தங்கநகை

எப்பொழுதும் போல சோகமாகவே வீட்டிற்குள் நுழைந்தான் வேல்முருகன். ஆனால் இன்று காரணம் வேறு.

'என்னங்க இன்கம்டாக்ஸ் ஆபிஸ்லேர்ந்து ஒரு லெட்டர், லெட்டர் பாக்ஸ்ல கெடந்துச்சு, இந்தாங்க' என்று கடிதத்தை நீட்டினாள் அவன் மனைவி, வள்ளி.

ஷூவைக் கழட்டிக்கொண்டே அந்தக் கடிதத்தைப் பிரித்து, படித்துத் தூக்கி எறிந்தான் முருகன்.

'என்னங்க, எப்போவும்போல TDS மிஸ் மாட்ச்சா ?' என்று கேட்டாள் வள்ளி.

'இல்லப்பா, இது வேற.... சரி நீ இப்போ இந்த 2 வாரத்துல ஏதாச்சு நகை வாங்குனியா ?' என்று கேட்க

'இல்லியே, நீங்க எங்கே வாங்கித்தரீங்க , வளையல் பழசு போட்டுட்டு புதுசு வாங்கித்தாங்க ன்னு கேட்டுட்டேயிருக்கே, தங்கம் விலை ஏறிக்கிட்டேயிருக்கு' என்று நொந்துக்கொண்டாள் அவன் மனைவி.

'சரி ... சரி ... இப்போ ஆரம்பிக்காதே, காஃபி கொண்டா' என்று சொல்லுவிட்டு முகம் துடைத்து உடை மாற்றச் சென்றான்.

சுடாய்க் காஃபி கலந்து உள்ளே எடுத்துச்சென்றாள். தன் பேச்சைத் தொடர்ந்தாள்.

'அப்போ இது என்னங்க நோட்டீசு?'

'எனக்கு ஈ மெயில்லேயு வந்திருந்துச்சி. யாரோ என்னோட பான்கார்டு காட்டி, 30 லட்சத்துக்கு நகை வாங்கிருக்காங்க, இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்ட் லிருந்து எப்படி வாங்குனீங்கன்னு எங்கேர்ந்து பணம் வந்துச்சின்னு என்கிட்டே கேக்குறாங்க'

'உங்ககிட்ட ஏதுங்க அவ்ளோ பணம் ?'

' உன்னோட அப்பா குடுத்தாரு'

'அவருதான் ஒங்களுக்கு 50 கிலோ தங்கம் குடுத்திருக்கிறாரே, பணம் வேற குடுக்கணுமா ?'

'50 கிலோ வா ? எப்போ குடுத்தாரு ? நீயே என்ன மாட்டிவிட்டுருவ போலிருக்கே?'

'என்னோட மொத்த எடையைச் சொன்னேங்க, நானே ஒரு சொக்கத் தங்கம் இல்லியா ?'

' ம்ம்ம் ... அந்த 50 கிலோவை 60 கிலோவா மாத்தி வச்சிருக்கே, திருப்பிக் குடுத்தா, ஒன்னோட தங்கச்சி 40 கிலோ, அனுப்பி வைக்குறாரான்னு கேட்டுச் சொல்லு, 20 கிலோ அவருக்கு லாபம்'

'எங்க அம்மா 80 கிலோ, வர ரெடியா இருக்காங்க, எப்படி வசதி?'

'அதிகமா எதுக்கு ஆசை படக்கூடாது அன்பே, ஒனக்குத் தெரியாதா என்ன?'

'ஹும்' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே 'சரி என்ன செய்யப்போறீங்க அந்த 30 லட்சம் … நகை ?'

'நாளைக்கு போய் அந்த ஆபிசரை பார்க்கணும், முருகா காப்பாத்துப்பா'

---

இன் கம் டாக்ஸ் ஆபிஸ்

'சார் ... மிஸ்டர் கோபால்'
'அதோ அந்த சீட்'
'இன்னும் வரவில்லையோ ?'
'சீட் காலியாயிருக்கா?'
'ஆமா சார்'
'அப்போ வந்திருக்கமாட்டாரு?'
'எப்போ வருவாரு?'
'போய் டீ குடிச்சிக்கிட்டே பேசுவோமா?'
'வாங்க போவோம்'
'கைல காசு இருக்குல்ல ?'
'இருக்கு வாங்க'

பேசிக்கொண்டே நடந்தனர். தன் பெயர் பழனி என்று அறுமுகப்படுத்திக்கொண்டார். வேல்முருகன் தான் வந்த விவரத்தைத் தெரிவித்து என்ன செய்யலாமென்று விசாரித்தான்.

வடை தின்று டீ குடித்தார். வாழைப்பழம் வாங்கிக்கொண்டார்.

'அப்போ நீங்க நகை வாங்கலே ?'
'இல்லே சார், என்கிட்டே அவ்ளோ பணம் கிடையாது'
'இங்கே வர்ற யாருகிட்ட சார் பணம் இருந்திருக்கு, வர்ற யாராச்சு நிறைய இருக்குன்னு சொல்லுவாங்களா, சொல்லுங்க?'

அமைதியாய் இருந்தான் வேல்முருகன். தன் வேலை முடியவேண்டுமென்று கருமமே கண்ணாய்.

'ஒங்க பான்கார்ட காட்டில்ல வாங்கிருக்காங்க' அவரே மீண்டும் ஆரம்பித்தார்.
'தெரியலே சார், என்னோட கார்டு எப்படி ...'
'ஒங்க கார்டு தொலைஞ்சிடுச்சா ?'
'இல்லே சார், என்கிட்ட தான் இருக்கு'
'அப்போ ஜெராக்ஸ் காட்டிருப்பங்களோ?'
'...'

யாரையோ பார்த்துப் பேசினார். அவர் பணத்தைக் கையில் அலுத்தப் பையில் வைத்துக்கொண்டார். 'நா பாத்துக்கறே, கவலைய விடுங்க' என்று பேசி வழியனுப்பினார்.

'கோபால்' யாரையோ அழைக்க 'இவரா நான் பார்க்கவேண்டியவர் ?' என்ற கேள்வி வேல்முருகன் நெஞ்சில் எழுந்தது. கோபால் என்றழைக்கப்பட்டவர் அருகில் வந்தார். நல்ல உயரம், மெல்லியதேகம், சின்னக்கண்ணாடி. பார்க்கும்போதே ஒரு மரியாதை ஏற்படுத்தம் உருவம்.

'உங்களை பார்க்க வந்திருக்காரு, நகை கேசு' என்று சொல்லிக்கொண்டே 'நா சீட்டுக்குப் போறே' என்று என்னோடு கை குலுக்கிவிட்டு விடைபெற்றார் பழனி.

'சொல்லுங்க என்ன வேணும்' என்று பேசிக்கொண்டே வராந்தாவில் அமர்ந்து, என்னையும் அருகில் அமரச் சொன்னார்.

'சார் பேரு வேல்முருகன், --- கம்பனில ஒர்க் பண்றே, 30 லாக்ஸ் ஒர்த் நகை வாங்கிருக்கீங்க எப்படி வாங்குனீங்கன்னு கேட்டு நோட்டிஸ் வந்திருக்கு, நகை நா ஒன்னு பர்சேஸ் பண்ணலை'

'கண்டீப்பா நீங்க வாங்கலியா ? ஒங்க மனைவி, இல்லே வீட்டுல வேற யாரு?'

'யாரு வாங்கலை சார், வீட்டுல மனைவி மட்டும்தா, அவங்களு வாங்கலை ன்னு சொல்லிட்டாங்க'

தனக்கு வந்த நோட்டீசை அவருக்கு எடுத்துக் காண்பித்தான்.

'இந்த நகைக்கடையில இதுக்கு முன்னால ஏதாச்சு பர்சேஸ் பண்ணியிருக்கீங்களா?'

'இல்லே சார்'

'யாராச்சு ஐடி ப்ரூஃப் கேட்டா பான்கார்டு தா கொடுப்பீங்களோ ?'

'ஆமா சார், அதுதா எப்பவும் ரெடியா கிடைக்கும்'

'இதனால தா பிரச்சனை. யாரோ அதை ஜெராக்ஸ் எடுத்து, காசுக்குக் கூட அதை வித்திருக்கலா'

'...'

'ப்ளாக் மணி வச்சிருக்குறவங்க அந்த ஜெராக்ஸ காட்டி நகை வாங்கிருப்பாங்க'

'இப்போ நா என்னசார் பண்ணனும்?'

'ஒரு லெட்டர் எழுதிக்கொடுங்க, என்னோட பான்கார்டு காட்டி நகை வாங்கப்பட்டிருக்கு, நகை நான் வாங்கியதில்லை, எனக்கும் அந்த ட்ரான்சாங்சனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ன்னு எழுதி சைன் போட்டுக் குடுங்க, நாங்க பாத்துக்கறோ'

'ரொம்ப நன்றி சார் ... நா ஏதாவது ?'

'நோ நோ ... நீங்க லெட்டர் எழுதிக் குடுத்துட்டு போகலாம்'

'தேங்க்யூ சார்'

---

வேல்முருகனுக்கு வந்த லெட்டர் போலவே இன்னும் சிலரும் அதே பிரச்சனையோடு கோபாலை அணுகிப் பேசி, விவரம் தெரிவித்தனர். அவர்களிடமிருந்தும் ஒரு லெட்டர் பெற்றுக்கொண்டு கோபால் தன் மேலதிகாரியைச் சந்தித்து பேசினார்.

அடுத்த நாளே அந்த நகைக்கடைக்கு ஒரு ரெய்டு நடந்தது. பல ரசீது புத்தகங்கள் சரிபார்க்கப் பட்டது. வேல்முருகனின் பான்கார்டில் வாங்கப்பட்ட நகைகளின் ரசீது பெறப்பட்டது. கஸ்டமரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. விசாரணை நடந்தது.

'பில் நம்பர் 13253, கஸ்டமர் யாரு?' கோபால் விசாரணை நடத்தினார்.
'சார் திரு தீனதயாளன்'
'அவரு என்ன ப்ரூப் குடுத்தாரு?'
'சார் அவரு ...'
'திரு தீனதயாளன் என்ன ப்ரூப் கொடுத்து நகை வாங்குனாரு?'
'சார் அவரு மினிஸ்டரோட ரெகமெண்டஷன் ல வந்தாரு'
'அதனால'
'சார் நாங்க எப்படி சார் முடியாதுன்னு சொல்ல முடியும்?'
'ஏன் சொல்லமுடியாது, இப்போ இன்கொயரில நீங்க மாட்டிக்கிட்டீங்களா ? அந்த மினிஸ்டரா?'

கோபாலின் போன் அலற, அதையெடுத்துப் பேசினார்.

'சொல்லுங்க'
'...'
'சரி, கடைல தான் இருக்கே, இன்னொரு பத்துநிமிசம் ஆகும்'
'...'
'சரி'

போன் துண்டிக்கப்பட்டது.

'மினிஸ்டரா சார் ?'

'ஏன், போன் போட்டு என்னை மிரட்டுறாரு ன்னு நெனைக்குறீங்களா ?'

'அன்னிக்கு இப்டிதா சார் போன் போட்டுப் பேசினாரு, பணம் வாங்கிக்கிட்டு நகை கொடுத்தனுப்பச்சொன்னாரு'

'இது வேற போன், சரி அந்த பான்கார்டு ப்ரூப் நீங்க தயாரிச்சதா, தீனதயாளன் எடுத்துக்கிட்டு வந்தாரா ?'

'சார் நா ஒரு போன் ...'
'மோடிட்ட பேசுறீங்களா, போன் போட்டுத் தரேன்'
'மினிஸ்டர் கிட்ட …'
'உங்களோட ரொம்ப நாள் ஜெயில்ல இருக்கப்போறாரு, அப்போ பேசிக்கோங்களேன்'

'சார் அது ... '
'அந்த பான்கார்டு ப்ரூப் நீங்க தயாரிச்சதா ? '
'…'
'அப்போ நீங்க இந்தமாதிரி இல்லீகல் விஷயத்துக்கெல்லா தனியா டாக்குமெண்ட்ஸ் வச்சிருக்கீங்க? '
'அவரு மினிஸ்டர் ரெக ....'
'அப்போ நீங்க புத்திசாலி, ஒங்க வியாபாரம் நல்லபடியா நடந்தா சரி, நாட்டுல வேலைசெஞ்சி டாக்ஸ் கட்டிக்கிட்டு வாழ்க்கையை நடத்துறாங்களே அவங்கெல்லா பைத்தியம், இல்லியா'

'...'

கோபால் தான் கண்டுபிடித்த விவரங்களை ஒரு பேப்பரில் எழுதிக்கொண்டார். நகைக்கடையின் கட்டுப்பாட்டிலிருந்த பான்கார்டு காப்பிகளைச் சேகரித்துக்கொண்டார். டாகுமெண்ட் இல்லாமல் வியாபாரம் செய்ததற்காக அந்த நகைக்கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தவறான ஆதாரங்களை வைத்துக்கொண்டு தவறான வழியில் வியாபாரம் செய்ததற்காக அந்த நகைக்கடையின் லைசன்ஸ் பறிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டது.

அடுத்து நேராய் தீனதயாளன் வீட்டிற்கு விரைந்தார். பெரிய மாளிகையாய் இருக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமாய் இருந்தது. சிறிய வீடு, தீனதயாளனும் அவர் மனைவியும் நாற்காலியில் அமர்த்தப்பட்டிருந்தனர். வேறு சில இன்கம்டாக்ஸ் ஆபிசர்ஸ் அந்த வீட்டில் சோதனையிட்டுக்கொண்டிருந்தனர்.

கோபால் அங்கு வந்து சேர்ந்தவுடன் தன் விசாரணையை ஆரம்பித்தார்.

'என்ன தீனதயாளன், இது ஒங்க சொந்தவீடா?'
'ஆமா சார் ... தாத்தா வீடு'
'என்ன பண்றீங்க ?'
'சார் டாக்சி ஓட்டுறே'
'நல்லா ஓடுது போலிருக்கே?'
'வரவுக்கும் செலவுக்கும் சரியா இருக்கு சார்'

'சின்ன வீடா இருக்கு, டாக்சி ஓட்டுறீங்க, அவ்வளவு வருமானம் நிக்கறதில்லை, ஆனா 30 லட்சத்துக்கு நகை வாங்க முடியுது இல்லியா?'

'சார் ...'
'சொல்லுங்க, எப்படி வாங்குனீங்க?'
'...'
'யாரு ஒங்களுக்கு பணம் குடுத்தாங்க?'
'சார் வைஃப் போட வீட்டுல ... கொஞ்சம் நெலம் இருந்துச்சி'
'அப்படிதா சொல்லணும்னு யாரு சொன்னாங்க?'
'சார்'

'இங்கே பாருங்க தீனதயாள், நாமெல்லா வேலை செஞ்சி காசு சம்பாதிச்சு சாப்டு நிம்மதியாத் தூங்குற ஜாதி, நாம எதுக்குப் பொய் சொல்லணும்'

'சார் நான் ஏழை சார்'

'உழைச்சு சாப்பிடுறவங்க ஏழை கிடையாது, பணத்துக்காக என்ன வேணும்னாலு பண்ணுறாங்க பாருங்க, அவங்க தான் ஏழை'

'…'

'நீங்க மினிஸ்டர் ... க்கு கார் ஓட்டுறீங்கல்ல?'

'எப்போவாச்சு கூப்டா ஓட்டுறதுண்டு சார்'

'8ஆம் தேதி ராத்திரி 9 மணிக்கு அவரைப் போய் பாத்திருக்கீங்க, இல்லியா?'

'அவரு கூப்டாரு சார்'

'எதுக்குப் போனீங்க, என்ன சொன்னாரு, என்ன செஞ்சீங்க, அதையு சொல்லிடுங்க'

'போய் பாத்துட்டு ... வந்துட்டே சார், அவ்ளோ தான்'

'நீங்களா சொன்னீங்கன்னா உங்களுக்குத் தண்டனை இல்லாமப் பாத்துக்கறே '

'சார் அது '

'சொல்லுங்க, உண்மையைச் சொல்லுங்க, தப்பிக்கவோ யாரையோ தப்பிக்கவைக்கவோ முயற்சி செய்யவேண்டாம்’

'சார் அவரு பணம் குடுத்து நகை வாங்கிட்டு வரச் சொன்னாரு சார், நா வாங்கி கொண்டுபோய்க் குடுத்தே, கூலி மட்டும் 500 ரூபா குடுத்தாரு, எனக்கு வேற ஒன்னும் தெரியாது சார்'

கோபால் தான் விசாரித்த விவரங்களை ஒரு பேப்பரில் எழுதிக்கொண்டு, தீனதயாளனிடம் படித்துக்காட்டி கையொப்பம் வாங்கிக்கொண்டார்.

'மினிஸ்டரோட பிஏ ன்னு சொல்லிக்கிட்டு நாளைக்கு வேற யாராச்சு வந்து இப்படி சொல்லு அப்படி சொல்லுன்னு சொன்னா, மாத்தி சொல்லுவிங்களா ?

'இல்லே சார், இப்போ சொன்னதையே சொல்றே'

'மாத்திச் சொன்னா ஒங்களுக்குத்தா ப்ரச்சனை, ஞாபகம் வச்சிக்கோங்க தீனதயாளன்'

'சரி சார் ... இந்த தடவை மன்னிச்சிருங்க'

'மன்னிக்கறதுக்கு ஒண்ணுமில்லே, அந்த மினிஸ்டர் வீட்டுல எல்லா அமைதியா முடிஞ்சா, பார்ப்போம்'

அதேசமயம் கோபால் அந்த அமைச்சரின் வீட்டிற்கு ஆய்விற்குச் சென்றிருக்கும் அலுவலருக்குப் போன் செய்து விவரங்களைச் சேகரித்துக்கொண்டார். பெரிய திமிங்கலத்தைப் பிடிக்க வலையை எடுத்துக்கொண்டு அமைச்சர் வீட்டிற்குக் கிளம்பினார்.

-சுபம்-

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.