மாயச்சமாதி

மாயச்சமாதி
பாகம் 1
************

ஒரு சின்னப்பெண் அம்மாவுடன்
பேசிவிட்டு நகர்ந்தாள்

யார்மா அது

எதிர்வீட்டுக்கு புதுசா குடிவந்திருக்காங்க

ஓ....

நான் 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்
காலையில் வெள்ளைச் சீருடையில்
புறப்பட்டு வாசலுக்கு வந்தபோது
எதிர்வீட்டைக் கவனித்தேன்.
அந்தச்சின்னப்பெண்ணும்
சீருடையில் இருந்தாள்.
என் பள்ளிதான் என்பதை
அவள் அணிந்திருந்த கழுத்துப்பட்டி
அறிவித்துக்கொண்டிருந்தது.

அவள் என்னைப்பார்த்து விட்டாள்
புன்னகைத்தாள்..
நானும் குறுநகைத்து திரும்பினேன்

அக்கா..

ம்...

நானும் கூட வரவா ..

ம் சரி..

பேசிக்கொண்டே நடந்தோம்

வேறு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்திருக்கின்றனராம்.

அக்கா இரண்டு
அண்ணன்மார் மூன்று
அப்பா இல்ல அம்மாதான் என்றாள்..

சுட்டிப்பெண் அவள்
கல கலவென்று எல்லாருடனும்
ஒட்டிவிடும் ஒரு காந்தம்
அவள் பேச்சும் முகமும்
அவ்ளோ அழகு..

என்னையும் ஈர்த்திருந்தாள்
செல்வி அவள் பெயராம்..
ஒன்றாகவே பள்ளி போய்வர ஆரம்பித்திருந்தோம்..

பின்னொருநாள் அவன் அண்ணன்
என் தம்பியின் நட்பாகிப்போனான்.
அவன் பெயர் பாலாவாம்..

என்னைவிட இரண்டுவயது சிறியவன்.

செல்வியும் பாலாவும் வீட்டுக்கு
வந்து போக ஆரம்பித்தனர்.

பாலா 10 படித்துக்கொண்டிருந்தான்
பாடங்களுக்கு விளக்கம் கேட்பான்
சொல்லிக் கொடுப்பேன்.

பாட்டுக்குப் பாட்டு
போன்ற சில விளையாட்டுக்கள்
சேர்ந்தே கலாய்த்துக்கொள்வோம்..

நாளாக நாளாக
கேலி கிண்டல் பேச்சும் வளர்ந்தது

அப்போதெல்லாம் இந்தியா சென்று
பொருட்கள் வாங்கி வந்து
விற்பார்கள்..

பக்கத்து வீட்டு ஆண்டி
போயிட்டு கொண்டுவந்த பொருட்களைப்
பார்க்கப் போனோம்..

நீலக்கல் வைத்த மோதிரம்
ஒன்றும் சிவப்புக்கல் வைத்த மோதிரம் ஒன்றும் அங்கே இருந்தன...

பொதுவா எல்லா நிறமும்
எனக்குப் பிடித்தாலும்
நீலம் கொஞ்சம் அதிகமாய்ப் பிடிக்கும்.

நீலக்கல் மோதிரத்தை
வாங்கி அணிந்தேன்
ரொம்ப அழகாருந்தது அது

அடுத்த நாள்..பாலா வந்தான்

உங்க கையைக் காட்டுங்க..
ஏன்
ப்ச் காட்டுங்க சொல்றேன்

காட்டினேன் என் மோதிரவிரலில்
அந்த மோதிரம் மின்னியது
இமிட்டேசன் தான் அது..
ஆயினும் அழகு

இதைக் கழற்றுங்க

ஏன்

கழற்றி எனக்கு கொடுங்க

ம்ஹும் மாட்டேன்

அப்போ மற்ற கையைக் காட்டுங்க

காட்டினேன்

சிவப்புக்கல் வைத்த அந்த ஆண்டி
வைத்திருந்த இன்னொரு மோதிரம்

அவனே போட்டும்விட்டான்..

இதை நீங்க கழற்றக்கூடாது

ஹா ஹா சரி தேங்ஸ்

நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு
நகர்ந்தான்...

ஆஹா இரண்டு மோதிரம் கிடைத்த
சந்தோசம் எனக்கு..

செல்வி அந்த மோதிரத்தைப் பார்த்தாள்
அண்ணன் கொடுத்தானா
ஆமா பரிசாம் என்றேன்
கையால் வாயைப்பொத்தி சிரித்தாள்
மாட்டிக்கிட்டீங்க ... என்றாள்
ஆ... ஏன்
சும்மா சொன்னேன் அழகாருக்கு அண்ணி என்றாள்
என்னது அண்ணியா
சாரி டங் சிலிப் என்றாள்

வழக்கம்போல் பாடத்தில்
சந்தேகம் கேட்க வந்தான்..
சொல்லிக் கொடுத்தேன்..
அன்று அவன் சற்று நெர்வஸ் ஆகவே இருந்தான்.
வழக்கமான கலாய்ப்பும் கேலியும்
மாயமாயிருந்தன.

என்னாச்சு...

ஒன்னுமில்லியே...

நீங்க சாதாரண மா இல்லியே பாலா...

எப்பவும் போல்தானே இருக்கேன்..

விடைபெற்றான்...
அப்போது என் கையில் ஒரு
கவரைத் திணித்தான்...

என்னது...

திரும்பிப்பார்க்காமலே போயிருந்தான்..

ஏதோ அவனுக்கு சிக்கல் போலும்...

சொல்ல முடியாம எழுதித் தருகிறான்
என்று நினைத்துக் கொண்டே
பிரித்துப் படிக்கிறேன்...

ஓ.....

அதிர்ச்சியில் மயக்கமே வந்திருந்தது..

முத்து முத்தாய் அல்ல
கிறுக்கல் எழுத்தில்
அவன் எழுதி வைத்திருந்தது
ஒரு காதல் கடிதம்
அதுவும் எனக்கு....

வயதில் நான் பெரியவள்
அவனுக்கும் அது நன்கு தெரியுமே...
காதல் வயதெல்லாம் பார்த்து
வருவதில்லை என்று முடித்திருந்தான்..

வெறுப்பாய் இருந்தது...
வெள்ளையாய் நான் பழகினால்
கறுப்புப்புள்ளி வைத்தா நீ கெடுக்கிறாய்.

கிழித்துப் போட்டேன் கடிதத்தை
கழற்றி எறிந்தேன் மோதிரத்தை

அப்புறம்....

மாயச் சமாதி 2

வெறுப்பில் எறிந்த மோதிரத்தை
தரையிலிருந்து எடுத்தேன்..

வழக்கம் போல் செல்வி
வந்து என்னுடன் இணைந்து
பள்ளி வந்தாள்..

இந்தா செல்வி இதை உங்கண்ணன் கிட்ட கொடுத்திரு...

ஏன்கா...பிடிக்கலயா...

ஆமா பிடிக்கல இதெல்லாம்...

வாங்கிக் கொண்டாள்.

காதலிக்கிறது தப்பாக்கா...

நீ சின்னப்பொண்ணு..

சும்மா தெரிஞ்சுக்கலாம்ல நானு

தப்பில்ல ... ஆனால்..

ஆனால்...

அது இரண்டுபக்கமும் இருக்கணும் வரணும்...

சொல்லிட்டு என் வகுப்பறைக்குள் நுழைந்தேன்..

செல்வி பள்ளி முடிந்தபின்
என்னோடு வரவில்லை..

நானும் பெரிதாக எடுக்கவில்லை...

வீட்டுக்குப் போன போது
பாலா முற்றத்தில் தம்பியுடன்
பேசிக்கொண்டிருந்தான்.
என்னைப்பார்த்தான்..
வெறுப்பாய்ப் பார்த்துக்கொண்டே சென்றேன்..

அதன் பின்னர்
செல்வியோ பாலாவோ வீட்டுக்கு
வருவதை நிறுத்திக்கொண்டனர்.

என்னைப் பார்ப்பதை
தவிர்த்துக் கொண்டனர் என்றே
நினைக்கிறேன்..

எனக்கு 12 ஆம் வகுப்புத்தேர்வு என்பதால் படிப்பில் ஆழ்ந்த கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தேன்
பாலாவை மறந்துதான் போனேன்..

பலநாட்கள் அவன் கண்ணில்
படவேயில்லை...

அக்கா ... நம்ம பாலா
போராளிப்பயிற்சிக்கு வீட்டைவிட்டே
சொல்லாமக்கொள்ளாமல்
போயிட்டானாம்..
அவுங்க வீட்ல அழுதுட்டு இருக்காங்க...

ஓ... எதுக்கு போனான்..
இதுக்கு நான் காரணமாருக்குமோ...

இருக்காது....

அந்நாட்களில் இளையோரெல்லாம்
தமிழ் உரிமைக்காய் போராட
எழுச்சி கொண்டு கிளர்ந்த காலமது..

இவனும் போயிருக்கிறான்

**************

மாயச்சமாதி 3

ஓராண்டு ஓடிற்று...
ஓராயிரம் மாற்றங்கள்
திடீர்னு ஒருநாள்
வீட்டின் முன்
ஜீப்ரக வாகனம் ஒன்று
ஜீவனுடன் நின்றது...
எட்டிக் கவனித்தேன்
போராளி உடையுடன்
கையில் துப்பாக்கியுடன்
மூவர் இறங்கினர்...
முன்னால் இறங்கியவன்
அவன்.... அவனேதான்...
பாலா...

அளவான மீசை அரும்பியிருந்தது
அழகிய இளைஞன்
கம்பீரம் பயிற்சியினால்
களமிறங்கி  வந்தது
அவனுருவில்..

இறங்கியவன்
புன்னகையுடன்
என்னைக்கடந்து உட் சென்றான்.
பின்னே இரண்டுபேர்
பின்னணி இசைபோல்
பின் தொடர்ந்தனர்...

அம்மாவுடன் தம்பியுடன்
அளவளவாவியது
ஐந்தே நிமிடம்தான்..

புறப்பட்டுவிட்டான்
புறம் தள்ளியிருந்தான் என்னை..

வருத்தமாய்த்தானிருந்தது
வசப்படுத்திக் கொண்டேன்
வழக்கம்போல் என் மனதை..

கடைசியாய்ப் பார்த்ததும்
கவலைப்பட்டதும் அன்றுதான்..

பின்னர் பெரும் போராட்ட நாட்கள்
பிரளயங்களாய் முடிந்திருந்தன
பிரேதங்களின் குவியல்கள்
பிரதேசங்களில் நிரப்பப்பட்டன

போராளிகளின் சமாதிகளில்
போராடிக்கொண்டிருந்தன
உரிமைத்தியாகங்கள்

அவற்றைக் கடக்கும்போதெல்லாம்
அவன் நினைவுக்கு வருவான்
அங்கு அவன் இல்லை
அதுவே நிம்மதி
ஆயினும் ....
காற்றில் ஒரு சமாதி
காதலுக்கு கட்டப்பட்டிருந்தது
எனக்கு மட்டுமே தெரிந்தது.

கவிமுகை மகிழினி

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.