புகார் புகழேந்தி

The squeaking wheel doesn't always get the grease. Sometimes it gets replaced.

Vic Gold


“புகார் புகழேந்தியெத் தெரியுங்களா? பாவங்க அவரு.”


“தெரியாதுங்களே அண்ணாச்சி. யாரு அவரு? அது என்னாங்க பேரு புகார் புகழேந்தீன்னு? டணால் தங்கவேலு, துலா பாரம் சாரதாங்கெறாப்புலெ? எதுனா புதுசா வதிருக்குற சினிமா நடிகரா? நான் சினிமா கொட்டகெப் பக்கம் போயி வருசம் இருவதாகுதுங்க.”


“சினிமா நடிகரெல்லாம் இல்லீங்க. ஒங்களையும் என்னையும் போல நம்ம ஊருலெ இருக்குற ஒரு சராசரி ஆளுதாங்க.”


“பின்னெ எப்பிடி அந்தப் பேரு அவருக்கு வந்தீச்சு?”“சொல்றேன் கேளுங்க. தெருவுலெ சாக்கடெ நீரு ஓடுதா. போடு தினசரிலெ ஒரு கடுதாசு. அனுப்பு அதெ கார்பொரேசனுக்கும். காலி மனையிலெ கொட்டுறாங்களா ஊரு சனம் குப்பெயெ? படத்தோடு போடு செய்தியெ பத்திரிகைலெ.மின்சாரக் கம்பம் சாஞ்சுகிட்டு நிக்குதா? எளுது எலெக்ட்ரிசிடி போர்டுக்கு ஒரு கடுதாசு, படத்தோட. சாலெ குண்டும் குளியுமா இருக்குதா? சாடு சாலை இலாக்கா எஞ்சினியரெ பத்திரிகெலெ ஒரு கடுதாசு போட்டு. அதுதாங்க அவரோட முழு நேர வேலெ.”


“நல்ல காரியந்தான் செய்யுறாரு. அவரு ரொம்ப காலம் நல்லா இருக்கணுங்க.”


“ரொம்ப காலம் நல்லா இருக்கணுமா? பாவங்க அவரு. நேத்து யாரோ அவரெப் போட்டுத் தள்ளீட்டாங்க.”


“என்னது கொன்னூட்டாங்களா? ஏங்க?”


“தினோம் எதுனா புகாரு சொல்லிக்கிட்டே இருந்தாரு இல்லியா? அதுனாலெ அவருக்கு எதிரிங்க ஒண்ணா ரெண்டா? ஒரு பக்கம் அவரோட புகழு பெருகிக் கிட்டே போனாலும் இன்னோரு பக்கம் எதிரீங்க எண்ணிக்கெ ஏறிக் கிட்டே போச்சு. அதான் யாரோ கொன்னூட்டாங்க அவரெ.”


“என்னெயெ மாதிரி இருக்கணுங்க ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்னான்னு.”


“மேலோட்டமாப் பாத்தா நீங்க சொல்லுறது சரிதான். ஆனா எல்லாருமே அப்பிடி இருந்தூட்டா நாடு என்ன ஆவுறாது?”


“அதுவும் சரிதான். ஆனா…”


“ஆனா என்ன ஆவன்னா? ஒரு கோவிலுலெ விசேஷ நாளுங்களுலெ சாமி செலெய்க்கு பாலு அபிஷேகம் பண்ணுவாங்க. ஊரு ஜனங்கள்ளாம் கோவிலுலெ வெச்சிருக்குற ஒரு அண்டாவுலெ அவுங்க அவுங்க ஊட்டுலேந்தும் பாலு கொண்டாந்து ஊத்துவாங்க. அந்த ஊருலெ ஒரு கஞ்சப் பிசுனாரி. அவரு நெனெச்சாராம் எல்லாரும் பாலு ஊத்துறப்பொ நாம ஒருத்தரு தண்ணி ஊத்தினா யாரு கண்டு பிடிக்கப் போறாங்கன்னு. இது இப்பிடீ போயிக் கிட்டே இருந்தீச்சு. ஒரு நாளு அவரெப் போல எல்லாரும் நெனெக்க அன்னிக்கி சாமிக்கு தண்ணி அபிஷேகந்தான் நடந்தீச்சான். அது போலத் தானுங்களே ஆகும் எல்லாருமே நமெக்கென்னான்னு இருந்தா.”


“அதுவும் சரிதான். ஆனா உசிரு வெல்ல மாச்சுங்களே.”


“வெல்லம் ரொம்ப கூடாதுங்க ஒடம்புக்கு. சக்கெரெ வியாதீலெ கொண்டு போய் உட்டாலும் உட்டூடும்.”


“அதுவுஞ்சரிதான்.”


“இப்பிடி எல்லாத்துக்கும் சரிதான் சரிதான்னு சொல்லிக் கிட்டு இருந்தீங்கன்னா ஒங்க பேரெ ‘சரிதான் சண்முகம்’ னு வெச்சூடப் போறாங்க.”


“அதுவும் சரிதாங்க.”


(மேற்கோளுக்கு நன்றி அன்பர் வெங்கட்ராம் ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு.)

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.