“ஏண்டா? பனை மரத்தில் பாதி வளர்ந்திருக்கே? அறிவு இல்ல?” என்ற மேற்பார்வையாளரின் திட்டு கணேசனை ஒரு கணம் தன் சொந்த ஊரை நினைவுபடுத்தியது.

கணேசனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பக்கம் உடன்குடி. அவன் அப்பா அய்யனார் படிக்காதவர்தான். ஆனாலும் தன் தகப்பனாரின் பூர்விக சொத்தான பனந்தோப்பில் உள்ள 25 பனை மரங்களைப் பராமரித்து அதிலிருந்து வந்த வருமானத்தில் மனைவி மங்களம் மகன் கணேசன் மகள் வனிதா என சிறிய அளவான குடும்பத்தைக் காத்து வந்தார். பனை மரம் ஏறுவது அய்யனாருக்கு கை வந்த கலை. அது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. தென்னை மரத்திலாவது ஏறி விடலாம். பனை மரம் அப்படி இல்லை. லாகவமாக ஏற வேண்டும். கொஞ்சம் ஏமாந்தால் நெஞ்செல்லாம் ஒரே சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தக்களரி ஆகிவிடும். அய்யனார் தன் தகப்பனார் பனைமரம் ஏறுவதை வேடிக்கை பார்த்து தானும் பனை மரம் ஏறக் கற்றுக் கொண்டார். பதநீர் இறக்கத் தேவையான பாளைகளைச் சீவி சுண்ணாம்பு தடவி கலயங்களைக் கட்டி ஒரு நாள் முழுவதும் காத்திருந்து மறுநாள் பொழுது விடியும் முன் மரத்தில் ஏறி பதநீர் கலயங்களை இறக்கி பெரிய மண் பானையில் ஊற்றி குருத்துப் பனை ஓலைகளை வெட்டி இரண்டையும் ஒரு தள்ளு வண்டியில் வைத்து திருச்செந்தூருக்குத் தள்ளிச் செல்வார். திருச்செந்தூர் கோவில் வாசல் அருகில் பதநீரை விற்பதற்கு பனை ஓலைகளைக்கொண்டு தினுசாக மட்டை கட்டி அழகாக அடுக்கி வைப்பார். கோவிலுக்கு வருபவர்கள் அவனது மட்டையின் அழகில் மயங்கி பதநீரை வாங்கி மட்டையில் ஊற்றிக் குடித்துச்செல்வர். சில நாட்களில் நுங்கு குலைகளை வெட்டிக் கொண்டு சென்று நுங்கு சீவி விற்பார். சில நாட்களில் பனங்கிழங்கு கொண்டு விற்பார். சில நாளில் மனைவி மங்களமும் மகள் வனிதாவும் பனை ஓலையில் செய்த விசிறி, தொப்பி, கிலுகிலுப்பை, பெட்டி, பணப்பை என பனை ஓலைப் பொருட்களைச் சந்தையில் கொண்டு விற்பார். பதநீர் விற்காத நாட்களில் அதைக் கருப்பட்டி மற்றும் சில்லுக்கருப்பட்டி காய்ச்சி மொத்தக் கடைகளில் விற்று விடுவார். இப்படி பணம் சிறுகச் சிறுகச் சேர்த்து தமிழ்நாடு வங்கியில் சேமித்து வந்தார். மகன் கணேசனையும் அவன் சக்திக்கு தகுந்த மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் கற்க வைத்தார். அவனும் எல்லா பாடத்திலும் தேர்ச்சிக்கான மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தான். அவன் பெற்ற மதிப்பெண்ணுக்கு பக்கத்தில் இருந்த கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் கணேசனைத் தன் பனைமரத் தொழிலைக் கவனிக்கும்படி சொன்னதற்கு அவன் ”நான் படிச்சவன். பனைமரமெல்லாம் ஏற முடியாது. என்னை காசு கட்டி நகரில் நல்ல கல்லூரியில் சேர்த்து விடுங்க, நான் படிக்கிறேன். முடியாட்டி சொல்லிடுங்க, நான் சென்னையிலே போய் வேலை செஞ்சு சம்பாதிச்சி வரேன்” எனக் கூற அதைக் கேட்ட அய்யனார் மகனை அடிக்கப் போக அவர் மனைவி மங்களம் அவரைத் தடுத்து மகனைக் கொஞ்ச நேரம் வெளியே போ என அனுப்பி வைத்தாள். மங்களம் ”அவன் சொல்றதில்ல என்ன தப்பு? காசு இலஞ்சமா கொடுத்து கல்லூரியிலே இடம் வாங்கிக் கொடுக்கணும். நம்மால அது முடியாது. வனிதா கல்யாண வயசில நிக்கிறா. அவளுக்கும் நகை நட்டு வாங்கி வைக்கணும். நல்ல பையனா பார்த்துக் கட்டிக் கொடுக்கணும். அதுக்கும் நீங்க வங்கியில் சேமிச்ச பணம் பத்தாது இன்னும் பணம் சேர்க்கணும். அவன் ஆசைப்பட்டபடி சென்னையிலே போய்க் கொஞ்ச நாள் சம்பாதிச்சிட்டுத் தான் வரட்டுமே! அவனுக்கும் வெளி உலகம் தெரியும். நாலு பேரோடு பழக்கம் ஏற்படும்” எனப் பக்குவமாகக் கூற அதற்கு அய்யனார் அரை மனதோடு ஆமோதித்தார். அய்யனார் மனதிற்குள் தன் மகனைப் பற்றி ”வேலைக்குப் போய்க் கஷ்டப்பட்டு வந்தால்தான் அவனுக்குப் புரியும்” என நினைத்துக் கொண்டார்.

அப்பா, அம்மா, தங்கை வழியனுப்ப சென்னை வந்து இரங்கநாதன் தெருவில் உள்ள அவன் ஊரைச் சேர்ந்த பாலையா நடத்தி வந்த பெரிய மளிகைக் கடையில் அவன் அப்பா பேரைச் சொல்லி வேலைக்குச் சேர்ந்தான். வேலை முதலில் கடினமாகத் தெரியவில்லை. நாளாக நாளாக அவனுக்கு வேலைப் பளுவைக் கூட்டிக் கொண்டே வந்ததால் அவனால் சமாளிக்க முடியவில்லை. சற்று ஓய்வெடுக்க அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்த நேரத்தில் தான் மேற்பார்வையாளரின் “ஏண்டா? பனை மரத்தில் பாதி வளர்ந்திருக்கே? அறிவு இல்ல?” என்ற திட்டு விழுந்தது.

அந்த திட்டைக் கேட்டதும் அவன் கண்களில் கண்ணீர் துளிர்த்தன. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வேலையைத் தொடர்ந்தான். அன்றிரவு அவன் தன் சேக்காளியான மாரிமுத்துவிடம் ”அப்பா முதல்லே சொன்னார். இங்கேயே இருந்து பனைத்தொழிலைக் கற்றுக் கொள். உன் தலைமுறைக்கும் சோறு போடும்” என்றார். நான் தான் அவர் பேச்சைக் கேட்காமல் வந்திட்டேன். இன்னைக்கு தேதி 25. இன்னும் பத்து நாள் போனால் சம்பளத்தை வாங்கிட்டு ஊருக்குக் கிளம்பிப் போகணும். இந்த வேலையும் வேணாம் ஒண்ணும் வேணாம் என்றான். மாரிமுத்து ”நீ நினைச்சவுடன் வேலையை விட்டு நிற்கமுடியாது. முதலாளி சம்பளம் கொடுக்க மாட்டார். அவருக்கு ஒரு மாசம் முன்னால சொன்னாத்தான் வேலையை விட்டு நிற்க முடியும்” என்றான்.

மறுநாள் முதலாளியிடம் சென்று ”வேலையை விட்டு நிற்கப் போகிறேன். ஊரில் அப்பாவுக்கு உடம்புக்கு முடியலை. நான் போய் தான் அவரைக் கவனிக்கணும்” என்றான். பாலையா சற்று இளகிய மனதுடன் ”நீ இப்பதைக்கு உங்கப்பனிடம் போனில் பேசி ஆறுதல் கூறு. ஆயுத பூசை வருது வியாபாரத்திற்கு ஆள் வேணும். ஆயுதபூசை முடிஞ்சி உன்னை அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

பாலையா சொன்னபடி ஆயுத பூசை முடிச்சி சம்பளத்தை வாங்கி வண்டியேறி உடன்குடி வந்து சேர்ந்தான்.

”அப்பா! என்னை மன்னிச்சிடு. உன் பேச்சைக் கேட்காதது எவ்வளவு பெரிய தப்புன்னு புரிஞ்சிக்கிட்டேன். நீ சொல்றதைக் கேட்கிறேன். நான் பனைமரத் தொழிலை கத்துக்கிறேன்” என்றான் கணேசன் அய்யனாரிடம்.

”இன்னைக்கு விசயதசமி. நல்ல நாள் நீ தொழிலைத் தொடங்க வா!“ எனக் கூற பசுவுக்குப் பின்னால் போகும் கன்றுக்குட்டி போல் சென்றான் கணேசன்.

  • வைரமணி


tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.