குமாருக்கு நாளை தமிழ் தேர்வு. புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாடிப்படியில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கினான். திடீரென்று அவன் கைகளில் இருந்த புத்தகம் எரியத் தொடங்கியது.

“ அம்மா “ என்று பயந்து அலறியபடி தூக்கி எறிந்தான். நாளை முழு ஆண்டுத் தேர்வு. இப்போது கண் முன்னே புத்தகம் எரிந்து விட்டதே, என்ன செய்வது என்று தெரியாது விழித்துக் கொண்டிருந்தபோது, அவன் அம்மா, மீனாக்ஷி அதனைப் பார்த்து, அதிர்ச்சியாகி நின்றாள். அழுது கொண்டே வந்த மகனை இறுகத் தழுவிக் கொண்டு ஆறுதல் சொன்னாள்.

“ நீ நல்லா படிக்கிற பையன். நீ ஏற்கனவே படிச்சிருப்பள்ள அத நெனைவுல வெச்சு நாளைக்கு பரிச்சைய எழுது. சரியா! அழுகக் கூடாது” என்று தேற்றியவள் மனதில் இனம் புரியாத கலவரம் குடி கொண்டது. இந்த நிகழ்வை கணவரிடம் பகிர்ந்து கொள்ளக் காத்திருந்தாள். குமார், அவர்களின் ஒரே வாரிசு.

“ என் சொத்தைல்லாம் ஆள எனக்கொரு வாரிசு வேணும்டி” என்று முத்துகிருஷ்ணன் தன் மனைவியிடம் சொல்லியே குமாரைப் பெற்றுக் கொண்டார். அதனால் குமார், பெற்றோர்களுக்கு செல்லப் பிள்ளைதான். மீனாக்ஷி மகனுக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வைத்தாள். கட்டிலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த முத்துக் கிருஷ்ணனிடம், பாலைக் கொடுத்து விட்டு, அவரது காலடியில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் மகனைப் பார்த்த மீனாக்ஷி மெல்ல அன்று,தான் கண்ட பயங்கரத்தை விவரித்தாள்.

“ என்ன மீனாக்ஷி, எதுனா கனா கண்டியா? இப்டிலாம் நடக்குமா? படிக்கிறதுக்கு சோம்பேறித்தனப்பட்டு குமாரே எரிச்சிருப்பான்”

“ அவன் நல்லா படிக்கிற பையன். அவன் என்னைக்கும் இப்டி குதர்க்கமால்லாம் யோசிக்க மாட்டான் “

“ உண்மைதான். சரி! சரி! அதையே யோசிச்சுகிட்டே இருக்காம படுத்து தூங்கு. காலைல பாத்துக்கலாம்” என்று முத்துகிருஷ்ணன் சொன்னவுடன் சற்றே நிம்மதியடைந்தவளாய், மகனுக்கருகில் படுத்துக் கொண்டாள். அனைவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த அந்த நள்ளிரவு வேளையில்,

“ அம்மா.......” என்று குமாரின் அலறல் சத்தம் கேட்டு பதறியடித்துக் கொண்டு மீனாக்ஷி எழுந்தாள். முத்துகிருஷ்ணன் பதறி, அருகே இருந்த லைட் சுவிட்சை ஆன் செய்தார். அப்போது அந்த காட்சியை நேரில் கண்ட மீனாக்ஷி,

“ உங்களுக்குலாம் அறிவு இருக்கா இல்லையா? இப்டியா புள்ள கை மேல கட்டில போட்டுட்டு, ஒய்யாரமா தூங்குவீங்க” என்றவுடன், முத்துகிருஷ்ணன் பதறி எழுந்து கட்டிலைத் தூக்கினார். கட்டிலின் ஒரு கால், குமாரின் வலது கையில் ஏறி இருந்தது. கை நசுங்கி கட்டிலின் கீழ் இரத்தம் பெருகி இருந்தது. முத்துக்கிருஷ்ணன், கட்டிலை தூக்கிய பின், கட்டிலின் காலோடு, குமாரின் கை ஒட்டிக் கொண்டு வந்தது. கதறியபடியே, மீனாக்ஷி, அவனது கையினை கீழே இழுக்க, சொத்தென்று, குமாரின் கை தரையில் விழுந்தது. இருவரின் கண்களிலும் கண்ணீர் அருவியாய் பெருக்கெடுத்து ஓடியது. குமார், மயக்கமாகி இருந்தான். இருவரும் அவனைத் தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றார்கள்.

“ அம்மா! நான் அனுவல் எக்ஸாம் எழுத முடியாதுலம்மா! “ என்று குமார் கேட்டபோது பதில் சொல்லமுடியாது மீனாக்ஷி திணறினாள்.

“ அப்பாவ பிரின்சிபால் கிட்ட பேசச்சொல்றேன். “ என்றவள் மகனின் கட்டுபோட்ட கைகளைப் வெறித்தபடி இருந்தாள். எப்படி மகனின் கை கட்டிலின் காலுக்கடியில் சென்றது? புத்தகம் தானாக எரிந்ததுக்கும், இந்த நிகழ்வுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்குமோ? யாரிடம் கேட்பது? டாக்டரைப் பார்த்துவிட்டு வந்திருந்த, கணவனிடம்,

“ என்னங்க! குமாரோட புத்தகம் எரிஞ்சு போனதுக்கும், இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? “

“ எனக்கும் தெரியல மீனாக்ஷி, அது எப்படி இவன் கை கரெக்டா கட்டிலோட காலுக்கு அடியில, புள்ள துடிச்சுப் போயிட்டான்ல “

“ ஆமாங்க! அவனுக்கு பரீட்சை எழுதனும்னு ஆசை. என்கிட்ட கேட்டான். அப்பாவ பிரின்சிபால பாக்கச் சொல்றேன்பா சொல்லிருக்கேன். என்னங்க! .....“

“என்ன மீனாக்ஷி?”

“ நம்ம ஜோசியர்கிட்ட போயி என்னன்னு கேட்டுட்டு வருவோமா?”

“ ம்..போலாம்” என்றார் முத்துகிருஷ்ணன். அடுத்து வந்த பதினைந்து நாட்களும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நகர்ந்தன. அவரும் அலுவலக வேலையில் ஜோசியரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை நாளை,நாளை என்று தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தார். மீனாட்சியும் ஜோசியரிடம் போக வேண்டும் என்ற நினைப்பையே மறந்திருந்தாள். குமாரின் கை ஓரளவு சரியாகிவிட்ட நிலையில், மாடியில் விளையாடிக் கொண்டிருந்தவன், தண்ணீர் குடிக்க கீழே மெல்ல இறங்கிக் கொண்டிருந்தான். அப்போது, யாரோ அவனைக் கீழே தள்ளிவிட்டதுபோல், கடகடவென படியிலிருந்து உருண்டு வந்து கீழே விழுந்தான். இதனை கீழே முத்துக் கிருஷ்ணன் நேரடியாக பார்த்துக் கொண்டிருந்தார். சுதாரித்த அவர், வேகமாக அவனைத் தூக்கிக் கொண்டு மீண்டும் ஹாஸ்பிடலுக்கு ஓடினார்.

“ டாக்டர்! குமார் எப்டி இருக்கான்?”

“ இப்போ நல்லா இருக்கான். ஆமா! இவ்ளோ பலமா அவன யார் கீழ தள்ளி விட்டது?”

“ டாக்டர், அவன் மெல்ல மாடிப்படியில இருந்து கீழ இறங்கி வந்துகிட்டு இருந்தான். அப்போ, அவன பலமா யாரோ கீழ தள்ளி விட்டுட்டாங்க. யார்னு தெரியல. ஏன்னா, அப்போ மாடிப்படியில யாருமே இல்ல.”

“ என்ன சொல்றீங்க சார்! இது எப்டி சாத்தியம். ரொம்ப வேகமா யாரோ தள்ளி விட்ட மாதிரி இருக்கும். நல்ல வேளை பெருசா அடி இல்ல. நெத்தியில மட்டும் பத்து தையல் போட்ருக்கு. கொஞ்சம் கவனமா பாத்துக்கங்க.” என்று சொல்லிவிட்டு, முத்துக் கிருஷ்ணனை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு அடுத்த பேஷண்டை கவனிக்க சென்றார். மீனாக்ஷி, மீண்டும், “ என்னங்க! நாம ரெண்டு பேரும் இப்பவே ஜோசியர பாக்க போகனுங்க ” என்று சொல்லிவிட்டு, மீனாக்ஷி தனது அம்மாவை குமாருடன் ஆஸ்பத்திரியில் விட்டுவிட்டு கிளம்பினார்கள்.

*****

“ வாங்க! என்ன ரெண்டு பேரும் ஒரே கலவரமா இருக்கீங்க?” என்று ஜோசியர் கேட்க, நடந்த விவரங்களை கணவனும் மனைவியும் கூறிவிட்டு, என்ன காரணம்? என்று கேட்டார்கள். ஜோசியர், நெடு நேரம் யோசித்துவிட்டு, சில கணக்குகளைப் போட்டார். அங்கிருந்த கட்டங்களை முன்னும் பின்னுமாக மாற்றி மாற்றி எண்ணிக் கொண்டிருந்தார். அவர் நெற்றியில், சுருக்கங்கள், பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தின.

“ எதுனாலும் பரவாயில்ல. என்னன்னு சொல்லுங்க. என் பிள்ளைய எப்டியாவது காப்பாத்தணும் “ என்றார் முத்துக் கிருஷ்ணன்.

“ உங்க பையனுக்கு யாரோ செய்வினை பண்ணி வெச்சு இருக்காங்க. அவனுடைய நேரமும் ரொம்ப கடுமையா இருக்கு. ம்...கேரளாவுல எனக்குத் தெரிஞ்ச ஒரு மாந்திரீகர் இருக்கார். நீங்க அவரைப் போயி பாருங்க “ என்றார்.

ஜோசியர் சொன்னது போலவே அந்த மலையாள மாந்திரீகரைப் பார்த்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். அவர் குமாரை அழைத்து வர சொன்னார். அவனை மேலும் கீழும் பார்த்தார். அவனது வலது உள்ளங்கையை பார்க்க முற்பட்டார். அதில் அப்போதுதான் காயங்கள் ஆறத்தொடங்கி இருந்தன. உள்ளங்காலை காண்பிக்கச் சொன்னார். தலையில் கை வைத்தார். பின், மீண்டும் வாசலுக்கு வந்தார். வீட்டு நுழை வாயிலில், எதையோ உணர்ந்தது போல, நின்றார். நின்ற இடத்தில் தோண்டச் சொன்னார். அங்கே, செப்புத் தகடு ஒன்று, புத்தம் புதிதாக சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது. மீண்டும் ஹாலுக்கு வந்தார். படுக்கையறைக்கு சென்றார். பீரோவைத் திறக்கச் சொன்னார். பீரோவின் லாக்கரைத் திறக்கச் சொன்னார். மீனாக்ஷிக்கு இது சரியாகப்படவில்லை. ஆனாலும், மகனின் நலன் கருதி திறந்தாள். அங்கே மிகப் பெரிய செப்புத் தகடு ஒன்று சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது. இரண்டையும் எடுத்துக் கொண்டு, தோட்டத்தில், தீ மூட்டினார். அதில் இரண்டையும் போட்டு எரித்தார். அதன்பின், இரண்டு செப்புத் தகடுகளில் ஏதோ எழுதினர். செப்புத் தகட்டினையும், அதனோடு, மஞ்சள் துணியில் ஒரு பாட்டிலையும் கூடவே ஒரு எலுமிச்சம்பழத்தையும் சேர்த்து தலைவாசல் நிலையில் கட்டினார். குமாரைக் கூப்பிட்டு, அவனது இடுப்பில், ஒரு தாயத்தினையும் கட்டினார். பின், ஒரு எலுமிச்சம்பழத்தைக் கொடுத்து,

” இந்த கனிய சாமி முன்னாடி வைங்க. இது நாளடைவுல காஞ்சு போச்சுனா ஒரு பிரச்சனையும் இல்ல. அழுக ஆரம்பிக்குதுனா உடனே என்ன கூப்பிடுங்க “ என்றார்.

“ இந்த ஏவல யார் செஞ்சிருக்காங்க? எதுக்காக செஞ்சிருக்காங்க? எனக்குத் தெரிஞ்சு நான் யாருக்கும் கெட்டது பண்ணலையே “ என்று முத்துக்கிருஷ்ணன் கேட்ட போது,

“ உங்க சொத்து இருக்கே முத்து கிருஷ்ணன். அது தான் உங்க பையனுக்கு எமன். சொத்துக்காகத்தான் வாரிச அழிக்கிற முயற்சியில இறங்கி இருக்காங்க. ரொம்ப ஸ்ட்ராங்கா பண்ணி இருக்காங்க. என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பாப்போம். குமாரோட நடவடிக்கைகள்ல ஏதாவது மாற்றம் இருந்தா என்ன உடனே கூப்பிடுங்க. “ என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

ஒரு மாதம் எந்த ஒரு களேபரமும் இல்லாது சென்றது. ஒரு அமாவாசை இரவு. மீனாக்ஷி இரவு சாப்பாடாக, குமாருக்கு தோசை வைத்து விட்டு, சட்னி ஊற்ற திரும்பும்போது, எங்கிருந்து தான் வந்ததோ தெரியவில்லை,அவன் தட்டில் தோசை தெரியாத அளவிற்கு மண் கொட்டியது. இதனைக் கண்ட கணவன் மனைவி இருவரும் , திகைத்து நிற்க, முத்துக் கிருஷ்ணனும், மீனாட்சியும் வேகமாக சாமி முன்னால் இருந்த எலுமிச்சம்பழத்தை பார்க்க ஓடினர். அந்த எலுமிச்சம்பழம் அழுக ஆரம்பித்து இருந்தது. அதில் இருந்து இரத்தம் வடிய ஆரம்பித்தது.

“ என்னங்க! என்னங்க! தயவுசெஞ்சு உடனே, அவர வர சொல்லுங்க “ என்று கதறினாள்.

முத்துகிருஷ்ணன் அவருக்கு போன் செய்துவிட்டு, குமாரின் அருகில் வந்து அமர்ந்தார்.

“ அம்மா! அப்பா! எனக்கு சாகணும் போல இருக்கு. செத்து, செத்து விளையாடலாம் வர்றீங்களா? “ என்றான். மீனாக்ஷி, வேகமாக அவனது இடுப்பில் அந்த தாயத்து இருக்கிறதா என்று சோதித்தாள். அது அவள், கண் முன்னாலேயே அறுந்து காற்றில் பறந்து போனது.

“ அம்மா! என்ன காப்பாத்துங்கம்மா! “ என்றான் குமார்.

என்ன செய்வது என்று அறியாமல், கண்ணீரோடு கணவன், மனைவி இருவரும் அவனைக் கட்டிக் கொண்டார்கள். திடீரென்று, அவர்கள் இருவரையும், யாரோ கால்களைப் பிடித்து சுவரில் மோதினார்கள். இருவரும் கீழே விழுந்து சுதாரித்து எழுவதற்குள், குமார் வேகமாக தலையில் அடித்துக் கொண்டான்.

“ குமார்! தலையில அடிக்காதப்பா! அடிக்கதப்பா ” என்று மீனாக்ஷி கதறினாள். அடுத்து அவன் சுவரில் வேகமாக தலையை மோதினான். தொடர்ந்து வேகமாக மோத மோத, அவனது தலை உடைந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது.

“ ஐயோ! என் புள்ள என் அக்ன்னு முன்னாடியே இப்டி அடிபடுதே” என்று கதறினாள் மீனாக்ஷி.

“ அம்மா! எனக்கு வலிக்குதும்மா”

“ ஐயோ! நான்! என் பிள்ளைய எப்டி காப்பத்துவேன். கடவுளே! என் பிள்ளைய காப்பாத்து” என்று மீனாக்ஷி அழுது கொண்டிருக்க, முத்துகிருஷ்ணன் அவனை சுவரில் மோத விடாமல் இருக்கி பிடிக்க முயன்றார். அவரது பிடியில் இருந்து, சரேலென விலகி ஓடத் தொடங்கியவன், வேகமாக மாடிப் படிகளில் ஏறத் தொடங்கினான்.

“ செத்து செத்து விளையாடலாம் வா! செத்து, செத்து விளையாடலாம் வா! “ என்று சொல்லிக் கொண்டே நாலு படிக்கொரு காலை வைத்து தாவி தாவி ஏறினான். அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்னாலேயே, முத்துகிருஷ்ணனும், மீனாட்சியும் ஓடினார்கள். பூட்டி வைத்திருந்த மாடிக் கதவு படீரென திறந்து கொண்டது.

“செத்து செத்து விளையாடலாம் வா! செத்து, செத்து விளையாடலாம் வா!” என்று சொல்லிக் கொண்டே, மாடிச் சுவரில் ஏறி நின்று கொண்டு, அம்மா அப்பாவைப் பார்த்து,

“ செத்து செத்து விளையாடலாம் வா! செத்து, செத்து விளையாடலாம் வா!” என்றான்.

“ குமார்! கீழ இறங்கு “ என்று சொல்லிக்கொண்டே மீனாக்ஷி அவனை நெருங்கவும், அவன் “அம்மா! என்று அலறியபடி கீழே விழுந்தான்.

பதறியபடி, கண்ணீரோடு கீழே வந்து பார்த்த போது தலை தெறித்து வீடு முழுவதும் ரத்தம் சிதறி இறந்து போயிருந்தான். இதனைக் கண்டு பெற்றோர்கள் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்கள். அவர்கள் காதில், குமார் கடைசியாக பேசிய

“ செத்து செத்து விளையாடலாம் வா! “ என்ற வார்த்தைகள் மட்டும் ஒலித்துக் கொண்டே இருந்தன.


tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.