"உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?"

 தன் முன்னே நின்று கேள்வி கேட்ட முதியவரை ஒரு குழப்பத்துடன் பார்த்தான் முத்து....

 "நீங்க இந்த ஊரா?"

 "ஆமா..."

 "...ஆனா... நான் இந்த ஊரு இல்லையே.. இந்த ஊருக்கே இன்னைக்குத் தானே வரேன்.."

 "அப்படியா...? அப்புறம் எப்படி பார்த்த மாதிரியே இருக்கு..."

 "அதான் தெரியலை..."

 "ம்... ரொம்ப பார்த்து பழகின மாதிரியே இருக்கு... ஆமா உங்க அப்பா பேரென்ன?"

 "ம்... கந்தசாமி..."

 "கந்தசாமியா.. அப்படி யாரும் தெரியாதே..."

 "அப்படியா... சரி விடுங்க.. ஏன் போட்டு குழப்பிக்கிட்டு.." 

 "எதுக்கு விடணும்.. பார்த்தமாதிரி இருக்கு.. பழகுன மாதிரி இருக்கு.. கண்டுபிடிக்க வேணாமா...?"

 "ம்... நீங்க கண்டுபிடிச்சுட்டே இருங்க.. நான் ஒருத்தர தேடி வந்தேன்...  வேலை இருக்கு.. கிளம்பறேன்..."

 "ஏ.. தம்பி.. நில்லு தம்பி.. வயசாயிட்டாலே இப்படித்தானோ.. யாரும் மதிக்க மாட்டேன்றாங்க...  நீயும் என் பேச்ச கேட்க மாட்டேங்கிறியே..."

 "பெரியவரே.. இவ்வளவு நேரம் கேட்டுக்கிட்டுத் தானே இருந்தேன்.. இப்பத்தானே கெளம்பறேன்னு சொன்னேன்.." 

 "சரி சரி.. இன்னும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு நீ போயிக்கிட்டே இரு..."

 "ம்.. சரி ஒரே ஒரு கேள்விதான்.... கேளுங்க.."

 "உங்க தாத்தா பேரு என்ன?"

 "மலைச்சாமி..."

 "ஓ... அந்த மலைச்சாமியோட பேரனா நீ.."

 "அட... அப்ப நீங்க கோவிந்தன் தாத்தாவா...."

 "எப்படி டக்குனு என் பேரச்சொல்ற..?"

 "நான் உங்களத் தேடித்தானே உங்க ஊருக்கே வந்தேன்...

என்னோட தாத்தா தான் உங்ககிட்ட ஒரு முக்கியமான பொருள கொடுத்துட்டு வரச்சொன்னார்..."

 "முக்கியமானப் பொருளா.. அப்படி என்ன முக்கியமான பொருள்.... சரி சரி கொடு..."

 "இந்தாங்க", என்று கூறி ஒரு கவரை அவரிடம் கொடுத்தான் முத்து...

 "சரிங்க தாத்தா... நான் கெளம்பறேன்... நீங்க வீட்டுக்கு போயி என்னானு பாத்துக்கோங்க... சரியா..."

 "என்ன தம்பி.. டக்குன்னு கெளம்பறேனுட்ட... வீட்டுக்கு ஒரு தடவ வந்து ஒரு வாய் கஞ்சி குடிச்சிட்டுப்போ...."

 "பாட்டியெல்லாம் சுகமா இருக்காங்களா..?"

 "பாட்டியா.... ம்.. உனக்கு விஷயமே தெரியாதா... நான் தான் கல்யாணமே பண்ணிக்கலையே...!"

 "என்னது.... கல்யாணம் பண்ணிக்கலையா... அச்சோ.. ஏன்?"

 "அத ஏம்பா இப்ப கேட்டுக்கிட்டு... சரி நீ கிளம்பு", என்று கூறியவர் மெல்ல வெளியே வந்தக் கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டார்...

 அவரது செய்கையை கவனிக்காத முத்து... வந்த வேலை முடிந்ததென்று கிளம்பினான்...

 கோவிந்தன் மெதுவாக தனது குடிசைக்கு வந்தார்... அந்தக் கவரைப் பிரித்தார்... உள்ளே...

 அவரது அழகான அந்தக்கால கையெழுத்தில்.... பத்து இருபது கடிதங்கள் சிரித்துக் கொண்டிருந்தன.. கூடவே மலைச்சாமி எழுதியிருந்த சிறு குறிப்பும் கிழே விழுந்தது....

 மெல்ல எடுத்துப்படித்தார்....

 "கோவிந்தா... சந்தர்ப்பச் சூழ்நிலையால நீ காதலிச்சப் பொண்ணே எனக்கு மனைவியா வந்திட்டா... இந்த விஷயம் எனக்கே கொஞ்சம் நாளைக்கு முன்னாடி தான் தெரியவந்துச்சு... நீ ஏன் கல்யாணமே பண்ணலேனு அத்தனை தடவ கேட்டும்.. நீ பதில் சொல்லாதது எனக்கு இப்பத்தான் புரிஞ்சுது... இத ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் கோதை எங்கிட்ட கொடுத்தா...... அவளும் படுத்த படுக்கையா ஆகிட்டா... ஏதோ எனக்கு இத உங்கிட்ட கொடுக்கணும்னு  தோணுச்சு... அதான் பேரங்கிட்ட இத கொடுத்து அனுப்பினேன்.."

 படித்த படியே கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார் கோவிந்தன் தாத்தா.....

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.