29C பேருந்திற்காகக் காத்திருந்த பாரதி வெயிலில் நின்றிருந்தாள். வந்த ஒரு பேருந்தும் பெரம்பூர் ரயில்நிலையப் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுவிட ஏமாற்றமடைந்து அடுத்து ஏதாவது பேருந்து வருகிறதா எனப் பார்த்தபடி நின்றாள். நீண்ட நேரம் கழித்து ஒரு 29C விரைவுப் பேருந்து வந்தது. அதுவும் இரண்டு வாசலிலும் கூட்டம் பிதுங்கி வழிய வந்தது. இதில் நம்மால் ஏற முடியுமா? என யோசிக்கக் கூட நேரமில்லாததால் அந்த மக்கள் வெள்ளத்தில் ஐக்கியமானாள்.

பேருந்து ஜமாலியா வந்தது. சில மாணவர்கள் இறங்க பாரதி படிக்கட்டிலிருந்து மெல்ல ஏறிக் கம்பியைப் பிடித்தபடி நிற்க பிரயத்தனப்பட்டாள். இந்தக் கூட்டத்தைச் சாதகமாக்கிக் கொண்டு இடிராஜாக்களில் ஒருவன் பாரதியை இடிக்க ஆரம்பித்தான். பாரதியால் ஒன்றும் சொல்லவும் செய்யவும் முடியாத நிலை. நன்றாக நடந்து கொண்டிருந்த நோக்கியா கம்பெனியை மூடியதால் அவளது 26 வயதுக் கணவன் வேலை தேடிக் கொண்டிருந்ததால் இவள் ஒன்றரை வயதுப் பெண் குழந்தை, கணவன் மற்றும் வயதான மாமியார் அடங்கிய குடும்பத்தைக் காப்பாற்ற நுங்கம்பாக்கம் தெருவில் உள்ள ஏர்டெல் கடை வேலைக்கு ஒரு மாதமாகச் சென்று வந்து கொண்டிருக்கிறாள். தாமதமாகப் போனால் அந்தக் கடை தாளாளரிடம் வேறு திட்டு வாங்க வேண்டியிருக்குமே என நினைத்துக் கொண்டிருக்கையில் இடி ராஜாவின் கை அவளது பின் பாகத்தில் மேய ஆரம்பித்தது. துப்பட்டாவை இறுகப் பிடித்து இடுப்பைச் சுற்றி மூடிக் கொண்டாள். திரும்பிப் பார்க்கக் கூட முடியாத அளவிற்கு கூட்டம் இருந்தது. KMC ஸ்டாப் வர கொஞ்சம் கூட்டம் இறங்க அதே அளவு கூட்டம் ஏற பேருந்து புறப்பட்டது. இவள் மனதிற்குள் அந்த இடிராஜாவைத் திட்டிக் கொண்டே நிற்க பஸ் கல்லூரிசாலை நிறுத்தம் வர நல்லவேளையாகக் கூட்டம் எல்லாம் இறங்க இவள் சௌகரியமாக நிற்க முடிந்தது. அப்போதும் அந்த இடிராஜா இவளை விட்டு விலகாமல் இடித்துக் கொண்டே வர இவள் அவன் பக்கம் திரும்பி, ”அண்ணே! கொஞ்சம் தள்ளி நிற்கிறீர்களா? நீங்க என்னைத் தங்கச்சியா நினைக்காட்டி கூட நான் உங்களை அண்ணனா நினைச்சி சொல்றேன். பலம் குறைந்த பெண்ணைத் தொந்தரவு மற்றும் தொல்லை பண்றவன்கிட்ட இருந்து காப்பாற்றத்தான் நீங்க இருக்கீங்கன்னு நினைச்சேன் என்றாள்.

எதிர்பாராத இந்தத் தாக்குதலை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் அவன் மன்னித்துவிடு எனக் கூறி விட்டு ஓடும் பேருந்திலிருந்து இறங்கி ஓடி விட்டான்.

‘கேளடா மானிட வாழ்க்கை| என எங்கோ ஒலிபெருக்கியில் பாரதி பாடிக்கொண்டிருந்தார்.

விருதுபட்டி பன்னீர்ரோசா

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.