என் பெயர் வந்தனா. வயது முப்பத்தைந்து.


அன்பான கணவர். பதினைந்து வயதில் ஒரு அழகான மகள். பெயர் சுகன்யா. சேலத்தில் ஒரு பிரபல பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கிறாள்.


அழகான, அமைதியான கவிதை போன்ற என் குடும்பத்தில் மகள் சுகன்யாவால் தற்போது நிம்மதியிழந்து தவிக்கிறேன். கடந்த ஒருவாரமாகத் தூக்கம் இல்லை.


என் மகள் தன் கூடப் படிக்கும் ஒரு பையனிடம் காதல் வயப்பட்டுள்ளாள் என திடமாக நம்புகிறேன். பள்ளி முடிந்து வந்ததும், இரவு தூங்குவதற்கு முன்பும், காலையில் கண் விழித்தவுடனும், அவனிடமிருந்து எஸ்எம்எஸ் வருகிறது; இவளும் உடனே பதில் அனுப்புகிறாள். பல சமயங்களில் அவனுடன் வாட்ஸ் ஆப்பில் பேசுகிறாள்.


அவன் இவளைப் புகழ்ந்து அடிக்கடி கவிதை அனுப்புகிறான். இவள் அதைப்படித்துப் பார்த்து சிரித்துக் கொள்கிறாள். அடிக்கடி கண்ணாடி முன் நின்று தன்னை அழகு படுத்திக் கொள்கிறாள். மெல்லிய குரலில் காதல் சினிமா பாட்டுக்களை பாடுகிறாள்.


அவன் மிஸ்டு கால் கொடுப்பான்; இவள் உடனே கூப்பிட்டுப் பேசுவாள். சில சமயங்களில் போனை நான் எடுத்து “யார் பேசுவது?” என்று கேட்டால் “அவளுடைய க்ளாஸ்மேட் ஆன்டி...சப்ஜெக்டில் டவுட்” என்பான்.


முதலில் இவர்களை இப்படி நம்பிதான் நான் பல சமயங்களில் ஏமாந்துவிட்டேன். இப்போதுதான் எனக்கு விபரீதம் புரிகிறது. படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய வயதில் அவள் கவனம் சிதறுவது கண்டு எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.


என் மகள் மொபைல் போனில் மனதை உருக்கும் காதல் பாடல்களை அடிக்கடி கேட்கிறாள். பாடலுடன் சேர்ந்து தானும் பாடுகிறாள்.


ஒருநாள் என் கணவரிடம் இதைப்பற்றி சொன்னபோது. “இதைப் பெரிது படுத்தாதே வந்தனா, இந்த வயதில் எல்லோருக்கும் ஏற்படும் காப் (cough) லவ்தான் இது. இதை அப்படியே விட்டுவிடு, கல்லூரிக்குச் சென்றால் அவனை மறந்துவிடுவாள்” என்கிறார். அவர் எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ளமாட்டார்.

பெண்ணைப் பெற்ற நான்தான் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு தவிக்கிறேன். பல சமயங்களில் என் இயலாமையால் எனக்கு அழுகையாக வருகிறது. இதை யாரிடம் போய் சொல்லி விளக்குவது?


சுகன்யாவின் வளர்த்தியோ இருபது வயது. கோதுமை கலரில் உடம்பு நன்கு பூரித்து என் கண்ணே பட்டு விடும்போல் அவ்வளவு செளஜன்யம்.

அவளை எவனாவது ஏமாற்றி நட்டாற்றில் விட்டுவிடுவானோ என்கிற பயம் எனக்கு ரொம்ப அதிகம். பொறுப்புடன் ஒருநல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டால் என் கடமை முடிந்தது.


எனக்கு ஏதேதோ எண்ணங்கள்....


பள்ளிப்படிப்பு முடியும்வரை அவள் மொபைல் போனை பறித்து வைத்துக்கொள்வது; அந்தப் பையனைப் பற்றி பள்ளி நிர்வாகியிடம் கூறி, இருவரையும் கண்டித்து வைப்பது; அவனுடைய பெற்றோரிடமே பேசிவிடுவது; இருவரிடமும் நேரில் பேசி அவரவர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தச் சொல்வது; சுகன்யாவிடம் மட்டுமே அன்பாகப் பேசி அவனை மறக்கச்சொல்வது. இப்படிப் பல எண்ணங்கள்.


ஒருநாள் என் கணவரிடம் சுகன்யாவைப் பற்றிச் சொல்லி, நம் ஒரேமகளின் நல்ல வாழ்க்கை நாம் அதை அமைத்துக் கொடுப்பதில்தான் இருக்கிறது என்று அவர் தோள்களில் சாய்ந்து வாய்விட்டு அழுதேன்.


அவர் என்னை சமாதானப் படுத்தி நிதானமாக, “பொதுவாகப் பள்ளிப் பருவத்தில் வரும் கன்றுக்குட்டி காதல்கள், நீண்டகாலம் நிலைப்பதில்லை; கல்லூரிக்குப் போனதுமே இருவருமே வேறு புதிய காதல்களை நாடுவர்.

பிறகு இறுதியாக பெற்றோர் பார்த்துவைக்கும் வரனை திருமணம் செய்து கொள்ளும் யுவதியும், யுவனும் திருமணத்திற்கு முன் பல காதல்களை சந்திக்கின்றனர். இதுதான் தற்போதைய யதார்த்த நிலை.


“இவர்களை நாம் கண்டு கொள்ளாமல் இருந்தாலே, பாம்பு தன் சட்டையை உரிப்பதுபோல், தாம் சந்தித்த காதல்களை உதறிவிடுவார்கள். இதை நாம் பெரிது பண்ணால் வீணாக அவர்களுக்கு வீம்பும், பிடிவாதமும்தான் ஏற்படும். நீ உடனடியாக அவளுக்கு ஒருநல்ல தோழியாக மாறு. தினமும் பள்ளியில் என்ன நடந்தது என்று விசாரித்து தெரிந்துகொள். அவளிடம் நிறைய பொதுவிஷயங்களைப் பற்றிப் பேசு. காதலைப் பற்றி அவளின் எண்ணம் என்ன என்று அறிய முற்படு. அவள் பேச்சிலிருந்து நீ அவளைப் புரிந்து கொள்ளலாம்” என்றார்.


எனக்கு அவர் சொல்வதிலும் உண்மைகள் இருப்பதாகப் பட்டது. அவளிடமே அவனைப்பற்றி கேட்டுவிட்டால் என்ன? நான் பெற்று வளர்த்த மகள்தானே! அவளிடம் எனக்கு இல்லாத உரிமையா? மனதில் இருப்பதை பேசித் தீர்த்துக்கொண்டாலே பாதிக்கும்மேல் விஷயங்கள் தெளிவாகிவிடுமே.


அன்று ஞாயிற்றுக்கிழமை.


காலை எட்டரை மணிக்கு ரிலாக்ஸ்டாக சன் டிவியில் டாப் 10 பார்த்துக் கொண்டிருந்தாள்.


“சுகு, உன்னிடம் நான் கொஞ்சம் மனம் விட்டும் பேசவேண்டும்”


டிவியை அணைத்துவிட்டு, “சொல்லும்மா” என்றாள். சோபாவுக்கு இடம்மாறி இன்னும் வசதியாக அமர்ந்துகொண்டாள்.


“எனக்கு ஒரு சந்தேகம் சுகு. நீ உன் க்ளாஸ்மேட்டை லவ் பண்றியோன்னு. நீ தினமும் அவனுடன் தொடர்பில் இருப்பதும், அடிக்கடி அவன் உனக்கு கவிதை அனுப்புவதும், அதை நீ ரசிப்பதும். உனக்குள்ளே நீ சிரித்துக் கொள்வதும். காதல் பாட்டை ரசித்துப் பாடுவதும்... அம்மாகிட்ட தயவுசெய்து எதையும் மறைக்காதம்மா....நான் உனக்காகத்தான் உயிரோட இருக்கேன் சுகு. நீதான் என் வாழ்க்கையே...உனக்கு எது சந்தோஷம் தருமோ அதை நான் நிறைவேத்தி வைப்பேன்.”


“மம்மி ப்ளீஸ்....நான் உன்னோட பொண்ணு. லவ்வு கிவ்வு எல்லாம் எனக்கு வராது. நான் ஐஏஎஸ் எழுதி பாஸ் பண்ணி ஒரு கலெக்டரா ஆகணும் என்கிற கனவுடன் இருக்கேன். அந்தக் கனவை நனவாக்கத் தேவையான முனைப்பு என்னிடம் இருக்கிறது. அப்படியே ஒருத்தன் மீது காதல் வந்தாலும் அதை உன்கிட்டயும் அப்பாகிட்டயும் சொல்கிற மனோதைரியம் எனக்கு உண்டு.


“யெஸ்....நீ சொல்ற பையன் என் கிளாஸ்மேட். பேரு கிரண்குமார். அவன் ரொம்ப நல்ல பையன்மா. அவனோட அப்பா ஒரு ஐபிஎஸ். சேலம் ரூரல் டிஎஸ்பி. உன்கிட்ட சொல்றதுக்கென்ன... முன்னெல்லாம் நிறைய காலேஜ் பசங்க என்னை நம்ம வீட்டுக்கு கிட்ட இருக்கிற பஸ்ஸ்டாண்டில் கேலியும் கிண்டலும் பண்ணுவாங்க. என்னிடம் பேச ட்ரை பண்ணுவாங்க. இதை ஒருநாள் கிரண்கிட்ட சொன்னேன். அவன்தான் நாம இனிமே காபந்து காதல் பண்ணலாம். ஒருபய உன்கிட்ட வரமாட்டான்னு சொல்லி, தினமும் அவன் பைக்கில் என்னைக் கூட்டிக்கிட்டு ஸ்கூலுக்கு போவான்மா. ஈவ்னிங் நம்ம வீட்டுகிட்ட டிராப் பண்ணுவான். அது போலீஸ்பைக் என்பதால் போலீஸ் என்று பின்னால் போட்டிருக்கும்.


“அதைப் பார்த்து காலேஜ் பசங்க ஒதுங்கிட்டானுங்க. இவளுக்கு ஏற்கனவே ஒரு ஆளு இருக்கு, அதுவும் டிஎஸ்பி மவன் என்று பயந்துபோய் இப்ப ஒழுங்கா இருக்காங்க. எனக்கு கிரண் மிகவும் க்ளோஸ்ப்ரென்டாக இருப்பதனால், நாங்க காதல் என்று இல்லாமல் அடிக்கடி ஒருவருக்கொருவர் குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொள்வோம். நாங்கள் செய்வது காதல் அல்ல, டைம்பாசிங் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். அதேசமயம் நாங்கள் இருவரும் படிப்பில் புலி.


“.........................”


“நல்லவேளை உன் மனசில் இருப்பதை இப்பவாவது சொன்னியே. அவனோட அப்பா எஸ்பி ப்ரோமொஷன்ல சென்னை போறார். அடுத்த அகடாமிக் இயர்ல அவன் ஷிப்டாகி சென்னைக்கு போய்விடுவான். எனக்கு அது ரொம்ப வருத்தம். நான் இப்பவே கிரணை நம் வீட்டுக்கு வரச் சொல்கிறேன். அவன்கிட்ட நீயே பேசிப்பாரு.”


உடனே ஸ்பீக்கரை ஆன் செய்து அவனுடன் மொபைலில் தொடர்பு கொண்டாள்.


“குட்மார்னிங் சுகன். என்ன திடீர்னு?”


“கிரண், அம்மா உன்னைப் பார்க்கனும்னு சொன்னாங்க, இப்ப நீ என் வீட்டுக்கு வரமுடியுமா?”


“வாவ்....மம்மிகிட்ட சொல்லு, நான் லஞ்சுக்கு வரேன். சக்கரைப்பொங்கல், வடை வேணும்....என் அம்மாவும் அப்பாவும் திருப்பதி போயிருக்காங்க, அதனால இன்னிக்கி மதியம் உன்வீட்லதான் சாப்பாடு.”


விஷயம் கேள்விப்பட்ட சுகன்யாவின் அப்பா வந்தனாவிடம் கிண்டலாக, “கேசரி, சொஜ்ஜி, பஜ்ஜி பண்ணிடேன்...மாப்பிள்ளையைப் பார்த்தமாதிரி ஆச்சு.” என்றார்.


“ச்சீ டாடி...யு ஆர் சிக்கனிங்...”


பன்னிரண்டு மணிக்கு கிரண் பைக்கில் வீட்டிற்கு வந்தான்.


சாதுவான பையனாகக் காணப்பட்டான். அளவாகப் பேசினான். அவனை நேரில் பார்த்த வந்தனாவுக்கு அவன் சுகன்யாவை லவ் பண்ணால்கூட தேவலை போலிருந்தது.


திடீரென்று சுகன்யா அம்மாவை வைத்துக்கொண்டே, “கிரண் யு நோ மை மம்மி ஹாட் எ டவுட் தட் வீ ஆர் இன் லவ்...ஐ தாட் ஐ வில் கால் யு ஹோம் டு மேக் மாட்டர்ஸ் வெரி க்ளியர்...” என்றாள்.


உடனே கிரண், “யப்பா... போயும் போயும் உன்னையா நான் லவ் பண்ணுவேன்? அதுசரி, உன் அம்மாவுக்கு நீ பெரிய அழகிதானே?” என்று கிண்டலடிக்க, சுகன்யா பதிலுக்கு, “உன்ன பிஞ்ச செருப்பால அடிக்கவா...இல்ல ஈரச் செருப்பால அடிக்கவா?” என்று செருப்பைத் தேடினாள்.


வந்தனாவுக்கு இந்த இளசுகளின் புரிதல் குறித்து பெருமையாக இருந்தது. கிரண் சென்னைக்குப் போகாமல் இங்கேயே இருந்ததால் என்ன? என்று தோன்றியது.


சாப்பிட்டுவிட்டு பைக்கில் கிளம்பியபோது, அவன் பைக்கின் பின்னால் ‘போலீஸ்’ என்று போட்டிருந்தது.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.