ராகவனுக்குத் திடீரெனெ விழிப்பு வந்தது .

எங்கிருக்கிறோம் என்ற நினைப்புத் தடுமாறியது .

ஏசியின் அழுத்தமான குளிரின் தாக்கத்தோடு இரவு முழுதும் லிமிட் தெரியாமல் குடித்த அமெரிக்கன் Michter’s Celebration Sour Mash விஸ்கியின் வாசம் இன்னும் அவர்கள் அறையை ஆக்கிரமித்திருந்தது .

லேசாய்த் தலைப் பாரமாக இருப்பது போல இருந்தது .

அறைமுழுதும் பரவியிருந்த மெல்லிய வெளிச்சத்தில் தலைத் திருப்பிப் பார்த்தான்.

ஆளுக்கொரு சோபாவின் கால் பரப்பிக் கிடந்தார்கள் .

இன்னும் சிலர் சோபாவின் மேல் விரிப்பையெல்லாம் உருவி ஃப்ளோரில் வீசி அதன் மேல் அஷ்டகோணலாய்க் கிடந்தார்கள் !

பக்கத்துச் சோபாவில் மாதவன் குப்புறப் படுத்திருந்தது தெரிந்தது.

அவன் பெர்முடாசின் பின் பக்கம் செருகப்பட்டிருந்த ஐஃபோன் 7+ னின் இண்டிக்கேட்டர்த் தன் ஒற்றைப் பச்சைக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு இருந்தது !

இப்போது லேசாய் சுய நினைவுகள் தப்பிப் பிழைத்து மேலெழுந்தது.

மென்பொருள் துறையில் தன்னோடு பணிபுரியும் சக கூட்டாளித் திருமணத்திற்கு வந்திருக்கிறோம் . தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரிசார்ட்டில் அவர்களுடைய அமெரிக்கக் கிளையண்ட் கொண்டு வந்திருந்த Michter’s Celebration புண்ணியத்தில் இரவு முழுதும் கும்மாளம் அடித்து ஓய்ந்து சாய்ந்தவர்களில் தானும் ஒருவன் என்று புரிந்தது ராகவனுக்கு .

கிளம்பும்போதே மனைவி ரேணுகா சொன்னாள் ,அங்க போய் அளவாக் குடிங்க ,உடனே கிளம்பி வந்திருங்க என்றாள்.

அவள் எப்போதும் சொல்வதுதான் .ஆனாலும் மனைவி சொல்வதை மீறுவதில் ஒரு கிக் இருப்பதால் அதைச் சில விசயங்களில் ராகவன் மீறுவதில்லை.

ஒரு முறை மீறித்தான் தன்னுடைய டீம் சீனியர் பார்டியில் அவர் கொண்டு வந்திருந்த Rhum Agricole Vieux Niesson ரம்மை குடித்து விட்டு அவருடைய மலையாளக் கீப்பைப் பற்றி அவரிடமே ஏதோ உளறிவிட்டான் .

விளைவு . அடுத்து வந்த கஷ்டமான ப்ராஜக்ட்டெல்லாம் அவன் பக்கம் தள்ளிவிட்டார் டீம் சீனியர்.எல்லாமே இரவில் தொடர்பு கொள்ள வேண்டிய கிளையண்ட் ப்ராஜெக்ட்கள் யார் புண்ணியமோ அவரையும் உதறி விட்டு அந்த மளையாள சுந்தரி வேறு மென்பொருள் நிறுவனம் தவ்வவே, கொஞ்சம் ராகவன் மேல் கோபம் தணிந்து, மனிதர் பழைய நிலைக்கு இப்போதுதான் வந்திருக்கிறார் . அதை ரேணுகாவிற்குச் சொல்லிவைத்திருந்தான் .அதனால்தான் கிளம்பும் போது அந்த ஞாபகப் படுத்தல் உபதேசத்தைச் செய்வித்திருந்தாள் ராகவன் மனைவி .

சரி அது பழையகதை .3


மணி என்ன ?

செல் ஃபோன் தேடினான் .

தான் படுத்திருந்த சோபாவில் இல்லை .மேலும் தேட மனமில்லாது ,மெல்லக் கால் துழாவி சோபாவிலிருந்து இறங்கி நடந்து போய்ப் பக்கத்து சோபாவின் குப்புற மாதவன் செல்லை உருவினான் .

மணி 1.11 am.

தொண்டை வறட்சியாயிருந்தது .தண்ணீர் ஃபிரிட்ஜ்லிருந்து எடுத்து ஒரு மிடறு விழுங்கியது வயிறுக்குள் இறங்குவது அப்படியே தெரிந்தது .

இயற்கை உபாதை மேழெந்தது.

பாத்ரூம் தேடுவதை விட வெளியில் போகலாம் என்று தோணியது .

மெயின் டோர் திறந்தான் .

வெளியில் இதைவிடவும் மங்கிய வெளிச்சம் .

தூரத்தில் ரிசார்ட்டின் உயரமான மெயின் டோர் காம்பவுண்ட் சுவர் மேலுள்ள மெர்குரி வெளிச்சம் உள்ளே பரவியதன் மிச்சம்தான் அது என்று புரிந்தது.

அங்கிருந்த துளியும் ஆடாத குரோட்டன்ஸ் செடியோரம் ஒதுங்கினான்.

திரும்போது எதேச்சையாய் ராகவன் பார்வை அந்த ரிசார்ட்டின் கண்ணுக்கு எட்டிய தூரம் சுற்றியுள்ள வெறிச்சோடி வெற்றிடமாய்க் கிடந்த காம்பவுண்ட் சுவர் தாண்டித் தூரத்தில் ஒரு வெளிச்சமான பொருளைக் கவனித்தான். என்ன அது ?

கொஞ்சதூரம் காம்பவுண்ட் சுவர் நோக்கி நடந்து பார்த்த போது அது ஒரு வித்தியாசமான வண்ணத்தை உமிழும் வாகனம் போல மனதிற்குப் பட்டது. ஏதோ ஆர்வத்தில் அதை பார்க்கும் ஆர்வத்தில் அதை நோக்கி நடந்தான் ராகவன்.

ரிசார்ட்டின் வளர்ந்த செயற்கைப் புல்வெளிக்குள் கால் சிக்காமல் நடப்பதே ஒரு கலையாகப் பட்டது ராகவனுக்கு.

காம்பவுண்ட் சுவர் சுமார் ஐந்தடியும் அதற்கு மேல் கம்பி வேலி இரண்டடி இருந்தது . காம்பவுண்ட் சுவரிலிருந்து சுமார் ஐநூறு அடிக்கு அப்பால், இப்போது அந்த வெளிச்சம் இன்னும் பிரகாசமாயும், முன் எப்போதும் பார்த்திராததாகத் தெரிந்தது .

கையில் வைத்திருந்த மாதவன் செல் ஞாபகம் வரவே ,அதில் ஜூம் பண்ணினான்.இருபதடிக்கு மேல் பெரிதாய் எதுவும் காட்டவில்லை .

சே என்ன ஃபோன் ?

மீண்டும் அதன் வழியே முயற்சி செய்யும் போது ,அது ஒரு வட்டவடிவமான நான்கடி உயரம் உள்ள பொருளாகத் தெரிந்தது .அதே சமயம் அதிலிருந்து வெளியேறும் ஒளி எல்லாத்திசைகளிலும் பரவிக்கொண்டு இருப்பதைக் கவனிக்க முடிந்தது .

என்னவாக இருக்கும் ?

சுவர் தாண்டிப் பார்ப்போமா என்று ராகவன் யோசிக்கும் போதே அது மெல்லத் தரையிலிருந்து மேலெழுவது மாதிரித் தெரிந்தது .

எதாவது தனக்குள் ஏற்பட்ட பிரம்மையா என்று ராகவன் யோசித்துக்கொண்டு இருக்கும்போதே அடுத்து அதிலிருந்து வெளியேறிக்கொண்டு இருந்த வெளிச்சம் அதன் மையத்தை நோக்கி உள்வாங்கி முற்றிலும் அணைந்துத் தரையிலிறங்கி முடங்கிப்போனது மாதிரி தெரிந்தது .

இது ஏதோ ஒரு வித்தியாசமான பொருள் என்று மட்டும் ராகவனின் விஸ்கியின் பாதிக்கப்பட்ட மூளை சொல்லியது .

தனியே சென்று பார்க்கும் அளவுக்கு ராகவன் பாகுபலி 2' கதாநாயகன் பிரபாஸ் அளவுக்குத் தைரியசாலி இல்லை வீட்டில் கூண்டில் மாட்டிய எலியைக்கூட அவன் மனைவி ரேணுகாதான் அடித்துக் கொல்லுவாள்.

என்ன செய்வது ?

துணைக்கு மாதவனை எழுப்பி அழைத்து வந்து பார்ப்பதெனெ முடிவு செய்தான் .

அவசரமாக ரிசார்ட் திரும்பிய ராகவன் முதல் வேலையாகத் தன்னுடைய செல்லை மாதவன் மொபைலிருந்து ரிங் விட்டு , தான் படுத்து இருந்த சோபாவுக்கு அடியில் கிடந்த மொபைலைத் தேடி எடுத்தான்.

மாதவன் சோபாவின் ஓரத்தில் பயந்து கொண்டு உட்கார்ந்து இருப்பது போலப்பட்டது .

எல்லோருக்கும் ஒரு பிரச்சனையென்றால் அவனுக்கு எது குடித்தாலும் கனவு வந்து விடும் .அதுவும் பயங்கரக் கனவுகள் .ஓட ஓடத் துரத்திக் கொல்வது போல இருக்குமாம். பல சமயம் அவன் மனைவிதான் துரத்திப்பிடித்து ஆழமான ஏரிக்குள் அமுக்குக் கொல்வதாகச் சொல்வான் .மாதவன் மனைவிக்கு அவன் குடிப்பது சுத்தமாகப் பிடிக்காது .ஒருவேளை இந்தக் கனவின் காரணம் அதனால் கூட இருக்கலாம் என்று அவனே சொல்லிக்கொள்வான் .

ஆனால் வேறு விசயத்தில் மாதவன் பேருக்கேற்ற சில்மிஷ நாயகன் .பார்ட்டிகளில் பந்தயம் கட்டிச் சில நிமிசங்களில் பெண்களை மடக்குவதில் மன்மதன். ஒரு சமயம் ராகவன் தனக்கு அந்த டெக்னிக்கைச் சொல்லித்தரக் கேட்ட போது,உன்னால் முடியாது, அதற்கு ரோசம் வெட்கம் பார்க்கக் கூடாது .உன் மாதிரி முன் கோபிகளுக்கு அந்தக் கோபியர்களெல்லாம் வசப்படமாட்டார்கள் என்று ராகவனை ரிஜெக்ட் ப்ராஜக்ட்டாக்கினான் .

அவன் சொல்வதும் உண்மைதான் ராகவன் மாதத்தில் பாதி நாள் ரேணுகாவிடம் கோவித்துக் கொண்டு கேண்டீனில்தான் சாப்பிடுகிறான் .ராகவன் போலப் பலரும் மனைவியிடம் கோபத்தைச் சாப்பாட்டுத் தட்டிலும் அவர்கள் மனைவிமார்கள் படுக்கையிலும் காட்டுவதும் வாடிக்கையாகி விட்டது.

ஆனாலும் மாதவனை ராகவனுக்குப் பிடிக்கக் காரணம் .உலகின் அபூர்வமான விசயங்களைத் தேடித் தேடிப் படிப்பான் . எவ்வளவு விலையானாலும் அந்தப் புத்தக்கங்களை எல்லா நாடுகளிலிருந்தும் ஆர்டர் செய்துவிடுவான் . அதை வாசித்து விட்டு அவற்றை அவனே பார்த்த மாதிரி ஒரு துளி கூடச் சந்தேகப்பட விடாமல் வர்ணிப்பதில் கெட்டிக்காரன் .அதனால்தான் எல்லோரும் அவனை அழைத்துக்கொண்டு சென்றால் பிரயோஜனமாகப் பொழுது போகும் என்று நம்புவார்கள் .சந்திரமண்டலம் செல்வதற்கு உங்களுக்குக் கூடவே ஒரு துணையை அழைத்துக்கொள்ளலாம் என்றால் ராகவனின் முதல் சாய்ஸ் மாதவனாகத்தான் இருப்பான்.இரண்டாவது சாய்ஸ்தான் அவன் மனைவி ரேணுவாக இருப்பாள். இது அவன் மட்டுமல்ல நீங்களும் கூட அப்படித்தான் முடிவெடுப்பீர்கள் மாதவனைப் பழகிவிட்டால் . பிரிய மனமே வராது .முக்கியமாக வஞ்சனையில்லாமல் நிறையச் செக்ஸ் ஜோக் வைத்திருப்பான் .அதில் பல ஜோக்குகள் அவன் வாழ்வில் நடந்தவைகள் என்பது யாருக்குமே தெரியாது .


ராகவன் ,மாதவனிடம் காதோரம் குனிந்து மெதுவாகச் சொன்னான் . அந்தக் குறைவான வெளிச்சத்திலும் மாதவன் முகம் பளீரெனெ மின்னியது .உடனே தன் மனைவி துரத்திய கனவில் கொல்லுவதற்கு முன் தப்பித்த உற்சாகத்தைப் பெற்றவன் போல உடனே கிளம்பினான். இருவரும் மெயின் கேட்டில் தூங்கிக் கொண்டு இருந்த ரிசார்ட்டின் காவலாளியைக் கடந்து வெளியேறினார்கள் .

ஒரு தோராயமாக அவர்களிருவரும் மொபைல் வெளிச்சத்தில் அந்தப் பொருள் கிடந்த இடத்தை நோக்கி மொபைல் உதவியுடன் நடந்தார்கள் .

ரிசார்ட்டின் காம்பவுண்ட் சுவரிலிருந்து முன்னூறு அடித் தாண்டியிருப்பார்கள்.

திடீரெனெ இருவர் செல்லும் ஒரே நேரத்தில் ஆஃபானது .இருவரும் செய்வதறியாமல் ஒருவரை ஒருவர் அந்த மெல்லிய வெளிச்சத்தில் ஒரே நேரத்தில் பார்த்துக்கொண்டார்கள் .

ராகவனுக்கு என்னவோ செய்தது .லேசாய் வயிற்றைப் புரட்டுவது மாதிரி ஒரு பிரம்மை.

மாதவன் என்ன நினைத்தானோ ராகவன் கையைப் பிடித்து இரண்டடிப் பின்னால் இழுத்துக் கொண்டு நகர்ந்தான். . இருவர் செல் ஃபோனும் உயிர்பெற்றது . மாதவனின் செயலும் இந்த நிகழுவும் மாதவனை இன்னும் பயமுறுத்தியது .

என்னடா இது ? என்று மாதவன் உளறாலாய்க் கேட்டான்.

பயப்படாத என்று சொல்லிய மாதவன், அதோடு நிற்காமல் ஏற்கனவே நடந்த அதே திசையில் முன்னோக்கி நகர்ந்தான்.இந்த முறை ராகவனின் கையை விட்டு விட்டு .

முன்னோக்கி நகர்ந்த மாதவனின் செல்ஃபோன் முன்னைப்போலவே முற்றிலும் செயல் இழந்தது.

இரண்டடிப் பின்னால் நின்று கொண்டு இருந்த ராகவனின் செல் அப்படியே சிவிட்ச் ஆஃப் ஆகாமல் இருந்தது.

ராகவனுக்குப் பேய் பிசாசு வேலையாக இருக்குமோ என்று முதுகுத்தண்டுக்குள் குறு குறுவெனச் சில்லென்று பாய்ந்தது .


மீண்டும் பின்னோக்கி நகர்ந்த மாதவன் ராகவனின் காதோரம் வந்து நீ பார்த்தது என்ன தெரியுமா ? என்று கேட்டான்

ஏற்கனவே பீதியில் இருந்த ராகவனுக்கு ஏதாவது பேசினால் நன்றாக இருக்கும் என்று தோணியது .

ராகவன் மீண்டும் என்ன நான் பார்த்தேன் என்று அதே கேள்வியைக் கேட்டான் .அவன் குரலில் பயம் மட்டுமல்ல ஓடி விடலாம் என்ற எண்ணம் இருந்தது.

மாதவன் இன்னும் ராகவனை நெருங்கிக் காதோரம் வந்து பெண்கள் ரகசியம் பேசுவது போல மெல்ல நீ சொன்னதெல்லாம் வைத்துப் பார்த்தால் அது ஒரு flying saucer இருக்கலாம் .இங்கு நமக்கு அருகே எங்கோ இருக்கிறது . அப்படியிருந்தால் மட்டுமே நம் எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமெண்ட் எல்லாமே இப்ப மாதிரி இன் ஆக்டிவேட் ஆகிவிடும் என்றான் .

ராகவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது .இந்த இடத்தை விட்டு ஓடி விடுவது மிகவும் நல்லதென்பதே அது .

மாதவன் கண்கள் இருட்டில் சுற்றித் தேடிக்கொண்டு இருக்க ,ராகவன் தான் நினைத்தைச் சொன்னான் .

மாதவன் சட்டேனெத் திரும்பி , அட ஸ்டுபிட் உலகத்துல எவனுக்கே கிடைக்காத வாய்ப்பு லக்கிலி நமக்குக் கிடைத்து இருக்கு அதைச் சந்திக்காம ஓடிடலாமான்னா கேட்கிற ?

ராகவனுக்குப் புரிந்து விட்டது.எப்போதோ மாற வேண்டிய சனி இப்போதே தன் வேலையைக்காட்டத் தொடங்கி விட்டார் போல, இவன் நகர மாட்டான்.எனவே எது நடந்தாலும் சொல்லிக்கொள்ளாமல் இங்கிருந்து ஓடிவிடவேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான் .


மெல்ல மாதவன் முன்னோக்கி நகன்று கொண்டே வாவென்று ராகவனை நோக்கிக் கையசைத்தான்.

மந்திரித்த சேவல் கணக்காக ராகவன் தயங்கித் தயங்கிப் பின் தொடர ... வேகமாக மாதவன் முன்னேறுவது ராகவன் பயத்தை இன்னும் அதிகரித்தது .மீண்டும் ஒரு முறை சொல்லிப் பார்ப்போம் என்ற நினைப்புக்கு அவன் பயங்கரமாகத் திட்டுவான் வேறு எதுவும் நடக்காது என்பது மட்டும் சத்தியமாய்த் தெரிந்தது .


சில நிமிடம் முன்னோக்கிச் சென்று கொண்டு இருந்த அவர்களின் தோராயப் பார்வையில் அங்கிருந்த பாறை போன்ற ஒன்றின் பின் எதுவோ ஒன்று நகர்வது போலத் தெரிய மாதவன் தன் நடையை நிறுத்தினான்.

ஆனால் மாதவனின் கண்கள் இன்னும் கூர்மையாக அந்த இருட்டின் ஊடே புகுந்து அந்த மறைவிற்குப் பின் எதையோ தேடியது.

சில நிமிசம் அங்கேயே நின்றார்கள் .


ராகவனுக்கு அதீதப் பயத்தில் அட்ரினலின் இரத்ததில் நேரடியாகக் கலக்கத் தொடங்கியதால் ரத்த ஓட்டம் திக்குத் திசையில்லாமல் பரவிக் காதெல்லாம் சூடாகி இதயம் ட்ரம்ஸ் வாசிக்கத் தொடங்கியது .

இப்போது மாதவன் அந்தத் திசையை விட்டுச் சற்றே வலது புறம் விலகி மெல்ல அடியெடுத்து வைக்க ,

அந்தப் பகுதியில் அசைவேதும் இல்லை .மெல்ல மெல்ல முன்னோக்கி நடந்தார்கள் .

அது தெரிந்தது .

வட்டமாகக் குவிந்தத் தட்டுப்போல ஒரு வஸ்து அங்குக் கிடந்தது .

மாதவன் ராகவனைப் பார்த்துக் கட்டைவிரலை உயர்த்திச் சக்சஸ் என்பது போலக் காட்டினான்.

அந்த வஸ்துவுக்கு ஓரடி விலகிச் சுற்றி வந்த மாதவன், அது ஐந்தடி அகலும் மூன்றடி உயரமும் இருக்கலாம் என்று கணக்குப் போட்டான்.

அதை எப்படியாவது தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

மெல்லக் கை நீட்டி அதைத் தொட்டான்.அவன் தொட்ட இடம் நீலவண்ணமாய் மாறியது . அதன் மேலிருந்து மாதவன் தன் கையெடுக்க அது மெல்ல இண்டிகோ வண்ணமாக மாறி அடங்கிப் போனது .

சில்லென்று இருக்கும் தெர்மோகோலைத் தொட்ட உணர்வே அந்தத் தொடுதல் மூலம் மாதவன் புரிந்து கொண்டான் .ஏதோ மெல்லிய கனமற்ற ஒரு ஹைடெக் மெட்டீரியல் அது என்பதில் மாதவனுக்குச் சந்தேகமில்லை.

அது மாதவன் மனதால் கணிக்க முடியாத வடிவமாக இருந்தது .ஒரு பக்கம் யோசித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உபயோகப்படுத்தும் ரவுண்ட் கேப் கவிழ்த்து வைக்கப்பட்டது மாதிரியும் , இன்னொரு வடிவத்தில் ரொமானியக் கண்டுபிடிப்பாளர் Henri Coanda ஆவால் வடிவமைக்கப்பட்டு ஒருவர் மட்டுமே பயணிக்க முடிந்த ( a one-man flying saucer style aircraft ) Avro Canada VZ-9 Avrocar - proof-of-concept - வடிவத்தில் இருந்ததாகவும் பட்டது.


மாதவன் மெல்ல அதன் கதவு எங்கே இருக்கிறது என்று குனிந்துப் பார்த்துச் சுற்றி வந்து ஆராய, எல்லாப் பக்கமும் ஒரே மாதிரி இருந்தது .

சரி இனி மனித லாஜிக் உதவாது ,வேறு எப்படி ஆராயலாம் என்று யோசித்துக்கொண்டே , திரும்பி ராகவனைப் பார்த்தான் .

அப்போதுதான் ராகவனுக்குப் பின்னால் சுமார் நூறடித் தூரத்தில் உள்ள பாறையின் அருகே ஏதோ அசைவதும் அதோடு சின்னதாய் எலெக்ட்ரானிக் பொறுளிருந்து வெளிப்படும் சிவப்பு ஒளிக்கீற்று வந்து கொண்டு இருந்தது .பறக்கும் தட்டைப் பார்த்தப் பரவசத்தில் இதில் பயணித்து யாரோ வந்திருப்பார்களே என்ற யோசனை நம் அறிவுக்கு எட்டவில்லை என்று தன்னையே நொந்துகொண்டான் மாதவன் .

ராகவனை நோக்கிப் பின்னால் பார்க்கச் சைகை செய்தான் .

ஏற்கனவே பயத்தில் இருந்த ராகவனுக்கு ஓடு என்பது போல மாதவன் சைகையைத் தவறாகப் புரிந்து கொண்டு மாதவனை நோக்கி ஓடிவந்தான் .

இதை எதிர்பார்க்காத மாதவன் அந்த இடத்திலிருந்து மேலும் சலனம் அதிகரிப்பது தெரிந்தது .

இருவரும் சில நிமிடம் அமைதியாக அந்த இடத்தைக் கவனித்தார்கள் .அசைவு மெல்ல மெல்ல முழுதும் அடங்கிப்போனது.

மாதவன் முடிவு செய்துவிட்டான் .இந்தச் சஸ்பென்சை முடிவுக்குக் கொண்டுவர அந்த அசையும் இடத்தை நோக்கிப் போகவேண்டும் .

ராகவன் மிகப்பயப்படுகிறான் என்பதை அவன் மூச்சுக்காற்றின் வெளிப்பாடே சொல்லியது .

ராகவனை அங்கே இருக்கச் சைகை செய்துவிட்டு ,அசைவு வந்த இடத்தை நோக்கி நகரத் தொடங்கினான்.

மெல்ல அடியெடுத்து வைக்க வைக்க மாதவனுக்கு உள்ளுக்குள் அவன் படித்திருந்த அமெரிக்க Carl Edward Sagan - SETI - Search for Extra-Terrestrial Intelligence வேற்றுக்கிரக ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசித்திருக்கிறான் (அந்தக் கார்ல் எட்வர்ட் சேகனின் காண்டாக்ட் (Contact 1985 ) என்ற நாவல்தான் 1997 ல் படமாக்கப்பட்டது ) அதில் அவர் இருபத்தி ஐந்தாயிரம் ஒளிவருடங்களுக்கு அப்பால் உள்ள Messier 13 (M13) நட்சத்திரக் கூட்டட்திற்கு 1974 ஆகஸ்ட் 14 அனுப்பிய ’பூமியில் மனிதர்களாகிய நாம் வசிக்கிறோம்” என்ற ரேடியோ அலைகக்கு, இருபத்தி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கோதுமை வயல்களில் ’கிராப் சர்கிள் கோடு வேர்டு’ வரிவடிவங்களின் மூலம் கிடைத்த எச்சரிகைச் செய்தியான Beware the bearers of false gifts and their broken promises. Much pain but still time. There is good out there. We oppose deception. Conduit closing ஞாப்பகத்திற்கு வந்தது .வேற்றுக் கிரக ஏலியன்களில் கெட்டவர்கள், நல்லவர்கள் என்ற இரு பிரிவினர் இருக்கிறார்களாம் , இப்போது நாம் சந்திக்க இருக்கும் இந்த ஏலியன் எந்த வகை என்ற குழப்பம் மேலிடத் தயங்கித் தயங்கி நடக்க,இன்னும் ஒரு யோசனையும் கூடவே வந்தது நல்லவர்களைத்தானே கடவுள் சோதிப்பார் அனேகமாக இது நல்ல ஏழியன்வகையைச் சார்ந்ததாக இருக்க வேண்டும் கூடவே நமக்கும் இந்த வேற்றுலுக வாசிகளுக்கும் ஒரே கடவுளா என்ற குழப்பம் வேறு வரவே நல்லதே நடக்கட்டும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டே அதை நோக்கி நடந்தான் .

அப்போது அந்த இடத்திலிருந்து ஒரு நீல வண்ண லேசர் பீம் போல ஒளிக்கற்றைகள் மாதவனை நோக்கி வந்து படர ,அந்த ஒளிக்கற்றைகள் தன்னைத் தாக்க வருகிறதா இல்லை சோதிக்க வருகிறா என்று யோசிக்கும் முன் தன்னையும் அறியாமல் அவனுக்கு மயக்கம் வருவது போல உணர்ந்தான் .சுதாரித்த அசைய முற்பட்ட போது ஒளிக்கற்றை இல்லை. ஆனால் அவன் மனதுக்குள் ”அசையாதே” என்ற கட்டளை வந்தது போல மாதவனுக்கு உள்ளே எழும்பியது .அது அந்த அசையும் ’அது’ தனது மனதைக் கட்டுப்படுத்த முயல்கிறது என்பதைப் புரிந்துகொண்டான் மாதவன் . அடுத்ததாக ”அமைதியாக ஒத்துழைத்தால் என்னைப்பற்றி அறிந்து கொள்ளலாம்” என்றது அந்தப் பிறருடைய எண்ணங்களை, அவர்கள் மனதில் உள்ள தகவல்களைப் படிக்கும் ஆற்றல் டெலிபதி (Telepathy) மொழி அவை.

சில நிமிடம் எந்தக் கட்டளையும் வரவில்லை .

மெல்ல எழுந்தது அங்கு ’அது’ .மூன்றடி உயரம் இருக்கும் .அதன் கையில் ரேடியோ போன்ற ஒரு பொறுள் இருந்தது . அதிலிருந்துதான் அப்போது பார்த்த சிவப்பு ஒளிக்கீற்று வந்து இருக்க வேண்டும் என்று யூகித்துக்கொண்டான் மாதவன் .

இப்போது ஓரளவுக்கு மாதவனால் அந்த இரண்டித் தூரத்தில் உருவத்தைப் பார்க்க முடிந்தது .எந்த உடைகளும் இல்லை.உறுப்புகள் இருக்க வேண்டிய இடத்தில் ஏதோ எஞ்சிய அடையாளங்கள் போல இருந்தது .கண்கள் மனிதர்கள் கண்ணை விடவும் இரண்டு பங்கு பெரிதாக இருந்தது .தலை மேலே உயர்ந்தும் தாடைப் பக்கம் முடியும் போது ஊசியாகவும் இருந்தது .அந்தக் கண்கள் நீலவண்ணமாக ஒளிர்ந்தது .

ஆனால் அது நிற்க்க முடியாமல் தளர்ந்து காணப்பட்டது.

மீண்டும் மெல்ல அந்தப் பாறையோரம் சரிந்துத் தன்னைக் சரித்துக் கொண்டது .


ராகவன் தன்னை நோக்கிவருவதை அந்த வேறுலகவாசியின் நடவடிக்கையே சொல்லியது .மெல்ல மாதவன் திரும்பிப் பார்க்க ராகவன் இவன் நோக்கி வந்து கொண்டு இருந்தான் .

மாதவன் அருகில் வந்த ராகவன் அவன் தான் கண்டக் காட்சியை நம்ப முடியாமல் ஆச்சரயமாகப் பார்க்கப் பார்க்க ,அவனுக்கும் சோதனை நடந்தது .அதைக் கூட உணராமல் அவன் அதையே கவனித்துக்கொண்டு இருந்தான்.


இருவருக்கும் மெல்ல அமரச்சொல்லிக் கட்டளை வந்தது .அந்தப் புல்லும் சின்னச் சின்னக் கற்களும் உறுத்த உட்கார்ந்தார்கள் .ராகவன் நெளிந்தான்.அவனுக்குள் இன்னும் அதிகமாக மாட்டிக்கொண்டோம் என்ற பயம் போகவில்லை .அதோடு மாதவனுக்கு நடப்பதுதானே நமக்கும் நடக்கும் என்ற ஒரு ஆறுதல் அவனை அமைதியடையச் செய்தது.


அவர்களுக்குள் டெலிபதி மூலம் தன் வரவைச் சொல்ல ஆம்பித்தது அந்த வேற்றுலுக வாசி .

தாங்கள் Messier நட்சத்திரத்து வாசிகள் என்பதும் எங்களுக்கு அருகில் இருக்கும் இன்னொரு கிரகவாசிகளுக்கும் காலத்தின் முன்னோகிய மற்றும் பின்னோக்கிய தொழில் நுட்பக் கண்டுபிடிப்பில் போட்டி ஏற்பட்டு நாங்கள் நீங்கள் அறிந்த Warm hole தொழில் நுட்பத்தின் மூலம் காலத்தின் இரண்டு பக்கமும் சென்று வரக்கூடிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துவிட்டோம் .அவர்கள் முன்னோக்கிச் செல்ல மட்டுமே அறிந்ததால் எங்களை எதிர்காலத்தை அழிக்கும் வழியறிந்து விட்டார்கள் .இன்னும் சில ஆண்டுகளில் எங்கள் கிரகம் அடியோடு அழிய வேண்டிய வேலை காலத்தின் தொழில் நுட்பம் தெரிந்து , அதைச் செய்துவிட்டார்கள்.அதைத் தடுக்க நாங்கள் இருவர் அவர்களின் பின்னோக்கிய காலத்தில் சென்று அவர்கள் தோன்றாமல் இருக்கச் செய்ய வந்தோம் எப்படியோ எங்கள் பயணத்திட்டம் அறிந்து சென்று திரும்போது எங்களை வழிமறித்துத் தாக்கத் தொடங்கினார்கள் . அதில் எங்கள் உடல் பாகங்கள் சில அவர்கள் கருவிகளால் செயலிழந்து விட்டது .எங்கள் பறக்கும் தட்டு எங்கள் எண்ணத்தின் விரைவுக்கேறப் செயல்படும் அமைப்புள்ளது .நாங்கள் பாதிக்கப்பட்டதால் அதுவும் செயல் இழந்து விட்டது வேறு வழியில்லாமல் நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர முடியாமல் போகும் வழியில் உங்கள் பூமிக்கிரகத்திற்கு வந்து விட்டோம். அவர்கள் உடல் அமைப்புக்குப் பூமிக்கிரகத்திற்குள் நுழைய முடியாது .எனவே அதில் பாதிக்கப்பட்ட நாங்கள் எங்கள் எண்ணத்தின் இயங்கும் பறக்கும் தட்டும் பழுது பட்டு இப்போது இங்குக் கிடக்கிறோம். நீங்கள் எங்களுக்கு உதவினால் நாங்கள் எங்கள் கிரகத்தைக் காப்பாற்ற முடியும் .

மெல்லச் செய்திகள் மவுனமானது ..

மாதவனும் ராகவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் .

அந்தப் பார்வையில் உனக்கு மட்டும் ஏதாவது கேட்கிறதா என்ற கேள்வியும் இருந்தது .


அப்படி அவர்கள் யோசித்துக்கொண்டு இருக்கும் போதே மீண்டும் ...


உங்கள் பூமியில் இன்னும் ஒரு மணி நேரத்தில் சூரிய நட்சத்திரத்தின் பார்வை வந்து விடும் உங்கள் சூரியக் கிரக ஒளி அயண மண்டல வழியாக ஊடுருவி வந்து எங்கள் பாதிக்கப்பட்ட உடல் மேல் படக்கூடாது.எங்கள் உடம்பின் உருவாக்கத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் சிலிக்கான் தனிமச் செல்கள் அதை ஏற்றுக்கொள்ளாது .அதால் பாதிக்கப்பட்டால் எங்கள் கிரகத்தில் வாழும் தகுதியை இழந்து விடுவோம்.அதனால் அதற்குள் பத்திரமாக எங்களை அழைத்துச் செல்ல எங்கள் மதர் ஸ்பேஸ் சட்டிலலிருந்து (mother Space shuttle ) இன்னொரு பறக்கும் தட்டு வந்துவிடும் வந்து விடும் ஆனால் அதில் யாரும் இருக்க மாட்டார்கள் நீங்கள் எங்களைத் தூக்கிச் சென்று அதில் வைத்து அனுப்பிவைக்க வேண்டும் என்றது அந்தச் செய்தி .


இப்போது நீங்கள் கேட்க ஏதாவது இருப்பின் கேளுங்கள் என்றது .

இதுவரை கட்டளைகளுக்குக் கீழ் படிந்து வந்தது போல இருந்த மாதவனுக்கு உற்சாகமாக இருந்தது .

அவன் எண்ணங்கள் மூலம் கேள்விகள் கேட்க்க தொடங்கினான் ,

நீங்கள் காலத்திற்கு முற்பட்டவர்களா ? எங்கள் பூமிக்கும் உங்கள் கிரகத்திற்கும் உள்ள ஒலியாண்டுகள் எத்தனை ,எங்களைக் கண்கானிப்புச் செய்கிறீர்களா , ஜனவரி 6, 1969 ல் அமெரிக்க அதிபர் ஜிம்மிக் கார்டரை Jimmy Carter சந்தித்தீர்களா? உங்களால் எங்களுக்குப் பாதிப்பு யுத்தம் ஏதாவது வருமா ?

அதனிடமிருந்து வந்த முதல் பதில் நாங்கள் அமெரிக்க அதிபரைச் சந்திக்கவில்லை .அது இன்னொரு கிரக வாசிகள் .அதுவும் சில விபத்தில் பாதிக்கப்பட்ட தங்கள் கிரக ஆட்களைக் காப்பாற்றவும் முற்றிலும் பாதிக்கப்பட்ட உடல்களைச் செயல் இழக்கச் செய்யவும் வந்திருந்தார்கள்.நாங்கள் உங்கள் பரிணாம விதிகளுக்கு உட்பட்டவர்கள் அல்ல .ஆனால் உங்களை விடத் தொழில்நுட்பத்திலும் எண்ணிக்கையிலும் அதிகமுள்ளவர்கள் .உங்களுக்கும் எங்களுக்கும் இருபத்தி ஏழாயிரம் ஒலியாண்டுகள் தள்ளி வாழ்கிறோம்.

உங்களைக் கணிகானிப்புச் செய்கிறோம்.அதுவும் உங்கள் சாட்டிலைட்கள் மூலமாக .எங்களால் உங்களுக்குப் பாதிப்பு வராது அப்படி வர ஒரே காரணம் உங்கள் அணு ஆயுதங்கள் .நீங்கள் இந்தப் பூமிக்கிரகத்தைப் பல ஆயிரம் முறை மீண்டு மீண்டும் அழிக்கும் வகையில் வைத்து இருக்கிறீர்கள் அதைப் பயன்படுத்தினால் நாங்கள் எங்கள் கொள்கைகளிம் மாற்றம் செய்து பூமியைக் காப்போம்.பூமி இந்தப் பிரபஞ்சத்தின் அழகான பொறுள்.இங்கு மட்டுமே அன்பு கருணை என்ற உணர்வுகள் உள்ளது .


மாதவன் என்ன கேட்டான் என்று ராகவன் அறியாவிட்டாலும் பதிலிருந்து புரிந்து கொண்டான் .ஆனால் மாதவன் அளவுக்கு அவன் விஞ்ஞான அறிவு இல்லாததால் சில விசயங்கள் புரியவில்லை .

இப்போது மாதவன் ,ராகவனைப் பார்த்து நீ எதாவது கேள் என்பதைப் போலப் பார்த்தான்.

ராகவனுக்குச் சந்தோசம் .ஏதோ ஒரு வேற்றுக் கிரக வாசியைக் கூட நம்மால் கேள்விக் கேட்க முடிகிறது ஆனால் பதினொரு வருடம் கூடவே வாழும் மனைவி ரேணுகாவை ஒன்றும் கேட்க்க முடியவில்லையே என்ற எண்ணமும் கூடவே வந்தது.

ராகவன் , உங்களைக் காப்பாற்றினால் என்ன தருவீர்கள் ?

மௌனம் சில நிமிடம் நீடித்தது .

மாதவன் ராகவனைப் பார்வையால் பார்த்து ஏதாவது தப்பாய்க் கேட்டு விட்டாயா முறைக்க ,

பதில் வந்தது .

ஒரே ஒரு முறைப் பின்னோக்கிய காலத்திற்குச் சென்று உங்கள் மனிதனாகப் பிறப்பிற்குக் காரணமான விலங்குகளைப் பார்த்து வரலாம் என்றது.

இந்தப் பதிலில் ராகவன் உற்சாகமடைந்தானா இல்லையோ மாதவனுக்கு மிகவும் சந்தோசம் .காரணம் டார்வினின் தத்துவத்தில் நேரடியாகக் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பதில் உடன்பாடு சின்ன வயதிலிருந்தே இல்லை .பாவம் ஆந்ரோபாய்ட்ஸ் (Anthropoids) இன வாலில்லாக் குரங்குகள் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பதால் அதை மனிதனோடு ஒப்பிட மாதவனுக்கு விருப்பமில்லை மனித இனத்தோற்றத்தில் எங்கோ ஒரு இணைப்புக் காலத்தால் மறைக்கப்பட்டு விட்டது என்று நம்பினான்.அதற்கு விடை கிடைக்கப் போகிறது என்று சந்தோசப்பட்டான் .


அதற்குள் அந்த ஏழியன் கையில் வைத்திருந்த ரேடியோ போல இருந்த பெட்டியிலிருந்து பீப் சத்தம் வந்தது.

எங்கள் தாய்க் கிரகத்திலிருந்து காப்பாற்றச் சிப் வந்து விட்டது என்றது உள்குரல்.

தன்னோடு கூடவே வந்த இன்னொரு பிரஜை அந்தப் பாறைக்குப் பின்னால் இருகிறது என்று சில அடிகள் தள்ளிக் கைகாட்டியது .அதோடு உங்கள் வெறும் கைகளால் தூக்காதீர்கள் .உங்கள் உடைகளைக் கழற்றி அதன் உதவியுடன் தூக்குங்கள் என்றது குரல்


இருவரும் நடந்து செல்லவும் அவர்களுக்குப் பின்னால் சட்டெனெ மாயம் போல ஒரு பறக்கும் தட்டு இது வரை அவர்கள் பேசிக்கொண்டு இருந்த ஏழியனுக்கு அருகில் இறங்கியது .அதிலிருந்து வயலட் , இண்டிகோ கலரும் நிரம்பி வழிந்தது போல ஒளி வெள்ளமாக வந்தது .ஆனால் ஏற்கனவே இங்கு இறங்கியிருக்கும் மறக்கும் தட்டை அளவில் சின்னதாக இருந்தது.


இருவரும் அந்தப் பாறைக்குப் பின்னால் உள்ள இன்னொரு ஏழியனையும் முதல் ஏழியன் சொன்ன படித் தங்கள் டீ சர்ட்டைக் கழற்றி அதன் மேல் போட்டாட்கள் .அது அப்படி ஒன்றும் கனமாகத் தோன்றவில்லை.மெல்ல அதை எடுத்து வரவும் புதிதாய் வந்த பறக்கும் தட்டில் அடிப்பாகம் திறக்கவும் சரியாகவும் இருந்தது. திறந்த வாசல் வழியாக விமானத்தில் ஏறப் பயன்படும் மூவிங் எக்சலேரட்டர் போல ஒரு தட்டு இறங்கியது அதில் படுக்க வைத்தார்கள் .அது உள்வாங்கிக்கொண்டது .அடுத்து ஒரு வினாடிக்குள் அதே பகுதியிலிருந்து ஒரு சேர் போன்ற ஆசனம் இறங்கியது.முதலில் உள்ள ஏழியனைக் கைத்தாங்கலாகத் தூக்கி வந்து அமர்த்தினார்கள் .

அது மேல்லக் கையுயர்த்தி நன்றி மாதிரி ஏதோ சொல்லியது .சொல்லிவிட்டு இவர்கள் கையில் ஒரு சின்னக் கால்குலேட்டர் போன்ற பொருளைக் கொடுத்தது .

உங்களுக்கு நன்றி .இந்தப் பின்னோக்கியக் காலதொழில்நுட்பக் கருவியை ,தாமதிக்காமல் இதில் ஒரு பட்டனை அழுத்துங்கள் போது. அந்தப் பின்னோக்கியக் காலத்தின் காலத்தின் புள்ளியை இந்த டிவைசோடு இணைத்து விட்டேன். இருவரும் அமைதியான ஒரே மன நிலையில் ,ஒருவருடன் ஒருவர் கைப் பிடித்துக் கொண்டு தொடுங்கள் .அந்தக் காட்சிக்கு உங்களை அது அழைத்துச் செல்லும்.பிறகு அதை வெகு ஆழமான நீருக்குள் வீசி விடுங்கள் . இல்லாவிட்டால் அதில் சூரியக் கதிர் பட்டால் ரேடியேசன் தோன்றி உடல் நலத்தைக் கெடுக்கும் என்றது .


இவர்களும் நன்றி சொல்லி அதே போலக் கை உயர்த்த, அந்தச் சேர் போன்ற இருக்கை பறக்கும் தட்டு வாசலுக்குள் உள்வாங்கியது .

உள்வாங்கும் போது மாதவன் அந்த ஏழியன் கண்ணைக் கவனித்தான் அதில் ஒளி மின்னியது .

அதன் பொருள் நன்றி என்கிறதா இல்லை மீண்டும் சந்திப்போம் என்கிறதா ?

விர்ரென்று ஒரு சின்னச் சப்தம் கூட எழவில்லை சில அடிகள் உயர்ந்த அந்த வாகனம்

வலது இடதாய் ஒரு முறை சுழன்றதுதான் தெரிந்தது .

சட்டெனெ வந்தது போலவே மாயமானது .

ஏற்கனவே கிடந்த பறக்கும் தட்டை எங்கே என்று இருவரும் கிடந்த இடத்தைப் பார்க்க அங்கு அது இல்லை . இருந்ததற்கான சுவடும் அங்கு இல்லை

உடனே இருவருக்கும் அந்த காலத்தின் பின் கதவை திறக்கும் சாவியை இயக்கிப் பார்க்கும் ஆரவம் மேலிட , அதே புல் வெளியில் அமர்ந்து மாதவன் தொடையின் மேல் ராகவன் கை வைத்துக்கொள்ள ,அதன் நீலவண்ணம் உமிழ்ந்து கொண்டு இருந்த பட்டனை மாதவன் அழுத்தினான்.


இருவருக்குள்ளும் காந்த சக்திப் பாய்வது போல ஒரு உணர்வு பாய்ந்தது .உடம்பின் உணர்வு மரத்துப்போனது . சட்டெனெ ஏதோ ஒரு நீளமான வளைவானக் குழாய் போன்ற அமைப்புக்குள் கவர்ந்து செல்லப்படுவது போல உணர்ந்தார்கள் ... எல்லாம் கரைந்து போனது .


சட்டெனெ அவர்கள் விரிந்தக் காட்டுக்குள் மிதப்பது போல உலாவி உயரமான ஒரு இடத்தில் நின்றார்கள் .

எடையில்லாத உடல் உணர்வு இருந்ததை உண்ர்ந்தார்கள் . ஒருவரை ஒருவர் கூடப் பார்த்துக்கொள்ள முடியவில்லை.


கீழே அடர்ந்த காடு தெரிந்தது .

அதிகாலைப் பொழுது போல இருந்தது .

இன்னும் கீழே உற்றுப் பார்க்க ஏதோ ஒரு விலங்குக் கூட்டம் சுற்றியிருக்க , அதன் நடுவே வாலில்லா குரங்கு ஒன்று புல்வெளியில் வானத்தை நோக்கிப் படுத்து இருக்க, சுற்றி இருந்த அந்த விலங்குகள் அதன் ஆசன வாய்ப் பகுதியில் கவனித்துக் கொண்டு இருந்தது.

அந்த சுற்றியிருக்கும் விலங்குக் கூட்ட்த்தை எங்கோ இதற்கு முன் மாதவனுக்கு பார்த்தது போல இருந்தது . அந்த விலங்குகள் கோவில் சிற்பங்களில் அகோரமாய்த் நீண்ட நாக்குகளுடன் காலிற்கு கீழே கூட சிறிய உயரத்தில் யானை நிற்குமே, அதன் ஆணுறுப்பு கூட கம்பீரமாய்த் தெரியுமே ?

அந்த விலங்கு, அட அதை யாளி என்பார்களே?

மாதவன் யோசித்துக் கொண்டு இருக்கும்போதே ,


படுத்து இருந்த குரங்கிடமிருந்து நீண்டச் சத்தம் வரவே அது உயர்ந்திருந்த தன் வயிற்றை தன் கைகள் கொண்டே அழுத்தியது..


மெல்ல அதன் அடிப்பக்கம் ஒரு சிறு உடலை போல , ஏதோ ஒன்று நகர்ந்து வெளியே வரத் தொடங்கியது .

அப்படியானால் ?

அங்குப் பிரசவம் நடக்கிறது ...


இப்போது அவர்கள் பார்வையை இன்னும் உற்று அந்தக் குரங்கிலிருந்து முற்றிலும் வெளியேறிய அந்த சிறு உடலை இப்போது தெளிவாகப் பார்க்க முடிந்தது .

அது …

ஒரு மனிதப் பெண் குழந்தை.


----------முற்றும்-------

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.