நதியொன்றின் துரோகச்சாவு

1

ஓவியத்தின் ஓரத்தில், சத்தமில்லாமல் வந்ததந்த கரும்பூனை, வந்த சுவடும் தெரியாமல், எந்த வண்ணமும் மிதியாமல், ரோமங்கள் ரெண்டினை மட்டும் விட்டுச்செல்ல, உதிர்ந்த முடிகள் ஒட்டிக்கொண்டன தூரிகையின் நுனியில்....

2

துரத்தி வருகின்ற வாழ்க்கையை, விரட்டிப்பிடிக்க எத்தனித்து ஓடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையும் நானும் இப்போது ஒருவட்டப்பாதையில்...

3

உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவைக்குத்- தெரியவில்லை மூன்றாம் நாளின் மகத்துவம்...

4

தேங்கிய நீரில் தெளிகிறது ஓர் ஏரியின் காலடித்தடம்

5

நீர்ப்படிமங்களில் உறைந்து கிடப்பது நதியொன்றின் துரோகச்சாவு

6

இடைதடவி நெருக்கிய வலக்கையில், உள்ளடங்கிய நத்தையின் குறுகுறுப்பு !!!

7

நீண்டநாள் ஆசை நெஞ்சை உருக்கும் இரங்கற்பா, எழுதிவிட்டேன் அவளைக் கொன்றுவிட்டு!!

8

அலையடித்து ஒதுக்கிய மலட்டுச் சிப்பியில் தேங்கியிருந்த துளியில் பிரதிபலித்தது தாய்மையின் ஏக்கம்

9

பின்அந்திம வேளையில் வெயிலேறிய வாசலில் நிழல்கோலமிடுகிறாள் சிறுமி

10

நீண்டநாட்களுக்குப்பின் எதிர்பாராத சந்திப்பில், என்னைப் பார்த்தவுடன் கணவனுடன் கோர்த்த உன் கைஇறுக்கத்தைத் தளர்த்திய கணத்தில் பூவொன்று மலர்ந்து மடிகின்றது...

11

விரல்களின் கோர்வையில் பிணைந்த ரேகைகளில் சர்பங்களின் சரசங்கள்

12

நதியை ஏந்திய பிஞ்சின் கைகளில் துள்ளி ஏறியது நிலா!!!

13

சிரட்டைகளில் குடிக்கப்படும் காப்பி உப்பாகவே இருக்கிறது எப்போதும்

14

சக்திக்கு மீறிய "பாராகன்" செருப்பையே, "பாத்ரூம்செப்பல்"லாக பாவித்த கல்லூரியின் முதல்நாளில் தெரிந்துகொண்ட உலகத்தை, நெருங்கமுடியா தொலைவிலிருந்து வந்தவனிடம் எப்படி இருக்கும் பால்யகால புகைப்படங்கள் ?..

15

தவளைகளின் தாலாட்டில் குறட்டையலை எழுப்பித் தூங்குகிறது குளம். ஜன்னல் எட்டிக் களவாடப்படுகிறது என்னிரவு....

16

பிறந்ததிலிருந்தே இரட்டைச்செலவு செய்தே பழகியிருந்தார்கள். ஓரே உடை, ஒரே வகுப்பு, ஒரே படுக்கை, மனுசியானதுமே அடுத்தடுத்த நாட்களில்.. இரட்டையருக்குத்தான் மணமுடிக்கணும் நிபந்தனை வேறு. இரட்டைச்செலவு ம்சுகமான வேதனை என்றாலும் சுமந்தார்கள் இப்போதும் அப்படியே.. அருகருகே கிடத்தியிருந்தார்கள். இரட்டைத் தற்கொலையாம்.

17

எந்தவித முன்பகையோ, குரோதமோ, வெறுப்போ, கோபமோ, இல்லாமல் கொலைசெய்யத் துணிந்துவிட்டீர்களெனில் சந்தேகமேயில்லை நீங்கள் 'எழுத்தாளர்' தான்..

18

அடுத்த பக்கத்திற்குச் செல்லும் முன்பாவது சற்று கவனித்துச் செல்லுங்கள் , எழுத்துகளுக்கு இடையில் உறைந்திருக்கும் ரத்தத்துளிகளை!!!

19

மடி நிரப்பிய புளியங்காய்கள், வாய் நிரம்பிய வெற்றிலைவாசம், சும்மாட்டுடன் தலைஅழுத்தும் பருத்திப்பொதிகள், கம்பீரநடை, எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் ஆசாரிக்காம்பவுண்ட்சுப்பம்மாளை ' சாயவேட்டிக்காரர்சம்சாரம்' என்பதில் தான் எத்தனை பெருமிதம் அவளுக்கு!!!

20

அலைதலின் நிமித்தத்தில் நுரைத்துப் பொங்கி கரை ஒதுக்கும் மாலைதனில் சேர்ந்த பூக்களது பிறவிப்பயன் அஸ்திகலச கழுத்திற்கு வாசம்சேர்ப்பதே!!!!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.