மன்னிக்க முடியாதவை

 

"டேய் பெரிய மனுஷா வா வா... இப்போ தான் வழி தெரிஞ்சுதா... எவ்வளவு நாள் ஆச்சு நீ வீட்டுக்கு வந்து..ஏண்டா வேலைக்கு மெட்ராஸ்  போய்ட்டா எங்களை எல்லாம் மறந்திடுவியா... லீவ்ல ஊருக்கு வந்தா கூட பாக்க முடியறது இல்ல..." ஜெயா அக்கா உற்சாகமாய் என்னை வரவேற்றாள்... ஆனால் எப்பவும் போல இல்லாம நறுக்குன்னு  அவகிட்ட ஏதோ கேக்க வந்திருந்த என்னாலதான் அதை இயல்பா ஏத்துக்க முடியல... பேருக்கு சிரிச்சு வெச்சேன்..

ஜெயா எனக்கு பெரியப்பா பொண்ணு... 8 வயசு பெரியவ .... அப்பாவோட சேர்த்து நாலு பசங்க ரெண்டு பொண்ணுங்கன்னு தஞ்சாவூர்ல எங்க தாத்தா குடும்பம் பெரிய குடும்பம்.... ஒரே தெருவுல அடுத்தடுத்த வீடு..... பெரிய அத்தை மட்டும் அடுத்த தெரு .... நாங்க எல்லாருமே ஒண்ணா வளர்ந்தவங்க தான் .... நான் +2 முடிச்சிட்டு காலேஜ் சேர்ந்ததுல இருந்து இப்போ வேலை பார்க்கறது வரைக்கும் சென்னையில... ஆரம்பத்துல ஊருக்கு வந்தா எல்லாரையுமே பார்த்திட்டு தான் திரும்புவேன்.... இப்போ ஒரு 3 வருஷமா  அதுவும் குறைஞ்சு போச்சு ....

ஜெயாக்கா முன்னைக்கு இப்போ கொஞ்சம் பூசின மாறி அழகா இருந்தா.... பின்ன கண்ணன் மாமாவோட வாழறவ வேற எப்படியும் இருக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்.... கண்ணன் மாமா ... சின்ன வயசுல இருந்தே அவரை பார்த்து பார்த்து பிரமிச்சு ஹீரோவா நினைச்சு வளர்ந்தவன் நான்... அப்படி ஒரு அழகான அமைதியான இனிமையான நிறைய விஷயம் தெரிஞ்ச பல திறமைகள் இருந்த ஒரு மனுஷன்... என்னோட பெரியம்மாவோட அண்ணன் பையன் ... அதாவது ஜெயாக்காவோட மாமா பையன்.... அடுத்த தெருவில் அத்தை வீட்டுக்கு பக்கத்து வீடு தான் அவங்க வீடு.... நான் அத்தை வீட்டுக்கு போனா அவங்க வீட்டை விட கண்ணன் மாமா வீட்ல தான் அதிகமா இருப்பேன்... அப்போ நான் ஏழாவது .. அவர் காலேஜ்ல பி.ஜி படிச்சிட்டு இருந்தார்... சூப்பரா பாடுவார்.... அதைவிட அருமையா புல்லாங்குழல் வாசிப்பார்.... அவர் வாசிக்க ஆரம்பிச்சா ஆன்னு கேட்டுகிட்டு இருப்பேன்... "என்னடா இப்படி பாக்கற" அப்படின்னு செல்லமா தலைல தட்டுவார்.... என்னவோ கோட்டையை பிடிச்சிட்ட மாறி எனக்கு தலைகால் புரியாது... ஏன்னா அவர் வாய திறந்து பேசறதே அதிசயம்...

ஜெயாக்காவை கேக்கவே வேண்டாம் ... அவரை பாத்தாலே வெக்கப்படுவா... அவங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் பண்ணி வெக்கணும்னு சின்ன வயசுல இருந்தே எல்லாரும் பேசிக்குவாங்க... ஆனா எனக்கு என்னவோ அது எப்பவுமே அவ்வளவா பிடிச்சது இல்ல.... கண்ணன் மாமாக்கு, எப்பவும் ஏதாவது வம்பு பேசிக்கிட்டு முணுக்குனா அழுதுட்டு சுமாரா படிச்சி டிகிரி வாங்கணுமேங்கறதுக்காக காலேஜ் போயிட்டு வர ஜெயாக்கா பொருத்தமே இல்லைன்னு எனக்கு தோணும்... வெளிய சொல்லவா முடியும்... எல்லாரும் டின் கட்டிருவாங்க... கண்ணன் மாமாவை மட்டும் ஒரு தடவை வாயை அடக்க முடியாம கேட்டுட்டேன் "மாமா உங்களுக்கு ஜெயாக்காவை கல்யாணம் பண்ணிக்க ஓகே வா..." ன்னு....கொஞ்ச நேரம் ஒண்ணுமே  பேசாம என்னை பார்த்தவர் "இப்போ எதுக்குடா அதை கேக்கற... எதுவும் நம்ம கைல இல்ல...போடா போய் படி..." அப்படின்னு அவர் சொன்னப்போ அந்த வயசுல எனக்கு புரிஞ்சது அவருக்கும் அதுல அவ்வளவா இஷ்டம் இல்லைன்னு...

இப்படி இருக்கும் போதுதான் நான் எட்டாவது படிக்கும் போது கண்ணன் மாமா வீட்டு பக்கத்து வீட்டுக்கு ஒரு வாத்தியார் குடி வந்தார்.... அவர் பையன் ரகு என்னோட கிளாஸ்ல சேர்ந்தான்... ஒரே நாள்ல பிரெண்ட் ஆயிட்டான்.... அடுத்த சனிக்கிழமை அவன் வீட்டுக்கு கூப்பிட்டு இருந்தான்... நான் வழக்கம் போல கண்ணன் மாமா வீட்டுக்கு போயிட்டு அப்படியே அவன் வீட்டுக்கும் போனேன்.... உள்ள ஊஞ்சல்ல ரொம்ப அழகா ஒருத்தங்க உட்காந்து பூ கட்டிட்டு இருந்தாங்க.... "டேய் இவங்க என் அக்கா அகிலா டா.... உங்க அக்கா ஜெயா வோட கிளாஸ் தான் காலேஜ்ல.." அப்படினான்.... என்னை பார்த்து அழகா சிரிச்ச சிரிப்பிலேயே எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சு... வீட்ல இருந்த நிறைய அழகு பொருட்கள் எல்லாத்தையும் காமிச்சு "இது எல்லாமே எங்கக்கா பண்ணதுதான்டா.... சூப்பரா பாடுவாங்க ... ஸ்கூல்ல படிக்கும் போது எல்லாம் எங்கக்கா தான் பிரேயர் " அப்படின்னு ரகு சொன்னான்... அது என்னவோ எனக்கு அகிலாக்காவை ரொம்ப பிடிச்சு இருந்தாலும் அவன் பீத்திக்கிட்டவுடனே நானும் உடனே என் பங்குக்கு "டேய்ய் எங்க கண்ணன் மாமாவும் சூப்பரா பாடுவார்... என்னமா புல்லாங்குழல் வாசிப்பார் தெரியுமா.... உங்க பக்கத்து வீடு தான் ... " அப்படினேன்... வாழ்க்கைல சில சமயம் பல பெரிய விஷயங்கள் நடக்க எப்படியோ நமக்கு தெரியாமலே நாம ஒரு காரணமாயிடுவோம்... அன்னைக்கு நான் ஏன் அப்படி சொன்னேன்னு இப்போ வரைக்கும் பல தடவை நினைச்சு இருக்கேன்...
அடுத்த நாள் கண்ணன் மாமா வீட்டுக்கு போனப்போ "மாமா அடுத்த வீட்ல இருக்கறது என் பிரெண்ட் தான்... அவங்க அக்கா அவ்வளவு அழகா இருக்காங்க... சூப்பரா பாடறாங்க தெரியுமா... அவ்வளவு கிராஃப்ட் ஒர்க் பண்ணி இருக்காங்க..." அப்படின்னு அவங்க புராணத்தையே பாடினேன்... "டேய் நிறுத்துடா அப்போ அங்க போய் பேச வேண்டியது தான... இங்க வந்து வந்ததுல இருந்து அவங்கள பத்தியே புராணம் பாடிட்டு இருக்க.." அப்படின்னு சிரிச்சிகிட்டே அவர் கிண்டல் பண்ணார்...

அதுல இருந்து எப்போ கண்ணன் மாமா வீட்டுக்கு போனாலும் தவறாம ரகு  வீட்டுக்கு போய்டுவேன்.... போறது மட்டும் இல்ல ... அங்க போய் கண்ணன் மாமா புராணம் பாடறதும் இங்க வந்து அகிலாக்கா பத்தி சிலாகிச்சு பேசறதும்னு இதையே பண்ணிட்டு இருந்தேன்... அந்த வயசுல இது எந்த மாறி விளைவுகள் உண்டு பண்ணும்னு எனக்கு அவ்வளவா புரியலை... கொஞ்ச நாள் கழிச்சு கண்ணன் மாமா "அது சரி இவ்வளவு பேசறியே ஒரு நாளாவது உன் பிரெண்ட் அவங்க அக்கா இவங்களை எல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கியா..." அப்படின்னு சிரிச்சிகிட்டே கேட்டார்.... உடனே நான் "மொட்டை மாடிக்கு வாங்க மாமா.." ன்னு சொல்லிட்டு ரகுவை அகிலா அக்காவை மாடிக்கு கூட்டிட்டு வர சொன்னேன்....

அதுக்கு அப்பறம் என்ன நடந்து இருக்கும்னு நான் சொல்லவே வேணாம்... கண்ணன் மாமாவும் அகிலா அக்காவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சுட்டாங்க.... எனக்கும் ரகுவுக்கும் ரொம்ப சந்தோஷம்.... ஆனா ரகுவோட அப்பா பயங்கர கோபக்காரர்... "டேய் எங்கப்பாக்கு மட்டும் தெரிஞ்சுது அவ்வளவுதான்... என்ன ஆனாலும் இவங்க ரெண்டு பேருக்கும் தான்  கல்யாணம் நடக்கணும்னு எனக்காக வேண்டிக்கோடா.." அப்படின்னு அவன் சொல்வான்.... நான் உடனே "உனக்காக என்னடா எனக்காகவே வேண்டிக்கறேன்.." அப்படின்னு சொல்வேன்... ஆனா இந்த ஜெயாக்கா மட்டும் ஒரு நாள் என்னை கேட்டா "டேய்ய் என்னடா நீ எந்நேரமும் அங்கேயே குடி இருக்க ... என்ன நடக்குது " அப்படின்னு... நான் உடனே "என்னக்கா நடக்குது.... நான் ரகுவோட படிக்க போறேன் .." அப்படின்னு சமாளிச்சிட்டேன்...ஆனா உள்ளுக்குள்ள என்னவோ ஒரு சந்தோஷம்.. கண்ணன் மாமாக்கு அகிலாக்கா தான் பொருத்தம் அப்படின்னு மனசுக்குள்ள சொல்லி சிரிச்சிக்கிட்டேன்...

இப்படியே எல்லாம் நல்லாதான் போயிட்டு இருந்தது... திடீர்னு ஒரு நாள் ஸ்கூல் முடிஞ்சு ரகு வீட்டுக்கு அவனோட போனேன்... அவங்க அம்மா என்னை பாத்ததும் முறைச்சிட்டு "டேய் ரகு உள்ள வாடா.." அப்படின்னு உள்ள போய்ட்டாங்க ... அகிலா அக்காவை அன்னைக்கு பாக்கவே முடில... மறுநாள் ரகு ஸ்கூல்க்கு வரலை... எனக்கு என்னவோ போல இருந்தது... ஸ்கூல் முடியறதுக்காகவே காத்திருந்து அவன் வீட்டுக்கு ஓடினேன்... அவன் வீட்டில் பெரிய பூட்டு தொங்கியது... அடுத்த ஒரு வாரத்தில் அவன் அப்பா அம்மா மட்டும் வந்து ஸ்கூலிலே அவன் டீஸீ வாங்கினாங்க... அடுத்த நாள் சனிக்கிழமை... நான் அவங்க என்ன திட்டினாலும் பரவால்ல  எப்படியாவது ரகு பத்தி கேட்டுடணும்னு அவன் வீடுக்கு போனா வீடே காலியா இருந்தது .... ரொம்ப ஷாக் ஆயிட்டேன்... வீட்டுக்கு பின்னாடி காலி பண்ணப்போ தேவை இல்லாததை போட்டு வெச்சுருந்தாங்க.... அந்த குப்பைல முறிச்சு போட்ட கண்ணன் மாமாவோட புல்லாங்குழல் இருந்தது ... அகிலா அக்காக்கு கொடுத்து இருந்தார் ....  எனக்கு என்னவோ புரிஞ்சது போல இருந்தது .... மனசு கேக்காம அதை எடுத்துட்டு கண்ணன் மாமாவை பாக்கலாம்ன்னு போனேன் .... அது வரைக்கும் கண்ணன் மாமாவை அப்படி நான் பாத்ததே இல்ல.. கண்ணெல்லாம் கலங்கி போய் பாக்கவே ரொம்ப பரிதாபமா இருந்தார் ... இதுல முறிச்சு போட்ட புல்லாங்குழலை கொடுத்து அவரை இன்னும் கஷ்டப்படுத்த மனசு வராம அதை எடுத்திட்டு வந்து பத்திரமா வெச்சுக்கிட்டேன்...

அதுக்கு அப்பறம் என்னவோ கண்ணன் மாமாவை பாக்கவே கஷ்டப்பட்டுக்கிட்டு  அவர் வீட்டுக்கு போறதையே  அவாய்டு பண்ணேன்... என்னவோ சொல்லத் தெரியாத ஒரு குற்ற உணர்வு.... +2 முடிச்சு வெளியூர்ல காலேஜ் சேர்ந்த உடனே சொல்லிக்கறதுக்காக அவர் வீட்டுக்கு  போயிருந்தேன்.... ரொம்ப இளைச்சு இருந்தார் .... "ஏண்டா என்னை  எல்லாம் மறந்துட்டியா.... " அப்படின்னு கேட்ட உடனே என்னவோ சொல்லி சமாளிச்சிட்டு வெளியூர் காலேஜ்ல சேர்ந்ததை சொன்னேன் .... "நல்லா படிடா.... " அப்படினார். அவர் ஒரு 5 6 வருஷமா  கல்யாணமே பண்ணிக்கலை... யாருக்கும் என்ன காரணம்னே புரியல.... ஜெயாக்கா மட்டும் கட்டினா இவரைத்தான் கட்டுவேன்னு பிடிவாதமா இருந்தா ... அப்பறம் சினிமால வர்ற மாதிரி கண்ணன் மாமாவோட அம்மாக்கு ஹார்ட் அட்டாக்  வந்து அதையே காரணமா காட்டி அப்பறம் ஜெயாக்காவை கட்டி வெச்சாங்க .... அந்த கல்யாணத்துக்கு மட்டும் நான் போகலை...

அதுக்கு அப்பறம் ஒரு தடவை அவங்களை பார்க்க போனேன் ... ஜெயாக்கா ரொம்ப சந்தோஷமா இருந்தா ..... கண்ணன் மாமா முன்ன விட ரொம்ப அமைதியா இருந்தார் ... அவரையே பார்த்தது புரிந்து தனியே இருந்தப்போ "என்னடா பண்றது... எதுதான் நம்ம கைல இருக்கு... மனசுல என்ன கஷ்டம் இருந்தாலும் கல்யாணம் ஆன அப்பறம் நம்மளை நம்பி  வந்தவங்களை கஷ்டப்படுத்த கூடாது ... ஜெயா என்ன பண்ணுவா என் விதி அப்படி இருந்தா ..." என்றார் .

இது எல்லாம் நடந்து 6 வருஷம் ஆய்டுச்சு .... போன மாசம் சைதாபேட்டைல இருந்து எலெக்ட்ரிக் ட்ரெயின்ல ஏதோ வேலையா போய்ட்டு இருந்தப்போ பக்கத்தில வந்து உட்கார்ந்தவனை எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சிட்டே இருக்கேன் .... அவனும் அதே நிலைமையில தான் இருந்தான்... ரகு.... ஒரு நிமிஷம் ஒண்ணும் புரியலை..... "டேய் எப்படிடா இருக்க... ஏண்டா திடீர்ன்னு எங்க போயிட்டீங்க.... அக்கா எப்படி இருக்காங்க ..." நான் கேட்டதுக்கு "அப்பாக்கு அக்கா விஷயம் தெரிஞ்சு எங்க சொந்த ஊருக்கு கூட்டிட்டு போய்ட்டாருடா.... அக்கா எவ்வளவு கெஞ்சியும் டிகிரிய கூட முடிக்க விடல... எங்க தூரத்து சொந்தத்துலயே சுமாரா ஒரு மாப்பிள்ளையை பாத்து ஒரே மாசத்துல கல்யாணம் பண்ணி வெச்சிட்டாரு .... பாவம் டா என் அக்கா .... எப்படி எப்படியோ எல்லாம் இருக்க வேண்டியவ ஏதோ வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்கா ..." என்றான் ..

"கண்ணன் மாமாவும் அப்படிதான்டா ரொம்ப நாள் கல்யாணமே பண்ணிக்காம இருந்தார் .... ஆனா ஜெயாக்கா அவருக்காகவே காத்திருந்து எப்படியோ கல்யாணம் முடிஞ்சிருச்சு" ன்னு சொன்ன என்னை பார்த்து "பின்ன விட்ருவாங்களா .... அன்னைக்கு காலேஜ்ல இருந்து என் அக்காவோடவே எங்க வீட்டுக்கு வந்து எங்க அம்மாகிட்ட வத்தி வெச்சதே உங்க ஜெயாக்கா தானே " என்றதும் இடி விழுந்த மாதிரி இருந்தது ... ஏதோ சும்மா பொழுது போக வம்படிப்பாள் மற்றபடி மோசமானவளில்லை என்று நினைத்து இருந்த ஜெயா வா இப்படி ஒருவர் வாழ்க்கையை கெடுக்கும் அளவு போனாள் .... நினைக்கும் போதே மனம் கசந்தது..... இப்படிப்பட்டவளுக்கா கண்ணன் மாமா..... மனசு பொறுக்காமல் அவளை நறுக்கென்று நாலு வார்த்தை கேக்க தான் அவள் வீட்டுக்கு வந்து இருக்கேன் ....

"டேய்ய்ய் என்ன யோசனை.. சரி நல்ல நேரத்துல தான் வந்து இருக்க.. இன்னைக்கு எங்க கல்யாண நாள் .. நீதான் கல்யாணத்துக்கே வரலையே... சாயங்காலம் மாமா வந்ததும் எல்லாரும் கோவில் போய்ட்டு ஹோட்டல் போறோம் ... நீயும் மறக்காம 5 மணிக்கு இங்க வீட்டுக்கு வந்துடு.... சேர்ந்து போலாம் ..." ன்னு அவ சொன்ன உடனே சட்டென்று ஒன்று தோன்றியது.... அவளிடம் சாதாரணமா பேசிட்டு வீட்டிக்கு வந்தேன் .... அவ கல்யாண நாளுக்கான கிப்ட்டை பேக் பண்ணிட்டு சாயங்காலம் போனேன் ...

"ஹேய்ய்ய் இது என்னடா கிப்ட் எல்லாம் ..." என்று சொன்னாலும் ஆர்வமாக வாங்கிக்கொண்டாள்.... "அக்கா .. இது ஸ்பெஷல் கிப்ட் உனக்கு மட்டும் தான் ... தனியா இருக்கும் போது தான் பிரிக்கணும் .." என்று சொல்லிவிட்டு கிளம்பினேன் ...

"எதனாலன்னு இவ்வளவு நாள் புரியாம இருந்தது .... நீதான்னு இப்போதான் தெரிஞ்சுது.. கவலைப்படாத மாமா கிட்ட சொல்லமாட்டேன்.... சொன்னாலும் அவர் நல்ல மனசுக்கு உன்னை மன்னிச்சிடுவார்..... உன்னோட கல்யாண நாளுக்கு என்னோட கிப்ட் இதோ உன்னால முறிஞ்சு போன புல்லாங்குழல்... முறிஞ்சு போன குழல்ல என்னைக்குமே உன்னால இசையை கேக்க முடியாது ..." என்ற என் லெட்டரோடு அந்த புல்லாங்குழலை பார்க்கும் போது அவள் முகம் போகும் போக்கை  நினைத்துப் பார்த்தேன்.... இதுக்கு எல்லாம் அவள் அசருவாளான்னு தெரியல... இனி என்னைக்குமே என்னால் அவளை   மன்னிக்க முடியும்ன்னு தோணல... இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் அவளை தண்டித்த ஒரு அமைதி என் மனதில் !!!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.