தேடா உறவு

வாகன நெருக்கடி தொடங்க ஆரம்பித்திருக்கும் அந்த வேளையில் இருசக்கர வாகனத்தில் பாலாவும் அவனது நண்பனும் வேகமாக மற்ற வாகனங்களை முந்தி போய்க் கொண்டிருந்தனர்.

" இந்த ட்ராபிக் ல ஏன்டா இவ்ளோ வேகமா ஓட்ற? டேய் மெதுவா போடா" என கத்தியவாறு நண்பனின் தோள்களை இறுக்க பற்றிக்கொண்டான் பாலா.

ஆனால் பாலாவின் கேள்விகளுக்கு விடையேதும் கிடைக்கவில்லை.இருப்பினும் பாலா கத்துவதை நிறுத்தவே இல்லை.

அடுத்த நான்காம் நிமிடம் மோட்டார் சைக்கிள் சேலம் தொடர்வண்டி நிலையத்திற்குள் நுழைந்தது.

"பாத்தியா மச்சான்! சொன்ன மாதிரியே எட்டு நிமிஷத்துல கொண்டு வந்து விட்டுட்டேன்" என பெருமிதம் கொண்டான் பாலாவின் நண்பன்.

"ரொம்ப பேசாதே! பத்து நிமிஷம் ஆயிடுச்சு. அது மட்டும் இல்லாம இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சு தான்டா ட்ரெய்னே வரும். அதுவரைக்கும் நான் என்னடா பண்றது?"

"அது உன் தலையெழுத்து" என்பது போல நெற்றியில் கோடிட்டுக் காட்டினான் அவனது நண்பன்.

"உன் ஆள பாக்கத்தான இவ்ளோ வேகமா போற, அவகிட்ட இன்னைக்கு புல்லா திட்டு வாங்க போற. இது என் சாபம்" புறப்பட்டவனைப் பார்த்துக் கத்தினான் பாலா.

"தினமும் அதே கதைதான்" திரும்பாமல் சொல்லிவிட்டு புறப்பட்டான் நண்பன்.

ட்ரெயினுக்கு இன்னும் நிறைய நேரம் இருப்பதால் தண்ணீர் பாட்டில், பிஸ்கட் என ஒவ்வொரு கடையிலும் நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான் பாலா. அப்பொழுது ஒரு கடையில் உள்ள வானொலியில் ஒலிபரப்பான செய்தி அவன் காதில் விழுந்தது.

""விவசாயம் மற்றும் விவசாய நிலங்களைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மத்திய அமைச்சர் உறுதி"" என்ற செய்தி வானொலி பரபரப்பான இசையுடன் ஒலிபரப்பிக் கொண்டிருந்தது.

"பேசிக்கிட்டே இருங்கடா! எவனும் ஒன்னும் பண்ணிடாதீங்க" மனதுக்குள் திட்டிக்கொண்டே நடைமேடை நோக்கி நடந்தான் பாலா.

காதிலே ஹெட்போன் மாட்டிக்கொண்டு வாட்ஸ்அப்பில் நுழைந்து நண்பர்களைத் தொந்தரவு செய்யத் துவங்கினான் அவன். ஹெட்போனில் பாடல் ஏதும் போடாமல் வெறுமென மாட்டியிருந்ததால் ஏதோ கைபேசி அதிர்வுறும் சத்தம் அவனுக்கு கேட்டது.

சத்தம் வந்த திசை நோக்கி திரும்பினான். பக்கத்திலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை அணிந்திருந்த 50 வயது மதிக்கத்தக்க பெரியவரின் சட்டைப் பையில் அந்த கைபேசி அதிர்வுற்றுக் கொண்டிருந்தது. நமக்கெதற்கு என அமைதியாய் இருந்தான் பாலா. சற்று நேரத்திற்குப் பின் மீண்டும் அதே சத்தம் கேட்க "அண்ணா போன்" அவரது சட்டைப் பையை நோக்கி கையை நீட்டினான்.

சற்று திடுக்கிட்டவராய் அந்த பெரியவர் உண்மையுணர்ந்து கைபேசியைக் காதுக்கு கொடுத்தார்.

"ம்.. வந்துட்டம்பா. நீ சொன்ன மாதிரியே ஒரு மணிநேரம் முன்னாடி வந்துட்டேன். வண்டி ஏறிட்டு கூப்பிடுறேன் " பதிலளித்து விட்டு கைபேசியை சட்டை பையில் போடும்போது பாலாவைப் பார்த்தார்.

"எந்த ஊரு தம்பி?"

"சொந்த ஊரு திருச்சி. இங்க சங்ககிரில சித்தப்பா வீடு இருக்கு" பதிலளித்துவிட்டு மீண்டும் வாட்ஸ்-அப்புக்குள் நுழைந்தான்.

"நமக்கு சொந்த ஊரு பூலாம்பட்டி தம்பி. அப்புறம் தம்பி எங்க போறாப்ல?" கேள்விகளைத் தொடர்ந்தார் பெரியவர்.

பாலாவிற்கு இவர் முன்பைப் போல பேசாமலே இருந்திருக்கலாமென்று தோன்றியது.

"பெங்களுருக்கு போறேங்க" பதிலை டக்கென முடித்துக்கொண்டான் பாலா.

"என்ன தம்பி ஐ டி கம்பெனிக்கா?" ஏளனமாய்க் கேட்டார் அப்பெரியவர்.

பாலா ஒரு மாதிரியாய் பார்த்துவிட்டு ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினான்.

"பெத்தவங்க என்ன பண்றாங்க?" கேள்விகள் முடிந்ததாய் தெரியவில்லை.

"அவங்க எனக்கு 12 வயசா இருக்கும் போதே இறந்துட்டாங்க.." பல்லைக்கடித்துக் கொண்டு பதிலுரைத்துடன் சீக்கிரமே கொண்டு வந்து விட்டு இந்நிலைக்கு காரணமான நண்பனைத் திட்டினான்.

மிகுந்த சோகத்துடனும் வாழ்க்கை மீது வெறுப்புடனும் பேசி வந்த பெரியவர் இப்போது சற்று நீளமாகப் பேசத் தொடங்கினார்.

"கொடுத்து வச்சவங்க தம்பி. என்னைப் பாருங்க நாலு நாளைக்கு முன்னாடி என் ஒரே பையனும் அவன் பொண்டாட்டியும் வந்தாங்க. 'பெங்களூர் ல பெரிய வீடு இருக்கு. நாங்க கை நெறைய சம்பாதிக்கிறோம். நீங்க ஏன் இங்க இருந்து கஷ்டப்படுறீங்க?' ன்னு நெறைய பேசுனாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில.ஒரு நாள் முழுசும் பேசிப்பாத்தாங்க.அடுத்த நாள் பையன் வந்து 'நம்ம நிலத்தையும் தோட்டத்தையும் அப்புறம் வீட்டையும் மொத்தமா விலை பேசிட்டென்பா. நாளைக்கு ரெஜிஸ்ட்ரேசன் இருக்குப்பா' ன்னு சொன்னான்.

"உங்க அம்மா தூங்குற நிலம். அதுவுமா? " ன்னு கேட்டேன்.

"அத மட்டும் மிச்சம் வச்சு யாருப்பா வந்து பாக்குறது? அங்க வாங்க அம்மா போட்டோவ உங்க ரூம் ல பெரிய பிரேம் போட்டு மாட்டித்தரேன். இப்ப கையெழுத்து மட்டும் போடுங்க" ன்னு சொன்னான்.

நானும் போட்டுட்டேன் தம்பி. எல்லாரும் வீட்ட விட்டு கிளம்புனாங்க. என்னால முடில. 'சரிப்பா, ரெண்டு நாள் டைம் கேட்டுருக்கேன். இந்தாங்க டிக்கெட். நாளன்னைக்கு ஏழு மணிக்கு ட்ரெயின். 6 மணிக்கே போயிடுங்க. வீட்டையும் காலி பண்ணிட்டு உங்க துணியை எடுத்துட்டு வாங்க' ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.

"பெங்களுரு ட்ரெயின் இங்கதான் வரும்னு சொன்னங்க. அதான் டிக்கெட்டோட இங்க ஒக்காந்துட்டு இருக்கேன்" தொடர்ந்து பேசியவர் பேச்சை நிறுத்தினார். அவர் கண்ணில் நீரில்லை. சோகம் முன்பை விட இப்போது அதிகமாக காணப்பட்டது.

அந்த பெரியவர் பேச பேச பாலா தனது கவனத்தை அவர் பேச்சில் வைக்க ஆரம்பித்திருந்தான்.. அவர் பேச்சின் முடிவில் பாலா கைபேசியை சட்டைப் பையில் போட்டுவிட்டு தன்னிடம் இருந்த வாட்டர் பாட்டிலை அவரிடம் நீட்டினான். அதை வாங்கிய பெரியவர் அதை குடிக்காமல் கையிலேயே வைத்துக்கொண்டிருக்க அவன் பேசத் தொடங்கினான்.

"நான் அஞ்சாவது படிக்கும் போது காலைல நானும் அப்பாவும் ஏரோட்டி முடிச்சுட்டு அம்மா கொண்டு வந்த கஞ்சிய குடிக்க ஏர்ல பூட்டின மாட்ட ஓரங்கட்டிட்டு கரும்பு காடு பக்கமா இருக்கிற ஓடக்கரையில சாப்பிட போனோம். நாங்க சாப்டுட்டு இருக்கும்போது பட்டாம்பூச்சியை புடிக்கப் போன என்ன 'வேணாம் சாப்பிடு' ன்னு அப்பா தடுத்தார்.

புடிச்சுட்டு வரேன்னு ஓட்டமாய் ஓடி விழுந்து எழுந்து புடிச்சுட்டு வந்து பார்த்தா அம்மாவும் அப்பாவும் பின் கழுத்தில வெட்டப்பட்டு தலைகுப்புற கிடந்தாங்க. கையில இருந்த பட்டாம்பூச்சிய விட்டுட்டு அது பறக்குற வேகத்தைவிட வேகமா போய் சித்தப்பாவைக் கூட்டிட்டு வந்தேன்.

கூட்டம் கூடியது. பக்கத்து காட்டுக்காரன் வெட்டிப்புட்டு ஓடினதா பேசிக்கிட்டாங்க. எனக்கு அழுகை வரவேயில்லை. ரெண்டு நாள் கழிச்சு சித்தப்பா வேலையெல்லாம் முடிச்சுட்டு என்னை சங்ககிரிக்கு கூட்டிட்டு வந்துட்டார்.

ஏரோட்டின நான் பயிற விதைக்காம என் அம்மாவையும் அப்பாவையும் புதைச்சுட்டு வந்துட்டேன். சேலத்துல இருக்கிற அன்னை இல்லத்துல தங்கி பி.இ வரை படிச்சுட்டு இப்ப வேலைக்கு போறேன். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி சித்தப்பா கூட போய் நிலத்தையும் வீட்டையும் பாத்துட்டு வந்தேன். புல் பூண்டு முளைச்சு கிடந்துச்சு.

என்ன பண்ணன்னு சித்தப்பாகிட்ட கேட்க நிலத்தையும் வீட்டையும் வித்துட்டு வேலை பாக்கப்போற இடத்துல வீடு வாங்கிக்க சொன்னார். அது புடிக்காம இப்ப வேலைக்கு போலாம் ன்னு கிளம்பிட்டேன்.

உருக்கமாக பாலா சொல்லி முடிக்கும் போது "பயணிகளின் கவனத்திற்கு" என ஆரம்பித்து பெங்களூர் விரைவு வண்டி வரப்போகும் அறிவிப்பு வெளியானது.

அந்த அறிவிப்பு ஹிந்தி,ஆங்கிலம் மற்றும் தமிழ் என மூன்று மொழிகளில் வெளியான சத்தம், டீ, காபி, டிபன் என கத்துகின்ற விற்பனையாளர்களின் சத்தம், பெட்டிகளை தர தர வென இழுத்துப் போகும் சத்தம் என இத்தனை சத்தங்களுக்கு மத்தியில் இவர்களுக்கிடையே அப்படியொரு அமைதி நிலவியது. பெரியவர் தண்டவாளத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.பாலா எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.

அறிவிப்பின் கூற்று மெய்யானது போல் அடுத்த நான்காம் நிமிடம் தொடர்வண்டி நடைமேடையை எட்டியது. வண்டி வந்து நின்றதும் பாலா மெதுவாக அந்த பெரியவர் பக்கத்தில் நகர்ந்து அவர் தோளைத் தொட்டான்.

"நீங்க போங்க தம்பி. நான் வரேன்" என பார்வையைத் திருப்பாமல் சொன்னார்.

"பஸ் ஸ்டாண்டுக்கு போனா திருச்சி பஸ் கிடைக்கும்" என கூறிய பாலா சிறிய தயக்கத்திற்கு பிறகு ""போலாமாப்பா"" என்றான்.

சிறு குழந்தையாய் புன்னைகையுடன் தலையாட்டி அவன் கையைப் பிடித்துக்கொண்டு அவரது கைபேசியையும் டிக்கெட்டையும் இருக்கையிலேயே விட்டுவிட்டு ரயில் நிலையத்தை விட்டு வெளியே நடந்தார் அந்த பெரியவர்.

*********************************************முற்றும்*************************************************

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.