யமுனா பின் இருக்கையில் தவிப்புடனோ வலியுடனோ வேதனையுடனோ வெறுப்புடனோ இல்லை இவை எல்லாமுடனோ உட்கார்ந்து இருந்தாள். இவையாவும் வெளிக்காட்டாமல் அமைதியாக நமச்சிவாயத்தின் தோள்பிடிக்கிறாள். அவனின் இரு சக்கர வாகன இயக்கமோ யாரோ துரத்துவது போல் இருந்தது. நூற்றாண்டுகளின் துரத்தல் இது. கல்வி, ஆளுமை , வேலைவாய்ப்பு என எல்லாமும் பெற்று விடத் துடிக்கின்ற பெண்ணியத்தின் துரத்தல் .

வண்டி, மேடு, பள்ளம், வேகத்தடை என வேகமாக ஏறி இறங்கி முட்டி மோதி குதித்து பயணிக்கிறது. மனதிற்குள் யமுனா பாரதியின் வரிகளை ஆரத்தழுவுகிறாள். "சொல்லடி சிவசக்தி சுடர்விடும் அறிவுடன் ஏனடி எனைப் படைத்தாய் " .

" ஏய் காதலனே உன்னைப் போல் சுடர்விடும் அறிவில்லை எனக்கு . எனினும் இருக்கும் இம்மியளவும் ஏன் எனக்கு என்றுதான் தோன்றுகிறது " .

காலையில் இயல்பான ஒரு பயணம்தான் அது( கவனியுங்கள் மகிழ்வான அல்ல. .. )ஏதோ ஒரு சில வேலைகளை முடித்து அந்த திரையரங்கினுள் நுழைந்தனர். படம் பெண்ணடிமைத் தனத்தை, சமுதாயத்தில் ஆண்டுகளாய் ஊறிய அழுக்கை நாராய் கிழித்து தொங்க விட்டிருந்தது. யமுனா எளிய இல்லத்தரசிதான் . .. எதுவுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் நான்கு சுவருக்குள் வளைய வருபவள்.

எந்த ஒரு உரிமை முன்னெடுப்பும் மோசமானப் பின்விளைவுகளை இறப்பு வரை ஏற்படுத்தும் என்று நினைக்கிறவள். மெளனித்தே கடக்கப் பழகியிருந்தாள் நாட்களை ... தீவிரமாகப் போராடும் எவரும் அவர் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை என்று கூறுகிறவள் பிறகு எப்படி இருப்பாள்.

எந்த முற்போக்குச்சிந்தனையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து வருகிறவள். அது போன்ற நேரங்களில் எல்லாம் ம், ஆமா, சரி, மெளனம் என்பதாக இருந்தது அவள் மேதாவிலாசம். அதுவே தேவையானதாகவும் இருந்தது உலகிற்கு. ..நீடித்த வலி தொடரும் தொடர்ந்து கொண்டே இருக்கும். திசைத் திருப்பலோ, மடை மாற்றலோ , இசையோ , மொழியோ நிரந்தரத் தீர்வு இல்லை. அப்படியே சுயமற்று சக அதிகாரங்களின், சங்கிலிப் பிணைப்புகளின், வலிந்து தீர்மானிக்கப்பட்ட சட்ட திட்டங்களின் ஆழத்திற்குள் புதைந்து போக வேண்டும். அதுதான் சரியென்று தீர்மானிக்கப்படுகிறது சமுதாயம் காக்கும் நால்வரால்.

என்னப் படம் இது என்ற அலட்சிய , வெறுப்பில் உமிழ்ந்த பார்வையும் உடல்மொழியும் இவளை கோழிக்குஞ்சாய் பதுங்கச் செய்தது. பலரும் இருக்கும் இடம் என்ற பதட்டம் கொடுத்தது. எனினும் படம் கொடுத்த பாதை மிகத் தெளிவு, உண்மை, யதார்த்தம் ஆகையால் இத்தனையிலும் படம் இரசித்தாள். படம் முடிந்து திரும்புகையில் சில வேலைகள் கடைவீதியில் பார்க்க வேண்டி இருந்தது அவையினூடே யமுனாவின் மெல்லிய குரலின் சமாளிப்பும் படமும் அடிமனப் பிராண்டலாய் நமச்சிவாயத்தை அரித்துக் கொண்டே வர, இப்படி தாறுமாறான வண்டி ஓட்டல் . பின்னால் அமைதியான யமுனா ஆதிநாட்களின் அடுத்த மணித்துளி முதல் தொடரும் பெண் சுயமழித்தலுக்குள் பதுங்குகிறாள்.

வீட்டிற்குள் நுழைந்து உடை மாற்றி முகம் கை கால் சுத்தம் செய்து தொலைக்காட்சி முன் அமர்கிறான் நமச்சிவாயம். தலைவலிக்குதா டீ வச்சித் தரவா என்பதாகத் தொடர்கிறது அவளது ஈயம் பூசப்பட்ட பெண்பாத்திரம். தொலைக்காட்சியில் கணவன் ஒருவன் மனைவியின் தனிப்பட்ட திறமைகளையும் மரியாதையையும் ஒரு கப் காப்பியில் வழிய நுரைத்துக் கொண்டிருக்கிறான்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.