உண்மை அறிந்தால்

அடுத்த டோக்கன் நம்பர் சுபத்ராவினுடையது தான். வழக்கத்தை விட பதட்டமாக இருந்தாள். இது மூன்றாவது முறை. ஒவ்வொரு முறை நர்சிங் ஹோமுக்கு வரும்போதும், மற்ற பெண்களைப் பார்த்து ஒரு வித ஏக்கம் ஏற்படுவதை இவளால் தாங்கிக்க முடிவதில்லை. நல்ல செய்தி கிடைக்க வேண்டும் என மத வித்தியாசம் இல்லாமல், பல கடவுள்களை கும்பிட்டு வந்தாள்.

"சாரி சுபத்ரா...இந்த தடவையும்..." டாக்டர் வினிதா தலையைக் குனிந்து கொண்டே சொன்னார்.
கண்ணீர் வரும் சூழல் தான், ஆனால் அத்தனை சீக்கிரத்தில் இந்த முறை அழுகை வரவில்லை.
"என்ன தான் டாக்டர் ப்ராப்ளம் எங்களுக்கு...ஸ்பெர்ம் டெஸ்டும், ஓவரி டெஸ்டும் க்ளியரா தான இருக்குன்னு சொன்னீங்க..நீங்க குடுத்த ஹெல்த் சப்ளிமென்ட்ஸ் தான் சாப்பிடுறோம். என்ன தான் பண்ணலாம் இனி"

"ஜெனட்டிக் டெஸ்ட்டுக்கு உன் ஹஸ்பண்ட் ஏன் ஒத்துழைக்க மாட்டறாருன்ன்னு கேட்டியா..? உங்களுக்குள்ளயே சரியான புரிதல் இல்லாதப்போ நான் என்ன பண்ணமுடியும்..?"

"புரிதல்லாம் நல்லா தான் டாக்டர் இருக்கு. ரெண்டு பேருக்கும் தாம்பத்யம் திருப்திகரமா தான் இருக்கு..ஆனா....இந்த டெஸ்ட்டுக்கு மட்டும் ஏன் ஒத்துழைக்க மாட்டறாருன்னு புரியல. இதை பத்தி பேசுனாலே ரொம்ப மூட்- அவுட் ஆயிடுறாரு. பேச்சை மாத்திடுறாரு."

"உன் ஹஸ்பண்டுக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தாகணும்மா..வேற வழியே இல்ல.."

"அதுக்கு சாத்தியமேயில்ல டாக்டர்"

"சரிமா..ஒண்ணு செய். உன் ஹஸ்பெண்டோட தலைமுடியோ, மென்னு துப்பின பப்பிள்-கம்மோ, அவருக்குத் தெரியாம எடுத்துட்டு வா. டெஸ்ட் பண்ணி பாத்துடலாம். மே-பி, அவருக்கு, தனக்கு தான் பிரச்சனைன்னு குற்ற உணர்வு உண்டாயிருக்கும்னு தோணுது. நீ எடுத்துட்டு வா.. எல்லாம் நல்லபடியா நடக்கும்."

"மை டியர் கண்ணம்மா....ஐம் ஹோம்.." கண்ணன் ஆஃபீஸிலிருந்து வீட்டுக்குள் நுழைந்து சுபத்ராவை பின்னாலிருந்து கட்டி அணைத்தான். ஒரு இதழ் முத்தம். அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை.

"......"

"ஏன் டல்லா இருக்கீங்க மேடம்...? டாக்டர் என்ன சொன்னாரு..?"

"மூணாவது முறையும் முடமா தான் இருக்குன்னு சொல்லிட்டாங்க.." வீடு அதிரக் கத்தினாள் சுபத்ரா.

"ஓ..."

"என்ன ரியாக்ஷன் இது..?"

"இந்த பிள்ளை நமக்குக் கிடைக்கக் கூடாதுன்னு இருக்கு.."

"கண்ணன்...ஏன் இப்படி பிஹேவ் பண்றீங்க..2 வருஷம் உயிருக்குயிரா காதலிச்சோம். இந்த 5 வருஷ திருமண வாழ்க்கைல நம்ம அந்நியோன்யத்தை பத்தி நினைக்கும்போதெல்லாம் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும். எவ்வளவு பாசமான கணவர் கிடைச்சிருக்காருன்னு.."

"இப்போ அந்த பாசத்துக்கு என்ன குறைச்சல்.?"

"குறைச்சல் இருக்கத் தான் செய்யுது..கிட்டத்தட்ட 7 மாசமா இந்த ஜெனட்டிக் டெஸ்ட் பத்தி சொல்லிட்டு தான் இருக்கேன். ஒரு தடவையாச்சும் பண்ணிக்கலாம்னு யோசிச்சிருப்பீங்களா? அல்லது நான் சொல்றத காது குடுத்து தான் கேட்டிருப்பீங்களா...?
கண்ணன்....நான் பேசிட்டே இருக்கேன். நீங்க பாட்டுக்கு குளிக்கப் போனா என்ன அர்த்தம்..?"

"டயர்ட்டா இருக்குன்னு அர்த்தம்.." அமைதியாகச் சொன்னான் கண்ணன். அந்த அமைதியில் ஒரு இறுக்கம் இருந்தது.

10 நிமிடம் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தாள் சுபத்ரா. குளித்து முடித்து டவலுடன் வெளியே வந்தான். உடை மாற்றிக் கொள்ள முற்பட்டபோது....

"சீ...ஒரு ஆம்பளை ட்ரெஸ் பண்ணிக்கறத இப்படி பாக்குறியே..நீயெல்லாம் அண்ணன் தம்பி கூட...." ஒரு நக்கலுக்காக ஆரம்பித்த அந்த வாக்கியத்தை அவன் முடிக்கவில்லை. ஒரு நிமிடம் அவனுக்குள்ளேயே ஏதோ யோசித்து நின்றான்.

"பாருங்க...இப்ப கூட பேச்சை மாத்த தான் பாக்குறீங்க.."

சட்டென இவள் பேச்சைக் கேட்டு முகம் மாறினான்..இருந்தும் அவள் முகத்தை நேராக பார்க்க முடியாமல், திரும்பிக் கொண்டு, கண்ணாடியை பார்த்து தலை சீவிக் கொண்டே பேசினான்.

"சுபத்ரா...இந்த டாக்டரெல்லாம் இப்படி தான் காசு புடுங்க..இல்லாத டெஸ்ட் பத்திலாம் சொல்லி ஏமாத்துவாங்க. கடைசில ரொம்ப சின்ன பிரச்சனையா தான் இருக்கும். அதுக்கு அவ்வளவு செலவழிக்கணுமான்னு பாத்தேன்."

"மத்த டாக்டர்ஸ் சொல்றாங்க சரி. என் ஃபேமிலி டாக்டர் வினிதாவும் அப்படி சொல்வாங்களா..?"

"உன் ஃபேமிலி டாக்டர்ன்னு சொல்லிட்டேல..."?

"பீ சீரியஸ் கண்ணா..."

"சீரியஸாகுறதுக்கு இதுல ஒண்ணுமே இல்ல கண்ணம்மா..ரொம்ப சாதாரண விஷயம். என் அம்மா சொன்ன மாதிரி, அந்த திருவண்ணாமலை கோவிலுக்குப் போய் சுவாமியை பாத்தா எல்லாம் சரியாயிடும். உனக்கு ஓ.கேன்னா சொல்லு. அடுத்த நாளே புறப்படலாம். இந்த ஜெனட்டிக் டெஸ்ட் பத்தி இனிமே பேச வேணாம். ஓ.கே?...வா..சாப்பாடு எடுத்து வை."

மனதுக்குள் பல யோசனைகள் ஓடிக்கொண்டே இருந்தது சுபத்ராவுக்கு. எழுந்திருக்குமுன், கண்ணன் சீவிவிட்டு வைத்த சீப்பைப் பார்த்தாள்.

ஒரு வாரம் கடந்திருந்தது. இருவருக்குள் எந்த கூடலும் நடக்கவில்லை. அந்த ஸ்பரிசத்தை இருவரும் ரொம்பவே மிஸ் செய்தார்கள். காலையில், கணவனை ஆஃபீஸ் அனுப்பிவிட்டு, பேப்பர் படிக்க உட்கார்ந்தாள். ஒரு நிலைக்கு மேல் பொறுமையாய் இருக்க முடியாமல் டாக்டருக்கு வாட்ஸ்-ஆப் மெசேஜ் அனுப்பினாள்.

'What about my result doctor??'

டாக்டரிடம் இருந்து சிறிது நேரம் கழித்து ரிப்ளை வந்தது.

'Urgent. Have to meet you by today itself. Get appoinment'

'Sure Doc.'

நிதானமான தலைக்குளியலை தவிர்த்துவிட்டு, காக்கா குளியல் முடித்துவிட்டு வந்தாள். அளவான மேக்கப், அதிலும் அழகாயிருந்தாள். எப்போதும் மறக்காமல் வைக்கும் கண் மையைக் கூட மறந்துவிட்டு க்ளீனிக்கிற்கு விரைந்தாள்.

"என்னாச்சு டாக்டர்"

"சொல்றேன்...உன் கணவரோட தாத்தா மிஸ்டர்.குணசேகர் 5 வருஷத்துக்கு முன்னாடி, உங்க கல்யாணத்தன்னைக்கு கொலை செய்யப்பட்டதா ஒரு கேஸ் இருந்ததுல்ல? அதோட ப்ராக்ரஸ் என்ன..? குற்றவாளிய பிடிச்சாச்சா?"

"இப்போ எதுக்கு டாக்டர் அந்த விஷயம்..?"

"சொல்றேன்...சொல்லு சுபத்ரா"

"இன்னும் ஓப்பனா தான் இருக்கு. ஒரு இம்ப்ரூவ்மென்ட்டும் இல்ல.."

"ஓ.கே. நான் சொல்லப் போற விஷயத்தை நீ எப்படி எடுத்துக்கப் போறன்னு தெரியல...இருந்தாலும் என்னால மறைக்க முடியல.."

"டாக்டர்..."

ஏதோ ஒரு பெரிய அதிர்ச்சி இருக்கிறதென பிடிபட்டது சுபத்ராவுக்கு. தயாராகினாள்.

"உன் தாத்தா பாடில, நகத்துல இருந்து சின்னதா சதைத் துணுக்கு எடுத்தாங்க இல்லையா..? கொலையாளியோடதா இருக்கும்னு சந்தேகப்பட்டு......"

"ஆமா டாக்டர்.."

"அந்த டெஸ்ட் என்னோட லேப்புக்கு தான் வந்தது. அந்த ரிப்போர்ட் நேத்து தற்செயலா என் கண்ல பட்டது....."

"சொல்லுங்க டாக்டர்.."

"சாரி டூ ஸே திஸ்..அந்த டி.என்.ஏவும் உன் கணவரோடதும் 100% மேட்ச் ஆகுது.."

"டாக்டர்..................."

வெளியே காத்திருக்கும் அத்தனை பேஷண்ட்டுக்கும் கேட்கும்படி கத்தினாள்.

"ஐ நோ...ஹவ் மச் யூ ஃபீல்...நான் உன் ஃபேமிலி டாக்டர்ங்கறதால தான் இத முதல்ல உன் கிட்ட சொல்றேன். குடும்பத்துக்குள்ள ஒரு கொலைங்கறது......இத நீ எப்படி ஹேண்டில் பண்ணப் போறன்னு தெரியலமா...நல்லா விசாரிச்சுப் பாரு. உன் ஹஸ்பண்ட் பக்கம் நியாயம் இருக்கான்னு பாரு. இருந்தா..இந்த விஷயத்தை அப்படியே விட்டுடு. நானும் யார்கிட்டயும் சொல்லல. ஒரு அழகான குடும்பம் குலைஞ்சிடக்கூடாது... டேக் கேர் மா..."

"ஒரு அம்பாசமுத்திரம் குடுங்க.."

கண்ணன் பிறந்த ஊருக்கு பஸ் ஏறினாள் சுபத்ரா. அந்தப் பயணம், வாழ்கையில் பெரிய விரக்தியை அவளுக்குக் காட்டியது.
'என் கண்ணன் ஒரு கொலைகாரனா.? அதுவும், சொந்த தாத்தாவையே...? இத்தனை நாளா என்னை தொட்டது ஒரு கொலை செஞ்ச கையா? அய்யோ...தாத்தாவையே...கொலை...அதுவும் கல்யாணத்து அன்னைக்கே...கொலை செஞ்ச குற்ற உணர்வு இருக்கறதால தான் ஒவ்வொரு அன்னிவர்ஸரி அப்பவும் இவ்ளோ ஃபீல் பண்றாரா..? சே..என்ன அழுத்தமான மனசு..ஒரு கொலை செய்ய துணியற அளவுக்கு..அப்படி என்ன காரணம் இருக்கும்..'

யோசித்துக் கொண்டேஏஏஏஏ....இருந்தாள். அம்பாசமுத்திரம் வந்தது.

தாத்தா குணசேகரோட சிநேகிதர்கள் பலரிடம் விசாரித்தாள் சுபத்ரா. தாத்தாவோட உயில் விஷயம் என்ன..? அந்த சொத்து பிரிக்கறதுல எதுவும் தகராறான்னு. யாருக்கும் எதுவும் தெரியல. கடைசியா ஊர்த்தலைவரிடம் போய் நின்றாள். அவரும் குணசேகரோட சிநேகிதர் தான்.

"நீ சொன்ன மாதிரி, சொத்து பிரிக்கறதுல எதுவும் தகராறு வந்திருக்கத்தான் வாய்ப்பிருக்குமா...அந்த பிரச்சனைல தான் கொலை நடந்திருக்கலாம்.."

"சொத்துக்கு தகராறு ஏற்பட வாய்ப்பில்லைங்கய்யா..அவருக்கு ஒரே பேரன், என் கணவர் தான்.."

"உனக்கு விஷயம் தெரியாதாம்மா...பெரியவருக்கு ஊருக்குள்ள வேறொரு பொண்ணு கூட தொடர்பு இருந்ததே..."

"என்னங்கய்யா சொல்றீங்க.."

"ஆமாம்மா..அந்த பொண்ணை அவர் கல்யாணமும் செய்துக்கல. இருந்தும் ஊருக்குள்ள ஒரு விஷேஷம், நிகழ்ச்சின்னா அந்த பொம்பளைய, சொந்த பொண்டாட்டி மாதிரி கூட்டிட்டு வந்துடுவாரு. ரொம்ப முறை கெட்டுப் போகுதுன்னு, ஊர் பெரிய மனுஷங்க ஒரு பத்து பேர் சேந்து அவளை ஊரை விட்டு அனுப்பி வச்சுட்டோம். அப்புறம் சில மாசங்கள்ல, குணசேகரும் ஊரை விட்டு கிளம்பிட்டாரு."

"ஐயா...ஊர் விஷேஷங்களுக்கு வருவாங்கன்னு சொல்றீங்கள்ல, எதாவது ஃபோட்டோ இருக்குமா..நான் பாக்க முடியுமா..?"

"பஞ்சாயத்து ஆஃபீஸ்ல ஆல்பம் இருக்கும்மா..உக்காந்து தேடினா கிடைக்கும்..குணசேகரை தெரியும்ல உனக்கு..நீயே தேடிக்கிறியா..டேய் சரவணா..இவங்களை கூட்டிட்டு போய் ஃபோட்டோ ஆல்பம்லாம் எடுத்துக் காட்டுடா.."

"சரிங்கய்யா..ரொம்ப நன்றி"

"சென்னைக்கு ஒரு டிக்கெட்.."

ஜன்னலோர காற்றில், கையில் படபடத்தது டிக்கெட்டும், அந்த ஃபோட்டோவும். இளவயது குணசேகரும் ஒரு பெண்ணும் இடம்பிடித்திருந்தனர். ஒவ்வொரு முறை பார்க்கும்போது அதிர்ச்சி அதிகமாகிக் கொண்டேயிருந்தது சுபத்ராவுக்கு. இது பொய்யாய் இருந்துவிடக் கூடாதா என பல கடவுள்களை வேண்டிக் கொண்டாள். எப்போது தூங்கிப் போனாள் என்று தெரியவில்லை.

காலை. சென்னை. வீடு. கணவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. பயணக் களைப்பு என அவனும் விட்டுவிட்டான். ஒரு காக்கா குளியலோடு க்ளீனிக்கிற்கு விரைந்தாள்.

"டாக்டர் இந்த ப்ளட் சாம்பிளை கொஞ்சம் டெஸ்ட் பண்ணி சொல்றீங்களா?"

"என்னாச்சுமா..யாரோடது இது.."- டாக்டர் வினிதா குழப்பமாக கேட்டார்.

"இப்போதைக்கு எதுவும் கேக்காதீங்க டாக்டர். கொஞ்சம் அன்-அஃபீஷியலா டெஸ்ட் பண்ணுங்க. என் ஹஸ்பண்ட் டி.என்.ஏ கூட மேட்ச் ஆகுதான்னு பாருங்க. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ...எனக்கு ரிசல்ட் வேணும்.."
"சரிமா..நாளைக்கு மதியம் வந்து கலெக்ட் பண்ணிக்க.."

ஒரு தேங்க்யூ கூட சொல்லாமல் வெளியில் எழுந்து சென்றாள்.
கணவனும் மனைவியும், கணவன்-மனைவியாய் வாழ்ந்து முழுதாக 11 நாட்கள் ஆகிவிட்டது. கண்ணன், சுபத்ராவின் தொடுதல் இல்லாமல், அவள் எச்சில் முத்தம் இல்லாமல், அணைப்புகள் இல்லாமல், சில செல்லக் கடிகள் இல்லாமல், அவளின் தலை துவட்டல்கள் இல்லாமல், ஊட்டிவிடுதல் இல்லாமல் ரொம்பவே தவித்துப் போனான். வீட்டில் ஒரு அனல் தகிப்பதை அவனால் உணர முடிந்தது. சுபத்ரா அதே அனலில் வெந்து கொண்டிருந்தாள்.
அடுத்த நாள்...
மதியம்..
க்ளீனிக்..

"மேட்ச் ஆகுதும்மா..ரெண்டு டி.என்.ஏவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது."
எந்த சலனமும் இல்லாமல் உட்கார்ந்திருந்தாள் சுபத்ரா.
"100% மேட்ச் ஆகுதா டாக்டர்.?"
"இல்லம்மா...25% தான். ஆனா ஷ்யூரா.. தேர்ட் ஜெனரேஷன்ல ஒரே குடும்பத்துல இருந்து வந்தது தான்."
டாக்டர் சொன்ன அடுத்த நொடியில் சேரில் இருந்து எழுந்து மிக வேகமாக கதவை அறைந்துவிட்டுச் சென்றாள்.

ஆஃபீஸில் இதைப் பற்றி ரொம்ப நேரம் யோசித்தான் கண்ணன். இந்த இடைவெளியை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்று என்ன ஆனாலும் சரி. சுபத்ராவை சமாதானம் செய்ய வேண்டும். சூழலை சுமுகமாக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு இதழ் முத்தமாவது பெற்றுவிட வேண்டுமென முடிவெடுத்துக் கிளம்பினான்.

மாலை 7 மணி...வீடு...சுபத்ரா..பின்னாலிருந்து கட்டி அணைத்தான்.
ஒரு புழுவை உதறித் தள்ளுவது போல் அவனைத் தள்ளிவிட்டு விலகி நின்றாள்.
"யூ பாஸ்டர்ட்"
"ஹேய்..சுபத்ரா..என்ன பே.."

"பேசாதடா நாயே...நமக்கு ஏன் ஊனமா கரு உருவாகுது..நீ ஏன் ஜெனட்டிக் டெஸ்ட்டுக்கு ஒத்துக்கலை..உன் தாத்தாவ கொன்னது யாரு..ஏன் கொலை நடந்ததுன்னு எல்லா கேள்விக்கும் பதி....."
உடைந்து அழுதாள் சுபத்ரா. கண்ணன் இப்படி ஒரு சூழல் வருமென கனவிலும் நினைத்திருக்கவில்லை.

சுபத்ராவையே பார்த்தான். அவள் கைகளில் மடக்கி வைத்திருந்த அந்த ஃபோட்டோவை தூக்கி அவனிடம் எறிந்தாள். அதில் கண்ணனின் தாத்தா குணசேகரனும், சுபத்ராவின் பாட்டி பார்வதியும் அருகருகில்...ஜோடியாய்...தாலி கட்டிக் கொள்ளாத உறவாய் நின்றிருந்தனர்.!!

"சொல்லு...அன்னைக்கு..நம்ம கல்யாணத்துல என்ன நடந்தது..?"
"சுபத்ரா...ஐ யம் சாரி..."
"சீ..என் பெயரை சொல்லாத.. அன்னைக்கு என்ன நடந்தது. மறைக்காம உண்மைய சொல்லு.."

"நான் எவ்வளவோ கன்வின்ஸ் பண்ணி, நம்ம ரெண்டு வீட்டையும் கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சேன். கல்யாணத்தன்னைக்கு தான் என் தாத்தா, உங்க வீட்டு ஆளுங்கள பாத்தாரு. என்னைத் தனியா கூப்பிட்டு பேசுனாரு. என் தாத்தாவும் உன் பாட்டியும்....."
"சொல்லு...உன் வாயாலேயே..."

"என் தாத்தாக்கும் உன் பாட்டிக்கும் பல வருஷங்களுக்கு முன்னாடி அஃபெயர் இருந்திருக்கு. என் தாத்தா உன் பாட்டியை கல்யாணம் பண்ணிக்கல. இதெல்லாம் என்கிட்ட சொல்லிட்டு, இந்த கல்யாணம் நடக்கக் கூடாது. உறவுமுறைப்படி சுபத்ரா...உன்...சுபத்ரா உன்....."
"கல்யாணம் பண்ணிக்கவே உனக்கு கூசல...இத சொல்றதுல என்ன வெட்கம்...? ம்....சொல்லு.."

"சுபத்ரா உன் தங்கை. இந்த கல்யாணம் நடக்கக் கூடாதுன்னாரு."
இது இருவருக்குமே தெரிந்த உண்மை தான் என்றாலும், இப்போது அவன் சொல்லும்போது, இருவரும் அவ்வளவு வலியை உணர்ந்தனர்.

"தாத்தா அப்படி சொன்னதுக்கு நீ என்ன சொன்ன?"
"நான் அவர்கிட்ட கெஞ்சுனேன். கால்ல விழுந்தேன். இந்த கல்யாணம் நிக்கக் கூடாதுன்னு எவ்வளவோ....."
கண்ணனை ஒரு வினோதப் பிறவியைப் போல் அருவருப்பாய்ப் பார்த்தாள் சுபத்ரா.

"ஒரு கட்டத்துக்கு மேல ரொம்ப உறுதியா, எல்லார்கிட்டயும் சொல்லப் போறேன்னு கிளம்பினார். அவரைத் தடுக்க முயற்சி பண்ணேன். பலாத்காரமா....ரெண்டு பேருக்குள்ள கைகலப்பு மாதிரி நடந்தது. அவரை பிடிச்சு தள்ளினேன். பீரோ மேல இடிச்சு..தலைல அடிபட்டு......
நம்பு சுபத்ரா..நான் வேணும்னு அவரை..."ஆனா..வேணும்னு தான என்னை கல்யாணம் பண்ணிருக்க??"

"சுபத்ரா....."
"சீ...பேசாத..நீயெல்லாம் ஒரு மனுஷனா..தங்கச்சின்னு தெரிஞ்சதுக்கப்புறம் எப்படிதான்......உனக்கு அருவருப்பாவே இல்லையா??"
தன்னை மறந்து வீறிட்டுக் கதறி அழுதாள் சுபத்ரா...அந்த சப்தம் அடங்கவே அதிக நேரமாகியது.
அதுவரை பொறுமையாய், அவளையே தீர்க்கமாய் பார்த்து உட்கார்ந்திருந்தான் கண்ணன்.

சிறிது நேரம் கழித்து நிதானமாக எழுந்து முகம் கழுவிக் கொண்டு சுபத்ரா அருகில் சென்று மெல்ல அவளைத் தொட்டான். கால்களைக் கட்டிக் கொண்டு, முகத்தைப் புதைத்து அழுது கொண்டிருந்தவள், மெல்ல நிமிர்ந்து கண்ணனைப் பார்த்தாள்.

"இதுக்கு என்ன பதில் வச்சிருக்கீங்க?"
"ஓரே பதில் தான் சுபத்ரா. ஐ லவ் யூ..."
"அய்யோ...தயவுசெஞ்சு அந்த வார்த்தைய சொல்லாதீங்க..."
"கொஞ்சம் நான் பேசுறத பொறுமையா கேளு.."

"காதல்ங்கற ஒரு காரணம் தான் சுபத்ரா...உன்னை நான் அவ்வளவு காதலிச்சேன். இத நான் நியாயப்படுத்திக்க விரும்பல. ஆனா, என் மனசுல தோணுற விஷயங்களை சொல்றேன். கொஞ்சம் பொறுமையா கேளு...
"உன்னை முதல் தடவை லைப்ரரில வச்சு பாக்கும்போது நீ தான் எனக்கானவன்னு தோணுச்சு. இந்த பொண்ணு வாழக்கைல மனைவிங்கற உறவுல உள்ள வந்து உனக்கு திகட்டத் திகட்ட காதலை குடுக்கப் போறான்னு மனசு சொல்லுச்சு. அப்போ தெரியாது, நாம ஒரே குடும்பத்தை சேந்தவங்கன்னு. மனசு, உண்மையா ஆசைப்பட்டிருக்கு.
ஒரு மாசம் உன் பின்னாடி சுத்தி, ஒரு வழியா முதல் தடவை உங்கிட்ட பேச வரும்போது, உன் கண்ல நான் அந்த காதலைப் பார்த்தேன். அந்த காதலுக்குத் தெரியாது, நம்ம குடும்பப் பின்னணி. அதனால அது உண்மையான காதலா இருந்துச்சு. ரெண்டு பேரும் ப்ரொப்போஸ் பண்ணிக்கிட்ட அந்த கோவில் நினைவிருக்கா.? கடவுள் சாட்சியா நாம பரிமாறிக்கிட்ட காதலுக்குத் தெரியாது நாம இன்ன உறவுன்னு. கடவுளே இதை புனிதமா தான் பாத்திருக்காரு. ஏன்னா, நம்ம மனசுக்கு நாம உண்மையான காதலர்களா மட்டும் தான் இருந்தோம். என் பிறந்தநாளன்னைக்கு எனக்குக் குடுத்த முதல் முத்தத்தோட எச்சில் இன்னும் என் கன்னத்துலயே தான் இருக்கு. அந்த எச்சில் சூட்டுக்குத் தெரியாது நீ என்....நீ...என்..."
ஒரு நிமிடம் இடைவெளி விட்டு அழுதான். சுபத்ராவும் ஒரு வார்த்தை பேசவில்லை. பின் அவனே தொடர்ந்தான்.

"நம்ம காதலை வீட்ல ஒத்துக்க வைக்க எவ்வளவு முயற்சி பண்ணோம்னு உனக்கே தெரியும். கடைசி நேரத்துல என் தாத்தா வந்து அப்படி சொன்னதும் எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. எனக்கு தங்கை உறவாகுற ஒரு பெண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேனேன்னு, அடி வயத்துல அப்படி ஒரு கலக்கம். ஆனா, உன் மேல உள்ள காதல் என்னை அதைத் தாண்டி யோசிக்க விடலை. நான் ஒண்ணும் என் தங்கையை காதலிக்கல. நான் காதலிச்ச பொண்ணு எனக்கு தங்கையா அமைஞ்சிட்டா. அவ்வளவு தான். இந்த ரகசியம் தெரிஞ்ச தாத்தாவும் என் கவனக் குறைவால இறந்துட்டாரு. இனி சாகுற வரைக்கும் இந்த விஷயம் என்னைத் தவிர யாருக்கும் தெரியப் போறதில்லைன்னு நினைச்சு தான் கல்யாணத்துக்கு தயாரானேன். இதுல இவ்வளவு சுயநல காரணங்கள் சொன்னாலும், உன் நல்லதுக்காகவும் ஒரு விஷயம் யோசிச்சு தான் இதை மறைச்சிட்டேன்.."

என்ன என்பது போல் பார்த்தாள் சுபத்ரா.

"நான் தான் கல்யாணத்தை நிறுத்தியாகணும். என்ன சொல்லி நிறுத்த? 500 பேருக்கும் மேல் கூடியிருக்கிற சபைல, என் தாத்தாவும், உன் பாட்டிக்கும் உறவு. அதனால, இவ எனக்கு தங்கச்சியாகணும். இந்த கல்யாணத்தை நான் நிறுத்திக்கிறேன்னு சொல்லச் சொல்றியா? ஊர் காரி துப்பாதா? இந்த நிலைல, கல்யாணம் நின்னு போனா அப்புறம் உனக்கு......ஐ மீன்........"
"சொல்லுங்க சும்மா...தரங்கெட்ட குடும்பத்துல பிறந்துட்டு உன் கல்யாணம் நின்னு போனா, அதுக்கப்புறம் உன்ன எவன் கட்டிப்பான்னு யோசிச்சு எனக்கு வாழ்க்கை குடுத்தீங்களா...?"

"நான் அப்படி மீன் பண்ணல...."
"பிச்சை போட்டீங்களா கண்ணன்...?"
"அய்யோ...ஏன்மா இப்படி பேசுற?? அவள் கையைப் பிடிக்கப் போனான்...
"தொடாதீங்க கண்ணன் ப்ளீஸ்......
நானும் உங்களை லவ் பண்ணேன் ஒத்துக்கிறேன். இந்த உலகத்துல எல்லாத்துக்கும் முன்னாடி, எனக்கு நீதான்னு தெரிஞ்சீங்க...ஆனா இந்த விஷயம் தெரிஞ்சதுக்கப்புறம் எப்படி சேந்து வாழ முடியும் உங்ககூட..?"

"எல்லாம் மனசு தான்மா..எப்பவோ 60,70 வருஷத்துக்கு முன்னாடி அவங்க பண்ணின தப்புக்கு நம்ம காதல் பலியாகணுமா..? எல்லாத்தையும் ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடு. ஒரு புது வாழ்க்கைய ஆரம்பிக்கலாம்.."
"புது வாழ்க்கையா..? முடமா கரு உண்டாச்சே மூணு குழந்தைங்க...அதுல ஒண்ணு பிறந்து வளந்தா நம்மள எப்படி கூப்பிடும்?? அம்மா..மாமான்னா...இல்லை..அப்பா,அத்தைன்னா??"

"விரசமா பேசாத சுபத்ரா..இதை விரசமாவே எடுத்துக்காத....அந்த தாத்தா-பாட்டி வாழ்க்கைய மறந்துடு. நாம நமக்காக வாழலாம்.."
"இல்ல..இந்த விஷயத்தோட உணர்வு உங்களுக்குப் புரியல..இது தெரிஞ்சதுக்கப்புறம் எப்படி நான் உங்க கூட தாம்பத்யம் வச்சுக்க முடியும்.. எவ்வளவு அருவருப்பான விஷயம் அது..."?

"ஐ டோன்ட் வான்ட் டூ மிஸ் யூ சுபத்ரா..."
"ஐ டூ லவ் யூ கண்ணன், ஆனா, இனிமே இது கணவன் மனைவியா தொடரக் கூடாது. நாம் பிரிஞ்சுடலாம். தயவுசெஞ்சு புரிஞ்சுக்கோங்க..."
"வேணாம்மா..என்னை விட்டு போயிடாத.."
விடுக்கென அங்கிருந்து எழுந்தாள் சுபத்ரா...அவள் காலைக் கட்டிக்கொண்டு அவளை போகவிடாதவாறு தடுத்தான் கண்ணன். அவனை தரையில் இழுத்துக்கொண்டே அவள் அறைக்குச் சென்றாள். அவனை உதறித் தள்ளி விட்டு கதவைச் சாத்தினாள்.
இருவரும் அன்றிரவு சிந்திய கண்ணீருக்கு அந்த கடவுளிடமும் பதிலிருப்பதாகத் தெரியவில்லை.
இரவு 12.30 மணிக்கே அந்த வீட்டில் அமைதி ஆரம்பமாகியது.

இரவு எப்போது தூங்கிப்போனான் என்றே தெரியவில்லை. காலையில் கொஞ்சம் நேரம் கழித்து எழுந்து வந்தான்.
பின்னாலிருந்து எதிர்பாராதவாறு கட்டி அணைத்தாள் சுபத்ரா...கண்ணன் திரும்பினான். இருவரும் மெதுவாக...மிக மெதுவாக இதழ் முத்தத்தை பறிமாறிக்கொண்டனர். அந்த முத்தம் இனிக்கவில்லை. கண்ணீரில் கரைந்தது எச்சில்.
முத்தத்திற்கு பின் மெதுவாக....
"சுப.........
"நீ எதுவும் சொல்லாத.."
என அவன் முன் நீட்டினாள் விவாகரத்து பத்திரம்.
அதை சலனமில்லாமல பார்த்தான் கண்ணன்.
அவன் கையெழுத்துப் போட வேண்டிய இடத்தில், இருவரின் கண்ணீர் துளியும் விழுந்தது.____முற்றும்____

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.