முன்னாள்(ல்) காதலி !

ஏதோ ஒரு பரிச்சயம் இல்லாத பெண்ணின் குரல் கேட்க ஆசையில்லாமல் திரும்பினான் ராஜேஷ்.

சுற்றி முற்றி பார்க்கிறான். ஒருவர் கூட அருகில் இல்லை. யாரோ ஒருத்தியை பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் தான் அவளின் குரல் கேட்கும் என்பது போன்ற மன பிராந்தி அவனிடமில்லை.

அருகில் எலக்ட்ரிக் வயர்களில் முத்தமிடும் மரக்கிளைகளை கொஞ்சம் கூட கவலையில்லாமல் வெட்டிக் கொண்டிருந்தனர்.

தலை தனியே வெட்டப்பட்டு கிடக்கிறது. கட்டியிருந்த காக்கையின் கூடுகள் எச்சத்துடன் கீழே விழுந்தன. போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு அவனுக்கு லைக் கூட வாங்கத் தெரியவில்லை.

அந்த பெண்ணின் குரல் அவனை ஏதோ செய்தது. மரக்கிளையில் பூதமிருக்கும் என்பார்களே அதுவாய் இருக்குமோ என்ற தேவையற்ற பயம் அவனுள் கலந்து கல்லெறிந்தது.

மீண்டும் அந்தக் குரல் !

ராஜேஷ் பின்னாடி பாருடா !

பயந்துக் கொண்டே திரும்பினான். எங்கோ பார்த்த முகம். சற்று மது அருந்தியவன் போல் நிதானமிழந்தான்.

என்னடா என்னத் தெரியலையா ? நான் தான் உன் கூட படிச்ச கவிதா!

நேரே வகுடெடுத்து, எண்ணெய் தடவி படிய வாரி அதில் மல்லிகைப் பூ சூடி , அழகாய் சிரித்து பள்ளிக்கு வந்த அந்த கவிதா வா இது ? இரு புருவங்களையும் தன்னை அறியாமல் உயர்த்தினான்.

என்ன தான் அவள் சிரித்து பேசினாலும் அவள் முகத்தில் எதோ ஒரு சோகம் இருந்தது. பெண்கள் சோகத்தை தன்னுள்ளே புதைத்து வைத்துக் கொள்பவர்கள் என்பதை இவன் காதலி சொல்லிக் கேட்டிருக்கிறான்.

நடு நெற்றியில் கும்குமமும், கால்களில் மெட்டியும், கல்யாணமாகிவிட்டதை உணர்த்தியது. கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறு அவள் ஏழ்மையில் தானிருக்கிறாள் என்பதை நாசுக்காய் சொன்னது.

சுதாரித்தான். ஏய் எப்படி டி இருக்க ? பாத்து எவ்வளவு நாள் ஆச்சு ? எத்தன பசங்க ? வீட்டுக்காரர் என்ன பன்றார் என்ற சம்பிராதயமான கேள்விகளைக் கேட்டான்.

நான் நல்லா இருக்கன் டா ! நீ எப்படி இருக்க ? கல்யாணம் ஆயிட்டா ? என்று பெருமூச்சு விட்டாள். அந்த பெருமூச்சு அவளுக்கு அவன் மீதுக் கொண்ட ஒரு தலைக் காதலை ஒரு முறை ஞாபகப் படுத்தியது.

இவள் ராஜேஷுக்கு கொடுத்த காதல் கடிதத்தை கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டது, நான் வேறொருத்தியை வெகுவாக காதலிக்கிறேன் என்று சொன்னது எல்லாம் அவளின் கண்முன்னே வந்து சென்றது. அது தான் அவளின் பெருமூச்சுக்கு காரணம்.

இன்னும் கல்யாணம் பண்ணிக்கல டி. வீட்ல பொண்ணு பார்த்துக் கிட்டு இருக்காங்க ? உனக்கு சொல்லாமலா ? நிச்சயம் சொல்றன்.

என்ன பொண்ணு பாக்குறாங்களா ? அப்ப நீ பாத்த பொண்ணு ? 15 வருஷம் காதல் கதை எல்லாம் என்ன ஆச்சு ? என்ன பிரச்சனை டா ? எனக்கு தெரிஞ்சு எந்த பிரச்சனையும் வர சான்ஸ் இல்லையே ? என்னால நம்ப முடியல ? ஸ்கூல் படிக்கிறப்ப விளையாண்ட மாதிரியே விளையாடாத ? நீ எந்த மாதிரி பையன்னு எனக்கு தெரியும், 'உன் அவள விட '! ... என்னன்னு சொல்லு. அவளின் ஒரு கண்ணில் சந்தோஷமும் மறு கண்ணில் சோகமும் தெரிந்தது. அந்த சோகம் அவளின் காதலுக்காக. நம்ம மிஸ் பன்னிட்டோமே என்பதற்காக.

அவளுக்கு தெரிஞ்சத விட உனக்கு தெரியுமா ? 'That Was A Good Joke ' அதுக்கு எல்லாம் சான்ஸ் இல்ல. அவ வேண்டாம்ன்னு சொன்னா ! நானும் இட்ஸ் ஒகே. லைஃப் ஹாஸ் டூ மூவ் ஆன்ன்னு சொல்லிட்டன்.

அதெப்படி நீ ஒத்துக்கிட்ட ? உனக்கு பிடிச்ச பொண்ணு எப்படி டா சம்மதிச்ச ?

எனக்கு பிடிச்சதுனால தான் ஒத்துக்கிட்டன். பின்ன அவள பத்தி நாளு பேருகிட்ட தப்பா பேச சொல்றியா ? நான் தான அவள ஓடி ஓடி லவ் பன்னினேன். அவ வேண்டாம்ன்னு சொல்லிட்டா , நான் அவ மூஞ்சில ஆசிட் அடிக்கனும், அவள பத்தி தப்பா பேசணும்ன்னு ஏதாவது இருக்கா ?
அவள எனக்கு புடிக்கும். அவளுக்கு என்ன புடிக்கும் ! லவ்வரா இல்லன்னா ஃப்ரண்டா இருந்துட்டு போறேன். கேவலம் 'செக்ஸ்'காக மட்டுமே அவள நான் லவ் பண்ணல. அப்படி பண்ணியிருந்தேன்னா அதுக்கு பேரு லவ் இல்ல.

சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் கண் சற்று ஈரமானது. சரி அப்புறம் பாப்போம் வீட்டுக்காரர கேட்டதா சொல்லு ! என்று கிளம்பும் போது ராஜேஷை நிறுத்தி அவள் ஒரு கேள்விக் கேட்டாள்.

"அவள இத்தன வருஷம் லவ் பண்ணிட்டு, இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டா , அவ கிட்ட உனக்கிருந்த காதல் நீ இப்ப புதுசா கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுகிட்ட இருக்குமா ? உன் முன்னாள் காதலிய பத்தி உன்ன கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு கிட்ட சொல்லுவியா ? "

எதுவும் பேசாமல் மெளனமாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். அவள் கேட்ட கேள்வி அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.