கலகக்காரர் ‘ரானா அயூப்’!

கடந்த செப் 11 ம் தேதி ஞாயிற்றுகிழமை சேலம் பாலம் புத்தக நிலையம் ஏற்படுத்திய ரானா அயூப் எழுதிய ‘குஜராத் கோப்புகள்’ நூல் குறித்து நான் பேசிய உரையின் சுருக்கம்:

சஸ்பென்ஸ் திரைப்படங்களில் இரண்டுவிதமான யுக்திகள் உண்டு. ஒன்று ,ஒரு கொலை நடந்தால் யார் கொலைகாரர் என்று பார்வையாளருக்கு தெரியபடுத்தாமல் சஸ்பென்சை நீட்டித்து இறுதியில் வெளிப்படுத்துவது. மற்றொன்று யார் கொலைகாரர் என்ற உண்மையை முதலிலேயே பார்வையாளருக்கு உணர்த்திவிடுவது ஆனால் திரைப்படத்தில் எதிராளிக்கு அந்த உண்மை தெரியாது. அதை தெரியபடுத்தாமல் எப்படி இறுதிவரை கொண்டு செல்கிறோம் என்பது இரண்டாவது வகை. இவ்வகையில் சாமர்த்தியமான திரைக்கதையின் மூலம் வெற்றி பெற்ற படம் ‘பாபநாசம்’. அவ்வகையான எழுத்துவடிவ மொழியே ரானா அயூபின் ‘குஜராத் கோப்புகள்’ எனும் அற்புத நூலாகும். மறைமுக கேமரா மூலம் குற்றவாளிகளின் வாக்குமூலத்தை அவர்களுக்கு தெரியாமல் பதிவு செய்யும் ரானா அயுபின் முயற்சிகள் ஒவ்வொன்றும் நம்மை சீட்டின் நுனிக்கே கொண்டு செல்லும் திரில் திரைமொழிக்கு சமம். இரண்டு போலி என்கவுண்டர்கள் நடக்கின்றன. இந்த இரண்டு கதாபாத்திரங்களை வைத்து அதில் முன்னும், பின்னும் ஒரு பத்திரிகையாளரின் பார்வையில் காட்சிகள் நகர்ந்து, இறுதியில் முழு உண்மையும் வெளி வந்தால் அதுவே ரானா அயூபின் குஜராத் கோப்புகள் எனும் நூலின் உண்மை திரைக்கதையாகும். சொராபுதீன்-இஸ்ரத் ஜகான் இரண்டு போலி என்கவுண்டர்களை புலனாய்வு செய்வதில் இருந்து நூல் விரிகிறது. அதற்கான புலனாய்வில் இருந்து தமது பயணத்தை தொடங்குகிறார் ரானா அயூப். அதற்காக தமது அடையாளத்தை, பெயரை மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறார். ஏனெனில் குஜராத்தில் அவரின் பெயரே அவரின் உயிரை அறுக்கும் ஆயுதமாக அச்சுறுத்துகிறது. அனைவருக்கும் பொதுவான பெயரை சூட்டவேண்டும் என்று ‘மைதிலி தியாகி’ என்ற பெயரை சூட்டிக்கொள்கிறார். இது குஜராத்தில் சீதையின் மற்றொரு பெயர். இந்த பெயர் தமது ‘அண்டர்கவர் ஜர்னலிசத்திற்கு’ மிகவும் உதவுகிறது.

குஜராத் பண்பாடு குறித்தும், வாழ்வியல் முறை குறித்தும் வெளிநாட்டில் இருந்து இங்குவந்து படம் இயக்கும் இயக்குனர், தயாரிப்பாளராக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு மைக் என்ற வெளிநாட்டு நண்பரை உதவியாளராக பயன்படுத்திக்கொண்டு புறப்படுகிறார் இந்த பத்திரிகை புயல். இந்தநாட்டில் பொய்யை எளிமையாக நம்பவைத்துவிடலாம். ஆனால் உண்மையை உண்மை என்று உணர்த்துவதற்கு தான் போராடவேண்டியுள்ளது. நம்மை நாம் என்று உணர்த்துவதற்கே இங்கே பெரும் போராட்டம் நிகழ்த்தவேண்டியுள்ளது. அந்தவகையில் குஜராத்தில் புதைந்திருக்கும் உண்மைகளை தேடி, மக்கள் நேசனாக அடையாளப்பட்டிருக்கும் முகமூடிகளை அம்பலப்படுத்தும் தமது புலனாய்வு பயணத்தை நடிகர் கனோடியாவிடம் இருந்து தொடங்குகிறார். எடுத்தவுடன் எந்த அதிகாரியையும் நேரடியாக சந்தித்துவிட இயலாது, அவர்களின் நம்பிக்கையைப் பெற குறைந்தபட்ச க்ரவுண்ட் வொர்க் வேண்டும். அதை ஏற்படுத்திக்கொள்ளவே தமது துறைசார்ந்த ஒரு நபரை சந்திக்க தொடங்குகிறார். ஒரு பத்திரிகையாளருக்கு சோர்ஸ் ரொம்ப முக்கியம். சோர்ஸ்களை ஏற்படுத்திக்கொள்வதும், அவர்களின் நெருக்கமும், நம்பிக்கையும் உண்மையை வெளிக்கொண்டுவரும் முயற்சிக்கு எப்போதும் உதவும். அதன்பொருட்டே நடிகரை சந்திக்கிறார் ரானா.

முதலில் பிடிகொடுத்து பேசவில்லை நடிகர். அவரிடம் ‘பிற்படுத்தப்பட்டோர் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து பேசுகிறார்’(நடிகர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்) அதைகேட்டு வெளிநாட்டு இயக்குனர் நம் பிரச்சனைகளை அறிந்துவைத்துள்ளாரே என ஆச்சர்யப்படுகிறார். அதன்பின் தமக்கு தெரிந்ததை இயல்பாக பகிர்கிறார். அவர் மூலமாக காவல்துறை அதிகாரி சிங்கால் அறிமுகம் ஏற்படுகிறது. ஒருவருக்கு பிடித்த விசயங்களை பேசி அவரின் நல்மதிப்பை பெறுவது பத்திரிக்கைதுறையின் முக்கியமான யுக்தி. வார்த்தைகளை கோர்த்து விளையாடும் விளையாட்டு புலனாய்வு. நூல் பிடித்தாற்போல சொற்களை விட்டு, பின் எதிர்பார்த்த பதிலை பெறுவது, அதற்கு எதிராளியே அறியாத வண்ணம் தயார்படுத்துவது. இது ஒரு அழகியலான புலனாய்வு விஞ்ஞானம் ஆகும். அதை வெகு இயல்பாக செய்து வெற்றிபெறுகிறார் ரானா. தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகள் சிங்கால், ராஜன் பிரியதர்சி, உஷா ராடா, உள்துறை செயலாளர் அசோக் நாராயண், குஜராத் உளவுத்துறை தலைவர் ஜி.சி.ரெய்கார், காவல் கண்காணிப்பாளர் பாண்டே, எம்.எல்.ஏ மாயா கோட்னானி, உள்ளிட்ட முக்கியமானவர்களை சந்தித்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்று அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் வாக்குமூலத்தை பெறுகிறார். அவர்கள் வாக்குமூலங்கள் உரைக்கும் உண்மை என்னவென்றால் ‘ இஸ்லாமியர்களுக்கு எதிரான குஜராத் கலவரம் குறித்து அப்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் மோடி கண்டுகொள்ளாததன்மையில் இருந்தார்கள் என்பதும், பல இடங்களில் ‘கலவரங்களின் போது பொறுமையாக இருங்கள்’ என்று அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர் ‘ என்பதுமாகும். இது கலவரக்காரர்களுக்கு துணை போவதாகவும், இந்துத்வ பாசிசத்தை தூண்டிவிட்டமைக்கான சான்றுமாக இருந்தன. பல இடங்களில் அமித்ஷா வட்டாரத்தில் உள்ள எஸ்.ஐ போலீசுக்கு நேரடியாக தொலைபேசியில் அழைத்து ,கலவரக்காரர்களை கைது செய்யவேண்டாம் என உத்தரவிட்டுள்ளார். ஒரு இடத்தில் இஸ்லாமியர்களை காப்பாற்றினார் என்பதற்காகவே ஒரு அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டார். ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி கலவரக்காரர்களிடம் இருந்து தமது குடும்பத்தை காப்பாற்றுங்கள் என உள்துறை செயலர் அசோக் நாராயணிடம் உதவி கேட்கிறார். இப்படிப்பட்ட உண்மைகள் அனைத்தும் ராணாவின் அண்டர்கவர் புலனாய்வில் ஆதாரப்பூர்வமாக பதிவாகிறது.

இந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவது என்பது சாதாரணமானது அல்ல. கரணம் தப்பினால் மரணம். உயிரை பணயம் வைத்து ஒவ்வொன்றையும் ‘பதிவு’ செய்துள்ளார் ரானா. உஷா எனும் அதிகாரி அழைத்ததன் பேரில் அவருடன் சினிமாவுக்கு செல்கிறார். அங்கே மெடல் டிடக்டர் மூலம் செக்கிங் நடக்கிறது. வரிசையில் நிற்கிறார்கள் அதிகாரியும், ரானாவும். இவருக்கு பக் பக் என்கிறது. ஏனெனில் உள்ளே தனது குர்தாவுக்குள் கேமராவை மறைத்துவைத்துள்ளார். சோதனையில் தெரிந்துவிட்டால் அவ்வளவுதான் எதுவேண்டுமென்றாலும் நடக்கலாம். இன்றோடு நமது உயிர் போகபோகிறது என அதற்கும் தயார்நிலையிலேயே ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறார் ரானா. எதிரே சோதனை நடக்கிறது, மெல்ல மெல்ல வரிசை நகர்கிறது. நெருங்குகின்றனர். இரண்டொரு பேரே உள்ள நிலையில் திடீர் திருப்பமாக சோதனை செய்தவர்கள் அதிகாரியை பார்த்தபின் ‘உங்களுக்கு சோதனை தேவையில்லை’ என அவரையும், ரானாவையும் வேறு வழியில் அழைத்துக்கொண்டு திரையரங்கிற்குள் செல்கிறார். அதன்பின் தான் உயிரே வருகிறது ராணாவுக்கு. அங்கே அவர்கள் பார்த்தபடம் தெகல்கா பத்திரிகை செய்தியை அடிப்படையாக வைத்து வெளியான ஒரு புலனாய்வு படம்.

அப்போது, ‘இந்த தெகல்கா என்று ஒரு பத்திரிகை தெரியுமா’ என்கிறார் உஷா. ‘அப்படி ஒரு பத்திரிகையா? எனக்கு தெரியாதே’ என்கிறார் ரானா வேடிக்கையாக.(ஆனால் தெகல்கா பத்திரிகையின் மூலமாக தான் இந்த அண்டர்கவர் ஜர்ணலிசத்தை மேற்கொண்டுள்ளார் ரானா). அவர்கள் போக்கிரிகள், மோசமானவர்கள், உடைக்குள் கேமராவை வைத்து நமக்கு தெரியாமலே அனைத்தையும் எடுத்துவிடுவார்கள்’ என்கிறார் உஷா அப்பாவியாக. இவையனைத்தும் ஒன்றும் தெரியாதவர் போலவே கேட்டுகொல்கிறார் ரானா. உண்மையில் புலனாய்வு என்பது அற்புதமான ஒன்று. அவர்களுக்கு தெரியாமலே உண்மைகளை வெளிகொண்டுவருவதும், அதை மக்கள் முன் அம்பலப்படுத்துவதும் சாகசம் நிறைந்த செயல். ராணாவின் சாகசம் குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையை அம்பலப்படுத்துகிறது. கேசுபாய் பட்டேல் மந்திரிசபையில் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவின் படுகொலையையும் தமது புலனாய்வு மூலம் உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறார். ‘காரில் உட்கார்ந்திருக்கும் போது சுடப்பட்டார் என்றால் அவரின் விதைப்பையில் எப்படி சுடப்பட்டிருக்க முடியும்? அடியிலிருந்து ஒருவரால் எப்படி சுட்டிருக்க முடியும்? அவர் உட்கார்ந்த இடத்தில் ரத்தம் கொட்டியிருக்கும். அதற்கான தடயங்கள் இல்லையே! ‘ என்று இதன்பின்னால் உள்ள மர்மமுடிச்சுகளை தமது புலனாய்வில் அவிழ்க்கிறார் ரானா. இப்படி ராணாவின் சாகச பயணம் சாதாரணமாக நடந்துவிடவில்லை. பல்வேறு கடினமான பாதைக்குபிறகே ஒவ்வொரு புலனாய்விலும் வெற்றியை அறுவடை செய்கிறார்.

குஜராத் கலவரத்திற்கு பின்னுள்ள இந்துத்வா பாசிசத்தை அம்பலப்படுத்தும்போது சில இடங்களில் மனம் நொந்துபோகிறார். குறிப்பாக பி.சி ரெய்க்காருடான உரையாடலுக்கு பின் இஸ்லாமியர்களுக்கு நடந்த கொடூரங்கள் கண்டு கொதிக்கிறார். பத்திரிகையாளர் என்பவர் மனிதர் தான். சூழல் தான் அவரையும் உருவாக்குகிறது. அவர் கண்ட உண்மைகள் தான் அவரை கட்டமைக்கிறது. அதிலிருந்து ஆக்கப்பூர்வமான பயணத்திற்கும் வழிகாட்டுகிறது. குஜராத் கலவரம் குறித்து மட்டுமல்ல, காவல்துறையில் நிலவும் சாதியம், குறிப்பாக தலித் உயர் அதிகாரிகளை பயன்படுத்திக்கொண்டு இறுதியாக அவர்களை கழட்டிவிடுவது, தங்கள் அமைச்சரவையிலேயே வேண்டாதவர்களை காலி செய்வது என ஆளும் வர்க அரசாங்கத்தின் மர்மங்களை வெளிச்சமிட்டு காட்டுகிறது குஜராத் கோப்புகள் எனும் அற்புத நூல். இறுதியாக குஜராத் கலவரத்திற்கு பின்னுள்ள அமித்ஷா மற்றும் மோடியின் பங்கை ஆதாரப்பூர்வமாக பதிவு செய்து தமது தெகல்கா நிறுவனத்திடம் ஒப்படைக்கிறார். ஆனால் அவர்களோ, ‘பங்காரு லட்சுமணன் ஸ்டிங் ஆபரேசன்’ வீடியோ வெளியிட்டதால் ஏற்பட்ட நெருக்கடிகளை காரணம் காட்டி , இதை வெளியிட மறுத்துவிடுகின்றனர். துவண்டுபோகிறார் ரானா. தமது உழைப்பு வீணடிக்கப்படுகிறதே என்று வருந்தினார். ஆனாலும் மனம் தளராமல் அனைத்து ஆவணங்களையும் தொகுத்து ஆங்கிலத்தில் பதிவு செய்து அமேசான் மூலம் வெளியிடுகிறார். அதுவே இன்று இந்தியாவில் பல்வேறு மொழிகளில் நூலாக வெளிவந்து, இன்று தமிழிலும் வெளிவந்த பதினைந்து நாட்களில் மூவாயிரம் நூல்கள் விற்பனையாகி இந்தியாவையே அதிர செய்துவருகிறது.

நேர்மையான பத்திரிகையாளருக்கு வெளியில் உள்ள நெருக்கடிகளைவிட பல சமயம் பத்திரிகைக்குள்ளே இருந்து வரும் நெருக்கடிகளே அதிகம். நிறுவனம் கொடுக்கும் நெருக்கடிகளில் பல உண்மைகள் வெளிவராமலே சென்றுள்ளன. உலகில் அதிக மன சோர்வுக்கும், உளவியல் நெருக்கடிக்கும், தற்கொலைக்கு தள்ளப்படும் தொழிலாளகவும் பத்திரிகைத்துறை இருப்பதாக சர்வதேச புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த பதினைந்தாண்டுகளில் ,முக்கியமாக 1992 முதல் 2009 வரை உலகெங்கும் 734 பத்திரிகையாளர்கள் படுகொளைக்குள்ளாகியுள்ளனர். இந்தியாவில் 77 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவில் 1992 இல் இருந்து பத்திரிகையாளர்கள் படுகொலையில் 27 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 24 வழக்குகள் இன்று வரை விசாரணையில் உள்ளன. குறிப்பாக பெரு நகரத்தில் உள்ள பத்திரிகையாளர்களை விட சிறு நகரம், டவுனில் உள்ள பத்திரிகையாளர்கள் கூடுதல் அச்சுறுத்தல்களை சந்தித்துவருகின்றனர்’ என்று சர்வதேச ஊடக,பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு வேதனையோடு வெளிபடுத்தியுள்ளது. ரிப்போர்டர் வித் அவுட் பார்டர் என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரப்படி பத்திரிகையாளர்களை பாதுகாப்பதில் இந்தியா 140 வது இடத்தில் உள்ளன. இது மூன்றாண்டுகளுக்கு முந்தைய நிலவரம். இதில் மாற்றமில்லை.

இந்தியாவில் மட்டும் 86,000 பத்திரிகைகள் வெளிவருகின்றன. அதில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதுகாப்போ எப்போதுமே கேள்விக்குறிதான். ஊடக துறையோ கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் 86 ஆயிரம் கோடி வணிக இலக்கு வைத்து செயல்பட்டன. இந்தாண்டு ஒன்னேகால் லட்சம் கோடி லாபம் ஈட்டவேண்டும் என்று இந்திய ஊடகங்கள் இலக்கிட்டுள்ளன. இப்படிப்பட்ட நிலையில் ஊடகங்களிடம் இருந்து எப்படி முழுமையான உண்மையை எதிர்பார்க்க முடியும்? பத்திரிக்கை, ஊடக உலகம் கார்பரேட்மயமாக மாறிக்கொண்டு இருக்கிறது. இதில் சில மட்டுமே சாமானிய மனிதர்களுக்காக குரல் கொடுத்து வருகிறது. ஆனாலும் இங்கு சாமானியனின் முழுமையான விடுதலை, பிரச்சனைக்கான தீர்வு என்பது கேள்விக்குறியாக மாறிவருகிறது. இங்கே தனி ஒரு பத்திரிகையாளராக முழுமையான விடுதலையை பெற்று தந்துவிட இயலாது. தங்கள் துறைக்குள் ஏற்படும் நெருக்கடிகள், அச்சுறுத்தல்களில் இருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ள சங்கமாக திரள வேண்டும். பத்திரிகையாளர்கள் தாங்கள் வெளிக்கொண்டு வரும் உண்மைகள் வெற்றிபெற வெளியே உள்ள ஜனநாயக, புரட்சிகர, இடதுசாரி அமைப்புகளுடன் தோழமையான அணுகுமுறை வைத்துக்கொள்ள வேண்டும். அதுவே மக்களிடம் ஒரு பவ்தீக சக்தியாக மாற்றி, விடுதலைக்கான பயணத்தை தொடங்கும். மக்கள் சக்தியை, உண்மையான விடுதலைக்காக மக்களை போராட தூண்டும் ஒற்றை தீக்குச்சி உரசலாக எப்போதுமே உண்மையான பத்திரிகையாளனின் எழுத்துக்கள் இருக்கும், இருக்க வேண்டும். அதையே பத்திரிகையாளர் ரானா அயூப் நூலான ‘குஜராத் கோப்புகள்’ உணர்த்துகிறது.

- பத்திரிகையாளர்- சே.த.இளங்கோவன்.

குறிப்பு: இந்த பேச்சினூடாக எனது சொந்த பத்திரிகையாளர் பயணத்தையும் ‘ராஷமான்’ பாணியில் இடையிடையே சேர்த்து, கோர்த்து உரையாற்றினேன். சுருக்கமான பதிவே நீண்ட பதிவாகிவிட்டது. பொறுத்தருளுக. நன்றி.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.