அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். வேலையினிடையே அன்று வந்திருந்த 'வாடகைக்கு' விளம்பரங்களை மேய்ந்துகொண்டிருந்தேன். ஆம், வீடு மாற்றவேண்டும். கடந்த ஏழு மாதத்தில் இரண்டாவது மாற்றம் இது. என் அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா தெரியவில்லை, நான் யாரோடு போய்ச் சேர்ந்துக்கொண்டாலும் அவருக்கு அடுத்த மாதமே கல்யாணம் நிச்சயம் ஆகிவிடுகிறது, என்னைக் கூச்சப்படாமல் காலி செய்யச் சொல்லிவிடுகின்றனர், நன்றி கெட்ட ஜென்மங்கள். சாரி, கல்யாணம் என்பது வரமா சாபமா என்று தெரியாதவரை ... நான் அவர்களை திட்டவேண்டுமா, இல்லை அவர்கள் மேல் பரிதாபப்படவேண்டுமா புரியவில்லை.

பேயாப் பொறந்திருந்த
புளியமரத்துல தொங்கிக்கிடக்கலாம்,
நாயாப் பொறந்திருந்த
நடுத்தெருவுலேயே எல்லாம் பண்ணிக்கலாம்,
பாவிநான்
மனுசனாப் பொறந்துட்டேன்,
திண்டாடுறேன் தடுமாறுறேன்,
கரையேத்து ஆண்டவா !

ஆண்டவன் மெஸ் அருகில் என்ற விளம்பரம் தென்பட்டது, மூன்றாவது பக்கத்தில் கீழே வலது மூளையில். தனி அறை - ஆண்கள் மட்டும் அணுகவும். எனக்குத் தெரியும் ....... சந்தேகமே இல்லாமல் ... நான் ஆண்தானென்று. எண்ணைக் குறித்துக்கொண்டேன். கூடவேலை செய்யும் சுகுமாரிடம் விவரம் சொன்னேன். தனக்கும் ஒருஅறை பார்த்துக்கொண்டிருப்பதாகவும், தானும் வருவதாகவும் தெரிவித்தான். அந்த எண்ணில் நான் பேசிவிட்டு விவரம் தெரிவிக்கிறேன் என்று அவனிடம் சொல்லிவைத்தேன்.

மதிய நேரம், தூக்கத்தை விரட்ட, அந்த எண்ணைத் தொலைபேசியில் அழைத்தேன்.

'ஹலோவ்' பெண்ணின் எண் அல்லது இப்போது அந்த எண்ணில் பெண், தேமதுரக்குரல் குரல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அன்றுதான் கேட்டுணர்ந்தேன். நல்ல சகுனம் என்றுத் தோன்றியது.


'பேப்பர்ல அறை வாடகைக்கு ...'

'வீடு, 2 ரூம், ஒரு ரூம்ல நான் இருக்கேன், இன்னொரு ரூம் ப்ரீ, உங்களுக்கு வேணும்னா, நாம ஷேர் பண்ணிக்கலாம்'


ஸ்விட்சர்லாந்தில், அலைகளின் இடையில், நதியின் கரையில், மலைகளின் சிகரத்தில் மேகங்களின் மத்தியில், நொடிக்கொரு இடமாய் மாறி மாறி என்நிலை மறந்து ஆடிக்கொண்டிருந்தேன்.

'ஹலோவ்' என்ற அந்தப்பெண், எத்தனைமுறை அழைத்தாள் என்று தெரியவில்லை,

'நீங்க ?' என்று நான் கேட்டேன்.

' அவந்திகா, சொந்தமா எக்ஸ்போர்ட்ஸ் பிசினஸ், நீங்க ?'

என் தூக்கமெல்லாம் பறந்துபோய்விட்ட பின்னும் கண் திறந்தபடியே, கனவு கண்டபடியே பேசிக்கொண்டிருந்தேன். மாலை 7 மணிக்கு ஆண்டவர் மெஸ் பக்கத்திலிருந்து தொலைபேசியில் அழைத்தால் தானே வந்து அழைத்துச்செல்வதாய்ச் சொன்னாள். எனக்கு எங்கேயோ மச்சம் இருக்கவேண்டும். முழங்கை, விரல்கள், காலில் தெரிந்தஇடமெல்லாம் எல்லாம் ஒருமுறை பார்த்துக்கொண்டேன். வேறெங்கே எனக்கு மச்சம் என்று யோசித்துப்பார்த்தேன், சரியாய் ஞாபகமில்லை. வீட்டிற்கு போனதும் சோதித்துப் பார்த்துவிடவேண்டும், மச்சசாஸ்திரம் என்று எங்கேயோ ஒரு புத்தகம் பார்த்த நினைவுவந்தது, அடுத்தமுறை வாங்க வேண்டும் என்று மூளையில் ஒரு மூலையில் குறித்துக்கொண்டேன்.

வேலையே ஓடவில்லை; என்றும், ஒன்றும் பெரியதாய் எதுவும் பிடு i mean செய்ததில்லை. இருந்தாலும், ஒரு .... பரபரப்பு, மாலை எப்பொழுது ஆறு மணியாகும் என்று நிமிடங்களைத் தள்ளத்தொடங்கினேன். கிளம்பும்பொழுது கரடி தானும் வரவா என்று கேட்டது. சிவபூஜையில் இவனெதற்கு என்று எண்ணி, 'அந்த வீட்டிற்கு வாடகைக்கு வந்துட்டாங்களாம், வேறுதான் பார்க்கணும்' என்று சொல்லிக்கொண்டே அவ்விடத்தைக் காலி செய்தேன். ஏழுமணிக்குள் வல்லபாய் நகரின் ஆண்டவன்மெஸ் சென்று அவந்திகாவிற்குத் தொலைபேசியில் தெரிவித்து அவள் வருகைக்காகக் காத்திருந்தேன்.

காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிடமும் வருடமடி .... பாட்டு எங்கோ ஒலிக்கக்கேட்டது. அனுபவித்து எழுதியிருக்கிறாரோ வைரமுத்து என்று தோன்றியது. அவந்திகா - ஆஹ், எப்படியிருப்பாளோ என்றொரு நினைப்பு, ஒரு மெல்லியதேகம், ஸ்லிம், காட்டன் புடவையில், சுடிதார் என்றாலும் ஓகே, தலைகுளித்து சின்னதாய்க் கொண்டை இல்லை கூந்தலை அப்படியே பின்னால் பரவவிட்டு, கொஞ்சம் பவுடர், ஒரு பொட்டு, மல்லி இல்லை முல்லைப் பூ ... ம்ம்ம்


'போலாமா ?'

கனவைக் கலைத்தது அருகிலிருந்த வந்த ஒருகுரல், பெண் குரல், இவளா அவந்திகா ? ஐயோ என்று இருந்தது. அந்தத் தருணத்திலும் மோசம்போயிட்டியேடா ... கைப்புள்ள ... என்ற வடிவேலு வசனம் மண்டையில் ஒலித்தது. நெஞ்சில் - ஒருவித பயமா ? இல்லை ஏமாற்றமா ? எனக்குப் புரியவில்லை. என் கைபிடித்துத் தள்ளி ஆட்டோவில் ஏற்றுக்கொண்டாள். ஆட்டோ வந்ததா இங்கே ? சத்தமே கேட்கவில்லை என்று என்னுள் ஒரு சந்தேகம்.


'இல்லை ... நான்' தயங்கிக்கொண்டே வாய் திறந்தேன்.


என் உதட்டின் மேல் ஒரு விரலை நிற்கவைத்து 'ஸ்ஸ்ஸ்ஸ்' என்று சத்தம் செய்தாள். அவள் விரல் நுனியில் ஒருவித துர்நாற்றத்தை உணர்ந்தேன். சின்னவயதில் கதையிலெல்லாம் வருமே சூனியக்காரக்கிழவி இவளும் அப்படி .... இந்த பயமே என்னை ஒரு உலுக்கு உலுக்கியது. ஆட்டோவிலிருந்து குதித்துவிடலாமா என்று ஒரு எண்ணம், ஆனால் ஆட்டோவோ மிக வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. ஸ்பீடாமீட்டர் 60 என்று காட்டியது. அட பின்னாலிருந்து ஸ்பீடாமீட்டர் எப்படி தெரிகிறது. டிரைவர் எங்கே ? டிரைவிங் சீட்டில் யாரும் இல்லாததை அப்பொழுதுதான் உணர்ந்து, எச்சில் விழுங்கினேன், ஒரு பயம் என்னுள், முதுகுத்தண்டு சில்லிட்டது என்று படித்திருக்கிறேன், இப்பொழுதுதான் அனுபவிக்கிறேன். கழுத்தினருகில் ஏதோ நெளிய மெல்ல தலை திருப்பிப் பார்த்தேன். ஒரு கரப்பான் பூச்சி, 'ய்ய்யி' என்ற ஒரு குரலோடு அதைத் தட்டிவிட்டேன். அது பறந்து சு.காரி மீது, ஆமாம் இனி இவள் என் அவந்திகா இல்லை, சென்றமர்ந்தது. எனக்கு கரப்பான் என்றால் ஒரு பயம் இல்லை, ஆனால் அருவருப்பு.

எங்கே போனது என்று தேடினேன். இருட்டு சரியாய்த் தெரியவில்லை. கண் விழித்து நோட்டம் விட்டேன். இப்பொழுதுதான் அவளைக் கொஞ்சம் நிமிர்ந்து உத்துப் பார்த்தேன். கருப்பு, எண்ணெய் காணாது இங்கு அங்கு என்று குத்திக்கொண்டு நிற்கும் தலைமுடி, இது என்ன உடையென்றே எனக்குப் புரியவில்லை, எனக்கென்னவோ அவள் வெறும் துணிகளை தன் உடல்சுற்றி சொருகியிருக்கிறாளோ என்று தோன்றியது. அவந்திகா என்ற பெயர் மட்டும் கேட்டதும் அரக்க பரக்க வந்தது எவ்வளவு பெரிய தப்பு என்ற எண்ணம் என்னுள் ஒரு அழுகையைத் தோற்றுவித்தது.

நான் அவளைப் பார்ப்பது அவளுக்குப் புரிந்திருக்கவேண்டும். என்னைப் பார்த்துச் சிரித்தாள். மஞ்சள் கறை படிந்தப்பற்கள், நடுவில் இரண்டு உடைந்து ....... இல்லை அந்தப்பற்கள் கருப்பா ..... எனக்கென்ன அதைப்பற்றி ? கரப்பு எங்கே என்று தேடினேன், அவள் தலையில் அமர்ந்திருந்தது. அவள் தலை நோக்கி என் விரல் நீட்டி அவளுக்கு 'கரப்பான்' என்று எச்சரித்தேன். கை தட்டுவது போல் தலையின் மேல் தட்டி, அப்படியே கையை கீழிறக்கினாள். அவள் கையினிடையே கரப்பான் துடித்துக்கொண்டிருந்தது. அதன் இரண்டு இறக்கையையும் இரு கைவிரல்களால் பிடித்தபடி குழந்தையின் தூலியை ஆட்டுவதுபோல் ஆட்டி, படக்கென்று இழுத்து இறக்கையை என் முகத்தின் மீது படும்படி ஊதினாள். கொஞ்சம் அருவருப்புடன் ஒரு சின்ன நக்கல் சிரிப்பு உதிர்த்தேன். சூ.காரிக்குக் கோபம் வந்திருக்கவேண்டும். கீழே விழுந்த கரப்பானை எடுத்து ... அட அதை விடுங்க, நீங்க ஒருவேளை இப்போதுதான் சாப்டுட்டு வந்திருக்கலாம், படித்து உங்களுக்கு வாந்தி வந்துவிட்டால் .... ஆனால் நான் - எனக்கு வாந்தி வந்துவிட்டது, குமட்டியக் குமட்டலில் ஆட்டோ சடாரென்று நிற்க, என் நெற்றி முன்பக்கம் இருந்த கம்பியில் முட்டி, ரத்தம் சொட்ட, அவள் ம்ம்ம் என்று உறும ஆட்டோ தொடர்ந்து வேகமாய்ச் சென்று, சிறிதுநேரத்தில் ஒரு பாழடைந்த பங்களா வாசலில் சென்று நின்றது.


சூ.காரி. என்றதும் உங்களுக்கு அந்த பங்களா எப்படி இருக்கும் என்று காட்சி மனக்கண் முன் விரிந்திருக்கும். ஆம், வவ்வால்களும் ஓரிரண்டு கழுகு பருந்துகளும் சுற்றிக்கொண்டிருந்தன. ஒரு 5 வாட் குண்டு பல்பு, கிரீச் என்ற சத்தத்துடன் திறக்கும் கேட், நான் மிரண்டு பார்த்துக்கொண்டிருக்கும்போதே சூ.காரி. ஆட்டோவிலிருந்து இறங்கியிருந்தாள். அவள் அமர்ந்திருந்த பக்கம் கிரில் அமைத்து மூடியிருந்தது. நான் இன்னும் ஆட்டோவில் அமர்ந்திருக்கிறேன், இவள் எப்படி இறங்கினாள் என்று ஒரு குழப்பம்.

'வாவா' என்று அழைத்துக்கொண்டே முன்னே சென்றாள்.

பின்பக்கமாய் இரு அடி எடுத்துவைத்து ஓடிவிடலாம் என்று நினைக்கையில், க்ரில் கதவு க்ரீச் என்ற சத்தத்தோடு மூடிக்கொண்டது. இவளிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று எண்ணிக்கொண்டே மெல்ல பின் தொடர்ந்தேன். பயம் லேசாய் விலகியிருந்தது. யோகா தியானமெல்லாம் செய்வதால் கொஞ்சம் மனதை அமைதிப்படுத்திக்கொண்டு நிதானம் வரவழைத்துக்கொண்டு விழிப்புடனேயே இருந்தேன், எல்லாப்பக்கமும் நோட்டம் விட்டேன். அழுக்கு வீடு, தரையெல்லாம் மண் குப்பை, துர்நாற்றம், ஒட்டடை. சில பல காலணிகள் ஷுஸ், ஒருவேளை - என்னைப்போல வேறுயாராவது - வீடு பார்க்க என்று வந்து - இவள் அவர்களை ....

கையில் ஒரு குடுவையும் ஒரு கோப்பையையும் எடுத்துக்கொண்டு வந்தவள், குடுவையில் இருந்து என்னவோ சிவப்பு நிற திரவத்தை கோப்பையில் கொட்டி குடி என்று நீட்டினாள். வேண்டாம் என்றேன். 'ஹாஹாஹா' என்று பலமாய் சிரித்துக்கொண்டே அவளே அதைப்பருகி, பக்கத்திலிருந்த டிராவரிலிருந்த எதையோ எடுத்தாள்.


'சாப்பிடு' என்று என்னிடம் நீட்டினாள்.

நான் சாப்பிடுவதாய் இல்லை, எனினும் 'என்ன இது ?' என்று கேட்டேன்.
'பல்ல்ல்ல்லி வா......ல்' கண்ணை நன்றாய் விரித்து சொல்லிக்கொண்டே, இரண்டு மூன்று எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள்.

'அப்போ இது ?' அந்தக் குடுவையைக் காட்டிக் கேட்டேன்,
'ரத்தம் ... பல்லி ரத்தம்ம்ம்ம்ம், வேணுமா ?' மீண்டும் கோப்பையை நிரப்பி என்னிடம் நீட்டினாள்.
கையில் வாங்கி வைத்துக்கொண்டேன், வாந்தி வரும்போல இருந்தது, 'அமைதி அமைதி' என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.

'குடி ... குடி ... நல்லா இருக்கும்' சிரித்த முகத்துடன் தலையை ஆட்டி ஆட்டிப் பேசினாள்.


சரியாய் அந்த சமயம் பார்த்து நாய் குறைத்தது. நாய் குறைத்த சப்தம் கேட்டு கொஞ்சம் அரண்டுப்போனாள். நாய் என்றால் அவளுக்குப் பயம் போலிருக்கிறது. சத்தம் அதிகம் ஆகவே மிகவும் மிரண்டு இங்கும் அங்கும் தேடினாள். நான் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தேன். காரணம், அந்த நாய்ச் சத்தம் என் கைப்பேசியிலிருந்து வந்தது. அழைப்பது என் பாஸ். அவரின் தொல்லை தாங்காதுதான் அவரின் கைப்பேசி எண்ணிற்கு நாயின் குரைப்பு ஒலி இணைத்து வைத்தேன். ஆனால் இப்பொழுது அவரால்தான் எனக்கு தப்பிக்க ஒரு வழி பிறந்திருக்கிறது. மனதிற்குள் அவருக்கு நன்றி சொல்லிக்கொண்டே, அந்த ஒலியை மீண்டும் மீண்டும் ஒலிக்கவைத்து அவளின் பின்னே நின்றேன், அவள் பயந்து முன்னே ஓடினாள், நான் அவளை விடாது துரத்தினேன்; நாய் குறைக்க அவள் ஓட பின்னால் நான் துரத்த மாடியில் ஒரு அறைக்குள் ஓடினாள். இதுதான் சமயமென்று அவள் உள்ளே ஓடியவுடன் கதவை வெளியிலிருந்து தாழிட்டேன் .

சரசரவென்று படிகளில் இறங்கி வாசல் நோக்கி ஓடினேன். கீழே என்ன இருக்கிறது முன்னால் பின்னால் யார் வருகிறார்கள் எதுவும் தெரியாத ஓட்டம். தூரத்தில் ஒரு ஆட்டோ போவது தெரிந்தது. சரி முக்கியச் சாலை வந்துவிட்டேன் என்று புரிந்து கொஞ்சம் நிதானித்து மூச்சு வாங்கினேன். ஆட்டோவில் சென்றது, ஓடி வந்தது, இது எந்தச் சாலை, பெயர் ஏதாவது தென்படுகிறதா என்று தேடிப்பார்த்தேன், ஆனால் அகப்படவில்லை.

ஒருவழியாய் என் அறைக்கு வந்து சேர்ந்து அடுத்தநாள் காலை காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடிவுசெய்தேன். காலையில் காவல் நிலையம் சென்று நடந்த விவரங்களை சொல்லி, அவர்களையும் அழைத்துக்கொண்டு ஆண்டவன் மெஸ் அருகே சென்றேன். மெஸ் ஸை ஒட்டிச் செல்லும் சாலையில் கொஞ்ச தூரத்திற்குப் பின் பாதையில்லை.

'இந்தப் பாதையிலதான் போனீங்களா ?' இன்ஸ்பெக்டர் என்னைக் கேட்டார்.
'நைட் 7.30 க்கு மேல இருக்கும், இருட்டு ... ஆண்டவன் மெஸ் ஒட்டியப்பாதையில தான் போனோம்'

'இங்கே வா' வீட்டு வாசலில் அமர்ந்திருந்த ஒருவரை அழைத்தார் இன்ஸ்பெக்டர்.

வந்தார்.

'இந்தப்பக்கம் என்ன இருக்கு ?'

'ஒத்தயடிப்பாதை ... அந்தா ... அந்த இடத்துல ஒரு வயல்ல போய் முடிஞ்சிடுதுங்க'

'நேத்து இப்படிக்கா ஆட்டோ ஏதாவது போனிச்சா ?'

'இதுலயெல்லா ஆட்டோ போகமுடியாதுங்க'

'சரி நீ போ'

வந்தவர் திரும்பிப்போனார்.

'தண்ணி அடிப்பீங்களா ?'

என்னிடம் கேட்டார். எனக்கு முதலில் புரியவில்லை. புரிந்தபின் பதில் சொன்னேன்.

'பழக்கமில்லை சார்'

'ஏதாவது கனவு கண்டிருப்பீங்களோ ?'

பதில் சொல்லாமலிருந்தேன்.

'அந்த விளம்பரம் எங்கே, காட்டுங்க'

கையோடுக் கொண்டுபோயிருந்த நாளிதழில் மூன்றாம் பக்கத்தைத் திருப்பி வலது ஓரத்தில் .... ஆண்டவன் மெஸ் விளம்பரம் இருந்தது, பக்கத்தில் வீடு வாடகைக்கு விளம்பரம் இருந்த இடத்தில் ஏதோ துணி தைக்கும் நிறுவனம் விளம்பரம் இருந்தது. 'இந்தப் பேப்பர்ல தானே அந்த விளம்பரத்தைப் பார்த்தேன்னு சொன்னீங்க ?' இன்ஸ்பெக்டர் அந்த நாளிதழை ஒருமுறை செக் செய்தார்.

'நான் பொய் சொல்லலே சார்' என்று சொல்லிக்கொண்டே, ஆட்டோவில் சென்றபோது இடித்து என் நெற்றியில் ஏற்பட்டக் காயத்தைக் காண்பித்தேன்.

'நீங்க எங்கேயாவது கீழே விழுந்து அடி பட்டிருக்கலாம்ல, இல்லை தூக்கத்துல ?'

வேறேதும் பேசாது நாங்கள் திரும்ப வந்து, பின் என் அறை வந்து சேர்ந்தேன்.

சூ.காரியின் வீட்டிலிருந்த வெளியே வரும்முன், பல்லி வால் கிடந்த டிராவிலிருந்து எடுத்த வெள்ளி ருத்ராட்ச மாலை பற்றி நான் இன்ஸ்பெக்டரிடம் சொல்ல விரும்பவில்லை.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.