேதி அறிவிக்கப்படும்; மறக்காமல் கலந்து கொள்ளவும்.

-சுபம்-

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.