திண்டிவனம் ரயில் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வாய்ஸில் புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வரை செல்லும் புதுச்சேரி பாசஞ்சர் இன்னும் சற்று நேரத்தில் மூன்றாவது நடைமேடை வந்தடையும் என அறிவிப்பு வெளியிட்டது,

அன்று ஞாயிற்றுக்கிழமை சரியான முகூர்த்த நாள் என்பதால் ஸ்டேசன் முழுவதும் கூட்டம். இராமசாமியும் சென்னை அம்பத்தூரில் நடைபெற இருந்த தன் உறவினர் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரயிலின் வருகையை எதிர்பார்த்துக் காத்து நின்றார். இராமசாமியும் கூட்டத்தில் முண்டியடித்து ஏறி இருக்கை கிடைக்குமா என ஒவ்வொரு பெஞ்சாகத் தேடி வந்தார். இவரது தோற்றத்தைக் கண்டு ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்த நான்கு கல்லூரி மாணவர்களும் கொஞ்சம் ஒடுங்கி உட்கார்ந்து கொண்டு இராமசாமியை ”ஐயா உட்காருங்கள்!” என்று அவர் கையை பிடித்து இழுத்து உட்கார வைத்தனர். அவர் உட்காரவும் வண்டி ஓட ஆரம்பித்தது.

மேல்மருவத்தூர் ரயில் நிலையம் வரவும் ஒரு கூட்டம் வண்டியில் ஏறியது. அந்தக் கூட்டத்தில் ஒரு குடிகாரன் இராமசாமியை ஒட்டி நின்று கொண்டான். இராமசாமிக்கு அவனது அருகாமை சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவனது வாயிலிருந்து வந்த டாஸ்மாக் சரக்கு வாடை அவன் நன்றாகக் குடித்திருக்கிறான் எனத் தெளிவாக்கியது.

திடீரென்று ‘குபுக் குபுக்| என சத்தம்.

அந்த குடிகாரன் இராமசாமி மீது வாந்தி எடுத்து விட்டான். ஒரே நாற்றம். சக பயணிகள் அனைவரும் அந்தக் குடிகாரனைத் திட்ட ஆரம்பித்து விட்டனர். இராமசாமி அருகில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவன் குடிகாரனை அடிக்க கையை ஓங்கினான். இராமசாமி அவனைத் தடுத்து குடிகாரனை அவர் இருக்கையில் உட்கார வைத்து விட்டு கழிவறை சென்று சட்டையைக் கழட்டி அலசி உதறி போட்டுக்கொண்டார்.

”ஏன் அவனைச் சும்மா விட்டீர்கள்?” எனக் கல்லூரி மாணவர்கள் கேட்டனர்.

”அவன் என்ன தெரிந்தா செய்தான்? தெரியாமல் நடந்து விட்டது. அவனைத் திட்டினாலோ, அடித்தாலோ என் சட்டை அசிங்கமானது சரியாகி விடுமா?” எனது பையனாகவோ, உறவினராகவோ இருந்தால் என்ன செய்திருப்பேனோ அதைத்தான் செய்தேன்.

உடனே குடிகாரன் அவரது காலைப் பிடித்து, ”ஐயா என்னை மன்னித்து விடுங்கள்” என்று அவனது துணிப்பையில் இருந்த 500 ரூபாயை அவரிடம் கொடுத்தான். புது சட்டை வாங்கிப் போட்டுக் கொள்ளுங்கள் என்றான். அவர் அதை ஏற்க மறுத்து என் பையன் இப்படித்தான் குடித்து இறந்துவிட்டான். இனி நீ குடிக்காமல் இருந்தால் அதுவே போதும் என்றார். வண்டி ‘கடகட|வென ஆமாம் என்பதுபோல சப்தமிட்டு ஓடியது.


- விருதுபட்டி பன்னீர்ரோஜா

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.