அலாரத்தை எழுப்புவோம்

எந்தப் பறவையும் அலாரம் வைத்து எழுவதில்லை -சதா பாரதி

“ காலைலே சீக்கிரமா எழுந்தா எவ்ளோ நல்லா இருக்கு. ரொம்ப நேரம் இருக்குற மாதிர்p தெரியுது. சில்லுனு காத்து. அழகான நிசப்தம். உண்மையிலே இதையெல்லாம் ரசிச்சு வாழணும். அதுதான் வாழ்க்கை”

இப்படி பல முறை சொல்லியிருப்போம். இல்லையெனில் பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் தேர்வு சமயங்களில் அலாரம் வைத்து அது அடித்து திரும்பவும் அதை நாம் அடித்து எழுந்து திருதிருவென வேகமாக பாத்ரூமிலே பேஸ்ட் கொட்டாமலே வெறும் பிரஸ்ஸிலேயே பல்தேய்த்து விட்டு தூக்கக் கலக்கத்தோடு படித்த வரலாறுகளையெல்லாம் ஒவ்வொருவரின் சுய சரிதை எழுதும்போதெல்லாம்இணைத்துக்கொள்ளலாம். அதிகாலை நேரங்களில் எழச்சொல்வது எல்லோருக்குமே வழக்கமாகிவிட்டது. சொல்பவர்கள் எல்லாம் எழுந்திருப்பார்களா என்ற ஆராய்ச்சியிலேயே நாம் தூங்கிவிடுகிறோம். நமது மூதாதையர்களும் அறநூல்களும் அனைத்து சமயங்களும் சூரியன் விழிப்பதற்கு முன் நமது படுக்கையை சுருட்டி வைத்தலே உகந்தது என்று சொல்கிறது. அதிகாலையில் எழுவது அத்தனை எளிதான காரியமில்லை என்றே நமது உடல் சொல்கிறது. அது ஒன்றும் சிரமமானது இல்லை என்றபடி மனம் சொல்கிறது. நாம் எதன் சொல்படி கேட்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது விடியலும் அமைகிறது.

உலகிலேயே இதுவரை அலாரம் அடித்தவுடன் எழுந்தவர்கள் யாருமில்லை என்பதே பலரும் அறிந்த உண்மை என்றே நான் அடிக்கடி சொல்லி வருவதுண்டு. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து படிக்கலாம் இல்லை வேறு ஏதேனும் வேலை செய்யலாம் என்று யோசித்து விட்டு இரவு உறங்குவதற்கு முன் வைத்த அந்த அலாரம் அடிக்கும்போது இருக்கும் நமது மன நிலைதான் நம்மை தீர்மானிக்கிறது. அடிக்கப்போகும் அலாரத்தை மாற்றி வைத்தல் , அது அடித்தவுடன் கோபமாகவே அதை திருப்பி அடித்தல், அடிப்பதற்கு முன்னரே அணைத்து என்ற வகையிலே நீள்கிறது நமது சோம்பலுடைய நீட்சி…

படுக்கையோடு சேர்ந்தே உதறிவிடுங்கள் உங்கள் சோம்பலையும் சதா பாரதி

ஒவ்வொரு நாளுமே பல்வேறு புதிய ஆச்சரியத்தோடும் அனுபவங்களோடும் நமக்காக காத்திருக்கும்போது அதை நம்பிக்கையோடு எதிர்கொள்வதற்காக மகிழ்ச்சியாக எழுவது அவசியமாகும். குழந்தைகள் எழுவதுபோல உடனடியாக முகமலர்ச்சியோடு அலாரம் அடிப்பதற்கு முன்னரே உங்கள் மனமெனும் அலாரத்தால் எழுந்திடுதல் சுகமான அனுபவம்தான். நம்மில் பலருக்கும் ஒரு பழக்கம் உண்டு. விழிப்பதற்கும் எழுவதற்கும் ஆகும் காலம் சிலருக்கு 10 நிமிடங்களில் ஆரம்பித்து 1 மணிநேரம் வரை ஆகிறது என்றால் அது மிகையாகாத ஒன்றே. அப்படியே படுக்கையில் இருந்து கொண்டெ காலையில் எழுந்ததுமே அலைபேசியில் குறுந்தகவலை அனுப்பியும் தொலைக்காட்சியினைப் பார்த்தும் எழ வேண்டுமே என்ற எரிச்சலோடு எழுவபர்களின் நாட்கள் எல்லாமே பதட்டத்தோடுதான் கழியும்.

“கௌசல்யா சுப்ரஜா " என்றே ஆரபம்பிக்கும் சுப்ரமாதமாகட்டும் இல்லை கிராமத்து பறவைகளின் ஒலிகளும் மாடுகளின் ஒலிகளும் ஏன் சில நேரங்களில் கேட்கும் ரயில் வண்டிகளின் ஒலிகள் கூட மகிச்சியோடு அந்த நாளை வரவேற்கும் ஒலிகளே என்பதை ரசனையோடு வாழ்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள். உண்மையில் கடவுளை ஒரு காரணத்திற்காகவே கொண்டாடலாம் . உலகின் மிகப்பெரிய பணக்காரனாக இருந்தாலும் சரி. பிச்சையெடுத்து தினமும் பிழைப்பவராக இருந்தாலும் சரி அனைவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணிநேரம்தான் என்பதை சரியாக வரையறுத்ததிற்காகவே இறைவனைப் பாராட்டலாம்.இந்த இருபத்து நான்கு மணிநேரத்தைச் சரியாக பயன்படுத்துபவர்களே வெற்றியாளர்களாக வலம்வருகின்றனர்.அவ்வாறு நன்றாக திட்டமிடவேண்டும் என்றால் அதிகாலை எழுவது அவசியமாகிறது. ஒவ்வொரு நாளும் நம்மை மீறி நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு அதிகாலையில் சீக்கிரமாக எழுவதே ஒரு காரணமாகவும் அமைந்துவிடுகிறது.

சில நிமிடங்களுக்கு நமது சிந்தனைகளை தட்டியும் எழுப்புவதே அதிகாலை நேரத்தின் வேலையாகவும் விடுகிறது. நல்ல எண்ணங்களுக்கு எப்போதுமே வலிமை உண்டு என்பதை நாம் எழுவதின் மூலம் உணர்த்த முடியும். பல நேரங்களில் நம்முடைய அதிகாலை எண்ணங்களே வாழ்க்கையை மிகச்சிறப்பான முறையில் வழி நடத்தி செல்லும் என்பதையும் மறுக்க முடியாது. அதிகாலையில் எழுந்து சுதேசமித்திரன் பத்திரிக்கையை வீடுவீடாக பேட்டபடியே “ இந்த பத்திரிக்கையில் நாமும் ஒரு நாள் தலைப்புச் செய்தியாக வர வேண்டும்”என்ற உள்ளுணர்வும் நம்பிக்கையோடும் இருந்தவர்தான் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என்பதை அவரே பல மேடைகளில் கூறியுள்ளார். அதிகாலை நேர உள்ளுணர்வு எத்தனை வலிமையானது என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியாகும்.

படுக்கையிலிருந்து எழும்போதே நம் பந்தயம் தொடங்கி விடுகிறது சதா பாரதி

அதிகாலையில் நாம் எழுவதிலிருந்தே நமக்கான புதிய நாளும் தொடங்கி விடுகிறது . அவசரமான உலகமாக கருதப்படும் இந்த உலகில் நம்முடைய செயல்களை சரியான முறையில் மட்டுமல்லாமல் சரியான வேகத்தோடும் செய்வது அவசியமாகிறது. காலையில் எழுந்தவுடன் ஒவ்வொரு விநாடியிலும் இன்பத்தை தரும் அந்த நாளின் நிமிடங்களை எப்படி நீட்டிப்பது என்பதை சற்றே யோசிக்கலாம்?. இப்போது எத்தனை மணிக்கு எழுகிறீர்கள் என்பதை உங்களுக்குள் கேட்டுப்பாருங்கள். அதிகாலை எப்போதுமே சீக்கிரமே எழுந்துவிடுவேன் என்பவர்களுக்கு நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஏனெனில் நீங்கள் வெற்றியாளர்களே. உங்களுக்கு வாழ்த்துக்களை மட்டுமே சொல்லிக்கொள்கிறேன். காலை ஆறுமணிக்கு மேலாக எழுந்திருக்கும் அன்பு நண்பர்களிடம் ஒரு கேள்வி கேட்கவே விரும்புகிறேன். உங்கள் ஒவ்வொரு நாளுமே மகிழ்ச்சியாகத்தான் செல்கிறதா? என்பதை உங்கள் மனசாட்சியோடு பேசிவிட்டு சொல்லுங்கள். உங்கள் மனம மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.. ஆனாலும் ஏதேனும் ஒரு தேக்கநிலை உங்களோடு பயணிப்பது போன்றே இருக்கும். மறதியும் கவலைகளும் உங்களை அவ்வப்போது தொடர்ந்து வரும் . அதுவும் 7 மணியினைத்தாண்டி எழுந்து அவசரஅவசரமாக பள்ளி, கல்லூரிக்கோ பணியிடத்திற்கோ கிளம்புபவர்களின் நிலை அந்தோ பரிதாபம்தான் .

அவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமுமே நெருப்பு நிமிடங்களாகவே கடந்து செல்லும் என்பதே நிதர்சனம். அவசரகதியில் நாம் செய்யும் பல வேளைகள் பல நேரங்களில் நம்மை நிதானமாக யோசிக்க வைத்துவிடும் இந்த குழப்பங்களுக்கெல்லாம் ஒரு அழகான தீர்வுதான் அதிகாலையில் எழுவது. நம்பிக்கையோடு எழுவது மட்டுமெ ஆகும். . காலை 7 மணிக்கு எழுபவர்களை 4 மணிக்கு எழச்சொன்னால் என்னை விட கொடுங்கோலன் யாரும் இருந்திட முடியாது. நான் அவ்வாறு சொல்லவும் விரும்பவில்லை. நான் சொல்வது சூரிய உதயத்திற்குப் பின் எழுபவர்கள் தாங்கள் எழும் நேரத்தை சற்றே பரிசீலனை செய்யுங்கள். நீங்கள் எத்தனை மணிக்கு இப்போது எழுகிறீர்களோ அதிலிருந்து குறைந்தது அரைமணிநேரமாவது முன்னர் எழுவதற்கு முயற்சி செய்யுங்கள். இதை ஒரு ஆறுமாதம் சரியாகச் செய்துவிட்டோம் என்றால் அதன் பின்னர் நாம் நேரத்தை இன்னமும் சுருக்கி 1 மணிநேரம் முன்னதாக எழுவதற்கு பழகிக்கொள்ளலாம். நமது மனம் ஒரு விஷயத்திற்கு பழகிவிட்டால் அதை அவ்வளவு எளிதாக மாற்றிடமுடியாது. அதே நேரம் பழக்குவதற்கு சற்று நாட்கள் பிடிக்கும். முதல் நாள் மட்டும் காலை 5 மணிக்கு எழுந்து விட்டு அதற்கு அடுத்தடுத்த நாள் நாம் எழுவதே நமக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். ஆனால் 1 வாரம்வரை நாம் கட்டுப்பாடோடு எழுந்துவிட்டோம் என்றால் அதன்பின்னர் நமது மனம் காலையில் எழுவதற்கு எந்த சங்கடமும் செய்யாது. நம்மையறியாமல் அனிச்சை செயல் போலவே அதிகாலை எழுவது சுலபமாகிவிடும்

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

என்று கார்த்திகை மார்கழி மாதங்களில் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் குளிர்நீரில் குளித்துவிட்டு கோயிலுக்கு சென்று சரணகோஷம் போடுவதும், திருப்பாவை, திருவெம்பாவை படிக்கும் பக்தர்களிடையே இருக்கும் நம்பிக்கையைப் பார்த்திருக்கிறீர்களா?. அதிலே ஒரு உண்மையும் ஊடாக ஒளிந்திருக்கும். கார்த்திகை மார்கழி மாதங்களில் கடும்குளிர் வாட்டக்கூடிய நேரத்தில்தான் நமக்கு போர்வையை இழுத்துப் போர்த்தி படுக்கத் தோன்றும்;. ஆனால் எழுவதற்கு நடுங்கும் காலங்களில் எழுந்து மனதையும் உடலையும் நாம் சொல்வதைக்கேட்கும் படியாக வைத்திருக்க நம் முன்னோர்கள் காலையில் எழுவதை பழக்கமாக்கச் சொன்னார்கள் . ஓசோனின் கதிர்கள் வருவதை நமது உடலில் இயல்பாக படுவதற்கான ஏற்பாட்டை நமே அறியாமல் நம்மை நம்பிக்கையோடு அதிகாலையில் எழச் செய்த நமது முன்னோர்கள் எத்தனை பெருமைக்குரியவர்கள் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். உங்கள் உடல் நீங்கள் சொல்வதுபடி கேட்க வேண்டும். அந்த அதிகாலை வேளையில் கோயில் பக்தர்களோடு பஐனைப் பாடி வீதிவழியாகச் செல்லும்போது நம் மீது விழும் ஓசோன் கதிர்களை நாம் இயல்பாகவே ஏற்றுக் கொள்கிறோம். நமது ஒவ்வொரு அதிகாலைச் செயல்களுமே நம்மையும் மீறி நம்மிடம் ஏதோ ஒரு புதிய நல்ல பழக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது . அந்த அதிகாலை வேளையில் நம்முடைய உடல் சோம்பலை உதறிவிட்டு எழுந்தாலே நமக்கு வெற்றிக்கான பாதை தெரிய ஆரம்பித்துவிடும். அந்த நேரம் நமது நல்ல மனம் சீக்கிரம் எழுந்தால் நல்லது என்று சொல்லும்.

மனம் சொல்வதைப்போல மகிழ்ச்சியோடு படுக்கையை விட்டு எழுங்கள் . இன்றைய நாள் எனக்கானது என்ற புன்னகையோடு எழுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு அரைமணிநேரம் முன்னதாக எழுகிறோம் என்றால் வாரத்திற்கு நமக்கு மூன்றரை மணிநேரம் கூடுதலாக கிடைக்கும். மாதம் அதுவே 14 மணிநேரமாக கிட்டத்தட்ட அரைநாளுக்கு மேலாக கிடைக்கும். வருடத்திற்கோ 10 நாட்கள் வரை நமக்கு புதியதாக கிடத்ததது போன்ற உணர்வு மேலிடும். இதுவே ஒரு மணிநேரமென்றால் வருடத்தை கணக்கு போடுகையில் நமக்கு ஒரு மாதம் வரையிலான நேரம் கிடைக்க ஆரம்பிக்கும். எழுவதில் ஒரு மணிநேரம் முன்னதாக எழுந்தாலே நமக்கு ஒரு மாதம் வரை நேரம் கிடைக்கிறது என்றால் கிடைக்கும் நேரத்தை நாம சரியாகப் பயன்படுத்தினால் எத்தனை விஷயங்களை எளிதாகச் சாதிக்கலாம் என்பதை மனதிலே படம்போட்டு பாருங்கள் எவ்வளவு ரம்மியமாக இருக்கும்.

இனி நீங்கள் எழும் நேரத்தை உங்கள் மனம் முடிவு செய்யட்டும். ஒவ்வொரு அதிகாலை எழுவது முக்கியமல்ல. அந்த எழுவதில் இருந்து நாம் ஏதாவது வேலையை திட்டமிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு திட்டமிட்டு வைத்துக் கொண்டாலே அதை செய்வதற்காகவே நாம் சீக்கிரமாக எழ வேண்டும் என்ற எண்ணம் நமது மனதிலே எழும். எத்தனை சந்தோஷங்களைத் தரும் அதிகாலை விழிப்பு என்பதை உணரும்போதே நமக்கு புரியவரும். ஆழ்ந்த உறக்கத்திற்குப் பின்னர்

விழித்துக்கொள்ளும் உங்கள் உடலும் உள்ளமும் தனது வேலைகளைத் தொடங்க காத்திருக்கும் வேளைதான் அந்த அதிகாலை வேளை. கண்களை மெதுவாக திறந்து விழிக்கும்போதே இறை நம்பிக்கையுடையவர்கள் இறைவனையும் இயற்கையை நேசிப்பவர்கள் இயற்கைக்கும் நன்றி சொல்லிவிட்டு விழிகளை மெதுவாகத் திறந்திடுங்கள். புதிய நாளும் புதிய அனுவபங்களும் நமக்காக காத்திருக்கிறது என்ற நம்பிக்கையோடு எழுந்து உங்கள் பணிகளைத் தொடருங்கள்.

அதிகாலையில் எழுந்து நமது காலைக்கடன்களை முடித்துவிட்டு முகம் கழுவிய பின்னர் இரண்டு நிமிட தியானத்திற்குப் பின்னர் நமக்கு புரியாத பாடங்களையும் நாம் மனனம் செய்ய இயலாதவற்றையும் சிக்கல்களாக நினைக்கும் சிலவற்றை தீர்ப்பதற்கான தீர்வுகளையும் யோசித்துப் பாருங்கள். புதிய வழிகள் அத்தனையும் அந்த காலைநேர அமைதியில கிடைக்கும். நமது மனமும் உடலும் மலர்ச்சியாக இருக்கும் வேளையில் நாம் தொடங்கும் எந்தப் பணியும் மிக எளிதாக முடியும் என்பதே நமது ஆன்றோர்களின் கருத்துமாகும். அதிகாலையில் எழுந்து படிப்பது என்பது மாணவர்களுக்கு மிகவும் உகந்ததாகும். என்னுடைய மாணவர்களிடையேயும் வெளியே எந்த பள்ளி கல்லூரி மாணவர்களோடு பேசும்போதும் நான் சொல்வதே அதிகாலையில் எழுந்து வேலையைத் தொடங்குங்கள் என்பதாகவே இருக்கும். அவ்வாறு படிக்கத் தொடங்கும்போது நமது மூளையும் உடலும் புத்துணர்வோடு தங்களின் வேலையைத் தொடங்க ஆர்வமாக இருக்கும்.அப்போது நாம் படிக்கும் போது நமக்கு புரியாத பல பாடங்கள் எளிதாக புரிய வரும். நம்மைப் போன்றுதான் நமது மூளையும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். நமக்கு பிடித்தமான வேலையைச் செய்ய சொன்னால் எத்தனை வேகத்தோடு அதைச் செய்ய முன்வருகிறோம். அதைப் போலத்தான் அதிகாலை வேளை என்பது நமது உடலுக்கும் மூளைக்கும் மிகவும் பிடித்தமான நேரமாகும். அந்த நேரத்தில் நாம் செய்யும் வேலைகள் சிறப்பாகவே முடியும்

இதுவும் ஒரு நாளா? இதுவே உங்கள் நாளா? முடிவெடுங்கள் சதா பாரதி

உங்கள் நாளின் தொடக்கத்தில் எழுந்ததுமே உங்கள் மனதிலே மலர்ச்சியும் மகிழ்ச்சியும் தோன்றுதல் அவசியமாகும். இந்த நாள் இறைவன் நமக்கு அளித்த மற்றுமாரு அற்புத வாய்ப்பு. மிகச்சரியான முறையில் ஒவ்வொரு நொடிகளையும் நாம் பயன்படுத்த வேண்டும். சாதாரண நாளாக இதனைக் கடக்க விட்டுவிடக்கூடாது. நாம் ஏதேனும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் நாளாக இது அமைய வேண்டும். புதியவற்றைப் பற்றி அறிந்துகொள்ளும் நாளாக இந்த நாள் அமைய வேண்டும் என்ற உறுதியோடு தொடங்க வேண்டும். அந்த இனிய நாளை நாம் எப்படி எதிர்கொள்வது என்பதை நம்பிக்கையோடு யோசித்தாலே போதும். நமது தொடக்கம் நல்லதாக அமையும் என்ற நம்பிக்கையில் நமது நாளை தொடங்குவது அவசியமாகும்

“ இன்னைக்கு யார் மூஞ்சிலே முளிச்சேன்னு தெரியலே. காலைல இருந்து எல்லாமே தப்பு தப்பாவே நடக்குது” இந்த மாதிரியான வசனங்கள் இப்போது மட்டுமல்ல ராஐh காலகட்டத்திலும் கேட்டதுண்டு. காலையில் எழுந்து கண்விழிக்கும்போதே நல்லவர்களின் முகத்தில் முழிக்கவேண்டும் என்பதற்காகவே அரசர்கள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் எல்லாம் செய்திருப்பார்கள். தமிழ்த்திரைப்படங்கள் பலவற்றிலும் இதுபோன்ற பலகாட்சிகளைக் கண்டிருப்போம். அண்ணன் விழிக்கும்போதே தங்கையின் முகத்தில் விழிக்க வேண்டும் என்ற வகையில் காட்டியிருப்பார்கள். காலையில் கண் திறக்கும்போது மன அமைதியயோடும் மகிழ்ச்சியோடும் விழித்தாலே போதும். உங்கள் விடியல் சிறப்பானதாக இருக்கும்

தெனாலி இராமன் கதைகளில் ஒன்று. இது நீங்கள் கேட்ட கதையாக இல்லை படித்த கதையாகவும் இருக்கலாம். தெனாலிராமன் விடுமுறை எடுத்து ஒருநாள் வெளியூர் சென்றிருந்த நேரம். மற்ற அமைச்சர்கள் கிருஷ்ணதேவராயரிடம் நல்ல பெயர் எடுத்துவிட வேண்டும் என்ற நினைப்பில் Nஐhசியர் ஒருவரைக் கூட்டி வந்தனர். அவரும் கிருஷ்ணதேவராயரின் புகழ் பாடி விட்டு “மன்னா உனக்கு எல்லா செல்வங்களும் வெற்றிகளும் கிட்டும். ஆனால் அதற்கு நீ நாளை மட்டும் ஒன்று செய்தாக வேண்டும்” என்று சொல்லி “ நாளை காலை கண்விழிப்பது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரையில் நீ பார்ப்பவைகள் எல்லாமே உனக்கு பச்சையாகத் தெரிய வேண்டும். நாளை ஒருநாள் மட்டும் இப்படி கடத்திவிட்டால் இனி வரும் நாள் எல்லாம் உனக்கு பொன்னாளாகவே அமையும்” என்ற படி போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.

கிருஷ்ணதேவராயரோ அமைச்சரவையைக் கூட்டி “ அந்த Nஐhசியர் சொன்னது போல நாளை காலையில் நான் விழிப்பதற்குள் அத்தனையும் பச்சையாக மாறியிருக்க வேண்டும். இல்லையேல் உங்களைத் தொலைத்துவிடுவேன்” என்று சொல்லி விட்டு சென்றுவிட்டான். அமைச்சர்களுக்கோ என்ன செய்வதன்றே தெரியவில்லை. அப்போதே மாலைநேரம் முடிந்து இரவு ஆரம்பித்துவிட்டது. காலைக்குள் அத்தனை இடங்களையும் எப்படி பச்சையாக மாற்றுவது என்று குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர். இப்போது இயக்குநர் ஷங்கர் திரைப்படத்தில் செய்வதுபோல சாலைகளையும் அரண்மனையையும் பச்சை பெயிண்ட் அடித்து மாற்றிவிடலாம் என்ற யோசனை ஒருவருக்கு தோன்றியதால் உடனடியாக அதனை செயல்படுத்தலாம் என்ற ஆர்வத்தில் அதனை செயல்படுத்த ஆரமபித்தனர். அரண்மiனையை மாற்ற முடிவுசெய்து வண்ணத்தால் நிரப்பிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு தாண்டியும் அவர்களால் அரண்மனையைக் கூட மாற்ற முடியவில்லை. என்னசெய்வது மறுநாள் காலை மன்னருடைய கோபத்தை எப்படிச் சமாளிப்பது என்ற கலக்கத்தோடு இருந்தனர். அப்போது ஊருக்கு சென்றிருந்த தெனாலிராமன் திரும்பிக்கொண்டிருந்தார். அமைச்சர்கள் அனைவரும் ஒடி வந்து தெனாலிராமனிடம் நடந்ததைக் கூறி “ நீதான் எங்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டினர். தெனாலிராமனோ சிரித்துக் கொண்டே “ இவ்வளவுதானே . நாளை மன்னர் பார்க்கும் இடமெல்லாம் பச்சையாகத் தெரியும். கவலை மறந்து நிம்மதியாகத் தூங்கிவிட்டு காலையில் வாருங்கள் மன்னனை எழுப்புவோம்” என்று சொல்லி அனைவரையும் அனுப்பி வைத்தான்.

குழப்பத்தோடு சென்ற அமைச்சர்கள் அனைவரும் மறுநாள் மன்னன் விழிப்பதற்கு அரைமணிநேரம் முன்னதாகவே அவருடைய அறைவாயிலில் பதட்டத்தோடு காத்திருந்தனர். தெனாலிராமனின் வருகைiயை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். தெனாலிராமனும் எப்போதும் போல் சிரித்துக்கொண்டே வந்து சேர்ந்தான்.

“மன்னனை எழுப்பலாமா?” என்று அனைவரிடமும் கேட்டுவிட்டு மன்னனின் அறைக்குள் சென்றான்.பயத்தோடு அமைச்சர்கள் அவன் பின்னாலே சென்றனர். தெனாலி மன்னனை எழுப்பினார். மன்னரோ “ தெனாலி நான் கண் திறக்கப்போகிறேன். நேற்று நீ இல்லை. சக அமைச்சர்கள் Nஐhசியர் சொன்னதைச் சொன்னார்களா?. நான் பார்க்கும் இடமெல்லாம் பச்சையாகத் தெரியுமா?” என்றுகேட்டார் தெனாலியோ “ ஆம். மன்னா எல்லாம் கேள்விப்பட்டேன். நீங்கள் தயக்கமின்றி கண்களைத் திறங்கள். எல்லாமே பச்சையாகவே தெரியும். அதற்கு முன்னதாக ஒரு சின்ன வேண்டுகோள். இந்த கண்ணாடியை அணிந்து கொள்ளுங்கள்” என்று சொல்லி பச்சை நிறக்கண்ணாடி அணிவித்தது போல முடியும் கதை.

தெனாலிராமன் காலத்தில் கண்ணாடி, பெயிண்ட் எல்லாம் உண்டா? என்ற ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. விழிக்கும் திசையெல்லாம் பச்சையாகத் தெரிய வேண்டும் என்றால் எல்லாவற்றையும் பச்சையாக மாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. பச்சைக் கண்ணாடி அணிந்து கொண்டாலே போதுமானது என்ற கருத்துதான் இந்த கதை சொல்கிறது. காலையில் எழுந்து யார் முகத்தில் விழிக்கிறோம் என்பதைப் பொறுத்து நாள் நல்ல நாளாக அமைவதில்லை. எழும்போது நமது மனதில் ஏற்படும் உணர்வுகளும் எண்ணங்களுமே அந்த நாளை மதிப்பு மிக்க நாளாக மாற்றுகிறது. உங்களுக்கான விடியல் உங்கள் மனதினைப் பொறுத்தும் உங்கள் அணுகுமுறையினைப் பொறுத்துமே அமைகிறது என்பதே உலக உண்மையாகும். தேவையற்ற சில எதிர்மறையான நம்பிக்கைகைள் நம்மைச் சிதைத்துவிடும் என்பதற்காகவே நமது கனவுகளில் கூட எதிர்மறையானவைகள் வந்தால் நேர்மறையாக நடக்கும் என்ற நம்பிக்கையை நமக்கு முன்னோர்கள் அளித்துவந்துள்ளனர். நமது கண்களைத் திறந்து கொள்ளும்போதே இந்த உலகம் விடிந்து விடுகிறது என்ற நம்பிக்கை நமது ஒவ்வொரு விடியலின்போதும் இருக்க வேண்டும்

நமக்காகவும் விடியும் சில விடியல்கள்… அது இன்றாகவும் இருக்கலாம் சதா பாரதி

நம்பிக்கையோடு எழுங்கள். அதிகாலை எழும் பறவைகளும் விலங்குகளும் எத்தனை நம்பிக்கையோடு எழுகின்றன. ஒவ்வொரு நிமிடமும் சிறகுவிரித்து தனது இலக்கினை நோக்கி நம்பிக்கையோடு பறப்பதைப் கவனியுங்கள். அதிகாலை வேளையிலே புல்வெளியில் மீதிருக்கும் பனித்துளியினை ரசியுங்கள். தேனை உண்ண வரும் வண்டுகளின் ரீங்கார இசையினைக் கேட்டு மகிழுங்கள். சின்ன சின்ன ரசனையான பணிகளை எப்படித் தொடங்குவது என்பதை மகிழ்வோடு சிந்தனை செய்யுங்கள். இந்த விடியல் இனி இன்னொருமுறை கிடைத்துவிடாது என்றவகையிலே ஒவ்வொரு விடியலையும் ரசித்து மகிழுங்கள்.

ஓருநாள் மட்டுமே உயிர்வாழும் பூக்களைப் பாருங்கள்.எத்தனை அழகோடு மலர்கிறது. வாசனையால் தேனீக்களை இழுத்து தனது தேனையும் மகரந்தத்தையும் தந்து விட்டு வாசனையோடு தனது ஒருநாள் வாழ்வினைக் கூட மகிழ்வோடு அமைத்துக் கொள்கிறது. பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ போல பல்வேறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூக்களும் எந்த வருத்தமும் இல்லாமல் அதிகாலை வேளையில் அற்புதமாகவே மலர்கிறது. அதைப்போலவே நமது உடலும் மனதும் மலரவேண்டும் அதிகாலை வேளை அத்தனை அற்புதமானது. அந்த நேரத்தில் நமது மனமும் உடலும் ஆரோக்கியமானதாகவும் புதிதாகவும் இருக்கும். நமது ஞாபகச் சக்தியை வளர்ப்பதற்கும் நமக்கு புரியாத பாடங்களை படிப்பதற்கும் ஏற்ற காலம் அது. அதிகாலையில் எழுந்து படிக்கும் வழக்கத்தை கொண்டிருப்பவர்கள் மிகச்சிறந்த சாதனையாளராக வரும் வாய்ப்பை இயல்பாகவே பெறுகிறார்கள் என்பதே பல்வேறு உளவியல் அறிஞர்களின் கருத்தாகவும் உள்ளது.இத்தனை சிறப்பு வாய்ந்த அதிகாலையில் எழுவதிலிருந்தே நமது வாழ்வின் வெற்றிப் பயணம் தொடங்கிவிடுகிறது.

சாதனை நாட்களும் சாதாரணமாகவே விடியும்… நம்பிக்கையோடு எழுங்கள் சதா பாரதி

மிகப்பெரிய அதிசயங்களும் சாதனைகளும் நிகழ்த்தப்பட்ட நாட்களின் விடியல்களில் கூட எவ்வித அறிகுறிகளும் இன்றி எப்போதும்போலத்தான் விடிந்திருக்கும். விடியும். ஆனால் அந்த நாளின் முடிவுதான் அதைச் சாதனை நாளாக அறிவிக்கிறது. மகாகவியும் மகாத்மாவும் பிறக்கப் போகிறார்கள் என்பதற்காக அந்த நாளிலே வானத்தின் ஓரத்திலே எந்த நட்சத்திரமும் தோன்றவில்லை. இயல்பாகவேதான் பிறந்தது. அந்த நாளை சாதனைக்குரியவர்களின் பிறந்த நாளாக மாற்றியது அவர்களின் செயல்பாடுகள்தான் என்பதை மறுக்க முடியாது. நாம் பிறந்த நாளையோ இல்லை நாம் அதிகாலை எழும் நாளையோ மிகச் சிறந்த நாளாக மாற்றுவது என்பது நாம் எழுவதில் மட்டுமல்ல. அதன்பின்னர் அதைச் தொடர்ச்சியாக கடைபிடித்து நமது வாழ்வினை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ளும் போதுதான் நமது வாழ்வும் வசப்படும். செயல்களாலும் சிந்தனைகளாலும் ஒவ்வொரு நாளையும் சாதனை நாளாக மாற்றும் பொறுப்பும் சக்தியும் நம்மிடையேதான் உள்ளது என்பதை நம்புங்கள். நம்பிக்கையோடு எழுங்கள் இனி

அலாரங்கள் நம்மை எழுப்ப வேண்டாம் அதிகாலை அலாரத்தை நாம் எழுப்புவோம் சதா பாரதி

எனது அலாரத்தை எழுப்புங்கள் நூலில் இருந்து ...நம்பிக்கையோடு...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.