பிஞ்சிலே பதிக்க வேண்டும்

பாவலர் கருமலைத்தமிழாழன்

விடியலினைக் காண்பதற்குப் பெண்கள் அஞ்சி

வீட்டிற்குள் இன்னுமிங்கே முடங்கி யுள்ளார்

கடிவாளம் ஆண்களிடம் தந்து விட்டுக்

கட்டுகளே இன்பமென்று மூழ்கி யுள்ளார்

படிதாண்டிக் கால்களினை வைப்ப தற்கும்

பக்கதுணை வேண்டுமெனத் தேடு கின்றார்

அடிமைகுணம் பெண்களுக்குப் பெண்க ளேதம்

அடிமனத்துள் விதைத்துநீரை ஊற்று கின்றார் !

கதிரவன்தான் விழிக்குமுன்னே பெண்கு ழந்தை

கண்விழிக்கக் கற்பிக்கும் அன்னை யர்கள்

கதிரொளிதான் முகம்மீது விழுந்த போதும்

கணிவிழிக்கா ஆண்மகனைக் கேட்ப தில்லை

குதிர்போல வளர்ந்துள்ளாய் என்றே ஏசிக்

கூட்டிவாசல் கோலமிடப் பயிற்றும் தாயோ

மதியில்லா மகனையுமே வீட்டு வேலை

மருந்துக்கும் செய்வதற்கோ விடுவ தில்லை !

அடுக்களையில் காய்நறுக்க சமையல் செய்ய

அழுக்குதுணி வெளுப்பதற்கும் நீரெ டுக்க

இடுப்பினிலே குடம்வைக்கப் பழக வைத்தே

இறைப்பதற்கும் தெருக்குழாயில் அடிப்ப தற்கும்

குடும்பத்துப் பழக்கங்கள் அறிய வைத்தும்

குனிந்ததலை பண்பென்றே ஊட்டும் அம்மா

கடுகளவும் மகனுக்குப் பொறுப்பு ணர்த்தும்

கடமையினைச் செய்யாமல் பொழிவாள் அன்பை !

மகனுக்கு உணவுதனைப் படைப்ப தற்கு

மகளையே ஏவிடுவாள் ; உண்ட பின்பு

மகனுண்ட தட்டுதனைக் கழுவு தற்கும்

மகளுக்கே சொல்லிடுவாள் செய்ய வைப்பாள்

தகவுடனே பள்ளிசெல்லும் பருவம் தன்னில்

தன்மகனை அழகுசெய்து அனுப்பும் தாயோ

மகளுக்குத் தானேதும் செய்தி டாமல்

மகளையே செய்யவைத்து அனுப்பி வைப்பாள் !

பள்ளிவிட்டு வந்தபின்பு விளையாட் டிற்குப்

பாசமுடன் தன்மகனை அனுப்பும் அன்னை

துள்ளிவரும் மகளைமட்டும் வீட்டிற் குள்ளே

துடிப்படங்க விதித்திடுவாள் கட்டுப் பாட்டை

உள்ளத்தில் எப்பொழுதும் மகளின் மேலாய்

உயர்வாக வைத்துஆணை வளர்ப்ப தாலே

கள்ளமில்லா ஆண்மகனின் நெஞ்சிற் குள்ளே

கலக்கிறது தானுயர்வு என்னும் நஞ்சு !

பிஞ்சுமுதல் ஆண்பெண்ணை உயர்வு தாழ்வில்

பிரித்துவைத்து வேறுபாட்டில் வளர வைத்து

வஞ்சியினைச் சமமாக மதிப்ப தற்கு

வளர்ந்தபின்பு அறிவுரைகள் கூறு கின்றோம்

நெஞ்சினிலே ஆண்பெண்ணும் ஒன்றே என்னும்

நெறியான சமத்துவத்தைக் குழந்தை தொட்டே

கொஞ்சுகின்ற தாய்அன்பால் பதித்து விட்டால்

கொடிகொம்பாய் இணைந்தொன்றாய் வளர்வார் அன்றோ !

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.