அது ஒரு பரபரப்பான காலை நேரம். மற்ற நாட்களில் எப்படியோ, இந்த சில நாட்களாக அவர்கள் வீட்டில் அது ஒரு பரபரப்பான காலையாக மாறிவிட்டிருந்தது. மனதில் கணம் கலந்த பரபரப்பு. யாரோடும் பேசாமல் அந்த பரபரப்பில் இயங்குவது மனதிற்கு மிக இதமாக இருக்கும். இருந்தும் சில வேளைகளில் அதுவே ஒரு இனம் தெரியாத பயமாக உருமாறும். ஒரு அழுத்தம் நிறைந்த குழப்பமான சூழல், இருந்தும் கலைக்க முடியாத ஒரு அமைதி அவர்களை முற்றுகையிட்டிருந்தது.


"அம்மா டிபன் ரெடியா?" என்றாள் ராஜீ எனப்படும் ராஜஸ்ரீ.


"ம்" குரலே வராமல் சொன்னாள் ஜானகி.


ராஜீ அவள் அருகில் சென்று அவள் தோளைத்தொட்டாள். அதற்காகவே காத்திருந்ததுபோல் ஜானகியின் கண்கள் பனிக்க துவங்கின.


"கவலப்படாதம்மா எல்லாம் சரியாயிடும்"


"ராஜீ உன் கல்யாணம் எப்படிடீ நடக்கும்?"


"மறுபடியும் அழாதம்மா. இப்ப என் கல்யாணம் முக்கியமில்ல, அப்பாதான் முக்கியம். நடக்கறது நடக்கட்டும். நான் காலேஜ் போயிட்டு சீக்கரமா வந்திடறேன். அப்பாவ ஜாக்ரதைய டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு வா. சீக்கரம் போ, நீ போய் தான் தம்பி வரணும். பாவம் அவன் +2 வேற. அங்க போய் அப்பா முன்னாடி அழுது வெக்காத"


இவள் தான் என்ன பெரியமனிஷியாகிவிட்டாள்!


அவள் சென்ற பிறகு ஒரு பாட்டம் உட்கார்ந்து அழுதுவிட்டு பின்பு தேவையானவற்றை எடுப்பதற்காக ஜானகி தன் அறைக்குள் சென்றாள். அவளது கைப்பை, ஃப்ளாஸ்க், என மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லக்கூடிய இன்னும் சில புராதன சாமான்களையும் எடுத்துக்கொள்ளும்போது அவள் கண்ணில் அந்த புத்தகம் பட்டது. கொஞ்சம் தலை நிமிர அலமாரி முழுவதும் புத்தகங்கள். எட்டு வரிசைகள் கொண்ட மூன்று அலமாரி முழுவதும் புத்தகங்கள் புத்தகங்கள் புத்தகங்கள்.


'இருக்கும். இந்த புத்தகங்களே 1 லட்சம் இருக்கும் ' என்று அவள் கணவன் என்றோ சொன்னது திடீரென ஞாபகத்துக்கு வந்தது.


'பொட்டப்புள்ளைய பெத்துட்டு இப்படி புஸ்தகமா வாங்கி தள்ளுறீங்களே, நாளைக்கு இதயா சீதனமா குடுக்கபோறீங்க'


'என்னது சீதனமா? அடி போடி அதெல்லாம் அடுத்த தலைமுறைல இருக்கவே இருக்காது '


அவள் சொல்வதை அவர் நிராகரிப்பதும் உதாசீனப்படுத்துவது மிகவும் இயல்பாக நடக்கும். நடைமுறைக்கு முற்றிலும் பிசகியிருந்தும் எதிர்வாதம் செய்ய முடியாத அளவுக்கு எளிமையாக இருக்கும். அன்று அவர் சிரித்த சிரிப்பு அவள் காதுகளை இப்போது கூச்சமிடச்செய்தன


'பெரிசா சொன்னாரே. அடுத்த தலைமுறையாம் அடுத்த தலைமுறை. இப்ப ராஜிக்கு பாக்கு மாத்தறப்ப என்னாச்சாம்' என்று மனதிற்குள் மானசீகமாக அவர் மீது எரிந்து விழுந்தாள். அப்படியே அந்த புத்தகங்கள் அனைத்தையும் கீழே தள்ளி தீயிட்டு கொளுத்தலாம் என்று ஆத்திரமாக வந்தது அவளுக்கு."ஒரு ராம கிருஷ்ணா ஹாஸ்பிடல்"


ஜன்னலோரம் இருக்கை கிடைத்தது.


ஒரே இரவில் தனது வாழ்வு சூன்யமாக்கப்பட்டு, நினைத்தே பார்த்திராத சூழலில், பேருந்தில் ஆஸ்பத்திரியை நோக்கி தான் சென்றுகொண்டிருக்கும் நிதர்சனத்தை நினைக்கும்போது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. எல்லாம் அந்த ஒரு இரவால். மறக்க முடியாத இரவால். பாழாய்ப்போன இரவால். அவள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள். திடீரென்று ஏதோ பாதி கனவில் தொலை தூரத்தில், கிணற்றுக்குள்ளிருந்து அந்த சத்தம் கேட்டது.சன்னமான ஒரு உயிர்க்குரல் "அம்மா அம்மா" என்றவாறு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி அடிவயிற்றிலிருந்து "அம்மா " என்று சப்திக்க, உடலின் அத்தனை அங்கங்களும் உயிர்த்துக்கொள்ள ஈரக்குலை நடுங்க எழுந்தாள்.


அருகில் அவள் கணவர் ராஜசேகர் மழையில் நனைந்தார்போல விவர்வையால் உடல் முழுவதும் குளிப்பாட்டப்பட்டு, உள் பனியன் உடலோடு உடலாக ஒட்டி, சிலவிடங்களில் ஒட்டாமலும், திட்டுத்திட்டாக உயிர் துடித்துக்கொண்டிருந்தார்.


பதறியடித்துக்கொண்டு, "என்னங்க, என்னாச்சு? " என்றவாறு அவரை மார்பில் அணைத்துக்கொண்டு கேட்டாள்.


"நெநநெஞ் வலிக்குது" என்று ஹீனஸ்வரத்தில் முக்கலும் முனகளுமாய் வார்த்தைகளை கக்கினார். மார்பை பிடித்துக்கொண்டு இடமும் வலமுமாக, "ஐயோ ! அம்மா ! ஐயோ ஆ ம்மா ". ராஜசேகர் தீப்பட்ட புழுபோல துடித்தார்.


"ஐயோ ராஜீ, சிவா ஓடிவாங்களேன், உங்கப்பாவுக்கு ஏதோ ஆயிடுச்சே. சீக்கிரம் வாங்களேன். ராஜீ......"


அவள் அலறிய அலறலில் இருவரும் பதிறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர்.


"என்னம்மா என்னாச்சு?"


"நெஞ்சு வலிக்குதாம்டி. சிவா ஓடிப்போய் சேகர் அங்கில கூட்டிட்டு வா. கொஞ்சம் பொறுத்துக்கங்க. இப்ப வந்துருவாங்க. சீக்கிரம் போயேண்டா"


அவன் செல்லும்போது வீடு முழுவதும் அவர் துடிப்பு எதிரொலித்துக்கொண்டிருந்தது. "ஐயோ அம்மா ஐயோ ". வலி பொறுக்க முடியாமல் முக்கினார். துடித்தார். ஒரு விதமான மூச்சை அடக்கிய வலியின் குரலில் "வெளிக்கு " என்றார்.


"வாங்க!" என்றவாறு அவரை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு பாத்ரூமை நோக்கி நடந்தாள். கிட்டத்தட்ட அவளுக்கும் வந்துவிட்டது.


ராஜீ செய்வதறியாமல் பாத்ரூமுக்கு வெளியே நின்றுகொண்டு ஐயோ அம்மா முனகலை கேட்டுக்கொண்டிருந்தாள்.


இதற்குள் அக்கம்பக்கத்தில் அனைவரும் கூடிவிட்டிருந்தனர் . இருவரும் பாத்ரூமைவிட்டு வெளியேவர மீண்டும் ஐயோ அம்மா சத்தம் அனைவர் காதுகளையும் ஆக்கிரமித்தது. பக்கத்து வீட்டு மாமியும், அவள் மகன் சேகரும் வந்திருந்தனர்.


"ஜானு ! என்னடி ஆச்சு!" மாமி படபடத்தாள்


"தெரியல மாமி. நல்லா தூங்கிட்டு இருந்தேன். திடீர்னு ஏதோ சத்தம் கேட்டு எழுந்து பார்த்தா இவர் தொப்பலா நெனஞ்சுபோய் கத்தீட்டு இருந்தார்"


"அம்மா ஐயோ !! "


"நைட்டு சாப்பிட என்ன குடுத்த?"


"தயிர்சாதம் தான் சாப்டார் மாமி" சிறிது தயக்கத்துக்குப்பின், "அவர் கேட்டாறேன்னு ஒரு ஆம்லெட் போட்டு தந்தேன்"


"ஆ... ஐயோ ..."


"அதான். கேஸ் நெஞ்ச அடச்சுடுத்துபோல. ராஜீ நீ ஓடிப்போய் மோர்ல கொஞ்சம் பெருங்காயத்தூள கரைச்சு.."


"அம்மா. வில் யு ஷாட் அப்! ஜானகி அவருக்கு பல்ஸ் ஏறீண்டே இருக்கு. சீக்கரம் ஹாஸ்பிடல் கொண்டு போனும். ஆம்புலன்சுக்கு சொல்லியாச்சா?"


சிறிது நேரத்தில் சைரன் கொண்டையுடன் ஆம்புலன்ஸ் வாசலில் அலறியது. சேகரும் இன்னும் சிலரும் சேர்ந்து, அவரது துடிப்பையும் திமிறலையும் மீறி அவரை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு போய் ஆம்புலன்சில் கிடத்தினர்.


"ஜானகி நீங்களும் சிவாவும் வாங்க. ராஜீ நீ இங்கயே இரும்மா. இந்நேரத்துல நீ வர வேண்டாம்" சொல்லியவாறே ஆம்புலன்சுக்குள் நுழைந்தான் சேகர்.


கண் கலங்கியவாறே "கொஞ்சம் பாத்துக்கங்க மாமி " என்றவாறு ஆம்புலன்சை நோக்கி வேகமாக நடந்தாள்.


"கவலைப்படாம போயிட்டு வா. நான் பார்த்துக்கறேன். அவருக்கு ஒன்னும் ஆயிடாது தீர்காயிசா இருப்பார்"


ஆம்புலன்ஸும் அதன் சத்தமும் மறையும்வரை பார்த்துவிட்டு மாமியும் ராஜியும் உள்ளே நடந்தனர்.


அந்த ராத்திரியின் மயான நிசப்தத்தையும், குளிரையும் கிழித்துக்கொண்டு ஆம்புலன்ஸ் கதறியது.


"கொஞ்சம் பொறுத்துக்கங்க. உங்களுக்கு ஒன்னும் ஆயிடாது. ஐயோ கடவுளே! இது என்ன சோதனை. இப்பதான் ராஜிக்கு வேற நிச்சயம் ஆயிருக்கு இப்ப போயா இப்படி நடக்கணும்" அவள் முந்தானைத்தலைப்பு ஈரமாகும்படி கண்ணிலும் மூக்கிலும் வாயிலும் வழிய, உடல் நடுங்க அசிங்கமாக அழுதாள். சிவா அவளை அணைத்துக்கொண்டான்.


"கவலைப்படாதீங்க மா. அவருக்கு ஒன்னும் ஆகாது. நாங்கெல்லாம் இருக்கம்ல"


"ஐயோ ம்ம்மா.... வலிக்குதே"'


ஆம்புலன்ஸ் ஆஸ்பத்திரி வாசலை கடந்து, casulaity ward ன் வாசலை தொட்டதும், வெள்ளைச் சீருடை அணிந்திருந்த இரண்டு வார்டு பாய்கள் stretcherஐ ஓட்டிக்கொண்டு விரைந்து வர, இன்னும் நால்வர் சேர்ந்து அவரை தூக்கி stretcherல் கிடத்தினர். அனைவரும் சுவிட்ச் போட்டாற்போல வேலை செய்தனர். எல்லோரும் ஏற்கனவே இது நடக்கப்போவதை ஊகித்திருந்தது போல மிகத்துல்லியமாக செயல்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரின் செயல்பாட்டிலும் ஒரு அவசரம் கலந்த ஒழுங்கு இருந்தது. ராஜசேகர் 'ஐயோ அம்மா' என துடிக்க, சில நொடிகளில் EMERGENCY என்று சிவப்பு மையால் பெரியதாக எழுதியிருக்கும் அறைக்குள் அவர் கடத்திச்செல்லப்பட்டார்.


சிறிது நேரத்தில், வேள்ளைக்கோட்டு stethescope அங்கவஸ்திரத்துடன் வெளியே வந்த டாக்டர்,


"நீங்க patientக்கு என்ன வேணும்? gents யாரும் வரலியா?"


அவள் சேகரைப் பார்க்க,


"நான் நெய்பர் டாக்டர், அவருக்கு எப்படி இருக்கு?"


"மைல்ட் அட்டாக. சீக்கரம் இந்த ஊசிய வாங்கிட்டு வாங்க. ரொம்ப அவசரம். 3000 இருக்கும்" சொல்லிவிட்டு விருட்டென்று உள்ளே சென்றுவிட்டார்.


"அய்யய்யோ! நான் அவசரத்துல ஒன்னும் எடுத்துக்கலையே" என்று அங்கேயே அழ ஆரம்பித்தாள்.


"கவலைப்படாதீங்க! எதுக்கும் இருக்கட்டும்னு நான் கொஞ்சம் பணம் எடுத்துட்டு வந்திருக்கேன். எனக்கு ஹாஸ்பிட்டல கொஞ்சம் அனுபவம் இருக்கு."


அவள் அவனை நன்றியோடு பார்த்தாள்.


"நீங்க இங்கயே இருங்க. சிவா நீ வா" என்று சேகர் அவனை அழைத்துக்குகொண்டு சென்றான்.


அவர்கள் சென்றதும் அந்த இடம் நிச்சலனமாக ஆகிவிட்டது. ஒரு உயிர், அந்த வழியில் துடித்துச்சென்றதர்க்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை. நர்ஸுகள் விகடனில் மூழ்க, வார்டு பாய்கள் கண்ணில் இருந்த மிச்ச தூக்கத்தை தொடர்ந்தார்கள். அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு ஆம்புலன்ஸ். நான்கைந்து கல்லூரி மாணவிகள், விழி பிதுங்க மூச்சை இழுக்க முயன்று கொண்டிருக்கும் இன்னொரு மாணவியை கைத்தாங்கலாக இறக்கினர்.


"என்னம்மா ஆச்சு?"


"வீசிங்குங்க"


அதே அவசரம். அதே ஒழுங்கு. அதே துல்லியம். அந்த இடத்தின் இயந்திரத்தன்மை அவளை பிரமிப்பில் ஆழ்த்தியது.
"பேஷண்டு நேம் என்ன சார்?"


"ராஜசேகர். கொஞ்சம் அவசரம்ங்க"


"தோ அவ்ளோதான் சார். 2750 ரூவா. கேஷா கார்டா சார் ?"


சேகரின் அருகில் இருந்த ஒருவர்,


"சார் மெடிசன்ஸ் ரிடர்ன் பண்ணனும்"


"ரிட்டர்னா? ரிட்டன் எடுக்கறது இல்லையே சார் "


"டெத் ஆயிருச்சு சார்"


"ஓ ! அப்படியா! பில்லு வெச்சுருக்கீங்களா? டேய் வெங்கிட்டு அத என்னன்னு பாத்து அனுப்பு"
சற்று நேரத்தில் ராஜசேகர் சலனமில்லாமல் உறங்குவதை ICU துவாரம் வழியாக மூவரும் கண்டனர்.


"silent attackங்க angio பண்ணி பாத்துட்டம். மூனு எடத்துல அடைப்பு இருக்கு. நல்லவேள சீக்கரம் கொண்டந்துட்டீங்க. இல்லாட்டி you could have lost him. பயப்படாதீங்க ஆபத்துக்கட்டத்த தாண்டிட்டார். இனி பயப்பட ஒன்னும் இல்ல. அடைப்பை நீக்க ஒரு ஆபரேஷன் பண்ணவேண்டிவரும். கொஞ்சம் செலவாகும். ஏதாவது insurance, mediclaim எதுனா வெச்சுருக்கீங்களா?"


"இல்லீங்க "


"pity. வேற வழியே இல்ல, பணத்துக்கு எப்படியாச்சும் சீக்கரம் அர்ரெஞ்ச் பண்ணிக்கங்க"


"எவ்வளவு சார் ஆகும்?"


"minumum ரெண்டு லட்சமாவது ஆகும் "


"ரெண்டு லட்சமா? " அங்கேயே அழத்தொடங்கினாள்


"ரெண்டு லட்சத்துக்கு நாங்க எங்க சார் போவோம். இப்பதான் பொண்ணுக்கு வேற நிச்சயம் பண்ணியிருக்கோம்"


"அழாதீங்கமா. அதுக்கு இப்ப சமயமில்ல. எப்படியாச்சும் பணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க"பஸ் திடீரென்று நின்றது. எல்லோரும் இறங்கிக்கொண்டிருப்பதை கண்டபிறகுதான் bus breakdown ஆகிவிட்டதை உணர்ந்தாள் ஜானகி. எல்லோரும் கண்டக்டரிடம் டிக்கெட் கொடுத்து சில்லரையை திரும்பப்பெற்றுக்கொண்டிருந்தனர். இவளும் சில்லரையை பெற்றுக்கொண்டு கீழே இறங்கினாள். காலை வெய்யில் முகத்தில பளீரென்று அறைந்தது. இனி ஆட்டோ தேடவேண்டும். எரிச்சலாக வந்தது.


'சே! என்ன இந்த மனுஷன் ? இப்படியா போய் கழுத்த நெரிக்கறமாதிரி ஹாஸ்பிட்டல்ல படுத்துக்குவாரு. அதுவும் கல்யாணம் நிச்சயமான நேரத்துல.' காரணமின்றி ராஜசேகர் மேல் கோபம் கோபமாய் வந்தது.


'இப்படியா எல்லாரையும் படுத்திட்டு. சே! எனக்கெல்லாம் எதுனா வந்துட்ட பொட்டுனு போயிடனும். இப்படி இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு எல்லாரையும் இம்ச படுத்திட்டு.., சே! என்ன இப்படி அபாண்டமா யோசிக்கிறேன். என்னோட கையாலாகத்தனத்திற்கு அவரை நொந்துகிட்டு, இது என்ன நினைப்பு இது'


சிக்னலில் நின்றிருந்த ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி,


"50 ரூவா ஆவும்மா "


இறங்கிக்கொண்டாள்


அட்டண்டர் பாஸை காண்பித்துவிட்டு உள்ளே சென்றாள். ஹாஸ்பிட்டல் வளாகம் மிகவும் துப்புரவாக இருந்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளை. நர்ஸ் வெள்ளை. டாக்டரின் கோட் வெள்ளை. tiles வெள்ளை. கட்டில் வெள்ளை, காட்டன் வெள்ளை என எங்கெங்கு காணினும் வெள்ளை வெள்ளை வெள்ளை என வெள்ளை திகட்டியது.


இரண்டாம் வார்டில் 20 மெத்தைகள் இரண்டு வரிசையாக போடப்பட்டு, சில காகிதங்களுடன் ஒரு பரீட்சை அட்டை எல்லா கட்டில்களிலும் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தது. அங்கங்கே வெள்ளை நர்ஸுகளும், உதிரி அட்டெண்டர்களுமாக அறை முழுவதும் சிதறியிருந்தனர். ராஜசேகரன் இரண்டாம் வரிசையில் நான்காம் ஆளாக உறங்கிக்கொண்டிருந்தார். அருகில் சிவா. தூக்கமிழந்த அவனது கண்கள் தேநீர்க்குமிழிபோல் சிவந்திருந்தன. இரவு கொசுக்கடியில் முகம் முழுவதும் வீங்கியிருந்தான்.


"ஏம்மா லேட்டு ? நான் ஸ்கூலுக்கு போகவேண்டாமா?"


"பஸ்ஸு breakdown டா. ஆட்டோ பிடிச்சு வர லேட்டாயிடுச்சு. அடுப்புத்திட்டுமேல டிபன் பாக்ஸ் வெச்சுருக்கேன். உப்புமா இருக்கு. மிச்சம் வெக்காம சாப்டுடு"


அவன் பதில் சொல்லாமல் கிளம்பினான். கோபம். ஊமைக்கோபம். அவன் அப்பா போலவே. அவள் ராஜசேகரைப் பார்த்தாள். அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். முகத்தில் தெளிவு இருந்தது. அந்த முகம். 22 வருடமாய் அவள் பார்த்த முகம். மிக எளிமையான ஒரு எழ்மையாளன் முகம்.


"அம்மா அவர கொஞ்சம் எழுப்பறீங்களா? மாத்திர குடுக்கணும்" நீளமான ஒரு பழுப்பு மாத்திரையும், வட்டமாக குறுக்கே கோடு கிழித்த ஒரு வெள்ளை மாத்திரையும் கையுமாக அந்த நர்ஸ் நின்றுகொண்டிருந்தாள் .


"தூங்கராருங்களே "


"தெரியும்மா. ஆனா இப்ப குடுக்கணும். டாக்டர் உத்தரவு."


அவள் அவரை மெதுவாக எழுப்ப மாத்திரை அவர் கையில் கொடுக்கப்பட்டது."நீ எப்ப வந்த ஜானு? சிவா போயிட்டானா ?"


"ம். இப்பதான் பத்து நிமிஷமாச்சு"


அவர் மாத்திரையை விழுங்கிவிட்டு, இரண்டு தலையணையை அடுக்கி அதன்மேல் சாய்ந்து அமர்ந்துகொண்டார் .அருகில் போடப்பட்டிருந்த மேஜையில் ஃப்ளாஸ்க், ஹார்லிக்ஸ் இத்யாதிகளுக்கு மத்தியிலிருந்து இரண்டு ஆரஞ்சு பழங்களை எடுத்து மௌனமாக பிழிய ஆரம்பித்தாள் ஜானகி.


"ஜானு "


"ம் "


"ஜானூ மா"


"சொல்லுங்க "


"ஏன் உம்முன்னே இருக்க "


"ஒண்ணுமில்ல"


அவளிடம் சொல்ல ஆயிரம் இருந்தது. அதிகம் படிப்பில்லாத ஒரு நடுத்தர குடும்பத்தலைவி. கணவன் மருத்துவமனையில். அடுத்த மாதம் பெண் திருமணம். கையில் காசில்லை. பெண் திருமணத்திற்கு சேர்த்துவைத்துள்ளதைத்தவிர. கவலைகளுக்கா பஞ்சம்.


"பொய் சொல்ற"


ஒரு கணம் நிறைந்த மௌனம்.


"நான் பிழைக்காமலேயே இருந்திருக்கலாம்"


"வாயை மூடுங்க! காலங்காத்தால என்ன பேச்சு பேசறீங்க, அதெல்லாம் உங்களுக்கு ஒண்ணுமில்லை. எல்லாம் சரியாயிடும். " என்றவாறு மார் படபடக்க விசும்ப ஆரம்பித்தாள். அவள் கண்கள் பளபளக்கத் துவங்கியது.


பக்கத்துப் படுக்கையில் இருந்த ஒரு வயது முதிர்ந்த அம்மாள்,


"ஏம்பா வந்ததும் வராததுமா அந்த பொண்ண அழ விடற? பாவம் அது ஏற்கனவே கலங்கி போயிருக்கு. கொஞ்சம் ஆறுதலாதான் பேசேன்" என்றாள்


அறிவுரைகள். உரிமையோடு ஒரு மூன்றாவது மனிதரிடமிருந்து வரும் அறிவுரைகள். மனதை லேசாக்குகிற அறிவுரைகள்.


அந்த இடமே சற்று கதம்பமாகத்தான் இருந்தது. பக்கத்துப் படுக்கை பாட்டியின் பேரனுக்கு இருதயத்தில் ஓட்டையாம். 13 வயதுதான். அந்த சூழலின் நிதர்சனம் புரியாமல் எதற்கோ அடம்பிடித்துக்கொண்டிருந்தான். எட்டாவது பெட்டில் இருக்கும் பெண்ணிற்கு என்னவென்றே தெரியவில்லை. பிறப்புறுப்பில் குழாய் செருகப்பட்டிருக்க,ரப்பர் ஷீட்டில் படுத்துக்கொண்டிருந்தாள். அவர்கள் எல்லோரிடமும் பொதுவாக இருந்தது கவலைகள் மட்டும்தான். அந்த பொதுவே அவர்களுக்கு ஒரு வித ஆறுதல் அளித்தது. அதை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.


"சரிம்மா. இனி அப்படி பேச மாட்டேன். அழாத " என்றவாறு கண்ணைத்துடைத்துவிட்டார். அவளும் கண்ணைதுடைத்துகொண்டு ஆரஞ்சு பிழிவதை தொடர்ந்தாள்.
"பணத்துக்கு என்ன பண்ண போற?"


மௌனம்.


"நான் சொல்லட்டா ?"


அவள் அவரை நிமிர்ந்து பார்த்தாள்


"பேசாம இத எல்லாம் விட்ரலாம். வீட்டுக்கு போலாம். எனக்கு ஒண்ணுமில்ல. ராஜி கல்யாணத்துக்கு குருவி மாதிரி நீ சேர்த்து வெச்சதெல்லாம் இதுல கரைய விட வேண்டாம். அப்புறம் கல்யாணத்துக்கு என்ன பண்ண போறோம்?"


"அது நடக்கும்போது நடக்கட்டும். கடவுள் காப்பாத்துவார்."


அவர் சிரித்தார்.ஜூஸை அவரிடம் கொடுத்துவிட்டு, அவர் அருகில் அமர்ந்தாள். அவர் அவளை அணுகி மெல்ல அவள் கையைப்பற்றினார். தொடுகை. எதையோ உணர்த்தும் தொடுகை. அவர் அதிகம் பேசியதில்லை. அதிகம் பேசுபவரும் இல்லை. பேசுவதில் மட்டும் என்ன இருக்கிறது? ஆயிரம் பேசுகிறோம். அனால் இந்த தொடுகையில் அவர் உணர்த்துவதை எந்த பேச்சாலும் விளக்க முடிவதில்லையே. காமம் கழிந்தபிறகு தன உள்ளங்கையால் அவளின் சிறிய புறங்கையை மூடிக்கொள்ளும்போது அவர் காட்டும் ஆளுமை, ஏதோ அம்மாவில் முந்தானையில் உடலை சுற்றிக்கொண்டதுபோன்ற ஒரு கதகதப்பு. அவள் தந்தை இறந்தபோது அவள் உள்ளங்கையைப்பற்றி கட்டைவிரல் கொண்டு அழுத்தி 'உனக்கு நான் இருக்கிறேன்' என்று ஸ்பரிசத்தினாலேயே உணர்தினாரே, வியாபாரத்தில் தோல்வி கண்டபோது கன்னம்வழிய அவளைக்கட்டியனைத்த்வாறு அவள் மார்பினுள் அண்டிக்கொண்டு, சே! இந்த மனிதர்தான் எத்தனை உணர்ச்சிகளை ஒரு தொடுகையில் வெளிப்படுத்துகிறார்.


டாக்டர் ரவுண்ட்ஸ் வந்திருந்தார். அவள் மரியாதை நிமித்தமாக தன் கையை விடுவித்துக்கொண்டாள்.


"என்ன Mr ராஜசேகர் இப்ப எப்படி ஃபீல் பண்றீங்க?"


"Totally powerless டாக்டர். ஏதோ சப்பிப்போட்ட மாங்கொட்ட மாதிரி இருக்கு உடம்பு"


"எல்லாம் சரி ஆயிடும். இன்னிக்கு நீங்க வீட்டுக்கு போயிடலாம். பணத்த arrange பண்ணிட்டு இன்னும் ரெண்டு மூணு நாளைக்குள்ள ஆபரேஷன் பண்ணிட்டா அப்புறம் nothing to worry .you will be perfectly alright"


இரவு பெரியவாக்குவாதம். எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் ஆபரேஷனுக்கு ராஜசேகர் மறுத்துக்கொண்டிருந்தார்.


"இத்தன வருஷமா எவ்ளோ outdated ஆ ஒரு வாழ்க்க வாழ்ந்திருக்கேன்னு எனக்கு இப்ப தெரியுது. எல்லார் மாதிரியும் சொத்து சேர்க்காம, எல்லார் மாதிரியும் வீடு வாங்காம, வாழ்க்கைங்கறது வெறும் வாழரதுமட்டும்தான்னு நெனச்சிட்டு இருந்தேன். எல்லா விஷயத்தையும் எளிமையா எடுத்துக்கற, வாழ்க்கைய பத்தின பயம் இல்லாம வெறுமன வாழ்ந்திருக்கேன். என்னோட முட்டாள்த்தனத்தையும் தாண்டி நீ சேர்த்து வெச்ச காசுல என் உயிர புதுப்பிச்சிக்கறதுல எனக்கு உடன்பாடு இல்ல. இந்த கல்யாணத்த நிறுத்திட்டு நான் உயிரோட இருந்தேன்னா அந்த எண்ணமே என்ன அரிச்சு கொன்னுடும். என்ன வற்புறுத்தாதீங்க ப்ளீஸ்"


அதற்கு மேல் அவர்கள் ஒன்றும் பேசவில்லை. இப்பொழுது பேசி பயனில்லை. பிறகு அவர் மனதை மாற்றிவிடலாம் என்ற நப்பாசையோடு படுக்கைக்கு சென்றனர்.


விடியற்காலை. சூரியன் திருட்டுத்தனமாக ஜன்னல் வழியாக ஊடுருவிக்கொண்டிருந்தான். எங்கோ தூரத்தில் ஒரு சேவல் வலிக்காமல் கூவியது. பக்கத்துவீட்டில் வாசல் தெளிக்கும் சத்தம் சோம்பேறித்தனமாக கேட்டது. அவள் விழித்துக்கொண்டாள். எங்கும் அமைதியாக இருந்தது. கலைக்க விரும்பாத அமைதி. கலைக்க முடியாத அமைதி. அவர் அவள் அருகில் உறங்கிக்கொண்டிருந்தார். அவரின் நரைத்தமயிரை புறந்தள்ளிவிட்டு நெற்றியில் முத்தமிட்டாள். அவர் வியர்வையின் ஈரம் உதட்டில் பிசுபிசுத்தது. கம்பளிக்குள் அவர் விரல்களைத்தேடி கோர்த்துக்கொண்.. இல்லை, துணுக்குற்றாள். விரல்கள் சில்லிட்டிருந்தன. அவள் நெஞ்சம் பதறியது. இருந்தும் அந்த அமைதியை அவளால் கலைக்க முடியவில்லை. எல்லாமே சூன்யமாக இருந்தது. அவளால் அதை எதிர்கொள்ளமுடியவில்லை. அவர் பிணத்தின் மார்மீது தலைவைத்து அவரை அணைத்துக்கொண்டாள். அவள் கண்களில் நிறைந்த வலி, கன்னங்கள் வரைந்து அவர் மார் முடியை நனைத்தது.
அவள் மனத்தின் ஏதோ ஒரு மூலையில் கொஞ்சம் நிம்மதியாகத்தான் உணர்ந்தாள்!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.