அத்தியாயம் – 1

வாழ்க்கையின் வரம் காதல்

காதலின் வரம் எதிர்பார்ப்பில்லா நேசம்

நேசம் கொண்ட நெஞ்சங்கள்

வலி தாங்கும் இடி தாங்கியாக மாறும்

துரோகங்கள் இழைக்கப்படும் போது


ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை மகனின் குரல் எழுப்பியது. ஆறு மாத குழந்தையான ரிஷி விழித்தெழுந்து கை,கால்களை ஆட்டி சிறிய வெளிச்சத்தைக் கண்டு ஆ..ஆ.. என்று பேசிக் கொண்டிருந்தான்.

கணவனையே உரித்து வைத்தது போலிருந்த ரிஷியை தூக்கிக் கொண்டு வரவேற்பறைக்கு வந்தாள் தன்யா. பாயை விரித்துக் குட்டி மெத்தையைப் போட்டு அதில் மகனை படுக்க வைத்தவள் குனிந்து “என்னடா தங்கம்..அதுக்குள்ளே முழிச்சிட்டீங்க...ம்ம்”.

அவள் பேசியதும் மேலும் உற்சாகத்துடன் சிரித்துச் சத்தமாக “ஆ..ஞா...ஆ..” என்றான் அவளது ஆசை மகன்.

லேசாக அவன் கன்னத்தில் தட்டி “டெய்லி இந்த நேரத்துக்கு முழிச்சா நான் எப்படிடா காலையில எழுந்திருச்சு வேலை செய்வேன்?”

அதற்கும் துள்ளி குதித்து ஒரு சிரிப்புச் சிரித்துக் கொண்டான்.

அவர்களது குரலும்,ஹாலில் தெரிந்த வெளிச்சத்திலும் எட்டிப் பார்த்த ராகவ் “என்ன பண்றீங்க அம்மாவும் பையனும்? தூங்கலையா?” என்று கேட்டுக் கொண்டே அவளருகில் வந்தமர்ந்தான்.

அவனைப் பார்த்த தன்யா “நீங்க ஏங்க எழுந்திரிச்சு வந்தீங்க? உங்களுக்குத் தொந்திரவா இருக்கும்னு தான் நாங்க இங்கே வந்தோம்.”

அவள் தோள்களில் கையைப் போட்டுத் தன்னருகில் இழுத்தவன் “நீயும் பையனும் எனக்குத் தொந்திரவா?”

“இல்ல ராகவ் நீங்க வேலைக்குப் போகனுமில்ல. அவன் தூங்குறப்ப நான் தூங்கி எழுந்திடுவேன்.உங்களுக்குத் தூக்கம் டிஸ்டர்ப் ஆகும்.”

அவனோ அவளது பேச்சில் கவனம் வைக்காமல் மகனிடம் விளையாடிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்து சற்று கிண்டலாக “பெரியக்கருப்பனும், சின்னக்கருப்பனும் ஒன்னு சேர்ந்துட்டா என்னை மறந்திடுவீங்களே.”

அவளது கேலியை கண்டவன், அவள் காதை திருகி “வர-வர கொழுப்பு ஜாஸ்தியா போச்சு உனக்கு.என்னை கருப்பன்னு சொல்றதுமில்லாமல் என் பையனையும் சொல்ற.அதுக்கு உனக்குத் தண்டனை கொடுத்தே ஆகணுமே” என்றவன் இதழ்களை முற்றுகையிட்டான்.

தாய், தந்தையைப் பார்த்துக் கொண்டே ரிஷி மீண்டும் சத்தமாகப் பேசவும், உலகத்தை மறந்திருந்தவர்கள் அவனது குரலில் மீண்டனர்.

“நீங்க போய்த் தூங்குங்க ராகவ்”.

“நீயும் வா தனு”என்றான் ஏக்கமாக.

அவன் தலையைச் செல்லமாகக் கலைத்தவள் “போய்த் தூங்குங்கப்பா. குட்டி தூங்க நேரமாகும்” என்றாள்.

“ம்ம்..”என்று எழுந்தவன் மகனையும், மனைவியையும் பார்த்துக் கொண்டே தனதறைக்குச் சென்றான்.

அவனைக் காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தவள், மகனிடம் திரும்பி “பாருடா குட்டி! அப்பா ரொம்பப் பாவமா போறாங்க.நீ நாளையிலேருந்து சீக்கரம் தூங்கிடுடா” என்றாள்.

தன்னிடம் அம்மா பேசுகிறாள் என்று சந்தோஷத்துடன் சிரித்துக் கொண்டது அந்த இளம் குருத்து.

விடியலின் நேரம் தாயும், மகனும் ராகவின் அருகில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.அலாரத்தின் ஓசையில் எழுந்தவன் இருவரையும் பார்த்து புன்னகைத்து மகன் கன்னத்திலும், தன்யா நெற்றியிலும் இதழ் பதித்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான்.

தண்ணீர் ஓடும் சப்தத்தில் மெல்ல எழுந்தவள் முடியை கொண்டை போட்டுக் கொண்டு அவன் வருவதற்குள் காப்பிப் போட்டு, தோசை ஊற்றி, சட்னியும் அரைத்து வைத்தவிட்டு டைனிங்கில் வந்தமர்ந்தாள்.

ஆபிஸ் செல்வதற்குத் தயாராகி வந்தவன் தன்யாவை பார்த்து “நீ ஏண்டா எழுந்த? நைட் தூங்கவே ரொம்ப நேரம் ஆகியிருக்குமே?” என்றான் கரிசனமாக.

மெல்லிய புன்னகையுடன் “நானே லஞ்ச்சுக்கு ஒன்னும் பண்ணி கொடுக்க முடியலையேன்னு நினைச்சிட்டிருக்கேன்.”

அவளருகில் சென்றவன் லேசாகக் கன்னத்தைத் தட்டி “நான் வெளில பார்த்துக்கிறேன் தனும்மா.நீ குழந்தையைப் பாரு”என்றான்.

ராகவ், தன்யா இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள்.ஒரே நிறுவனத்தில் ராகவின் கீழ் வேலை செய்யும் போது இருவருக்கிடையே மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது.இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்புக்கு ஈடு இணையே இல்லை.அதிலும் தன்யாவிற்கு ராகவை சுற்றி மட்டுமே உலகம் சுழலும்.

காதலித்த போதும் சரி, திருமணத்திற்குப் பிறகும் சரி அவள் வாழ்வில் அனைத்துமாகி போனவன் அவனே. காதல் திருமணம் என்பதால் ஆரம்ப நாட்களில் ராகவின் அன்னை அவளை ஏற்கவில்லை என்றாலும் தனது உள்ளம் கவர்ந்தவனின் அன்னை என்று அவரிடம் அன்பாக நடந்து கொண்டாள். நாட்கள் செல்ல செல்ல அவர் மனமும் மாறி,தன் மகனிடம் அவள் கொண்டிருந்த அன்பைக் கண்டு மலைத்துப் போயிருக்கிறார்.

பேரன் பிறந்ததும் எதிர்ப்பெல்லாம் மறைந்து குடும்பத்தின் ஆதரவு முழுமையாகக் கிடைத்தது.ரிஷியின் வரவு மீண்டுமொரு வசந்தத்தைக் கொண்டு வந்தது.மகனது வரவில் ராகவ் பின்னுக்குத் தள்ளப்பட்டான்.குழந்தைக்காகப் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு-விட்டு வீட்டோடு இருந்து கொண்டாள்.

தன்னுடைய உலகத்தைக் கணவனுக்காகவும்,மகனுக்காகவும் சுருக்கிக் கொண்டாள்.

ஒன்பது மணிக்கு எழுந்த மகனை எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் போட்டுவிட்டு கிட்சேன் வேலையைத் தொடர்ந்தாள்.மகனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே தோசையை ஊற்றி சாப்பிட்டாள்.

மதியம் வரை மகனை கையில் வைத்தபடியே எல்லா வேலைகளையும் செய்த்துவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தநேரம் வாயில் மணி அடிக்க எழுந்து சென்று திறந்தவள், அங்கு நின்ற மாமானார், மாமியாரைக் கண்டதும் புன்னகையுடன் “வாங்க அத்தை, மாமா” என்றாள்.

மலர்ச்சியுடன் நின்ற மருமகளைப் பார்த்த கௌசல்யா “என்னம்மா நல்லாருக்கியா?ராகவ் வேலைக்குப் போயாச்சா?என்று கேட்டுக் கொண்டே பேரனின் அருகில் சென்றமர்ந்தார்.

எதிர்வீட்டில் அரைகுறையாகத் திறந்திருந்த கதவின் வழியாக எட்டிப் பார்த்த அந்தவீட்டு பாட்டி “மாமியார் வந்திருக்காங்களா?” என்றார்.

“ஆமாம்” என்று சொல்லி முடிக்கும் முன்பே “கதவை திறந்தா யார் கிட்டே பேசுவோம்-னு நிக்கிறது”என்று சொல்லி வேகமாக அறைந்து சாத்தப்பட்டது எதிர்வீட்டுக் கதவு..

முகத்தில் அடித்தார் போன்று நடந்த செயலில் முகம் சுருங்கினாலும், இது வழக்கமாக நடக்கும் ஒன்று என்பதால் பெருமூச்சுடன் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தாள்.

தாத்தா, பாட்டி இருவரின் கைகளிலும் மாற்றி-மாற்றிப் போய் வந்து கொண்டிருந்த ரிஷி குஷியாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.

நேரம் போனதே தெரியாமல் மதிய சமையல், சாப்பாடு,பேச்சு என்று ஓடியது.

“சனி, ஞாயிறு அங்கே வரலாமில்ல தன்யா. எங்களுக்கும் பேரனோட இருந்த மாதிரி இருக்கும்” என்றார் கௌசல்யா.

காப்பியை கலந்து கொடுத்துவிட்டு, அவரருகில் அமர்ந்தவள் “இப்போ புது ப்ராஜெக்ட்ல கொஞ்சம் பிஸியா இருக்காங்க அத்தை”.

“ஆமாம்! உன் புருஷனுக்கு வேலை தான் முதல் பொண்டாட்டி.எப்போ பாரு பிஸி பிஸின்னு புலம்புறது” என்று நொடித்துக் கொண்டார்.

“நீங்க இங்க இருங்க அத்தை.”

போன் பேசிக் கொண்டிருந்த சந்தானம் “விஜய் அரை மணி நேரத்தில வரேன் சொல்லிட்டான்” என்றார்.

“பாத்தியா! சின்னவனுக்கு ஒருநிமிஷம் நான் அங்க இல்லேன்னா வேலையே ஓடாது.என் பின்னாடியே சுத்தணும் அவனுக்கு” என்றார் சிரித்துக் கொண்டே.

அரைமணியில் விஜயும் வந்துவிட,காப்பி, பலகாரங்களோடு வழியனுப்பும் படலம் நடந்தேறியது.கதவை சும்மா சாத்தி வைத்துவிட்டு, அவர்களோடு கீழே சென்று காரில ஏறும் வரை பொறுத்திருந்து, ரிஷியை விட்டு கையாட்டி விடை கொடுத்து மேலே வந்தாள்.

காரில் சென்று கொண்டிருந்தவர்களின் மனமோ தன்யாவை பற்றியே சுழன்று கொண்டிருந்தது.

“நாமலே தேடினாலும் இந்த அளவுக்கு நல்ல பெண்ணா கிடைச்சிருக்குமா-னு தெரியாது.அவனைப் பார்த்துகிறது இல்லாம நம்ம மேலையும் பாசமா இருக்கு” என்றார் சந்தானம்.

“ஆமாங்க! அவனுக்குப் பார்த்து பார்த்து செய்றா. என் புள்ளையும் ஒன்னும் குறைஞ்சவனில்ல.அவ மேல பாசமா தான் இருக்கான்.”

அதைக் கேட்டு வண்டி ஒட்டிக் கொண்டிருந்த விஜய் சத்தமாகச் சிரித்து “அதானே! உங்க புள்ளையை விட்டுக் கொடுத்திடுவீங்களா? அப்போ அண்ணன் காட்டிய வழியில் நானும் போகலாமா?” என்றான் நக்கலாக.

அவன் முதுகில் அடித்து “ரோட்டைப் பார்த்து ஓட்டுடா.சும்மா வம்பு வளர்த்துகிட்டு.ராகவ் நேரம் நல்ல பெண்ணா கிடைச்சிடுச்சு.எல்லோருக்கும் அப்படிக் கிடைச்சிடுமா என்ன?”

“இப்போ என்ன சொல்ல வரீங்க? எனக்கு நல்ல பெண்ணா கிடைக்காதுன்னா?” என்று மேலும் சீண்டினான்.

அவர்கள் இருவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சந்தானம் பொறுமையிழந்து “உனக்கு இன்னும் ரெண்டு வருஷத்துக்குக் கல்யாணம் பண்றதா இல்ல.அப்புறம் எதுக்கு இந்த வெட்டிப் பேச்சு” என்றார்.

அதன் பின் அவரவர் சிந்தனையில் அமிழ்ந்து போயினர்.

மகன் உறங்கிவிட, அவன் எழுந்திரிப்பதற்குள் இரவு உணவை தயாரித்து விடலாம் என்றெண்ணி சமையலறைக்குள் நுழைந்தாள்.

ரவாவை தயிருடன் கலந்து, கேரட்டை துருவி, கொத்தமில்லி, இஞ்சி, பச்சைமிளகாய் கொஞ்சம் அரிந்து இட்லியை ஊற்றி அதன் மேல் அரிந்தவற்றைத் தூவி அடுப்பில் வைத்தாள். தேங்காயை துருவி சட்னி அரைத்து வைத்துவிட்டு வெளியில் வரும் நேரம் அலைப்பேசி அடித்தது.

ராகவ் தான் அழைத்தான்.

“சொல்லுங்க ராகவ்..கிளம்பிட்டீங்களா?”

“இல்ல-டா! இன்னைக்கு நேரமாகும் போலருக்கு.நீ வெயிட் பண்ண வேண்டாம்”.

அவன் சொன்னதும் சற்று சோர்வுற்று “அப்படியா? அப்போ ஒன்னு பண்ணுங்க..யாரையாவது அனுப்புங்க.டின்னெர் பாக் பண்ணி அனுப்பிடுறேன்” என்றாள்.

“வேண்டாம்-டா! எதுக்குச் சிரமம். நான் வெளியிலேயே பார்த்துக்குறேன்” என்றான்.

“இல்லப்பா! நான் ரெடி பண்ணிட்டேன்.நீங்க அனுப்புங்க”.

“ம்ம்..ஓகே!”

போனை வைத்ததும் மடமடவென்று பாக் செய்து வைத்துவிட்டு அமர்ந்திருந்தாள்.

ஆள் வந்து எடுத்து சென்றதும்,கதவை தாள் போட்டுவிட்டுத் தங்கள் அறைக்குச் சென்றாள்.

நன்றாக உறங்கி எழுந்த ரிஷி உற்சாகத்துடன் தன்யாவிடம் விளையாட ஆரம்பித்தான்.மகனிடம் விளையாடிக் கொண்டே, தங்களின் ஹனிமூன் போட்டோவை பார்த்த தன்யாவிற்கு, தாங்கள் காதலித்த நாட்கள் மனதிலோட,அதை மகனிடம் சொல்ல ஆரம்பித்தாள்.

“உங்க அப்பா இருக்காங்களே..இப்போ மட்டுமில்ல என்னை லவ் பண்ணுன நாட்களிலேயும் இப்படித் தான்.வேலை தான் முக்கியம்-னு இருப்பாங்க.நான் என்ன பேர் தெரியுமா வச்சிருந்தேன் தெரியுமா? கரும்பு மெஷின்.தன் கிட்ட மாட்டுனவங்களை நல்லா சக்கையா பிழிஞ்சிட்டு தான் விடும். அது போல உங்க அப்பா கிட்ட வேலைக்குப் போனவங்க செத்தாங்க.”

அதைக் கேட்ட ரிஷி “ஆ..ஆ..”என்று சிரித்தான்.

“ஆனா உங்கப்பாவை சாதரணமா நினைச்சிடாதே குட்டி பையா.என்னைப் பார்த்த நாளில் இருந்து சைட் அடிச்சிட்டு இருந்திருக்கார்.அதை வெளிக்காட்டிக்காம நல்லா மாங்கா மாதிரி இருப்பார்.நான் என் பிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லி சிரிப்பேன் சரியான விஸ்வாமித்திரர்-னு. அப்புறம் தானே தெரிஞ்சுது தலைவர் காதல் மன்னன்-னு.”

அதற்கும் வாயை குவித்துச் சிரித்துக் கொண்டான் அவள் செல்ல மகன்.

தங்களின் காதலைப் பற்றி மகனிடம் சொல்லுகின்ற சாக்கில், அந்த நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டிருந்தாள்.அவளது மனம் அன்றைய நினைவுகளில் இனித்தது. ராகவை பற்றிய எண்ணங்களே தன்னை இந்த அளவுக்கு மகிழ்விக்கச் செய்கின்றது என்றால்,தான் அவன் மேல் எந்த அளவிற்குப் பைத்தியமாக இருக்கிறோம் என்றெண்ணி வெட்கப்பட்டாள்.

அவளது நாயகனோ, வீட்டிலிருந்து வந்த உணவுப் பையை எடுத்துக் கொண்டு தனது காரை நோக்கி சென்று கொண்டிருந்தான்.அலுவலகத்தை விட்டு வீதியில் நுழைந்ததும், தனது அலைப்பேசியை எடுத்து அழைத்தான்.

“ஹாய் பேபி! எங்கே வெயிட் பண்ற? நான் கிளம்பிட்டேன்.”

மறுபுறத்திலிருந்து வந்த பதிலைக் கேட்டதும் “ம்ம்..சரி! நான் இன்னும் பதினஞ்சு நிமிஷத்தில் அங்கே இருப்பேன்.கிட்ட வந்ததும் கால் பண்றேன்.நீ வெளில வந்துடு” என்று சொல்லி வைத்தான்.

சொன்ன நேரத்துக்கு ஐந்து நிமிடம் முன்பாகவே அங்குச் சென்றுவிட, அவனுக்காகக் காத்திருந்த சுஷ்மிதா முன்பக்க கதவை திறந்து கொண்டு அவனருகில் அமர்ந்தாள்.

அவள் ஏறியதும் ஈசீஆரை நோக்கி சீறிப் பாய்ந்தது.

“ஏன் ராகவ் இவ்வளவோ லேட்டா கிளம்பினீங்க?” என்றவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

அவள்புறம் திரும்பி நெற்றியில் இதழ் பதித்து “வீட்டுலேருந்து டின்னெர் வந்துது.அதான் லேட்டாச்சு”என்றான்.

“உங்க அம்மாவுக்கு உங்க மேல ரொம்பப் பாசமோ?இந்த நேரத்திலும் சாப்பாடை பாக் பண்ணி அனுப்புறாங்களே”.

அவளைத் திரும்பி பார்த்து அசட்டு சிரிப்பாகச் சிரித்து “ஆமாம்” என்றான்.


அத்தியாயம் – 2

பனிரெண்டு மணியளவில் மெல்ல சத்தமிடாமல் கதவை திறந்து கொண்டு வீட்டிற்குள் வந்தான் ராகவ்.

வீடே இருளில் மூழ்கி இருக்க,தங்களின் அறையில் மட்டும் சிறியதொரு விளக்கெரிந்து கொண்டிருப்பது தெரிந்தது.மெல்ல அடியெடுத்து உள்ளே சென்றவன் அங்கு,கையிலிருந்து புத்தகம் நழுவி கீழே விழ அரைகுறையாகப் படுத்த நிலையில் தன்யா உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான்.

அவளருகில் சென்றவன், புத்தகத்தை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு அவளைச் சரியாகப் படுக்க வைத்தான்.

தனது கப்போர்டை திறந்து துணியை எடுத்துக் கொண்டு குளியலறை பக்கம் நகர்ந்தவனைத் தன்யாவின் குரல் நிறுத்தியது.

“வந்துட்டீங்களா?”என்றவள் உறக்க கலக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.

“நீ தூங்கு தனும்மா” என்றான் அவள் கண்களைப் பார்க்காமலே.

“ரொம்ப டயர்டாகி தெரியிறீங்க.குடிக்க ஏதாவது எடுத்திட்டு வரவா?” என்றாள்.

“அதெல்லாம் வேண்டாம் நீ படு”என்றான் பதட்டத்துடன்.

அவனை ஒரு மாதிரியாகப் பார்த்து, பேசாமல் படுத்துக் கொண்டாள்.

குளியலறைக்குள் சென்றவனுக்கு மனம் பாராமாகிப் போனது.சுஷ்மித்தாவுடன் இருந்தவரை தோன்றாத குற்ற உணர்வு மனைவியைப் பார்த்ததும், அவளது அக்கறையையும்,காதலையும் பார்த்ததும் தோன்றியது. அவனது மனமே அவனைச் சாடியது.ஷவரின் அடியில் நின்றவனுக்குத் தான் ஏன் இவ்வாறு மாறி போனோம் என்று எண்ணினான்.சிறிது நேரம் தன்னுடைய நடத்தையை எண்ணியே படி நின்றிருந்தவனின் மனம் சமாதானமடைய மறுக்க,முரண்டிய மனதை அடக்கிக் கொண்டு சப்தம் செய்யாமல் சென்று மகனின் அருகில் சென்று படுத்துக் கொண்டான்.

மறுநாளும் காலை தன்யாவின் முகம் பார்க்க சங்கடப்பட்டுக் கொண்டு ஒருவித பதைபதைப்புடனே இருந்தான்.அவனது முகத்தில் தெரிந்த அவஸ்தையைக் கண்டவள் “ஏங்க வேலையில எதுவும் பிரச்சனையா?ரொம்ப டென்ஷனா இருக்கீங்களே?”

அவளது கேள்வியில் அதிர்ந்தவன், தனது மனதில் இருப்பதை வெளியில் காட்டும் அளவிற்கா நடந்து கொண்டோம் என்று நினைத்து “ஒரு சின்னப் பிரச்சனை இருக்கு.அதை பத்தியே யோசிச்சிட்டு இருந்தேன்”என்றான்.

“ஒ..நீங்க சரி பண்ணிடுவீங்க.பொறுமையா யோசிங்க”என்று அவனுக்கு ஆறுதல் அளித்தாள்.

அவளது பதிலில் மேலும் அவனது மனம் சுணங்கியது.தன் மேல் அளவில்லாத நம்பிக்கையும், அன்பும் வைத்திருக்கும் அவளுக்குத் துரோகம் செய்கிறோமோ என்று எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

ரிஷியை தூக்கிக் கொண்டு வந்தவள் “என்னங்க..நீங்க கிளம்பும் போது நாங்களும் கீழே வரோம்.தம்பியை காரில் வச்சு ஒரு ரவுண்டு அடிங்க.நீங்க பேன்ட், சட்டை போட்டதுமே அவனுக்குத் தெரிஞ்சு போய்டுது வெளில போறீங்கன்னு.”

அவள் சொன்னதைக் கேட்டு ஒன்றும் பேசாமல் தலையாட்டி பையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றவனைப் பார்த்து ரிஷி உதட்டை பிதுக்க ஆரம்பித்தான்.

“பார்த்தீங்களா?” என்று சிரித்தவளிடம் மகனை வாங்கிக் கொண்டு கீழே சென்றான்.

அவன் பின்னே சென்றவள் ரிஷியை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு காரின் மறுபுறம் ஏறி அமர்ந்தாள்.

உள்ளே அமர்ந்ததுமே சந்தோஷமாகச் சிரித்துக் கொண்ட ரிஷி, அப்பாவிடம் தாவினான்.

“வேண்டாம்-டா..அப்பா ஓட்டனுமில்ல” என்று தனது பிடியில் வைத்துக் கொண்டாள்.

தங்கள் வீட்டுப் பால்கனியில் இருந்து இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த எதிர் வீட்டு பாட்டி கண்களில் கனிவுடன் ‘நல்ல அழகான குடும்பம்.புருஷன்,பொண்டாட்டி ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்வளவு பாசமா இருக்காங்க.நல்லா இருக்கணும்’என்று நினைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.

அதற்குள் அவரது மருமகள் “ஆரம்பிச்சிட்டீங்களா?சும்மா பால்கனியிலேயே நின்னு அடுத்தவங்களை வேடிக்கைப் பார்த்திட்டு இருங்க.அடுப்பில குழம்பு கொதிக்குது போய்ப் பாருங்க.இது ஒன்னும் கிராமம் இல்ல.அடுத்தவங்க விவகாரத்தில் தலையிட”என்று விரட்டினாள்.

ராகவை வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்கு வந்தவள், ரிஷியை கீழே படுக்க வைத்துவிட்டுச் செய்ய வேண்டிய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆபிஸ் சென்ற ராகவின் மனமோ தடுமாறிக் கொண்டிருந்தது.அந்தநேரம் சுஷ்மி அவனைத் தேடி வர,இனம் புரியாத உணர்வில் உழன்று கொண்டிருந்தவன் “காலையிலேயே வந்து ஏன் உயிரெடுக்கிற”என்று எரிந்து விழுந்தான்.

“இல்ல ப்ராஜெக்ட் விஷயமா தான் கேட்க வந்தேன்” என்று தயங்கி தயங்கி கூறினாள்.

“இங்க பாரு! நம்ம ரெண்டு பேரும் பழகுறது ஆபிஸ்ல தெரியாம இருக்கணும்-னு நினைக்கிறேன். சும்மா-சும்மா இப்படி வந்து என்னைப் பார்க்காதே.தேவையில்லாத பேச்சுக்கு இடம் கொடுத்த மாதிரி ஆகிடும்”என்று கடுப்படித்தான்.

அவனது சிடுசிடுப்பில் கண்கள் கலங்க தலையாட்டிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

அடுத்த இருவாரங்கள் சற்று குற்ற உணர்ச்சியுடன் சுற்றிக் கொண்டிருந்தான்.தவறுகள் செய்ய ஆரம்பிக்கும் போது தலை தூக்கும் உணர்வுகள் அவனையும் துரத்தியது.முதன்முறை செய்யும் போது தானே தவறு தவறாய் தெரியும்.ஒரு முறை பழகிய பிறகு தவறுகள் தன்னை அறியாமலே அவர்களைத் தன்னுள் இழுத்துக் கொள்ளும்.ராகவ்வும் அப்படித்தான். இருவாரங்களுக்குப் பிறகு மீண்டும் தன்னை அறியாமலேயே சுஷ்மித்தாவிடம் நெருங்க ஆரம்பித்தான்.அவனது மனதில் எழத் தொடங்கிய சலனங்களை அடக்கி மீண்டும் அதே தவறை செய்யத் தொடங்கினான்.

தன்யாவோ எதையும் அறியாமலே எப்பொழுதும் போல் கணவனின் மீது அதீத நம்பிக்கையுடனும், அன்புடனும் தனது நாட்களை ஒட்டிக் கொண்டிருந்தாள்.

அன்று சுஷ்மியின் பிறந்தநாள் என்பதால் இருவரும் வெளியே சென்று வர முடிவு செய்திருந்தனர்.முதல்நாளே அவளுக்கு ப்ரேஸ்லெட் ஒன்றை வாங்கி வைத்திருந்தான்.அவர்கள் செல்ல வேண்டிய ஹோட்டலுக்கு வழக்கம் போல் அவள் முன்னே சென்று விட, இவன் மெதுவாகக் கிளம்பி சென்றான்.

ஒருமணி நேரம் அவளுடன் பிறந்தநாளை கொண்டாடி, உணவருந்திவிட்டு இருவரும் ஹோட்டலை விட்டு வெளியே வந்தனர்.

அன்று நண்பர்களுடன் உணவருந்த வெளியே வந்திருந்த விஜய், ராகவ் சென்ற ஹோட்டலுக்கு எதிர் சாலையிலிருந்த இருந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்தான். நண்பர்களுடன் பேசியபடி வெளியே வந்தவனின் பார்வையில் ராகவ்வும்,அவன் தோளில் சாய்ந்திருந்த சுஷ்மிதாவும் பட்டனர்.ராகவ் தானா என்ற சந்தேகத்துடன் பார்த்தவனது விழிகளில், அவர்களது நெருக்கம் நெருடலை ஏற்படுத்தியது.

இன்றைய சூழலில் கையைப் பிடித்துக் கொள்வதும், லேசாக அணைத்துக் கொள்வதும் இயல்பான ஒன்றாகி போனது என்றாலும்,ஏனோ அவன் மனம் சற்று தடுமாறச் செய்தது.சரி அண்ணனை அழைத்துக் கேட்டு விடுவோம் என்றெண்ணியவன் அலைப்பேசியில் ராகவை அழைத்தான்.

“ஹலோ அண்ணா?”

“என்னடா இந்த நேரத்துக்குக் கூப்பிட்டிருக்கே?என்றான் எடுத்தவுடனே.

“உங்க ஆபிஸ் பக்கம் ஒரு வேலையிருக்கு.அதுதான் பார்க்கலாமான்னு கேட்க தான் போன் பண்ணினேன்”.

“இந்த நேரத்துக்கு நான் எங்க-டா போவேன்.ஆபிஸ்ல தான் இருக்கேன்.நீ வா” என்றான்.

அவனது பொய்யைக் கண்டு அதிர்ந்து சரி எவ்வளவு தூரம் தான் போகுது என்று பார்ப்போம் என்றெண்ணி “அப்போ ஒரு பத்து நிமிஷத்தில் வரேன்னா” என்றான்.

அதைக் கேட்டு சற்று பதட்டமான ராகவ் “நான் ஒரு இம்போர்டன்ட் காலில் இருக்கேன்-டா. நீ ஒரு ஒரு மணி நேரம் கழித்து வந்தா ப்ரீயா இருக்கும்” என்றான்.

“சரின்னா” என்று சொல்லி வைத்தவனின் மனதில் மேலும் நெருடல் அதிகமானது.

ராகவும் விஜயிடம் பேசி முடித்துவிட்டு, ஆட்டோவை பிடித்துச் சுஷ்மிதாவை முதலில் அனுப்பி விட்டு தனது காரிலேறிச் சென்றான்.

இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விஜயின் மனதில் அண்ணனின் நடத்தையில் தவறிருப்பது உறுதியடைந்தது.அவனால் நம்பவே முடியவில்லை.தன்யாவை எந்த அளவிற்குக் காதலித்து மணம் முடித்தவனால் எப்படி இன்னொருத்தியிடம் ஒன்ற முடியும் என்று எண்ணி மனம் புழுங்கினான்.

மனதிலேறிய பாரத்தின் காரணாமாகத் தலையும் கனக்க ஆரம்பித்தது.தன் அண்ணனா இப்படி என்று அவனால் நம்ப முடியவில்லை.தான் கண்டது உண்மையாக இருக்கக் கூடாது, ராகவ் ஒருநாளும் அண்ணிக்கு துரோகமிழைக்க மாட்டான் என்று நினைத்துக் கொண்டான்.

நண்பர்களிடமிருந்து விடைப் பெற்றுக் கொண்டு கிளம்பியவன்.ராகவ்வின் அலுவலகம் இருக்கும் சாலையில் சென்று காரை நிறுத்திவிட்டு ஒருமணி நேரம் ஆகும் வரை அதிலேயே காத்திருந்தான். அதற்குள் பலவிதமான சிந்தனைகள் அவன் தலையை உலுக்க, தலைவலி போடு போடென்று போட்டது.

சரியாக ஒருமணி நேரம் கழித்து அவன் அலுவலகத்தில் நுழைந்தான்.விஜயை கண்டதும் எப்பொழுதும் போல் மிக இயல்பாக வரவேற்ற ராகவை கண்ட விஜய்க்கு மேலும் குழப்பம் வந்தது.தான் கண்ட காட்சிகள் உண்மை தானாவென்று.

“சொல்லு-டா உன் வேலை எப்படிப் போயிட்டு இருக்கு?”

தலைவலி தாங்க முடியாமல் முகத்தை லேசாகச் சுளித்துக் கொண்டு “நல்லா போகுது.ராகவ் எனக்கு ஒரு காப்பிச் சொல்லேன்.வெயிலில் சுத்தினதுல செம தலைவலி” என்றான்.

காப்பி வந்தததும் குடித்தவனுக்குச் சற்றுத் தெளிவு பிறந்தது “அப்புறம் சொல்லு ராகவ்.வேளையில் ரொம்பப் பிஸியா.ஞாயிற்றுகிழமை கூட நீ அங்க வரதில்லை.அம்மா புலம்பி தள்றாங்க” என்றான் அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடியே.

“ஆமாம்-டா! முக்கியமான ப்ராஜெக்ட்..கொஞ்சம் அசந்தாலும் நம்மளை போட்டு தாளிச்சிடுவானுங்க.உனக்கும் தான் தெரியுமே.நீயும் இந்தப் பீல்ட் தானே” என்றான் சலிப்பாக.

ராகவ் பேசியதில் எந்தவித பொய்யோ, நடிப்போ தெரியாததால்,இன்று ஹோட்டலில் பார்த்ததை எப்படிக் கேட்பது என்று யோசித்தான்.

“இன்னைக்குக் கூடப் பாரு! எங்க டீம் மெம்பருக்கு பர்த்டே, எல்லோரும் போய்க் கொண்டாடிட்டு அரைமணியில் வந்துட்டோம்.இன்பாக்ட் நீ போன் பண்ணும் போது அங்கே தான் இருந்தேன்” என்றான் லேசான புன்னகையுடன்.

ராகவ் அப்படிச் சொன்னதும் அதுவரை மனதிலிருந்த குழப்பம் நீங்கி “ஒ..அப்படியான்னா.ஆனா ஆபிஸ்ல தான் இருக்கேன்னு சொன்னீங்களே?”என்று கேட்டான்.

“ஹாஹா..அதுவா..நானில்லாத நேரம் நீ வந்து, அண்ணன் எங்கேயோ சுத்த போயிட்டார்-னு அண்ணி கிட்ட போட்டு குடுத்துட்டேனா?”

அவனது கேலியில் மேலும் மனமிளக “ஏன்னா இப்படி?”

“அதுக்கில்லடா..நான் ஹோட்டல்ல இருந்து வர நேரமாகும்-னு தெரியும்.அதுதான் அதைச் சொல்லாம வேலையிருக்குன்னு சொன்னேன்.நான் வெளியில இருக்கேன்னு சொல்லியிருந்தா நீ வந்திருக்க மாட்ட அதுக்குத் தான் அப்படிச் சொன்னேன்” என்றான்.

தனது மனதிருந்த கேள்விகளுகெல்லாம் ராகவின் பதில் திருப்தியளிக்க, பாரம் குறைந்து நிம்மதியடைந்தான்.

.சரி..டைம் கிடைக்கிறப்போ அண்ணியை அழைச்சுகிட்டு வாண்ணா”என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.

வெளியில் சென்ற விஜய் ‘ஊப்ஸ்..நல்லவேளை எதுவும் கேட்காம போனனே.ஒரு நிமிஷம் தப்பா நினைச்சிட்டேன் ‘ச்சே’..என்று தன்னையே கோவித்துக் கொண்டவன் ‘அண்ணனாவது அண்ணிக்குத் துரோகம் செய்றதாவது.இனிமே இப்படி எல்லாம் யோசிக்கக் கூடாது’ என்று சமாதானப்படுத்திக் கொண்டு சென்றான்.

தனதறையில் கண்மூடி நாற்காலியில் அமர்ந்திருந்த ராகவின் மனமும் பெரிய இக்கட்டிலிருந்து தப்பித்து வந்தது போலிருந்தது.’நான் மட்டும் எதிர்த்த ஹோட்டலில் விஜயை பார்க்காம போயிருந்தா என்னவாகியிருக்கும்.இந்நேரம் என் முகத்துக்கு நேரா கேட்டே இருப்பான்.எப்படியோ இன்னைக்குத் தப்பிச்சாச்சு.இனி, ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்’ என்று எண்ணிக் கொண்டான்.

அத்தியாயம் – 3

பரபரவென்று வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த சுஷ்மிதாவின் இதழில் ஒரு புன்சிரிப்புப் பரவி இருக்க,மனமோ சொல்லவொணாத ஒரு மகிழ்ச்சியில் இருந்தது. ஐ.டி கார்டை எடுத்து மாட்டிக் கொண்டு அவசரம் அவசரமாகக் காத்திருந்த கேபில் அமர்ந்தாள்.

தாய், தந்தையரின் இறப்பிற்குப் பிறகு, மாமா வீட்டில் அடைக்கலம் புகுந்தவளுக்கு அன்பு மறுக்கப்பட்டது.மாமாவும், மாமியும் கடமைக்காக வளர்த்தார்களே அன்றி உண்மையான பாசத்தில் அல்ல.தங்கள் குழந்தைகளிடம் காட்டிய அன்பில் ஒரு சதவிகிதம் கூட அவளுக்குக் கிடைக்காமல் போனது.

பத்து வயது முதல் தாய், தந்தையரின் பாசத்திற்காக ஏங்கியவளுக்கு, பள்ளியிலும் அவளது நிலையை எண்ணி கேலி பேசுபவர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டாள். அதனால் தன் நட்பு வட்டத்தையும் குறைத்துக் கொண்டாள். யாரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசவே தயக்கம்.அந்த பழக்கமே வேலைக்குச் சென்ற பிறகும் தொடருகின்றது.

ஆனால், ராகவ்வின் கீழ் பணி புரிய தொடங்கிய இந்த ஒன்பது மாதங்களில்,வேலைக்காகப் பேசுவதைத் தவிர மற்றவர்களிடம் எண்ணி நூறு வார்த்தைகள் பேசி இருந்தால் அதிகம்.ராகவ்வை பற்றி எண்ணியதுமே முகத்தில் ஒரு கனிவு வந்தது.இதுவரை எனக்குக் கிடைக்காத அன்பைத் தந்தாலும், சில நேரங்களில் அவர் புரியாத புதிர் தான் என்று எண்ணிக் கொண்டாள்.

அலுவலகத்தில் சென்று இறங்கியதும்,முதல்நாள் பாதியில் விட்ட பணிகளை மடமடவென்று செய்ய ஆரம்பித்தாள்.சிறிது நேரத்திற்குள் லேசாகத் தலைவலிக்க ஒரு காப்பிச் சாப்பிட்டால் என்ன என்று தோன்றியது.

எதிரில் தென்பட்டவர்களைப் பார்த்து மெல்லிய சிரிப்பை உதிர்த்து,ஹாய், ஹலோ சொல்லிவிட்டு கேண்டீனிற்குச் சென்று காப்பியை வாங்கிக் கொண்டு ஓரமாக இருந்த மேஜையில் அமர்ந்தாள்.

இரண்டு வாய் காப்பி உள்ளிறங்கியதும் தலைவலி குறைய ஆரம்பித்தது.அவளுடைய டேபிளுக்கு நேர் எதிர் டேபிளில் நிர்மல் டீமில் இருக்கும் மூன்று பெண்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“ஹே சங்கீ!தன்யாவை போய்ப் பார்த்தியா?ஒரு நியூசும் இல்லையேப்பா அவ கிட்டேயிருந்து?”

“போன் தான் பண்ணினேன் அர்ச்சனா.அவ குழந்தையோட பிஸி.இந்த வீக் போய்ப் பார்க்கலாம்-னு இருக்கேன்.”

அவர்களிருவரும் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு பெண் “யாருப்பா தன்யா? இங்கே வேலைப் பார்த்தவங்களா?” என்று கேட்டாள்.

“டிஎல் ராகவ் இருக்காரே அவரோட வைப் தான் தன்யா.இங்கே தான் வேலைப் பார்த்தா.ராகவ்வும், தன்யாவும் லவ் மேரேஜ் பண்ணிகிட்டவங்க” என்றாள் சங்கீதா.

அதுவரை சாதரணமாகக் கேட்டுக் கொண்டிருந்த சுஷ்மிதா கடைசியில் காதில் விழுந்த செய்தியில் அதிர்ந்து போய் அவர்களின் பக்கம் திரும்பி பார்த்தாள். தன்னையும் அறியாமல் வேகமாக எழுந்து அவர்களிடம் சென்று “எங்க டிஎல் ராகவ்வையா சொல்றீங்க?” என்றாள் பதட்டத்துடன்.

திடீரென்று அவள் வந்து கேட்டதும் முழித்த சங்கீதா “ம்ம்..ஆமாம். இங்கே நம்ம ஆபிசில் அவங்க லவ் ஸ்டோரி ரொம்பப் பேமஸ்.உங்களுக்குத் தெரியாதா?” என்றாள்.

அவளது கேள்விக்குப் பதில் சொல்லாமல் பேயறைந்த முகத்துடன் அங்கிருந்து வேகமாக நடந்தாள். காலையிலிருந்து குதூகலத்தில் இருந்த மனம், பேரிடியைத் தாங்கி படபடவென்று துடிக்க ஆரம்பித்தது.எப்படி தனது இடத்திற்கு வந்தாள் என்று கூடத் தெரியாமல் சென்று அமர்ந்தாள்.அவன் தன்னை ஏமாற்றி இருப்பான் என்கிற எண்ணமே அவள் மனதை கூறு போட செய்தது.

பத்து நிமிடங்கள் பிரமை பிடித்தது போல் அமர்ந்திருந்தவளுக்கு, எங்கே எல்லோர் முன்னிலையும் கத்தி அழுது விடுவோமோ என்று பயந்து அவசரமாக வாஷ்ரூமிற்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

வெளியில் சத்தம் வராது மௌனமாகத் தனது துயரத்தை அழுது தீர்த்தாள். ஒரு நிலைக்கு மேல் அவன் சட்டையைப் பிடித்துக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.முகத்தைக் கழுவி தன்னைச் சீர் படுத்திக் கொண்டு வெளியில் வந்தவள், ராகவின் அறையை நோக்கி சென்றாள். அவன் முக்கியமான கிளையன்ட் மீட்டிங்கில் இருந்ததால் பார்க்க இயலவில்லை.

வேலையில் மனம் செல்லாமல் எதிரே தெரிந்த மானிட்டரை வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.மனதை அழுத்திய பாரத்தைத் தாங்கிக் கொண்டு அமர்ந்திருக்க முடியவில்லை.உடல்நலமில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டுக் கிளம்பலாம் என்று நினைத்தவள், எதற்கும் அவனுக்கு ஒரு மெசேஜ் கொடுத்து பார்ப்போம் என்று குறுஞ்செய்தியை அனுப்பினாள்.

மதியம் வரை அவனிடமிருந்து பதிலில்லை.பொறுத்தது போதும் நேராகவே சென்று பேசிவிட வேண்டியது தான் என்று எழும் போது அவனிடமிருந்து மெசேஜ் வந்தது.எப்பவும் நாம் சந்திக்கும் இடத்திற்குச் சென்று விடு.அங்கே வந்து உன்னைப் பிக் அப் செய்து கொள்கிறேன் என்று கொடுத்திருந்தான்.

அதைப் பார்த்ததும் மேலும் மனம் கொதித்துப் போனது.என்ன ஒரு திமிர்! இவன் சொல்லுகிற மாதிரி நான் ஓடணுமா? இங்கேயே எல்லோர் முன்னாடியும் அவனோட முகத்திரையைக் கிழித்தால் என்ன? என்கிற ஆங்காரம் எழுந்தது.அதே சமயம் அவள் மனம் இடித்தது.கிழியப் போவது அவனுடைய முகத்திரை மட்டுமல்ல, உன்னுடைய பெயரும் தான்.அவன் தான் இனிக்க இனிக்கப் பேசி உன்னை மயக்கினான் என்றால் உன் புத்தி என்ன புல் மேயவா போனது?இப்படி எத்தனை கதைகளைக் கேட்டிருப்பாய்?அதன் பிறகும் நம்பி ஏமாந்து போவது உன்னைப் போன்ற பெண்களுக்குப் பொழப்பாய் போயிற்று என்று மனம் கம்பு சுத்தியது.

ஒன்பது மாதங்கள் இதே கம்பனியில் வேலை செய்த போது காதில் விழாத விஷயம், இன்று அனைத்தையும் இழந்து நிற்கும் போது விழுகிறதே. இதை என்ன சொல்வது என்று நொந்து கொண்டாள்.

அவனை விடக் கூடாது என்கிற எண்ணம் தலைத்தூக்க...எனக்கு இப்போவே உங்க கிட்ட பேசியாகணும் என்று பதில் அனுப்பினாள். அவனும் சளைக்காது வேலை இருக்கிறது என்று மறுத்தான். ஓரளவிற்கு மேல் பொறுமையை இழந்தவள் “நீங்க இப்போ வரலேன்னா, நான் உங்களைப் பார்க்க அங்கேயே வந்துடுவேன்” என்று அனுப்பினாள்.

அதன்பின் ஐந்து நிமிடங்கள் அவனிடமிருந்து எதுவும் வரவில்லை.சிறிது நேரம் கழித்து “சரி! நீ போய் அடுத்தத் தெருவில் இருக்கும் காபி டேவில் வெயிட் பண்ணு வருகிறேன்” என்று கொடுத்தான்.

அதைப் பார்த்ததும் ஹன்ட்பாக்கை எடுத்து மாட்டிக் கொண்டு விறுவிறுவென்று நடந்தாள். மனமோ கொதிக்கும் எரிமலையெனக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.எவ்வளவு எளிதாகப் பெண்ணை ஏமாற்ற நினைக்கிறார்கள் இந்த ஆண்கள் என்று நினைத்து ஆத்திரத்துடன் சென்றாள்.

அவள் சென்று சற்று நேரத்திற்குள்ளேயே அவனும் வந்துவிட்டான். எதிரே அமர்ந்தவனின் முகத்தில் எரிச்சல் பொங்கி வழிந்தது.

“இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படிப் பீகேவ் பண்ற? வேலை நேரத்தில் இதென்ன பிடிவாதம்?” என்றான்.

அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

அவளது நடவடிக்கை மேலும் அவனைப் பொறுமை இழக்க செய்ய, வேகமாக நாற்காலியை பின்னுக் தள்ளி எழுந்தவன் “என்ன நினைச்சுகிட்டு இருக்க?வேலை நேரத்தில் கூப்பிட்டதே தப்பு.இங்கே வந்து வாயை மூடிகிட்டு உட்கார்ந்திருக்க.நான் கிளம்புறேன்” என்று நகர்ந்தான்.

அதுவரை மௌனமாக இருந்தவள் “தன்யா எப்படி இருக்காங்க ராகவ்” என்றாள்.

வேகமாக முன்னேறிய கால்கள் உறைந்து போக, மெல்ல திரும்பியவன் அவளைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டு சேரில் அமர்ந்தான்.

“சோ..இதுக்காகத் தான் என்னை வர சொல்லி இருக்கே?” என்றான் கேள்வியாக.

அவனிடம் அதிர்வையோ,வேறுவிதமான உணர்வுகளை எதிர்பார்த்தவளுக்கு,அவனது நடவடிக்கை ஏமாற்றத்தைக் கொடுத்தது.

“ஏன் என்னை ஏமாத்தினீங்க?உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு-னு சொல்லாம ஏன் என் கிட்ட பழகினீங்க?” என்றாள் ஆங்காரமாக.

தனது நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டவன் “கல்யாணம் ஆகலேன்னு நான் உனக்குச் சொன்னதா நியாபகம் இல்லையே பேபி” என்றான் கிண்டலாக.

மனதில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் பெட்ரோலை ஊற்றியது போலிருந்தது அவனது பேச்சு.

சற்றுச் சத்தமாக “உங்களுக்குக் கொஞ்சம் கூட உறுத்தவே இல்லையா?இப்படி என் வாழக்கையை அழிச்சிட்டுச் சாதரணமா பேச?”

அவளது குரல் உயர்ந்ததில் அங்கிருந்த ஒன்றிரண்டு பேர் திரும்பி பார்த்தனர்.அதை கண்டவன் எழுந்து அவள் கையைப் பற்றிப் பரபரவென்று தனது காருக்கு இழுத்துச் சென்றான்.

காரில் அமர வைத்து கதவை லாக் செய்தவன் வேகமாக வண்டியை எடுத்தான்.அவனது செய்கையில் அதிர்ந்திருந்தவள் “எங்கே கூட்டிட்டு போறீங்க?” என்றாள் கோபமாக.

அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சாலையில் கவனத்தை வைத்தான்.

அவனிடமிருந்து பதில் வராது போகவே ‘எங்கே தான் போறான்னு பார்ப்போம்’என்று எண்ணி அமைதியாக இருந்தாள்.

ஆளரவமற்ற சாலையில் காரை நிறுத்தியவன் அவள்புறம் திரும்பி “இப்போ கேளு?” என்றான்.

பொறுமையெல்லாம் பறக்க பாய்ந்து அவன் சட்டையைக் கொத்தாகப் பற்றியவள் “ஏண்டா இப்படி என்னை ஏமாத்தின?உனக்குக் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? வீட்டுல பெண்டாட்டி இருக்கப்ப ஏன் என்னை..என்னை” என்று கைகளில் முகம் புதைத்து அழுது கரைந்தாள்.

அவளது தலையை வருடிக் கொடுத்தவன் “என்ன இது பேபி! எய்ட்டீஸ் ஹீரோயின் மாதிரி இருக்க.இது ரெண்டாயிரத்து பதினாறு.இப்போ இதெல்லாம் சகஜம்” என்றான்.

அவனது பேச்சில் அருவருப்படைந்தவள் அவனிடமிருந்து விலகி “சீ”..நீ இவ்வளவு மோசமானவனா?”

“நோ பேபி! நீ ரொம்பக் கற்பனை பண்ணிக்கிற. இன்னைக்கு நிறையப் பேர் லிவிங் டு கெதர்ல இல்லையா. பிடிச்சா சேர்ந்து வாழ்வது பிடிககிலேன்னா விலகிப் போறது.அதுமாதிரி தான் இதுவும்.”

“நான் அந்த மாதிரி இல்லை” என்றாள் ஆத்திரமாக.

அவளை இகழ்ச்சியுடன் பார்த்தவன் “கண்டிப்பா பேபி! நீ அந்த மாதிரி இல்ல.என்னை உனக்கு எத்தனை மாசம் தெரியும்.ஆனா, நான் கூப்பிட்டதும் என்னோட வந்தியே.நீ வித்தியாசமானவ தான்.”

அவன் சொன்னதைக் கேட்டு மேலும் அழுகை கூடிப் போக, அவன் முகத்திலேயே காறி உமிழ்தவள் “அது உன் மேல வச்ச நம்பிக்கை-டா.ஆனா, நீ இவ்வளவு கீழ்த்தரமா இருப்பேன்னு கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை” என்று முகத்தை மூடிக் கொண்டு கதறினாள்.

அவனோ கொஞ்சமும் அசராது “இங்க பாரு பேபி! நீ இப்படி அழுறதுக்கு இதில் ஒண்ணுமே இல்ல. இட்ஸ் ஆல் அன் அட்ஜஸ்ட்மென்ட். எனக்குத் தேவையானதை நீ கொடுத்த..உனக்கு என்கிட்ட இருந்து எதுவோ தேவைபட்டிருக்கு.அதை ஷேர் பண்ணிக்கிட்டோம் அவ்வளவு தான்” என்றான் கூலாக.

முகத்தை மூடி அழுது கொண்டிருந்தவள், அவனது வார்த்தையில் வெகுண்டு “அப்போ உன்னோட மனைவி இதே அட்ஜஸ்ட்மென்ட் தேடி போனா உனக்கு ஒண்ணுமில்லை”.

பட்டென்று அவள் கழுத்தைப் பிடித்தவன் “என் பொண்டாட்டியை பத்தி பேச உனக்கு உரிமையில்ல.உன்னை பத்தி பேசு, இல்ல என்னைப் பத்தி பேசு கேட்டுகிறேன்.அவளைப் பத்தி பேசின கொன்னுடுவேன்” என்றான் கோபமாக.

அவனது பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டவள் அழுகையுடன் “அப்போ உனக்கு நான் யாரு?” என்றாள்.

இருகைகளையும் கட்டிக் கொண்டு அவளை நக்கலாகப் பார்த்தவன் “ப்ரீ-பெய்ட் சிம்.எப்போ வேணா கழட்டிப் போடலாம்.”

அதைக் கேட்டதும் ஆத்திரத்துடன் ஓங்கி அறைந்தாள்.

அவள் கைகளைப் பிடித்து முறுக்கியவன் “இங்கே பாரு! எனக்கு ஒன்னும் உன் கூடக் காலம் முழுக்கச் சுத்தம்னும்-னு ஆசையில்லை.இன்னும் கொஞ்ச நாள் என்னோட இரு.அதற்குப் பிறகு நீ உன் வழியைப் பார்த்துகிட்டு போ” என்றான்.

“உன் மேல எவ்வளவு காதலோட இருந்தேன்.இப்படி என்னை ஏமாற்றி உன்னோட தேவைகளைத் தீர்த்துகிட்டியே.இதுதான் உன் தேவைன்னா எங்கேயாவது போக வேண்டியது தானே-டா.ஏன் என்னைச் சீரழிச்ச?”

“நான் ரொம்ப ஹெல்த் கான்ஷியுஸ் பேபி.அதுதான் இப்படி” என்று சொல்லி கண் சிமிட்டினான்.

அவனது பேச்சில் மேலும் கூனி குறுகி போய்விட..”உன் வைப்பை பார்த்து உன் வண்டவாளத்தை எல்லாம் சொல்லப் போறேன்” என்றாள் அழுது கொண்டே.

அவள் முகத்தைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பி “உனக்கு இந்த வேலை எந்த அளவுக்கு முக்கியம் தெரியும் பேபி.உங்க மாமாவும், மாமியும் படிக்க வச்சதோட கை கழுவி விட்டாச்சு. அவங்க யாரும் உனக்குத் துணையில்ல.சோ இந்த வேலை தான் உனக்கு எல்லாம்.நான் நினைச்சா இந்த வேலையை விட்டு உன்னைத் தூக்க வைக்க முடியும்.”

அவன் சொல்ல சொல்ல கண்களில் கலக்கத்துடன் அவனைப் பார்த்திருந்தாள்.

அவளின் உணர்வுகளைப் படித்தவன் திருப்தியுடன் “அதனால இன்னும் கொஞ்ச நாள் என் இஷ்டத்துக்கு இரு.அப்புறம் நான் உன்னைத் தொந்திரவு பண்ண மாட்டேன்” என்றான்.

மெல்லிய குரலில் “அப்போ என் வாழ்க்கை?அதுக்குப் பதிலென்ன?”

அவளின் கேள்வியைக் கண்டு ஆயாசமாகக் கண்களை மூடி திறந்தவன் “உனக்கு விருப்பம்னா காலம் முழுக்க என்னோடவே இருக்கலாம்.எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்ல.ஆனா, கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்க கூடாது”.

இனி, பேசி ஒன்றுமில்லை.காலம் கடந்த பின்னர் இவனைக் கேள்வி கேட்டு எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று புரிந்து போனது.சிறிது நேரம் அமைதியாக எதிரே தெரிந்தவற்றை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவள் ஏதாவது பேசுவாள் என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீ வீட்டில் போய் ரெஸ்ட் எடு பேபி.இங்கே உட்கார்ந்திருந்தா எதுவும் யோசிக்க முடியாது” என்றவன் காரை எடுத்தான்.

வழி நெடுகிலும் அவனும் எதையோ யோசித்துக் கொண்டிருக்க, அவளோ கன்னங்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள்.

எப்படிக் காரிலிருந்து இறங்கினாள், எப்படி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் என்று அறியாது தனது அறைக்குள் நுழைந்தவள் கட்டிலில் விழுந்து வாய் விட்டு கதற ஆரம்பித்தாள்.

“ஏம்மா என்னை விட்டு போனீங்க? நீங்க இருந்திருந்தா என்னை இப்படி ஏமாந்து போக விட்டு இருப்பீங்களா?சின்ன வயசிலே இருந்து யாருமே என்கிட்ட அன்பா பேசி பழகினது இல்ல.இவர் ஆசையா, பாசமா பேசவும் நெருங்கி பழகிட்டேன்.ஆனா, உலகம் இவ்வளவு மோசமானது என்னால புரிஞ்சுக்க முடியாம போயிடுச்சே.நீங்க இருந்திருந்தா என்னை இந்த அளவுக்குப் போக விட்ருப்பீங்களா? தப்புப் பண்ணிட்டேன் மா..தப்பு பண்ணிட்டேன்’என்று தலையிலடித்துக் கொண்டு அழுது கரைந்தாள்.

அத்தியாயம் – 4

ரிஷியை இடுப்பில் வைத்துக் கொண்டு சமையலறையில் மும்மரமாகச் சமைத்துக் கொண்டிருந்தாள் தன்யா. வெகுநாட்களுக்குப் பிறகு அவளது பெற்றோர் வருவதால் மனதில் ஓர் பரபரப்பு. அப்பாவுக்குப் பிடித்த சாம்பார், அம்மாவுக்குப் பிடித்த காய், தங்கைக்குப் பிடித்த பாயசம் என்று பார்த்து பார்த்துச் செய்து கொண்டிருந்தாள்.

அவளது மனம் போலவே அன்று ரிஷியும் அதிகம் அழுது தொந்திரவு செய்யாமல் இருந்தான்.காதல் திருமணத்தைப் பெற்றோர் விரும்பவில்லை என்றாலும்,அவளது இப்போதைய வாழ்க்கையைப் பார்த்து மனமிரங்கி வந்து அவளைச் சேர்த்துக் கொண்டனர்.

அம்மா பேரனை கண்டு எல்லாவற்றையும் மறந்து விட்டார்.ஆனால், அப்பாவின் மனதில் மட்டும் அந்த வலி இருந்து கொண்டே தான் இருக்கிறது.பத்து வார்த்தைக்கு ஒரு வார்த்தையில் அது தெரியும்.

ராகவ் நல்ல மருமகனாகத் தான் நடந்து கொள்கிறார். ஆனாலும் அப்பாவின் மனம் குறையுடன் தான் இருக்கிறது என்று எண்ணியவளுக்குப் பெருமூச்சு எழுந்தது.காலங்கள் தான் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று யோசனையிலிருந்து மீண்டவள்,சமைத்தவற்றை எல்லாம் எடுத்து வந்து டைனிங் டேபிளில் அடுக்கினாள்.

அந்தநேரம் வாயில் மணியடிக்க, வேக நடையுடன் சென்று கதவைத் திறந்தாள்.அப்பா, அம்மாவை எதிர்பார்த்தவளுக்கு அங்கே ராகவைக் கண்டதும் இன்ப அதிர்ச்சி.

அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவனிடம் “நான் எதிர்பார்க்கவே இல்ல ராகவ்” என்றாள் மலர்ச்சியுடன்.

அவள் தோள்களில் கையைப் போட்டுத் தன்புறம் இழுத்தவன் விரல்களால் முகவடிவை அளந்து கொண்டே “இந்தச் சிரிப்பை, சந்தோஷத்தை பார்க்க தான் ஓடி வந்தேன்” என்றான் மென்சிரிப்புடன்.

அவன் காதை பிடித்துத் திருகியவள் “நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியாதா?ஷிவானியை பார்க்க தானே வந்தீங்க?” என்றாள் கிண்டலாக.

காலரை தூக்கிவிட்டு “ஐயாவை யார்-னு நினைச்ச? தன்யாவை தவிர யாரையும் பார்க்க மாட்டார்”.

வாசல் கதவு திறந்திருக்க உள்ளே நுழைந்த தன்யாவின் தங்கை ஷிவானி, இருவரையும் பார்த்து “ம்ம்..கதவை திறந்து வச்சிட்டு ரொமான்ஸா?” என்றாள்.

அவள் முதுகில் லேசாகத் தட்டிய தன்யாவின் அன்னை “சும்மா இரு!” என்று அதட்டினார்.

அவர்களைப் பார்த்ததும் “வாங்க மாமா! அத்தை!” என்றழைத்தான்.

மகளின் மலர்ந்த முகமும், மருமகனின் அன்பான வரவேற்பும் தயக்கத்தை விரட்ட “லஞ்சுக்கு வந்தீங்களா மாப்பிள்ளை” என்று கேட்டார் தன்யாவின் அப்பா.

அவரை அழைத்துச் சென்று சோபாவில் அமர வைத்தவன் “உங்களை எல்லாம் பார்க்கலாம்-னு தான் வந்தேன் மாமா” என்றான்.

முகத்தில் மெல்லிய புன்னகை பரவ, மனதிற்குள் மகள் நல்லவனைத் தான் தேர்ந்தெடுத்து இருக்கிறாள் என்று பாராட்டிக் கொண்டார்.

சிறிதுநேரம் குடும்ப விஷயங்கள் எல்லாம் பேசி முடித்துச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினான்.

“நான் கிளம்புறேன் மாமா!”

“சரி மாப்பிள்ளை! நாங்க சாயங்காலம் கிளம்பிடுவோம்.தன்யாவை அழைச்சுகிட்டு அங்க நம்ம வீட்டுக்கு வாங்க என்றார்.

“இப்போ புது ப்ராஜெக்ட்ல இருக்கேன்.ஒரு நாலு மாசம் பிஸி மாமா” என்றான் பவ்யமாக.

“சரி எப்போ முடியுதோ வாங்க மாப்பிள்ளை”.

அவர்களிடம் பேசிவிட்டு ஆபிஸ் வந்தவன் வேலையில் மூழ்கிப் போக, மாலை நேரம் வந்ததும் அவனது மனம் சுஷ்மிதாவை நோக்கித் திரும்பியது.அவளுக்குக் குறுஞ்செய்தி ஒன்றை தட்டிவிட்டு கணினியை பார்த்துக் கொண்டிருந்தான்.

முதல்நாள் அறிந்த உண்மையில் இருந்து வெளியில் வர முடியாமல் அடுத்தடுத்து அவன் பேசிய பேச்சுகள் மனதையே சுற்றி வர, இரவெல்லாம் விழித்து அழுது கரைந்து, களைத்துப் போயிருந்தாள் சுஷ்மிதா. இன்று ஆபிஸ் போக வேண்டுமா என்ற எண்ணத்துடன் வந்தவளுக்கு,ராகவ் வரவில்லை என்ற செய்தி கேட்டதும் நிம்மதியை அளித்தது.

ஆனால், மதியமே அவன் வந்ததைப் பார்த்ததும் மீண்டும் மனம் சுருங்கிப் போனது. இதோ, மாலையானதும் அவனிடமிருந்து மெசேஜ் வந்துவிட்டது. ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. இனி, தன்னால் அவனைச் சகித்துக் கொள்ள முடியாதென்பது. எப்படியாவது இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்று எண்ணினாள். அதற்கு அவகாசம் வேண்டியிருந்தது. தன்னையறியாமலே மொபைலை எடுத்தவள் ‘எனக்கு ஒருவாரம் அவகாசம் வேண்டும்’ என்று அனுப்பினாள்.

சிறிதுநேரத்திலேயே “வேற வேலை தேட போறியா? ஓகே! ட்ரை பண்ணு நான் தடுக்கமாட்டேன். ஆனா, என்னை ஏன் அவாய்ட் பண்ற?” என்று கேட்டிருந்தான்.

அவன் மேல் கொலைவெறியே எழுந்தாலும், இது நிதானாமாக இருக்க வேண்டிய நேரம் என்று உணர்ந்து பதில் அனுப்பினாள் “ப்ளீஸ்! என்னைப் புரிந்து கொள்ளுங்கள்” என்று.


அன்று அவனிடம் அவகாசம் கேட்ட பிறகு ஒருநிமிடத்தைக் கூட வீணடிக்காமல் தனக்குத் தெரிந்த எல்லா வழியிலும் வேலைக்கு முயற்சிக்க ஆரம்பித்தாள். மூன்று நாட்கள் கழிந்த நிலையில் எதுவுமே கைவரப் பெறாமால் மனம் சோர்ந்து போனது. ஒருவாரத்தில் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் அவனது ஆசைக்கு இணங்க வேண்டுமா? என்று கேட்டு கொதிநீரை ஊற்றியது மனம்.

தனக்குத் தெரிந்தவர்களை எல்லாம் தொடர்பு கொள்ள முனைந்தாள். மனதினுள் ஒரு வெறியே எழுந்தது.கண்டிப்பாக வேலை வாங்கிவிட வேண்டும்.போகும் முன் அவன் குடும்பத்தாரிடம் முகத்திரையைக் கிழித்துவிட்டு செல்ல வேண்டும் என்று எண்ணி தீவிரமானாள்.

நான்காவது நாள் அலுவலகத்தில் இருந்து வரும் போது வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த சூப்பர்-மார்க்கெட்டில் சில சாமான்களை வாங்கிக் கொண்டிருந்தாள். அப்போது தன்னைக் கடந்து சென்ற ஒருவனைக் கண்டதும், எங்கோ பார்த்திருக்கிறோமே என்றெண்ணினாள்.

விஜய் அம்மா கொடுத்த லிஸ்ட்டை வைத்துப் பொருட்களை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தான். தன் அருகில் யாரோ நிற்பது போல் தோன்ற நிமிர்ந்து பார்த்தவனுக்கு அவளைத் தெரியவில்லை. எங்கோ பார்த்திருக்கிறோம் என்று மட்டும் தோன்றியது.

அவளோ தயக்கத்துடன் “நீங்க ராகவ்வோட ரிலேஷனா?” என்று கேட்டாள்.

ஓரிரு முறை ராகவ்வை பார்க்க அவன் ஆபீஸ் வந்த போது பார்த்திருக்கிறாள். அவனுக்குச் சொந்தக்காரன் என்று மட்டுமே அறிந்திருந்தாள்.

அவளது கேள்வியில் நெற்றியை சுருக்கியவன் “ஆமாம்...நீங்க?” என்றான்.

“நான் அவர் கொலீக் சுஷ்மிதா” என்று சொல்லி கையை நீட்டினாள்.

அவனிடம் பேச நினைத்தாலும், அவளது உள்மனமோ இவனும் அவனை மாதிரி குணம் உள்ளவனாக இருந்து விட்டால் மேலும் நிலைமை மோசமாகி விடுமே என்றும் எண்ணம் தோன்றியது.

முதலில் சாதரணமாக அவளைப் பார்த்தவன், ராகவின் ஆபிசில் வேலை செய்கிறேன் என்றதுமே நினைவுக்கு வந்தது. ராகவுடன் அவளைப் பார்த்த சம்பவம். ஒருவித முகச் சுளிப்புடன் “ஐ அம் விஜய்” என்று பட்டும் படாமலும் கையைக் குலுக்கினான்.

ஆனால், எது வந்தாலும் மோதி பார்த்துவிட வேண்டியது தான் என்கிற எண்ணத்துடன் “நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். நீங்க ராகவ்க்கு என்ன வேணும்-னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டாள்.

இதை எதிர்பார்க்காதவன் சற்று கடுப்புடன் “நான் ராகவ்-கு தம்பி. உங்களுக்கும் அவனுக்கும் என்ன உறவுன்னு தெரிஞ்சுக்கலாமா?” படாரென்று போட்டுடைத்தான்.

அவனது நேரடி தாக்குதலில் அதிர்ந்து போய் அவன் முகத்தைப் பார்த்தவள், மனதிற்குள் ‘சபாஷ்! இவன் சரியான ஆள்! இவனை வச்சு தான் ராகவ்வோட ஆட்டத்தை அடக்கணும்’ என்று நினைத்து “அதைச் சொல்ல தான் உங்க கூடப் பேசணும்-னு சொல்றேன்” என்றாள்.


சுஷ்மிதாவுக்குக் கொடுத்த அவகாசம் அன்றுடன் முடிவதால் மனதில் உற்சாகம் பீறிட்டெழ, விசிலடித்துக் கொண்டு தலையை வாரிக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த தன்யா “என்ன ஐயாவுக்கு இன்னைக்கு ஒரே கும்மாளமா இருக்கு” என்றாள் கிண்டலாக.

அவள்புறம் திரும்பி இடையைப் பற்றித் தன்னருகே இழுத்தவன், உற்சாக மிகுதியில் நெற்றியில் ஒரு முட்டு முட்டி “சும்மா” என்றான்.

அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு “கிளம்புங்க...கிளம்புங்க..இன்னைக்கு ஒருநிலையில தான் நிக்கிறீங்க” என்று நொடித்துக் கொண்டு சென்றாள்.

அதே உல்லாசத்துடன் ஆபிசிற்கு வந்தவனுக்குச் சுஷ்மிதா வரவில்லை என்றதும் உற்சாகம் வடிந்து போனது.ஒருவேளை தன்னை அவாய்ட் செய்கிறாளோ? என்கிற எண்ணம் தோன்ற உடனே அவளுக்கு அழைத்தான். சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருக்கிறது என்றது. யோசனையுடன் வேலையைத் தொடர்ந்தான். எங்கே போகப் போறா? நம்மை மீறி போக முடியாது பார்த்துக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.

ஒருமணியளவில் தன்யாவிடமிருந்து அழைப்பு வந்தது.

அவசரமாக இருந்தாலே தவிர வேலை நேரத்தில் அழைக்க மாட்டாள் என்பதால் உடனே எடுத்தான்.

“ஹலோ..தனு என்னம்மா இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்கே?”

“என்னங்க நீங்க கிளம்பி உடனே வாங்க” என்றாள் பதட்டத்துடன்.

அவளின் பதட்டம் இவனைத் தொற்ற “ரிஷி நல்லா இருக்கான் தானே? என்ன பிரச்சனை தனு?”

“ம்ஹ்ம்..நீங்க கிளம்பி வாங்க..ப்ளீஸ்” என்றவள் அலைபேசியை வைத்துவிட்டாள்.

என்னவாக இருக்கும் என்கிற எண்ணத்துடனே பறந்தடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.

ஹாலிலேயே நகத்தைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்த தன்யாவைப் பார்த்ததும், வேகமாக அவளருகில் சென்றவன் “என்ன தனு? என்ன விஷயம் எதுக்கு வர சொன்ன?” என்றான் பதட்டத்துடன்.

“இந்த விஜய் இப்படி ஒரு வேலை பண்ணுவார்-னு நினைக்கவே இல்லைங்க” என்றாள்.

“என்ன பண்ணினான்” என்றான் எரிச்சலுடன்.

“கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கார்” என்றாள் சோர்வான குரலில்.

அவளது பேச்சில் அதிர்ந்தவன் “என்ன! கல்யாணமா? எப்போ?”

அதற்குள் அறைக்குள் இருந்து வெளியே வந்த விஜய் “ ஆமாம்ன்னா!” என்றபடியே வந்தான்.

வேகமாக அவனருகில் சென்றவன் “ என்னடா வேலை பண்ணியிருக்க. லவ் பண்ணினேன்னு கூடச் சொல்லல.திடீர்ன்னு வந்து கல்யாணம் பண்ணிகிட்டேன்னு சொல்ற?” என்றான் அதட்டலாக.

“ஆறுமாசமா ஒருத்தரை பழகுறோம்.இப்போ அவளுக்கு ஒரு அவசரம் அதனால உடனடியா கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை” என்றான்.

யோசனையாக முகத்தைச் சுருக்கியவன் “அப்பா, அம்மாவை போய்ப் பார்த்தியாடா?” என்று கேட்டான்.

“வீட்டுப் பக்கமே வராதீங்கன்னு சத்தம் போட்டு விரட்டி விட்டுடாங்க அண்ணா. நீயும் தான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணின ஆனா உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயமா?” என்றான் விஜய்.

“டேய்! நான் அப்பா, அம்மா கிட்ட பேசி சம்மதம் வாங்கிக் கல்யாணம் பண்ணினேன். ஆனா, நீ இப்படிக் காதலிச்சதையும் சொல்லாம, திடீர்ன்னு கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிற. இதுக்குக் கோபப்படாம கொஞ்சவா செய்வாங்க” என்றான் கடுப்புடன்.

“சரி விடுங்க! அத்தையும், மாமாவும் சமாதானம் ஆகும் வரை இங்கேயே இருக்கட்டும்” என்றாள் தன்யா.

“ம்ம்” என்றவன் சற்று யோசனையுடன் “ பொண்ணு எங்கேடா...அதை கேட்க மறந்திட்டேன் பாரு”

“உள்ளே இருக்காண்ணா” என்றவன் “சுமி..சுமி” என்றழைத்தான் விஜய்.

தம்பியின் மனைவியை வரவேற்கும் வகையில் ஆவலுடன் எதிர்பார்த்தது கொண்டு நின்றான். அறையிலிருந்து வெளிப்பட்டவளை பார்த்ததும் ஒருநிமிடம் இதயம் செயலிழந்து போனது.

அத்தியாயம் – 5

அவனது முகத்தை ஆராய்ந்தபடியே வந்த சுஷ்மிதா அதில் தெரிந்த அதிர்ச்சியைக் கண்டு உள்ளம் குளிர்ந்து போனாள்.

அவள் கையைப் பிடித்துத் தன்னருகே இழுத்த விஜய் “வா சுமி! அண்ணனை உனக்கு அறிமுகப்படுத்தனும்னு அவசியமில்லை. உங்க ரெண்டு பேருக்கும் தான் ஏற்கனவே பழக்கமிருக்கே” என்றான் இயல்பாக.

அதுவரை அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்த ராகவ் தம்பியின் வார்த்தையில் சூடு பட்டது போல் நிமிர்ந்தவன் “டேய்! சொல்றதை ஒழுங்கா சொல்லு” என்றான் படபடப்புடன்.

“ஒரே ஆபிஸ்ல வேலை பார்த்ததைத் தான் சொன்னேன்” என்றான் நக்கல் கூடிய குரலில்.

அதைக் கவனிக்கும் மனநிலை இல்லை ராகவிற்கு. எப்படிச் சுஷ்மிதாவை தம்பியின் வாழ்க்கையில் இருந்து விலக்குவது என்ற எண்ணமே மூளையைக் குடைந்தது. ஒருவேளை இவர்கள் பொய் சொல்லுகிறார்களோ? என்றும் யோசித்தான். சுஷ்மிதா நடிக்கக் கூடும் ஆனால் விஜய் இப்படி இயல்பாக இருக்க மாட்டானே? அவனுக்கு உண்மை தெரிந்திருந்தால் என்னை அடிக்கவும் தயங்க மாட்டான். அதனால் இது உண்மை கல்யாணமாகத் தான் இருக்கக் கூடும் என்று எண்ணினான். தன்னுடய சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள “கல்யாணத்தை எந்தக் கோவிலில் பண்ணிகிட்டீங்க?” என்றான் எதார்த்தமாக.

“கோவில் இல்லண்ணா. ரெஜிஸ்டர் ஆபிஸ்ல தான் நடந்தது. என்னோட பிரெண்ட்ஸ் ரெண்டு பேர் வந்து சாட்சி கையெழுத்து போட்டாங்க. அவளுக்கு அவ பிரெண்ட்ஸ் ரெண்டு பேர் கையெழுத்துப் போட்டாங்க”.

திருமணத்தை ரெஜிஸ்டர் பண்ணிவிட்டான் என்றதும், மேலும் மனம் சுணங்கியது. அதுவரை சுஷ்மிதாவின் பக்கம் திரும்பாதவன் “ உன் பிரெண்ட்ஸ் யார்? நம்ம ஆபிஸ்ல உள்ளவங்களா?” என்று கேட்டான்.

“ இல்ல ராகவ்! இவங்க வேற” என்றாள்.

அவள் ராகவ் என்றழைத்ததும் “சுமி! இனி, ராகவ்ன்னு கூப்பிடாதே. அம்மா கேட்டால் கோவப்படுவாங்க. மாமான்னு கூப்பிடு” என்றான் விஜய்.

அப்போது அங்கே வந்த தன்யா “ ஆமாம் சுமி! மாமான்னு சொல்லு” என்றாள்.

அவர்களின் பேச்சில் எரிச்சலடைந்தவன் “தனு! தலைவலிக்குது காபி எடுத்திட்டு வரியா?” என்றான்.

அதற்குள் விஜய்க்கு ஆபிசிலிருந்து போன் வர அவன் பேசிக் கொண்டே அங்கிருந்து வெளியே சென்றான். காபி போட சென்ற தனுவை ரிஷியின் அழுகை தடுக்க, “சுமி! நீ கொஞ்சம் போட்டுக் கொடுத்திடேன்” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

தான் செய்த ஒரு தவறு தன் வாழ்க்கையையும், தம்பியின் வாழ்க்கையையும் பந்தாடுகிறது என்று நினைத்து ஆயாசமாகக் கண்மூடி சோபாவில் அமர்ந்திருந்தான்.

காபியுடன் அவனருகில் வந்த சுஷ்மிதா மிகக் குழைவான குரலில் “மாமா! மாமா! காப்பி” என்றாள்.

அவளது அழைப்பில் உடலெங்கும் நெருப்பை வாரி கொட்டியது போல உணர்ந்தவன், உக்கிரமாக முறைத்து “பல்லை பேத்துடுவேன்! என்ன திமிரா?” என்றான் ஆங்காரமாக.

அவளோ கொஞ்சமும் அசராமல் “ நீங்க என் கணவரோட அண்ணன். உங்களை மாமான்னு கூப்பிடாம வேற எப்படிக் கூப்பிட?” என்று கிண்டலாகக் கேட்டவள் சற்று யோசித்து “ ஒருவேளை நீங்க நான் ஆசையா கூப்பிடுறேன்னு நினைச்சிட்டீங்களோ?” என்றாள்.

அவளுடைய பேச்சில மேலும் கோபமடைந்தவன் “ ஒழுங்கு மரியாதையா என் தம்பி வாழ்க்கையை விட்டு ஓடி போயிடு” என்றான் மிரட்டலாக.

“ஏன் மாமா! உங்களுக்கு ப்ரீ-பெய்ட்டாக இருக்கிறதை விட உங்க தம்பிக்குப் போஸ்ட்- பெய்ட்டாக இருக்கிறது பெட்டெர் இல்லையா?”

அதைக் கேட்டவனது உள்ளம் கொதிக்க “ஏய்” என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டினான்.

அதைக் கண்டவள் “கூல் மாமா! கூல்! இதுக்கே டென்ஷன் ஆனா எப்படி? இன்னும் எவ்வளவோ இருக்கே. நீங்க வேற ஹெல்த் கான்சியஸ். இதுக்கே டென்ஷன் ஆனா உங்க ஹெல்த் வீணா போய்டும் மாமா” என்றாள் நக்கலாக.

அவளது பேச்சில் காயமடைந்தவன் மேலும் எதுவும் பேசும் முன் அங்கே வந்த தனுவைப் பார்த்ததும் வாயை மூடிக் கொண்டான்.

ரிஷியை தூக்கிக் கொண்டு வந்த தன்யா அவனைச் சுமியிடம் கொடுத்துவிட்டு ராகவின் அருகில் சென்றவள் “என்னங்க தலைவலி போச்சா? மாத்திரை எதுவும் வேணுமா?” என்றாள் கரிசனமாக.

அதுவரை இருந்த எரிச்சல் எல்லாம் மறைய அவளது அன்பான வார்த்தை மனதை சாந்தப்படுத்த “வேண்டாம் தனு. எனக்கு முக்கியமான வேலையிருக்கு நான் கிளம்புறேன்” என்று கிளம்பினான்.

அந்தநேரம் உள்ளே வந்த விஜய் “ என்னன்னா கிளம்பிட்டீங்களா? உங்க கிட்ட எங்க ரிசெப்ஷன் பத்தி பேசலாம்ன்னு நினைச்சேன்” என்று சொல்லி அடுத்தக் குண்டை தூக்கிப் போட்டான்.

அதைக் கேட்டு உள்ளுக்குள் அடங்கி இருந்த எரிச்சல், கோபம் எல்லாம் சேர்ந்து வெடிக்க “ஏண்டா எல்லாத்திலேயும் அவசரம் தானா?” என்று எரிந்து விழுந்தான்.

அவனை வித்தியாசமாகப் பார்த்த விஜய் “என்ன இவ்வளவு டென்ஷன் ஆகுற இன்னைக்கு?” என்றான் கூலாக.

எதையும் கவனிக்கும் மனம் இல்லாதவன் போல் விஜயிடம் திரும்பியவன் “இங்க பார்! நான் சாயங்காலம் வந்ததும் உன்னோட பேசணும். அதுவரை இந்த ஐடியா எல்லாம் தூக்கி வச்சிட்டு வேற ஏதாவது வேலையிருந்தா பாரு” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

அவனிடம் பேசிவிட்டு வந்தவன் மனமோ குதிரையின் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருந்தது. இப்படி ஒரு இடியாப்ப சிக்கலில் தன்னை மாட்டி விட்டு விட்டாளே என்றெண்ணி சுஷ்மிதாவின் மேல் கொலைவெறியே எழுந்தது. நான் தான் அவளைப் பற்றிச் சாதரணமா நினைச்சிட்டேனோ? ஆதரவுக்கு யாருமில்லை, கொஞ்சம் மிரட்டினா பயந்து அடங்கிடுவா, அவளால பிரச்சனை எற்படாதுன்னு நினைச்சது தப்போ? என்று பல்வேறு யோசனையுடன் சென்றான்.

அவளுக்கு என்ன ஒரு நெஞ்சழுத்தம் இருக்கும். என் தம்பியை கல்யாணம் பண்ணிக்க. என்னால சொல்ல முடியாதுன்னு நினைச்சு தானே ஆடிகிட்டு இருக்கா? வரட்டும் ! இன்னைக்கே அவன்கிட்ட பேசி இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் என்று நினைத்தான்.

மாலைவரை நேரத்தை தள்ளி வேலையைப் பார்த்தவன், என்றுமில்லா அதிசயமாக அன்று சீக்கிரமே வீடு திரும்பினான். வீட்டிற்குள் நுழைந்ததுமே அவனது பிபியை எகிற வைக்கும்படி விஜயும்,சுஷ்மிதாவும் அருகருகே அமர்ந்து கொண்டு ரிஷியை கொஞ்சிக் கொண்டிருந்தனர்.அதை பார்த்ததும் உள்ளமெல்லாம் எரிய, அப்படியே நின்றான். அவர்களோ அவனைக் கவனிக்காமல் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டு அமர்ந்திருந்தனர். விஜய் அவளைக் காதலுடன் பார்ப்பதும், அதைக் கண்டு அவள் வெட்கப்படுவதையும் கண்டவன் பல்லை கடித்துக் கொண்டு நின்றான்.

அவர்கள் தன்னைக் கவனித்து விலகுவார்கள் என்று காத்திருந்து, விலகாமல் போனதும் பொறுக்க முடியாமல் தொண்டையைக் கனைத்தான். அவனைக் கண்டு அவசரமாக எழப் போன சுமியை கையைப் பிடித்துத் தன்னருகேயே அமர வைத்துக் கொண்டான் விஜய். அதைக் கண்டு முகச் சுருங்கிய ராகவ் “என்னடா நீ இன்னைக்கு ஆபிஸ் போகலையா? இங்கேயே சுத்திகிட்டு இருக்க” என்றான்.

அவனை ஒருமாதிரியாகப் பார்த்த விஜய் “ அண்ணா எங்களுக்கு இன்னைக்குத் தான் கல்யாணம் ஆகியிருக்கு. ஆபிஸ் போகலையான்னு கேட்கிற” என்றான் நக்கலாக.

அதைக் கேட்டவன் “சரி! ஏதோ தெரியாம கேட்டுட்டேன் விடு.நான் போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வரேன்.உன்னோட கொஞ்சம் பேசணும்” என்று சொல்லி நகர்ந்தான்.

தங்களது அறைக்குள் நுழைந்தவனுக்கு அங்கே இருந்த நிலைமையைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது. தன்யா அவர்களது அறையை முதலிரவிற்காகத் தயார் செய்து கொண்டிருந்தாள்.அதைப் பார்த்ததும் சொல்ல முடியாத கோபம் உச்சியில் ஏற “ஏய்! என்ன பண்ணிக்கிட்டு இருக்க? இதென்ன கூத்து” என்றான்.

அவனது சத்தத்தில் தூக்கி வாரி போட திரும்பியவள் “ ஏங்க மெதுவா பேச மாட்டீங்களா? அத்தையும், மாமாவும் இந்தக் கல்யாணத்தை ஒத்துகிட்டு இருந்தா ஏற்பாடு பண்ணி இருப்பாங்க தானே.அதுதான் பெரியவங்களா இருந்து நாம செய்யணும்ன்னு பண்ணிட்டு இருக்கேன்.இதுக்கேன் இவ்வளவு அதிர்ச்சி” என்றாள்.

எரிச்சல் கூடிய குரலில் “மடச்சி! மடச்சி! அப்பா அம்மாவே இந்தக் கல்யாணத்தை ஒத்துக்கல.இது இப்போ ரொம்ப அவசியமா” என்றான்.

அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் வேலையில் கவனத்தை வைத்தாள். அதற்கு மேலும் பொறுக்க முடியாது போக இருகைகளிலும் முகத்தைத் தாங்கிக் கொண்டு படுக்கையில் அமர்ந்தான். எந்தப் பக்கம் போனாலும் இடிக்கிறதே, இந்தப் பிரச்னையை எப்படிச் சரி செய்வது என்று குழம்பி போனான்.நான் பேசுவதை விஜய் சரியாகப் புரிந்து கொள்வானா? என்கிற பயமும் எழுந்தது. தலையைப் பிடித்துக் கொண்டு யோசித்தவனின் அருகில் வந்த தன்யா “உங்களுக்கு இன்னக்கு என்னவோ ஆச்சு? நீங்க சரியே இல்லை? என்ன பிரச்சனை உங்களுக்கு?” என்று கேட்டாள்.

அதற்குப் பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தவனைப் பார்த்து “ஆபிஸ்ல எதுவும் பிரச்சனையா?” என்றாள் மீண்டும்.

அவளது கேள்வியில் கடுப்பாகிப் போனவன் “கொஞ்ச நேரம் என்னைத் தனியா விட்டுட்டு போறியா? சும்மா நை..நை-ன்னு படுத்திகிட்டு”என்று கத்தினான்.

. எப்பொழுதும் இப்படி அவன் கோபப்படும் போது கண் கலங்கி நிற்பவள் இன்று கொஞ்சமும் அசராது “எழுந்திரிக்கிரீங்களா? ஹாலில் போய் உட்காருங்க. என் வேலையைக் கெடுத்துகிட்டு” என்றாள் சற்று எரிச்சல் கலந்த குரலில்.

அதைக் கேட்டவன் அதிர்ந்து போய் அவள் முகத்தைப் பார்த்தான். அவளோ தன் காரியத்தில் கண்ணாக இருந்தாள். அதைக் கண்டு நீண்ட பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தான்.

அத்தியாயம் – 6

மனைவியின் கடுப்பான பதிலிலும் மனதில் ஓடிக் கொண்டிருந்த குழப்பத்தாலும் தலை பாரமாகிப் போனது. ஹாலில் சென்று அமர்ந்தவனுக்கு அங்கு விஜயும், சுஷ்மிதாவும் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு, அவளை எப்படியாவது தம்பியிடம் இருந்து பிரித்துவிட வேண்டும் என்கிற எண்ணம் வலுப்பெற்றது.

மெல்ல எழுந்து அடுத்த அறைக்குச் சென்றவன் முகம் கழுவி, தன்னை ஒருநிலைப்படுத்திக் கொண்டு, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தான். சிறிதுநேர யோசனைக்குப் பின்னர் மனம் தெளிவடைந்தது.

வேகமாக ஹாலிற்கு வந்தவன் “விஜய் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

சுமியுடன் பேசிக் கொண்டிருந்தவன் அண்ணனின் அழைப்பில் நிமிர்ந்து பார்த்து “ஒ..பேசலாமே.சொல்லுங்க அண்ணா என்ன பேசணும்” என்று கேட்டான்.

அவன் முகத்தைப் பாராது “இங்க வேண்டாம் விஜய். கீழ போகலாம் வா” என்றான்.

சோபாவில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தவன் “அண்ணா இங்கே இருக்கிறது என்னோட மனைவியும், அண்ணியும். இவங்க ரெண்டு பேரும் என் வாழ்க்கையில் முக்கியமானவங்க. இவங்களுக்குத் தெரியாம நாம என்ன அப்படிப் பேசப் போறோம். இங்கேயே பேசலாம்” என்றான்.

அதைக் கேட்டு சற்றுக் கடுப்பானவன் “இதோ பார் விஜய்! எல்லா விஷயத்தையும் மனைவி கிட்ட சொல்லனும்னு அவசியம் கிடையாது. நமக்குன்னு பர்சனல் ஸ்பேஸ் வேணும். நீ கீழே வா” என்று கடுமையாகச் சொல்லிவிட்டு வேகமாகச் சென்றான்.

அவன் கோபத்துடன் செல்வதைக் கண்ட விஜயும் பின்னோடு சென்றான். கீழே சென்று நின்ற பின்னரும் மனம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. தான் சொல்வதைக் கேட்டு சுஷ்மிதாவை தனது வாழ்க்கையில் இருந்து விலக்கி வைத்து விடுவானா? இல்லை தன்னிடம் கோபித்துக் கொள்வானா என்று புரியாமல் நின்றான்.

எதிரே தெரிந்த இருட்டை வெறித்துக் கொண்டிருந்தவனின் தோளில் லேசாகத் தட்டி “ என்னன்னா? இன்னைக்கு ரொம்ப டென்ஷனா இருக்கிற மாதிரி தெரியுது? என்ன விஷயம் சொல்லுங்க” என்றான்.

மெல்ல அவன் புறம் திரும்பி அவனைக் கூர்ந்து நோக்கியவன் “ நீ எத்தனை நாள் என்னோட ஆபிஸிற்கு வந்துருக்க விஜய்? ஒரு மூணு இல்ல நாலு தடவை இருக்குமா?” என்றான் கேள்வியாக.

அவன் எதைப் பற்றிப் பேசப் போகிறான் என்றுணர்ந்த விஜய் “வாங்க அந்தப் பக்கம் போய் உட்கார்ந்து பேசுவோம்” என்றழைத்து விட்டு நடந்தான். அவனோடு ஒன்றும் பேசாமல் கூடவே சென்றான் ராகவ்.

அங்கு இளைப்பாறுவதற்காகப் போடப்பட்டிருந்த கல்லில் அமர்ந்தவன் “என்ன கேட்டீங்க? மூணு, நாலு தடவையான்னு தானே? நாலு தடவை வந்திருக்கேன் உங்களைப் பார்க்க. ஆனா, முதல்முறை வரும் போதே சுமி என் மனசில் வந்துட்டா” என்று சொல்லியவன் விழிகள் அவனுக்குச் சுமி மேல் இருந்த காதலை வெளிப்படுத்தியது.

அதைக் கண்டு முகம் சுளித்து “ எப்போ நீ அவ கிட்ட உன்னோட காதலை சொன்ன?”

“அன்னைக்கே தான் ராகவ். உன்னைப் பார்த்திட்டு போன பிறகு. அவளை மிஸ் பண்ணிடுவோமொன்னு ஒரு பயம் வந்துது. அதனால் அன்னைக்குச் சாயங்காலமே அவளைப் பார்த்து ப்ரொபோஸ் பண்ணிட்டேன்”.

அவன்புறம் திரும்பியவன் “அவ அதுக்கு என்ன சொன்னா?”

“அவ மறுத்திட்டா. நீங்க யாரு என்னன்னு தெரியாது. திடீர்ன்னு வந்து காதலை சொன்னா நான் ஒத்துக்கனுமான்னு கேட்டா.”

“ஒ..”யோசனையாக “அப்புறம் எப்போ தான் உன்னோட காதலை ஏத்துகிட்டா?”

“அவ மறுத்ததும் அப்படியே விடாம, நான் அவளைக் காண்டக்ட்லேயே இருந்தேன். போன வாரம் தான் என்னை அவளே கூப்பிட்டு பேசினா. உங்க காதலை ஒத்துகிறேன் ஆனா ஒரு கண்டிஷன். கல்யாணம் உடனே நடந்தாகனும்னு சொன்னா” என்றான்.

அதைக் கேட்டதும் முஷ்டி இறுக “அவ சொன்னதைக் கேட்டு உடனே நீ என்ன ஏது என்று கேட்காம ஒத்துகிட்ட” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

அவனது கடுப்பான குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தவன் “பாவம் ராகவ். பெத்தவங்களும் இல்லை, சொந்தங்களும் யாருமில்லை அவளுக்கு” என்றான் வருத்தமான குரலில்.

சலிப்பான முகபாவத்தைக் காட்டி “இங்கே பார் விஜய்! அவளோட ஒரே ஆபிசில் வேலை பார்த்ததனால அவளைப் பத்தி எனக்கு உன்னை விட அதிகம் தெரியும்ன்னு நான் சொல்றதை நீ நம்புவேன்னு நினைக்கிறேன்” என்றான்.

பதிலேதும் சொல்லாமல் ராகவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான். சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கியபடியே “ அவளுக்கு ஆபிசில் நல்ல பேர் இல்லை விஜய்” என்றான்.

லேசாகப் புருவத்தை உயர்த்தி “ அப்படியா?” என்றான் இயல்பாக.

எந்தவித எதிர்ப்போ கோபமோ படாமல் மிகச் சாதரணமாக அவன் கேட்கவும் கடுப்பாகி போன ராகவ் “ யார் கூடவோ நெருங்கி பழகுறதா கேள்விப்பட்டேன்”.

நன்றாக ராகவின் பக்கம் திரும்பி அமர்ந்தவன் “அது யார்னு முதலில் சொல்லுங்க? அப்புறம் என் மனைவியை நான் சந்தேகப்படுறதா வேண்டாமான்னு யோசிக்கிறேன்” என்றான் நக்கலான குரலில்.

சற்று அதிர்ந்து போனவன் “ இங்கே பார் விஜய்! என்னால இவ்வளவு தான் சொல்ல முடியும். அவ நம்ம குடும்பத்துக்கு ஏத்தவ இல்லை. உன் வாழ்க்கையை நீ தேவையில்லாம கெடுத்துக்கிற” என்றான் ஆவேசமாக.

மெல்ல எழுந்து நின்று சோம்பல் முறித்து “ முடிச்சிட்டீங்களா? இப்போ சொல்றேன் கேட்டுகோங்க. அவ எப்படிப்பட்டவளா இருந்தாலும் என் மனைவி. அவளை இந்த மாதிரி பேச யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன்” என்றான் அழுத்தமாக.

“இல்ல..” என்றவனைத் தடுத்த விஜய் “ நேரமாச்சு வாங்க போகலாம். இதைப் பத்தி மேற்கொண்டு பேச நான் தயாரில்லை” என்று விட்டு விறுவிறுவென்று அங்கிருந்து சென்றான்.

தான் சொன்னால் காது கொடுத்து கேட்பான் என்கிற நம்பிக்கையில் பேசியவனுக்கு அவனது நடத்தை எரிச்சலை உண்டாக்கியது. இப்போ என்ன செய்வது? எப்படி அவளை விஜயின் வாழ்வில் இருந்து விரட்டுவது? எதைச் செய்தாலும் தனுவிற்குத் தெரியாமல் செய்ய வேண்டும். இப்போது நாம் பேசியதை விஜய் அவளிடத்தில் சொல்ல மாட்டான் என்றாலும் சுஷ்மியிடம் கண்டிப்பாகச் சொல்லுவான். “ச்சே”..போயும் போயும் அவளிடத்தில் தோற்றுக் கொண்டிருக்கிறோமே என்று எண்ணியவனுக்கு மனது கசந்து போனது. நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். அதுவும் அவன் மனது போல வெறுமையாக இருந்ததது. பார்வையைத் தழைத்தவனுக்குத் தங்களது எதிர் வீட்டு பாட்டி பால்கனியில் நின்று தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. எப்பொழுதும் அவரது பார்வையில் இருக்கும் கனிவு மறைந்து போய் இகழ்ச்சியாகப் பார்ப்பது போல் தோன்றியது.

தலையை வேகமாக உலுக்கி எதைப் பார்த்தாலும் நமக்கு அப்படித் தோன்றுகிறது. இந்தப் பிரச்னையை எப்படிச் சரி செய்வது? சுஷ்மியிடம் சற்று நிதானத்துடன் நடந்திருக்க வேண்டுமோ? அவசரப்பட்டு விட்டோமோ? என்று பல்வேறு கோணங்களில் யோசித்துக் கொண்டே நின்றான். சிறிது நேரம் நின்றிருந்தவனுக்குக் கால் வலிக்கச் சரி எதுவாக இருந்தாலும் அவளிடம் மீண்டுமொரு முறை பேசிப் பார்ப்போம் என்று எண்ணியபடியே வீட்டையடைந்தான்.

அங்கே விஜய் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கத் தன்யாவும், சுஷ்மிதாவும் சமையலறையில் வேலையாய் இருந்தனர். என்னவோ ஓட்டிப் பிறந்த ரெட்டையர்கள் போல அவள் இவளை சுமி என்றழைப்பதும், இவள் அவளை அக்கா என்றழைப்பதும் ஒரே குலாவலாக இருந்தது. அதைக் கேட்ட பொழுது அடங்கிக் கிடந்த கோபம் மீண்டும் மேலெழுந்தது.

“தனு! சாப்பாடு ரெடியா?” என்றான் கடுப்பாக.

புடவையில் கையைத் துடைத்தபடியே வந்தவள் “ வந்துட்டீங்களா? ஒரு பத்துநிமிஷம் இருங்க. சுமி ஏதோ புது டிஷ் பண்றேனா. ரெடியானதும் சப்பிட்டிடலாம்”.

தம்பியின் மறுப்பு, சுஷ்மிதாவின் நக்கலான பேச்சு எல்லாம் சேர்ந்து கொள்ள “கண்டவ சமைக்கிறது எல்லாம் என்னால சாப்பிட முடியாது. உன்னால முடிஞ்சா பண்ணி கொடு” என்றான் ஆங்காரமாக.

அதைக் கேட்டதும் கொஞ்சமும் அசராமல் விஜயிடம் திரும்பி “ அந்தக் கதவை கொஞ்சம் சாத்துரீங்களா விஜய்” என்றாள்.

கதவு சாத்தப்படும் வரை பேசாமல் இருந்தவள் “ உங்களுக்கு என்ன பிரச்சனை? இன்னைக்கு என்னவோ புதுசா அடிக்கடி தலைவலி வருது. தம்பி பொண்டாட்டின்னு தெரிஞ்சும் கன்னாபின்னான்னு பேசுறீங்க? என்ன ஆச்சு?”.

மனைவியின் பேச்சை கேட்டதும் தன்னை மறந்து உளறி இருப்பதை உணர்ந்து விழித்தான். இப்போ என்ன சொல்லி இதைச் சமாளிப்பது என்று புரியவில்லை. விஜயோ கொலைவெறியோடு பார்த்துக் கொண்டிருந்தான். சுஷ்மிதா சமையலறையில் இருந்து நக்கலாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள். இதென்ன இப்படி எக்குதப்பாக மாட்டிக் கொண்டேனே என்று மனதிற்குள் புலம்பத் தொடங்கினான்.

“அது ஒண்ணுமில்ல. ஆபிசில் கொஞ்சம் பிரச்சனை” என்று மெலிதாக முனங்கி கொண்டு சோபாவில் அமர்ந்தான்.

அவனை ஒரு மார்கமாகப் பார்த்துக் கொண்டு நகர்ந்த தன்யா “ சுமி! செஞ்ச வரை போதும். மீதியை நான் பார்த்துக்கிறேன். நீ போய்க் குளிச்சிட்டுப் புதுப் புடவையைக் கட்டு. சாப்பிட்டு முடிச்சதும் நானே வந்து அலங்காரம் பண்ணி விடுறேன்” என்று சொல்லி மேலும் அவன் மனதில் எரிந்து கொண்டிருந்த கனலில் பெட்ரோலை ஊற்றினாள்.

அதற்கு மேலும் போருக்க முடியாமல் போக “ எனக்குச் சாப்பாடு வேண்டாம்” என்று ஆத்திரமாகச் சொல்லிவிட்டு அடுத்த அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.

இப்படி அவன் கோபப்படும் நேரங்களில் எப்பொழுதும் தன்யா அவனைக் கொஞ்சி, கெஞ்சி உணவை தராமல் இருக்க மாட்டாள். ஆனால், இன்றோ அவனிருந்த அறை பக்கம் எட்டியும் பார்க்காமல் இருந்தாள். கட்டிலில் படுத்திருந்தவனின் மனம் வெளியில் கேட்டுக் கொண்டிருந்த பேச்சு சத்ததிலேயே சுழன்றது. மெல்ல அவனுக்கு ஒன்று உரைத்தது. தான் மட்டும் இன்று வித்தியாசமாக நடந்து கொள்ளவில்லை. தன்யாவும் ஏனோ தன்னைத் தவிர்க்கிறாள் என்று புரிந்தது.அவர்கள் அனைவரும் பேசி சிரித்துக் கொண்டே சாப்பிடுவது கேட்டது. அவனால் நம்ப முடியவில்லை. தன்யா ஒருநாளும் அவனை இப்படிப் பசியுடன் இருக்க விட மாட்டாள். என்ன ஆயிற்று அவளுக்கு. விஜயின் காதலுக்காகத் தன்னிடம் முறைக்கிராளா? அவனால் நம்ப முடியவில்லை.

சிறிதுநேரம் வெளியே அமைதியாக இருந்தது. பக்கத்து அறையில் கிசுகிசுப்பாகப் பேசிக் கொள்வதும், மெல்லிய குரலில் சிரிப்பதுமாகச் சத்தம் கேட்டது. அரைமணி நேரம் கடந்த நிலையில் தன்யா உள்ளே வந்தாள். கண்களை மூடி உறங்குபவன் போல் படுத்துக் கொண்டான். ஆனால், அவளோ அவன் பக்கம் திரும்பாது ரிஷியை மட்டும் பார்த்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவள் சென்றதும் மெல்ல எழுந்தவன் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான். ஹாலில் விளக்குகள் அணைக்கப்படிருக்க, அடுத்த அறையில் மட்டும் விளக்குகள் எரிந்தது. பசியில் வயிறு ஓவென்று கத்த, டைனிங்கில் இருந்த தண்ணீரை ரெண்டு மூன்று டம்பளர் பருகினான். அவனது கண்களோ பக்கத்து அறையையே நோட்டம் விட்டது. அப்போது கதவு திறக்க வேகமாக் வெளியில் வந்த சுஷ்மிதா ராகவை பார்த்ததும் ஒருநிமிடம் தயங்கி நின்றவள், பின் வேகமாகச் சமையலறைக்குள் சென்றாள்.

விஜய் வருகிறானா என்று என்று பார்த்தவிட்டு அவசரமாகச் சமையலறைக்குள் நுழைந்தவன் சுஷ்மிதாவின் கையைப் பிடித்து முறுக்கியவன் “ ஏய்! ஒழுங்கு மரியாதையா ஏதாவது டிராமா பண்ணி என் தம்பியை விட்டு ஓடி போயிடு. இல்லேன்னா நடக்கிறதே வேற” என்று மிரட்டினான்.

அவனது மிரட்டலை கண்டு அசராது “ போகலேன்னா என்ன பண்ணுவீங்க?” என்றாள் நக்கலாக.

முகத்தை அருவெறுப்பாக வைத்துக் கொண்டு “உனக்கு வெட்கமா இல்லை. என் கூட” என்றவன் “சை” என்று கையை உதறினான்.

கிண்டலாகச் சிரித்து “உன் கூட..உன் கூட..ம்ம்..கம்ப்ளிட் தி சென்டன்ஸ் ராகவ். உங்க தம்பின்னா ஒன்னு அடுத்தவன்னா ஒன்னு இல்ல. உடம்பெல்லாம் பத்தி எரியிற மாதிரி இருக்கில்ல” என்றாள்.

அவளது பேச்சில் கோபம் பொங்கி எழ பாய்ந்து அவளது கழுத்தைப் பிடித்தான். அந்தநேரம் ரிஷியைத் தூக்கிக் கொண்டு அங்கே வந்த தன்யா இருவரையும் ஒரு பார்வை பார்த்தவள் சுஷ்மிதாவை பார்த்து “சுமி! ரிஷியை வச்சுக்கோ. பால் கலக்கணும்” என்றாள் எதுவுமே நடக்காத தொனியில்.

தன்யாவை பார்த்ததும் பதறிப் போன ராகவ் என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி போய் நின்றான். அவன் ஒருவன் அங்கிருப்பதைக் கண்டு கொள்ளாமல் தன்னுடைய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன்னை ஒருநிலைப்படுத்திக் கொண்டவன் “அது வந்து தனு..நா..நா..ன்”என்று ஆரம்பித்தவனைத் திரும்பி அனல் பார்வை பார்த்தாள். அதைக் கண்டு வாயை மூடிக் கொண்டான்.

“போய் ஹாலில் உட்காருங்க பேசணும்” என்றாள் அழுத்தமாக.

அவளது குரலில் தெரிந்த கடுமையில் ஒன்றும் பேசாமல் சென்று சோபாவில் அமர்ந்தான். பாலை கலந்து ரிஷியை தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றவள் பத்துநிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்தாள்.

சுஷ்மிதாவை பார்த்து “விஜயை கூட்டிட்டு வா” என்றாள்.

தன்யாவின் நடவடிக்கையில் குழம்பி போய் இருந்த சுஷ்மி, விஜயை அழைத்து வந்தாள்.

வரும்போதே அண்ணியின் கடுமையான முகமும், அண்ணனின் பயம் கலந்த பார்வையையும் கண்டவன் சுமியிடம் என்னவென்று பார்வையாலேயே கேட்டான். அவளோ அவனைக் கவனியாதவள் போலச் சென்று ஓரமாக நின்று கொண்டாள்.

அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன் “என்ன பேசணும் அண்ணி? எதுக்கு வர சொன்னீங்க?” என்று கேட்டான்.

மௌனமாக அவனை ஒரு பார்வை பார்த்தவள் “ உங்களுக்கும் சுமிக்கும் என்ன உறவு?” என்றாள்.

அவளது கேள்வியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவன் “என்ன..அண்ணி திடீர்ன்னு இப்படி ஒரு கேள்வி?”

“கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க” என்றாள் கடுமையாக.

சுமியை திரும்பி பார்த்துவிட்டு “ என் மனைவி” என்றான்.

இவர்களின் பேச்சு போகும் திசையை உணர்ந்து இடைப் புகுந்த ராகவ் “ தனு! எதுவா இருந்தாலும் நாம பேசிக்கலாம் வா” என்று எழுந்தான்.

அவனை எரித்து விடுபவள் போல் பார்த்து “ எதுவா இருந்தாலும் இங்கே தான் பேசணும்” என்றாள் ஆத்திரமாக.

அவளது கோபத்தின் தன்மையை உணராது அவளருகில் சென்றவன் “ நீ தப்பா புரிஞ்சுகிட்ட தனு..” என்று ஆரம்பித்தவனைக் கையைத் தூக்கி தடுத்து நிறுத்தியவள் “ இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படி நடிச்சு ஏமாத்த போற” என்றாள் ஆங்காரமாக.

அதுவரை ஏதோ சாதாரணப் பேச்சு என்று அமர்ந்திருந்த விஜய்-க்கு தன்யாவின் கேள்வி அதிர்ச்சியைக் கொடுக்க “அண்ணி!” என்று கத்தினான். சுமியோ அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நின்றாள்.

ராகவிற்குக் கை காலெல்லாம் நடுங்க தன்யாவை பார்த்துக் கொண்டே நின்றான்.

கண்களில் கனல் தெறிக்க அசுரனை அழித்த தேவியைப் போன்று கோபாவேசத்துடன் நின்றிருந்தாள் தன்யா.

விஜயை பார்த்து “ அண்ணனை காப்பாத்த நடிக்கிறீங்களா விஜய்?” என்றாள் நக்கலாக.

அவளது கோபம் கண்டு பேச இயலாமல் “இல்ல..அண்ணி..அது..” என்று தழுதழுத்தான்.

அதற்குள் தன்னைச் சமாளித்துக் கொண்ட ராகவ் “ தனு! தனு! நீ எதையோ தப்பா புரிஞ்சுகிட்டு பேசுற. விஜய் இந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவசரபட்டுடான்” என்றான் சாதரணமாக.

எரிக்கும் பார்வையுடனே “அவசரப்பட்டது விஜய் இல்ல. நான் தான்! உன்னை மாதிரி ஒருத்தன உருகி உருகி காதலிச்சனே அதுதான் தவறு” என்றாள் கரகரக்கும் குரலுடன்.

அவள் கையைப் பிடித்துக் கொள்ளும் எண்ணத்துடன் அருகில் சென்றவன் “ இல்ல தனும்மா! நீ ஏன் இப்படிப் பேசுற” என்றவனைப் பார்த்து “பேசாதே! போதும் நீ பேசி ஏமாத்தியது எல்லாம் போதும்!” என்று கத்தினாள்.

அவளின் ஆத்திரம் கண்டு அந்த இடத்திலேயே அப்படியே உறைந்து நின்றான்.

அதுவரை பொறுமையாகப் பேசிக் கொண்டிருந்தவள் பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்து “ ஏண்டா உனக்கெல்லாம் பெண்களோட வாழ்க்கை அவ்வளவு ஈஸியா போச்சில்ல. உனக்கெல்லாம் வெட்கம், மானம், சூடு சுரணை எல்லாம் கிடையவே கிடையாதா? போயும் போயும் உன்னைப் போய்க் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிகிட்டேனே” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

விஜயும், சுமியும் அதிர்ந்து போய் நின்றனர்.

“ எனக்குத் துரோகம் செய்ய எப்படி உனக்கு மனசு வந்துது? அப்போ என்னைக் காதலிச்சது எல்லாமே பொய்யா?” என்று சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.

அவள் கைகளை இறுக பற்றிக் கொண்டவன் “ இல்ல தனு! நீ என்னோட உயிர். நான் உன்னைக் காதலிச்சது உண்மை. ஒரு சபலத்தில் தப்புப் பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு” என்று கெஞ்சினான்.

அவன் முகத்தைப் பார்த்தவள் “தூ” என்று காறி உமிழ்து “சலனம், தடுமாற்றம், சபலம் எல்லாம் எப்பவோ ஒரு தடவை தப்புப் பண்றவங்களுக்கு. ஆனா, நீ ஒரு கிரிமினல். ஆதரவு இல்லாத பெண்ணை வளைச்சு அவளைக் கார்னர் பண்ணி உனக்குச் சாதகமா பயன்படுத்திக்கிட்டு இருக்க” என்றாள் வெறுப்பு.

அவளது பேச்சை மறுத்தவன் “இல்ல தனு! அது அப்படியில்லை. நீ குழந்தை பிறந்ததும் என்னை விட்டு விலகிப் போயிட்டே. அப்போ அந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு உன்னோட துணை தேவையாயிருந்தது. அதனால தான் தடுமாறிட்டேன்” என்றான் கெஞ்சலுடன்.

“ இப்படிச் சொல்ல வெட்கமாயில்ல உனக்கு! நீயெல்லாம் மனுஷனே இல்லை. எத்தனை பொய். நானென்ன முட்டாளா? உனக்குக் கல்யாணம் ஆனது தெரிஞ்சு அவள் விலக ஆரம்பிச்சதும் ஒருவாரம் டைம் குடுத்து மிரட்டி இருக்கே. நீ தடுமாறிட்டியா?”

அவளது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த விஜயும், சுமியும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றார்கள். சுமியின் வாழ்வில் நடந்த ஒவ்வொன்றையும் புட்டு புட்டு வைத்துக் கொண்டிருந்தாள் தன்யா.

“அண்ணி!” என்றவனைப் பார்த்த தன்யா “ என்ன பார்க்கிறீங்க விஜய்? இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்னா?”

“....”

“காதலிக்கும் போதும் சரி..கல்யாணம் ஆன பிறகும் சரி. இவர் மேல கண் மூடித்தனமான அன்பு வச்சிருந்தேன். எது சொன்னாலும் நம்பினேன் தான். ஆனா, என் கண்ணைத் திறந்தவங்க எதிர் வீட்டு பாட்டி தான். அவங்க தான் ஒருநாள் என்கிட்ட வந்து பேசினாங்க. அவங்க கண்ணில் ரெண்டு மூணு தடவை இவங்க ரெண்டு பேரும் பட்டிருக்காங்க. என்கிட்ட வந்து சொன்னப்ப நான் நம்பல. குற்றமுள்ளவனுக்கு என்னைக்கும் ஒருவித பதட்டம் இருக்கும் அது இவரை எனக்குக் காண்பிச்சு கொடுத்துது. அப்படித் தான் நான் போய் இவருக்குத் தெரியாமல் ஆபிசில் விசாரிக்க ஆரம்பிச்சேன். அப்போ தான் சுஷ்மிதாவுடன் இவர் போனதை என் கண்ணாலையே பார்த்தேன். முதலில் என்ன சொல்றது அதிர்ச்சி. என்னைத் தன்னோட உயிர் என்று சொன்ன ஒருவரால் எப்படி ஒரு துரோகம் பண்ண முடியுதுன்னு யோசிக்கவே முடியல. ரொம்பவே உடைஞ்சு போயிட்டேன். அப்பவும் எனக்குத் தைரியத்தையும், ஆதரவையும் கொடுத்தது அந்தப் பாட்டி தான். அதன் பிறகு தான் சுஷ்மிதாவை பற்றி விசாரித்து அவள் இருக்கும் இடத்தைத் தெரிஞ்சுகிட்டேன்” என்றவளை இடைமறித்தான் ராகவ்.

“நிறுத்து தனு! உன்னை எல்லோருமா சேர்ந்து தப்பான வழியில் யோசிக்க வச்சிருக்காங்க. நான் உன்னைக் காதலிச்சது உண்மை.இந்த நிமிஷம் வரை அந்தக் காதல் அப்படியே தான் இருக்கு” என்றான் ஆத்திரமாக.

“காதல்! தயவு செஞ்சு உன் வாயால அந்த வார்த்தையைச் சொல்லி அதனோட புனிதத்தைக் கெடுத்துடாத. உனக்கெல்லாம் அதுக்குத் தகுதியே இல்லை. உன்னை மாதிரி ஆட்களுக்கு எல்லாம் பெண்ணோட மனசு தேவையில்ல. நீ எல்லாம் மிருகமா பிறந்திருக்க வேண்டியது. தாய்க்கும், தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாத கேவலமான பிறவி” என்றாள் வெறுப்புடன்.

“ஏய்” என்று கையை உயர்த்தியவனைக் கண்டு கேவலமான பார்வையைப் பரிசாகத் தந்தாள்.

“வலிக்குது இல்ல....நெஞ்செல்லாம் பத்தி எரியுது இல்ல. நீ தொட்ட பெண்ணைத் தம்பி கட்டிக்கிட்டு வந்துட்டான்னு சொன்னதும் எவ்வளவு தவிப்பு? இதே யாரோ பெத்த பெண்ணை உபயோகப்படுத்திகிட்டு எச்சில் இலையா தூக்கி எரியும் போது சுகமா இருந்ததே”.

“இங்கே பார் தனு! நான் சொல்றதைக் கேளு! நான் பண்ணினது தப்பு தான்! இனி, இந்த மாதிரி ஒரு தப்பை பண்ண மாட்டேன். தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடு. உன் மனசு என்னை எத்துக்கலேன்னாலும் ரிஷிக்காக என்னை ஏத்துக்கக் கூடாதா? அவனுக்கு அப்பான்ற உறவு கண்டிப்பா வேணும். அதுக்காகவாவது நீ என் கூட வாழ்ந்தாகணும்” என்று கெஞ்சலாக ஆரம்பித்து மிரட்டலாக முடித்தான்.

அதுவரை அடங்கி இருந்த கோபம் சீறிக் கொண்டு எழ “ என்ன சொன்ன? ரிஷிக்கு அப்பான்ற உறவு வேணுமா? அப்பான்ற உறவு எப்படிப்பட்டது தெரியுமா? பிள்ளைக்கு ரோல் மாடலா இருக்கணும். உன்னை மாதிரி பொறுக்கியா இருக்கக் கூடாது. அப்புறம் என்ன மன்னிக்கனுமா? இத்தனை காலமா மன்னிச்சு தான் இன்னைக்குப் பெண்களோட நிலைமை இப்படி இருக்கு. நாங்க உடலால பலவீனமானவங்க தான். அதைப் பயன்படுத்தி எத்தனை விதத்துல எங்களைச் சித்ரவதை பண்ணுவீங்க? உங்களுக்கு எங்க மேல காதல் வந்தா நாங்க காதலை ஒத்துக்கணும் இல்லேன்னா வாயிலேயே வெட்டுவீங்க? உங்களுக்கு வெறி வந்தா பத்து மாச குழந்தையாய் இருந்தாலும் சரி அம்பத்தஞ்சு வயசு பாட்டியை இருந்தாலும் சரி கற்பழிச்சு கொல்லுவீங்க. ஏண்டா உன்னை மாதிரி ஆளுங்களுக்கும் அவனுங்களுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு? அன்பான அம்மா, அப்பா, தம்பி, காதலிச்சுக் கல்யாணம் பண்ணிகிட்ட மனைவி என்று இருக்கும் போதே இப்படி நடந்துக்கிற? உன்னை விட நாலு வயசு சின்னவன் உன் தம்பி. நீ பிறந்த அதே வயிற்றில் தானே பிறந்துருக்கான். அவனுக்குள்ள பண்பு உன்கிட்ட இல்லாம எப்படிப் போச்சு?

தலையை வேகமாக ஆட்டியவள் “இனி, என் வாழ்க்கையில் உனக்கு இடமில்லை.” என்றவள் சுமியிடம் திரும்பி “உனக்கு விஜய் வேற வேலை வாங்கித் தந்திருக்காங்கன்னு கேள்வி பட்டேன். இனியாவது போற இடத்தில் இது மாதிரி பிணம் தின்னி கழுகுகளிடம் சிக்காமல் ஜாக்கிரதையா இரு. நம்மைச் சுற்றி நம்ம ரத்தத்தையும், சதையையும் தின்ன ஓநாய்களும், வெறி நாய்களும் சுத்திகிட்டு இருக்கு. நம்மை நாம தான் பாதுகாத்துக்கணும். இந்தச் சம்பவத்தை ஒரு விபத்தை நினைச்சு கடந்து போயிடு” என்றாள் ஆதரவாக.

அதுவரை அரக்கனை வதம் செய்யும் காளியாக மாறி பேசிக் கொண்டிருத்த தன்யாவை பார்த்த விஜய் மெல்ல “ அண்ணி! உங்க முடிவு?” என்று கேட்டான்.

அவனைக் கூர்ந்து நோக்கியவள் “நான் தான் சொல்லிட்டேனே விஜய்!” என்றவள் தன் கழுத்தில் அணிந்திருந்த தாலியைக் கழட்டி பக்கத்திலிருந்த டீபாயில் வைத்துவிட்டு அறைக்குச் செல்லப் போனாள்.

அதைப் பார்த்து பதறிய ராகவ் “ தனு! என்ன செய்யிற? தாலியை ஏன் கழட்டின? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? என் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுட்டேனே. ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு தனு” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.

அவன் தன் கையைத் தொட்டதுமே உதறியவள் “ தாலி புனிதமான உறவுக்கு அடையாளம். உன்னை மாதிரி பெண் பித்தன் கட்டுகிற தாலிக்கு எல்லாம் மரியாதையே கிடையாது. போ! போய் இனி, உன் இஷ்டம் போலச் சுத்து! உனக்கும் எனக்குமான உறவு முடிஞ்சுது. எந்தக் காலத்திலேயும் உன்னை என்னால மன்னிக்க முடியாது” என்றவள் அறைக்குள் சென்று படாரென்று கதவை அடித்துச் சாத்தினாள்.

விஜயும், சுஷ்மிதாவும் ராகவை பார்த்துக் கொண்டே நின்றனர். தன்யா கதவை சாத்தியதும் சுஷ்மிதாவை பார்த்து கையை ஓங்கிக் கொண்டு சென்றான். “ எல்லாம் உன்னால தாண்டி. உனக்குப் பிடிக்கலேன்னா ஒதுங்கிப் போயிருக்க வேண்டியது தானே. இப்படி என் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கிட்டியே”.

அவனது கையை வளைத்துப் பிடித்த விஜய் “ இப்பவும் நீ திருந்தலையா ராகவ். எவ்வளவு அற்புதமான வாழ்க்கை உனக்குக் கிடைச்சது. உன்னோட அசிங்கமான நடத்தையால எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்கிறியே. உனக்குள்ள இவ்வளவு மோசமான குணம் இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று புலம்பினான்.

அவனை உதறி தள்ளியவன் தனது கார் கீயை எடுத்துக் கொண்டு கதவருகே சென்று “ நீ எல்லாம் என்னைப் பேசுகிற நிலைமை வந்துடுச்சே. பேசுடா பேசு! ஆனா, என் தனு இன்னைக்கு வேணா என் மேல கோபமா இருக்கலாம். கண்டிப்பா அவ என்னை மன்னிசிடுவா” என்று சொல்லி வெளியே சென்றான்.

அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த விஜய் பெருமூச்சுடன் சோபாவில் கண் மூடி அமர்ந்தான். சுமியும் அப்படியே சுவற்றோரம் சாய்ந்தமர்ந்தாள்.

வீட்டிலிருந்த ஒவ்வொருவரின் எண்ணங்களும் ஒவ்வொரு திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. விஜய்-க்கு எப்படி அண்ணனின் வாழ்க்கையில் நடந்திருக்கும் சம்பவங்களை அம்மாவிடம் சொல்லப் போகிறோம் என்று குழம்பியபடியே அமர்ந்திருந்தான். தனுவோ தாய், தந்தையரின் விருப்பத்திற்கெதிராகக் காதலித்து மணந்து கொண்ட ஒருவர் இன்று பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்று விட்டான் என்கிற விஷயத்தைச் சொல்லுபோது என்னவிதமாக உணர்வார்கள் என்று பயந்தாள்.

காரை எடுத்துக் கொண்டு சென்றவன் மனமோ எப்படித் தனுவை சமாதானப்படுத்துவது என்று யோசித்தது. தனு இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்பது மட்டும் அவன் மனதில் உறுதியாகத் தெரிந்தது. இந்தச் சிக்கலை எப்படித் தவிர்ப்பது என்று புரியாமல், எங்குச் செல்கிறோம் என்று அறியாமல் சென்று கொண்டிருந்தான்.

அந்த சூழலிலும் தான் செய்த தவறை அவன் பெரிதாக நினைக்கவில்லை. இப்படி எண்ணங்களின் கலவையில் எங்கே செல்கிறோம் என்று அறியாமலே காரை ஒட்டிக் கொண்டிருந்தான்.

டைடெல் பார்க் செல்லும் வழியில் சென்று கொண்டிருந்த கார் பாலத்தினடியில் சென்றது. அப்போது பாலத்தின் ஒரு பகுதி உடைந்து கீழே சென்று கொண்டிருந்த காரின் மீது விழுந்தது.

என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே காரின் முன் பகுதியில் முழு வேகத்துடன் விழுந்த பாலத்தின் பகுதியானது, காரின் மேல் பகுதியை உடைத்துக் கொண்டு ராகவின் இடுப்புப் பகுதியில் அழுத்திக் கொண்டு விழுந்தது.

உயிர் போகும் வலி. நினைவு தப்பிப் போகவில்லை. ஆனால், உடலில் ஏற்பட்ட வலியை தாங்க முடியாமல் கத்தி கதற ஆரம்பித்தான். அங்கு இரவு பணியில் ஈடுப்பட்டிருந்த பணியாளர்கள் ஓடி வந்து உதவ முயற்ச்சித்தனர். அதற்குள் அவன் மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டான். நடந்த சம்பவத்தைக் காவல்துறைக்குத் தெரியப்படுத்திப் பாலத்தை அகற்றி அவனை வெளியே கொண்டு வந்து ஆம்புலன்சில் ஏற்றி சென்று மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். அவனது மொபைலில் இருந்து விஜய்-க்கு அழைத்து விஷயத்தைக் கூறனர்.

வந்த செய்தியைக் கேட்ட விஜய் அலறியடித்துக் கொண்டு தனுவின் அறைக் கதவை தட்டி கூறினான். அவளோ சலனமே இல்லாத முகத்துடன் கேட்டுக் கொண்டவள் எதுவுமே சொல்லாமல் அவனுடன் கிளம்பினாள். மூவரும் கிளம்பி ஆஸ்பத்திரி வந்தனர். அதற்குள் அவனுக்குத் தீவீர சிக்கிச்சை பிரிவில் சிக்கிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

கல் போன்ற இறுகிய தோற்றத்துடனே அமர்ந்திருந்தாள். விஜயும், சுமியும் அவள் அருகில் செல்ல பயந்து கொண்டு அமர்ந்திருந்தார்கள்.

விடிந்ததும் அம்மாவுக்கும், அப்பாவிற்கும் விஷயத்தை எடுத்து சொல்லி வரவழைத்தான். ராகவின் தாய் கூட லேசாகக் கண்கள் கலங்க தன்யாவின் தோளை அணைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

மதியம் வரை அவன் கண் விழிக்காததால் எல்லோரும் அங்கேயே காத்திருந்தனர். மாலை தான் டாக்டர் வந்து பார்த்துவிட்டு அவன் கண் விழித்து விட்டதாகவும் போய்ப் பார்க்கலாம் என்று கூறி விட்டு சென்றார்.

ராகவின் தாய் தன்யாவிடம் “ நீ போய்ப் பாரும்மா” என்றார்.

அவரை உணர்வற்ற பார்வையைப் பார்த்துவிட்டு உள்ளே சென்றாள். இடுப்பு பகுதி முழுவதும் சிதைந்திருக்க, வலியுடன் கூடிய முகத்துடன் கண்களைத் திறந்து தன்யாவை பார்த்தான்.

அவளோ வெற்றுப் பார்வையுடன் அவனைப் பார்த்தவள் “உனக்காக என் கண்ணில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் விழாது. பெண்ணோட கண்ணீர் விலை மதிப்பில்லாதது. அதைத் தகுதியானவங்களுக்காகத் தான் சிந்தனுமே தவிர உன்னை மாதிரி ஈனப் பிறவிக்காக இல்லை” என்று கூறிவிட்டு விடுவிடுவென்று வெளியே சென்றாள்.

அவள் வெளியே வந்ததும் விஜயும், பெற்றவர்களும் உள்ளே சென்றனர். ஏற்கனவே தன்யா பேசிவிட்டு சென்ற அதிர்ச்சியில் இருந்தவன் தாயைப் பார்த்ததும் துக்கம் தொண்டையை அடைக்க அடிப்பட்டிருந்த கையை உயர்த்தி “அம்மா! என்னால முடியலம்மா” என்று கண்ணீர் சிந்தினான்.

ஆனா, அவரோ அவனது அருகில் செல்லாமலே “ நியாயப்படி நானே உன்னை விஷம் வச்சு கொன்னுருக்கணும். ஆனா, அதுக்கு வேலையில்லாம அந்தக் கடவுளே உன்னைத் தண்டிச்சிட்டான்” என்றார் கடுமையாக.

அவரது பேச்சைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விஜய் “அம்மா! உங்களுக்கு..எப்படி?”

அவனைத் துயரமான கண்களுடன் நோக்கியவர் “ தெரியும் விஜய்! நீ அப்பாவிடம் சொல்லிட்டு இருந்ததைக் கேட்டேன். இந்தக் கேடுகெட்டவனைப் பத்தி நீ சொல்லிக்கிட்டு இருந்ததை எல்லாத்தையும் கேட்டேன்” என்றார் கலங்கிய குரலுடன்.

அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராகவோ “அப்பா! நீங்களாவது சொல்லுங்கப்பா. என்னை மன்னிச்சேன்னு சொல்லுங்கப்பா” என்று கதறினான்.

அவரோ அவன்புறம் திரும்பாது விஜயை பார்த்து “ சிகிச்சை நடக்கிற வரை பணத்தைக் கட்டி கடமையை முடிச்சிடு விஜய். டிஸ்சார்ஜ் ஆனதும் கொண்டு வீட்டில் விட்டுட்டு வந்துடு. அதோட இவனுக்கும் நமக்குமான உறவு முடிஞ்சுது. என்னைப் பொறுத்தவரை எனக்கு ஒரே மகன் தான்” என்று சொல்லி ராகவின் தலையில் இடியை இறக்கி சென்றார்.

தன்னுடைய தவறான நடத்தையால் அழகான குடும்பத்தை இழந்து, சுற்றி உள்ள உறவுகளை எல்லாம் இழந்து தனி மரமாக நாலு சுவற்றுக்குள் ஒவ்வொரு வேலைக்கும் அடுத்தவரை நம்பி வாழப் போகும் வாழக்கையை எண்ணி பயந்தான்....

ஒழுக்கம் உடமை குடிமை இழக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்

அத்தியாயம்-7

தாமரை ஆதரவற்றோர் இல்லம்...

ராகவ் இந்த இல்லத்திற்கு வந்து ஒரு வருடம் ஓடிப் போயிருந்தது.

இந்த ஒரு வருடத்தில் வாழ்க்கையின் நிதர்சனத்தை நன்கு புரிந்து கொண்டான். சிற்றின்பதிற்க்காக அழகான குடும்பத்தைத் தொலைத்து முற்றிலும் பூஜ்யமாக நின்று கொண்டிருக்கிறான்.

இல்லத்தின் தோட்டத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் மனது விபத்து நடந்த அன்றும், அதற்கு அடுத்த நாட்கள் நடந்த நிகழ்வுகளையும் அசை போட்டது.

எப்படிப்பட்ட வாழ்க்கையை இழந்திருக்கிறேன்? ஆசை ஆசையாய் காதலித்த மனைவி, அழகான குழந்தை, அன்பான பெற்றோர், உயிராய் இருந்த தம்பி என்று அனைவரின் நெஞ்சிலும் தணலை அள்ளிக் கொட்டினேனே பெண்ணாசையால்.

அவர்கள் என்னைப் புறக்கணித்ததில் எந்தத் தவறும் இல்லை.

தன்யா என்று அவள் பெயரை உச்சரிக்கும் போதே என் மனம் இனிக்கிறதே. அவளை ஏமாற்ற எனக்கு எப்படி மனம் வந்தது? எத்தனை கனவுகளோடு என்னை மணந்திருப்பாள்? தாய், தந்தையைக் கூட எதிர்த்துக் கொண்டு என் கரம் பிடித்தவளுக்குத் துரோகம் செய்ய எப்படித் துணிந்தேன்.

அம்மா! என் மீது எத்தனை அன்பும், நம்பிக்கையும் வைத்திருப்பார்கள். எவ்வளவு கசந்து போயிருந்தால் என்னை வெறுத்து ஒதுக்கி சென்றிக்க முடியும். எந்த ஒரு அன்னையும் அவ்வளவு சீக்கிரம் பிள்ளையை ஒதுக்கி விடுவதில்லை.மன்னிக்க முடியாத குற்றம் செய்த போதும் எடுத்து சொல்லி அவனைத் திருத்தவே முயற்சி செய்வாள். அம்மாவும் அதைத் தானே செய்தார்கள் கேட்டேனா? உடலில் வலுவிருந்த திமிரில் எப்படி எல்லாம் பேசினேன்?

சுமி! என்னால் வாழ்க்கை இழந்து எங்கோ ஒரு மூலையில் என் போன்ற காமுகன் ஒருவனிடமிருந்து தப்பிக்கப் போராடிக் கொண்டிருப்பாள்.அவளுக்கு ஆதரவில்லை என்று அறிந்து என் ஆசைக்கு அவளை இணங்க செய்ததது எத்தகைய துரோக செயல்.இன்று புரிகின்ற ஒன்று அன்று புரியாமல் போனது ஏன்?

விஜய்! எனக்குத் தம்பியாகப் பிறந்தாலும் குணத்தில் ராமனாக வாழும் அவன் எங்கே நானெங்கே? ஒரே வயிற்றில் பிறந்த இருவரில் அவனுக்கு உள்ள நல்ல குணம் எனக்கு வராமல் போனது ஏன்? சிறியவனாக இருந்தாலும் என்னைத் திருத்திவிட அவன் செய்த முயற்சியை எல்லாம் கேலி செய்து சிரித்தேனே? எத்தனை பொய்கள் என் திருட்டுத்தனத்தை மறைக்க.

அப்பா! நேர்மையாக வாழவேண்டும். யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யக் கூடாது என்று சொல்லி சொல்லி வளர்த்தவரை சிலுவையில் அறைந்து விட்டேன். என் பிள்ளையா இப்படி என்று எப்படித் துடித்திருப்பார்.நான் செய்த தப்பால் குடும்பத்தினர் அனைவரையும் தலை குனிய செய்துவிட்டேன் என்று எண்ணி மனம் குமைந்தபடி அமர்ந்திருந்தான்.

மகனை மாமியாரிடம் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்த தன்யாவின் மனமும் பழைய நிகழ்வுகைளை எண்ணியே ஓடியது.

முதன்முதலாக ராகவ் பற்றி அறிந்து கொண்ட அந்தத் தருணம் நினைவுக்கு வந்தது.

அன்று குழந்தையுடன் அபார்ட்மெண்டில் கீழே உள்ள பார்க்கிற்குச் சென்றமர்ந்து பிள்ளைக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தவளின் அருகே வந்தமர்ந்தார் எதிர் வீட்டு பாட்டி.

“எப்படி இருக்கே தன்யா? உன்னைப் பார்க்கும் போதெல்லாம் சரியா பேச முடியாம போகுது” என்றபடி மிக இயல்பாகப் பேச ஆரம்பித்தார்.

அவர் பக்கம் திரும்பி அமர்ந்தவள் “நல்லா இருக்கேன் பாட்டி.குழந்தை இருக்கிறதால என்னாலையும் அதிகமா மத்தவங்க கிட்ட பழக முடியறதில்லை” என்றாள்.

“ம்ம்..உன்னையும் உன் வீட்டுக்காரரையும் பார்க்கும் போது நினைச்சுக்குவேன், எவ்வளவு அழகான தம்பதின்னு.ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப அன்னியோனியமா வெளில தெருவுல போறதை பார்த்திருக்கேன்” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு லேசான வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள்.

“உங்க வீட்டில பார்த்த மாப்பிளையாம்மா இவர்?”

மறுப்பாகத் தலையசைத்து “எங்களோடது லவ் மேரேஜ் பாட்டி. ரெண்டு பெரும் ஒரே ஆபிஸ்ல வேலை பார்த்தோம்.அங்கே தான் பழக்கம் ஆச்சு. எங்க வீட்டில ஒத்துக்கல.இவன் பிறந்த பிறகு தான் சமாதனாம் ஆகி இருக்காங்க” என்றாள்.

“ஒ..” என்றவர் சற்று யோசனையுடன் அமர்ந்து விட்டார்.

அந்தச் சமயம் அவளுடைய மகன் அங்கு விளையாடுபவர்களைக் கண்டு குதிக்க அவளது கவனமும் அங்கேயே இருந்தது.

சற்று நேரத்திற்குப் பின்னர் “இப்போ எல்லாம் ஆண், பெண் வித்யாசம் இல்லாம ஆபிஸ்ல பழகுவீங்கன்னு கேள்விபட்டேன்.அது உண்மையாம்மா?” என்றார்.

அவரது கேள்வி அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தது.அந்த தலைமுறையினருக்கு இந்த மாதிரி நிறையச் சந்தேகங்கள் உண்டு இன்றைய தலைமுறையினரை பற்றி என்று எண்ணிக் கொண்டாள்.

“ஆமாம் பாட்டி நட்போட பழகுவோம்.ஆனா எல்லாத்துக்குமே எங்களுக்குள்ள ஒரு எல்லைக்கோடு உண்டு. அதைத் தாண்டி நாங்களும் போக மாட்டோம் அவங்களும் வர மாட்டாங்க.”

“அப்படியா சொல்ற? ஆனா நான் கேள்விபடுவது எல்லாம் அப்படி இல்லையே? ஐ.டி.கம்பனியில எல்லாம் பார்ட்டின்னு சொல்லி குடிச்சிட்டு எல்லாவிதமான தப்புகளும் நடக்கிற மாதிரி எல்லாம் சொல்றாங்க? என்று கேட்டார்.

அவர் சொன்னதைக் கேட்டு சற்று வருத்ததுடன் “இல்ல பாட்டி! ஒன்றிரண்டு பேர் செய்கிற தப்பால எல்லோரையுமே கெட்டவங்களா நினைக்கிறோம்.ஐ.டி மட்டுமில்ல எந்த இடத்தில் தப்புகள் நடக்கல? அப்போ அங்கே இருக்கிறவங்க எல்லாமே தப்பானவங்கன்னு நினைக்கிறோமா?இல்லையே! இங்கே சின்ன வயதிலேயே அதிகச் சம்பளம் வாங்கிப் பழகிடுறதுனால சிலர் தடம் மாறி போறாங்க. அதற்காக எல்லோரையும் அதே பார்வையோட பார்க்கிறது ரொம்பத் தப்பு.எத்தனையோ பேர் இங்கே வந்த பிறகு தான் தங்களோட வாழ்க்கையின் தரத்தை உயர்திக்கவே செஞ்சிருக்காங்க.எவ்வளவோ பேர் சமூகச் சேவைகள் கூடச் செஞ்சிட்டு இருக்காங்க ஆனா இது எதுவுமே வெளி உலகத்துக்குத் தெரிவிக்கபடல.தப்பான விஷயங்கள் மட்டும் அதிக அளவில் பரவுது”.

அவளின் ஆதங்கமான பேச்சை கேட்டவர் “உண்மை தான் மா! நீ சொல்கிற மாதிரி தான் எல்லோருடைய கண்களும் கட்டப்பட்டிருக்கு.உண்மையை யாரையுமே சரியாகச் சென்றடயரதில்லை”.

அவர் தான் சொன்னதைப் புரிந்து கொண்டார் என்கிற சந்தோஷத்தில் “உங்களுக்கு இங்கே எப்படிப் பொழுது போகுது பாட்டி?” என்றாள்.

தான் சொல்ல வந்த விஷயத்தை அவளிடம் எப்படிச் சொல்லப் போகிறோம் என்கிற யோசனையுடன் இருந்தவர் அவளது கேள்வி அதற்கு வழிவகுத்து விட்டதை எண்ணிக் கொண்டே “வேலையே சரியா இருக்கும்மா. மருமகளும், பேரப்பிள்ளைகளும் கிளம்பினவுடனே அப்பாடான்னு உட்கார்ந்தா தேவலாம்-னு இருக்கும்.எப்போவாவது அவங்க கூட வெளில போயிட்டு வருவேன்”என்றார்.

“இங்கே எங்கெங்கே எல்லாம் போயிருக்கீங்க பாட்டி” என்றாள் ஆர்வமாக.

“அது என்னமோ மாலு..மாலுன்னு அடிச்சுக்குவான் பேரன்.அது மாதிரி ரெண்டு மூணு மாலுக்குக் கூட்டிட்டு போனாங்க. போன வாரம் போனப்ப உன் வீட்டுகாரரும்

ஒரு பொண்ணையும் பார்த்தேன்” என்றவர் அவளது முகத்தைக் குறுகுறுப்பாக ஆராய்ந்தார்.

அவள் அவர் சொன்னதை மிக இயல்பாகக் கேட்டுக் கொண்டு “டீம் லஞ்ச்சுக்கு வந்திருப்பாங்க பாட்டி” என்றாள்.

“தப்பா எடுத்துக்காதம்மா.அடுத்த வீட்டு கதைகளை ஆர்வமா பேசுகிற ஆளில்லை நான்.என்னவோ உங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போது என் மனசுக்கு ஒரு நிம்மதி வரும்.இவ்வளவு அன்பான தம்பதிகளான்னு.அந்த நினைப்பிற்குப் பங்கம் வந்த மாதிரி ரெண்டு தடவை அந்தப் பெண்ணை உன் வீட்டுகாரர் கூடப் பார்த்தேன். ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னேயும் அதே பொண்ணோட உங்க வீட்டுக்காரரை வேற ஒரு இடத்தில் பார்த்தேன்.எனக்கு அதைச் சாதாரண நட்பா பார்க்க முடியல.ஒருவேளை என்னோட நினைப்பு தப்பா இருக்கலாம்.ஆனா எதையும் எளிதா நினைச்சு விடக் கூடாது.அதே சமயம் அவசரப்பட்டு எதையும் உடைச்சிடக் கூடாது”என்றார் தவிப்பாக.

அவரைப் பார்த்து புன்னகைத்து “பாட்டி! என் ராகவ் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அவர் என்னை எந்த அளவுக்கு விரும்புறார்-னு என் மனசுக்குத் தெரியும். அவரால கனவுல கூட எனக்குத் துரோகம் இழைக்க முடியாது.அதனால கவலையை விடுங்க” என்று சொல்லி எழுந்து கொண்டாள்.

சற்றே குழம்பிய முகத்துடன் “வாழ்க்கை துணை மேல நம்பிக்கை வைக்கிறது நல்ல விஷயம் தான்மா. ஆனா ஏமாளியா மட்டும் இருந்திடக் கூடாது.நான் சொல்கிற மாதிரி இல்லாமலும் போகலாம். ஒருவேளை அப்படி நடந்திட்டா?முன்னமே கவனிச்ச்சிருக்கலாமேன்னு யோசனை வரக் கூடாது என்பதற்காகத் தான் சொல்றேன்மா”என்று தானும் எழுந்து கொண்டார்.

அதற்கு மேல் அந்தப் பேச்சை வளர விட விரும்பாத தன்யா “வெளியாளா உங்க பார்வை வேற மாதிரி இருக்கும்மா.அவரை ஒவ்வொரு நிமிடமும் நேசிச்சுகிட்டிருக்கிற எனக்குத் தெரியும் அவரோட எண்ணங்கள்,செயல்கள் எல்லாமே”என்று கூறி “நான் கிளம்புறேன் பாட்டி” என்று மகனைத் தூக்கிக் கொண்டு நடந்தாள்.

அவள் செல்வதையே விழியசைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவரிடமிருந்து நீண்ட பெருமூச்சு எழுந்தது. ‘நீ நினைக்கிற மாதிரி எதுவுமில்லாம போனா நல்லதும்மா.ஆனா எனக்கென்னவோ உன் புருஷன் உன்னை ஏமாத்துற மாதிரி தான் தோணுது’ என்றெண்ணிக் கொண்டே நடந்தார்.

ராகவைப் பற்றி அவர் சொன்னதை எல்லாம் அந்த நிமிடமே மறந்து விட்டு மகன் கூடவே நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தாள். அன்று சீக்கிரம் வீட்டிற்கு வந்த ராகவ், முடிக்க வேண்டிய வேலை இருக்கிறதென்று சொல்லி லேப்புடன் அமர்ந்து கொண்டான்.

எப்போதும் விரைவாக வீடு திரும்பும் நாட்களில் எல்லாம் மனைவியின் பின்னே சுற்றித் திரிபவன் சில மாதங்களாக அனைத்தையும் மறந்தவன் போல் பாதி நேரம் லேப்புடனே இருக்கிறான் என்று எண்ணினாள்.

மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தாலும் அவளது கண்கள் கணவனையே சுற்றி வந்து கொண்டிருந்தது. வேலையில் மூழ்கி இருந்தவனின் நெற்றி சுருங்கி இருந்தது. எழுந்து சென்று நெற்றியை நீவி விட வேண்டும் என்கிற ஆவலை அடக்கிக் கொண்டு ஓரப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது பார்வையை உணர்ந்தவன் போல் நிமிர்ந்து நோக்கியவன் மீண்டும் மானிட்டரில் கண்களைப் பதித்துக் கொண்டான்.சாதரணமாக இப்படி அவள் பார்க்கிறாள் என்று அறிந்ததும் எழுந்து அவளருகே வந்துவிடுவான். சில பல சீண்டல்களும், கொஞ்சல்களும் அரங்கேறிய பிறகே அங்கிருந்து நகர்ந்து செல்வான்.

ஆனால் இன்றோ அவள் பார்க்கிறாள் என்று தெரிந்தும் சிறிதும் கண்டு கொள்ளாது தனது வேலையில் மூழ்கி விட்டான். மனமோ கடகடவென்று கணக்குப் போட ஆரம்பித்தது. குழந்தை பிறந்து மூன்று நான்கு மாதங்களாகவே இப்படித் தான் நடந்து கொள்கிறானோ என்று.

அவளது எண்ணப் போக்கை எண்ணி மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவள் ‘என்ன இது! பாட்டிகிட்ட அவ்வளவு நம்பிக்கையோட சொன்னவள் இப்படித் தப்பு தப்பா யோசிக்க ஆரம்பிச்சிட்டேனே’ என்று தன்னையே கடிந்து கொண்டாள்.

மகனை தூங்க வைத்துவிட்டு வேலைகளை முடித்துக் கொண்டு அறைக்குச் சென்றவள், அங்கே ராகவ் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டு அவனருகில் சென்றாள்.

“என்னங்க! என்ன பண்ணுது?”

அவளை நிமிர்ந்து பார்த்தவன் “தலை போடு போடுன்னு போடுது.இந்த வேலையை வேற முடிக்கணும்” என்றான் சோர்வாக.

அவன் தலைவலி என்று சொன்னதுமே, உடனே சென்று மாத்திரையை எடுத்து வந்தவள் அவன் கையில் கொடுத்து “இதைப் போட்டுட்டு தூங்குங்க. நான் அந்த வேலையை முடிச்சு வைக்கிறேன்” என்றாள்.

“நீ தூங்க வேண்டாமா தனு.தம்பி இப்போ தான் தூங்குறான். நானே செய்றேன். மாத்திரை தான் போட்டுட்டேனே” என்றான்.

அவன் தோள்களை அழுத்தி “நீங்க தூங்குங்க ராகவ். ரொம்பக் களைச்சுப் போயிருக்கீங்க. நான் பார்த்துக்கிறேன்”.

அவன் படுத்ததும் அவனுடைய லப்பை எடுத்துக் கொண்டு ஹாலில் வந்தமர்ந்து வேலையைத் தொடர்ந்தாள். ஒரு மணி நேரத்திற்குள் வேலை முடிய, அவனது லேப்பில் இருந்த தங்களது புகைபடங்களைப் பார்க்க ஆரம்பித்தாள்.

அரைமணி நேரம் அனைத்து படங்களையும் பார்த்து முடித்தவள், பர்சனல் என்றிருந்த ஒரு போல்டரைக் கண்டு புருவத்தை உயர்த்தி ‘அது என்ன எனக்குத் தெரியாம பர்சனல்?’ என்று கிளிக் செய்தாள்.

அதில் ஒரே ஒரு படம் மட்டுமிருந்தது. அதைப் பார்த்த தன்யாவிற்குத் தனது கண்களையே நம்ப முடியவில்லை. ராகவ், சுமியுடன் மிக நெருக்கமாக நின்றிருந்தான்.

அவளால் அதைச் சிறிதளவும் நம்ப முடியவில்லை. இதற்குப் பின்னே கண்டிப்பாக ஏதோ ஒரு காரணமிருக்கும் என்று எண்ணினாள். எத்தனை நேரம் அந்தப் படத்தை வெறித்தபடியே அமர்ந்திருந்தாள் என்று தெரியவில்லை. அறையில் மகனின் குரல் கேட்டதும் அவசரமாகத் தன் அருகே இருந்த மொபைலை எடுத்து அந்தப் படத்தைப் போட்டோ எடுத்துக் கொண்டு அவசரமாக க்ளோஸ் செய்து வைத்துவிட்டு மகனை காண சென்றாள்.

அங்கே மகன் அருகில் அயர்ந்து உறங்கும் கணவனைக் கண்டவளின் மனது அந்தப் படத்தை எண்ணியது. இவன் எனக்குத் துரோகம் செய்வானா? அவனது முகத்தில் கள்ளம் எதுவும் தெரியவில்லையே? என்று பலவாறு சிந்தித்துக் குழம்பி மகனுக்குப் பசியாற்றி விட்டு அவனருகே படுத்துக் கொண்டாள். விழிகள் மூடினாலும் மனம் விழித்துக் கொண்டே இருந்தது.

காலையில் எழுந்து எப்பொழுதும் போல் வேலை செய்தாலும் ஏதோ ஒரு தடுமாற்றம் இருந்து கொண்டே இருந்தது. மனமோ ‘என் ராகவ் நல்லவர்! கண்டிப்பாக என்னை ஏமாற்ற மாட்டார்’ என்றே ஜபம் செய்து கொண்டிருந்தது.

அவனோ அவளது மனநிலையை அறியாமல் ஆபிசிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனது ஒவ்வொரு செயலையும் தன்னை அறியாமலேயே கவனிக்க ஆரம்பித்திருந்தாள் தன்யா. முன்னர் இப்படி நடந்து கொள்ள மாட்டான்’ என்று அலசி ஆராய ஆரம்பித்தது.

ஓட்டுனர் திடீரென்று ப்ரேக் போட்டதும் அதுவரை பழைய நிகழ்வுகளில் மூழ்கி இருந்தவள் நினைவுக்குத் திரும்பினாள். ராகவிற்கு விபத்து நடந்த பிறகு, அவனை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு தாய் வீடு செல்லத் தயங்கியவளை மாமியார் வீடு அரவணைத்துக் கொண்டது.

வேலைக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்த போது தங்களின் பழைய ஆபிசில் முயற்சித்துப் பார்க்க மனம் தடை போட்டது. அதனால் வேறு அலுவலகத்தில் வேலை தேடிக் கொண்டாள்.

அனைவரும் கூட இருந்தாலும் ஒவ்வொரு நாளும் வேதனையுடனேயே சென்றது. பெற்றவர்கள் பரிதவித்தாலும் நாங்கள் பார்த்த மாப்பிள்ளையாக இருந்திருந்தால் உன் நிலை இப்படி ஆகி இருக்குமா? என்ற அவர்களின் கேள்வி வேறு மனதை காயப்படுத்திச் சென்றது. பெற்றவர்களின் சாபத்தைப் பெற்று அதன் மீது ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த எனக்குச் சரியான தண்டனை தான் கிடைத்திருக்கிறது என்று எண்ணிக் கொண்டே அலுவலகத்தில் நுழைந்து தனது இருக்கையில் அமர்ந்தாள்.

வேலையில் மூழ்கினாலும் அவ்வப்போது முடிந்து போன விஷயங்களின் பின்னேயே சென்றது. முதன்முதலாக ராகவுடன் அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்த பிறகு எத்தனை நிகழ்வுகள். எத்தனை ஓட்டம், எத்தனை அதிர்ச்சிகள், எவ்வளவு பெரிய துரோகம் என்று வாழ்க்கை மிகப் பெரிய இடியைத் தலையில் இறக்கி இருந்தது.

அந்த அதிர்விலிருந்து வெளி வரும் முன்பே விஜய், சுமியை திருமணம் செய்து கொண்டேன் என்று வந்து நின்ற போது கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையும் கலைந்து போய் மனம் சுக்கு நூறாக உடைந்து போனது.

அதுவரை தன்னுடைய உணர்வுகளை ராகவிடம் தனிமையில் கொட்ட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தவள் சுமியிடம் ராகவ் காட்டிய மற்றொரு முகத்தைக் கண்டு எல்லோரின் முன்னிலையும் பொங்கி விட்டாள்.

இவன் ஒருவனின் மோசமான நடத்தையால் மொத்த குடும்பமும் சீரழிந்து போய் விட்டதே என்று கதறி தீர்த்து விட்டாள். விஜய் சுமியை மணந்து கொண்டு வந்ததை மனம் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தது.

அதன் பிறகு அண்ணனிடமிருந்து உண்மையை வரவழைக்கவே தான் சுமியை மணந்து கொண்டதாக நடித்தேன் என்று சொன்னப் பிறகே சற்று ஆறுதலானது.

அடுத்து என்ன என்று யோசிக்கும் முன்பே ராகவிற்கு விபத்து. எப்படி யோசித்தாலும் அவனைத் தன்னால் மன்னிக்க முடியும் என்று தவித்துப் போனாள்.

அவனுக்கு விபத்து என்றதும் மனம் பதபதைத்துப் போனாலும், ஒருபுறம் அவனுக்கு என்ன நடந்தால் என்ன என்று இடித்துரைத்தது.

விருப்பமே இல்லாமல் அவனைப் பார்க்க சென்ற போது அவனது அங்கு மாமியாரின் பேச்சக் கேட்டு மனம் நெகிழுந்து போனது.

அன்னையைக் கண்டதும் கன்னங்களில் கண்ணீர் வழிய “அம்மா...அம்மா..” என்று கையை நீட்டி அவரின் ஆதரவைத் தேடினான்.

“வேண்டாம் என்ன அம்மா-னு கூப்பிடாதே. உன்னைப் பெத்த வயிறு பத்தி எரியுது” என்றார் எரிச்சலுடன்.

“நான் பண்ணினது தப்பு தான்மா. என்னை மன்னிக்க மாட்டீங்களா?” என்றான் கெஞ்சலான குரலில்.

“என்ன சொன்ன மன்னிக்கனுமா? எவ்வளவு ஈஸியா தப்பை செஞ்சிட்டு மன்னிப்பைக் கேட்கிற?” என்றார் ஆத்திரத்துடன்.

கண்ணீருடன் கரகரத்த குரலில் “நான் பண்ணினது மன்னிக்க முடியாத தப்பு தான். அதுக்குத் தான் இப்போ கடவுளே தண்டனை கொடுத்துட்டாரே. நீங்களும் என்னைத் தண்டிச்சா நான் என்ன பண்ணுவேன் மா.”

அதற்கு மேல் பொறுக்க முடியாதவர் “நிறுத்துடா! என்ன மனுஷன் டா நீ! இன்னைக்கு இந்த நிலைமைக்குப் போனதும் உன் தப்பு புரிஞ்சுதுன்னு சொல்ற ஆனா அன்னைக்கு நான் வந்து பேசினப்ப எப்படிப் பேசின? அப்போ தெரியலையா நீ செய்த தப்பு?” என்றார் ஆங்காரமாக.

எட்டி அவர் கையைப் பிடித்துக் கொண்டவன் “என்னை மன்னிச்சிடுங்கம்மா. இனி, தனுவுக்கு எந்தக் காலத்திலேயும் துரோகம் நினைக்க மாட்டேன்” என்று கதறியவனிடமிருந்து கைகளை உதறிக் கொண்டவர் “ வேண்டாம்டா என்னைச் சபிக்க வச்சிடாதே! உன்னை மாதிரி உள்ள புள்ளைகளைப் பண்ணுகிற தப்பில் இருந்து அம்மாக்கள் காப்பாத்தி காப்பாத்தி தான் இன்னைக்கு இந்தச் சமூகமே பொண்ணுங்களுக்குப் பாதுகாப்பில்லாம போச்சு. இப்போ உன்னோட நிலைமையில் நீ நினைச்சாலும் தப்பு பண்ண முடியாது. இதே நீ முன்னாடி இருந்த மாதிரி இருந்திருந்தேன்னா எல்லோரும் என்னை மன்னிசிட்டாங்கன்னு கொஞ்ச நாள் அடங்கி இருந்திட்டு மறுபடியும் கிளம்பிடுவ. என்னால உன்னை எந்தக் காலத்திலேயும் மன்னிக்க முடியாது.”

அவரின் கோபத்தில் முகம் சுருங்க “அம்மா என்னை இந்த நிலையில் கை விட்டுடாதீங்கம்மா. எல்லோரும் என்னை விட்டுட்டா நான் என்ன பண்ணுவேன்” என்று கதற ஆரம்பித்தான்.

“என் மருமகளே உன்னை மன்னிச்சு ஏத்துகிட்டாலும் என்னால உன்னை மன்னிக்க முடியாது. ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கின உன்னை என் கூட வச்சிருந்தா கண்டிப்பா ஒரு நாள் நானே விஷம் வச்சு கொன்னுடுவேன். இனி, எந்தக் காலத்திலேயும் உன் முகத்தில் முழிக்க நான் விரும்பல” என்றவர் மருமகளிடம் “நீ பேசிட்டு வா” என்று கூறிவிட்டு வெளியே சென்றார்.

அவர் சென்றதும் இறுகிப் போன கல்லாய் நின்ற மனைவியைப் பார்த்ததும் பேச வார்த்தை வராமல் கெஞ்சலாகப் பார்த்தான்.

அவனை உணர்வற்ற பார்வை பார்த்தவள் “இப்படி ஒரு சூழல் நமக்குள்ள வரும்-னு நான் கனவில் கூட நினைக்கல”என்றவளின் குரலில் ஆத்திரமோ, ஆங்காரமோ சிறிதளவும் இல்லை.

மிகப் பொறுமையாகவும் அழுத்தமாகவும் அவள் பேசிய தொனியிலேயே உள்ளுக்குள் உதறல் எடுக்க “ தனு! நான் உன்னைக் காதலிச்சது உண்மை. உன்னைத் தவிர என் மனசில் வேற யாருக்கும் இடமில்லை. ஒரு சின்னச் சலனம் தான் என்னையும் இந்த நிலையில் கொண்டு வந்து தள்ளி இருக்கு. நான் கெட்டவனோ, தப்பானவனோ இல்லம்மா. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ!” என்று மன்றாடினான்.

அவனை அழுத்தமாகப் பார்த்தவள் “ சலனத்தில் தான் தப்பு பண்ணினேன்னு சொல்லி மன்னிப்பு கேட்குறீங்க. என் மேல உண்மையான அன்பு இருந்திருந்தா, காதல் இருந்திருந்தா இந்தச் சலனம் வந்திருக்குமா?” என்று கேள்வியாகப் பார்த்தாள்.

மறுப்பாகத் தலையாட்டியவன் “ என்னை நீ நம்ப மாட்டேங்குற. இந்த நிமிஷம் வரை உன்னை மட்டும் தான் காதலிக்கிறேன். நீ தான் எனக்கு எல்லாம்” என்றான்.

இதழ்களில் ஏளனம் குடியேற “ அப்போ சுமியோட உங்களுக்கு இருந்த உறவுக்குப் பெயர் என்ன?”

அவளைப் பார்த்து சலிப்பாக “ நான் பண்ணினது தப்பு தாண்டி ஒத்துக்கிறேன். இனி, இந்த மாதிரி தப்பு நடக்காது. என்னை மன்னிச்சிடு” என்றான்.

“சரி! உங்களை மன்னிக்கிறேன் ஆனா ஒரு கண்டிஷன்” என்றவளை யோசனையாகப் பார்த்தான்.

அவனை நக்கலாகப் பார்த்தவள் “ நானும் உங்களை மாதிரியே எங்காவது என் சலனத்தைத் தீர்த்துகிட்டு வரேன். அப்போ நீங்களும் என்னை மன்னிச்சு ஏத்துக்கோங்க” என்றாள்.

அவளின் பதிலில் அதிர்ந்தவன் முகத்தை அருவெறுப்பாக வைத்துக் கொண்டு கோபத்துடன் தான் இருக்கும் நிலை அறியாமல் “ஏய்!” என்று பாய்ந்தவனை உடலில் எழுந்த வலி மீண்டும் படுக்க வைத்தது.

“ அருவருப்பா இருக்கா? வலிக்குதா? அப்போ பெண்களுக்கு மட்டும் தான் கற்பு. உங்களுக்கு எல்லாம் இல்ல. நீங்க எங்க வேணா சுத்திட்டு வந்து பொண்டாட்டிகிட்ட மன்னிப்பு கேட்டுட்டா எல்லாம் சரியாகிடும். ஏன்னா உங்களை எல்லாம் திருத்தி வாழ்க்கை கொடுக்கத் தான் நாங்க எல்லாம் இருக்கோம் இல்ல.”

காலம் காலமா உங்க ஆட்டத்துக்கு எல்லாம் இடம் கொடுத்து தான் நாங்க இன்னைக்கு இப்படி நிக்கிறோம். இந்த நிமிஷம் வெட்கப்படுறேன் உன்னைக் காதலிச்சதை நினைச்சு. உன்னோட தப்பை மறைக்கச் சலனம் தான் காரணம் சொன்னப் பாரு அது எவ்வளவு பெரிய பொய். அவ யாருமில்லாதவக் கேட்க கூட ஆளில்லாதவன்னு தெரிஞ்சு தான் அவளைத் தேர்ந்தெடுத்திருக்க. இதிலேயே தெரியலையா நீ எவ்வளவு பெரிய கிரிமினல்ன்னு. சலனத்தில் தப்பு பண்றவன் எதையும் ப்ளான் பண்ணாம அந்தச் சம்பவத்தில் மாட்டிக்குவான். நீ தப்பை பண்ணிட்டு அவளை மிரட்டி மேலும் உன் வழிக்கு வர வைக்க முயற்சி செய்திருக்க. இவ்வளவு பெரிய தப்பை பண்ணுகிற நீ எப்படித் திருந்துவ?”

“ என்னை இந்த நிமிஷம் வரை காதலிக்கிறேன்னு சொல்றியே? தப்பு பண்ணும் போது ஒரு நிமிஷம் கூட என்னைப் பற்றி நியாபகமே வரலையே. உன்னை உருகி உருகி காதலிச்சு உனக்காகவே வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு எப்பேர்பட்ட நம்பிக்கை துரோகம் செய்திருக்க? எப்படி என்னால எல்லாத்தையும் மறந்து உன்னை ஏத்துக்க முடியும்? இன்னைக்கு விபத்தில் சிக்கி உனக்கு இடுப்புக்கு கீழே செயலற்று போனதால் என்னால் உனக்கு உண்மையா இருக்க முடியும்ன்னு சொல்ற. இதே விபத்து நடக்காம போயிருந்தா என்ன செய்வ? கொஞ்ச நாள் அடங்கி இருந்திட்டு மறுபடியும் உன்னோட புத்தியை காட்ட ஆரம்பிக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்?

உன்னை நம்பி நான் உன்னோடு வாழ்ந்தாலும் என் மனசுல உன்னைப் பற்றிய பயம் இருந்துகிட்டே தான் இருந்திருக்கும். எப்போ காதலிச்சுக் கல்யாணம் செய்த பொண்டாட்டியையே ஏமாற்ற மனசு வந்துருக்கோ அப்போ நீ எந்த அளவிற்கும் போவாய். உன்னை மாதிரி ஆட்கள் தான் ரெண்டு மாச குழந்தையையும் விடுறதில்லை, அறுபது வயசு கிழவியையும் வன்புணர்வு செய்றாங்க. உங்களை மாதிரி ஆட்களுக்கெல்லாம் அரசாங்கம் தண்டனை கொடுக்கும்ன்னு காத்திருக்காம ஒவ்வொரு தாயும், ஒவ்வொரு மனைவியும், ஒவ்வொரு சகோதரியும் தண்டனை கொடுக்கணும்.

கைகள் இரெண்டையும் உயரே தூக்கி ஒரு கும்பிடு போட்டவள் “ வாழ்ந்த வரை இந்த வாழ்க்கை எனக்குப் போதும். இனி, என் மகனையாவது உன்னைப் போல இல்லாம நல்ல பிள்ளையா வளர்க்கணும். உன்னை இந்த இடத்தில் இப்படியே நிர்கதியா விட்டுட்டுப் போறது தான் நல்ல தண்டனை. அத்தையே தன் மனசை கல்லாக்கி கிட்டு அதைச் செய்யும் போது நானும் அதைத் தான் செய்யப் போறேன். இருந்தாலும் உன்னைக் காதலிச்சப் பாவத்திற்கு ஆஸ்பத்திரியை விட்டு வெளியே போகும் போது நீ தங்க ஒரு இடம் ஏற்பாடு செஞ்சிட்டு போறேன்” என்று தன் மனதிலுள்ளவற்றை எல்லாம் கொட்டியவள் திரும்பியும் பார்க்காது விறுவிறுவென்று வெளியே சென்றாள்.

அதுவரை அவள் பேசியதைக் கண்டு அதிர்ச்சியில் இருந்தவன் அவள் போவதைப் பார்த்து “தனு! தனு!” என்று அழைத்து அவள் திரும்பாது சென்றவுடன் சூடான கண்ணீர் கன்னங்களைத் தொட கண்களை மூடிக் கொண்டான்.

அன்றைய நாளின் தாக்கத்தில் இருந்தவள் அவசரமாக எழுந்து வாஷ் ரூமிற்குச் சென்று முகம் கழுவி வந்தாள். எப்படிப்பட்ட முடிவு? அதை எல்லோரும் விமர்சனம் செய்தாலும் தன் முடிவிலிருந்து இன்று வரை மாறாமல் இருக்கிறாளே. அவளுடைய அன்னையே மாப்பிள்ளையை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தியும் மறுத்து விட்டாள்.

அதன் பின் எத்தனையோ அறிவுரைகள் ஆணின் துணை இன்றிக் காலம் முழுவதும் வாழ முடியாது என்றும், குழந்தைக்குத் தகப்பனின் அருகாமை தேவை என்றும் அவள் முடிவை மாற்ற எல்லா விதமான அறிவுரைகளும் வந்து சேர்ந்தது.

எது துணை? கூடவே வாழ்ந்து கொண்டு நம்பிக்கை துரோகம் செய்வதா? இப்படி ஒருவன் தகப்பனாக இருப்பதை விட அந்தக் குழந்தைக்குத் தகப்பனின் அருகாமை கிடைக்காமல் இருப்பதே மேல் என்று நினைத்தாள்.

வாழ்வில் ஒரு முறை ஏமாளியாக இருந்து விழித்துக் கொண்டாயிற்று. இனி, எந்தச் சூழ்நிலையையும் சந்திக்கும் தைரியம் மனதில் வந்துவிட்டது. எல்லாவற்றையும் விட அவள் அன்னையே அவளைப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் ராகவின் குடும்பம் அவளுக்கு முழு ஆதரவுடன் இருந்தது.

பெற்ற பிள்ளையின் தவறை ஒப்புக் கொண்டு அவனை ஒதுக்கி வைத்து மருமகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துத் தாங்கும் அந்தப் பெண்மணி கிடைப்பது வாழ்வின் மிகப் பெரிய வரம்.

இப்படிப்பட்ட அம்மாக்கள் இருந்தால் நாட்டில் பெண்களின் மீதான குற்றங்கள் குறையக் கூடும் என்று நம்புவோம்....

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.