சுற்றிலும் பரபரப்பு நிறைந்த அலுவலகத்தில் ஒரு சுட்டிப்பையனின் சுறுசுறுப்பில் கீபோர்டில் இயங்கிக் கொண்டிருந்தது ஆராதனாவின் விரல்கள். அவள் கவனம் முழுதும் அதன் மீது இருந்த காரணத்தினால் அவளுடைய மேனேஜர் மூன்று முறை அழைத்தும் சட்டை செய்யாமல் மானிட்டருடனே உரையாடிக் கொண்டிருந்தாள். அருகில் வந்து டேபிளை தட்டினார் மேனேஜர் விக்ரம்.


"ஆராதனா... என்ன நா பாட்டுக்கு கூப்டுகிட்டே இருக்கேன்.... நீ பாட்டுக்கு வேல பாத்துட்டே இருக்க..?" என்றார் தனக்கே உரிதான தலைமையாசிரியரின் கண்டிப்புடன்.


மூக்கின் மீது நழுவி வந்த கண்ணாடியை சரி செய்து கொண்டே திரும்பினாள். "விக்ரம்... என்னோட ப்ரோக்ராம் ஏதோ தப்பா வேல செய்யுது... அதுல யோசிச்சுட்டு இருந்தேன்.. சொல்லுங்க..." என்றாள் செயற்கையாக ஓர் சிரிப்பை முகத்தில் நுழைத்துக் கொண்டு.


"இந்த வேலைய நாளைக்கு பண்ணிக்கலாம்... இன்னொரு டாஸ்க் வந்துருக்கு.. அத எப்டியாவது இன்னைக்கே முடிச்சாகணும்.."


"கணேஷ் ஒரு மெயில் போட்ருந்தாரே அந்த டாஸ்கா ?" என்றாள் ஒட்டிக் கொண்டிருந்த புன்னகையும் ஓடிப் போன முகத்தோடு ஆராதனா.


"ஆமா... அதே தான்.. க்ளையன்ட் இன்னைக்கே கேக்கறாங்க..."


"விக்ரம்... அது முடிக்க எப்டியும் மூணு மணி நேரமாவது ஆகும்... இப்பவே மணி 5.30 க்கு மேல ஆயிருச்சு..."


"புரியுது... ஆனா நமக்கு வேற வழி இல்ல... அந்த டாஸ்க்ல உங்கள தவிர வேற யாருக்கும் ஐடியா இல்ல.. எவ்ளோ நேரம் ஆனாலும் நீங்க முடிச்சுட்டு தான் போகணும்.."


"நாளைக்குனா இன்னும் கொஞ்சம் ரிலாக்ஸ்டா முடிக்கலாமே..."


"இன்னைக்கு முடிச்சு குடுக்கலேன்னா ப்ராஜெக்ட் நம்ம கைய விட்டு போயிரும்" என்று கடுப்பான தோரணையோடு கூறினார் விக்ரம்.


அதற்குப் பிறகு ஆராதனாவின் வார்த்தைகள் எதுவும் அவர் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. அவளும் கொஞ்ச நேரம் புரிய முயற்சித்து அடைந்த தோல்வியில் கெஞ்ச மனமில்லாமல் முடிந்த வரை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அவர் சொன்ன வேலையைத் துவங்கியிருந்தாள்.


முன்னர் இருந்த சுறுசுறுப்பைக் காட்டிலும் வேகமாய் இயந்திரத்தனமாய் இயங்கிக் கொண்டிருந்தாள்.


கடிகாரத்தில் மணி 6 என்று அடிப்பதற்கும், அவள் வலியில் வயிற்றைப் பிடிப்பதற்கும் சரியாயிருந்தது. சுளீரென்று அவளுக்கு அடிவயிற்றில் இழுத்தது. அவசரமாக தன் கைப்பையை எடுத்துக் கொண்டு ஓய்வறையை ஓடியும் நடந்தும் அடைந்தாள். அங்கிருந்த கழிவறைக்கு சென்று தான் யூகித்திருந்தது சரி தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டாள். ஆம், அவளுக்கு 'அந்த' மூன்று நாட்களுக்கான துவக்கம் தான் அந்த வலி.


தன்னை சுத்தம் செய்து கொண்டு கைப்பையை எடுத்தவளுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அவள் எப்போதும் வைத்திருக்கும் நாப்கினைக் காணவில்லை. அவளுக்கு எப்போதும் வருவதை விட மாதவிடாய் மூன்று நாட்கள் முன்னரே வந்ததும், அதற்கு இரண்டு நாட்கள் முன்னர் தன் தோழிக்காக நாப்கினை தந்ததும் தான் அவளை இப்படியொரு சங்கடத்தில் தள்ளியிருந்தது என்று அவளுக்குப் புரிந்தது.


'நல்ல வேல இன்னைக்கு மெரூன் கலர் பேன்ட்... எப்டியும் வீடு போற வரைக்கும் சமாளிச்சர்லாம்... ஆனா வீட்டுக்கு இப்பவே கிளம்பணுமே... சரி, போய் மேனேஜர் கிட்ட கேட்டு பாப்போம்...' என்று ஒரு வித நம்பிக்கையுடன் சென்றவளுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.


உடம்பு சரியில்லை, வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கேட்டவளை உச்சக்கட்ட கோபத்தில் தாளிக்க ஆரம்பித்தார் விக்ரம்.


"அது எப்படி ஒரு கமிட்மென்ட் குடுத்ததுக்கு அப்புறம் உங்களால பொய் சொல்லிட்டு வீட்டுக்கு போக மனசு வருது... இதுக்கு நீங்க அப்பவே முடியாதுன்னு சொல்லிருக்கலாமே... இப்ப எல்லாம் பிளான் படி போகுதுனு மத்த எல்லார்த்தையும் வீட்டுக்கு போக சொல்லிட்டேன்... என்ன செய்ய ?"


'நான் தான் முடியாதுன்னு அப்பவே சொன்னேன்ல' என்று அவரிடம் சண்டையிட நினைத்தால், ஆனால் மனதும் உடலும் அவ்வளவு தெம்பாக இல்லை.


"சரி, எப்படியாவது முடிச்சுத் தந்துட்டு போறேன்" என்று கடுகடுத்த முகத்துடன் சொல்லிவிட்டு இடத்திற்கு வந்தாள்.


மணி 6:35 ஆகியிருந்தது. ஒவ்வொருவராகக் கிளம்ப ஆரம்பித்திருந்தனர். அப்படியே தன் சீட்டில் உட்கார்ந்து மென்மேலும் சங்கடங்களை வரவழைத்துக் கொள்ள அவள் மனம் ஒப்பவில்லை. பெண்களின் ரத்தக் கறை பற்றிக் காது கூசும் அளவுக்கு விமர்சனங்களை அவள் கேட்டிருக்கிறாள். அசுத்தம் என்பதையும் தாண்டி பல அபத்தங்களையும் சுமந்து கொண்டிருந்தது அந்த ரத்த கறை. அதை எண்ணிப் பல முறை மனம் வெதும்பியிருக்கிறாள். இம்முறை அவ்வாறாக எந்தச் சொல்லுடனும் போரிட விரும்பாமல், தன் லஞ்ச் பேக்கில் இருந்த ஒரு கருப்பு கலர் துணியை எடுத்து நான்காக மடித்து சீட்டின் மீது போட்டு உட்கார்ந்து கொண்டாள்.


மனதில் கலவரமான எண்ணங்களுடனும் உடலில் கலக்கமான வலிகளுடனும் தன் வேலையை முடிக்க ஆராதனா போராடிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது தான் உட்கார்ந்திருக்கும் சீட்டில் ரத்தம் பட்டிருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக் கொண்டாள்.


அவள் வேலையை முடிக்கும்போது மணி சரியாக 9:30 ஆகியிருந்தது. தன் சீட்டில் எதுவும் ஆகவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட மன நிம்மதியில் தான் உட்கார்ந்திருந்த துணியை ஒரு கவரில் கட்டி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு வீட்டிற்குக் கிளம்பினாள்.


பேருந்திற்குக் காத்திருக்கும் போதே அவளுக்குள் ஒரு வித படபடப்பு துவங்கியிருந்தது. பேருந்தில் எந்த விதமான தர்மசங்கடமும் நிகழ்ந்து விடக் கூடாதென்பதே அவள் எண்ணமாக இருந்தது. அதற்காக அவள் வேண்டாத தெய்வங்கள் இல்லை. 20 நிமிட பயணத்திற்கு அவள் அவ்வளவு யோசிப்பது அதுவே முதல்முறை.


5 நிமிட காத்திருப்பிற்கு பின், பேருந்து வந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சீட்டில் சௌகரியமாக உட்காரும் அளவிற்கு 15 பேரைச் சுமந்து கொண்டு வந்து நின்றது பேருந்து. ஆராதனா யாரும் இல்லாத சீட்டிற்கு அருகில் ஒரு கம்பியில் சாய்ந்தும் சாயாமலும் நின்று கொண்டாள். எப்படியும் உட்கார்ந்து விடப் போவதில்லை என்பதில் தெளிவாய் இருந்தாள். தொந்தரவு நடத்துநர் ரூபத்தில் வந்தது.


"எங்கம்மா போகணும் ?"


"மீனாட்சி நகர் ஒன்னு குடுங்க..."


"மீனாட்சி நகர் தானே... உட்காருங்க எடம் தான் இருக்குதுல..." என்றார் நடத்துநர் டிக்கெட்டை கிழித்து கொடுத்துக் கொண்டே.


"இல்லைங்க... பரவாயில்ல... நா நின்னுக்கறேன்.."


"அட... என்னம்மா நீ... உங்கள மாறி பொண்ணுங்க பகல்ல கூட்டமா இருக்கும்போது, பசங்க உக்காந்திருந்தாலும் எழுப்பி விட்டுட்டு உக்கார வேண்டியது... யாரும் இல்லாதப்ப நின்னுக்க வேண்டியது... ஏன் தான் இப்டி இருக்கிங்களோ..." என்று தன் மனதில் இருந்ததைக் கொட்ட ஆரம்பித்தார் நடத்துநர்.


அவளையே அறியாமல் கோபம் அவள் தலைக்கு மேல் ஏறியது.


"வேண்டாம்னா விடுங்களேன்... ஏன் தேவ இல்லாம பேசிட்டிருக்கீங்க... இப்படி எல்லாம் பேசறதால தான் பொண்ணுங்க நாங்க பசங்கள உக்கார விடறதில்ல... இந்த புத்தி தானே எல்லாருக்கும் இருக்கும்..."


உண்மையில் இவ்வாறான கருத்துகளுக்கு எப்போதும் ஆராதனா உடன்பட்டதில்லை. ஆண் - பெண் சமம் என்பதே அவளது கோட்பாடு. ஆனால் கோபம் அவளை அப்படி எல்லாம் நடந்துகொள்ள விடவில்லை. அதன் பிடியில் வைத்து அவளை ஆட்டியது.


"நீங்க எல்லாம் சொல்லி எங்க தான் கேக்க போறீங்க... இப்படி இருக்கற உங்க பின்னாடி பசங்க சுத்துற வரைக்கும் நீங்க இப்டியே தான் இருப்பீங்க..." என்று சொல்லிக் கொண்டே பேருந்தின் பின்புறம் சென்றார் நடத்துநர்.


அவரை மீண்டும் பிடித்து திட்டி விட ஆராதனாவின் உதடுகள் துடித்தன. அவர் இனிமேல் பேசவே முடியாத படி அவரைப் பிடித்து கடித்து விடு என்று கோபம் அவளுக்கு ஆணையிட்டது. அந்தக் கட்டளையை நிறைவேற்ற முனைந்தவளுக்கு முட்டுக்கட்டையாகக் கைப்பேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தாள். அவள் அம்மா.


"ஹலோ..."


"ஹலோ... எங்க டி இருக்க ? இவ்ளோ லேட் ஆயிருச்சு?"


"வந்துட்ருக்கேன் மா... இன்னொரு 10 நிமிஷம்... வீட்ல இருப்பேன்..."


"ஆபீஸ்ல லேட் ஆயிருச்சா ? "


"ம்ம்ம்..."


"சரி... வா... தோச சுட்டு வெச்சுருக்கேன்..."


"ம்மா..."


"சொல்லு டி..."


"துணி எடுத்து வை... வந்த உடனே குளிக்கணும்..."


"இன்னைக்கேவா... இன்னும் உனக்கு டைம் இருக்கே டி? " என்று உடனே புரிந்து கொண்டு தன் சந்தேகத்தை எழுப்பினார் அவள் அம்மா.


"அதெல்லாம் தெரியல மா... நீ துணிய மட்டும் எடுத்து போடு நா வந்த உடனே குளிச்சுக்கறேன்..." என்றாள் பதில் சொல்ல விரும்பாத தொனியில்.


"சரி... வா..." என்று அம்மாவும் இணைப்பைத் துண்டித்தார்.


அதே சமயம், ஆராதனாவிற்கு அருகில் ஓர் சீட்டில் இருவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.


"இந்த காலத்து பொண்ணுங்க யார் சொல்றதையும் கேக்கக் கூடாதுன்னு இருக்காங்க பாருங்க... இப்டி இருந்தா இவங்கள கல்யாணம் பண்றவங்க தான் பாவம்.."


தன்னை தான் சுட்டிக்காட்டிப் பேசுகிறார்கள் என்று புரிந்தும், அவர்களுடன் மல்லுக் கட்ட மனமில்லாமல் தன் சிந்தனைகளை வேறு ஏதோ உலகிற்குப் பயணிக்க விட்டாள்.


தன் நிறுத்தம் வந்தவுடன் நடத்துநரை முறைத்துக் கொண்டே இறங்கி அவள் வீட்டை நோக்கி நடந்தாள். அம்மா வீட்டிற்கு வெளியில் இருந்த லைட்டை போட்டு, அங்கேயே காத்திருந்தார்.


"வா டி... வெளிய இருக்கற பாத்ரூம்ல துணி எடுத்துப் போட்ருக்கேன்... குளிச்சுட்டு உள்ள வா..."


"மா... வெளிய இருக்கற பாத்ரூம்ல ஹீட்டர் வேல செய்யறது இல்லையே... உள்ளயே குளிச்சுக்கறேன்..."


"அதுக்குனு வீட்டுக்குள்ள அப்படியே வந்துட்டு இருப்பியா... யார் சுத்தம் பண்றது ? இதுக்கே மாசத்துக்கு உனக்கு ஒரு தடவ, எனக்கு ஒரு தடவ, அமாவாசை, பௌர்ணமினு 10 தடவ சுத்தம் பண்ண வேண்டியது இருக்கு..."


"உன்ன யாரு சுத்தம் பண்ண சொன்னா ? நான் பண்ணிக்கறேன்.... அதுவும் எப்படியும் மூணு நாள் கழிச்சு சுத்தம் பண்றது தானே... " என்றாள் இன்னும் சில படிகள் உயர்ந்த கடுப்புடன். சோர்வும் வலியும் ஒரு சேர ஆக்கிரமித்திருந்த அவளுக்கு, அம்மாவின் செய்கை எரியும் நெருப்பில் ஊற்றிய எண்ணெய்யாகத் தான் இருந்தது.


"அது வேற ,இது வேற... உனக்கு அதெல்லாம் புரியாது... வேணும்னா கொஞ்ச நேரம் நில்லு... சுடு தண்ணி வெச்சு கொண்டு வர்றேன்..."


"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... இத கொண்டு போய் உள்ள வை..." என்று கைப்பையை வாசற்படியில் வைத்துவிட்டு கிடுகிடுவென்று திரும்பிப் பார்க்காமல் குளியலறையை நோக்கிச் சென்றாள். திடீரென அம்மா நாப்கின் எடுத்து வைத்திருப்பாளா என்றொரு சந்தேகம் எழுந்தது. அதைக் கேட்டு விடலாம் என்று திரும்பி வந்தவளுக்கு ஆத்திரம் எரிமலையாகக் குமுறியது. அம்மா அவளது கைப்பைக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். உள்ளே எடுத்துச் செல்லும் முன்பு எப்போதும் செய்வது தான். ஆனால், இன்று அவளுக்கு அதென்னவோ மிகவும் உறுத்தியது.


பல்லைக் கடித்துக்கொண்டு அம்மாவிடம் "நாப்கின் எடுத்து வெச்சியா ?" என்றாள்.


"ம்ம்ம்ம்... உள்ள ஷெல்ப்ல கவர்ல சுத்தி வெச்சுருக்கேன்..."


எதுவும் சொல்லாமல் சென்று குளியலறை கதவை 'டம்' என்று சாத்திக் கொண்டாள். வெந்நீர் கிடைக்காத விரக்தியும் சுட்டெரிக்கும் சுற்றுப்புறத்தாரின் செய்கைகளும் அவளை எரித்துக் கொண்டிருந்தது. ஆடையைக் கழற்றிவிட்டு நடுங்கிக்கொண்டே குழாயைத் திருகினாள், நீருடன் சேர்ந்து அவளது நினைவுகளும் ஓட ஆரம்பித்தன.


அப்படியே உள்ளே சென்றால் என்ன ? என்ன ஆகி விடப் போகிறது ? எதனால் அம்மா இதில் இவ்வளவு சுத்தம் பார்க்கிறாள்? என்ற பல கேள்விகள் அவளைச் சூழ்ந்தன. அதற்குப் பதிலாய் முன்னர் அம்மாவுடன் நிகழ்ந்த உரையாடல் ஒன்று நினைவுக்கு வந்தது.


ஆராதனா பருவமடைந்த சில பல வருடங்களுக்குப் பிறகு நிகழ்ந்த உரையாடல் அது.


"ம்மா... எதுக்கு நம்ம குளிச்சுட்டு உள்ள வரணும் பீரியட்ஸ் டைம்ல? யார் இப்படி எல்லாம் பண்ணனும்னு சொன்னது?"


"பெரியவங்க எல்லாம் சொன்னது தான்... அந்த டைம்ல நமக்கு தீட்டு... நம்ம மேல இருக்கற தீட்டு வேற யாரையும் பாதிச்சற கூடாதுன்னு தான் சுத்தமா இருக்கணும்... இல்லைனா வீட்டுக்கு ஆகாது... எல்லாரும் பொலங்கற எதையும் நாம யூஸ் பண்ணக்கூடாது சரியா ?"


"அந்த காலத்துல எல்லாரும் குளிக்க ஒரே இடம் தான் இருந்துது.... அதுவும் ஆறு தான்.... அதுல நம்ம ரத்தம் கலந்து கிருமிகள் பரவக் கூடாதுனு தான் அப்படி சொல்லிருக்காங்க... இப்ப தான் நாப்கின் அது இதுன்னு சுத்தமா இருக்க நெறைய வந்துருச்சே... அப்புறம் எதுக்கு இதெல்லாம்... " என்றாள் ஆராதனா தன் பகுத்தறிவை வெளிக்காட்டும் விதமாக.


"இப்படியெல்லாம் யார் உனக்கு சொல்றது... சில சடங்கெல்லாம் பெரியவங்க சொல்றபடி தான் செய்யணும்.. என்ன தான் சொன்னாலும் நம்ம மன திருப்தினு ஒன்னு இருக்குல.. அது இதுல தான் கிடைக்கும்... நம்ம தீட்டுனால வீட்ல இருக்கறவங்களுக்கு ஏதாவதுன்னா என்ன பண்றது..."


"நான் படிச்சது தான் மா... மாசாமாசம் நடக்கற இயற்கை தானே இது... தூக்கம் பசி மாதிரி இதுவும் ஏன் இருந்துட்டு போகக்கூடாது..."


"ஆனா இது எல்லார்க்கும் வர்றது இல்லையே...."


"பொண்ணுங்களுக்கு மட்டும் இதென்ன சாபமா, இல்ல பொண்ணுங்களே சாபமா?"


"இப்படியெல்லாம் பேசி என்கிட்ட நல்லா வாங்கிக் கட்டிக்காத... என்ன பேசிப் பழகற நீ ? ஒழுங்கா தூங்கு..." என்று கூறி வாயடைத்த பின், என்றும் ஆராதனா இதைப் பற்றி வாயைத் திறக்கவில்லை.


இன்றும் அப்படியே குளித்து விட்டு வீட்டிற்குள் வந்தாள். களைப்பு முழுதுமாக அவளை குடிகொண்டிருந்தது. ஹாலில் அப்படியே ஒரு சேரில் அமர்ந்தாள்.


அதைப் பார்த்தவுடன் அவள் அம்மா "ஏய்... அதுல ஏன் உக்காந்த? கீழ உனக்கு பெட்ஷீட் விரிச்சு விட்ருக்கேன் பாரு...." என்று அவளைக் கீழே பிடித்துத் தள்ளும் தொனியில் கூறினார்.


அவளும் முறைத்துக் கொண்டே கீழே இறங்கி அமர்ந்தாள். கண்களை மூடிய படி லேசாக சுவரில் சாய்ந்தாள்.


5 நிமிடம். கண்கள் சொருகிக் கொண்டிருக்கும் சமயத்தில் "இப்ப தான் வந்தியா மா ?" என்று அவள் அப்பா லுங்கியை ஏற்றிக் கட்டிக்கொண்டு பெட்ரூமிலிருந்து பாதித் தூக்கத்தில் வெளியில் வந்தார்.


"ஆமா பா... லேட் ஆயிருச்சு இன்னைக்கு..." என்றாள் கண்களைத் திறக்க முடியாமல் திறந்து.


அவளிடம் பேசிக்கொண்டே சேரில் அமரச் சென்றவரை தடுத்து "அந்த சேர்ல உக்காருங்க..." என்று இடம் மாற்றிவிட்டு, அவர் உட்காரப் போன சேரை வெளியில் எடுத்துக் கொண்டு போனார் அம்மா. அப்போது அவரது விழிகள் பலவாறாக ஆராதனாவை திட்டியது.


அப்பாவுடன் பேசிக்கொண்டே தனது அரை வயிறு சிற்றுண்டியை முடித்தாள் ஆராதனா.


ஹாலில் படுத்தவாறே தன் கைப்பேசியை நோண்டினாள். அர்ஜுன் மெசேஜ் அனுப்பியிருந்தான். சிறிது நேரம், அவனிடம் பேசலாம் என எண்ணினாள்.


ஆனால், பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே அவனுக்கு தெரிந்து விட்டது ஆராதனா சகஜமான மனநிலையில் இல்லை என்று.


உண்மையான அக்கறையுடன் அர்ஜுன் கேட்டான் "ஏன் டல்லா இருக்க? பீரியட்ஸா ?"


ஆராதனாவிற்கு ஆத்திரம் பீறிக்கொண்டு வந்தது. சம்மந்தமே இல்லாமல் அவனைப் பிடித்துத் திட்ட ஆரம்பித்தாள்.


"பீரியட்ஸ் னா அவ்வளவு ஏளக்காரமா போச்சா? ஒரு பொண்ணு அத பத்தி ஒரு தடவ உங்ககிட்ட சொல்லிட்டா அதையே புடிச்சுக்குவிங்களே... பசங்க எல்லாருமே சந்தர்ப்பவாதிங்க தான்... இந்த மாதிரி எதாவது ஒரு சந்தர்ப்பத்துக்கு எப்பவுமே காத்துகிட்டு இருப்பிங்க... ஒரு பொண்ணுகிட்ட இப்படி பேச கூசல ? " என்று பட படவென வெடித்துத் தள்ளினாள்.


அர்ஜுன் பேச வேறு வழியின்றி மன்னிப்புக் கேட்டு குற்ற உணர்வுடன் உறங்கிப் போனான். ஆராதனா மனதும் உடலும் நசுங்கிப் போன உணர்வுடன் உறக்கம் வராமல் உருள ஆரம்பித்தாள்.


உடல் உபாதைகளும் மன உபாதைகளும் நிறைந்த மூன்று நாட்களுக்குப் பிறகு,


ஹாலில் துணியைப் போட்டுத் துடைத்துக் கொண்டிருந்தாள். டிவியில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது "சானிட்டரி நாப்கின்களுக்கு 12 % ஜி எஸ் டி " என்று.


அதைப் பார்த்த உடன் அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. 'இதெல்லாம் என்ன போட்டு என்ன ஆகப்போகுது, எப்டி பாத்தாலும் தீட்டு தான்... நா போய் என் தீட்ட கழிக்கப் போறேன் பா' என்று சிரித்தவாறு குளிக்கச் சென்றுவிட்டாள்.


மற்றவர்கள் மனதில் இருந்த தீட்டு கழிக்க முடியா கல்லாகியிருந்தது.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.