எங்கள் காலனியில் குடியிருக்கும் குழந்தைகளைப் பெற்ற எல்லா அப்பாக்களும் காணாமல் போய் விட்டார்கள்! ஒரு அப்பாவைக் கூட இன்று காலையில் காணவில்லை!

கோவையில் ஒரே குளிர். மழை வேறு தூறிக் கொண்டே இருக்கிறது. காலை ஏழு மணி இருக்கும். நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு, கால் வலித்ததால் சோர்ந்து போய் எங்கள் காலனி ரோடு, மெயின் ரோட்டில் சேரும் இடத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் வாசற் படிகளில் உட்கார்ந்து விட்டேன்.

அப்பொழுது தான் எங்க காலனி அப்பாக்கள் காணாமல் போன விஷயமே எனக்குத் தெரிந்தது!

முதலில் சுசீலா மாமி ஸ்கூல் ‘பேக்’கோடு தன் பத்து வயசு பையனை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு ஸ்கூட்டியில் பறந்து கொண்டிருந்தாள்.

அடுத்து பத்மா. ஒரு பையன். ஒரு பெண்ணை டி.வி.எஸ் 50 யில் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு வேகமாக ஸ்கூலுக்குப் போய் கொண்டிருந்தாள்.

மாலதி ரொம்பக் குண்டு. அவள் நடக்கவே கஷ்டப் படுவாள். பத்தாவது படிக்கும் அவள் பெண்ணும் குண்டு. ஸ்கூட்டியில் அவர்களுக்கே இடம் போதவில்லை. நடுவில் பெரிய புத்தகப் பை வேறு. பாவம் நெருக்கியடித்துக் கொண்டு ஸ்கூட்டியில் போய் கொண்டிருந்தார்கள்!

ஏன் தான் இந்த பவித்ரா இப்படி இருக்கிறாளோ? இருபது வயசில் கொள்ளை அழகு. தன் மூன்று வயசுக் குழந்தையை ஸ்கூல் வேனில் ஏற்றி விட மெயின் ரோட்டிற்கு நைட்டியோடு வந்து விட்டாள்.

அவள் தன் குழந்தையிடம் குனிந்து பேசிக் கொண்டு நிற்பதைப் பார்த்துக் கொண்டே பைக்கில் போன அந்த ஐம்பது வயசு ஆள், சாலை ஓரத்தில் ரோடு போட வைத்திருந்த தார் டின் மேல் மோதி விழுந்து விட்டான்.

அடுத்து சித்ரா, அதற்கடுத்து மோகனா, அப்புறம் மேகலா எல்லோரும் தங்கள் குழந்தைகளோடு வரிசையாக ஸ்கூட்டியில் பறந்து கொண்டிருந்தார்கள்!

இந்தப் பெண்களுக்குத் தான் தாங்கள் பெற்ற குழந்தைகளின் எதிர் காலத்தைப் பற்றி எத்தனை அக்கறை?

ஆமாம்! இந்த குழந்தைகளைப் பெற்ற அப்பாக்கள் எல்லோருமா காணாமல் போய் விட்டார்கள்? ஒருத்தரைக் கூட காணவில்லை!?

எங்கே போய் இருப்பார்கள்? அப்புறம் தான் தெரிந்தது! குளிருக்கு சூடாக காப்பி குடித்து விட்டு பேப்பர் படித்துக் கொண்டிருப்பதும், பேஸ் புக்கில் லைக் போட்டுக் கொண்டிருப்பதும்!

இந்தக் காலத்தில் பெற்ற குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பை பெண்களின் கைகளில் ஆண்டவன் கொடுத்து விட்டான் போலும்!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.