பழைய நினைவுகள்


பழைய நினைவுகள்......

அவை இனிமையானதோ அல்லது கசப்பானதோ, நம்மால் தவிர்க்க முடியாதவை. ஒரு வகையில் இரண்டுமே நம்மை ரசிக்க வைக்கும் என்று கூட கூறலாம். ஏனெனில், இனிய நினைவுகள் மகிழ்ச்சியை அளிக்கும்போது, வருந்தத்தக்க நினைவுகள் நாம் எத்தகைய சோதனைகளை கடந்து வந்திருக்கிறோம் என்பதை நினைவுறுத்துவதால், அதனை நாம் நினைத்தாலும் ஒதுக்கித்தள்ள முடியாது. பெற்றோரின் கைகளை தன் பிஞ்சு விரல்களால் பற்றிக்கொண்டு ஒரு குழந்தையாக நாம் நடை போட்ட பருவத்தின் நினைவுகள் கூட நம் மனதில் நிழலாடுவது உண்மை.

ஐந்தாவது வயதில் , என் தந்தை எனக்கு ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாடலொன்றை விளையாட்டாகக் கற்றுக்கொடுக்க, அதனை நான் உடனே கற்றுக்கொண்டு பாடவும், வியந்த என் தந்தை அடுத்தடுத்து ஒவ்வொன்றாக முப்பது பாடல்களையும் கற்றுக்கொடுக்க, அதிலிருந்து இருவரும் சேர்ந்து பாட ஆரம்பித்தோம். இதில் ஆர்வமுற்ற என் அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து கொள்ள நாங்கள் , எங்கள் ஊர் கோயிலில் ஒவ்வொரு மார்கழி மாதமும்பாடுவதை வழக்கமாக்கிக்கொண்டோம். திருப்பாவை தவிர, திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சியும் சேர்ந்து பாட ஆரம்பித்தோம் . இன்று நான் எனது சகோதரர்கள் மூவருமே மூத்த குடிமக்கள் ஆகிவிட்ட நிலையிலும், வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் மார்கழி மாதத்தில் நாங்கள் எங்கள் பகுதிகளில் உள்ள கோயில்களில் இன்னும் பாடிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மார்கழி மாத நிகழ்ச்சிகளின் போதும் எங்களது குழந்தப்பருவ நினைவுகள் வருவதை தவிர்க்க இயலாது. இது மகிழ்ச்சியான நினைவுகள் .

திருமணத்திற்குப்பின் குழந்தைகளோடு கழித்த இனிமையான நாட்களிடையே திடீரென எனது மகனுக்கு ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டது. அம்மை போட்ட குழந்தைக்கு மலேரியா மற்றும் சீதபேதியும் சேர்ந்து கொண்டு வாட்டியது. ஒரு வயதேயான குழந்தை துரும்பாய் இளைத்து. கொழுக் மொழுக் என் றிருந்த குழந்தை இப்படியானதைக்கண்ட உறவினர் சிலர் கூடஆறுதல் சொல்லவும் தயங்கினர். இறைவன் அருளாலும் மற்றும் தேர்ந்த மருத்துவரகளின் சிகிச்சையாலும் குழந்தை பிழத்தது. இன்று அவனுக்கே திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையாக அவனைப்பார்க்கும்போது வரும் நினைவுகள் நாம் எத்தகைய சோதனைகளை தாண்டி வந்திருக்கிறோம் என்பதை மட்டுமல்ல எந்த நிலையிலும் நாம் நம்பும் தெய்வம் நம்மை கைவிடாது என்ற நம்பிக்கையயும் அளிக்கும்மருந்துதான்.

எனக்குத்தெரிந்த நண்பர் ஒருவர் மிகவும் முன்கோபம் உடையவர். அவரது அலுவலகத்திலேயே அவரைக்கண்டாலே அவரிடம் பேசவும் அஞ்சுவர். ஆனாலும் வெளியில் ஒருவரும் தனது பயத்தைக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். தான் மற்றவர்குக்கு சிம்ம சொப்பனமாக இருப்பதை ஒரு பெருமையாகக்கூட நினைத்தார். வேலையில் திறமசாலியாக இருந்தாலும் வரட்டுப்பிடிவாதமும் சேர்ந்து இருந்தது. அவரது அதிகாரியே கூட அவருக்கு அறிவுரை கூறி மூக்குடை பட்டதுதான் மிச்சம் . கோபம் என்பது கூட ஒரு போதைதான். மற்றவர்கள் தன்னிடம் கொண்ட பயம் உள்ளூற ஒரு சந்தோஷத்தக் கொடுக், அதற்காக அவர் எல்லயும் மீறுவதுண்டு. அவர் ஓய்வு பெற்ற அன்று , வெளியில் அவரைப்புகழ்ந்து பலர் பேசினாலும், அது வெறும் சம்பிரதாய பேச்சாகவே இருந்தது. மனதிற்கள் எல்லோருமே நிம்மதிப் பெருமூச்சுதான் விட்டனர். சமீபத்தில் அவர் நோய்வாய் பட்டிருந்த போது , இரக்க குணம் கொண்ட ஓரிருவரைத்தவிர யாருமே அவரை சென்று பார்க்கக்கூட இல்லை . அவர் அதன்பிறகு இறந்தாகக் கேள்விப்பட்ட போதும் அவரது அலுவலக நண்பரகள் வராதது தெரிந்து வருத்தமாயிருந்தது. இப்போதும் அவர் வசித்த பகுதி வழியாக செல்லும்போது அவரது நினைவுகள் வரத்தான் செய்கிறது. அவரது கோபத்தால் அவர் சாதித்தது என்ன ? குடும்பத்திலும் அவரது கோபம் எடு பட்டிருக்குமா? தன் வாழ்க்கையில் சந்தோஷத்தை வேண்டுமென்றே தொலைத்தவராகவே அவர் நினைவிற்கு வருகிறார்.

நம் வாழ்க்கையில் நமது ஒவ்வொரு அனுபவமும் , அது துன்பமோ, இன்பமோ, மற்றவர்கள் நமக்கு செய்த உதவியோ அல்லது துரோகமோ நம்மால் மறப்பது கடினம். ஆனால் , ஒவ்வொரு அனுபவமும் நாம் நம்மை பண்படுத்திக்கொள்ள உதவும் அனுபவங்கள் என்பதை மறுக்க முடியாது .

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.